தமிழில்: நெய்வேலி மு. சுப்ரமணி
1936 அக்டோபர் 26-ல் ‘மாத்ருபூமி’ வார இதழ் இந்தக் கட்டுரையை வெளியிட்டபோது, இ.எம்.எஸ். அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்டாக ஆகியிருக்கவில்லை. பி.சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே ஆகியோரின் இடைவிடாத தலையீட்டின் பலனாக கே. தாமோதரன், என்.சி. சேகர், பி. கிருஷ்ணப்பிள்ளை, இ.எம்.எஸ். ஆகியோர் சேர்ந்து 1937-ல் தான் கம்யூனிஸ்ட் குழுவை உருவாக்கினர். பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வழிகாட்டியாகத் திகழ்ந்த இ.எம்.எஸ்-ன் அறிவுக் கூர்மை எத்தனை எதார்த்தமாகவும், நுட்பமாகவும் இருந்தது என்பதற்கான வெளிப்படைச் சான்றுதான் “சோஷலிசமே உலகின் ஒரே பாதுகாவலன்” என்று முழங்குகின்ற இந்தக் கட்டுரை. 1930களின் முற்பகுதி முதல் அறுபதுகளின் இறுதிக்காலம் வரை கேரளத்தின் கூட்டுவிவாத அரங்குகளை ஒளிவீசச் செய்த ஓர் அறிஞரின் ஆரம்ப கால வெளிச்சங்களை இங்கே காணலாம்.
சோஷலிசத்தின் தோற்றம் எது? அது எங்கே உருவானது? என்கிற விஷயத்தில் பலரும் பலவித கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையில் தொன்மைக்காலம் முதலாகவே ஒரு போராட்டம் நடப்பதில், சமூகத்தின் பக்கம் நின்று வாதாடுகின்ற, தனிமனித சுதந்திரத்தைப் பேணிக் காத்து பொதுவான நீதியை வலுப்படுத்துகின்ற, எந்தவொரு விஷயத்திலும் சோஷலிசத் தத்துவம் அடங்கியுள்ளது என்பதால் சோஷலிசம் மனித குலத்தின் இயல்பான நியதிதான் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.
இவர்களது பார்வையில் மனித குலத்தின் வரலாறுதான் சோஷலிசத்தின் வரலாறும் ஆகும். ரஷ்யாவில் சோவியத் கூட்டமைப்பு என்பதைப் போல, மலபாரில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையிலும் இவர்கள் சோஷலிசத்தைப் பார்க்கிறார்கள். புகைவண்டி, தபால்-தந்தி போன்றவற்றில் ஏகபோக உரிமையும் நிர்வாகப் பொறுப்பும் இருப்பதால், இன்றைய (1936) இந்திய அரசிலும் கூட சோஷலிசத் தத்துவம் அடங்கியுள்ளது என இவர்கள் வாதிடுகின்றனர்.
மற்றொரு குழுவினரின் கருத்துப்படி, கார்ல் மார்க்ஸ்தான் சோஷலிசத்தின் பிதாமகன். அவரது படைப்புகள் வெளியாகும்வரை சோஷலிசமே இந்த உலகில் இருக்கவில்லை. இதைத் தவிர, இன்னும் ஒரு பகுதியினர் ப்ரெஞ்சுப் புரட்சிதான் சோஷலிச சிந்தனையை தோற்றுவித்தது என்று கருதுகின்றனர். இவை அனைத்திலுமே எதார்த்தத்தின் கூறுகள் உண்டு. எனினும் எந்தவொரு கருத்திலும் முழுமையான உண்மையும் இல்லை!
தொழிற்புரட்சி
18-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் உலகம் முழுவதையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வு நடந்தது. அதுதான் தொழிற்புரட்சி! நீராவி இயந்திரம் கண்டுபிடித்து பொருளுற்பத்திக்கு அதைப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்ததுமே இந்தத் தொழிற்புரட்சி உருவாகத் தொடங்கியது. தொழிற்புரட்சியின் துவக்கம் முதலான வரலாற்றை இந்தச் சிறிய கட்டுரையில் அடக்குவது எளிதல்ல. சோஷலிசத்தின் வரலாற்றில் அதற்கான தொடர்பும் குறைவுதான் என்றாலும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சில உளவியல் மாற்றங்கள் இதன் விளைவாக ஏற்பட்டதால் அதனை சுருக்கமாக இங்கே தருகின்றேன்.
முற்றிலும் மாறிய பொருளுற்பத்தி முறை
பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்கள் தத்தமது கிராமங்களிலோ, நகரங்களில் பல்வேறு பகுதிகளிலோ இருந்தபடியே தங்களின் விருப்பப்படி பொருட்களை உற்பத்தி செய்வது அல்லவா வழக்கம்! அதற்குத் தேவையான கருவிகளை அவர்களே தங்கள் பணத்தைக் கொண்டு வாங்குவதோ அல்லது கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு அவற்றை உரிமையாக்கிக் கொள்ளவோ செய்வார்கள். சொந்தப் பணமாக இருந்தால் பொருளை விற்றுக் கிடைத்த பணம் முழுவதையும் தமதாக்கிக் கொள்வார்கள். கடன் வாங்கியிருந்தால் அதற்கான வட்டி மட்டுமே இதிலிருந்து செலுத்த நேரிடும். எந்தவொரு நிலையிலும் உற்பத்திக்கான கருவிகளும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களும் அவர்களின் உடைமையாகும்.
இயந்திரங்களின் வருகையுடன் இத்தகைய முறையெல்லாம் போய்விட்டது. மிகப் பெரிய இயந்திரங்களை எங்காவது ஒரே இடத்தில் வைத்து மட்டுமே இயக்க முடியும் என்பதால் தொழிலாளர்கள் எல்லாம் அந்த இடத்திற்கு வந்து சேர வேண்டும். உற்பத்திக் கருவியாகிய இயந்திரம் அதிக விலையுடையது என்பதால் அதை சொந்தப் பணம் கொண்டோ, கடன் வாங்கியோ நிறுவுவதற்குத் தொழிலாளர்களால் இயலாமல் போனது. அதனால் பொருள் முதலீடு செய்யத் திறனுள்ள ஒருசிலர் மட்டுமே அவ்வாறு நிறுவத் தொடங்கினர்.
உற்பத்தி இயந்திரங்களில் தொழிலாளர்களுக்கு உரிமை இல்லாமல் போனபோது, அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களும் அவர்களுடையது இல்லை என்றாகிப் போனது! இயந்திரங்களின் உரிமையாளர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கும் உடைமையாளர் ஆயினர். தொழிலாளர்களுக்கு கூலி மட்டும் கிடைக்கத் தொடங்கியது. கைவினைஞரில் ஒரு பெரும்பகுதியினர் இதற்கு முன்னரும் (இன்றைய கைத்தறி நெசவாளர்களைப் போல) கடன் வாங்கி வேலை செய்திருந்ததால், அதிக வட்டி விதித்த கடைக்காரர்களின் கீழிருந்தபோதிலும் அதைத் தாண்டி அவர்கள் சுதந்திரமானவர்களாக இருந்தனர். வட்டியைத் தவிர வேறொன்றும் முதலாளிக்குத் தரவேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. இயந்திரத் தொழிலோடு சேர்ந்து வெளியிலும் அவர்கள் முதலாளியின் கையில் அகப்பட்டுக் கொண்டனர். ஊதியத்திற்கு மட்டுமே அவர்கள் அருகதை உள்ளவர்கள் என்றானது. இத்தகைய புதிய ‘முதலாளி-தொழிலாளி’ உறவின் கீழ் இருக்கின்ற கட்டமைப்பைத் தான் முதலாளித்துவம் என்று சோசலிச படைப்புகளில் அவர்கள் கூறுகின்றனர்.
முதலாளியின் லாபமும் தொழிலாளியின் துயரமும்
இயந்திரம் வாங்கவும் உழைப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் தேவையான பணம் கைவசம் உள்ளவர்களுக்கு இது நல்லதோர் வாய்ப்பாக அமைந்தது. பெருமளவில் மூலப்பொருட்களை வாங்குவதற்கு இயன்றதால், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கவும், அவர்களால் முடிந்தது. பெரும்பான்மையினரான தொழிலாளர்களுக்கு உற்பத்திக் கருவிகளோ, பிறிதொரு வகையில் முதலீட்டுத் தொகையோ இல்லாதிருந்ததால் என்ன ஊதியம் தந்தாலும் தொழிற்சாலை முதலாளியிடமே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவானது. விலைமலிவான மூலப் பொருட்கள், குறைவான ஊதியம் வழங்கல் இவற்றின் காரணமாக உற்பத்திச் செலவு குறைந்ததன் விளைவாக முதலீடு செய்தவர்களுக்கோ லாபம் அதிகரித்தது.
இந்த லாபத்தில் இருந்து மீண்டும் இயந்திரங்களை வாங்கி, உற்பத்தி அளவை அதிகரிக்கவும், கைவினைஞர்களை நசுக்குவதற்காக பொருட்களின் விலையை கடுமையாகக் குறைத்தும் இந்த முதலாளிகள் தமது சொந்த நலன்களுக்காகப் இந்த அமைப்பைப் பயன்படுத்தியிருந்தனர். கைவினைஞர்கள் நலிவடைதலும், இயந்திர உற்பத்தி காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைதலும் சேர்ந்து கூலி வேலைக்கு என்றே விதிக்கப்பட்ட உழைப்பாளர்கள் அதிகரிக்கலாயினர். அவர்கள் வேலை கிடைப்பதற்காக தங்களுக்கிடையே போட்டியிட்டுக் கொண்டதும் முதலாளிகளுக்கு சாதகமானது.
ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் தொழில்துறையில் முன்னேற்றமாகவும், ஊதியக் குறைவின் புதிய சோதனைக் காலகட்டமாகவும் அமைந்திருந்தது. தொழிலாளர்களின் வயிறு ஒட்டிப் போனது. இதுதான் தொழிற்புரட்சி வரலாற்றின் சுருக்கமான வடிவம்.
சின்னஞ்சிறு குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் தினமும் 15-16 மணிநேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டனர். எனினும் வயிறு நிறைய உண்பதற்கான ஊதியம் அவர்களுக்குக் கிட்டவில்லை. தொழிற்சாலைகளில் நடைபெற்று வந்த முறைகேடுகள் குறித்து ஆங்கிலேய நாடாளுமன்றம் நியமித்த ஒரு குழு நடத்திய விசாரணை நெஞ்சகம் நடுங்கும்படியான பல உண்மைகளை வெளியுலகிற்குக் கொண்டுவந்தது. ‘இயந்திர யுகம்’ ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை உயர்த்துவதற்குப் பதிலாக கீழேதான் தள்ளியுள்ளது என்பது தெளிவானது.
கற்பனாவாத சோஷலிசம்
நவீன முதலாளித்துவத்தின் மேற்கூறிய குறைபாடுகளைக் கண்டு நெஞ்சம் பதைபதைத்த மனிதநேய மிக்கவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். அவர்கள் இதை எதிர்க்கத் தொடங்கினர். இதற்குப் பதிலாக, பெரும்பாலானவர்களின் நலனை இலட்சியமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு குறித்து அவர்கள் பேசத் தொடங்கினர். ஓவன் என்பவர் இங்கிலாந்திலும், செண்ட்ரூ சைமன், ஃபூரியே ஆகியோர் ஃப்ரான்ஸிலும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை முதன்முதலாக வெளியிடத் தொடங்கினார்கள். பின்பு நவீன முதலாளித்துவம் அந்தந்த நாடுகளில் வளர்ந்துவரத் தொடங்கியதோடு இணைந்து இத்தகைய கருத்துடையோர் இதர நாடுகளிலும் உருவாயினர். அநியாயங்களையும் அக்கிரமங்களையும் சகித்துக் கொள்ள இயலாத ஒரு மக்கள் திரட்சி சிறந்த எண்ணங்களை இறுகப் பற்றிக் கொண்டு எல்லாத் திசைகளிலும் இருப்பதனால் முறைகேடுகளின் அடிப்படையிலான முதலாளித்திற்குப் பின் அனைத்து திசைகளிலும் சோஷலிசமும் வளராமல் தீர்வு ஏற்படாது. இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு இணைந்து இங்கே உருவாகியுள்ள காந்தியமும் இதனுடைய ஒருவிதமான பிரிவுதான்
நவீன முதலாளித்துவத்தின் அநீதிகளை எதிர்ப்பதோடு நியாயத்தை நிலைநாட்டும் வகையிலான பொருளாதாரப் பங்கீட்டை இலட்சியமாக்குவதையும் செய்வது என்பதைத் தவிர, கற்பனாவாத சோஷலிசத்திற்கு என்று பொதுவாகக் குறிப்பிடத்தக்க யாதொரு சிறப்பம்சமும் இல்லை. இந்தச் சீர்கேடுகளை அழித்தொழிப்பது எப்படி என்பதில் பலவித கருத்துடையோர் கற்பனாவாத சோஷலிஸ்டுகளிடையே உண்டு.
இயந்திரத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்ப்பவர்கள்; இயந்திரத்தை சொந்தமாக வைத்திருக்கும் முதலாளி ஒரு நல்ல மனிதராக இருந்தால் நியாயமான பங்கீடு சாத்தியம் என்று எதிர்பார்ப்பவர்கள்; மத தத்துவங்களுடைய பிரச்சாரம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்; உற்பத்தியும் பங்கீடும் பொதுவுடைமையின் கீழ் இருக்க வேண்டும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதை இப்படி உருவாக்க வேண்டும் என்றோ, வந்தபிறகு அதன் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றோ உறுதியான முடிவுக்கு வந்திராதவர்கள் – இப்படி பலதரப்பட்டவர்களும் இவர்களிடையே உண்டு.
உலகம் முழுவதும் நலமாக இருக்கவேண்டும் என்ற விருப்பம்தான் இவர்களது எண்ணங்களுக்கும் செயல்களுக்கு அடிப்படை. எனினும் அதனுடைய பயன்பாட்டு முறைகள் குறித்து, நிகழ்வுகளின் எதார்த்தத்தைப் பொறுத்து அறிவுக் கூர்மையுடன் சிந்திக்கவோ, அதன் அடிப்படையில் தெளிவாக இயக்க திசைவழியை நிர்ணயிக்கவோ இவர்களுக்குத் திறன் இல்லை. அதனால்தான் இவர்கள் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
முதலாளித்துவத்தின் தீமைகளை வெளிக்கொண்டு வருவதும், சமுதாயத்தின் கவனத்தை அதில் ஈர்க்கச் செய்வதும்தான் சோஷலிசத்தின் வளர்ச்சியில் இவர்களுக்கான இடம். இவர்களது பிரச்சார நடைமுறைகள் எல்லாம் குறிப்பிட்ட தேசியப் பிரச்சனைகளுக்குப் பதிலாக சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் சமூகவியலாளர்கள் என்ற பொருளில் இவர்களை சோஷலிஸ்டுகள் என்று அழைக்கத் தொடங்கினர்.
விஞ்ஞான சோஷலிசம்
சோஷலிசத்திற்கு அறிவியல் ரீதியாக ஓர் அடிப்படை இடம் பெற்றுத் தந்தவர்கள் கார்ல் மார்க்சும் ஃப்ரெடரிக் எங்கெல்சும் ஆவர். இவர்களுடைய சிந்தனைக்கும் செயலுக்குமான அடிப்படை வெறும் கற்பனையான கனவுகளோ, உணர்ச்சிகரமான மனித நேயமோ அல்ல. முதலாளித்துவ அமைப்பில் உள்ள சமுதாய சக்திகளை மிக விரிவாக ஆய்வு செய்து அதில் மறைந்து கிடக்கும் அநீதிகளையும் அவற்றை இயக்க ரீதியில் எதிர்த்துப் போராடுவதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியதுதான் இவர்கள் இருவரின் தனிச்சிறப்பு!
தங்களின் அனுபவங்களுக்கும் மேலாக, ஏராளமான படைப்புகளைக் கற்றறிந்த பிறகு இந்த இரண்டு சிந்தனையாளர்களும் வெளியிட்ட கருத்துக்களை விளக்குவதற்கு இந்தச் சிறிய கட்டுரையில் சாத்தியமில்லை. அவற்றில் முக்கியமான சில சிறப்பு அம்சங்களை மட்டும் இங்கே எடுத்துக் கூறுகிறேன்.
- சமுதாயத்தை அரசியல், பொருளாதாரம், மதம், கலை என வெவ்வேறு பகுதிகளாகப்பிரிப்பதற்கு இயலாது. சமூக வாழ்க்கை ஒன்றுதான் பிரிக்கமுடியாதது. அதன் அடிப்படை பொருளுற்பத்தியில் உள்ள பரஸ்பர உறவுதான். உற்பத்தி முறை மாறியதோடு கூடவே அரசியல் இயக்கத்திலும், குடும்ப வாழ்க்கையிலும், மதத்திலும், கலைப் பார்வையிலும் மாற்றங்கள் வரத் தொடங்கும். பொருளுற்பத்திச் சாதனங்களை கைவசம் வைத்திருக்கும் மக்கள் பிரிவு – அதாவது வர்க்கத்தின் நிலையை ஒட்டியே இவையும் மாறும்.
- முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு இணைந்து தனிப்பட்ட வகையிலான ஒரு சமூக அமைப்பு வளர்ந்து வருவதுண்டு. முதலாளித்துவத்தின் முதன்மை நோக்கமான சொந்த லாபத்திற்கு ஏற்ற, அதற்கு இணக்கமான, அரசியல் அமைப்பு, மதம், இலக்கியம் போன்றவை அதில் இடம்பெற்றிருக்கும். அவற்றை ஒருசேர எதிர்க்காமல், முதலாளித்துவத்தின் பொருளாதார சீர்கேட்டை மட்டும் எதிர்க்கவியலாது. இவற்றிற்கெல்லாம் மையமான முதலாளித்துவத்தை எதிர்த்து அதனை வீழ்த்திவிட்டு, அந்த இடத்தில்புதியதோர் அமைப்பை உருவாக்குவதுதான் தொழிலாளர்களின் கடமையாகும்.
- இந்தக் கடமை, விரும்பியது போல செயல்படுத்தப்பட வேண்டுமென்றால், தொழிலாளர்கள் அரசியல்ரீதியாக ஒன்றுசேர வேண்டும். அரசு நிர்வாக இயந்திரம், நீதி, இலக்கியம், கலை போன்றவற்றின் இயக்கம் அதுவரை முதலாளிகளின் கையில் இருந்ததால், அவற்றைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் அரசியல் அமைப்பை அவர்கள் எதிர்க்காமல் இருக்க மாட்டார்கள். தொழிலாளர்கள் ஒன்றுசேரத் தொடங்கினால், பெரும்பான்மையோர் ஆட்சி, மக்களாட்சி இவையெல்லாம் இடம்பெயரும். சத்தியம், நியாயம், சமத்துவம் எல்லாம் முழுதுமாக அழியும். கலை கலைக்காகவே என்னும் கூக்குரல் அடங்கிவிடும். முதலாளிகளின் வர்க்க நலனை பாதுகாக்க உதவும் என்ற காலத்திற்கு மட்டும் இவற்றின் புனிதத்தை நிலைநிறுத்தப்படும். அதனால் புரட்சிக்கு முன்னால் முதலாளித்துவத்தை அச்சமின்றி எதிர்க்கவும், புரட்சிக்குப் பிறகு அதன் மிச்சசொச்சங்களை இரக்கமென்பது துளியுமின்றி அடக்கிவைப்பதும், வர்க்க நலன்களை அழித்தொழிப்பதும்வேண்டும். இதன் விளைவாக வர்க்கபேதமற்ற சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், ஊட்டச் சத்துக்களை உட்கொள்ளவும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாய்ப்பளிக்கின்ற ஒரு சமூக அமைப்பு உருவாகும். அது நிறைவேறுவதற்கான செயல்களை செய்வதற்குத் தொழிலாளி வர்க்கம் ஓர் அரசியல் கட்சியாகவும் உருவெடுக்க வேண்டியிருக்கிறது.
அறிவியல் ரீதியாகச் செயல்படுகின்ற ஒரு தத்துவக் கருத்தோட்டம், பயன்பாட்டிற்குரிய பொருளாதார அறிவியல், கவர்ச்சிகரமான, தெளிவான ஓர் இலட்சியத்துடன் கிளர்ந்து எழச் செய்கின்ற ஒரு பிரச்சார முறை – இவைதான் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து உலகிற்குத் தந்த சோஷலிசத்தின் சுருக்கம். ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்தரமான ஓர் இடம், வழிபடத் தக்க தலைமைப் பதவி அவர்களுக்குக் கிடைக்க வகை செய்தது, நடைமுறை ஒருங்கிணைப்புப் பணியில் அவர்கள் எடுத்துக்கொண்ட முக்கியமான பங்குதான்! சாதி, மதம், தேசம், வயது போன்ற யாதொரு வேறுபாடுமின்றி உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரையும் ஒரு சங்கத்தின் கீழ் ஒன்றிணைத்துக் காண வேண்டும் எனும் அவர்களின் விருப்பத்தை 1848-ல் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்று அறியப்படுகின்ற அதிகாரபூர்வ வெளியீட்டில் அவர்கள் வெளிப்படுத்தினர்.
அதற்கு ஒரு வருடம் முன்னதாகத்தான் ‘கம்யூனிஸ்ட் கழகம்’ நிறுவப்பட்டிருந்தது. ‘புரட்சி ஆண்டு’ என்று அழைக்கப்படுகின்ற கி.பி. 1848-ல் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் அரசியல் புரட்சிகள் கிளர்ந்தெழுந்தபோது, அவற்றில் முழுமையாகப் பங்கேற்று அரசியல் புரட்சிக்கு உதவும் வகையில் அவர்கள் உற்சாகமூட்டினர். ஆனால் அன்றைய புரட்சி பழமைவாதத்தின் வெற்றியில் முடிவுற்றதால் விஞ்ஞான சோஷலிசம் அரசியல் ரீதியாக தற்காலிகமாக தோல்வியை சந்தித்தது. இருந்தபோதிலும் அதன் பின்னரும் அவர்களது முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. அதன் விளைவாக 1864-ல் சர்வதேச தொழிலாளர் சங்கம் தோன்றியது. அதன் நிர்வாக அமைப்பு முறையை வடிவமைக்க முதலில் நியமிக்கப்பட்டவர் மாஜினி என்ற இத்தாலி நாட்டு புரட்சிக்காரர் என்றபோதிலும், அவர் தயாரித்தளித்த முன்வரைவு திருப்திகரமாக இல்லாததால், பின்னர் அதனை மார்க்சே செய்ய நேர்ந்தது. முறையாக ஒவ்வொரு வருடமும் ஆண்டுப் பேரவை, நிரந்தரமான ஒரு நிர்வாக அமைப்பு, நாடுகள் தோறும் ஒவ்வொரு தேசியக் கிளைகள் – இவைதாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் சுருக்கமான நிர்வாக வடிவம்.
அதிகபட்சமாக பத்தாண்டுகள் மட்டுமே நிலைத்த இந்த அமைப்பு தொழிலாளி வர்க்கத்திற்கு இரண்டு முக்கியமான அம்சங்களைத் தந்தது.
1) விஞ்ஞான சோஷலிசத் தத்துவத்தை கடைப்பிடித்து தொழிலாளர்களை எவ்வாறு ஒன்றிணைக்க வேண்டும் என்று அதனை உருவாக்கியவர்களிடமிருந்தே கிடைத்த விளக்கம். ப்ரவுதான் (Proudhon), பக்கூனின் (Mikhail Bakunin) போன்ற பல்வேறு கருத்துக்களை உடைய பலரும் சங்கத்தின் செயல்பாட்டு முறையை உருவாக்க முயன்றனர் என்றாலும் மார்க்சின் கருத்துக்களையே சங்கம் எப்போதும் ஏற்றுக் கொண்டு வந்தது.
2) ஃப்ரெஞ்சுப் புரட்சி. இது சர்வதேச தொழிலாளர் சங்கத்துடைய, மார்க்சுடைய உருவாக்கமாக இல்லையெனினும், இந்த நிகழ்வில் அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருந்தது. புரட்சியின் விளைவாக உருவெடுத்த கம்யூன் தொழிலாளர்களுக்கு ஏற்ற ஓர் ஆட்சியதிகார இயந்திரம்தான் என்று சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பெயரால் மார்க்ஸ் அறிவித்திருந்தார். புரட்சிகரமான சமயங்களில் சோஷலிசவாதிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் மார்க்சின் கட்டுரைகள் விளக்கியதற்கும் மேலாக தொழிலாளர் ஆட்சியதிகாரத்தின் தன்மையையும், 1871-ஆண்டு நடந்த புரட்சியும் அவர்களுக்கு விளங்கவைத்தது.
பின்னர் உருவான ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து தொழிலாளர் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தபோது, 1871 பாரீஸ் கம்யூன் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டுதான் லெனின் சோவியத்துகளை உருவாக்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
1873-ம் ஆண்டோடு சர்வதேச தொழிலாளர் சங்கம் மறைந்து போனது என்றாலும் உள்ளார்ந்த அறிவுடைத் தொழிலாளர்கள் உலக அளவில் ஓர் அடிப்படையில் ஒன்றிணைந்து தங்களின் வர்க்க நலன்களுக்காகப் போராட வேண்டியது எப்படி என்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தையும் அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும், அதனுடைய குறுகிய ஆயுள் காலத்திற்குள்ளாகவே அது தெளிவாக்கியது. சுருக்கமாகக் கூறினால், விஞ்ஞான சோஷலிசத்தின் சரியான தருணத்தையும் பயன்பாட்டையும் இந்த முதலாம் உலகத் தொழிற் சங்கம் தொழிலாளர் உலகத்திற்குக் கற்றுத் தந்தது.
இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம்
மார்க்சின் தலைமையிலான சர்வதேச தொழிலாளர் அமைப்பு மறைந்து போனது என்றாலும் சர்வதேச உணர்வோ, சோஷலிச உணர்வோ மறைந்துவிட்டது என்று அதற்குப் பொருளல்ல. அதன் பின்னரும் அது வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வந்தது. ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி பிரபலமாக வளர்ந்து கொண்டிருந்தது. பிஸ்மார்க் என்ற ஜெர்மன் ஆட்சியரின் அடக்குமுறைகளால் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இங்கிலாந்திலோ ஃபேபியன் குழு, தொழிலாளர் கட்சி போன்ற பெயர்களில் சோஷலிஸ்ட் செயல்பாடு தீவிரமாக வளர்ந்தது. நாகரீகம் அற்றதாக, பழமையானதாகக் கருதப்பட்ட ரஷ்யாவிலும் கூட தீவிரவாதச் செயல்பாட்டை, வன்முறைப் பாதையை கடைப்பிடித்த ஒரு சமூக ஜனநாயகக் கட்சி தோன்றியது. ஃபிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா என ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசம் மதிக்கத்தக்கதோர் அரசியல் செயல்பாட்டு அமைப்பாக மாறியிருந்தது!
இந்த நிலைமையில் தொழிலாளர்களின் இயக்கம் இப்படி சிந்திச் சிதறிக் கிடந்தால் போதாது என்ற ஒரு கருத்து சோஷலிச செயல்பாட்டாளர்களின் நெஞ்சங்களில் உதித்தது என்றால் வியப்பில்லை அல்லவா? 1889-ல் பாரீஸில் கூடிய ஒரு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் மூலம் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவானது. ஒவ்வொரு நாட்டிலும் சோஷலிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சங்கங்களும் இதற்குப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவும், அதன் செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கவும் தொடங்கினார்கள்.
ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக நிலைமைகளை தெளிவாக்கும் புள்ளி விவரங்களும் இலக்கியப் படைப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு முறையான வகையில் வெளியிட சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு நிரந்தரமாகச் செயல்பட இந்த அமைப்பினால் இயன்ற போதிலும் இது பயணப்பட்டது சர்வதேசத் தொழிலாளர்களின் முதலாம் அகிலத்தின் பாதையில் அல்ல!
முதலாம் அகிலம் உலக அளவிலான புரட்சியாளர்களின் ஒரு சங்கமாக இருந்தது என்றால் இது பாராளுமன்ற ஜனநாயகவாதிகளின் ஒருங்கிணைந்த அமைப்பாக இருந்தது. முதலாம் சங்கத்தின் செயல்பாட்டாளர்கள் புரட்சியின் அழிக்கவியலாத நிலைத்தன்மையில் உறுதிபெற்றவர்களாக இருந்தனர் என்றால், இரண்டாம் அகிலத்தின் தலைவர்களுக்கு நம்பிக்கை இருந்தது சட்டமன்றங்கள் மூலமான போராட்டத்தில்!
சுருக்கமாகக் கூறினால், இரண்டாவது சர்வதேச தொழிலாளர் சங்கத்தில் விஞ்ஞானமும் இல்லை; சோஷலிசமும் இல்லை. ஆனால் சோஷலிசம் என்ற பெயர் மட்டும் எப்படியோ அதனோடு ஒட்டிக் கொண்டிருந்தது!
இந்த வேறுபாடு யுத்தம் குறித்து தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய நிலைபாட்டில் வெளிப்பட்டது. 1872-ல் பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான போர் வெடித்துக் கிளம்பியபோது, பிரான்ஸ் தொழிலாளர்கள் தங்களின் ஜெர்மன் தொழிலாளர் சகோதரர்களுக்கு உளமார்ந்த ஆதரவுடன் சோஷலிச வரலாறு குறித்த கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், பல்வேறு நாடுகளில் முதலாளிகளுக்குள் நடைபெறும் சண்டை எல்லா இடங்களிலும் இருக்கும் தொழிலாளர்களையும் பாதிக்கிறது என்பதால் அதனை வலுவாக எதிர்ப்பது என்பதுதான் சோஷலிசத்தின் கடமை என்று அந்த நேரத்தில் (ஜெர்மனிக்கு எதிராக நிற்காது) எதிர்ப்பின்றி இருந்தார்கள். ஆனால் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத்திற்கு இவ்வளவு தெளிவான பார்வை இருக்கவில்லை.
மார்க்சியத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அவர்கள் யுத்தத்தையும் வெளிப்படையாக எதிர்த்தது சரிதான். ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில், மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும் யுத்தத்தின் மீதான வெறுப்பும் வெறும் புறத் தோற்றமாகவே இருந்தது. 1914-ல் வெடித்தெழுந்த உலகப் போரின்பொழுது இது பகிரங்கமாகவே வெளிப்பட்டது. அதுவரையில் சோஷலிஸ்ட் தலைவர்கள் யுத்தத்திற்கு எதிரான தங்கள் நிலையை வெளிப்படுத்தி வந்தனர். எனினும் போர் துவங்கியதும் அவர்கள் ஆட்டம் காணத் தொடங்கினார்கள். தேசிய சோஷலிஸ்ட் சங்கங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக தத்தமது நாட்டு அரசுகளுக்கு ஆதரவை உறுதிப்படுத்தலாயின. போருக்கான நிதி திரட்டிக் கொடுப்பது; போர்க்கால அமைச்சரவையில் இடம்பிடிப்பது; உலகளாவிய தோழமையையும் சோஷலிசத்தையும் கைவிட்டுவிட்டு தேசியத்தையும் முதலாளித்துவத்தையும் ஆதரித்துப் பிரச்சாரம் நடத்துவது ஆகிய இவற்றைத்தான் சோஷலிஸ்ட் தலைவர்கள் செய்தார்கள். நடைமுறையில் இதுவே இரண்டாம் உலகத் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.
இத்தகைய நடைமுறைக்கு எதிராக, எந்த நிலையிலும் போரினை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தினை ஏற்றுக் கொண்டு, சிறுபான்மை எண்ணிக்கையினராக இருந்த போதிலும் அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு கட்சி உருவெடுத்திருந்தது. உலகப் போரை ஒவ்வொரு நாட்டிலும் இருந்த தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போராக மாற்றுவது என்பதுதான் அவர்களின் எண்ணம். எனினும் போரில் பங்கேற்கின்ற விஷயத்தில் எதிர்க்கருத்து உருவாகியதும், பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்துடையோர் உலகப் பெரும்போரில் இரு அணிகளில் இருந்து சண்டையிடவும் செய்ததால் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கம் வீழ்ச்சியடைந்தது என்றே கூறலாம்.
கம்யூனிசம்
இரண்டாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் செயல்பட்ட காலத்திலேயே அதன் கருத்துக்களுக்கும், தலைமைக்கும் எதிராக ஒரு சங்கம் அதன் செயல்பாட்டாளர்கள் மத்தியில் உருவாகியிருந்தது.
தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து ஒரு புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் மார்க்சிய தத்துவத்திற்குப் பதிலாக நாடாளுமன்ற நடைமுறை மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற தவறான நம்பிக்கையை மட்டுமே புதிய சோஷலிஸ்ட் தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்றும் இந்தச் சிறுபான்மைக் குழுவினர் வாதிட்டனர்.
“பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கம் அடிப்படையில் முதலாளித்துவரீதியில்தான் இருக்கிறது. முதலாளித்துவரீதியிலான ஒரு நிலவுடைமை வர்க்கமும், முதலாளித்துவ அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு தொழிலாளி வர்க்கமும் தொழில் முதலாளித்துவத்தோடு ஒன்றிணைந்து உண்டாக்கத்தக்க ஒரு சூழ்நிலையை உருவாக்கவே இந்த முதலாளித்துவ நாடு விரும்புகிறது. இங்கே இருக்கும் தொழிலாளர்கள் சர்வதேச வணிகம், பிரிட்டிஷ் அடிமை நாடுகளின் வணிக உரிமைகளின் விளைவாக அதிகரித்து வரும் வருமானத்தை முதலாளிகளுடன் சேர்ந்து அனுபவித்து வருகின்றனர்” என சில வருடங்களுக்கு முன்பு ஏங்கெல்ஸ் எடுத்துச் சொன்னது நடைபெற்று வருகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொண்டார்கள்.
முதலாளித்துவத்துடன் உடன்படிக்கை செய்து கொள்கின்ற தொழிலாளர் தலைவர்கள் மார்க்சின் தத்துவங்களை திருத்தி எழுதுகின்றனர். சோஷலிச சிந்தனை அனைத்து நாடுகளிலும் அதிகரித்து வருவது அவர்களது கவனத்தை ஈர்த்தது. இத்தகைய தலைவர்களின் ஒன்றுசேரலும், இந்த சிந்தனையாளர்களின் படைப்புகளும் தொழிலாளர் உலகத்தில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனில் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை என்று அவர்கள் தீர்மானித்தனர்.
யுத்தத்தை எதிர்த்து நிற்பது; தொழிலாளர் இயக்கத்தின் உலகளாவிய பார்வையை வலியுறுத்துவது; புரட்சியின் இன்றியமையாமையை எடுத்துரைத்துப் புரிய வைப்பது, சுருங்கக் கூறின், எந்தவகையிலான முதலாளித்துவத்தையும் தகர்த்தெறிதல் இவையே இவர்களின் நடவடிக்கைகளாக இருந்தன. ‘சோஷலிசம்’ என்ற புரிதலற்ற சொல்லுக்குப் பதிலாக மார்க்ஸ் முதன்முதலாகப் பயன்படுத்தியதும், புரட்சியைக் குறிப்பதுமாகிய ‘கம்யூனிசம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவும் அவர்கள் உறுதிபூண்டார்கள்.
இந்த மனநிலை நீண்ட காலமாகவே இருந்தது என்றாலும் உலகப் போரோடு இணைந்து அது ஒரு தெளிவான வடிவமாக உருவானது. அதுவரையிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிதாமகர்களும் தலைவர்களும் இரண்டாம் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்தனர். மார்க்சிய தத்துவத்தை கடைப்பிடித்து அந்தந்தக் காலத்தில் அரசியல் நிலையை ஆய்வு செய்கின்ற சிந்தனையாளர்கள் 1905 ரஷ்யப் புரட்சியைப் போன்ற மக்கள் நலச் செயல்பாடுகளுக்கான தலைவர்களுமாக இருந்தபோதிலும், சர்வதேச தொழிலாளர் நடவடிக்கையில் அவர்களுக்கு முக்கியத்துவம் அற்ற நிலைதான் இருந்து வந்தது. எனினும் உலகப் போரோடு சேர்ந்து இவர்கள் புகழ் வளர்ந்து வந்தது. போருக்கு எதிரான முழக்கம் துவக்க காலங்களில் மிகவும் பலவீனமாக இருந்தபோதிலும், போரின் விளைவாக தொழிலாளர்களின் துயரங்கள் பெருகியபோது கம்யூனிஸ்டுகளின் சமாதான கருத்து அவர்களிடையே வெகுவாகப் பரவத் தொடங்கின.
ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற பல நாடுகளிலும் புரட்சி கிளர்ந்தெழுந்தது. “உலகப் போர்க்காலத்தை உள்நாட்டுப் போராக மாற்றுக!”, “சண்டைக்குக் காரணமான முதலாளித்துவத்தை தோற்கடியுங்கள்!”, “அதிகாரம் யாவும் மக்களுக்கே!” – இப்படிப்பட்ட முழக்கங்கள் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. முதலில் ஜனநாயக ரீதியில் கிளர்ந்தெழுந்த ரஷ்யப் புரட்சி ஒரு சோஷலிசப் புரட்சியாக முழுமை பெற்றது. அதன் தலைவரான லெனின் தொழிலாளி வர்க்கத்தின் மீட்பர் என்ற நிலையில் போற்றுதலுக்கு உரியவரானார். சோஷலிசத்திற்கு இன்று குறிப்பிடத்தக்க ஒரு இடம் உருவாகிவிட்டது. புரட்சிகரமான, அறிவியல் ரீதியிலான சோஷலிசம் பயன்பாட்டிற்கு உரியதுதான் என்பதும் தெளிவானது.
ரஷ்யப் புரட்சி வெற்றியடைந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்தை ஈர்த்த உடனடியான விஷயம் ரஷ்யாவில் சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதுதான். குழப்பமானதொரு நிலையை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. எதிரிப்படைகள் சோஷலிச ஆட்சியை வீழ்த்த முதலாளித்துவ அரசுகள் அனுப்பி வைத்த படைகள், ரஷ்யாவின் வாயிலை வந்தடைந்தன. அவற்றைத் துரத்தியடிக்க வேண்டும். எவரொருவரும் கடன் கொடுக்கத் தயாராக இல்லாததால் ரஷ்யா பொருளாதார ரீதியாக வளர்வது சிரமமானதாக இருந்தது. நாட்டின் உயர்வர்க்கத்தினர் கலகம் விளைவித்து தொழிலாளர்களின் ஆட்சியை எதிர்த்து வந்தார்கள். கடுமையான பஞ்சம் நிலவியது.
இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் சோஷலிச அரசாங்கத்தின் ஆயுள் முடிந்துவிட்டது என்று ஒவ்வொரு நிமிடமும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தன. எனினும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையின் கீழ் இருந்த ரஷ்ய மக்கள் இவற்றை மனத் திடத்துடன் எதிர்கொண்டு வந்தனர். நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க தொழிலாளர்களின் ‘செம்படை’ உருவாகியிருந்தது. அது ரஷ்யாவில் இருந்த பழமைவாதிகளை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்கியது. (இந்தப் பழமைவாதிகள் வெள்ளை ரஷ்யர்கள் என்றே அழைக்கப்பட்டனர்) மூச்சுவிட ஆசுவாசம் தேட சற்று கால அவகாசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தொழிலாளர் அரசு முதலாளித்துவ நாடுகளுடன், அவமானகரமானது என்றாலும், சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது. பொருளாதார வளர்ச்சியில் அதன் கவனம் முழுவதும் குவிந்தது. புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் இடைத்தரகர்களின் ஒரு சில விருப்பங்களை நிறைவேற்றும் ஒருவித ஏற்பாடு செய்யப்பட்டது. உணவுப் பொருட்களையும் இதர அத்தியாவசியப் பொருட்களையும் தியாகம் செய்தாவது இயந்திரங்களையும் தொழில் கருவிகளையும் வாங்கி தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. மிகப்பெரும் தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், பாலங்கள் கட்டப்பட்டன. வெளிநாட்டு வணிகம் அரசுடைமை ஆனது. வேளாண் பணியையும் கூட்டாகச் செய்யத் தொடங்கினர். இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கத்தில், பள்ளிகள், நூலகங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள், திரைப்படம், நாடகம் போன்றவற்றை ஊக்குவித்து கல்வியறிவை பெருக்கினார்கள். ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பெண்கள் ‘பிள்ளைப் பேற்றுக்கான வெற்று இயந்திரங்கள்’ என்ற நிலை மாறியது.
சுருங்கக் கூறின், புதியதொரு சமூகநீதி, புதியதொரு கலாச்சாரம், புதியதொரு கலைஞானம், புதியதொரு பொருளாதார அமைப்பு ஆகியவை புதிய (தொழிலாளர்களது) அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட ரஷ்யாவில் உருவாகின. இந்தப் புதிய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்குக் கூட அதன் எதார்த்தத்தையோ, பயன்பாட்டையோ எதிர்த்துக் கேள்வி கேட்க வாய்ப்பில்லை என்றானது.
புரட்சிக்குப் பின்னர் ரஷ்யா ஒரு பூலோக சொர்க்கமாகிவிட்ட்தோ என்று கேள்வி கேட்பவர்களும் உண்டு. அங்கே இருக்கும் ஆட்சிமுறையிலும், சமூக அமைப்பிலும் உள்ள சில தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களும் உண்டு. அவர்களிடம் ரஷ்யப் புரட்சியின் தலைவர்களில் ஒருவர் இப்படித்தான் கூறினார்: “ பல நூற்றாண்டுகளாக வளர்ந்து மண்டிக் கிடக்கின்ற புதர்க் காடுகளை அழிப்பதற்கு இத்தனை குறுகிய காலத்திற்குள் முடியும் என்று நாங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை!” புரட்சிக்கு முன்னரும் இன்றைக்கும் இருக்கின்ற ரஷ்யாவை ஒப்பிட்டுப் பார்த்து நடைமுறையிலும் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் மக்கள் அதிக வளர்ச்சியை அடைந்திருக்கிறார்களே என்றும், இத்தனை குறுகிய காலத்திற்குள்ளாகவே இத்தனை அதிக வளர்ச்சியுற்ற தேசமோ, வளர்ச்சியை உருவாக்கிய அரசியல் கட்சியோ இருக்கிறதா என்றும்தான் பார்க்க வேண்டும். அந்தப் பரிசோதனையில் நிச்சயமாக ரஷ்யப் புரட்சி, அதனை உருவாக்கி வளர்த்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டைப் பெறும்.
ஆயினும், ரஷ்யாவில் ஒரு சோஷலிச சமுதாயம் நிறுவப்பட்டதனால் மட்டுமே பயனில்லை. இதர நாடுகளிலும் அது நடைமுறைப்படுத்தப்படாதபோது, ரஷ்ய சோவியத் அரசும் கூட ஆபத்திற்கு உள்ளாகும். அதனால் இதர நாடுகளிலும் புரட்சி நடத்தி, சோஷலிசம் நிறுவப்படுவதில் ரஷ்யத் தலைவர்கள் கவனம் செலுத்துபவர்களாக இருந்தனர். இந்த நோக்கத்துடனேயே, யுத்தத்திற்கு எதிராக இருந்த சோஷலிஸ்டுகளின் இயக்கத்தை மூன்றாம் உலகத் தொழிலாளர் சங்கம் அல்லது சர்வதேச கம்யூனிஸ்ட் ஸ்தாபனமாக மாற்றினர். சோஷலிசத்தின் பிறப்பிடமாகிய ரஷ்யாதான் அதன் தலைமையிடம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை! இதர நாடுகளில் புரட்சி நடத்துவதற்குரிய நடைமுறைத் திட்டங்களை இந்தக் கூட்டமைப்பு ஆலோசிக்கத் தொடங்கியது என்றும் இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. ஆனால் முதலாவது நடவடிக்கை (ரஷ்யப் புரட்சி)யைப் போல இது வெற்றிகரமாக இல்லை என்பது இனிவரும் பத்திகளில் இருந்து தெளிவாகும்.
புரட்சியின் தோல்வியும் பாசிஸத்தின் எழுச்சியும்
ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்த நேரத்தில் ஐரோப்பாவில் மிகப் பெரும்பாலான நாடுகளும் புரட்சிக்கு உகந்த நிலையில்தான் இருந்தன. யுத்தம் காரணமாக ஏழைகளின் துயரம் இரண்டு மடங்காகப் பெருகியிருந்தது. ஏழைகளுக்கிடையில் அதிருப்தி வளர்ந்தது.
இதன் விளைவாக ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் புரட்சி துவங்கியது. ஜெர்மனியில் நடந்தது ஏறக்குறைய ரஷ்யப் புரட்சியைப் போலவே வெற்றி பெற்றதுதான். ஹங்கேரியில் சில நாட்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியே நடந்தது. ஆஸ்திரியாவும் ஒரு புரட்சி நாடாக இருந்தது. எனினும் இந்தப் புரட்சிகளுக்கெல்லாம் ரஷ்யப் புரட்சியுடன் மிக மிக முக்கியமான வேறுபாடு ஒன்று இருந்தது. லெனினுடைய தலைமையின் கீழ் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரஷ்யாவில் உருவாகியிருந்தது போல வேறு எந்தவொரு நாட்டிலும் சுயமான வலிமை இல்லாதிருந்தது. மற்ற எல்லா இடங்களிலும் தொழிலாளர் இயக்கங்கள் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் கருத்துக்களை ஏற்றிருந்த மிதவாத சோஷலிஸ்டுகளின் கைகளில் இருந்தது. முதலாளிகளை தயவு தாட்சண்யமின்றி அடக்கி ஒடுக்கிவிட்டுத் தொழிலாளர்களின் சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் என்ற வழிமுறை அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கவில்லை. நாடாளுமன்றம் முதலான மக்களாட்சி அமைப்புகள் வழியாக தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்தலாம் என்றும், தனிமனித சுதந்திரம் சோஷலிசத்தின் பாதையில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தான் என்றும் அவர்கள் நம்பினார்கள். இவ்வாறு ஒவ்வொரு புரட்சியின் விளைவாகவும் அந்தந்த நாடுகளில் தோன்றியவை ஜனநாயகரீதியான ஓர் ஆட்சி அமைப்பாக இருந்தன. அதில் தொழிலாளர்களுக்கு யாதொரு முக்கியத்துவமும் இருக்கவில்லை. முதலாளிகளுக்கும் நில உடமையாளர்களுக்கும் புரட்சிக்கு முந்தைய காலத்தைப் போலவே சுதந்திரம் இருந்தது. மிகவும் மிதமான பல தொழிற்சட்டங்களை தவிர தொழிற்சாலையை பொதுச்சொத்தாக ஆக்குவதோ, நிலப்பிரபுக்களின் சொத்துக்களை அரசுடைமை ஆக்குவதோ நடைபெறவில்லை.
தொழிலாளி வர்க்கத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கு ஒரு ‘செஞ்சேனை’யும் புதிய ஆட்சியமைப்பைப் பாதுகாக்க இருக்கவில்லை. பழைய அதிகாரிகளும் படைத்தளபதிகளும் தங்களின் சுகமான பதவிகளில் தொடர்ந்தனர். சுருங்கச் சொன்னால், ‘மிகக் குறைந்த அளவிலானதொரு சோஷலிசம் இணைந்து உருவான நாடாளுமன்ற ஆட்சிதான் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் நடந்த புரட்சிகளுக்குப் பின்னர் உருவாகியிருந்தது.
உண்மையில், இதைக்கூட முதலாளிகள் விரும்பவில்லை. எனினும் புரட்சிக்குச் சாதகமான சூழ்நிலை நாட்டில் உருவாகியிருந்ததால் அவர்கள் இதனை எதிர்க்கவில்லை. சோஷலிஸ்டு தலைவர்களையும் அவர்கள் தங்கள் பிடிக்குள் வைத்திருந்தனர். அவர்களுடன் உடன்படிக்கை செய்தபடியே காலம் கடத்தினார்கள். பின்னர் புரட்சிகர மனோநிலை சற்று குறைந்தபோது ( அவ்வாறு அது குறைவதற்கும் சோஷலிஸ்டுத் தலைவர்களையே அவர்கள் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்று தனியாக குறிப்பிட்டுச் சொல்வதும் பொருத்தமானதே) தங்களின் உண்மையான நிறத்தை (இயல்பை) வெளிப்படுத்தவும் முதலாளிகள் தயக்கம் காட்டியவில்லை.
பழைய தொழிலாளர் தலைவர்களையும் வேலையற்ற இளைஞர்களையும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். போக்கிரிகளின் சங்கங்களையும் இவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். சோஷலிஸ்ட்-கம்யூனிஸ்ட் இயக்கத்தவரையும் தொழிற்சங்கங்களையும் ஒழித்துக் கட்டுவதற்கும் அமைப்பு ரீதியாக இவர்கள் ஏற்பாடு செய்தனர். ‘கருப்புச் சட்டை’க்காரர்களும், ‘பச்சை சட்டை’க்காரர்களும் தொழிலாளர் இயக்கங்களில் புகுந்து கலகம் விளைவிப்பது சாதாரண நடைமுறையானது. வேலைநிறுத்தங்களையும், கிளர்ச்சிப் போராட்டங்களையும் சட்டரீதியாக நடத்தும்போது அங்கே சென்று ரகளை செய்கின்ற ரவுடிகளுக்கு குறைவான தண்டனையும், வேலை நிறுத்தம் செய்வோருக்கு கடுமையான தண்டனையும் தருவதென்பது அரசுகளுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. பாசிஸம் உலகில் உருவெடுக்கத் துவங்கிவிட்டது. இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் என ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதற்குப் பரவலான இடம் கிடைத்தது. பாசிஸத்தைப் பற்றி என்னவெல்லாம் கருத்து கூறினாலும் கீழ்க்காணும் எதார்த்தமான சில உண்மைகள் அனைவராலும் ஏற்கத்தக்கதாகவே இருக்கின்றன.
- அது கம்யூனிஸத்திற்கு, விஞ்ஞான சோஷலிசத்திற்கு எதிரான இயக்கம் ஆகும். தொழிலாளர் வர்க்க நலன்களை ‘தேசத்தின் பொது நலன்’ என்ற பெயரில் அது எதிர்க்கிறது.
- அதன் தலைவர்கள் வெளியே யாராக இருந்தாலும், உண்மையில் அதன் கடிவாளத்தைப் பிடித்திருந்தது அதன் தலைவர்களான முதலாளிகள்தாம்! அதிகாரத்தை அடைவதற்கு முந்தைய காலகட்டங்களில் அவர்கள்பாசிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். பின்னர் முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
- வளர்ந்து வருகின்ற முதலாளித்துவத்திற்கு சாம்ராஜ்ய சக்தி தேவை என்பதால் ஏகாதிபத்திய மோகம் பாசிஸத்தின் ஓர் இயல்பான தன்மையாகும்! அதனால் இயல்பாகவே அது யுத்தத்தை ஆதரிப்பதுடன் யுத்தத்திற்கு ஆதரவான மனப்பாங்கினை மக்களிடையே வளர்த்தெடுக்கவும் செய்கிறது.
வேறுவகையில் கூறவேண்டுமென்றால், வளர்ந்துவரும் சோஷலிச சக்திகளை எதிர்த்து முதலாளித்துவ ரீதியிலான சமூக அமைப்பைப் பாதுகாப்பதற்காக, முதலாளித்துவம் மேற்கொள்கின்ற தந்திரம்தான் பாசிஸம்! முன்னே கூறிய முதலாளித்துவத்தின் அனைத்து குணங்களும் பாசிஸத்தில் உண்டு. அதனுடைய ஜனநாயக நிறம் மட்டுமல்ல; முடிந்துபோன நிலவுடமைப் பிரபுத்துவத்தை சிதைக்கின்ற ஒரு சமூக சக்தி என்ற நிலைக்கு உதித்தெழுந்த முதலாளித்துவ வர்க்கம், நிலவுடமைப் பிரபுத்துவத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொதுமக்களின் மதிப்பிற்குரிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருந்ததால், ஜனநாயகத்தின் கடிவாளம் அதன் வசம் இருந்தது. அல்லது தங்களுடைய வர்க்க நலன்களை ஜனநாயகத்தின் மூலம் வெள்ளையடிக்க (மூடி மறைக்க) அவர்களால் முடிந்தது. எனினும் நிலப் பிரபுத்துவத்தின் ஆதிக்கம் தகர்த்தெறியப்பட்டதோடு சமூக மாற்றம் முழுமையானதுடன் சேர்ந்து முதலாளித்துவத்தின் அந்த இயல்பு காணாமல் போய்விட்டது. அது நிலவுடமைப் பிரபுத்துவம் போலவே மாறியது.
அதனையும் எதிர்ப்பதற்கும் புதியதொரு வர்க்கம் உதித்தெழுந்த பிறகு, முதலாளிகளால் தங்களுடைய வர்க்க நலன்களை ஜனநாயகம் என்ற பெயரில் மறைத்து வைப்பதற்கு இயலாமல் போனது. அப்போது அந்தத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டு முதலாளித்துவம் தன்னுடைய விஸ்வரூபத்தை எடுத்தது. அதுதான் பாசிஸம்!
ஒன்றுபட்டு எதிர்கொள்க!
உலகில் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள உள் முரண்பாடுகளும், கட்சிப் பிரச்சனைகளும் முடிவுற்று, பொது எதிரியாகிய பாசிஸத்திடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றிணைந்த போராட்டம் இன்றியமையாதது என்று சோஷலிஸ்டுகளுக்குப் படிப்படியாகப் புரியத் தொடங்கியது. இரண்டாம், மூன்றாம் சர்வதேச சங்கங்களுக்கு இடையே கடுமையான மோதல்கள் உலகப்போரின் போதும், அது முடிந்த பின்னரும் எல்லா இடங்களிலும் உண்டாயிற்று. தொழிலாளர்களுக்குக் கிடைக்கவிருந்த வெற்றி கைநழுவிப் போனதில் இரண்டாம் சர்வதேச தொழிலாளர் சங்கத் தலைவர்கள் வெளிப்படுத்திய மனோபாவம் மன்னிக்கத்தக்க ஒன்றாக கம்யூனிஸ்டுகளுக்குத் தோன்றவில்லை. கம்யூனிஸ்டுகளின் தயவு தாட்சண்யமற்ற அழித்தொழிக்கும் முறை சோஷலிசத்தின் லட்சியத்தின் முழுமைக்கு இடையூறாகும் என்று எதிர்த்தரப்பும் நம்பியது.
எங்கெல்லாம் சோஷலிச செயல்பாடும் தொழிலாளர் சங்கங்களும் இருந்தனவோ அங்கெல்லாம் சோஷலிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே ‘இழுபறிப் போட்டி’ நடந்தது. அவ்வளவு ஏன்? பாசிஸம் உயரே எழத் துவங்கிய வேளையிலும் கூட இந்த மோதல் தொடர்ந்து நிகழ்ந்தது. கம்யூனிசத்தைக் காட்டிலும் அதிகம் ஏற்கத்தக்கது பாசிஸம் அல்ல என சோஷலிஸ்டுகள் சிலர் சந்தேகம் கொண்டார்கள். பாசிஸத்தை எதிர்கொள்வதற்காகவாவது பாராளுமன்ற போக்கு கொண்டவர்களோடு உடன்பாடு செய்து கொள்வது அறிவுபூர்வமானதாக இருக்கும் என்று கம்யூனிஸ்டுகளும் நம்பவில்லை!
ஆயினும் பரஸ்பர நம்பிக்கையும் இணக்கமும் இன்றியமையாததாக ஆகிவிட்ட சூழ்நிலை உருவானது. தொடக்கத்தில் இத்தாலியில் மட்டும் பிரபலமாகி வந்த பாசிஸம் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. மற்றொரு யுத்தம் வெடித்துக் கிளம்புவதற்கான அறிகுறிகள் வெகுவாகத் தென்படத் தொடங்கின. பரஸ்பரம் முழுமையான நம்பிக்கையுடன் இல்லையென்றாலும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள். பாசிஸத்தின் பேயாட்டங்களை எதிர்கொள்ளவும், யுத்த மனோபாவத்தை எதிர்க்கவும் எல்லாவிதமான சோஷலிஸ்டுகளும் தோளோடு தோள் நின்று போராடலாயினர். யுத்தத்திற்குக் காரணகர்த்தாக்களான முதலாளிகளின் அமைப்புதான் பாசிஸம் என்ற போதிலும் பன்னாட்டு மன்றத்துடன் இணைந்து, போரை எதிர்ப்பதற்கு சோவியத் ரஷ்யா தயாரானது. “யுத்தத்தையும் பாசிஸத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!” எனும் முழக்கம் எங்கணும் உரக்க ஒலித்தது.
கடந்த காலத்தை வைத்துப் பார்த்தோமெனில், இது வெற்றிகரமாகவே முடிவடைந்துள்ளது. ஒன்றிணைந்த போராட்டம் எல்லா நாடுகளிலும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ஃபிரான்ஸிலும் ஸ்பெயினிலும் ஒன்று சேர்ந்துள்ள புரட்சிகர கட்சிகள் அரசாட்சியை கைப்பற்றியுள்ளன. இதற்கு எதிராக ஸ்பெயினில் பழமைவாத கட்சிகள்கலவரத்தைத் துவக்கியுள்ளன. அதனை அடக்குவதற்கு புரட்சிகர அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தற்போது சொல்வதற்கில்லை.
முடிவுரை:
சோஷலிசம் இன்று உலகத்தின் முதன்மையான ஓர் அரசியல் சக்தியாக உருமாறியிருக்கிறது. ரஷ்யாவில் ஆட்சியதிகாரம் செய்வது சோஷலிஸ்டுகள்தான்! சீனாவில் கணிசமான ஒரு பகுதி சோஷலிஸ்ட் ஆட்சியின்கீழ் இருந்து வருகிறது. ஸ்பெயினிலும் ஃபிரான்ஸிலும் புரட்சிகர அரசுகளில் சோஷலிசத்தின் செல்வாக்கு வெகுவாக உள்ளது. இந்தியா போன்ற (பிரிட்டிஷ்) சாம்ராஜ்ய சக்திகளின் பாதங்களில் உள்ள நாடுகளில் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளும் சோஷலிசத்தின் தலைமையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளன. தகர்ந்துபோன முதலாளித்துவத்தின் எதிர்காலத்தில் விருப்பமற்ற நடுத்தர வர்க்கத்தினர், ஏகாதிபத்தியத்தில் இருக்கும் பாசிஸத்தின் அடக்குமுறை ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, “சோஷலிசம் தான் உலகின் பாதுகாப்பிற்கான ஒரே வழி” என்று புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். “சோஷலிசத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது முழுமையான பேரழிவை எதிர்கொள்ளவோ உலகம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது” என்றுதான் ஜி.டி.எச். கோள் என்ற அறிஞர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் சோஷலிசத்திற்கான எதிர்காலத்தில் ஏமாற்றம் அடைய வாய்ப்பில்லை!
(1936 அக்டோபர் 26 ‘மாத்ருபூமி’ வார இதழில் வெளியான தோழர் இ.எம்.எஸ். அவர்களின் இந்தக் கட்டுரை 2017 ஜூன் 11 இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டது.)
Leave a Reply