கடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்


குரல்: நிவேதா

எடிட்: மதன்ராஜ்

தன் 21-ம் வயதில் இன்னும் ஓரிரு ஆண்டுகள்தான் உயிர்வாழ்வார் என்று கூறப்பட்ட ஸ்டீஃபன் ஹாக்கிங் (ஜனவரி 8, 1942 – மார்ச் 14, 2018),  அதன் பிறகு, அவரே ஓர் அறிவியல் அதிசயம் என்ற வகையில், அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்துள்ளார்.

பெருவெடிப்பு நிகழ்ந்து இந்த பேரண்டம் உருவாகி வளரத் தொடங்கும் முன் இருந்த ஒருமம் (Singularity) குறித்த மானுடப் புரிதலை முன்னே நகர்த்தியவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். அளப்பரிய முடிவிலியான செறிவும் (Infinite Density) அளவேயற்ற மிக மிகச் சிறிய வடிவும் கொண்டதே ஒருமம்.

இந்த ஒருமம் என்பதற்கு வெளியே இடம், வெளி, காலம் என்பதே இல்லை. நம்மால் அதனை மனச்சித்திரமாகத் தீட்டிப் பார்க்கவே இயலாது. அது மட்டுமல்ல; 20-ம் நூற்றாண்டின் இயற்பியலின் அதி உன்னதமும் உச்சாணிகளுமான சார்பியலும், குவாண்டம் இயங்கியலும் இந்த ஒருமத்தில் அமலாவதில்லை. ஒருமம் அளவிற்கு அடர்த்தியும் செறிவும் கொண்ட பொருள் குறித்த அறிவியல் இனிமேல்தான் வளர்ந்து வரவேண்டும்.

இதுவரை மானுடம் கண்ட மாமேதைகளின் உருவாக்கங்களான சார்பியல், குவாண்டம் இயங்கியல் ஆகிய இரண்டுக்கும் பொதுவான ஓர் ஒற்றைப் பெரும் சமன்பாடு சமைத்தெடுக்கப்படவேண்டும். பெருவெடிப்பிற்கு பின்னே planck time என அழைக்கப்படும் 10-43 வினாடிக்குப் பிந்தைய அண்டம் குறித்துதான் இன்றைய அறிவியலினால் பேச இயலும். ஆனால் மானுட உள்ளத்திற்கு அப்படியெல்லாம் வரம்பு கட்ட இயலுமா என்ன? அப்படி அந்த காலத்தில் நடந்தது பற்றிய மானுடத் தேடலின் தாகத்தை ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் மேதமை உள்ளம் பிரதிபலித்தது. தன் கோட்டுப் பித்தானைத் தானே போடவும், கழற்றவும் இயலாத உடல்நிலையைக் கொண்டவர்தான் என்றாலும், மானுட உள்ளத்தின் ஆற்றலிலும் நுட்பத்திலும் மிக உயர்ந்த உச்சம் தொட்டவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

பேரண்டத்தில் இருக்கும் ஒருமம் போன்ற கருந்துளை (Black Hole) பற்றிய மானுடப் புரிதலில் அவர் கொண்டுவந்த முன்னேற்றம்தான் அவர் அளித்த அறிவியல் கொடைகளில் ஆகப் பெரியது. ஒளியும் வெளியேறாத அளப்பரிய ஈர்ப்பும், நிறையும், அளக்கவே இயலாத இருப்பும் கொண்ட கருந்துளைகளில் இருந்து மிகச் சிறு அளவில் கதிர் வீச்சு சாத்தியம் என அவர் கோட்பாட்டு ரீதியாக, கணிதவியல் அடிப்படையில் நிறுவினார். அவரது உள்ளமும், அது அளித்த கோட்பாடும், அடைந்த ஆழத்தை இன்னும் செயல்முறை அறிவியலும் தொழில்நுட்பமும் அடையவில்லை. எனவே, அவரது கண்டுபிடிப்பை செயல்முறையாக நோக்கித் தெளிவது (Observation) இன்றைய நிலையில் சாத்தியமில்லை. அதனை ஒரு நிபந்தனையாக வைத்துள்ளதால்தான் அவருக்கு நோபல் பரிசு அளிக்க இயலாது போயிற்று.

‘கடவுள்’ எனும் கருதுகோள் இல்லாமலேயே இந்தப் பேரண்டத்தின் உருவாக்கம், வளர்ச்சி, இருப்பு, ஏன் நாளைய நிலைமாற்றம், மரணம் ஆகிய அனைத்தையும் விளக்க இயலும் என்பதை அவர் தெளிவாக்கியுள்ளார். அவரது நிரூபணம் இந்தப் பேரண்டத்தில் கடவுளுக்கு இருந்த கடைசி இடத்தையும், வேலையையும் இல்லாது செய்துவிட்டது. தன் சக்கர நாற்காலியையும், கணினிக் குரல்வளையையும், கடைசிவரை துடித்தபடி வேலைசெய்த ஒற்றைக் கன்னத்து தசையையும் வைத்துக் கொண்டே கடவுளை வென்று புதைத்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

இவ்வாறு மானுட ஆற்றலின் உச்சம் தொட்ட ஸ்டீஃபன் ஹாக்கிங், அமெரிக்கா  வியட்நாம் மீது தொடுத்த போரை எதிர்த்து லண்டன் தெருக்களில், நம்மில் பலர் நமது மாணவப் பருவத்தில் ஈடுபட்டதுபோல, தெருமுனை ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றுள்ளார். அமெரிக்காவில் மெக்கார்த்தி கால அடக்குமுறையின்போது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தன்னால் இயன்றவரை 10 டாலர், 20 டாலர் என நிதிவசூல் செய்தளித்த மாமேதை ஐன்ஸ்டீனின் செயல்பாடுகளை அவர் நினைவுபடுத்துகின்றார்.

பின்னர் பிரிட்டன் இராக் போரில் ஈடுபட்டதைப் ‘போர்க்குற்றம்’ எனக் கருத வேண்டும் என்றார்; தாட்சர், டோனி பிளேர் கால தனியார் மயத்தை எதிர்த்தார். இப்படி பல சொல்லலாம். நோபல் பரிசு ஒன்றைத் தவிர எத்தனையோ விருதுகளை வாங்கிக் குவித்துள்ள ஸ்டீஃபன் ஹாக்கிங் பிரிட்டிஷ் அரசின் சர் (Knighthood) பட்டம் பெற மறுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. தன் சக அறிவியலாளர்களோடு பல வேடிக்கையான, கடுமையான சச்சரவுகளில், சவால்களில் அவர் ஈடுபட்டது உண்டு. கடைசியாக,  2008-ம் ஆண்டு ’கடவுள் துகள்’ எனப்படும் ஹிக்ஸ் போஸான்’ ஒருபோதும் கண்டுபிடிக்கப்படாது என்று பந்தயம் கட்டினார்.</strong> ஆனால், 2012-ம் ஆண்டு செர்ன் நிறுவனத்தில்ஹிக்ஸ் போஸான்’ கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கடவுளைத் தோற்கடித்தவராக இருக்கலாம்; ஆனால் அறிவியல் அவரையும் தாண்டி மேலே சென்றது.

2006-ம் ஆண்டு அண்டவெளிக்குச் செல்லவேண்டும் என்ற தனது நிறைவேறாத ஆசையை பிபிசி நேர்காணலில் கூறினார். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தனது உடல்நிலையையும் தாண்டி அதனை 2007-ம் ஆண்டே செய்து முடித்தார். இன்னும் நிறைவேறாத ஆசை வேறு ஏதும் இருக்கிறதா என ஒரு முறை கேட்டபோது, வாழ்நாளெல்லாம் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளராக, ஒரு பரந்துபட்ட இடதுசாரியாக விளங்கிய அவர், என் சக்கர நாற்காலியை மார்க்கரெட் தாட்சரின் காலில்  ‘ஒரு ஏத்து ஏத்த வேண்டும்’ என்ற ஆசை மட்டும் நிறைவேறவில்லை எனக் கூறியிருந்தார்.

மாமேதைகள் ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின் ஆகியோர் அருகே தன் கல்லறையில் அவரது உடலில் இயங்கிக் கொண்டிருந்த அந்த ஒற்றைக் கன்னத்து தசையின் இயக்கமும் நின்றுபோக, பேரண்டம் முழுவதும் தாரகைகளின், கருந்துளைகளின் மையங்களிலெல்லாம் பயணித்து மீண்ட அவரது உள்ளமும் உறங்கிக்கொண்டிருக்கின்றது.

உங்கள் கல்லறை வாசகமாக (Epitaph) என்ன இருக்க வேண்டும் என்று கேட்டபோது, கருந்துளையின் அளவு மற்றும் அதன் உள்ளுறை பொருட்பொதிவு சாத்தியங்கள் குறித்து அவர் உருவாக்கிய சமன் பாட்டை கல்லறைக் கல்லில் பொறிக்கச் சொன்னார்.  இந்தப் பேரண்டமும், தாரகைகளும், கருந்துளை களும் உள்ளவரை அவரது பெயரைச் சொல்லும்.

அந்தச் சமன்பாடு இதுதான்:

 

3 thoughts on “கடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்

  1. அற்புதமான வர்ணனை படிப்பதை விட கேட்பது நன்றாகவே உள்ளது. மார்கரெட் தட்சர் காலில் என் சக்கர நாற்காலியை ஏற்றவேண்டும் எனும்போது ஒரு மெல்லிய சிரிப்பில் கடந்து போவது கட்டுரையின் ஆழத்தை போருட்போதிந்து புரிந்துகொள்ள இயலுகிறது.
    ஸ்டீபன் ஹாகின்சின் காலம் என்ற நூலை மிக சமீபத்தில் தான் படித்தேன் அவர் அந்நூலை எண்பதுகளில் எழுதியுள்ளார் என தெரிந்த போது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் தெரிந்துள்ள ஒருசில அறிவியல் உண்மைகளும் நாற்பதாண்டுகளுக்கு முன்பே உலகிற்கு வந்துவிட்டது என தெரிந்ததுதான் அந்த அதிர்ச்சி…மேலும் ஹாகின்ஸ் பற்றி தெரிந்துகொள்ள சில நூல்களை அறிமுக படுத்தவும்..
    க.நிருபன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s