பிடல் காஸ்ட்ரோ செத்துக்கொண்டிருக்கிறார் என்ற தலைப்பில், பிடல் ஒரு கட்டுரையை எழுதினார். அவர் எழுதி வரும் பிரதிபலிப்புகள் “ரெப்லெக்ஸன்” என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாக அது அமைந்தது. தன் ஓய்வுக்காலம் குறித்து விளக்கிய அவர், தான் மரணிக்கவுள்ளதாக ஏகாதிபத்திய ஊடகங்களின் வெளியான பொய்ச் செய்திகளுக்கு பதிலடி கொடுத்தார். மக்களின் மீதும், கட்சியின் மீதும் கொண்ட நம்பிக்கையும், முதலாளித்துவ அமைப்பு முறை மீது, தெளிந்த ஆய்வின் அடிப் படையில் கொண்டிருந்த விமர்சனங்களின் காரணமாகவும்தான், அவர் அத்தனை தீர்க்கமாக செயல்பட முடிந்தது. அக்கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டார், “மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர், எதிர்ப்பு வலுப்படுகிறது, முதலாளித்துவமானது, தொடர்ந்து அதிகரித்துவரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது; சமமின்மையையும், நீதியற்ற தன்மையும் கொண்ட ஒரு உற்பத்தி அமைப்பை பொய்களோ, அடக்குமுறைகளோ புதிய ஆயுதங்களோ வெகுகாலம் பொத்திப் பாதுகாத்திட முடியாது”
புதிய குடியரசுத்தலைவர் தேர்வு:
மக்களே முதன்மையானவர்கள் என்பது சோசலிசத்தின் பயணத்தில் எட்ட முடிந்த இலக்கு. அதற்கான அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது கியூபா. 1959 ஆம் ஆண்டு புரட்சிin வெற்றிக்குப் பின், கியூபா குடியரசின் ஜனநாயக கட்டமைப்பு, ஒவ்வொரு கால சூழலுக்கும் ஏற்ப பரிணமித்துக் கொண்டேயிருக்கிறது. அதன் சமீபத்திய மாற்றங்களிலும் அது வெளிப்படுகிறது.
கியூபாவின் குடியரசுத்தலைவராக மிகுயல் டியாஸ் கேனல் (வயது 58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். கியூபா புரட்சிக்கு பின்னர் பிறந்த அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். 2013 ஆம் ஆண்டு முதல் துணை குடியரசுத்தலைவராக செயல்பட்டுவந்தார். தற்போது அந்த நாட்டின் உயரிய பொறுப்புக்கு தேர்வாகியுள்ளார். இது மட்டுமல்ல, நாம் கவனிக்க வேண்டிய பல முக்கியமான செய்திகளும் உள்ளன.
நாடாளுமன்ற அவையின் சேர்மானம்:
கியூபாவில் குடியரசுத்தலைவர் நேரடியாக தேர்வு செய்யப்படுவதில்லை. கியூபா நாடாளுமன்றத்தின் 605 பிரதிநிதிகள் ரகசிய வாக்களிப்பதன் மூலம் தேர்வு செய்யப்படுகிறார். அவரே குடியரசின் தலைவராகவும், அரசின் தலைவராகவும் செயல்படுவார். அதாவது ஒருவர் முதலில் கியூபா நாடாளுமன்றத்திற்கு மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும். பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வகையில் அவரிடமே அனைத்து அதிகாரங்களும் குவிவதில்லை. நாடாளுமன்ற அவையே முதன்மையானதாகிறது.
அத்தகைய நாடாளுமன்ற அவையில் யார் இடம்பெற்றிருக்கிறார்கள்? என ஆராயும்போது, அது அந்த நாட்டின் இனம் மற்றும் சமூக பன்முகத்தன்மையை காட்டுவதாக அமைந்துள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 85 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம்பேர் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. 53 சதவீதத்திற்கும் அதிகமான அவை உறுப்பினர்கள் பெண்கள் ஆவர் (322). 56 சதவீதம் பேர் நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வாகிறார்கள். அவர்களின் சராசரி வயது 49. 18 – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 80 பேர்/ 90 சதவீதம் பேர் கியூபா புரட்சியின் வெற்றிக்குப் பின்pu பிறந்தவர்கள். 40 சதவீதம் பேர் கருப்பு அல்லது கலப்பு வழி வந்தவர்கள். அவையின் நாயகர் ஒரு கருப்பர். துணை குடியரசுத் தலைவரான அனா மரியா மாரி மசடோ ஒரு பெண். நாடாளுமன்ற செயலகமும் மிரியம் பிரிடோ என்ற பெண் தலைமையில் செயல்படுகிறது.
சில பொதுவான புரிதல்களும் உண்மையும்:
1959 ஆம் ஆண்டுக்கு பின்னர் கியூபா கண்டுள்ள குடியரசுத்தலைவர்களின் எண்ணிக்கை பலரும் அறியாதது. இதுவரையில் 5 குடியரசுத் தலைவர்கள் அங்கே இருந்துள்ளார்கள். முதல் குடியரசுத் தலைவர் மானுவெல் உருத்தியா. 7 மாதங்கள் அவர் பதவியிலிருந்தார். அவரைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டுவரையில் 17 ஆண்டுகளுக்கு ஓஸ்வலொடோ டோர்டிகோஸ், குடியரசுத் தலைவராக இருந்தார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ 1976 முதல் 2006 ஆம் ஆண்டு வரையி்ல் 30 ஆண்டுகள் குடியரசுத்தலைவர் பொறுப்பை வகித்தார். அவர் ஓய்வுபெற்ற பின்னர் ரால் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பேற்றார். அவரும் சுமார் 12 ஆண்டுகள் பதவிவகித்தார். அக்காலகட்டத்தில் குடியரசுத்தலைவராக ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை (அதாவது 10 ஆண்டுகள்) தேர்ந் தெடுக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டது.
கியூபாவில் அனைவரும் கம்யூனிஸ்டுகள், அல்லது பெரும்பான்மை கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் என்று கருத்து நிலவுகிறது. ஆனால், அங்கேயும் ஒருவர் கட்சியில் சேர, மற்றொரு கட்சி உறுப்பினரால் முன் மொழியப் பட்டு, பல கட்டங்களைத் தாண்டியே உறுப்பினராக முடியும். கியூபாவில் உள்ள 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் 8 லட்சம் பேர் மட்டுமே சுமார் 10 சதவீதம் மட்டுமே கட்சி உறுப்பினர்கள். இளைஞர் சங்க உறுப்பினர்களையும் சேர்த்தால் 15 சதவீதம் தான் ஆகிறது. 85 சதவீத வாக்காளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லை.
கியூபாவில் ஒரே கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் போட்டியிடுவதில்லை. அது எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வது இல்லை. கியூப அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 5ன் படி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி சமூகத்தையும், அரசையும் வழிநடத்தும் சக்தியாக அமைந்திருக்கிறது.
கியூபாவில் தேர்தல்கள் எப்படி நடக்கின்றன?:
மேற்கண்ட செய்திகளைப் படிக்கும் எவருக்கும் கியூபா தேர்தல்கள் எப்படி நடக்கின்றன? என்பதை அறிந்துகொள்ள விருப்பம் ஏற்படுவது இயற்கை. மக்கள் பங்கேற்பின் பல்வேறு வடிவங்கள் கியூபாவில் நிலவுகின்றன. அதில் தேர்தல் நடவடிக்கை மிக முக்கியமானது.
கியூபாவில் பொதுத் தேர்தல்கள் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படும். மாநிலங்களவை, நகரசபை மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு இரண்டரை ஆண்டுக்கும் அடிப்படை உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல்கள் நடக்கும்.
மாநிலங்களவை (The Council Of States) தேசிய தேர்தல் ஆணையத்தை உருவாக்கும், தேர்தல் ஆணையமானது மக்கள் மற்றும் சமூக இயக்கங்களை உள்ளடக்கிய வேட்பாளருக்கான ஆணையத்தை ஏற்படுத்தும்.
கியூபாவில் அருகமைச் சமூகங்கள்தான் தங்கள் வேட்பாளர்களை முன்மொழிகிறார்கள். பல்வேறு நிலைகளில் வேட்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் 8 பேர் வரை போட்டியிடுகின்றனர். 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு ஓட்டாவது பெறுகிறவர் வெற்றி பெற்றவராவார். அவர்தான் நாட்டின் அடிப்படைப் பிரதிநிதியாவார்.
கியூபாவில் மொத்தம் 12 ஆயிரத்து 752 பிரதிநிதி நகரசபைகளில் செயல்படுகிraargal. இவர்களே அடிப்படைப் பிரதிநிதிகள். இவர்களில் இருந்து பெறப்பட்ட பிரதிநிதிகள்தான் தேசிய நாடாளுமன்றத்தில் 50 சதவீதம் இடங்களை நிரப்ப வேண்டும். மேலும், 20 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் உறுப்பினர் (டெபுடி) தேர்தல் நடத்த வேண்டும்.
வாக்காளர் பதிவு, தானியங்கியானது, பொதுவானது, கட்டற்றது.
தேர்தல் பிரச்சாரத்தை தேசிய தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும். எந்த வேட்பாளரும் தனக்கென பிரச்சாரம் செய்துகொள்ள முடியாது.
தேர்வு செய்யப்பட ஒவ்வொரு வேட்பாளரும் சரிபாதிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற வேண்டும்.
தேர்தல் மையங்களும், வாக்குப் பெட்டிகளும் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை கல்வி பயிலும் மாணவர்களால் பராமரிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கையில் பொதுமக்கள், வெளிநாட்டினர் பங்கேற்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எந்த பணப் பலனும் தரப்படாது.
வாக்களித்தல் கட்டாயமல்ல, ஆனால் அது கட்டற்ற ஒன்று, ரகசியமானது. 16 வயதைக் கடந்த கியூபா குடிmakkal அனைவரும் வாக்களிக்கலாம். 18 வயதுக்கும் மேலான யாரும் போட்டியிடலாம்.
இப்போது அரசமைப்புச் சீர்திருத்தங்கள் நடைபெற்றுவருகின்றன. அதில் ஒரு பகுதியாக நகர சபைகளின் எண்ணிக்கையைக் குறைத்து உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்கவேண்டும் என முடிவு செய்யப்பட் டுள்ளது.
மக்களே இறையாண்மை கொண்டவர்கள்:
கியூபா குடியரசில், மக்களே இறையாண்மை கொண்டவர்கள், அவர்களிடமிருந்துதான் அரசு, அதிகாரம் பெறுகிறது. இந்த அதிகாரமே மக்கள் சபைகளாலும், அரசுக் கருவிகளாலும் பயன்படுத்தப்படுகிறது. அரசின் கருவிகள் தங்கள் செயல்பாடுகளை சோசலிச ஜனநாயகத்தில் கீழ்க் காணும் இரண்டு அடிப்படையில் அமைத்துக் கொள்கின்றன.
1) மக்களே அரசுக் கருவிகள், அதிகாரிகள், சபை உறுப்பினர்கள், பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
2) தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் பிரதிநிதிகளின் அதிகாரம் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படும்.
தேர்தல்கள் மட்டுமல்லாது, முக்கிய முடிவுகளை வெகுமக்கள் விவாதத்திற்கு உட்படுத்துவது, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை மக்களுக்கு கட்டுப்பட்டவர்களாக மாற்றுவது என்ற நோக்கிலும் கியூபாவின் ஜனநாயகம் இயங்குவதற்கு இதுதான் பின்னணி.
கியூபாவின் மாற்றங்களுக்கு அடிப்படை என்ன?
கியூபாவில் நடைபெற்றுவருபவை திடீர் மாற்றங்களா? கியூப வரலாற்றையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் உன்னிப்பாக கவனித்துவரும் எவரும் ஒரு தொடர்ச்சியை உணர்வார்கள். கியூபா மக்களின் கைகளில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தைச் சேர்த்த முதல் நடவடிக்கையானது, புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்ற நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளாகும். அதன் காரணமாகத்தான் அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை, அந்தச் சிறு நாட்டின் மீது திணித்தது.
அருகமைச் சமூகக் குழுக்கள் (Neighbourhood committees) அமைத்தது, எதிர்ப் புரட்சி தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து புரட்சியைப் பாதுகாக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டது ஆகியவை – உள்ளூர் அளவில் மக்களின் சுய ஆளுகையை உறுதிப்படுத்தின. ஒட்டுமொத்த மக்களும், புரட்சியைப் பாதுகாக்கும் பட்டாளமாகினர். இவையெல்லாம் அடுத்தடுத்து அங்கே நிகழ்ந்த ஜனநாயக நடவடிக்கைகளாகும்.
1961 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, அனைவருக்கும் கல்விக்கான இயக்கம், எழுத்தறிவற்ற பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
1971 ஆம் ஆண்டு மக்கள் அதிகாரத்திற்கான தேசிய சபை உருவாக்கப்பட்டது. மக்கள் அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசமைப்பு வல்லுனர்கள் இணைந்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள். இதற்கான விவாதங்கள் நாடு முழுக்க பள்ளிகள், உழைக்கும் இடங்கள், நாட்டுப்புறப் பகுதிகளில் விவாதிக்கப்பட்டன. சுமார் 60 லட்சம் பேர் இந்த விவாதங்களில் பங்கெடுத்தார்கள்.
1980 ஆம் ஆண்டுகளில் நெறிப்படுத்தும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதிகாரத்துவத்தையும், ஊழலையும் எதிர்த்த போராட்டமாக அது அமைந்தது.
1994 ஆம் ஆண்டில் தொழிலாளர்களுக்கான நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. அது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் விவாதித்தது. அதிலிருந்து (சோவியத் சிதறிய சூழலில்) அமெரிக்க பொருளாதார தாக்குதலை எதிர்கொள்ளும் திட்டங்களை உருவாக்கியது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள தொழிலாளி வர்க்கத்தை ஆலோசிப்பதே முதலாளித்துவ ஜனநாயகங்களில் இருந்து மாறுபட்ட ஒன்றுதான்.
ஊழலுக்கும், அதிகாரப் போக்கிற்கும் எதிராக:
2011-2012 கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, மிக முக்கியமான ஒன்றாகும். அதை நோக்கி எப்படி கட்சி நகர்ந்தது என்பதைப் பார்க்க வேண்டும். 2005 ஆம் ஆண்டிலிருந்தே பிடல் காஸ்ட்ரோவும், ரால் காஸ்ட்ரோவும் ஊழலுக்கும், அதிகாரப் போக்குக்கும் எதிராக கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்கள். நாட்டின் ஒவ்வொரு சிறு கிராமத்திலும், ஏன் தவறு நடக்கிறது என்ற விவாதத்தை அது தூண்டியது.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலகம், பள்ளி, வசிப்பிடம் சார்ந்த கூட்டங்களில் 51 லட்சம் பேர் பங்கெடுத்தனர். அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய அறிக்கை நாடு முழுவதும் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கூட்டங்களில் சுமார் 89 லட்சம் பேரால் விவாதிக்கப்பட்டது.
அந்த விவாதங்களில் வெளிப்பட்ட கருத்துக்களை இவ்வாறு தொகுக்கலாம். “நாட்டின் பொருளாதாரமும், நிர்வாகமும் மென்மேலும் பரவலாக்கப்படவேண்டும், அதிகாரத்துவம் அகற்றப்படவேண்டும், நாட்டின் பொருளா தாரத் திட்டங்களில், சுகாதார சேவையில், பொருள் விநியோகத்தில் உள்ளூர் மக்களின் கருத்துகள் பெறப்படவேண்டும், வீடு, கார் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும், சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள், கூட்டுறவு ஏற்பாடுகள் அதிகரிப்பு, தரிசுநில விநியோகம் ஆகியவை வேண்டும்”
ரால் காஸ்ட்ரோ இதுபற்றி பேசும்போது, “மென்மேலும் மையப்படுத்தப்பட்ட ஏற்பாடு, நமது பொருளாதாரத்தை வடிவமைக்கிறது, அதிலிருந்து மெல்ல மெல்ல ஒழுங்குடன் கூடிய அனைத்து தொழிலாளர்களின் பங்களிப்புடன் நமthu சமூக அமைப்பை பரவலாக்குகிறோம்” என்றார். மேலும், யாரிடமிருந்தும் காப்பியடிப்பதல்ல, நாமே நமக்கான மாதிரியை உருவாக்குதல் என அதனை குறிப்பிட்டார்.
கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் 7 வது கட்சி காங்கிரஸ் ஏப்ரல் 2016 அன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் அடிப்படையான அரசியல் பதவிகள் மற்றும் அரசு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற கால அளவு, அடுத்தடுத்து இரண்டு ஐந்தாண்டுகளுக்கு மிகக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. மத்தியக் குழுவில் இடம்பெற அதிகபட்ச வயது 60 என்றும், அரசியல் தலைமைக்குழுவில் இடம்பெற அதிகபட்ச வயது 70 என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளவும் முடிவு செய்தனர்.
புதிய தலைமுறைக்கு அதிகாரம் மற்றும் பொறுப்புகளை ஒப்புவிக்கும் பணி கியூபாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. 8 வது மாநாட்டுக்கு (2021) முன் இப்பணிகள் நிறைவு பெற்றாக வேண்டும்.
மக்கள் பங்கேற்பும், விவாதங்களும்:
கியூபா ஜனநாயகத்தில் நாம் காண்கிற அற்புதம், அது வளர்த்தெடுக்கிற பொது விவாதக் கலாச்சாரம் ஆகும். 1976 ஆம் ஆண்டு முதலே, பிரதிநிதித்துவ ஜனநாயகம் அமலாக்கப்பட்ட காலத்தில் இருந்தே, முக்கிய ஆவணங்களும், முடிவுகளும் மக்கள் ஆலோசனைக்கு, அதன் உண்மையான பொருளில் விடப்பட்டு, முடிவுகளை மேற்கொள்வது நடந்துவருகிறது. இது எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகாரத்துவமும், ஊழலும் பின்னுக்குச் செல்லும் என்கின்றனர். இதுபற்றி கியூபா அதிகாரி ஒருவர் கூறும்பொழுது “ஒரு குடிமகன் எப்போதும் தனது சமூகத்தில் தன் பங்கு என்ன என்பதை உணர்ந்து, முன்கையெடுப்பவராக இருக்க வேண்டும். அதற்கேற்ப குடிமைச் சமூகத்தின் பண்பாட்டை மாற்றுவது மிக அவசியம்” என்கிறார்.
இவ்வாறு அனைத்து முடிவுகளும் அங்கே எதிர்ப்பின்றி ஏற்கப்படுவதில்லை, குறையின்றி அமலாவதுமில்லை.
அரசு நிறுவனங்களில் பணியிடங்களைக் குறைக்க கியூபா அரசு முடிவு செய்தது. இந்த முடிவை அதிகாரிகள் மட்டும் எதிர்க்கவில்லை. தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் கருத்துகளை உள்வாங்கி மக்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இம்முடிவை சீராக அமலாக்குகின்றனர். ஒவ்வொரு நிலையும் பரிசீலிக்கப்படுகிறது. அதேபோல், ஓய்வுபெறுவதற்கான வயதை ஆண்களுக்கு 65 எனவும், பெண்களுக்கு 60 எனவும் உயர்த்த முடிவெடுத்த போது, அதனை தொழிலாளர் சபைகளில் விவாதித்தனர். 94 சதவீதம் அதாவது 30 லட்சத்து 86 ஆயிரம் பேர் அந்த விவாதங்களில் பங்கெடுத்தனர்.
கியூபா ஜனநாயகம் சந்திக்கும் மற்றொரு சவால், குடிமக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதாகும். அதற்கேற்ற பத்திரிக்கைத்துறை செயல்பட வேண்டும். இதுகுறித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு சமீபத்தில், அரசு நிர்வாகங்கள் குறித்த எந்த செய்தி மக்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை பத்திரிக்கையாளர்கள் ‘பிரத்யேகமாக’ முடிவு செய்ய கூடாது என்று தெரிவித்தது. அதிகாரிகளும், மேலாளர்களும் நினைப்பதுதான் செய்தி என்று ஆகிப்போனால் அது முடிவுகளை பாதிக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
பொருளாதாரம் சார்ந்த சீர்திருத்தங்கள்:
மின்சக்திக்கான தேவையை மறுசுழற்சி அடிப்படையிலான வழிகளைப் பயன்படுத்தி பூர்த்தி செய்திட முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடன் சுமையைக் குறைக்கவும், அன்னிய நேரடி முதலீட்டைப் பெறவும் எடுத்த முயற்சிகளில் சில முன்னேற்றங்கள் உள்ளன. இதற்கான புதிய சிறப்பு சட்ட வழிமுறைகளின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயம் சோசலிச அரசு நிறுவனங்களை பலப்படுத்த எடுத்த முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவைதான் பொருளாதாரத்தின் அடிப்படையாக அமைந்திருக்கின்றன. உற்பத்தி, மற்றும் விநியோக முறையில் சமூகத் கட்டுப்பாடு என்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது.
கியூபா சோசலிசத்தைக் கட்டமைக்கும் வரலாற்றுக் கட்டத்தில் உள்ளது. மாறுதலை நோக்கிய சிக்கலான நீண்ட நிகழ்வுப் போக்குகளை உருவாக்குகிறது அதற்கேற்ப அவ்வப்போது நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை, சமூக நீதி நோக்கோடு உறுதி செய்யும் அமைப்பு என்ற நிலையில் நின்றே இயங்குகிறது.
கட்சிக்கும், புரட்சிக்குமான பொருளாதார மற்றும் சமூக வழிகாட்டுதல்களை 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றினார்கள். அடிப்படையான சமூக தேவைகளையும், கல்வி, சுகாதாரம், பண்பாடு, விளையாட்டு, சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த தேவைகளை இலவசமாகக் கிடைக்கச் செய்திடும் சமூகக் கொள்கை ஏற்கப்பட்டது.
இவ்வாறு ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முன்னர், அனைத்து கியூபா மக்களிடமும் ஆவணங்கள் அச்சிடப்பட்டு கையில் கிடைக்கச் செய்திட முழு முயற்சி எடுக்கப்பட்டது. அரசியல் மாற்றம் என்பது நபர்களை அடிப்படையாகக் கொண்டதல்ல, அனைத்து முடிவுகளும் கூட்டாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே கியூபா மாதிரியின் அடிப்படை. அதுதான் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்கும். சுதந்திரமும், சமூக நீதியும் எப்போதும் சோசலிசத் தோடு நேரடி பிணைப்பைப் பெற்றது, முதலாளித்துவத்தில், சமூக நீதிக்கு இடமில்லை.
Leave a Reply