கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் !


வாசிப்பு: லதா

எடிட்: மதன் ராஜ்

  • அன்வர் உசேன்

(1985ம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மார்க்சிஸ்ட் இதழில் தோழர் பி.டி.ஆர் எழுதிய கடுரையைத் தழுவி எழுதப்பட்டது)

கார்ல் மார்க்ஸ் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கிய பொழுது தொழிற்சங்கங்கள் அப்பொழுதுதான் உருவாக ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்கங்கள் முதலாளிகளுக்கு வெறுப் பூட்டின. எனவே பல நாடுகளில் அவை தடை செய்யப்பட்டன.

அக்காலத்தில் சோசலிசம் குறித்து சிந்தித்தவர் கள் கற்பனைவாத சோசலிசம் மற்றும் குட்டி முதலாளித்துவ சோசலிசவாதிகள் ஆவர். அவர் களுக்கு தொழிற்சங்கம் எனும் வர்க்க அமைப்பின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் தொழிற்சங்கம் எனும் அமைப்பிற்கு எதிரானவர் களாக இருந்தனர். தொழிற்சங்கங்கள் பயனற்றவை எனவும் ஆபத்தானவை எனவும் சமூக வளர்ச் சிக்கு தடையாக இருப்பவை எனவும் கூறினர். அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் கோரினர்.

வேறு சிலர் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தங்களும் சமூகமாற்றத்திற்கான கருவி என எண்ணினர். அவர்களும் கூட (ஊதியம் போன்ற) பொருளாதார கோரிக்கைகள் எனும் போராட்டங் களுக்கு அப்பால் சிந்திக்கவில்லை. அரசியல் போராட்டம் என்பதை ஒரு கொள்கையாகவே தவிர்த்தனர். அப்பொழுது நிலவிய முதலாளித்துவ சமூக அமைப்புடன் சமரசம்செய்து கொண்டனர். தொழிற்சங்க போராட்டத்திற்கும் (சுரண்டலிலிருந்து) தொழிலாளி வர்க்கத்தின் முழு விடுதலை மற்றும் சமூகத்தின் விடுதலைக்கும் உள்ள முக்கியமான தொடர்பை இவர்கள் உணர வில்லை. தொழிலாளி வர்க்கம் அரசு  அதிகாரத்தை கைப்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் சிந்திக்கவில்லை.

ஏன்? ஏனெனில் நவீன வர்க்க போராட்டத்தின் உள்ளடக்கத்தை அவர்கள் உணரவில்லை. சோசலிச புரட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி தொழிலாளி வர்க்கத்திற்குதான் உண்டு என்பதை அவர்கள் உள்வாங்கவில்லை.

மார்க்ஸை பொறுத்தவரை முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்க்கும் வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கம்தான் புரட்சிகரமான வர்க்கம் ஆகும். கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் கூறினார்:

“இன்றைய கால கட்டத்தில் முதலாளித்து வத்தை எதிர்த்து நிற்கும் வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கம் மட்டுமே உண்மையான புரட்சி வர்க்கம் ஆகும். மற்ற வர்க்கங்கள் நவீன தொழில்மயத்தின் விளைவாக தேய்ந்து பின்னர் இறுதியாக  மறைந்து விடுகின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கம் இந்த தொழில்மயத்தின் பிரிக்க முடியாத விசேடமான பின்விளைவு ஆகும்.”

எனவேதான் மார்க்சுக்கு தொழிலாளி வர்க்த் தின் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகமுக்கிய மானதாக இருந்தது. சமூக முன்னேற்றத்தை நோக் கிய பயணத்தில் பெறும் வர்க்க உணர்வை உரு வாக்கும் ஒவ்வொரு செயல்பாடும் மிக முக்கிய மானது. தொழிற்சங்க அமைப்புகள் உருவாவதும் அவற்றின் செயல்பாடுகளும் ஒன்றுபட்ட வர்க்க உணர்வை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கை உருவாக்குகின்றன என மார்க்ஸ் மதிப்பிட்டார். தொழிலாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி ஆகும். வர்க்கத்தின் கட்சியை அமைப்பதும் அதனை விரிவுபடுத்துவதும் தொழிலாளர்களின் அன்றாட போராட்டங்களுக்கு தொடர்பில்லாமல் வெற்றி டத்தில் செயல்படுத்த இயலாது. எனவேதான் மார்க்ஸால் உருவாக்கப்பட்ட முதல் அகிலம் என அழைக்கப்படும் “சர்வதேச தொழிலாளர் சங்கம்” அமைப்பின் சட்டவிதிகள் தனிப்பட்ட தொழிலாளர்களை மட்டுமல்ல; தொழிற்சங்கங் களையும் ஏனைய வடிவங்களில் செயல்பட்ட தொழிலாளர் அமைப்புகளையும் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளும் வகையில் உருவாக்கப் பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க முதல் அகிலத்தை செயல்படுத்திய பொழுதும் அதனை கலைத்த பிறகும் கூட மார்க்ஸ் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான செயல்பாடுகளில் தொழிற்சங் கங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை தொடர்ந்து அளித்தார். தொழிற்சங்கங்களுடன் உள்ள தொடர்பை துண்டித்து கொண்ட தலைமையை அம்பலப் படுத்தினார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஆரம்பித் தன் நோக்கம் மார்க்ஸை பொறுத்தவரை அன்றாட போராட்டங்களில் தொழிற்சங்கங்களை ஒன்றிணைப் பதும், தொழிற்சங்கங்களிடையே சர்வதேச அளவில் ஒத்துழைப்பை உருவாக்குவதும் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கத்தின் நேரடி வர்க்க செயல் பாடுகளில் ஈடுபடும் அமைப்புகள் தொழிற்சங்கங் கள்தான்! அந்த வகையில் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. எனினும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஆரம்பித்தன் மிக முக்கியமான நோக்கம் சமூக மாற்றத்திற்கான போராட்டத் தில் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஒற்றுமைபடுத்துவதுதான்! அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அமைப்பை உருவாக்குவதுதான் முக்கியமான நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றிட தொழிற் சங்க இயக்கத்தை கூர்ந்து  கவனிப்பது மார்க்சுக்கு அவசியமாக இருந்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்தில் நிலவிய பல்வேறு வகைப்பட்ட சிந்தனையோட்டங்களை ஒன்றிணைக்க வேண்டிய தும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிற் சங்க இயக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியதன் அவசியமும் இருந்தது. இதற்காக முதல் அகிலத்தில் ஒரு நீண்ட போராட்டத்தை மார்க்ஸ் நடத்தினார்.
தொழிலாளர் இயக்கத்தில் நிலவிய பல்வேறு சிந்தனையோட்டங்களை ஒன்றிணைக்க வேண்டிய ஒரு வகையான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. சர்வதேச தொழி லாளர் அமைப்பின் செயல்கள் பற்றி ஏங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து தொழிலாளர் இயக்கங் களையும் ஒரு மகத்தான வலுவான அமைப்பாக  இணைக்க வேண்டும். இந்த அமைப்பில் சோசலிச நோக்கங்களை புறக்கணிக்கின்ற அல்லது அதற்கு முக்கியத்துவத்தை அளிக்காத தொழிலாளர் அமைப்புகளான இங்கிலாந்து தொழிற்சங்கங் களையும் பிbhஞ்சு மற்றும் ஸ்பானிய புருதானிய வாதிகளையும் ஜெர்மானிய லெசாலியவதிகளை யும் கூட இந்த அமைப்பிற்குள் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அமைப்புவிதிகள் இந்த அமைப்பு களுக்கு கதவுகளை மூடுவதாக இருக்க கூடாது.”
தொழிலாளர் இயக்க தலைவரான போல்ட்டே அவர்களுக்கு

மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“சோசலிசம் குறித்து அரை குறையாக புரிதலின் அடிப்படையில் செயல்படும் இயக்கங்களுக்கு பதிலாக ஒரு உண்மையான தொழிலாளர் அமைப்பை உருவாக்குவதுதான் முதல் அகிலம் உருவாக்கப் பட்டதன் அடிப்படை நோக்கம் ஆகும்.”

தொழிற்சங்கங்கள், பரஸ்பர உதவி அமைப்பு கள், கூட்டுறவு அமைப்புகள், ஆகியவைதான் அன்று இருந்த தொழிலாளர் அமைப்புகள். இவற்றுக்கு பதிலாக சோசலிசத்தை நோக்கி நடைமுறையில் செயல்படும் ஒரு உண்மையான தொழிலாளர் வர்க்கத்தின் அமைப்பு (முதல் அகிலம்)

உருவாகிக்கொண்டிருந்தது. எனினும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி என்பது நீண்ட தூரத்தில் இருந்தது.
பாட்டாளி வர்க்க உள்ளடக்கமற்ற சோசலிச சிந்தனை போக்குகள்

மார்க்ஸ் குறிப்பிடும் பாட்டாளி வர்க்க உள்ளடக்கமற்ற குட்டி முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ சோசலிச சிந்தனை போக்குகள் தொழிலாளி வர்க்கத்தின் நடைமுறை பணி களுக்கு தொடர்பில்லாமல் இருந்தன. பிரெஞ்சு சோசலிசம் சோசலிச கோட்பாடுக்கு  ஒரு முக்கிய தோற்றுவாயாக இருந்தது என்பது அனைவரும்  அறிந்த  ஒன்று. பிரெஞ்சு புரட்சி குறித்து மார்க்ஸ் ஆழமாக ஆய்வு செய்தார். பிரெஞ்சு தொழிலாளர் கள் மற்றும் விவசாயிகளின் வர்க்க போராட்டங் கள் அந்த நாட்டின் பல்வேறு சோசலிச கருத் தோட்டங்களில்  எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்தார்.

மகத்தான பிரெஞ்சு புரட்சியின் சமயத்தில் சோசலிச கருத்தோட்டத்தை பிரதிபலித்த  முக்கிய போராளி பேபுஃப் ஆவார். இவரது ஆதரவாளர் கள் பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகளின் கலகத்தை உருவாக்க முயன்றனர். துன்பங்களின் மூல காரணம் தனியுடமை சொத்துதான் என்பதை அவர்கள் உணர்ந்தனர். எனவே பொருளாதார அசமத்துவத்திற்கு எதிராக போராடினர். இந்த போராட்டத்தை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லும் சக்தி  எது என்பதை “சமமானவர்களின் இயக்கம்” உணர்ந்திருக்கவில்லை. எனினும் இவர் களது “சமமானவர்களின் அறிக்கை” எனப்படும் ஆவணமும் இயக்கமும் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் என மார்க்ஸ் கருதினார்.

“சமமானவர்களின் சதிதிட்டத்தை” பிரான் சில் நசுக்கிய பிறகு மக்களிடம் ஒருவித விரக்தி உருவானது. சோசலிச கருத்துகள் மதம் மற்றும் மனிதாபிமான கருத்து வடிவில் தோன்ற ஆரம்பித்தன. செயின்ட் சைமனும் சார்லஸ் ஃபூரியேவும் மனித சமூகத்தை எப்படி மாற்றியமைப்பது எனும் திட்டங்களை முன்வைத்தனர். இவர்கள் முதலாளித் துவ சமூகம் குறித்து ஆழமான  விமர்சனங்களை முன்வைத்தனர்.மக்களின் மகிழ்ச்சியான வாழ்வு குறித்தும் அவர்களது வளமான வாழ்வு குறித்தும் முற்போக்கான ஆனால் கறபனாவாத கருத்து களை முன்வைத்தனர். ஆனால் இது முதலாளித்து வத்திற்கு எதிரான புரட்சி மூலம்தான் சாத்தியம்  என்பதை கூறவில்லை.இந்த புரட்சியை வழிநடத் தும் ஆற்றல் தொழிலாளி வர்க்கத்துக்குதான் உண்டு என்பதையும் கூறவில்லை.

சமாதான வழியில் சமூகத்தை மாற்ற முடியும் என இவர்கள் நம்பினர். இதற்காக முற்போக்கான முதலாளிகள் உட்பட அனைவரின்  மனசாட்சிக் கும் வேண்டுகோளை முன்வைத்தனர். “இவர்கள் அனைத்து அரசியல் போராட்டங்களையும் குறிப் பாக புரட்சிகர செயல்பாடுகளை நிராகரித்தனர். அமைதியான வழியிலும் சிறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் இதனை சாதிக்க முடியும் என எண்ணினர். தோல்வி யிலேயே முடிவதற்கு வாய்ப்புள்ள இத்தகைய உதாரணங்களின் மூலம் ஒரு புதிய நற்செய்திகள் அடங்கிய கடவுளின் உலகத்தை உருவாக்க இயலும் என நம்பினர்.” (கம்யூனிஸ்டு அறிக்கை)

இத்தகைய கருத்தோட்டங்களையுடைய குழுக்கள் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான போராட்டங் களிலிருந்து விலகி நின்றன. இவர்களின் பொது வான அம்சம் என்ன? வர்க்க போராட்டத்தையும் சமூக அமைப்பை மாற்றுவதில் தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ள பங்கையும் புரிந்து கொள்ள தவறியது இவர்களின் பொதுவான அம்சாம் ஆகும்.

மார்க்ஸ் மேற்கொண்ட பணி
மார்க்ஸ் முன் இருந்த கடமை இத்தகைய குழுக்களின் குறுகிய சிந்தனைகளை எதிர்த்து போராடுவது மட்டுமல்ல; இக்குழுக்களை பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான போராட்டத்தில் இணைப்பதும் ஆகும். இதற்காக பொறுமையான போராட்டமும் அடிப்படை கோட்பாடு களில் உறுதியான பற்றும் தேவையாக இருந்தது.

தொழிலாளர்கள் எப்படி தம்மை அணி திரட்டி கொள்கிறார்கள் என்பதை மார்க்ஸ் ஆய்வு செய்தார். முதலில் ஒரு ஆலை மட்டத் திலும் படிப்படியாக தேசம் முழுதும்  தொழிற் சங்க இயக்கம் பரிணமிக்கிறது. முதலில் ஊதியத் துக்காக தொடங்கிய போராட்டங்கள் பின்னர் வேலை நீக்கத்திற்கு எதிராகவும் சங்கம் அமைக் கும் உரிமைக்காகவும் போராட்டங்கள் கடுமை யாக நடந்தன. இதனை மார்க்ஸ் ஆழமாக ஆய்வு செய்தார். கம்யூனிஸ்டு அறிக்கை, தத்துவத்தின் வறுமை ஆகிய படைப்புகளில் இவற்றை விவரிக் கிறார். ஏங்கெல்ஸ் அவர்களும் தனது “இங்கிலாந் தில் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்நிலை” எனும் நூலில் ஆய்வு செய்தார். இந்த பரிணமிப்பின் உச்ச கட்டமாக தொழிலாளி வர்க்கம் தனது அரசியல் கட்சியை உருவாக்குகிறது.

வர்க்க போராட்டம் நிராகரித்த புருதானிய சோசலிச கருத்திற்கு எதிராக மார்க்சின் போராட்டம்
தொழிலாளர்களின் இயக்கத்தை அதன் வர்க்கத் தன்மையை பாதுகாத்திட புருதான் மற்றும்  அவரது சீடர்களுக்கு எதிராக மார்க்ஸ் கடுமையாக போராடினார். புருதான் சிறு உற்பத்தியாளர் களின் விருப்பங்களை பிரதிபலித்தார். இது தொழிலாளர்களின் ஒரு பகுதியினரையும் ஆட் கொண்டிருந்தது. பிரான்ஸ்,பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் புருதான் கருத்துக்கு கணிசமாக செல்வாக்கு இருந்தது. எனவே புருதானிய குட்டி முதலாளித்துவ சோசலிச கருத்துக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு சிந்தனை போக்காக இருந்தது. புருதானியத்திற்கு எதிரான போராட்டம் 1848 புரட்சிக்கு முன்பே தொடங் கியது. அதற்கு பின்னரும் பல ஆண்டுகள் இப்போராட்டம் தொடர்ந்தது.

புருதான் வர்க்க போராட்டம் மற்றும் புரட்சி இரண்டையுமே நிராகரித்தார். புருதான் சமூக மாற்றம் குறித்து என்ன கூறுகிறார்? ஒரு மிகவும் பரந்துபட்ட விரிவான உற்பத்தியாளர்கள் மற்றும் உபயோகிப்பாளர் கூட்டுறவு அமைப்பு களின் செயல்பாடுகள் மூலம் முதலாளித்துவ சமூகத்தை மாற்றமுடியும் என புருதான் வாதிட்டார். இதற்காக மக்கள் வங்கி உருவாக்க வேண்டும் எனவும் அவ்வங்கி கூட்டுறவு நிறுவனங் களுக்கு வட்டியில்லா  கடன் அளிக்க வேண்டும்  எனவும் கூறினார். எனவே தொழிற்சங்கங்கள், ஊதிய உயர்வு,வேலை நிறுத்தம் ஆகியவற்றை புருதான் எதிர்த்தார். ஊதிய உயர்வு விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்லும் எனும் உளுத்து போன வாதத்தை அவர் முன்வைத்தார். ஊதிய உயர்வால் சமூகத்திற்கு எந்த பலனும் கிடைக்காது எனவும் கூறினார். மேலும் தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் சட்டம்  நீதி மற்றும் பொருளாதர கொள்கைகளுக்கு எதிரானவை எனவும் எந்த ஒரு சமூகத்தின் ஆட்சிக்கும் தீங்கு விளைவிப்பது எனவும் பொது அமைதிக்கு கேடு விளைவிப்பவை எனவும் கூறினார்.

ஊதியம் அல்லது கூலி என்ன  என்பதை புருதான் புரிந்துகொள்ளவில்லை. எப்படி தொழிலாளி உபரி உற்பத்தி மூலம் சுரண்டப்படுகிறார் என்பதையும் புருதான் புரிந்துகொள்ளவில்லை. உழைப்பு சக்தியின் மதிப்புடன் உற்பத்தி செய்யப் படும் பொருளின் மதிப்பை இணைத்து குழப்பி கொண்டார். எனவே இந்த புருதானிய சிந்தனை யோட்டத்தை எதிர்த்து மார்க்ஸ் கடுமையாக போராடினார்.
அரசு உதவியுடன் சோசலிசம் எனும் லெஸ்ஸாலே சோசலிச கருத்தோட்டத்திற்கு எதிரான போராட்டம்
மார்க்சும் ஏங்கெல்சும் நடத்திய இன்னொரு போரட்டம் லெஸ்ஸாலே கருத்தோட்டத்திற்கு எதிரானது ஆகும். லெஸ்ஸாலே மார்க்சின் நண் பராக இருந்தார். சோசலிச கருத்தோட்டத்தை கொண்டவராகவும் இருந்தார். பொது தொழி லாளர் சங்கம் எனும் அமைப்பையும் உருவாக் கினார். எனினும் சோசலிச சமூக மாற்றம் அடை வது குறித்த அவரது கருத்து தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு முரண்பட்டு இருந்தது.

லெஸ்ஸாலே முன்வைத்த கோட்பாடு என்ன? உற்பத்தியாளர்கள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவற்றிற்கு அரசு உதவி தரப் பட வேண்டும் எனவும் இதன் மூலம் சோசலி சத்தை அறிமுகப்படுத்த முடியும் எனவும் லெஸ்ஸா லேவின் கோட்பாடு முன்வைக்கிறது. வாக்குரிமையை சட்டபூர்வமாகவும் அமைதியான முறையிலும் பெறுவதே தனது அமைப்பின் நோக்கம் என அவர் பிரகடனப்படுத்தினார். (அப்பொழுது ஜெர்மனியில் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை) தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை வலுவாக பிரதிபலிக்கவும் வர்க்க முரண்பாடுகளை அகற்ற வும் வாக்குரிமை ஒன்றுதான் சிறந்த வழி என லெஸ்ஸாலே வாதிட்டார். புரட்சிக்கான போராட்டங் கள் நிராகரிக்கப்பட்டன. தொழிற்சங்க போராட்டங் களும் பயனற்றவை என வகைப்படுத்தப்பட்டன.

லெஸ்ஸாலே வாக்குரிமைக்கும் உற்பத்தியா ளர் அமைப்புகளுக்கு அரசு உதவிக்கும் மட்டுமே முழுமுக்கியத்துவம் அளித்தார். தொழிலாளர் போராட்டம் குறித்தும் வேலை நிறுத்தங்கள் குறித்தும் அவருக்கு அவநம்பிக்கை இருந்தது. “சங்கம் அமைக்கும் உரிமைகள் தொழிலாளர் களுக்கு எவ்வித பயன்களையும் அளிக்காது. தொழிலாளர்களின் வாழ்வில் எவ்வித முன்னேற்றத் தையும் தொழிற்சங்கங்கள் சாதிக்க முடியாது” என அவர் கூறினார்.
பிரிட்டஷ் தொழிலாளர்களின் வேலை நிறுத் தத்தில் வெளிப்பட்ட மகத்தான வீரத்தை லெஸ்ஸாலே புரிந்து கொள்ளவில்லை.மாறாக அதில் வெளிப் பட்ட சில சோகமான நிகழ்வுகள் குறித்தே அவர் அதிகம் பேசினார்.
லெஸ்ஸலேயை பொருத்தவரை ஊதியத்திற் கான வேலை நிறுத்தம் பைத்தியகரமானது மட்டுமல்ல; பயனற்ற சாகசமும் கூட! ஏனெனில் தொழிலாளி வர்க்கம் ஊதியம் குறித்த நிரந்தர விதியை மாற்ற இயலாது.எனவே ஊதியம் போன்ற பொருளாதார கோரிக்கைகளுக்கான தொழிலாளர் களின் போராட்டத்தை லெஸ்ஸாலே நிராகரித்தார்.

ஊதியம் குறித்து லெஸ்ஸாலே என்ன கூறுகிறார்?

தொழிலாளி என்னதான் போராடினாலும் முதலாளித்துவ சமூகத்தின் கடுமையான விதி காரணமாக தொழிலாளியின் வாழ்வு நிலையில் எந்த முன்னேற்றமும் உருவாகாது. மார்க்ஸ் அவர்கள் லெஸ்ஸாலேயின் இந்த கருத்தாக் கத்தை கடுமையாக சாடினார். ஊதியம் அல்லது கூலி என்பது இரண்டு உட்கூறுகளை கொண்டது என மார்க்ஸ் விளக்கினார். அவை ஒன்று உயிர்வாழ குறைந்தபட்சமானது; மற்றொன்று சமூக தன்மை கொண்ட குறைந்த பட்சமானது.  ஊதியத்தில் சமூக தன்மை கொண்ட குறைந்த பட்ச அளவை நிர்ணயிப்பதில் தொழிலாளர் களின் அமைப்புகளும் அவற்றின் போராட்டங் களும் முக்கிய பங்கை ஆற்றுகின்றன என மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். ஆனால் போராட்டங்களில் நம்பிக்கையற்ற லெஸ்ஸாலே உற்பத்தியாளர்கள் அமைப்புகள்  மற்றும் அதற்கு அரசு உதவி எனும் கோட்பாடுகளைதான் பற்றி நின்றார்.
“உன்னுடைய வர்க்கம் விடுதலை பெற வேண்டு மானால் பல மில்லியன்கள் கணக்கில் பணம் தேவை. இதனை அரசு மட்டுமே சட்டம் மூலம் தர இயலும்.” என லெஸ்ஸாலே வாதிட்டார்.

தொழிலாளர் இயக்கத்தை பிரஷ்ய அரசாங் கத்தின் தொண்டுள்ளத்தை சார்ந்து இருக்குமாறு வேண்டினார். லெஸ்ஸலேயின் இந்த கருத் தோட்டம் பிற்போக்குதனமான பிரஷ்ய அரசன் பிஸ்மார்க்கை ஆதரிக்கும் நிலைக்கு அவரை தள்ளியது. பிஸ்மார்க் அரசாங்கத்தின் பல பிற் போக்கு கருத்துகளையும் செயல்களையும் ஆதரிக் கும் நிலைக்கு லெஸ்ஸாலே தள்ளப்பட்டார்.

ஜனநாயகத்திற்கான போராட்டம், அதிகார வர்க்கம் மற்றும் நிலபிரபுத்துவத்திர்கு எதிராக தொழிற்சங்க இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து லெஸ்ஸாலே கருத்தியல் உணர தவறிவிட்டது என்பதை மார்க்ஸ் விமர்சித்தார்.  அமெரிக்கா வில் வாக்குரிமை இருந்தும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இதே போல லெஸ்ஸாலே கருத்திய லின் அடிப்படையில் உருவான  கோதா திட்டத் தையும் மார்க்ஸ் கடுமையாக விமர்சித்தார். அரசு உதவியுடன் கூடிய உற்பத்தியாளர்கள் அமைப்பு மூலம் சோசலிச மாற்றத்தை காண முடியும் எனும் முட்டாள்தனமான வாதத்தை மார்க்ஸ் நிராகரித்தார். தொழிலாளி வர்க்கம் புரட்சிகர மானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது ஒன்றுமே இல்லை என மார்க்ஸ் வாதிட்டார்.

சமூக உற்பத்தியை மறுகட்டமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனும் தொழிலாளி வர்க்கத்தின் நியாயமான விருப்பத்திற்கு லெஸ் ஸாலே புரட்சிக்கு முரண்பட்ட ஒரு சீர்திருத்த திருகலை கொடுத்தார். தொழிலாளி வர்க்கத்தை முதலாளித்துவ அரசின் கருணையின் கீழ் தள்ளி னார். தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க போராட்டம் மற்றும் வேலை நிறுத்தங்களை எதிர்க்க முதலாளித் துவ பொருளாதார வல்லுனர்களின் கருத்து களை பயன்படுத்தினார். தொழிலாளி வர்க்கத் திற்கு அரசியல் கட்சி என்ற பெயரில் தொழிற் சங்கங்களை ஒழிக்க முயற்சி செய்தார். அவர் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். ஆனால் அக்கட்சி மிகவும் தவறான புரிதலையும் தவறான திசைவழியையும் கொண்டி ருந்தது. தொழிலாளி வர்க்கத்தின் முக்கியமான வர்க்க அமைப்பான தொழிற்சங்கங்கள் குறித்து தவறான கோட்பாடு லெஸ்ஸாலேயின் கட்சிக்கு இருந்தது.
இந்த கருத்தோட்டங்களுக்கு எதிராக மார்க்ஸ் கடுமையாக போராடினார்.

அரசியல் வேண்டாம் எனும் பாக்குனின் சோசலிச கருத்தோட்டத்திற்கு எதிரான போராட்டம்
புருதான் மற்றும் லெஸ்ஸாலே கருத்துகளுக்கு நேர் எதிரான திசையில் இன்னொரு  போக்கு உருவாகிக்கொண்டிருந்தது. தொழிலாளி வர்க்க மும் தொழிற்சங்க இயக்கமும் அனைத்து அரசிய லையும் நிராகரிக்க வேண்டும்; அரசியல் கட்சி அமைப்பதை எதிர்க்க வேண்டும்; தொழிற்சங்க இயக்கத்தை மட்டுமே சார்ந்திருந்து சமூகத்தில் தேவையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என இந்த கருத்து போக்கு கோரியது. இதற்கு சொந்தகாரர் பாக்குனின்  எனும் தலைவர் ஆவார்.
பாக்குனின் ஒரு புரட்சிகர போராளி என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் “அராஜக வாதம்” எனும் சித்தாந்தத்தின் பிதாமகர். எனவே மார்க்சியத்தின் வலுவான எதிரி! மார்க்ஸால் வழிநடத்தப்பட்ட முதல் அகிலத்தினுள் தொடர்ந்து குழு உட்பூசலில் ஈடுபட்டார். எனவே  1 8 7 2  ம் ஆண்டு நடந்த ஹேக் மாநாட்டில் முதல் அகிலத் திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

போல்டே எனும் போராளிக்கு மார்க்ஸ் 23.11.1871 அன்று எழுதிய கடிதத்தில் பாக்குனின் பற்றி கீழ்கண்டவாறு தொகுத்து கூறுகிறார்:
“பாக்குனின் கோட்பாடு வலது மற்றும் இடது கருத்துகளை ஒன்றிணைத்த மேம்போக்கான குப்பை போல உள்ளது. வர்க்கங்களின் சமத்து வம்,  வாரிசு சொத்துரிமையை அழிப்பது என்பதை சமூக இயக்கத்தின் தொடக்கமாக கூறுவது (இது செயிண்ட் சைமன் முன்வைத்த முட்டாள்தன மான கருத்து), உறுப்பினர்கள் நாத்திகர்களாக இருக்க வேண்டும் எனும் வறட்டுதனமான கோட் பாடு,அரசியல் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருப்பது” ஆகியவை பாக்குனின் முன்வைத்த முக்கிய கோட்பாடுகள் ஆகும்.

(பாக்குனின் முன்வைக்கும்) வர்க்கங்களின் சமத்துவம் குறித்து மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“ வர்க்கங்களை சமன்படுத்துவது என்பது ‘மூலதனமும் உழைப்பும் முரண்பட்டவை அல்ல’ என இன்னொரு வகையில் கூறுவது ஆகும். இது முதலாளித்துவ சோசலிஸ்டுகள்  முன்வைக்கும் கருத்து. மாறாக வர்க்க புரட்சி மூலம் வர்க்க பேதமையை ஒழிப்பது என்பதுதான் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் இறுதி இலட்சியம் ஆகும்.” (ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதம்).

பாக்குனின் கோட்பாடு குறித்து ஏங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“பாக்குனின் ஒரு வினோதமான கோட்பாடை கொண்டிருக்கிறார். அது புருதானியமும் கம்யூனி சமும் கலந்த கலவையாக இருக்கிறது. பாக்குனின் முன்வைக்கும் முக்கிய கருத்து என்னவெனில் அரசு எனும் அமைப்புதான் உடனடியாக ஒழிக்க வேண்டிய அதிமுக்கிய தீய சக்தி என்பதாகும். ஆனால் அரசு என்பது என்ன? ஆளும் வர்க்கங் களான முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் தமது சொத்துக்களையும் வளங்களையும் பாதுகாத்து கொள்ள உருவாக்கி கொண்ட ஒரு அமைப்பு தான் அரசு அமைப்பு ஆகும். முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள வர்க்க முரண் பாடுதான் அடிப்படை பிரச்சனை. இந்த வர்க்க பேதத்தை ஒழிப்பது என்பதுதான் அடிப்படை முன்னுரிமை. இதற்கு உட்பட்டதுதான் அரசு எனும் அமைப்பை அகற்றுவது என்பது! மிகப் பெரும்பாலான சமூக ஜனநாயக ஊழியர்கள் நமது இந்த கருத்தை ஆதரிக்கின்றனர்.”

“பாக்குனின் கருத்தின்படி அரசுதான் மூலதனத்தை உருவாக்குகிறது. மூலதனம் தனக்கு உகந்த அரசை உருவாக்கவில்லை. அரசின் கருணையில்தான் மூலதனம் இயங்குகிறது.”

“நமது கருத்துக்கும் பாக்குனின் கருத்துக் கும் உள்ள வேறுபாடு மிக முக்கியமானது. சமூக புரட்சி இல்லாமல் அரசு எனும் அமைப்பை ஒழிப்பது என்பது முட்டாள்தனமானது. மூலதனத்தின் அதிகாரத்தை ஒழிப்பது என்ப தையே நாம் சமூக புரட்சி என்று வகைப்படுத்து கிறோம். இதுதான் சமூக உற்பத்தி முறையில் மாற்றத்தை விளைவிக்கிறது.”
ஆனால் பாக்குனின் என்ன சொல்லுகிறார்? அரசுதான் முக்கிய தீய சக்தி. அரசு அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை உயிரோடு இருப்பதை அனுமதிக்க கூடாது. அரசுக்கு எதிராக மட்டுமே தொழிற்சங்கங்கள் போராட வேண்டும். அரசியலில் இருந்து முற்றிலும் ஓதுங்கி யிருக்க வேண்டும். தேர்தலில் பங்கேற்பதோ அல்லது எந்த ஒரு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதோ அகிலத்தின் கொள்கைகளுக்கு துரோகம் இழைப்பது!

தொழிலாளர்கள் எவ்வித அறிவுசார் புரிதலும் இல்லாதவர்கள் என பாக்குனின் கருதினார். “அகிலத்தின் கொள்கைகள்” எனும் பிரசுரத்தில் பாக்குனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“தொழிலாளர்களின் விடுதலை என்பது தொழிலாளர்களாலேயே வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதை அகிலத்தின் அறிமுக விதிகள் தெளிவுபடுத்துகின்றன. எனினும் பல நேரங்களில் தொழிலாளர்கள் புரிதல் இல்லாதவர்களாக உள்ளனர். அவர்கள் கோட்பாடுகளையும் அறியாதவர்களாக உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் முன் ஒரே பாதைதான் உள்ளது. நடை முறை விடுதலை எனும் பாதைதான் அது! இந்த நடைமுறை என்பது எதுவாக இருக்க வேண்டும்? தொழிலாளர்களின் ஒற்றுமை அடிப்படையில் அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம். அதாவது தெ hழிற்சங்கங்கள், போராட்ட எதிர்ப்பு நிதி அமைப்புகளின் சம்மேளனம் போன்றவை ஆகும்.”
“அகிலத்தின் விதிகள் அடிப்படையில் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான அரசியல் நிராகரிக் கப்பட வேண்டும். அனைத்து தேசங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அகிலம் எப்படி கிளர்ச்சிகளை நடத்துவது என்பதை போதனை அளிக்கும். இந்த கிளர்ச்சிகள் முற்றிலும் பணி நேர குறைப்பு, ஊதிய உயர்வு போன்ற பொருளா தார கோரிக்கைகளுக்காக மட்டுமே இருக்கும். இதற்காக உழைப்பாளிகளை ஓரணியில் சேர்ப்ப தும் போராட்ட நிதியை திரட்டுவதுமாக இருக்கும்.”

பாக்குனின் தொழிற்சங்கங்களை புரிதல் இல்லாத தொழிலாளர்களின் சங்கமிக்கும் அமைப்பாக நோக்கினார். நவீன புரட்சிகர வர்க்கத்தை வார்த் தெடுக்கும் ஒரு அமைப்பாக தொழிற்சங்கத்தை பாக்குனின் புரிந்துகொள்ளவில்லை. இதற்கு மாறாக மார்க்ஸ் புரட்சியின் வர்க்கத்தன்மையை சரியாக உணர்ந்திருந்தார். தொழிலாளி வர்க்கத் தின் அரசை அமைக்க வேண்டிய தேவையை உணர்ந்திருந்தார். எனவே பாக்குனினின் குறுகிய கோட்பாடுகளுக்கு எதிராக சமரசமில்லாத போராட்டத்தை மார்க்ஸ் நடத்தினார்.

பிரிட்டன் தொழிற்சங்க இயக்கமும் சோசலிச கருத்துகளும்
பிரிட்டஷ் சோசலிசத்திற்கு அடித்தளம் இட்டவர் ராபர்ட் ஓவன் ஆவார். ஓவன் குறித்து மார்க்சும் ஏங்கெல்சும் மிகுந்த மரியாதை வைத் திருந்தனர். “ஒரு சீர்திருத்தவாதி; மிகவும் எளிமை யானவர்; 20 வயதில் உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கியவர்; பிறவி தலைவனாக விளங்கிய வெகு சிலரில் ஒருவர்” என ஏங்கெல்ஸ் இவரை பாராட்டுகிறார். வர்க்க பேதங்களை களைந்திட சில திட்டங்களை உருவாக்கினார் எனவும் ஏங்கெல்ஸ் இவர் பற்றி கூறுகிறார்.

செயிண்ட் சைமன் அல்லது ஃபூரியே போல அல்லாது ஓவன் பாட்டாளி இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். எனினும் அவர் ஒரு கற்பனாவாத சமாதான விரும்பியாக இருந்தார். புரட்சிகர நடவடிக்கையில் பங்கேற்க மறுத்தார். இங்கிலாந்தில் சோசலிஸ்டுகள் தனியா கவும் உண்மையான தொழிலாளர்களை கொண்ட சாசன இயக்கத்தினர் தனியாகவும் செயல்பட்ட னர். அவர்களிடையே இணைப்பு இல்லை. இந்த இணைப்பை உருவாக்குவது அவசியம் என ஏங்கெல்ஸ் கருதினார்.

தொழிற்சங்க இயக்கத்தின் தொட்டிலாக பிரிட்டன் இருந்தது. எனவே மார்க்சும் ஏங்கெல் சும் பிரிட்டன் தொழிற்சங்க இயக்கம் குறித்து கூர்மையான கவனம் செலுத்தினர். தவறுகளை விமர்சித்தனர். தொழிலாளர்களின் வாழ்வு நிலையை செழுமைப்படுத்த நடக்கும் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர். தொழிலாளர்களின் வழ்வு நிலைதான் அனைத்து சமூக  இயக்கங் களுக்கும் தொடக்க புள்ளியாக இருப்பதை உணர்ந்தனர்.

பிரிட்டன் ஓவன் வாதியாக விளங்கிய வெஸ்டன் என்பவருடன் நடந்த விவாதத்தில் பிரிட்டஷ் தொழிற் சங்கத்தின் பலவீனத்தை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். அன்றாட கோரிக்கைகளுக்கான போராட்டங்களிலும் சிறு கோரிக்கைகளுக் காகவுமே பிரிட்டன் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்துகின்றன என மார்க்ஸ் விமர்சித்தார். அவர்கள் விளைவுகளுக்கு எதிராகவே போராடு கின்றனர். மூல காரணிகளை எதிர்த்து அல்ல என்பதை மார்க்ஸ் எடுத்துரைத்தார். “நியாயமான வேலை நாளுக்காக நியாயமான கூலி” எனும் பழமைவாத முழக்கத்திற்கு பதிலாக “கூலி உழைப்பு ஒழிப்பு” எனும் புரட்சிகரமான முழக்கத்தை முன் வைக்க வேண்டும் என மார்க்ஸ் அறிவுறுத்தினார்.
கூலி உயர்வு விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிறது எனும் வாதத்தை பிரிட்டனிலும் மார்க்ஸ் சந்திக்க வேண்டியிருந்தது. இப்பிரச் சனையை ஓவன் வாதியான வெஸ்டன் எழுப் பினார். இதற்காக அகிலத்தின் பொதுகுழுவில் ஒரு விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூலி உயர்வு விலைவாசிக்கு இட்டுச்செல்வதாகவும் இது தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையை யும்  ஏற்படுத்தவில்லை எனவும் வெஸ்டன் வாதிட்டார். எனவே தொழிற்சங்கங்கள் தீயவிளைவுகளை ஏற்படுத்த கூடியவை என வாதிடப்பட்டது.

வெஸ்டனுக்கு பதில் அளிக்குமாறு மார்க்ஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார். முதலாளித்துவம் எழுப்பும் இப்பிரச்சனைக்கு மார்க்ஸ் அறிவியல் பூர்வமாக பதில்  அளித்தார். உபரி மதிப்பு எப்படி உருவாகிறது எனவும் இதன் காரணமாகவே கூலி உயர்வுக்கான தேவை உருவாகிறது எனவும் மார்க்ஸ் விளக்கினார். கூலி விகிதம் உயர்வு காரணமாக விலைவாசி உயர வேண்டிய அவசியம் இல்லை எனவும் மாறாக விலைவாசி விகிதம் குறையும் எனவும் மார்க்ஸ் விளக்கினார். தொழிற் சங்கத்தின் சமூக நன்மைகள் குறித்தும்  மார்க்ஸ் தெளிவுபடுத்தினார்.

நாளடைவில் பிரிட்டன் தொழிற்சங்கம் பின்னடைவை சந்தித்தது. ஒரு கொள்கை அளவில் தொழிற்சங்கங்கள் அரசியல் நடவடிக்கைகளை யும் வர்க்க இயக்கங்களையும் தவிர்த்தன. தொழி லாளர்கள் பிரிட்டனிலிருந்த இரண்டு முதலாளித் துவ அரசியல் கட்சிகளிடையே பிரிந்து கிடந்தனர்.
இந்த சரிவுக்கு என்ன மூலகாரணம் என்பதை ஏங்கெல்ஸ் புரிந்துவைத்திருந்தார். உலக சந்தையில் அன்று பிரிட்டன் முதலாளித்துவம் தனது அதிகாரத்தை நிலைநாட்டியது. இதன் காரணமாக பெரும் பொருளாதார கொள் ளையை பிரிட்டன் நடத்தியது. இந்த கொள் ளையில் ஒரு சிறு பகுதி பிரிட்டன் தொழிலாளி வர்க்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பிரிட்டன் தொழிலாளி வர்க்கம் முதலாளிகளின் வாலாக மாறிய அவலம் ஏற்பட்டது.

ஆண்-பெண் சமத்துவம் கடைப்பிடித்த அமெரிக்க தொழிற்சங்க இயக்கம்
அமெரிக்காவில் தொழிற்சங்க  இயக்க நடவடிக் கைகள் குறித்தும் மார்க்ஸ் கவனம் செலுத்தி வந்தார். மூலதனத்திற்கு எதிரான போராட்டத் திற்காக ஒரு அமைப்பை உருவாக்கு வது எனும் அமெரிக்க தொழிலாளர்களின் மாநாடு முடிவு செய்ததை வரவேற்றார். அகிலத்தின் ஜெனிவா கூட்டத்தில் மார்க்ஸ் முன்வைத்த பல ஆலோ சனைகளை அமெரிக்க தொழிற்சங்க இயக்கம் நடைமுறைப்படுத்த முடிவு செய்ததும் மார்க்சுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அமெரிக்க தொழிற்சங்க அமைப்பு உழைக்கும் பெண்களின் சமஉரிமை குறித்து கொண்டிருந்த நிலைப்பாட்டை 1866ம் ஆண்டு மார்க்ஸ் மிகுந்த மனநிறைவோடு வரவேற்றார். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் இப்பிரச் சனையில் குறுகிய சிந்தனையுடன் உள்ள நேரத் தில் அமெரிக்க தொழிற்சங்கத்தின் செயல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என கருதினார். “பெண் களின் போராட்டம் இல்லாமல் மகத்தான சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை வரலாற்றின் ஒரு சிறு பகுதியை கற்றவர்கள் கூட அறிந்திருப்பர்” என மார்க்ஸ் கூறுகிறார்.
அதே சமயத்தில் அமெரிக்க தொழிற்சங்க இயக்கம் தவறுகளில் சிக்கியபொழுது மார்க்சும் ஏங்கெல்சும் அந்த தவறுகளை களைய உதவினர். முதல் அகிலம் கலைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க தொழிற்சங்க இயக்கத்தில் செக்டரியன் எனப் படும் வறட்டுத்தனம் தலைதூக்கியது. குறிப்பாக சோசலிச கருத்துகளை ஏற்றுகொள்ளாத தொழிற்சங்க அமைப்புகளை ஒதுக்க தலைப் பட்டனர். இது தவறு என ஏங்கெல்ஸ் சுட்டிக் காட்டினர். முniபாவள டீக டுயbடிரச எனப்படும் அத்தகைய தொழிற்சங்கங்களை ஒதுக்காமல் அந்த அமைப்பு களுக்குள் செயல்பட்டு சரியான பாதைக்கு திருப்பி விட முயல வேண்டும் என ஏங்கெல்சு அறிவுறுத்தினார்.
தொழிலாளர் அமைப்புகளை அவை நம்முடன் கருத்து வேறுபட்டாலும் அவற்றை அரவணைத்து செல்ல வேண்டியதன் அவசியத்தை மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தொடர்ந்து சுட்டிக்காட்டினர்.

ஒவ்வொரு போராளியும் கற்க வேண்டிய மார்க்சின் தொழிற்சங்க இயக்கம் குறித்த அறிவியல் பூர்வமான கோட்பாடுகள்.
சர்வதேச தொழிலாளர் இயக்த்தின் ஜெனிவா மாநாட்டில் தொழிற்சங்க இயக்கம் குறித்து ஒரு முழுமையான அறிவியல்பூர்வமான கோட்பாடு களை மார்க்ஸ் விளக்கினார். ஒவ்வொரு போராளி யும் நிச்சயம் ஆழ்ந்து கற்க வேண்டிய கருத்துகள் இவை! ஜெனிவா மாநாடு இதனை அங்கீகரித்தது. வர்க்க போராட்டத்தில் தொழிற்சங்கங்கங்களின் பங்கு என்ன என்பதை உலக தொழிலாளி வர்க்கம் அறிந்துகொள்ள இவை சிறந்த வழிகாட்டுதல்கள் எனில்  மிகை அல்ல!

ஆரம்ப கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பு கள்தான் தொழிற்சங்க இயக்கம் என மார்க்ஸ் வரையறுக்கிறார். இதனை புரிந்துகொள்ளாத தனது சமகால தலைவர்களை கடுமையாக விமர் சிக்கிறார். தமது அன்றாட நலன்களை பாதுகாக்க தொழிலாளர்களிடையே அனிச்சையாக உருவா கும் முயற்சிகள்தான் தொழிற்சங்கங்க அமைப்புகள்! எனினும் விரைவில் இந்த அமைப்புகள் ஒரு வர்க்க அமைப்பாக பரிணமிக்கின்றன. நிலப் பிரபுத்துவத்தின் இறுதி காலத்தில் உருவான கில்டுகள் மற்றும் கம்யூன்களுடன் தொழிற்சங்கங் களை மார்க்ஸ் ஒப்பிடுகிறார். கம்யூன்களும் கில்டுகளும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக முதலாளித்துவம் நடத்திய அரசியல் போராட்டத் தில் ஆயுதங்களாக பயன்பட்டன.

எனவே தொழிற்சங்கங்களின் உடனடி பணி என்பது தொழிலாளர்களின் அன்றாட நலன்களை பாதுகாப்பதாகவே இருக்கும். இது தேவையானது மட்டுமல்ல; நியாயமானதும் ஆகும். பின்னர் தேசம் முழுதும் ஒரு தொழிற்சங்க அமைப்பு உருவாகும் அடுத்த நகர்வு நடக்கிறது. தொழிலாளர் கள் தம்மை அறியாமலே தமது வர்க்கத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொழிற்சங்கங்க அமைப்பை பரவலாக்குகின்றனர்.
இதனை மார்க்ஸ் கீழ்கண்டவாறு விளக்குகிறார்:
“மூலதனத்திற்கும் தொழிலாளிக்கும் இடையே நடக்கும் போரில் கொரில்லா போருக்கு தொழிற் சங்கங்கள் தேவைப்படுகின்றன. அதே சமயத்தில் இதற்கு (கொரில்லா போருக்கு)  இணையாக கூலி உழைப்பையும் முதலாளித்துவத்தின் ஆட்சியை யும் நிரந்தரமாக அகற்றுவதற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவத்துடன் தொழிற்சங்கங்கள் தேவைப் படுகின்றன.” (தேர்வு நூல்கள் தொகுதி 2)

எனினும் அன்றைய தொழிற்சங்க இயக்கத்தின் அரசியல் உணர்வு  அவ்வளவு ஆழமாக இல்லை என்பதை மார்க்ஸ் அறிந்திருந்தார். இயக்கத்தின் பலவீனங்களை தெளிவுபடுத்துகிறார். தமது உடனடி நலன்களை பாதுகாக்க மூலதனத் துடன் போரிட்டுகொண்டிருக்கும் தொழிற் சங்க இயக்கம் கூலி அடிமை முறையை அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையையே முற்றிலும் ஒழித்திட  தனக்கு வலிமை உள்ளது என்பதை புரிந்துகொள்ளவில்லை. எனவே பொதுவான சமூக மற்றும் அரசியல் இயக்கங்களில் பங்கேற் காமல் தனித்து உள்ளது என குறிப்பிடுகிறார். இதில் சிறிது முன்னேற்றம் உருவாகி வருகிறது என்பதை பதிவு செய்யும் மார்க்ஸ் தொழிற்சங்க இயக்கம் தனது பலவீனங்களை விரைவில் களைய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்.
தமது உடனடி நலன்களுக்கான போராட்டங் களை கைவிடாமலேயே (சுரண்டல் முறையிலிருந்து) முழு விடுதலை பெற  உணர்வுபூர்வத்துடன் செயல் பட வேண்டும் என கூறுகிறார். அத்திசை வழியில் பயணிக்கும் ஒவ்வொரு சமூக இயக்கத்திற்கும் அரசியல் போராட்டத்திற்கும் வளர்த்தெடுக்க உதவ வேண்டும் என வலியுறுத்துகிறார். உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அவர் களின் போராளியாக தொழிலாளி வர்க்கம் பரிண மிக்க வேண்டும் என கூறுகிறார். மிகவும் சுரண்டப் படுகின்ற விவசாய தொழிலாளர்கள் போன்ற உழைப்பாளிகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்.

“நமது போராட்டங்கள் குறுகிய நோக்கம் கொண்டவை அல்ல; சுயநலம் மிக்கவை அல்ல; மாறாக இலட்சக்கணக்கான உழைப்பாளிகளின் ஒட்டு மொத்த விடுதலையை நோக்கமாக கொண்டது தமது போராட்டங்கள் என்பதை தொழிலாளி வர்க்கம் மக்கள் அனைவருக்கும் புரியவைக்க வேண்டும்” என அழுத்தம் திருத்தமாக மார்க்ஸ் முன்வைக்கிறார்.
மார்க்சின் இந்த வழிகாட்டுதல்தான் புரட்சிகர மான தொழிற்சங்கத்தை வழிநடத்துகிறது. தொழிற்சங்க இயக்கத்திற்குள் சீர்திருத்தவாத மும் திருத்தல்வாதமும் நுழைவதை தடுக்கும் ஆயுதமாக இந்த வழிகாட்டுதல் பயன்படுகிறது. கூலி அடிமை முறையை ஒழிக்க வேண்டும் எனும் கடமையை சீர்திருத்தவாதிகள் மறந்துபோயினர். சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து தொழிற் சங்க இயக்கத்தை துண்டித்தனர். தமது உறுப்பினர் களுக்காக மட்டுமே போராடும் சுயநல அமைப்பாக தொழிற்சங்க இயக்கத்தை மாற்றினர்.

மார்க்சின் காலத்திலிருந்தே தொழிற்சங்கங்களுக் கும் பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான போராட்டங்களுக்கும் இடையே என்ன தொடர்பு எனும் விவாதம்தான் தொழிற்சங்க இயக்கத்தினுள் தீவிரமாக  நடந்துவந்துள்ளது. பல  ஆன்டுகளாக ஐரோப்பாவில் தொழிற்சங்கத்தின் மேல்தட்டினர் காலனிய ஆட்சியாளர்களால் சலுகைகள் மூலம் விலைக்கு வாங்கப்பட்டனர். காலனிய கொள்ளை யின் ஒரு சிறுபகுதி இதற்கு பயன்படுத்தப்பட்டது. இத்தகைய தொழிற்சங்கவாதிகள் தொழிற்சங்க இயக்கத்தை நாடாளுமன்ற அரசியலுடன் மட்டுமே கட்டிப்போட்டுள்ளனர். முதலாளித்துவ அமைப்புக் குள்ளேயே தொழிற்சங்க இயக்கத்தை சிந்திக்க வைக்கின்றனர். முதலாளித்துவ அமைப்புக்கு அப்பால் எவ்வித சிந்தனையும் செல்லாமல் பார்த்து கொள்கின்றனர்.

தொழிற்சங்க மேல்தட்டினருக்கும் சமூக ஜன நாயக வாதிகளுக்கும் எதிராக மார்க்சுக்கு பிறகு லெனின் இந்த போராட்டத்தை சமரசம் இல்லா மல் நடத்தினார்.
மார்க்சின் அறிவுரையும் வழிகாட்டுதலும் இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கும் பொருந்தும். இந்திய தொழிற்சங்க இயக்கமும் குறுகிய பொருளாதார கோரிக்கைளுக்கான போராட்டத் தில் சிறைபட்டுள்ளது. தான் இயங்கும் ஆலை அல்லது தொழிலுக்கு அப்பால் எதையும் சிந்திக்க மறுக்கிறது. ஜனநாயக பிரச்சனைகளிலும் அரசியல் பிரச்சனைகளிலும் தலையிட மறுக்கிறது. விவசாயி கள் மற்றும் விவசாய தொழிலாளர்களை பாது காப்பதில் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் பலவீனம் நன்கு அறியப்பட்ட ஒன்று! அனைவருக் கும் தெரிந்த இந்த நோய்க்கு எதிராக முயற்சிகள் உள்ளன. எனினும் இந்த முயற்சிகள் பன்மடங்கு பெருக வேண்டும்.

மார்க்ஸ் அவர்களின் வழிகாட்டுதல்களை தொகுத்து கூறுவதானால்
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் அன்றாட நலன்களுக்காக் போராடுவதை தொடர வேண்டும்.
அதே சமயத்தில் (சுரண்டலிலிருந்து) தொழிலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காக  உணர்வு பூர்வமான மையமாக செயல்பட வேண்டும்.

இந்த திசை வழியில் பயணிக்கும் ஒவ்வொரு சமூக இயக்கத்திற்கும் அரசியல் போராட்டத்திற் கும் உதவ வேண்டும்.

தொழிற்சங்கங்கள்  ஒட்டுமொத்த வர்க்கத்திற்கு மான அமைப்புகள். தமது உறுப்பினர்களுக்கு மட்டுமே இயங்குவோம் என்பது தவறு உறுப்பினர் அல்லாதவர்களையும் அரவணைக்க வேண்டும்.

தம்மை அமைப்புரீதியாக திரட்டிக்கொள்ள முடியாத உழைப்பாளிகளை(விவசாய தொழிலா ளர்கள் போன்ற) ஒன்று திரட்டி அவர்களது நலன்களை பாதுகாப்பது தமது கடமை என்பதை உணர்ந்து முன்வர வேண்டும்.
தமது சங்க வலிமையை தம் சுயநலன்களை பாதுகாக்க மட்டுமே பயன்படுத்தவில்லை; மாறாக இலட்சக்கணக்கான அடித்தட்டு மக்களுக்காக குரல் தருகிறோம் என்பதை தமது செயல்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டங்கள்
சமூக மாற்றத்திற்கான அடிப்படை போராட்டத்தை வலியுறுத்திய அதே நேரத்தில் மார்க்ஸ் சில உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிடவில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஜெனிவா மாநாட்டில் கீழ்கண்ட முக்கிய உடனடி கோரிக் கைகளை மார்க்ஸ் வடிவமைத்து முன்வைத் தார்:
எட்டு மணி பணி நேரம். பெண்களுக்கு இரவு நேர பணியை தரக்கூடாது, பெண்கள் உடல் நிலை பாதிக்கும் எந்த பணியும் செய்ய நிர்பந்திக்க கூடாது.

9 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு இரவு நேர பணியில் அமர்த்த கூடாது; 9 முதல் 12 வயதுள்ள குழந்தைகளை இரண்டு மணி நேரத்திற்கு மேல் பணியில் அமர்த்த கூடாது; 13 முதல் 15 வயதுள்ள குழந்தைகளை 4 மணி நேரத்திற்கு மேல் பணியில் அமர்த்த கூடாது. 15 முதல் 17 வயதுள்ள குழந்தை களை 6 மணி நேரத்திற்கு மேல் பணியில் அமர்த்த கூடாது.
அனைத்து தேசங்களிலும் தொழிலாளர்  களின் பணி நிலைமை மற்றும் வாழ் நிலைமை குறித்து ஒரு புள்ளிவிவர ஆய்வு நடத்த வேண்டும் என மார்க்ஸ் கோரினார். இதற்காக கேள்விகள் அடங்கிய பட்டியலை மார்க்ஸ் தயாரித்தார்.

அதில் கீழ்கண்ட விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன:
அப்ரண்டீஸ் உட்பட ஊழியர்களுக்கு ஊதியம்/ஆலைகள் மற்றும் இதர இடங்களில் பணிநேரம்/இரவு நேர பணி குறித்த விவரங்கள்/உணவு நேரம்/காற்று வசதி உட்பட பணியிட வசதிகள்/பணி நிலைகள் உடல்நிலையில் உருவாக் கும் பாதிப்புகள்/உழைப்பாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் என பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியாளர்களை வலியுறுத்தி தொழிற்சங்கங் கள் போராட வேண்டும் என மார்க்ஸ் கோரினார்.

இத்தகைய பகுதி கோரிக்கைகளுக்கு மார்க்ஸ் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இந்த போராட்டங் கள் மூலம் தொழிலாளர்களுக்கு தமது உரிமைகள் குறித்த உணர்வு அதிகரிக்கும் என மதிப்பிட்டார். இங்கிலாந்தில் உருவான அனைத்து தொழி லாளர் சட்டங்களும் தொழிலாளி வர்க்கத்தின் வலுவான வர்க்க போராட்டம் காரணமா கவே நிகழ்ந்தன என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்தார்.
பிரிட்டன் தொழிலாளி வர்க்கம் பத்து மணி நேர பணிக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் வெற்றி பெற்ற பொழுது மார்க்ஸ் கீழ்கண்டவாறு எழுதினார்:
“பத்து மணி நேர சட்டம் மிகப்பெரிய வெற்றி என்பது மட்டுமல்ல; இது ஒரு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரத்தின் முன் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரம் தோல்வி அடைந்தது இதுதான் முதல் தடவை ஆகும்.”

பாட்டாளி வர்க்க சர்வதேசியம்
மார்க்ஸ் தலைமை தாங்கிய சர்வதேச தொழிலாளர் சங்கம்  பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு வித்திட்டது. இந்த அகிலம் தொழிலாளர்களுக்கு தமது தேசிய எல்லைகளையும் தாண்டி ஒற்றுமை உணர்வை உருவாக்கியது. மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச ஒற்றுமை தேவை என்பதை போதித்தது. அன்றாட போராட்டங் களில் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும் என்பதை கற்றுகொடுத்தது. இந்த அன்றாட பணியின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் வேலைநிறுத்தங்களுக்கு நிதி உதவி திரட்டப்பட்டது. இது சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்தியது. பல தேசங்களில் உள்ள பாட்டாளி வர்க்கத்தை வர்க்க ஒற்றுமையின் அடிப்படையில் பொதுவான பதாகையின் கீழ் திரட்டிட தன்னா லான அனைத்து முயற்சிகளையும் முதல் அகிலம் எடுத்தது.
பிரான்சும் பிரஷ்யாவும் போரிட்ட பொழுது இரு தேசங்களின் தொழிலாளர்களும் குறுகிய தேசியத்தையும் தாண்டி பாட்டாளிவர்க்க சர்வ தேசியத்தை வெளிப்படுத்தினர். அதுவரை நடந் திராத புதுமை இது! பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு இது சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்ந்தது.

சர்வதேச ஒற்றுமைக்காக மார்க்ஸ் விடுத்த அறைகூவல் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களை உத்வேகப்படுத்தியது. சர்வதேச உணர்வு ஆழமாக ஏற்பட மார்க்சின் முயற்சிகள் முக்கிய காரணமாக இருந்தன. மார்க்சுக்கு பிற்கு சர்வ தேசியத்தை பாதுகாக்க லெனின் கடுமையாக போராடினார். இரண்டாம் அகிலத்தை சேர்ந்த பல தலைவர்கள் சர்வதேசியத்தை கைவிட்டு முதல் உலகப்போரில் தம் தேசங்களின் முதலாளித்துவ அரசுகளை ஆதரித்த பொழுது லெனின் அவர் களை கடுமையாக விமர்சித்தார்.
சர்வதேச பார்வை இல்லாததும் உலக வளர்ச்சி போக்குகள் குறித்து கவலைப்படாமல் இருப்பதும் உலக தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றி பாராமுகமாக இருப்பதும் இந்திய தொழிற்சங் கத்தின் ஒரு முக்கிய பலவீனம் ஆகும். அதே சமயத் தில் தேசிய இன வெறியை கிளப்பும் சக்திகளும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமையை எதிர்க் கும் சக்திகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழல்கள் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு பொருந்துவதாக உள்ளன.

சர்வதேச தொழிலாளர் சங்கம் போதித்த பாட்டாளி வர்க்க சர்வதேசியம் இன்றும் முக்கிய தேவையாக உள்ளது எனில் மிகை அல்ல.

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி
1872ம் ஆண்டு ஹேக் நகரில் நடைபெற்ற அகிலத்தின் மாநாட்டில் தொழிலாளி வர்க்கத் திற்கு அரசியல் கட்சி தேவை எனும் மார்க்சின் ஆலோசனை ஏற்றுகொள்ளப்பட்டது. மார்க்ஸ் ஏற்கெனவே அகிலத்தின் நடவடிக்கைகள் மூல மாக பல்வேறு சிந்தனையோட்டங்கள் கொண்ட தொழிலாளர் இயக்கங்களை புரட்சிகர பதாகை யின் கீழ் அணிதிரட்டியிருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு காலம் கனிந்திருந்தது.

அகிலத்தின் பொதுக்குழுவில் புதிய விதி 7A இணைக்கப்பட்டது. இந்த புதிய விதி என்ன கூறுகிறது?
“ஆளும் வர்க்கங்களின் கூட்டு அதிகாரத் திற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஒரு தனி கட்சியாக தன்னை தகவமைத்து கொள்வதன் மூலமாக மட்டும்தான் ஒரு வர்க்கமாக செயல் பட முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்த கட்சி ஆளும் வர்க்கங்களின் கட்சிகளுக்கு எதிரானதாக இருக்கும்.”

“பாட்டாளி வர்க்கத்தின் கட்சி உருவாக்குவது சமூக புரட்சியின் வெற்றிக்கும் இறுதி லட்சியமான வர்க்கங்களை ஒழிப்பதற்கும் மிக இன்றியமை யாதது ஆகும். ஏற்கெனவே உருவாகியிருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒற்றுமை சுரண்டல்வாதிகளின் அதிகாரத்துக்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளி வர்க்கத் தின் கரத்தை மேலும் வலுப்படுத்தும்.”

“நிலஉடமையாளர்களும் மூலதன உடமை யாளர்களும் தமது பொருளாதார ஏகபோக உரிமையை பாதுகாக்கவும் அதனை நிரந்தரப் படுத்தவும் உழைப்பை அடிமைப்படுத்தவும் தமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். (இதற்கு எதிராக) அரசியல் அதிகாரத்தை வெல்வது பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கிய கடமையாக முன்வந்துள்ளது.”
இந்த முக்கியமான நடவடிக்கை மூலம் புரட்சி கரமான தொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை பாதையை மார்க்ஸ் தெளிவாக முன்வைத்தார். தொழிலாளி வர்க்கத்திற்கென ஒரு புரட்சிகரமான தனி அரசியல் கட்சி என்பது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். இதனை மார்க்ஸ் சாதித்தார்.

எனினும் பிரச்சானைகள் இல்லை என்று பொருள் அல்ல. சிலர் இந்த நிலைபாடை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரச்சனைகள் புதிய வடிவத் தில் எழுந்தன. தொழிற்சங்கங்கள் முற்றிலும் அன்றாட கோரிக்கைகளுக்கு மட்டுமே செயல் படுவது என சில அமைப்புகள் நிலை எடுத்தன. அரசியல் பிரச்சனைகளோ அல்லது சுரண்டலை முற்றிலுமாக ஒழிப்பதோ இவர்களின் செயல் திட்டத்தில் இல்லை.

சமாதான கால கட்டம் நிலவியதும் ஏகாதி பத்தியம் தொழிலாளர்களின் சில கோரிக்கை களை ஏற்றுகொண்டதும் நாடாளுமன்ற சலுகை கள் அளித்ததும் அரங்கேறின. இதன் விளை வாக ஒரு புதிய  தொழிற்சங்க தலைமை பிரிவு உருவானது. இந்த பிரிவு முதலாளித்துவத்தால் விலைக்கு வாங்கப்பட்டிருந்தது. இரண்டாம் அகிலம் தகர்ந்து போனதற்கான காரணத்தை இத்தகைய நிகழ்வுகளில் லெனின் கண்டுபிடித்தார், தொழிலாளி வர்க்கத்தின் கட்சிக்கும் தொழிற் சங்கத்திற்கும் உள்ள உறவாக பிரச்சனை புதிய வடிவம் எடுத்தது. தொழிற்சங்கங்கள் தமது அன்றாட பிரச்சனைகள் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது எனவும் வெளியாரின் தலையீடு தொழிற்சங்கங்களில் இருக்க கூடாது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

மார்க்சுக்கு பிறகு லெனின் தொழிலாளி வர்க்கத் தின் கட்சி குறித்த கோட்பாடுகளை செழுமைப் படுத்தினார். கட்சிக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள உறவையும் வகைப்படுத்தினார். இந்த உறவு பொருத்தமாக நிலை நாட்டுவதில் நிகழும் பல்வேறு தவறுகளை ஆய்வு செய்த லெனின் அவற்றை களைவதற்கான வழிகாட்டு தல்களையும் உருவாக்கினார். கட்சியின் தலைமை பாத்திரத்தை நிலைநாட்டும் அதே நேரத்தில் தொழிற்சங்கத்தின் சுயேச்சை தன்மையும் பாது காக்கப்ப்ட வேண்டும் என லெனின் வலியுறுத்தினார். தேவை ஏற்பட்டால் கம்யூனிஸ்டுகள்  பிற்போக்குத் தனமான தொழிற்சங்கங்களிலும் பணியாற்ற வேண்டும் என லெனின் வலியுறுத்தினார்.

இந்தியாவிலும் தொழிற்சங்க இயக்கம் ஏனைய பல நாடுகளில் நிகழ்ந்ததை போலவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இந்தியாவிலும் தொடக்கத்தில் தொழிற்சங்க நடவடிக்கை என்பது தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென் றெடுக்க தன்னெழுச்சியான போராட்டங்களாக இருந்தன. தொழிலாளர்கள் தமக்கு ஒரு நிரந்தர மான தொழிற்சங்க அமைப்பு தேவை என்பதை உணர்ந்திருக்கவில்லை.
தொழிலாளி வர்க்கத்தின் உணர்வை சோசலிஸ்ட் உணர்வு மட்டத்திற்கு உயர்த்துவது அவசியம் என கட்சி கருதுகிறது. தொழிலாளர்களிடையே கிளர்ச்சி நடத்துவதோடு திருப்தி கொள்ள கூடாது. பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் வலுவான பிரச்சாரமும் செய்ய வேண்டும்.

தொழிற்சங்கங்கள் ஜனநாயக போராட்டங் களில் தலையிடுவதும் விவசாய இயக்கங்களுடன் வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதையும் உத்தர வாதம் செய்ய வேண்டும். பெரும் பலவீனம் உள்ள மற்றொரு பிரச்சனை சர்வதேச கண்ணோட்டம் ஆகும். இந்த பலவீனம் களையப்படுவது மிக முக்கியம் ஆகும்.

One thought on “கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s