மார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் …


முதலாளித்துவம் குறித்த புரிதலுக்கு அம்முறைமை குறித்த காரல் மார்க்சின் இரண்டு ஆழமான பார்வைகள் உதவுவதாய் உள்ளன. முதலாவது, உபரி மதிப்பின் தோற்றம் குறித்ததாகும். இரண்டாவது அன்னியமாதல்.

சரக்குகளின் உலகத்தில் சரக்குகளின் உடமையாளர்களுக்கு –  அவர்களில் தொழிலாளர்களும் அடக்கம் – இடையில் பரிமாற்றங்கள் தன்விருப்போடும், சமநிலையிலும் எவ்வித வஞ்சமுமின்றி நடந்தேறும் போது எப்படி உபரி மதிப்பு உருவாகிறது?

புதிருக்கான விடை

இப்புதிருக்கான விடை, உழைப்பிற்கும் உழைப்பு சக்திக்கும் இடையேயான வேறுபாடு குறித்த காரல் மார்க்சின் கண்டுபிடிப்பில் அடங்கியுள்ளது. தொழிலாளர்கள் விற்பது உழைப்பை அல்ல, உழைப்பு சக்தியையே. உழைப்பு சக்தி என்பது அவர்களின் உழைப்பைச் செலுத்துவதற்கான திறன் ஆகும். அதுவும் சரக்கு ஆகிறது. மற்ற சரக்குகளைப் போலவே அதன் மதிப்பும், எவ்வளவு நேரடி மற்றும் மறைமுக உழைப்பு நேரம் அதன் உருவாக்கத்திற்கு செலுத்தப்படுகிறதோ, அதற்கு சமமானதாகும். மேற்சொன்ன விசயத்தில் அது எதனைக் குறிக்கிறதென்றால், ஒரு யூனிட் அளவுக்கு உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்யவும், மறு உற்பத்தி செய்யவும், பிழைப்புக் கூடையிலிருந்து ( subsistence basket ) எவையெல்லாம் தேவையோ அவற்றைக் குறிக்கிறது.

உழைப்பு சக்தி, சரக்கு என்ற வகையில், ஓர் சிறப்பு இயல்பைக் கொண்டுள்ளது. அதன் பயன்பாடு, அதாவது அதற்காக மெய்யாகச் செலவிடப்படும் உழைப்பு நேரம், மதிப்பை உருவாக்குகிறது. உழைப்புச் சக்தியைக் கொண்டு உருவாக்க வைக்கப்பட்ட மதிப்பு, அதன் உண்மையான மதிப்பை விடவும் அதிகம் என்ற உண்மையில்தான், உபரிமதிப்பின் தோற்றுவாய் அடங்கியுள்ளது. ஆகவே சமமான பரிமாற்றங்களில் கூட, அதாவது எல்லாச் சரக்குகளும் அதனதன் மதிப்புகளின் அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்படும் போதும், உபரி மதிப்பு உருவாகிறது.

ஆழமான இப்பார்வை நிறைய விளைவுகளைக் கொண்டதாக உள்ளது. முதலாவதாக, முதலாளித்துவத்திற்கு இது ரத்தினச் சுருக்கமான இறுக்கமான இலக்கணத்தை வழங்குகிறது. அதாவது பொதுவான சரக்கு உற்பத்தியைக் கொண்டதாக, அதில் உழைப்புச் சக்தியும் சரக்காக விளங்குகிற முறைமையாக அது வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள், உருப்பொருள்களின் (Entitids) அம்சங்களுக்கும், அதன் தொடர்பான அம்சங்களுக்கும் (Relational Aspects) இடையேயான இருமை (Duality), எந்த ஒரு எளிமையான சரக்கு உற்பத்தி பொருளாதாரத்தின் குணாம்சமாக முன்னைவிட ஊடுருவி வெளிப்படுவதாகும். உதாரணமாக, பயன்மதிப்பு – பரிமாற்ற மதிப்பு, உழைப்பின் நிகழ்முறை – மதிப்பு உருவாக்க நிகழ்முறை, உற்பத்தி பொருள் – சரக்கு, கண்களுக்கு புலப்படும் உழைப்பு – புலப்படா உருவமற்ற உழைப்பு போன்றவற்றிற்கு இடையே ஆனவை.  மேலும் பிழைப்பிற்கான ஆதாரம் – மாறுகிற மூலதனம், உபரி சரக்கு – உபரி மதிப்பு போன்றவை என இருமை வெளிப்படும் அம்சங்கள் நீள்கின்றன.

இரண்டாவதாக, உபரி மதிப்பு இம்முறைமையில் பரிமாற்றங்களின் ஊடாக உருவாவதில்லை. மாறாக உற்பத்தியின் ஊடாகவே உருவாகிறது. முதலாளித்துவ நிறுவனங்கள், சரக்கு உற்பத்தியாளர்கள் என்றவகையில் ஒருவரோடு ஒருவர் போட்டி போடும் போது, அதிக செலவினம் உடைய உற்பத்தியாளர்கள் காலப்போக்கில் வெளியேற்றப்படுவார்கள். எனவே புதிய வழிமுறைகள், புதிய உற்பத்தி பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் வாயிலாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான நிர்ப்பந்தங்கள் ஏற்படுவது இயல்பு. அதாவது தொடர்ச்சியாக உற்பத்தி நிகழ்முறைகளில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருவதாகும். இத்தகைய இடையறாத உந்துதல்தான் முதலாளித்துவத்தை முந்தைய எல்லா உற்பத்தி முறைமைகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதாகும். மேலும் இது, உற்பத்திக்கான நிகழ்முறையில் இருந்தே உபரி மதிப்பு உருவாகிறது என்கிற உண்மையோடு இணைந்தது ஆகும்.

மூலதனக் குவிப்பு நிகழ்வது ஏன்?

மூன்றாவதாக, புதிய உற்பத்தி வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது மூலதன அலகின் அளவைப் பொருத்ததாகவே இருப்பதால் பெரிய மூலதனங்களுக்கு கரையேறுகிற வாய்ப்பு அதிகம். சிறிய மூலதனங்கள் விரட்டப்படும். ஆகவே மூலதனத்தின் ஒவ்வொரு அலகும் மூலதனக் குவிப்பின் வாயிலாக தத்தம் அளவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

மூலதனக் குவிப்பு ஏன் நிகழ்கிறது? என்பதை சுருக்கமாகச் சொல்வதானால், இம்முறைமையில் உள்ள போட்டி என்கிற மெய்யான சூழல் காரணமாக, மூலதன அலகுகள் ஒவ்வொன்றின் மீதும் ஏற்படுகிற நிர்பந்தமே ஆகும். என்றாலும் கூட, இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான “டார்வீனியப் போராட்டத்தில்” (தகுதியுள்ளது பிழைக்கும்) மூலதனத்தின் அலகுகள் விடாப்பிடியாக முயன்றாலும் அவற்றில் சில தோல்வி அடைவது தவிர்க்க இயலாததாகிறது. காரணம், மூலதனம் மையமாதல் என்கிற நிகழ்முறை அரங்கேறுவதுதான். அதாவது பெரும் பெரும் மூலதன தொகுதிகள் கால ஓட்டத்தில் உருவாகின்றன. (இது இறுதியில் ஏகபோக முதலாளித்துவ உருவாக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. வெளிப்படையாக, மறைமுகமாக முதலாளிகளுக்கிடையில் விலை நிர்ணய உடன்பாடுகள் ஏற்படுகின்றன. போட்டியை ஒழிப்பதற்கு மாறாக இத்தகைய புதிய வடிவங்கள் தற்போது உருவாகின்றன).

நான்காவதாக, முதலாளிகளின் உபரி மதிப்பு அதிகரிப்பு தொடர்வதற்கு உழைப்புச்சக்தியின் மதிப்பு எப்பொழுதுமே அது உருவாக்கக்கூடிய மதிப்பை காட்டிலும் குறைவாகவே இருக்க வேண்டும். இதன் பொருள் இம்முறைமை எப்போதுமே உழைப்புச்சக்தியின் போதாமைக்கு ஆளாகக்கூடாது. இது முதலாளிகள் பணிக்கமர்த்துகிற செயல்படு உழைப்பாளர் படைக்கு (Acting Army of Labour) அப்பாற்பட்டு காத்திருக்கும் உழைப்பாளர் படையையும் (Reserve Army of Labour) வைத்திருக்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது. இக் காத்திருப்புபடை எவ்வாறு உருவாக்கப்படுகிறது? மூலதனக் குவிப்பின் வாயிலாகவும், சிறு உற்பத்தியை தகர்ப்பதன் வாயிலாகவும் உழைப்பாளர் படைக்கு மக்களைத் தள்ளிக்கொண்டே இருப்பதன் மூலமே இது உறுதி செய்யப்படுகிறது. காத்திருப்போர் படையின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவிற்கு, செயல்படு உழைப்பாளர் படைக்கு இணைந்து வளரும்போது மூலதனக்குவிப்பு நடந்தேறுகிறது. அதனால் செல்வ வளர்ச்சி ஒருமுனையில் நிகழ்வதும், மறுமுனையில் வறுமை வளர்வதுமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய போக்கு ஏற்படுகிறது.

ஆங்கில செவ்வியல் பொருளாதார நிபுணர்கள், கூலியின் அளவு பிழைப்புக்கேற்ற மட்டத்தில் கட்டுப்படுத்தபட்டதற்கு காரணம், அதற்கு அதிகமாக கொடுத்தால் மக்கள் பெருக்கத்தை அதிகமாக்குகிற உந்துதல் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் என்ற வாதத்தை முன்வைத்தார்கள். இந்த முரணான கருத்தை மார்க்ஸ் மறுதலித்தார். அவர் இக்கருத்தோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மால்த்தூசியன் கோட்பாட்டை “மனிதகுலத்தின் மீதான அவதூறு” என்று குறிப்பிட்டார். அதற்குமாறாக, பிழைப்புக்கேற்ற மட்டத்திலேயே கூலியை தேக்கிவைப்பதற்கு நாம் குறிப்பிட்ட சமூகக் காரணிகளை அவர் முன்வைத்தார்.

நேர் எதிர் முரண்…

ஐந்தாவதாக, முதலாளித்துவ முறைமையின் துவக்கமே, உற்பத்தியாளர்களை உற்பத்திக் கருவிகளிலிருந்து பிரித்து வைப்பதும், உற்பத்திக் கருவிகளை சிலர் கைகளில் குவிப்பதுமான நிகழ்முறையை சார்ந்திருந்தது. ஆகவே இரண்டு வகையிலான சரக்கு உடமையாளர்கள் – அதாவது உற்பத்திக் கருவிகளையும், பிழைப்பதற்கான வளமையையும் தங்கள் வசம் கொண்டோர் மற்றும் உழைப்புச்சக்தியை தவிர வேறு எதையும் விற்பதற்கு வாய்ப்பற்றோர்  – ‘நேருக்குநேர்’ தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால், அடிப்படையிலான நேர் எதிர் முரண், இம்முறைமையின் செயல்பாட்டில் உருவாகி வந்துள்ளது.

ஆறாவதாக, உற்பத்தி நிகழ்முறைகளில் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட புரட்சிகர மாற்றங்கள், தொழிலாளர் உற்பத்தித் திறனை காலவோட்டத்தில் வளர்த்துவந்துள்ளது. ஆனால் காத்திருக்கும் உழைப்பாளர் படை, எப்போதுமே கூலியை “மற்ற அம்சங்கள் சமநிலையில் இருப்பதாகக் கொண்டாலும்” (Centeris Paribus) வரலாறு நிர்ணயித்துள்ள பிழைப்பதற்கான அளவுகளிலேயே வைத்திருப்பதற்கு வழிவகுக்கிறது.

இவ்வரலாறு நிர்ணயித்த அளவுகள், காலப்போக்கில் சிறிது வேண்டுமானால் உயரக்கூடும் என்பதே அதிகபட்ச வாய்ப்பு. கூலி, முழுமையாக நுகரப்படத்தக்க அளவிலேயே இருப்பதால், அதுவும் உபரி மதிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குட்பட்ட விகிதத்திலேயே அமைவதால், அது பொருளாதாரத்தில் நுகர்வுக்கான கிராக்கியை உற்பத்தி மதிப்போடு ஒப்பிடுகையில் குறைவாகவே வைத்துள்ளது. உபரி மதிப்பின் நுகரப்படாத பகுதி முழுவதுமே நிலை மற்றும் மாறுகிற மூலதனங்களின் அதிகரிப்புகளாக மூலதனக்குவிப்பிற்கு பயன்பட்டால் மேற்கூறிய கிராக்கி குறைவு பிரச்சனை எழாது என்பது ‘ஜீன் பேப்டிஸ்ட் சே’ விதி (Say’s law) முன்னிறுத்திய வாதமாகும். ஆனால் மூலதனக்குவிப்பு, பணமூலதன அதிகரிப்பு என்ற வடிவத்தை எடுக்கக்கூடும் என்பதால், உற்பத்தி மதிப்பில் உபரி மதிப்பின் பங்கு அதிகரிப்பதோடு, அதீத உற்பத்தி சார்ந்த நெருக்கடிகளுக்கு உந்துதல் அளிக்கும்.

மார்க்ஸ், இம்முறைமைக்குள் எழுகிற பல்வேறு வகையிலான நெருக்கடிகள் குறித்த கவனத்தை ஈர்த்துள்ளார். மூலதனத்தின் இயற்கையான உள்ளடக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி உள்ளிட்டவை, அதாவது நிலை மற்றும் மாறுகிற மூலதனத்திற்கு இடையிலான விகிதம் சம்மந்தமானதும் அதில் அடங்கும். ஆனால் அதீத உற்பத்தி சார்ந்த நெருக்கடிகளுக்கு மார்க்ஸ் அளித்த முக்கியத்துவத்தால் – அதாவது முதலாளித்துவத்தின் பணப்பயன்பாட்டு தன்மையும், அது செல்வத்தை சேர்ப்பதற்கான வடிவமாக ஆக்கப்பட்டதுமான காரணிகளால் – சே விதியை ஏற்றுக்கொண்ட ஆங்கில செவ்வியல் பொருளாதார அறிஞர்களை விஞ்சியதாக அவரது கண்ணோட்டம் அமைந்தது. 75 ஆண்டுகளுக்கு பின்பாக 1930களில் பெரு வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட “கீன்சிய” புரட்சிக்கு முன் அறிவிப்பாகவும்  அது அமைந்தது.

வரம்பைக் கடக்க முடியுமா?

முதலாளித்துவ முறைமையின் கீழான சுரண்டலின் தன்மை குறித்த அடிப்படையான பார்வை இது. அதன் சுரண்டல் தன்மையும், அதன் சுய இயக்கத்தின் வாயிலாக முரண்பாடுகளை உருவாக்குவதும், இம்முறைமை குறித்த அடிப்படை குணாம்சம் பற்றிய வரையறுப்போடு இணைக்கப்பட்டன. அதுவே “தன்னியல்பு முறைமை” (spontaneous system) என்ற பெயரைப் பெற்றது. அம்முறைமை பல தனித்தனி அமைப்புகளின் நடவடிக்கைகளின் வாயிலாக செயல்படலாம். ஆனால் அந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை இம்முறைமையே நிர்ப்பந்தித்து தீர்மானிக்கிறது.

ஆகவே இம்முறைமை அவசியமாகவே “தான் – இயங்கியாக” (Self Driven) உள்ளது. இதன் “தான் இயங்கும் தன்மை” தனியர்களின் நடவடிக்கைகள் ஊடாகவே அமைகிறது என்றாலும் அவர்களின் நடவடிக்கைகள் இம்முறைமையின் தர்க்க வரம்புகளுக்கு உட்பட்டே அமையும் என்பது உண்மை. தனியர் எவரேனும் முதலாளித்துவ முறைமையின் வரம்பிற்குட்பட்டு  நடந்து கொள்ளாவிட்டால் அவர் முறைமையில் அவருக்கான இடத்தை இழக்கவேண்டி வந்து ஓரம் கட்டப்படுவார். உதாரணமாக, ஒரு முதலாளி மூலதனக் குவிப்பை நாடாத பட்சத்தில் அவருக்கு இந்நிலையே ஏற்படும். மொத்தத்தில் தனியர்களின் நடவடிக்கைகள், முதலாளித்துவ முறைமையின் குணாம்சங்களை வெளிப்படுத்தக்கூடிய கீழ்க்காணும் உள்ளார்ந்த போக்குகளுக்கு வழிவகுக்கும். அதாவது மூலதனம் மையமாதலை நோக்கிய போக்கு, படர்ந்த சரக்குமயமாதலை நோக்கிய போக்கு, காத்திருக்கும் உழைப்பாளர் படையை விரிவாக்குகிற மறு உற்பத்தியை நோக்கிய போக்கு, சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து பறிப்பதை நோக்கிய போக்கு, செல்வ உற்பத்தி ஒரு முனையிலும் வறுமை மறு முனையிலுமான போக்கு… என மேலும்… மேலும்…

மார்க்சின் ஆழமிக்க இரண்டாவது பார்வையும் நிறைய ஆழமான விளைவுகளை கொண்டதாக உள்ளது. முதலாளித்துவம் தனிநபர் சுதந்திரத்தை உறுதி செய்வதாக பிரகடனப்படுத்திக் கொண்டாலும், அதற்கு மாறாக அனைவரின் அன்னியமாதலை உள்ளடக்கியதாகவே அது உள்ளது. இதில் ஒவ்வொரு பொருளாதார முகவரும் அவரவர் விருப்பத்திற்கு மாறாக செயல்படுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். முதலாளியே முதலாளித்துவத்தின் கீழ் அன்னியமானவராய் உள்ளார். அவருடைய விருப்பத்தின்படி செயல்படுகிற உரிமை அவருக்கே கிடையாது. எல்லா முதலாளிகளும் “டார்வீனியப் போட்டியில்” ஈடுபடுவதால் குறிப்பிட்ட வகைகளிலேயே செயல்படுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனால் மார்க்ஸ் முதலாளியை “மூலதனத்தின் உருவகம்” (Capital Personified) என்கிறார். மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகளின் வழி பயணிப்பதற்கான வாகனமே முதலாளியின் தனிமனித செயல்பாடு ஆகும் என்பதே அவர் குறிப்பாக உணர்த்துவதாகும்.

தன்னியல்பு இயக்கம்…

இரண்டாவதாக இம்முறைமையின் “தன்னியல்பான இயக்கம்” என்பதன் பொருள் என்ன? இதன் பொருளாதார செயல்பாட்டிலொ, அதன் விளைபயனிலொ அரசியல் தலையீட்டின் வாயிலாக மாற்றங்களை கொண்டு வருகிற நெகி;ழ்வு அதற்கு கிடையாது என்பதே. உண்மையில் முதலாளித்துவ அரசின் வழக்கமான அரசியல் தலையீடு அம்முறைமையின் தன்னியல்பான இயக்கத்தை உறுதிசெய்வதற்காகவே அமைகிறது. அதன் உள்ளார்ந்த போக்குகளை விரைவாக்குகிற உந்துதலே அதற்குள் அடங்கியுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தன்னியல்பு இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிற வாய்ப்பு ஏற்பட்டாலும் அது இம்முறைமையை செயலிழக்க செய்கிறது. மேலும் முறைமையை மாற்றுவதற்கான அடுத்தகட்ட தலையீடுகளை கோருவது அல்லது அரசின் முதல் தலையீட்டை திரும்பப் பெற்று தன்னியல்பு தன்மைக்கு மீட்பது ஆகிய முடிவுகளுக்கு செல்கிறது.

சோசலிசத்திற்கான நியாயம், குறிப்பாக முதலாளிததுவ முறைமையின் “தன்னியல்பு” காரணமாகசூவு எழுகிறது. முதலாளித்துவ முறைமை சீர்திருத்தங்களை வெற்றிகரமாக, நிலைக்கத்தக்கதாக உள்வாங்கக்கூடிய அளவிற்கு வளைந்து கொடுக்குமா? மேலும் மனிதம் நிறைந்ததாக, மேலும் தொழிலாளர்களிடம் நட்பு பாராட்டுவதாக, மேலும் சமூகப் பொறுப்புடையதாக, மேலும் சமநிலை நோக்குடையதாக, மேலும் “நலம் பேணத்தக்கதாக” (றுநடகயசளைவ) அது தன்னைத் திருத்திக் கொள்வதாக இருந்தால் சோசலிச ஒழுங்கு நோக்கிய மாற்றத்திற்கான வாதங்களுக்கு எந்தவொரு நியாயமும் இருக்காது. ஆனால் இம்முறைமையின் “தன்னியல்பு” இதை வளைந்து கொடுக்க விடாது. எந்தவொரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்திற்கும் வாய்ப்புகளைத் தராது. “சேமநல முதலாளித்துவம்” என்பது நிலைக்கத்தக்க கருதுகோளாக அமையாத வகையில் முரண்களை அது உருவாக்கும். ஆகவேதான் இம்முறைமையை விஞ்சிய ஒன்றை நாட வேண்டியுள்ளது.

சோசலிசம் வேறுபடுவது எதில்?

அதே நேரத்தில் சோசலிசம் என்பது முற்றிலும் மாறான “தன்னியல்பு” அற்ற ஒழுங்கு உடையதாகும் முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்குமான வேறுபாடு பிந்தையதில் உற்பத்திக் கருவிகளின் உடமை சமூகத்தின் சார்பாக அரசின் வசம் இருக்கும் என்பது மட்டுமே அல்ல. அரசு நிறுவனங்களே சந்தையில் ஒன்றுக்கெதிராய் ஒன்று என முதலாளித்துவ நிறுவனங்கள் போன்று போட்டி போட்டால் அது முதலாளித்துவ அராஜகத்தையே மறு உற்பத்தி செய்யும். அதில் நெருக்கடிகள், வேலையின்மை மற்றும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்குகளும் வெளிப்படும்.

இவ்விரண்டிற்குமான வேறுபாடு சோசலிசத்தின் கீழ் வருமானங்கள் நன்கு பகிரப்படும் என்பதோடும் சுருங்கிவிடாது ஏனெனில் காத்திருக்கும் உழைப்பாளர் படையை நாம் அனுமதிப்போமேயானால் இவ்வருமான பகிர்வு காலப்போக்கில் பின்னுக்குப்போய்விடும். ஆகவே இவ்விரு முறைமைகளுக்கான வேறுபாடு எதில் அடங்கியிருக்கிறது எனில், சோசலிசம் தனது உள்ளார்ந்த பொருளியல் இயல்புகளால் உந்தப்படுவதில்லை என்பதிலும், உழைப்பாளி மக்கள் தங்களின் பொருளாதாரத் “தலையெழுத்தை” மாற்றுகிற கடப்பாட்டை கூட்டு அரசியல் தலையீட்டின் வாயிலாக ஈடேற்ற முடியும் என்பதிலும் ஆகும்.

ஆனால் எல்லா தனியர்களும் தனது தர்க்க நெறிகளுக்குட்பட்டே செயல்பட வேண்டும்; என்று முதலாளித்துவத்தால் நிர்ப்பந்தம் செய்யப்படுகிற போது சோசலிசம் எப்படி மலரமுடியும்? மார்க்சின் பதில் இதுதான். முதலாளித்துவம் போட்டியை, பிரிவினையை, அன்னியமாதலை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வேளையில், அது அவர்களின் “கூடுகைகள்” (Combination) வாயிலாக கரங்களைக் கோர்க்கவும் வழிவகுக்கிறது. இது முதலாளித்துவம் தனது உள்ளார்ந்த தர்க்கத்தை செயலாக்கும் போது ஏற்படுகிற முறிவு ஆகும். இந்த முறிவு இம் முறைமைக்கு “வெளியே” இருந்து மொழியப்படுகிற கோட்பாட்டு ரீதியான புரிதலால் வலுப்படுத்தப்படுகிறது. அதாவது, “புறம்சார்ந்த அறிவு” கண்ணோட்டம் சோசலிசத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.

மார்க்சியத்திற்கும், தாராளவாதத்திற்குமான (Liberalism) அடிப்படை வேறுபாடு என்னவெனில் பிந்தையது தனிநபர் சுதந்திரம் மீதே தனது அழுத்தத்தை கொடுக்கிறது. அத்தனிநபர் சுதந்திரம் அரசாலோ, சில தனிநபர்களாலோ, சில குழுக்களாலோ கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும், முதலாளித்துவ முறைமை அதைக் கட்டுப்படுத்துவதில்லை என்றும் அது கருதுகிறது. காரணம் அது எல்லா பொருளாதார உறவுகளும் தன்விருப்பத்தோடே பின்னப்படுகின்றன என்று கருதுவதும், தனியர்கள் பொருளாதார உறவுகளுக்குள் நுழைவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்க மறுப்பதுமே ஆகும்.

விடுதலைக்கான முன்நிபந்தனை…

பொருளாதார முறைமை மீது நிர்ப்பந்தம் என்று காரல்மார்க்ஸ் காண்பிக்கிற வெளிச்சம், தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மீது அது விதிக்கிற வரையறைகளோடு சுருங்கிவிடக்கூடியதல்ல. மாறாக தனியர்கள் சிக்கியுள்ள வலையான முதலாளித்துவ முறைமையின் உள்ளார்ந்த போக்குகளால் அது இயக்கப்படுகிறது என்பதே ஆகும். எனவே தனிநபர் சுதந்திரம் என்பது, முதலாளித்துவத்தின் கீழ் கைவசமாகக்கூடியது அல்ல. அதை கைவசமாக்குவதற்கு முதலாளித்துவ சமூகம் கடக்கப்படவேண்டும். சோசலிச சமூகத்திற்கு மாற வேண்டும்.

அச்சமூகமே இத்தகைய உள்ளார்ந்த போக்குகளிலிருந்து விடுதலை பெற்றதாக இருக்கும். முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்குகள் மேலும் நமக்கு விளக்குவது என்னவெனில், எல்லொருக்குமான விடுதலை-சாதியம், பாலினம், இனம் மற்ற ஒடுக்கு முறைகள் ஆகிய அனைத்திலிருந்தும் விடுதலை- என்பதும் இச்சமூகமாற்றத்தின் வாயிலாகவே பெறப்படும் என்பதும் ஆகும். சோசலிசம் என்பது அனைத்து வகையிலான ஒடுக்கு முறைகளுக்கும் முடிவுக்கட்ட தேவையான நிபந்தனை ஆகும்.

மூலதனம் நூலில் முதலாளித்துவம் குறித்து மார்க்ஸ் செய்துள்ள ஆய்வு முதலாளித்துவ முறைமை குறித்தாகவே உள்ளது. இதைச்சுற்றி இருக்கும், முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறைமைகளுடனான ஊடாட்டம் பற்றியெல்லாம், அவற்றுக்கான முக்கியத்துவம் இருந்தும் அவரால் விவாதிக்கப்படவில்லை. இது வினோதமானதுதான், ஏனெனில் மார்க்ஸ் மூலதனம் நூலை ஆக்கிக்கொண்டிருந்த போதே இந்தியாவின் மீதான பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் தாக்கங்கள் குறித்தும் விரிவான வாசிப்போடு நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் இதழில் தொடர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அவர் ஏகாதிபத்தியத்தை தனது ஆய்வில் இணைக்கவில்லை. காரணம், அவரின் கவனம் முழுக்க மேற்கு ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க புரட்சி நடத்துவதில் குவிந்திருந்ததும், அத்தகைய புரட்சி விரைவான சாத்தியம் என்றும் கருதியதுமே ஆகும். ஆனால் அவர் வாழ்க்கையின் பிந்தைய ஆண்டுகளில் உலகின் பிற பகுதிகள் நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார். மேற்கு ஐரோப்பிய புரட்சிக்கான வாய்ப்புகள் குறைந்ததும் அதற்கு காரணம். இறப்பிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நரோத்னிக் பொருளாதார நிபுணரான என்.எப். டேனியல் சன்னுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு உபரி பெருமளவு மடை மாற்றம் செய்யப்படுவதை பற்றி பேசியுள்ளார்.

துவக்கமே… முடிவல்ல

முதலாளித்துவம் குறித்த மார்க்சின் ஆய்வை துவக்கப்புள்ளியாகவே கருதவேண்டுமேயொழிய அத்தகைய ஆய்வின் இறுதியானதல்ல என்பதே சுருக்கமாகக் கூற வேண்டியதாகும். ஏகாதிபத்தியம் குறித்த ஆய்வினை இணைத்து மார்க்சின் ஆய்வை செழுமை செய்வதும், பிந்தைய நிகழ்ச்சிகளையும் இணைத்து அதை வளர்த்தெடுப்பதுமான இரு கடமைகளும் அவருக்கு பின் வந்த மார்க்சிய ஆசிரியர்களின் தோள்களில் விழுந்துள்ளன. லெனின் இதையே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிரப்புதல்களை செய்யும்போது முதலாளித்துவம் குறித்த மார்க்சின் பல அடிப்படைப் பார்வைகள் இன்னும் கூர்மையாக நிரூபிக்கப்படும். உதாரணமாக, முதலாளித்துவம் தன்னைச் சுற்றியுள்ள சிறு உற்பத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து ஆக்ரமித்து அதனை சீரழித்து அதனை சார்ந்த உற்பத்தியாளர்களை முதலாளித்துவத்தின் செயல்படு உழைப்பாளர் படையில் உள்வாங்காமல் தூக்கியெறிகிறது.

இது முதலாளித்துவ முறைமை ஒரு முனையில் செல்வத்தையும், மறுமுனையில் வறுமையையும் உருவாக்குகிறது என்கிற மார்க்சின் பார்வைக்கு மேலும் வலுகூட்டுகிறது. உண்மையில் மார்க்சின் முன் கணிப்பை மறுத்து, இத்தகைய பாகுபாடு முதலாளித்துவம் முதலில் வெற்றிபெற்ற நாடுகளில் ஏற்படவில்லை என்று பேசுபவர்கள் முதலாளித்துவத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள உலகத்திற்குமான இயங்கியல் உறவை காண மறுக்கிறார்கள் என்பதே உண்மை. மார்க்சின் பார்வைகள் அவரின் மூல எழுத்துக்களையும் “கடந்து ஆய்வுக்குள்ளாகும்போதுதான்” உண்மையில் மேலும் வலுப்படுகின்றன.

மார்க்சின் புரட்சிகரத் திட்டத்திற்கும் பொருந்துகிற உண்மை இது. முதலாளித்துவத்தின் முழுமையை, ஏகாதிபத்தியத்தையும் உள்ளடக்கி நாம் காணும்போதுதான் புரட்சிக்கான வாய்ப்புகளும், சாத்தியங்களும் மிகவும் அதிகமாகின்றன; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் வர்க்க புரட்சியைப்பற்றி மட்டும் நாம் பேசாமல் முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய நாடுகளிலும் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் அடிப்படையில் ஜனநாயக புரட்சியை, சோசலிசம் நோக்கிய கட்டமாக வகுத்தெடுக்க முடிந்துள்ளது. தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை என்ற கருதுகோளை லெனின் முன்வைத்ததற்கான பின்புலமாக, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியை, தாமதமாக தான் அடியெடுத்து வைத்த நாடுகளில் முதலாளித்துவத்தால் நிறைவேற்ற முடியாத இயலாமையே இருக்கிறது.

மேலும் சிறு உற்பத்தியாளர் பொருளாதாரத்தை ஆக்கிரமித்து அவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளி தற்கொலைகளுக்குக் கூட வழிவகுக்கிற சூழல் இன்றைய “நவீன” உலகமய யுகத்திலும் நிலவுகிறது என்பதும், புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கான நியாயத்திற்கு மேலும் வலுகூட்டுகிறது.

தமிழில் : தோழர் க.சுவாமிநாதன்

One thought on “மார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s