தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்


(குரல் : ஆனந்த் ராஜ்)
கட்சித் திட்டம் கூறுவது:

சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பாலான இந்திய மக்கள் பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை, ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் என கருதினர்.புதிய அரசுக்கு தலைமை ஏற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப்புரட்சியின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற மறுத்தது.

சாதி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைக்கு தீர்வு காணப்பட நிலச்சீர்த்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகர மாறுதல் தேவையாகிறது என்று கூறும் கட்சித்திட்டம் பழைய சமுதாய அமைப்பை தூக்கி எறிய தேவையான அடிப்படை வர்க்கப் பிரச்சனையான நிலம், கூலிக்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியம் என்று வரையறை செய்கிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக அரசியல் வாழ்வில் சுயேச்சையான பங்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான நிபந்தனையாகும். ஏற்றத்தாழ்வான நிலையை எதிர்த்த போராட்டமும் சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டமும் சமூக விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியே ஆகும்.
சமூக சீர்திருத்தம் என்பது புரட்சியை நீர்த்துப் போக வைப்பது அல்ல. மாறாக, ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தின் தவிர்க்க முடியாத பகுதி சமூக சீர்திருத்த இயக்கம் என்கிற தெளிவு தேவையாகிறது. புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால்தான் அடுத்தடுத்த கட்டத்தை எய்துவது சாத்தியமாகும் என்ற தெளிவுடன் நம்முடைய பணியின் ஒரு பகுதியாக சமூக சீர்த்திருத்தத்திற்கான இயக்கம் மாற்றப்பட வேண்டும்.

சமூக சீர்திருத்தம் என்றால் என்ன?

சமூக சீர்த்திருத்தம் என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை அகற்றி முற்போக்கு குணாம்சம் கொண்டதாக மாற்றுவதாகும். சமூக சீர்திருத்தம் என்பதன் அடித்தளம் பொருளியல் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது.

பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் நிகழும் போது, மேல் கட்டுமானமான அரசு , சட்டம், மதம், கல்வி, கலை இலக்கியம், குடும்பப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், இவை எந்திரகதியில் நிகழ்வது இல்லை. சமூகம் முற்போக்கான திசைவழியில் முன்னேறுவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களை அகற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது அவசியம். முதலாளித்துவம் வளர்ந்த நாடுகள லும் கூட இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கம் தீயின் தீவிரத்துடன் இயங்க வேண்டியுள்ளது. சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கம் இதுகுறித்து கவலை கொள்ளாது. இன்னும் சொல்லப்போனால், இந்தக் கேடுகளை தனது ஆதிக்கத்திற்கு அனுசரணையாக மாற்றிக் கொள்ளும். சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை இலக்காக கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் இந்தக் கடமையும் சுமத்தப்பட்டுள்ளது.

வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் துவக்கி வைத்த பிரம்ம சமாஜம் வடஇந்தியாவில் தயானந்த சரஸ்வதியால் துவக்கப்பட்ட ஆரிய சமாஜம், மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பூலே நடத்திய இயக்கம், கேரளத்தில் அய்யன்காளி, நாராயணகுரு உருவாக்கிய எழுச்சி, ஆந்திராவின் வீரேசலிங்கம், கர்நாடகத்தின் பசவண்ணா ஆகியோர் சாதியம், பெண்ணடிமைத்தனம் ஆகிய இரண்டுக்கும் எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுவுடைமை இயக்கம் நடத்திய நிலத்திற்கான இயக்கம் மற்றும் உழவர்களின் கிளர்ச்சியின் உள்ளார்ந்த அம்சமாக சமூக சீர்திருத்தமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

வர்ணாசிரம அநீதியை முன்வைத்த வேத மரபுக்கு எதிரான மரபை முன்வைத்த தமிழகம் சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றில் தனித்துவம் பெற்றுள்ளது என்றே கூறலாம். சமூக சீர்திருத்த இயக்கத்தில் முன்னின்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். இன்றளவும் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் அழுத்தமாக வேர் கொண்டுள்ளது. தமிழகத்தைப் புரிந்து கொள்ள, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த, இடது ஜனநாயக அணியை வலுவாக கட்டிட தமிழக சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சமூகமும், வர்க்கமும்

சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் என்று வியந்தோதுகிற போக்கு இருக்கிறது. அந்த சமூகத்தில் சாதி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது என்று கூறுவதெல்லாம் மிகையானவையே ஆகும். இனக்குழு சமூகத்திற்கு அடுத்த நிலையிலான சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகள் இருந்தன. சங்க கால சமுதாயத்தை மேய்ச்சல் சமுதாயமாக மாறியதன் முதல்படி என்பர். பின்னர், நதிக்கரைகளில் வேளாண் சமூகம் உருவானது.துவக்கத்தில் கால்நடைகளுக்காக குழுக்கள் போரிட்ட நிலையில், பின்னர் வேளாண் நில விரிவாக்கத்திற்காக குறுநில மன்னர்கள் போரிட்டனர். வேளாண் சமூகம் வளர்ந்த நிலையில், அடித்தள மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்ததோடு, வர்க்கப் பிரிவினைகளும் தோன்றி விட்டன.

“பருவ வாணத்து படுமலை கடுப்ப
கருவை வேய்ந்த கவின் குடிச்சீறுர்”

என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசைகளில் ஒருபகுதி மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வைக்கோல் வேய்ந்த கூரை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கருமையானது என்று பேசுகிறது பெரும்பாணாற்றுப்படை.

பெரும்பாணாற்றுப்படையின் மற்றொரு பாடல் உழைத்துக் கொடுத்த விவசாயத் தொழிலாளர்கள், வரகரிசியை உண்டு, வயிற்றை நிரப்புகையில், பெரும் நிலப்பிரபுக்கள் வெண்ணை போன்ற அரிசியை பெட்டைக்கோழி வறுவ லோடு சாப்பிடுகின்றனர் என்று கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலமற்ற விவசாயிகள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், நிலமுள்ள வேளாளர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். இது பொருளியல் வாழ்வில் மட்டுமல்ல, சமூக வாழ்விலும் பிரதிபலித்தது.

ஆனால், அதே நேரத்தில், வைதீகக் கொள்கைகளுக்கு எதிரான குரல்களும் சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிக்கின்றன என்பதை மனங்கொள்ள வேண்டும். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு அடுக்கை கடவுளின் பெயரால் வைதீகம் முன்வைக்கிறபோது, துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்கிறார் மாங்குடி மருதனார்.

ஐம்பூதங்களால் ஆனதுதான் இவ்வுலகம் என்று ஆன்மாவை பின்னுக்குத் தள்ளுகிற சிந்தனையும், உடலுக்கு உணவே பிரதானம் என்கிற குரளும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
ஒரு அரசனின் வலிமை படைப்பெருக்கத்தால் அல்ல, அறநெறிகளினாலேயே அளவிடப்படும் என்று மதுரை மருதன் இளநாகனாரும், அரசனே முதல் என்ற மோசிகீரனாரின் பாடலுக்கு எதிராக குடிமக்கள் தான் முதல் என்று சொல்லும் ஒளவையின் குரலையும் சங்க இலக்கியத்தில் கேட்க முடிகிறது.

வைதீக மரபில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற வாய்ப்பே இல்லை. அவ்வாறு கல்வி பெற முயன்றால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. புறநானூற்றில் பாண்டிய நெடுஞ்செழியன், கீழ்க்குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றால், மேல்குடியில் பிறந்தவனும் அவனை சேர்த்துக் கொள்வான் என்று பாடுவது பொதுக் கல்வியின் தேவையைப் பேசுகிறது.

பிறப்பால் மனிதனைப் பிரித்த வைதீக மரபுக்கு எதிராக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறளும், தாவரத்துக்கு ஓர் அறிவு உண்டு என்று அறிவியல் பேசிய தொல்காப்பியமும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் அறைகூவலும், யாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் என்ற செம்புலப் பெயல் நீரார் என்ற புலவரின் சித்தரிப்பும் மனங்கொள்ளத்தக்கவை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே என்ற சிந்தனையும் சங்க இலக்கியப் பாடல்களில் தெறிக்கிறது.

சமண, புத்த மதங்கள்

வேத மரபு என்பது பிரமாணம் எனும் வேள்விச் சடங்கையும், உபநிசத் எனப்பட்ட தத்துவ சிந்தனைகளையும் மையமாகக் கொண்டது. தீயில் சமைத்து சாப்பிடுவதன் பெருமையை உணர்ந்த மனிதன், தீயைப் பாதுகாக்க முயன்றான். அந்தப் பணியே வேள்வியாக மாறியது. புரோகிதர்கள் அதற்கு புனிதம் சேர்த்து, தங்களை வளமைப்படுத்திக் கொண்டனர். யாகம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. இதன் ஊடுருவலை சங்க இலக்கியத்திலேயே காண முடிகிறது.

வேள்வியால் வேளாண்மைக்கும் கால்நடைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. உழைத்து உண்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என்ற இரு பிரிவு உருவானது. சாதியின் பெயரால் இது நியாயப்படுத்தப்பட்டது.

பசுவை பலியிட்டு நடத்தப்பட்ட யாகத்தை தடுத்த ஆபுத்திரன் வேதியர்களால் அடித்து விரட்டப்பட்ட கதையை புத்த மதகாப்பியமான மணி மேகலை பேசுகிறது. நீலகேசி எனும் பெண், தத்துவத்திலும் விவாதத்திலும் சிறந்து விளங்கியதை நீலகேசி எனும் சமண நூல் எடுத்துரைக்கிறது.

வேத மரபுக்கு எதிராகப் புறப்பட்டவையே சமண, புத்த மதங்கள். சாதியத்திற்கு எதிராகவும் கல்வியை பொதுவாக்கவும் இந்த மதங்கள் பெரும் பணியாற்றியுள்ளன.

வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்று புகாரில் வாழும் கண்ணகியை பாடிய இளங்கோவடிகள் மதுரைக்காண்டத்தில் பேரரசனை நோக்கி தேரா மன்னா என அழைக்க வைத்தது சாதாரணமான ஒன்றல்ல. அந்தச் சிலப்பதிகாரம் சமண இலக்கியமாகும்.

பசியைப் பெரும் பாவி என்று பேசும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார், பசி வந்தால், உடல் மட்டுமல்ல, உள்ளப் பண்புகளும் போய்விடும் என்கிறார்.இது சமண இலக்கியம். இதைத்தான் ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும்’ என்றது பின்னாளில் விவேக சிந்தாமணி.

பௌத்த இலக்கியமான மணிமேகலை உலகின் உண்மையான நெறி வாழ்வு எதுவென்றால், கொடுமையான பசியைக் களைவதே என்றும் உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் என்றும் பேசுகிறது.
மலை மீது அழைத்துச் சென்று தன் மனைவியை தள்ளிவிட்டுக் கொல்ல முயன்ற கணவனை, அந்த மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றவர் குண்டலகேசி. தன்னைக் கொல்ல வருபவன் கணவனேயானாலும், தற்காத்துக் கொள்ள அவனைக் கொல்வது கற்பு நிலைதான் என்று குண்டலகேசி கதை பேசுவதும் இவரை சமண, பௌத்த மதங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் சமண, புத்த மடங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. அனைத்து சாதியினருக்கும் கல்வி வழங்க முற்பட்டதால் பின்னாளில், தமிழில் கல்விக்கூடங்களுக்கு பள்ளி என்ற பெயர் இதனாலேயே வந்தது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால், அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட பின்னணியில், சாதி வித்தியாசம் இல்லாமல் சமண, புத்த மதங்கள் கல்வி கொடுத்துள்ளன. வஜ்ரநந்தி என்பவர் மதுரையில் (கி.பி.470) திராவிடச் சங்கம் நிறுவியதாகவும் நீலகேசி, குண்டலகேசி உள்ளிட்ட நூல்கள் தோன்ற இந்த சங்கமே காரணம் என்கிறார் வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை.

எனினும் கி.பி.7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் என்ற பெயரில் எழுந்த சைவ, வைணவ புயலை எதிர்த்து சமண, புத்த மதங்களால் நிற்க முடியவில்லை. வேத மரபு வெகுஜனத் தன்மையுடன் மக்களைக் கவர்ந்தது. சமண, புத்த மதங்களை மட்டுமல்ல, அதைப் பின்பற்றியவர்களையும் கொடூரமாக அழித்தது. மறுபுறத்தில் அன்பே சிவம் என்று ஓதியது. இந்த சமயக் காழ்ப்பில் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் நீராலும், தீயாலும் தின்னப்பட்டன.

பேரரசுகளின் துணையோடு சைவ, வைணவ மதங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. வர்ணாசிரமம் மற்றும் யாக முறைக்கு எதிரான புத்த, சமண மதங்களின் தாக்குதலை சமாளிக்க பெரியபுராணம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை உருவாக்கினர். ஆவுரித்து தின்றாலும் அவரும் இறைவனடி சேர முடியும் என்று ஒருபுறத்தில் கூறினாலும் மறுபுறத்தில் சதி நெருப்பில் நந்தன் வெந்தான். வர்ணாசிரமப் பிடியை விட்டு விடாமலே பெரும்பகுதி மக்களை வைதீக மதத்திற்குள் இழுக்க முயன்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். சைவ, வைணவ மதப்பிரிவுகள் பக்தி இயக்கத்தை வெகுஜன மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றனர். இதற்கு இசை, கலை போன்றவற்றை வலுவாக பயன்படுத்தினர். பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும் சித்தரித்தனர். இதன் மூலம் இழந்த செல்வாக்கை மீட்டனர். அதே நேரத்தில், நிலவுடமை உறவுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

வணிகர்கள் சமண மதத்தை ஆதரித்ததால், வேளாண் சார்ந்த வேளாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேளாண் நிலப்பிரபுக்கள் சமண மதத்திலிருந்து பல்லவ, பாண்டிய மன்னர்களை சைவ மதத்திற்குள் இழுத்தனர். பிரம்மதேயம், தேவதான முறைகள் மூலம் பிராமணர்கள் மற்றும் வேளாளர்கள் நிலங்களை மீண்டும் கைப்பற்றினர். குத்தகை விவசாயிகளிடம் கொடூரமான வரி வசூலிக்கப்பட்டது. திருவையாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1429 ஆம் ஆண்டு கல்வெட்டில் அளவுக்கு அதிகமான வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து இடங்கை, வலங்கை சாதியினர் கலகம் செய்ததாகவும், வரி விதிப்பில் மாற்றம் செய்யும் போது தங்களையும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. தென்ஆற்காடு மாவட்டம் திருவாடி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1446 ஆம் ஆண்டு கல்வெட்டில், வரிக் கொடுமைக்கு பயந்து விவசாயிகள் பெருமளவு இடம்பெயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வரிக் கொடுமையை எதிர்த்து கோவில்களின் மீது ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த செய்திகளும் உண்டு.

சித்தர்களின் கலகக்குரல்

சைவம், வைணவத்தால் சமண, புத்தம் ஒடுக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டில் சித்தர்கள் புறப்பட்டனர். சித்தர்கள் சமண மரபினை சேர்ந்தவர்கள். கடந்த காலம் என்பது முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அதன் மிச்சசொச்சம் ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படும். சமணத்தின் வேத மறுப்பினை சித்தர்கள் வெளிப்படுத்துவதாக அருணன் கூறுகிறார்.
சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டு சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், குறுமுனிவர், அழுகணிச் சித்தர், நந்தீஸ்வரர், ராமதேவர், கொங்கணவர், ரோமரிஷி, திருமூலர், கருகூரார், பொதிகைச் சித்தர் என 17 சித்தர்களோடு சேர்த்து காகபுசுண்டர் என 18 சித்தர்கள் பட்டியலிடப்படுகின்றனர். சிவவாக்கியர், பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி ஆகியோர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது.

ஆதிச் சித்தர் என்று அழைக்கப்படும் சிவவாக்கியர், ஆதி உண்டு, அந்தம் இல்லை அன்று நாலு வேதமில்லை என முன்னாளில் வேதமில்லை என்கிறார். வேதத்தை மறுத்தவர் ஆன்மா குறித்த கதையாளர்களையும் விட்டுவைக்கவில்லை.
“கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை, இல்லையே”
என மறுபிறப்பு இல்லை என்று புரோகிதத் தின் அடிமடியிலேயே கைவைக்கிறார்.

“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ”
என உருவ வழிபாட்டை மறுக்கிறார். தேரில் சிலையை வைத்து தேர்த் திருவிழா நடத்துவதை செம்பை வைத்து இழுப்பதாக கூறுகிறார். நாலு வேதம் ஓதுபவர்களை பாவிகள் என்று சபிக்கிறார்.
என் சாமி, உன் சாமி என்று மோதிக் கொள்வதையும் சாடியுள்ளார் சிவவாக்கியர்.

“பிறந்தபோது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்தவோ பிறங்கு நாற் சடங்கலோ
மறந்த நாலு வேதமும் மனத்துலே உதித்தவோ
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரே”
என பிராமணியத்தின் மீது நேரடியாகத் தாக்குதல் தொடுத்து பிறக்கிறபோதே பூணூல் குடுமி வேதத்துடன் பிறந்தீர்களா எனக் கேட்கிறார்.

புலால் உணவு இன்றைக்கும் பிரச்சனையாக உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என இன்றைக்கும் கூட கட்டமைக்கப்படுகிறது. சிவவாக்கியர் மீன் இறைச்சியை சாப்பிடாவிட்டாலும், மீன் இருக்கும் நீரில் தானே குளிக்கிறீர்கள், அதைத்தானே குடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி, மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்; மாட்டிறைச்சி அல்லவா மரக்கறிக்கு இடுவது என்று கேள்வி எழுப்புகிறார். பிராமணர்களை மட்டுமல்ல, சைவம் பேசிய வேளாளரையும் மூடர்கள் என்று சாடியுள்ளார் சிவவாக்கியர். இறைச்சி, தோல், எலும்பிலே அந்தந்த சாதிக்கென இலக்கம் இடப்பட்டிருக்கிறதா என்றும் சிவவாக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் பெரும்பாவம், தீட்டு என்று கூறு வதையும் சிவவாக்கியர் அன்றைக்கே கண்டித்துள்ளது தனிச்சிறப்பு. போலி ஆசாரங்களையும், கோவில் உருவ வழிபாட்டையும், சாதி ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து வலுவான குரலாக சிவவாக்கியரின் குரல் உள்ளது.
உலக வாழ்வை வெறுத்து, பெண்களை இழிவாகக் கருதுகிற பார்வை பட்டினத்தாரிடம் உண்டு என்றாலும் வாழ்க்கை நிலையில்லாதது என்றபோதும், அதையே நினைத்துக் கொண்டு வாழாமல் போவது மரணத்தைவிட கொடுமையானது. மரணத்திற்கு முந்தைய மரணம் செயலற்ற தன்மைக்கு கொண்டுபோய் விடும் என்று பேசியுள்ளார்.
பத்திரகிரியார் என்ற சித்தர், “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும், புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்” என்று கேட்கிறார். அதாவது, உளியால் செதுக்கப்பட்ட சாமி சிலை, புளிபோட்டு விளக்கப்பட்ட சிலை யெல்லாம் எப்போது உண்மைப் பொருளாகும் என கேட்டுள்ளார்.

சாங்கியம் போதித்த ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின்படி, சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலத்தில் என்றும் கேட்கிறார்.
இன்னும் ஒருபடி மேலே போகிறார் பாம் பாட்டிச் சித்தர்.
“சதுர்வேதம், ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம், புராணம், கலை சாற்றும் ஆகமம்
விதம் விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே”
என வேதம், சாத்திரம், ஆகமம் அனைத்தும் வீணே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சாதி எதிர்ப்பின் உச்சத்திற்கு செல்லும் பாம்பாட்டிச் சித்தர் சாதி மறுப்பு திருமணத்தையும் ஆதரித்துள்ளது போற்றத்தக்கது.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
வேண்டாத மனையினில் உறவு செய்வோம்”

என்பது பாம்பாட்டிச் சித்தரின் பெருமை குரல். சாதிக்கொரு வீதி வந்துவிட்ட 15 ஆம் நூற்றாண்டில் எல்லா வீதிக்கும் செல்வோம் என்பதும் விலக்கி வைக்கப்பட்ட வீடுகளிலும் மண உறவு கொள்வோம் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது.
குதம்பைச் சித்தர் ஏழை மக்களுக்கு வீடு இல்லாதபோது, தேவாரம் எதற்கு என கேட்கும் வகையில், “தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை, தேவாரம் ஏதுக்கடி – குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி” என்று கேட்டுள்ளார். சமஸ்கிருத மந்திரங்களை வெறும் சத்தங்கள் என்றும் புறந்தள்ளுகிறார்.

சித்தர்கள் மரபு ஒரு இயக்கமாக மலராமல் போனாலும், நிலப்பிரபுத்துவ பின் புலத்தினாலான சாதியம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை சாடிய மரபு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் சமூக சீர்திருத்தவாதிகளால் எடுத்தாளப்படுவதாக சித்தர்களின் பாடல்கள் உள்ளன.

சமண, புத்த மதங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், பிராமணிய மதத்தின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள், வழிபாட்டில் சமத்துவத்தை கொண்டிருந்த இஸ்லாமிய மதத்தின் பெருமளவில் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அரபு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் அல்ல.

சமண மதத்தில் இருந்தவர்களில் ஒருபகுதியினரும் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளனர். இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படுகிற சூபியிசம் தமிழகத்திலும் வேர் கொண்டது. சித்தர்கள் பாணியிலான சூபி அறிஞர்களின் பாடல்கள் மற்றும் போதனைகள் சமத்துவத்தை முன்னிறுத்துபவை. இதில் சமூக சீர்திருத்த நோக்குகளை காண முடியும்.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூர், பாளையக்காரர்களின் கைக்கு வந்தது. மைசூர் ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹை தர் அலி ஆட்சியை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, திப்பு சுல்தான் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும் விளைச்சல் இல்லாத நிலங்கள் அரசால் எடுக்கப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. அவரது ஆட்சியில் அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் விற்பது தடை செய்யப்பட்டது.

ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஒருவரின் வருவாயில் ஒரு சதவீதம் மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும் என திப்புவின் அரசு உத்தரவிட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோல்சேலை அணிய தடை விதிக்கப்பட்டு, பெண்கள் மேலாடையின்றி இருந்தனர். இதை மாற்ற திப்புவின் அரசு உத்தரவிட்டது. இது மரபு என்று வாதிடப்பட்ட நிலையில், மரபென்றால் மனமாற்றம் செய் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இராமானுஜரும் சீர்திருத்தமும்

ஆதி சங்கரரின் அத்வைதம், மத்துவாச்சாரி யாரின் துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத் வைதம் ஆகியவை தத்துவங்களாக அறியப் பட்டாலும் தனித்தனி இயக்கங்களாகவும் வளர்ந்தன. இவர்களில் ஒப்பீட்டு அளவில் இரா மானுஜர் சீர்திருத்த நோக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் 1017 ஆம் ஆண்டு பிறந்து 1137 ஆம் ஆண்டு மறைந்ததாக கூறப்படுகிறது.
வைணவத்தை பரப்பியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களை இவர் ‘திருக்குலத்தார்’ என்று பெயரிட்டு அழைத்தார். இதைப் பின்பற்றிய காந்தி பின்னாளில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அழைத்தார். வைணவத்தை சீர்திருத்தம் செய்து மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரின் கட்டளையை மீறி திருக்கோஷ்டியூர் கோவில் மதில் சுவர் மீது ஏறி நின்று சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சொர்க்கம் செல்ல ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை இவர் கூறினார். உயர்சாதியினர் மட்டுமே சொர்க்கம் செல்ல, தாம் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை என்று அவர் இவ்வாறு செய்தாராம். வழிபாட்டில் வடமொழி ஆதிக்கம் செலுத்திய நிலையில், தமிழையும் முன்னிறுத்தியதும், பெண்கள் வழி பாட்டில் பங்கேற்கும் வகையில் சில நெகிழ்வுத் தன்மையை உருவாக்கியதும் இராமானுஜரின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது. வைணவத்தில் தென்கலைப் பிரிவை உருவாக்கிய இவர், வைணவத்தின் பரவலாக்கத்திற்கே உழைத்தார் என்ற போதும், அதில் சில சமூக சீர்திருத்த கண்ணோட்டம் இருந்தது. பல்வேறு சாதியினரும் நாமம் போட்டு, பூணூல் அணிவித்து, அந்தணர் என்று இவர் அறிவித்ததாகவும் தகவல் உண்டு.

கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பே கிறிஸ்துவ போதகர்கள் தங்களுடைய பணியை இந்தியாவில் செய்து வந்துள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி நோபிளி, ஜான் டி பிரிட்டோ, புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த சீகன் பால்கு மற்றும் ஹென்றி புளூட்ச் ஆகியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றினர். மதம் மாற்றுவதே அவர்களது நோக்கமாக இருந்த போதும், மக்களிடம் இருந்த சாதிப் பிரிவுகள் அவர்களது கவனத்தை ஈர்த்தது.

புராட்டஸ்டண்ட் பிரிவினர் 1858இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய போதகர்கள் மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கை சாதியை வன்மையாக கண்டிக்கிறது.

“சாதி என்பது அடிப்படையில் ஒரு மத நிறுவனமாகும். இது இந்தியாவின் பயங்கரமான கேடாகும். எவ்வித தயக்கமுமின்றி வன்மையாக, வெளிப்படையாக இதை கண்டிக்க வேண்டியது அனைத்து போதகர்கள் மற்றும் திருச்சபையினரின் கடமையாகும். சாதியின் பெயரால் ஒரு பகுதி கிறிஸ்தவர்களோடு மண உறவு கொள்ள மறுக்கும் எவரும் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்கிற தகுதியுடையவர் அல்ல”.

1727 – இல் தரங்கம்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த புராட்டஸ்டண்ட் பாதிரியார்கள் தயாரித்த அறிக்கையில், “கிறிஸ்துவ தன்னடக்கம், ஒற்றுமை என்பவற்றிற்கு அக்கம்பக்கமாக சாதி ஒழுங்கு முறையும் நீடிக்க அனுமதிக்கலாம் என்றும் பறையர்கள் மற்றும் சூத்திரர்களை ஒரு கஜம் தள்ளி உட்கார வைக்க அனுமதிக்கலாம் என்றும் நீண்ட விவாதத்திற்கு பிறகு முடிவு செய்தோம். ஆனால், பிரசாதம் வழங்குவதில் வேறுபாடு காண்பிக்கப்படவில்லை.”

பிராமணிய அடிப்படையிலான சாதியம் கிறிஸ்துவத்தையும் விட்டு வைக்கவில்லை. உயர் சாதியினரை ஈர்க்க முயன்று பெருமளவு வெற்றி பெறாத நிலையில், அடித்தட்டு மக்களை நோக்கி அவர்களது கவனம் திரும்பியது. 1850க்கு பிறகு புராட்டஸ்டண்ட் பிரிவு சாதி வேறுபாட்டை திருச்சபை விதிகளுக்கு எதிரானதாக மாற்றியது.
19 ஆம் நூற்றாண்டில் கூட தமிழகத்தில் அடிமைகள் இருந்தனர். கிறிஸ்துவ போதகர்கள் இதுகுறித்து, இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்த்ததால், 1843 – இல் அடிமை ஒழிப்புச் சட்டம், மற்றும் 1861-இல் இந்தியன் பீனல் கோடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அடிமை முறை முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றபோதும், சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டதே குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன கல்வி முறையை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்துவ போதகர்களே. 1830ல் துவங்கிய கல்வித்துறையில் கவனம் செலுத்தினர். 1854-இல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை காரணமாக முதன்முறையாக, “பொதுக் கல்வித்துறை” உருவானது. இந்தக் கல்விக் கொள்கையின் காரணமாகவே சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் உருவாகின.

விஜயநகரத்தில் அமைந்திருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ராமானுஜாச்சாரி 1910இல் இவ்வாறு எழுதியுள்ளார், “கிறிஸ்துவர்களினால் பெரும் பலன் அடைந்தவர்கள் பஞ்சமர்களே. பஞ்சமர்களுக்கு ஆதரவாக சில கிறிஸ்துவ போதகர்கள் துவக்கிய போராட்டமே இவர்களின் பரிதாப நிலை குறித்து மாகாண அரசின் கண்களை திறந்தது. அவர்களுக்கான தனிப்பள்ளிகளை துவக்குமாறு அரசே செய்தது. பஞ்ச காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு கஞ்சி ஊற்றி காப்பாற்றுவதிலும் கிறிஸ்தவ போதகர்கள் அதிக தொண்டாற்றியுள்ளனர்.

நோயை பாவத்துடன் போட்டு, குழப்பி, மக்களை பயமுறுத்தி வைத்திருந்தனர். இதுகுறித்து, கேத்ரின் மோயா என்ற ஐரோப்பிய ஆய்வாளர் கூறுகையில், “ஏதாவது ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், கடவுளே அந்த நோயை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டதாக கருதுகிறார்கள். இந்து சமூகத்தில் உள்ள பெண்கள், ஆண்களைவிட அதிக மூட வழக்கங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். யாருக்காவது நோய் வந்துவிட்டால், மருத்துவத்தை நாடுவதில்லை. குலதெய்வத்திற்கு பூஜை போடுகிறேன், வீரனுக்கு பொங்கல் இடுகிறேன், காளிக்கு அபிஷேகம் செய்கிறேன், காட்டேரிக்கு ஆடு வெட்டி நெய் பொங்கல் இடுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொள்கின்றனர்” என்று கூறியுள்ளார். நவீன மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கிறிஸ்துவ போதகர்கள் பணியாற்றியுள்ளனர்.

ஆனால், அதே நேரத்தில் சாதியம், கிறிஸ்துவத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 35 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியிருந்தனர். இந்து மதத்தில் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் 26 சதவீதமும் தலித் மக்கள் 31.3 சதவீதமும் உள்ளனர். ஆனால், கிறிஸ்துவ மதத்தில் உயர்சாதியினர் 33.3 சதவீதமும் தலித் மக்கள் 41.8 சதவீதமும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க சபைகளில் 65 சதவீதம் தலித்துகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாதியத்தோடு கிறிஸ்துவமும் சமரசம் செய்து கொண்டு தலித்துகள் மற்றும் நாடார்களுக்கு தனி இடுகாடு, தனி வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து பெரும் கலகங்களும் நடந்துள்ளன, நடந்தும் வருகின்றன.

உதாரணமாக, நெல்லை மாவட்டம் வடக்கன் குளம் கத்தோலிக்க தேவாலயத்தில், நாடார்கள் மற்றும் தலித்துகளுடன், ஒன்றாக அமர்ந்து வேளாளர் மற்றும் உயர்சாதியினர் பிரார்த்தனை செய்ய மறுத்து கலகம் செய்ததால், நூதனமான நுழைவு வாயில் உருவாக்கப்பட்டது. அந்த தேவாலயம் இதனால் டவுசர் சர்ச் என்று அழைக்கப்பட்டது. அதாவது, உயர்சாதியினர் வர ஒரு வழி, பிற சாதியினர் வர ஒரு வழி என இரண்டாக டவுசர் வடிவில் கட்டப்பட்டது. போதகர் எந்த வழியில் வருவது என்று பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இடையில் உள்ள மூன்றாவது வழியாக வந்து பிரார்த்தனையை எல்லோருக்கும் பொதுவாக ஏறெடுத்தார்.

நெடுங்காலத்திற்கு பிறகு இந்த டவுசர் வடிவு கிழிக்கப்பட்டது.
பால்ய விவாஹம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை உள்ளிட்ட பல்வேறு சமூக கேடுகளை சட்டத்தின் மூலம் தடை செய்வதற்கும் கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு பயன்பட்டுள்ளது.
வைகுண்டசாமி, வள்ளலார் போன்றவர்கள் மத வரம்புக்குள் நின்று கொண்டே வைதீக மரபை எதிர்த்துப் போராடியதோடு சாதியம், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்திற்கு எதிர்வினையாக 18-ஆம் நூற்றாண்டில் ராஜராம் மோகன்ராயால் உருவாக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பும் தியோசாபிகல் சொசைட்டி அமைப்பும் சமூக சீர்திருத்தத் துறையில் சில பணிகளைச் செய்துள்ளது.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக சீர்திருத்த இயக்கமும் முகிழ்ந்தது. தீவிரவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் இந்து பழமைவாதத்தை முன்னிறுத்துபவர்களாகவும், மிதவாதிகள் என்று கூறப்பட்டோர் சமூக சீர்திருத்தத்துறையிலும் கவனம் செலுத்துவர்களாகவும் இருந்தனர்.

மகாகவி பாரதியார், முன்சீப் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவய்யா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் வழியே சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் வெடித்து வெளிவந்தன.
அயோத்திதாசர் தமிழக சமூக சீர்திருத்தத் துறையில் தனித்த கவனம் பெறுபவர். சாதியத்திற்கு எதிராகவும், அனைத்து மக்களுக்கும் கல்வி கேட்டும் அவர் நடத்தியுள்ள போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதே வழியில் இரட்டை மலை சீனிவாசனின் பணியும் அமைந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறி பெரியார் தொடக்கிய சுயமரியாதை இயக்கம் கடவுள் என்ற வரம்புக்கு வெளியே நின்று சமூக சீர்திருத்தத்தை அழுத்தமாக முன்வைத்தது. அதன் தாக்கம் இன்றைளவும் தமிழகத்தில் உள்ளது. முன்னதாக நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம், மதிய உணவுத்திட்டம் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை.
தேவதாசி முறையை எதிர்த்து மூவலூர் இராமிர்தம் அம்மையாளர் உள்ளிட்டோர் நடத்தியுள்ள கருத்தியல் களப்போராட்டங்கள் காத்திரமானவை.

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் தோன்றி வளர்ந்த நிலையில் சமூக சீர்திருத்த பிரச்சாரமும் போராட்டமும் அதன் இயல்பான பகுதியாக அமைந்தன. சிங்காரவேலர் இந்தத் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறார்.

One thought on “தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s