இந்தியா விடுதலை பெற்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அது கடந்து வந்த பாதை, தற்போது அது எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை விவாதிக்கும் வகையில் இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன.
தோழர் டி.கே. ரங்கராஜன் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், தோழர் உ.வாசுகி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றியும், தோழர் எஸ். கண்ணன் இந்திய அரசியலில் ஜனநாயக நெறிமுறைகளின் இன்றைய நிலைமை குறித்தும், தோழர் க. சுவாமிநாதன் இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் உருவாகியுள்ள தலைகீழ் மாற்றங்கள் குறித்தும் தங்களது கட்டுரைகளில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
அதைப் போன்றே பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய சீரழிந்த நிலையின் பின்னணி குறித்தும், தோழர் ச. லெனின் இன்றைய கல்வித் துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்தும், தோழர் அன்வர் உசேன் இந்திய ஆட்சி நிர்வாக அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களின் தாக்கம் குறித்தும் விவரித்துள்ளனர்.
இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு ஆளுநர்களின் செயல்பாடு எவ்வாறு தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வந்துள்ளது குறித்த விவாதங்களை முன்வைத்து ‘ஃப்ரண்ட்லைன்’ இதழில் சமூக ஆய்வாளர் அனுஸ்ரீ எழுதியிருந்த கட்டுரையைத் தழுவி தோழர் வீ. பா. கணேசன் எழுதிய கட்டுரையும் இந்த இதழில் வெளியாகிறது.
தோழர் தூயவன் ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி லெஃப்ட் வேர்ட் பதிப்பகம் வெளியிட்ட ‘புரட்சி! 1917-ல் லெனின்’ என்ற ஆங்கில நூலின் முக்கியத்துவம் குறித்து எழுதியுள்ள கட்டுரையும், இந்த இதழில் வெளியாகின்றன.
தஞ்சை மாவட்ட விவசாய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் பி.எஸ். தனுஷ்கோடி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தோழர் ஐ.வி. நாகராஜன் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரையும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது.
மார்க்சிஸ்ட் இதழின் வாசகர்களும், வாசகர் வட்டங்களும் இதழ் குறித்து தொடர்ந்து விவாதித்து ஆசிரியர் குழுவின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுகிறோம். மார்க்சிஸ்ட் சந்தாக்களை உரிய நேரத்தில் புதுப்பிப்பது பற்றியும் வாசகர் வட்டங்களும் வாசகர்களும் உரிய கவனம் செலுத்தவும் வேண்டுகிறோம். உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளுமே மார்க்சிஸ்ட் இதழை மேலும் சிறப்பாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல உதவும்.
– ஆசிரியர் குழு
Leave a Reply