வெங்கடேஷ் ஆத்ரேயா
விடுதலைப் போராட்டத்தில் பெரும் திரளாய் பங்கேற்ற விவசாயிகளும் தொழிலாளர்களும் இதர உழைப்பாளி மக்களும் நாடு சுதந்திரம் அடைந்தபின் பொருளாதாரத் துயரங்கள் களையப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், சுதந்திர இந்தியா தனது 70 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வேளையில் நிலமையோ வேறாக உள்ளது.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேளாண், தொழில், சேவை என்று அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியும் உற்பத்திசக்திகளும் அதிகரித்துள்ளன. பல புதிய, அதி நவீன தொழில் நுட்பங்கள் களப்பயன்பாட்டில் உள்ளன. 1950களில் ஆண்டுக்கு சுமார் 5 – 5.5 கோடி டன் என்று இருந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி இப்பொழுது 27 கோடி டன்னையும் தாண்டியுள்ளது. வேளாண் உற்பத்தியில் இயந்திரங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. பல நவீன தொழில்கள் அறிமுகமாகியுள்ளன. விண்வெளியில் செயற்கை கோள்களை செலுத்தும் திறன் இந்தியாவிற்கு உள்ளது. அணுகுண்டு உற்பத்தி முதல் அறுவை சிகிச்சைத்துறை வரை பரந்துபட்ட வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. எனினும், மறுபுறம் சாதாரண உழைப்பாளி மக்கள் வாழ்வில் துயரங்கள் தொடர்கின்றன. கிராமங்களில் நவீன வேளாண்மை பரவியுள்ள போதிலும் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இதனால் குறிப்பிடத்தக்க பயன் இல்லை. கிராமப்புறங்களில் நிலம் இல்லாத குடும்பங்களின் விகிதம் பெரிதும் கூடியுள்ளது. இப்போக்குகளால் உடல் உழைப்பை நம்பி வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவர்களுக்கும் சரி, படித்தவர்களுக்கும் சரி, கிராமப்புற பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. நகரங்களில் நிகழ்ந்துவரும் தொழில் மற்றும் சேவை துறை வளர்ச்சியும் வேலை வாய்ப்புகளை பெருக்கவில்லை. இருபது ஆண்டுகளாக மேலும் மேலும் தீவிரம் அடைந்துவரும் விவசாய நெருக்கடியும் பெருமளவிலான வேலை இன்மையும் தான் இன்று மக்கள் சந்திக்கும் பொருளாதார சூழலின் மிக முக்கிய அம்சங்கள்.. நிலமை கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிதும் மோசமாகியுள்ளது. இக்கட்டுரையில் இன்றைய நிலமைக்கான காரணங்கள் எவை என்று பார்ப்போம்.
1950 முதல் 1990 வரையிலான காலம்
நாடு விடுதலை பெற்ற பொழுது ஏகாதிபத்திய அமைப்பு பலவீனமாகியிருந்தது, சோசலிச முகாம் வலுவாக உருவாகிக் கொண்டிருந்தது, உலகெங்கும் தேசவிடுதலை போராட்டங்கள் வெற்றி பெற்று, உலகளவில் காலனி அமைப்பு தகர்ந்து கொண்டிருந்தது. இந்தியா ஓரளவிற்கு சுயேச்சையான பாதையில் வளர இந்த நிலைமை சாதகமாக இருந்தது. மறுபுறம், இந்தியாவில் இடதுசாரிகள் தலைமையில் விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள் போராட்டங்கள், எழுச்சி மிக்க தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. இத்தகைய பன்னாட்டு, உள்நாட்டு சூழல் நவீன பொருளாதார வளர்ச்சியை உடனடி அரசியல் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி தந்த வெளிச்சத்தில் இந்திய அரசும் ஐந்தாண்டு திட்டங்களை அமலாக்கியது. ஆனால் இத்தகைய திட்டமிடல் தனியார் லாப நோக்கத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ அமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்டே நிகழ்ந்தது. மேலும் பெருமுதலாளிகள் தலைமையில், முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் வர்க்க நலன்களை பாதுகாக்கும் தன்மை கொண்டதாக இந்திய அரசு இருந்ததால் வளர்ச்சியின் தன்மையும் உழைப்பாளி மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. எனினும், காலனி ஆதிக்க காலத்தில் நிலவிய பொருளாதார தேக்கம் உடைபட்டது. அரசு மேற்கொண்ட கணிசமான பொதுத்துறை முதலீடுகள், ஒருவரம்பிற்கு உட்பட்ட நிலச் சீர்திருத்தங்கள், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி ஆகிய கொள்கைகளின் அமலாக்கத்தால் இந்தியக் குடியரசின் முதல் முப்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 முதல் 3.5% சதவீத வேகத்தில் தேச உற்பத்தியின் மதிப்பு உயர்ந்தது. தொழில் வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதத்தை சில ஆண்டுகளில் எட்டியது. சராசரியாக 5 -6 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தொழில், நிதி, கல்வி, கட்டமைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் நிகழ்ந்தது. 1951 இல் 16 சதவிகிதமாக இருந்த எழுத்தறிவு நிலை 1981 இல் 40 % ஆனது.. 1947-50 காலத்தில் உயிருடன் பிறக்கும் 1,000 சிசுக்களில் 150 குழந்தைகள் ஒருவயதை எட்டும் முன்பே இறந்துவிடும் நிலை இருந்தது. இதிலும் 1950-80 காலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் வளர்ச்சி ஒருபக்கம் நிகழ்ந்தாலும் மறுபக்கம் முரண்பாடுகளும் அதிகரித்தன. நில உறவுகளில் மிகக் குறைவான அளவில்தான் மாற்றம் நிகழ்ந்தது. நிலக்குவியல் நீடித்தது. கிராமப்புற நில உறவுகளில் பெரிய மாற்றம் ஏற்படாததால் நகர்ப்புற வளர்ச்சியும் சிக்கலுக்கு உள்ளாகியது. வளர்ச்சிக்கான வளங்களை செல்வந்தர்கள் மீதும் கார்ப்பரேட்டுகள் மீதும் வருமான வரி, சொத்து வரி ஆகியவை மூலம் திரட்டுவதற்குப் பதில் முதலாளித்துவ நிலப்ரபுத்துவ அரசு மக்கள் மீது கடுமையான மறைமுக வரிகள் (கலால் வரி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான சுங்க வரிகள் போன்றவை) விதித்து வளங்களை திரட்ட முற்பட்டதும் நிலக்குவியல் உடைக்கப்படாததும் உள்நாட்டு சந்தையின் வளர்ச்சியை குறைத்தது.1960களின் பிற்பகுதியில் துவங்கி 1980 வரை தொழில் மந்தம் நிலவியது,
1980-1990: தலைகீழாக மாறிய உலகம்
இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா விடுதலை பெற்ற பொழுது சோசலிசம் ஏறுமுகமாகவும் ஏகாதிபத்தியம் பலவீனம் அடைந்தும் இருந்தன. ஆனால் 1980களில் நிலமை தலைகீழாக மாறியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் தொடர்ந்து 30 ஆண்டுகள் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி பன்னாட்டு கம்பனிகளிடம் நிதிமூலதனம் குவிந்திட வழி செய்தது. இம்மூலதனம் உலகெங்கும் தங்கு தடையின்றி லாபம் ஈட்ட வாய்ப்புகளை உருவாக்க மேலை நாடுகள், ஐ எம் எப், உலக வங்கி அமைப்புகளையும் பின்னர் உலக வர்த்தக அமைப்பையும் பயன்படுத்தின. மேலை நாடுகளில் 1970களின் பிற்பகுதியில் கடும் மந்த நிலையில் மேலை நாட்டுப் பொருளாதாரங்கள் சிக்கின. இவற்றில் இருந்து மீள, வளரும் நாடுகளின் சந்தைகளை கைப்பற்ற மேலை நாடுகள் முனைந்தன. தங்களிடம் குவிந்திருந்த நிதி மூலதனத்தை பன்னாட்டு நிதி சந்தைகளில் உலாவ விடுவதன் மூலம் வளரும் நாடுகளையும் கடன்வலையில் சிக்க வைப்பதில் மேலை நாடுகள் வெற்றி பெற்றன. மறுபுறம் இத்தகைய கடன்களைப் பெற்று, கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டு ஓரளவு வேகமான பொருளாதார வளர்ச்சி அடைய முடியும் என்று கருதி களம் இறங்கிய பல வளரும் நாடுகள், சிறிது காலத்திற்கு அவ்வளர்ச்சியை எட்டினாலும், விரைவிலேயே கடன் வலையில் சிக்கின. இந்தியாவின் கதையும் இதற்கு விதிவிலக்கல்ல. 1980களில் அரசு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் கடன்வாங்கி உற்பத்திவளர்ச்சியை வேகப்படுத்தியது. ஏற்கெனவே ஆண்டுக்கு 3-3.5% என்றிருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 1980களில் 6%-ஐ எட்டியது. ஆனால் விரைவில் நாடு கடன்வலையில் சிக்கியதாகவும் திவாலாகும் நிலையில் உள்ளதாகவும் இதனை தவிர்க்க உலகவங்கி மற்றும் ஐ எம் எப் கடனுதவி பெறுவதுடன் அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்றே ஆகவேண்டும் என்றும் சொல்லி 1991இல் ஆளும் வர்க்கங்கள் தாராளமய கொள்கைகளை தீவிரப்படுத்தின.
இதில் இன்னொரு அம்சமும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். தங்கள் நெருக்கடிக்கு தீர்வுகாண தத்தம் நாடுகளில் தொழிற்சங்க இயக்கங்களையும் பன்னாட்டு அரங்கில் சோசலிச முகாமையும் வலுவிழக்கச்செய்வது மிக அவசியம் என்பதை ஏகாதிபத்திய நாடுகள் நன்கு புரிந்து வைத்திருந்தன. அமெரிக்கா தலைமையில் அவர்கள் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளாலும் சோசலிச நாடுகளில் ஆளும் கட்சிகளின் தவறுகளாலும் 1980களின் இறுதியில் சோசலிசம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், மிக முக்கியமாக சோவியத் ஒன்றியத்திலும் வீழ்த்தப்பட்டது. இதுவும் இந்திய ஆளும் வர்க்கம் மேலை நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ள இயலாமல் தாராளமய கொள்கைகளை ஏற்று தீவிரமாக அமலுக்குக் கொண்டுவந்ததற்கு ஒரு முக்கிய காரணம்.
1991க்குப்பின்
கடந்த 27 ஆண்டுகளாக தாராளமய கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் தீய விளைவுகளைப் பற்றி இதே மார்க்சிஸ்ட் இதழில் பல கட்டுரைகள் வந்துள்ளன. இதில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜக அரசு காலம் மிகவும் மோசமான, ஆபத்தான கொள்கைகளின் தீவிர அமலாக்கத்தைக் கொண்டது. அதற்குள் போகும் முன்பு, தாராளமய காலத்தின் கொள்கைகளின் பொதுவான தாக்கத்தை சுருக்கமாக பார்ப்போம். இக்காலத்தின் சராசரி ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 1980களில் இருந்த அளவான 6-6.2% என்ற அளவில்தான் உள்ளது. “ தாராளமய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பெருமளவிற்கு தனியார் மூலதனம் களம் இறக்கப்படும், அதனால் வேலை வாய்ப்புகள் பெருகும், பொருளாதார வளர்ச்சி பாய்ச்சல் வேகத்தில் நிகழும், வறுமை மறைந்து விடும்” என்று வலுவாக முன்வைக்கப்பட்ட ஆளும் வர்க்கங்களின் கதையாடல் இன்று கந்தலாகி நிற்கிறது என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். வளர்ச்சி ஏற்பட்டுள்ளது உண்மைதான்; ஆனால் அது 1980களில் நிகழ்ந்த அளவிலேதான் தொடர்கிறது. இந்த வளர்ச்சி வேலை வாய்ப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் பெருக்கவில்லை. வேலையின்மை விகிதம் கூடியுள்ளது. நாட்டின் உழைப்புப்படையில் பாதிப்பேர் விவசாயம் சார்ந்தே உள்ள நிலையில் வேளாண் நெருக்கடி 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் உயிரைக் குடித்தது மட்டுமல்ல, கணிசமான பகுதி சிறு,குறு விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் நட்டம்தான் ஏற்படுகிறது என்று கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்றுமதி பெருகும்; அன்னியச்செலாவணி பிரச்சினை ஏற்படாது என்றும் தாராளமயவாதிகளின் கதையாடல் கூறியது. இன்று அந்த வாதமும் தவிடுபொடியாகி நிற்கிறது. பன்னாட்டு அரங்குகளில் 2008-ல் உலக முதலாளித்துவத்தில் வெடித்த நிதி மற்றும் பொதுப் பொருளாதார நெருக்கடி உலகளவில் தாராளமய தத்துவத்தை முற்றிலும் தவறானது என்று அம்பலப்படுத்தியுள்ளது. மேலை நாடுகள் உட்பட உலகெங்கும் தாராளமய கொள்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்தியாவின் கடந்த 27 ஆண்டுகளின் அனுபவமும் தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகள் நாட்டுக்கும் நாட்டின் உழைப்பாளி மக்களுக்கும் விரோதமானவை என்பதை நிரூபித்துள்ளது.
பாஜக அரசின் துயர்மிகு நான்கு ஆண்டுகள்
பொதுவாக காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகளை ஏற்று செயல்படுத்திவந்துள்ளன. இது 1991-96 காலத்தில் நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த காங்கிரஸ் ஆட்சி, 1998 – 2004 காலத்தில் வாஜ்பாய் தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணி ஆட்சி, அதன்பின் வந்த காங்கிரஸ் தலைமையிலான இரு “ஐக்கிய முற்போக்கு கூட்டணி” ஆட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளாக ஆள்கின்ற பாஜக தலைமையிலான ஆட்சி ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தும். எனினும் ஒரு சில வேறுபாடுகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 2004-2008 வரையிலான காலத்தில் மத்திய அரசு இடதுசாரிகளின் ஆதரவின்றி வீழ்ந்துவிடும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இதன் விளைவாக சில முக்கியமான மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை அரசின் மீது திணிக்க முடிந்தது. இதில் நரேகா, தகவல் உரிமை சட்டம், பழங்குடி மற்றும் வன உரிமை சட்டம் ஆகியவை தாராளமய கொள்கைகளின் சட்டகத்திற்கு (neoliberal framework) எதிரானவை. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பாஜக ஆட்சி தனக்கு முன்பிருந்த அனைத்து அரசுகளை விடவும் மிகத் தீவிரமாக தாராளமய கொள்கைகளை அமலாக்கி வருகிறது.. பொதுத்துறையை திட்டமிட்டு அழிப்பது, அனைத்து நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்குவது (இதற்கான மிக சமீபத்திய எடுத்துக்காட்டு பல்கலை கழக மானியக்குழுவை அழித்து உயர்கல்வி ஆணையத்தை அமைக்கும் நகல் மசோதா), அனைத்து துறைகளிலும் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அன்னிய பெரு மூலதனங்களை அனுமதிப்பது (வால்மார்ட் விவகாரம் ஒரு உதாரணம்), உழைப்பாளர் உரிமைகளை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை மத்தியில் இயலாமல் போனால் மாநில பாஜக அரசுகள் மூலம் கொண்டு வருவது, பாதுகாப்பு துறையை முற்றிலுமாக அன்னிய கம்பனிகள் கையில் கொடுக்க உதவுவது போன்றவை மோடி அரசின் அதி தீவிர தாராளமய கொள்கை நிலையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இவற்றோடு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அவசரகோலமாக மக்கள் விரோத ஜி எஸ் டி வரிவிதிப்பை அமலாக்கியது, விலங்கு சந்தைகளை செயலிழக்க செய்து, இந்தியாவின் முக்கிய தொழில்களான கால்நடை வளர்ப்பு, தோல் தொழில், இறைச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய தொழில்களுக்கும் இவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கைக்கும் ஏற்படுத்திய கடும் பாதிப்பு ஆகிய தவறான நடவடிக்கைகள் “மோடி பிராண்ட்” சிறப்பு பொருளாதாரக் கொள்கையாக அறிமுகமாகியுள்ளன.
கடந்த நான்கு ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் மையமான “சாதனை”, ஆண்டிற்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதில் 10% கூட வேலை வாய்ப்புகளைப் பெருக்கத் தவறியதாகும். இரண்டாவது சாதனை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் தற்கொலை நின்றுவிடும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கி விட்டு, விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவருவதை மறைக்க புள்ளி விவர தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதும், ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகிவிடும் என்று வாயால் வடை சுடுவதும் ஆகும். அண்மையில் நாடு முழுவதும் விவசாயிகளின் பேரெழுச்சி ஏற்பட்டுள்ள சூழலில், பேராசிரியர் எம். எஸ். சாமினாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த அடிப்படையில் அரசின் கொள்முதல் விலைகளை நிர்ணயிப்பதாகவும் ஏற்கெனவே தருவதாகவும் அப்பட்டமான பொய் அறிவிப்பை மத்திய அரசு செய்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான அகில இந்திய விவசாயிகள் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
அரசின் பிரச்சாரத்திற்கு நேர்மாறாக, இன்று இந்திய பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. வளர்ச்சி மந்தமாகவே தொடர்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்து வருகிறது. பன்னாட்டு சந்தைகளில் பெட்ரோலியம் விலை மோடி அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து வந்த பொழுதும்கூட, அதன் பயன் மக்களுக்கு அளிக்கப்படாமல் அரசால் கூடுதல் கலால் வரியாக அபகரிக்கப்பட்டது இந்த சாதகமான சூழலில் கூட பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவதை தடுக்க இயலாமல் போனது அரசின் ஒரு முக்கிய தோல்வி. இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு சரிந்துள்ளது. இறக்குமதி மதிப்பு கூடியுள்ளது. ரூபாயின் அந்நிய செலாவணி மதிப்பு டாலர் கணக்கில் இறங்குமுகமாகவே உள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு எழுபது ரூபாய் என்ற நிலை எட்டப்படவுள்ளது. தொழில் உற்பத்திக்குறியீடு 6 சதத்தைக்கூட எட்டவில்லை. ரிசர்வ் வங்கி தகவல்கள் வங்கிக் கடன் பெற்று தொழில் நடத்துவதிலும் மந்தநிலை இருப்பதை தெரிவிக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண் வளர்ச்சி 2%ஐக்கூட எட்டவில்லை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கும் மேலான அப்பாவி மக்கள் இறந்த துயரத்தையும் நாம் மறந்துவிட முடியாது. நாட்டு வளர்ச்சியில் 2% சரிவுக்கு அந்த நடவடிக்கை இட்டுச்சென்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்துவருகிறது. பெரு முதலாளிகளின் வாராக்கடன்கள் கூடியுள்ளன. அவர்கள் கடனில் கணிசமான விகிதம் ரத்து செய்யப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. நான்கு ஆண்டுகளில் பாஜக சமர்ப்பித்துள்ள ஐந்து பட்ஜெட்டுகளில் கார்ப்பரேட் கம்பனிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் ஏராளமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. சொத்துவரி ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 25௦ கோடி ரூபாய்க்கு குறைவான விற்பனை மதிப்பு உள்ள கம்பனிகளுக்கு கார்ப்பரேட் வருமான வரியை 3௦%-ல் இருந்து 25%ஆக அரசு குறைத்துள்ளது. ஆனால் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரிகளை கூட்டியும் ஜி எஸ் டி மூலமாகவும் பல லட்சம் கோடி ரூபாய் மறைமுக வரிகளை மக்கள் மீது அரசு சுமத்தியுள்ளது. மேலும் உணவு, உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை வெட்டியுள்ளது. ஆனால் கார்ப்பரேட் வருமான வரி வசூல் மிகக் குறைவாகவே அதிகரித்துள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளித்து வரிவருமானத்தை தாரைவார்த்துள்ள பாஜக அரசு, மறுபுறம் பட்ஜெட் பற்றாக்குறையை குறைத்துக்காட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தொடர்ந்து விற்று வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின் இலக்கைவிட மூன்றில் ஒருபங்கு அதிகமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பொதுத்துறை கம்பனிகளின் – இந்திய மக்களின் – சொத்தை மத்திய அரசு விற்றுள்ளது. கார்ப்பரேட்டுகளும் வெளிநாட்டவர்களும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு உச்ச வரம்பின்றி அரசியல் நன்கொடை வழங்கவும் கார்ப்பரேட்டுகள் யாருக்கு நன்கொடை வழங்கினர் என்பதை ரகசியமாக வைத்திருக்கவும் பட்ஜெட் மசோதாக்கள் அனுமதித்துள்ளன. அப்பட்டமான ஜனநாயக விரோத கூட்டுக் களவாடல் முதலாளித்துவம் என்பதே பாஜகவின் இலக்கணமாக இருந்துள்ளது. பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் சொத்து ஏற்றத்தாழ்வுகளை கணிசமாக அதிகரிக்க செய்துள்ளன. 2௦14இல் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்தபொழுது நாட்டில் மொத்த குடும்ப சொத்தில் மேல்மட்ட 1% குடும்பங்களிடம் 49% சொத்து இருந்தது. 2௦17 இல் இது 58% ஆக அதிகரித்தது. இப்பொழுது 6௦% ஐயும் தாண்டிவிட்டது.
இதுதான் மோடி அரசின் நான்காண்டு “சாதனைகளின்” லட்சணம்: பல லட்சம் விவசாயிகள் தற்கொலை; சிறு,குறு விவசாயிகளுக்கும் கிராமப்புற உடல் உழைப்பாளிகளுக்கும் கடுமையான பொருளாதாரச் சூழல்; ஆலைத்தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புகள் இல்லாத நிலை; தொழில் மந்தம்; வாராக்கடன்களால் வங்கி மற்றும் நிதித்துறைக்கு பெரும் சிக்கல்; அந்நிய வர்த்தகத்திலும் தோல்வியால் அந்நியச்செலாவணி நெருக்கடி, ரூபாய் மதிப்பு சரிவு; மானிய வெட்டுக்களால் அதிகரித்துவரும் விலைவாசி; ஊரகவேலை உறுதி திட்டம் கிடப்பில்; மிகத்தீவிரமான வேலையின்மை பிரச்சினை என இவை நீண்டு கொண்டே போகும்.
இத்தகைய பின்னணியில் மக்களுக்கு மேலும் மேலும் துயரத்தை வழங்கிவரும் இந்த பாஜக அரசை வரும் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகற்றியே ஆக வேண்டும். அகற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையும் ஆகும்.
Leave a Reply