(ஆடியோ எடிட்டிங் – மதன்ராஜ்)
- டி.கே.ரங்கராஜன்
அரசாங்கத்தின் நடைமுறை எனப்படுவது, அதன் பல்வேறு நிறுவனங்களின் வடிவம், செயல்பாடுகள், உருவாக்கும் முறைகள் மற்றும் கட்டுப்பாட்டை வரையறுத்திடும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் முறைப்படுத்தப்படுகிறது.
சம்பிரதாயமான ஷரத்துகள் மற்றும் அவற்றை அடிக்கோடிட்டு சில எழுதப்படாத நடைமுறைப் பழக்கங்கள் (கன்வென்சன்கள்) ஆகியவை தொடர்ந்து மலர்ந்து கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் நடைமுறையில் இருக்கின்ற சட்ட புத்தகங்களுக்கு அவ்வப்போது திருத்தங்கள் கொண்டு வரப்படுவதும் மற்றும் அவ்வப்போது நீதிமன்றங்களின் வியாக்கியானங்கள் அல்லது விளக்கங்கள் அல்லது தீர்ப்பு முடிவுகளுமே ஆகும்.
அரசியல் சட்டத்தின் மிகவும் முக்கியமான அம்சம் என்பது அரசாங்கத்தின் கூட்டாட்சி அமைப்பு முறையே. மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசுக்கே அதிகாரம்:
இன்றைய நிலையில் வரிவிதிப்பு மற்றும் செயல்பாடுகளில் விரிவான அளவில் மத்திய அரசிடம்தான் அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி, சுங்கத் தீர்வைகள், வருமான வரி, கார்பரேட் மற்றும் மத்திய கலால் தீர்வைகள் ஆகியவற்றை விதிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு விரிவான அளவில் பெற்றிருக்கிறது. இவற்றில் சுங்கத்தீர்வை தவிர மற்ற அனைத்து விளைபயன்களும் (proceeds) மத்திய மாநில அரசுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
எந்த அளவுக்கு பகிர்ந்து கொள்வது என்பதை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையம் தீர்மானிக்கிறது. மாநிலங்களுக்கு அபரிமிதமான அளவுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் உள்ள அதே சமயத்தில், மிகவும் வளங்கொழிக்கும் துறைகளும், முக்கியமான துறைகளும் மத்திய அரசால் தமதாக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக மாநிலஅரசுகள் எப்பொழுதுமே முறையிட்டுக் கொண்டிருக்கின்றன. அது உண்மையும் கூட.
மத்திய வரிகளில் இருந்து மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கு போதுமானதல்ல. அரசாங்கம் கடன் வாங்குவதின் மீது மத்திய அரசுக்கு உள்ள கட்டுப்பாடு மாநிலங்களை மேலும் பெரிய அளவுக்கு அனுகூலமற்ற நிலையில் வைத்திருக்கின்றன.
இந்திய விடுதலைக்குப் பின்:
இந்தியா சுதந்திரமடைந்தபோது, தேசப் பிரிவினையின் கோரத் தாண்டவத்தைக் கண்டோம். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஒற்றுமைக்கும், கூட்டாட்சி அமைப்புக்குமான சவால் பிரிவினைவாத முழக்கங்களால் எழுந்தன. இதற்கு ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் உருவான இயக்கங்களை உதாரணமாக குறிப்பிடலாம்.
அதே காலகட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை எழுந்தது. வளர்ச்சிக்கும், அதிகாரப் பரவலுக்குமான குரலாக அந்தக் கோரிக்கை அமைந்தது. இந்திய ஆளும் வர்க்கத்திற்கோ, ஒரு மத்தியத் தன்மை கொண்ட அரசுதான் தேவைப்பட்டது. நாடு தழுவிய சந்தை, சந்தைகளைக் கைப்பற்ற லகுவான சட்டங்கள், அதற்கேற்ற அரசமைப்பு என்பதே இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் தேவை. கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தும் போக்கும் அதிலிருந்துதான் எழுகிறது.
அதிகாரப்பரவலுக்கும்,குவிப்புக்கும் இடையிலான போராட்டம்:
சுதந்திர இந்தியாவில் கூட்டாட்சிக்கு எதிரான முதல் பெரும் தாக்குதலை, இ.எம்.எஸ் தலைமையிலான கேரள அரசு எதிர்கொண்டது. ஆளும் வர்க்கமானது 356 வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசைக் கலைத்தது. அதைப் போலவே, கேரள அரசின் நிலச் சீர்திருத்தத்திற்கான சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை.
காங்கிரஸ் அரசாங்கத்தின் போக்குக்கு மக்களின் எதிர்ப்பு வலுப்பட்டது. 1967 பொதுத் தேர்தலின்போது 8 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசுகள் அமைந்தன. வங்கத்திலும், கேரளத்திலும் இடது சார்புடைய ஐக்கிய முன்னணி அரசுகள் அமைந்தன. இ.எம்.எஸ், மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டத்திற்கு மாற்றான ஒரு பார்வையை முன்மொழிந்தார்.
திமுக அரசு அமைத்த ராஜமன்னார் கமிட்டி மத்திய, மாநில உறவுகளில் மாநில சுயாட்சிக்கு ஏற்ற சில சீர்திருத்தங்களைக் கொண்டிருந்தது, மேற்கு வங்க அரசு உழைக்கும் வர்க்க நலன் சார்ந்த பார்வையுடன் மத்திய மாநில உறவுகள் தொடர்பாந அறிக்கையாக அமைந்தது. இக்காலகட்டத்தில், காங்கிரஸ் அரசாங்கத்தின் எதிர்வினை, மத்தியில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்களை குவித்துக் கொள்வதாகவும், அதற்கான திட்டங்களைத் தீட்டுவதாகவும் அமைந்தது.
ஸ்ரீநகரில், மத்திய மாநில உறவுகள் குறித்த எதிர்க் கட்சிகளின் மாநாடு 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு இடதுசாரிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு இருந்தது. இவ்விசயத்தில் மத்திய அரசின் எதிர்வினை சர்க்காரியா கமிசன் அமைப்பதாக இருந்தது. ஆளும் வர்க்கமானது, மத்திய அரசின் திட்டமிடலையே நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
கையேந்தும் நிலையில் மாநிலங்கள்:
மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிதி வளங்களைப் பங்கிடுவதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் அதுவே மத்திய அரசை ஒரு எஜமானனைப் போல இயங்குவதற்கு வாய்ப்பைக் கொடுத்தது. மாநில அரசுகள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எமெர்ஜென்சி காலகட்டத்தில், அரசமைப்புச் சட்டத்தின் 42 வது திருத்தம் அமலுக்கு வந்தது. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து, ஒத்திசைவு (concurrent) பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்த மத்திய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிராக திமுக, அகாலி தளம், தெலுங்கு தேசம் (1980-ல் உதயமானது) கட்சிகள் உருவாகின. அதன் பின்னணியில் உள்ள பொருளாதார அடிப்படையையும் நாம் கவனிக்க வேண்டும். மாநில கட்சிகள், தங்கள் பகுதி சார்ந்த முதலாளிகள் மற்றும் நிலவுடைமையாளர்கள் நலன்களை பாதுகாக்க, மொழி மற்றும் கலாச்சார உணர்வுகளை முன்நிறுத்தி செயல்பட்டனர்.
மத்திய ஆட்சியில் மாநில கட்சிகள்:
1989 ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் அமைந்த பல்வேறு கூட்டணி ஆட்சிகளில் மாநிலக் கட்சிகள் பங்கெடுத்தன. இதில் 1996-98 வரை அமைந்த அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவளித்ததும் நடந்தது. மத்தியில் கூட்டணியில் இணைந்து அதிகாரத்தை சுவைக்கும் இடத்தை மாநிலக் கட்சிகள் அடைந்தன. இதே காலகட்டத்தில் நவீன தாராளமயம் தொடங்கியது. தாராளமயத்தின் பாதையில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதும் தொடர்கிறது.
தேசிய வளர்ச்சிக்கான ஆலோசனை சபை, மாநிலங்களின் ஆலோசனை மன்றம், திட்ட ஆணையம் ஆகியவை கலைக்கப்பட்டது மாநில அரசுகளை பலவீனப்படுத்தியது. நிதி ஆணையமானது, புதிய தாராளவாதக் கொள்கைகளைத் திணிக்கும் கருவியாக மாறிப் போனது. 1990களுக்குப் பின்னர் பிராந்தியங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. அந்நிய மூலதனத்தை பெற மாநிலங்கள் போட்டியிடும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திரா ஆட்சி முதல் மோடி ஆட்சி வரை:
இந்திரா காந்தி ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் அர்ஜுன் சென்குப்தா கமிட்டி உருவாக்கப்பட்டது. அந்த ரகசிய ஆவணத்தை மார்க்சிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. அது நாட்டில் தாராளமயத்தை அமலாக்கவும், பொதுத் துறைகளை தனியார் மயமாக்கவும் பரிந்துரைத்தது. ராஜீவ் காந்தி காலம் தொடங்கி இன்றுவரை அந்தத் திட்டம் அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்துஸ்தான் போட்டோ பிரிண்ட் தொடங்கி சேலம் இரும்பாலை வரையில், ரயில்வே துறையின் பல்வேறு சேவைகளிலும் தனியார்மய நடவடிக்கைகள் என நடந்தேறி வருகிறது.
வங்கி சீர்திருத்தம் தொடர்பான நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரைகள், வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான செல்லய்யா கமிட்டியின் முன்மொழிவுகள் (அதாவது மதிப்புக் கூட்டுவரி மற்றும் ஜி.எஸ்.டி) இவை அனைத்தும் நிதித்துறையில் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுத்தன.
இந்திய ரயில்வே சட்டம் (1989), கடந்த 2005 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (1988), உள்நாட்டு நீர் முகமை(1985), தேசிய நீர்வழிச்சட்டம் (2015), நிலம், சாலை, நீர், நீர்வழிகள் ஆகியவை மாநில பட்டியலில் இருந்தன. மத்திய அரசு பொது நலனுக்காக கேட்டுக்கொண்டால் மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி மத்திய அரசின் கைகளில், அதன் துறைகளில் வழங்கும் என்ற மாற்றத்தை இவை ஏற்படுத்தின.
தங்குதடையற்ற மூலதனக் குவிப்புக்காக மாநிலங்களின் அதிகாரங்கள் மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்படுவதுமாக மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.
நிதியைப் பொருத்தமட்டில், ஆரம்ப நிலைக் கல்வி, சுகாதாரம், குடிநீர், சாகுபடி, வீட்டுவசதி (தலித், பழங்குடி மற்றும் ) சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நிதிகளை 1976 முதலே மத்திய திட்டங்களில் இருந்து தரப்பட்டு வந்தன. 90 சதவீத திட்டச் செலவுகள் அதன் மூலம் பெறப்பட்டன. இந்திய நாடாளுமன்றம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டம், கட்டாயக் கல்விச் சட்டம், பழங்குடி மக்களுக்கான சட்டம், தேசிய சுகாதார திட்டம் உள்ளிட்டவைகளை 90 சதவீத நிதி உதவியோடு அமலாக்கின. ஆனால் இப்போது பாஜக மத்திய அரசின் பங்கை 60 சதவீதம் அளவுக்கு குறைத்துவிட்டது. 40 சதவீத சுமைகளை மாநில அரசுகளிடம் விட்டுவிட்டது. வரி விதிக்கும் அதிகாரமும் அவர்களிடமிருந்து ஜி.எஸ்.டி வழியாக பிடுங்கப்பட்டது. இது மாநில அரகளை, நிதிக்கு ஏங்கும் நகராட்சிகளைப் போல மாற்றி விட்டது. ஜி.எஸ்.டி நிதி வசூலும், பகிர்வும் மாநிலங்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. பாஜகவின் தேசியவாதம் என்பது மத்தியில் அதிக அதிகாரங்களைக் குவிப்பதுதான். அதை நோக்கித்தான் பாஜக பயணிக்கிறது.
சமீபத்தில் மோட்டார் வாகன சட்டம், மாநிலத்தின் அதிகாரத்தைப் பறித்து அந்தச் சட்டமும் மாநிலத்தின் வரி வசூல் உரிமையைப் பறித்துள்ளது. இப்போது நாடாளுமன்றத்தில் தேசிய நினைவுச் சின்னங்கள், வளர்ச்சிக்கு அவசியமானால் அவற்றை அகற்றலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 3 ஆயிரத்திற்கும் அதிகமான தேசிய நினைவுச் சின்னங்கள், 11 ஆயிரத்திற்கும் அதிகமான நினைவிடங்கள் மாநில அரசுகளிடம் உள்ளது. இதுபோன்ற சட்டங்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
வனஉரிமைப் பாதுகாப்பு சட்டம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலத்தில் அமலாக்கப்பட்டதை . பாஜக கனிம வளச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், வன உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு வழிகாட்டுதல் நெறியாக புதிய வடிவம் எடுத்திருக்கிறது. ஜனநாயக உரிமைகளை பறிக்கும் புதிய வடிவம் இது.
மொத்தத்தில் இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையாக அமைந்த கூட்டாட்சி அமைப்பு, ஆளும் வர்க்கத்தின் வசதிக்கேற்ப திரிக்கப்பட்டு, அதிகாரங்கள் சிறுகச் சிறுக மத்தியில் குவிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்கு எதிரான ஒற்றுமையைக் கட்டமைக்கவும், அதிகாரப் பரவலுக்காகவும் விரிவான அளவில் ஜனநாயக சக்திகளை திரட்ட வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கு உள்ளது.
Leave a Reply