(குரல்: யாழினி , ஆடியோ எடிட்டிங் : மதன் ராஜ்)
– அனுஸ்ரீ
(2018 ஆகஸ்ட் 3 தேதிய ஃப்ரண்ட்லைன் இதழில் வெளிவந்த இக்கட்டுரையை தழுவி எழுதியவர் வீ. பா. கணேசன்)
அந்நிய நுகத்தடியிலிருந்து விடுபட்டு தனக்கென ஓர் அரசியல் அமைப்பை இந்தியா உருவாக்க முனைந்தபோது, “உடைத்து நொறுக்கமுடியாத மாநிலங்களைக் கொண்ட உடைத்து நொறுக்கவியலாத கூட்டமைப்பு” என்ற கொள்கையை ஏற்றுச் செயல்படும் அமெரிக்க அரசியல் அமைப்புக்கு முற்றிலும் மாறான வகையில் “உடைத்து நொறுக்கக் கூடிய மாநிலங்களைக் கொண்ட உடைத்து நொறுக்கவியலாத கூட்டமைப்பு” என்ற அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு நமது அரசியல் சாசன நிபுணர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினர். தேசப் பிரிவினையைத் தொடர்ந்து அப்போது மக்களிடையே நிலவிய கடுமையான மன அதிர்ச்சி, வகுப்புவாத சக்திகளின் அச்சுறுத்தல்கள், பிரிவினைவாதப் போக்குகள் ஆகியவற்றின் பின்னணியிலேயே நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வலிமைமிக்கதொரு மத்திய அரசின் தேவையை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் பின்னணியிலேயே துணைக் கூட்டாட்சி அம்சங்களைக் கொண்ட முழுமையானதொரு அரசாக, பெயரளவிலான கூட்டாட்சி என்ற வித்தியாசமான ஓர் அரசாக இந்தியா விளங்குகிறது என பேரா. கே. சி. வியர் தனது கூட்டாட்சி அரசு என்ற நூலில் சுட்டிக் காட்டியிருந்தார். அதே போன்று வலுவானதொரு மத்திய அரசை உருவாக்கிய அதே நேரத்தில் பலவீனமான மாநில அரசுகளை உருவாக்காமல் ஒத்துழைப்பு நிரம்பிய கூட்டாட்சிக்கான ஓர் உதாரணமாக இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு விளங்குகிறது என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எனும் மிகச் சிறந்த நூலை எழுதியுள்ள அரசியல் நிபுணரான க்ரான்வில் ஆஸ்டின் கருத்து தெரிவிக்கிறார்.
கடந்த 70 ஆண்டுகளில் இந்திய கூட்டாட்சி அமைப்பு பல்வேறு கட்டங்களை சந்தித்துள்ளது; கூட்டணி அரசியல்; கட்சி அமைப்பினை கூட்டமைப்பாக மாற்றுவது; நீதித்துறையின் தலையீடுகள்; வலுவான மாநிலத் தலைவர்கள் உருவாவது போன்ற புதுமையான, ஜனநாயக பூர்வமான போக்குகளுடன் அது தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் டெல்லி மாநில அரசுக்கும் அதன் துணைநிலை ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாட்டின் கூட்டாட்சிக்கான கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசல்களை அம்பலப்படுத்தியது. இது குறித்து டெல்லி மாநில அரசு எதிர் மத்திய அரசு என்ற வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ஜூலை 4ஆம் தேதியன்று அளித்த தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசின் உண்மையான நிர்வாகிகள் என்றும், டெல்லியைப் பொறுத்தவரை நிலம், காவல்துறை, பொது ஒழுங்கு ஆகிய விஷயங்களைத் தவிர்த்து, மற்ற விஷயங்களில் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவி, ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே துணைநிலை ஆளுநர் கடமைப்பட்டவர் என மிகத் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் காலனி நிர்வாகத்திலிருந்து நாம் பெற்ற பரிசான இந்த ஆளுநர் என்ற பதவி குறித்த பிரச்சனைகளை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயிரோட்டமான நம்பிக்கை, நெறிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டதோர் அளவில் மட்டுமே ஆளுநர் என்பவர் ஒரு நிர்வாகி என அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுக்கிறது எனவும் இந்தத் தீர்ப்பு விளக்கமளித்துள்ளது.
சுதந்திர இந்தியாவில் ஆளுநரின் தகுதி பற்றிய விவாதங்களில் (அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான) இந்திய அரசியல் நிர்ணய சபை ஈடுபட்டபோது, “ஆளுநர் என்பவர் பெயரளவிற்கானவர் மட்டுமே என்பதை இந்த மன்ற உறுப்பினர்கள் பலரும் எடுத்துக் கூறினர். அவ்வாறெனில், மத்திய அரசால் நியமிக்கப்படும் இந்த ஆளுநர்கள் (மக்களால்) தேர்ந்தெடுக்கபப்டும் மாநில அரசுகளுடன் எவ்வாறு ஒத்துழைப்பார்கள்?” என்ற கேள்வியை ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினரான பிஸ்வநாத் தாஸ் (இவர் பின்னாளில் உத்திரப் பிரதேச மாநில ஆளுநராக இருந்தவர்) கேள்வி எழுப்பினார். அதேபோன்று “ஆளுநர் என்பவர் கடந்து போகக் கூடிய ஒருவராக இருக்கும் நிலையில் அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆளுநரின் பெயரால் செய்ய வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல; உண்மையானதுமல்ல” என மற்றொரு உறுப்பினரான கே. டி. ஷா கூறினார்.
இவ்வாறு ‘நியமிக்கப்பட்ட’ ஆளுநரிடம் அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்கு அளித்துள்ள கடமைகளை நிறைவேற்ற போதிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், நியமிக்கப்பட்ட மாநிலத்தின் தலைமைப்பொறுப்பை அவர் வகிப்பார் என்றும் ஜவகர்லால் நேரு, கே. எம். முன்ஷி, பி.எஸ். தேஷ்முக் ஆகியோர் வாதிட்டனர். அரசியல் நிர்ணய சபையில் எழுந்த இந்த விவாதங்களுக்கு முன்பாகவே, இந்த விஷயங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும் வகையில் அவர்கள் எந்தப் பக்கத்தையும் சாராமல் விலகி நின்று பார்க்க முடியும் என்றும், இதன் மூலம் தனது அமைச்சரவை தவறிழைப்பதைத் தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் அரசின் கொள்கைகளில் அவர்களால் செல்வாக்கு செலுத்த முடியும் என்றும் கீழ்மட்ட அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கொள்கையின் தீவிர ஆதரவாளராக இருந்த மகாத்மா காந்தி 1947 டிசம்பர் 21-ம் தேதிய ஹரிஜன் இதழில் எழுதினார்.
மாநில சட்டமன்றம், நிர்வாகம், நிதி, நீதி போன்ற துறைகளில் ஆளுநர்களுக்கு பரவலாக இருந்த அதிகாரங்களிலேயே அவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப செயல்படுவதற்கான அதிகாரம் என்பதே நாடு விடுதலை பெற்ற நாளிலிருந்தே மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான விவாதக் களமாக அமைந்திருந்தது. இவற்றில் மிகுந்த சர்ச்சைக்கு இடமானவையாக விளங்குபவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் முதலமைச்சரை நியமிப்பது; 174வது பிரிவின்கீழ் சட்டமன்றத்தைக் கூட்டுவது; தள்ளிவைப்பது; மற்றும் அதைக் கலைப்பதற்கான உரிமை; அரசியல் அமைப்புச் சட்டரீதியான அமைப்புகள் செயல்பட இயலாத நிலை ஏற்படுமானால் 356வது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பரிந்துரைக்கும் உரிமை ஆகியவை ஆகும்.
நாடு விடுதலைபெற்ற பிறகு முதல்முறையாக 1959-ல் கேரளாவில் இ எம் எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அரசை இந்த 356வது பிரிவைப் பயன்படுத்தி நேரு அரசு கலைத்தது. அதிலிருந்தே மக்களால் சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைக்க இந்தப் பிரிவானது ஓர் அரசியல் கருவியாக பல்வேறு தருணங்களில் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு இந்தப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்தாத எந்தவொரு மத்திய அரசும் இல்லை என்றே கூறிவிடலாம்.
இத்தகைய சூழ்நிலையை முன்கூட்டிய ஊகித்த வகையில்தான் “மத்திய அரசில் பொறுப்பில் இருக்கும் கட்சியிலிருந்து வேறுபட்ட ஒரு கட்சி மாநிலத்தில் ஆட்சி நடத்தவும் கூடும். அப்போது (ஆளுநரின்) நிலைபாடு எவ்வகையில் இருக்கும்?” என்ற கேள்வியை 1949 மே 31 அன்று பிஸ்வநாத் தாஸ் அரசியல் நிர்ணய சபையில் எழுப்பினார்.
எனினும் அவ்வப்போது இந்த விஷயத்தில் தலையிடுவதன் மூலம் இந்தக் கூட்டாட்சி அமைப்பை பாதுகாப்பதை நீதித்துறை உறுதிப்படுத்தியதோடு, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருந்த கடமைகளை செயல்படுத்த ஆளுநர்கள் தவறியுள்ளனர் என்றும் அது கண்டனம் தெரிவித்து வந்தது. 1994-ம் ஆண்டில் எஸ். ஆர். பொம்மை எதிர் மத்திய அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாநில அரசுகளை விருப்பம் போல் கலைப்பதற்கான மத்திய அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. மேலும் ஒரு மாநில அரசின் வலிமையை சோதிக்கும் இடமாக அந்த மாநில சட்டமன்றம் மட்டுமே இருக்க முடியும் என்றும், ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட கருத்தாக அது இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டது. மேலும் (நிர்வாக இயந்திரம் அல்லாத) அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான அமைப்புகள் சீர்குலையுமானால் மட்டுமே 356வது பிரிவின் கீழ் அவசரகால நிலையை அமலாக்க முடியும் என்று அது அறிவித்ததோடு, இத்தகைய அமலாக்கமும் கூட நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்பதையும் இந்தத் தீர்ப்பு தெள்ளத் தெளிவாகக் கூறியது.
மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் இயல்பாக இருக்க முதலாவது நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் (1966), ராஜமன்னார் குழு(1969), சர்க்காரியா கமிஷன்(1983), அரசியல் அமைப்புச் சட்ட செயல்பாடுகளை பரிசீலிப்பதற்கான தேசிய கமிஷன்(2000) பூன்ச்சி கமிஷன்(2007) போன்ற பல குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை வழங்கியிருந்தன.
ராஜமன்னார் குழு தவறான நடத்தை அல்லது செயல்திறன் இன்மை ஆகியவை உச்சநீதி மன்றத்தின் விசாரணையின் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்பே ஆளுநர் நீக்கப்பட வேண்டும் என்று கூறியதோடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 263வது பிரிவு விதித்துள்ளபடி மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தது. எனினும் மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கமிஷன்களிலேயே மிக விரிவான, 21 அத்தியாயங்கள் நிரம்பிய அறிக்கையை வழங்கியது சர்க்காரியா கமிஷன் மட்டுமே.
இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டதை சமீபத்தில் கர்நாடகா, கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளுநரைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக ஆட்சி அமைக்க முற்பட்ட நேரத்தில் நாம் அனைவருமே கண்டோம். சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பெரும்பாலும் மத்தியில் ஆளும் கட்சியின் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவோராகவே இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், பிரிவினைவாதம், பொருளாதார ரீதியான போட்டி ஆகிய போக்குகளின் விளைவாக நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள இன்றைய சூழலில் செயல்திறன் மிக்க கூட்டாட்சி அமைப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பல்வேறு வகையான அரசியல் கட்சிகள், பிளவுபட்டுக் கொண்டே போகும் மக்களின் வாக்குகள் ஆகியவற்றின் விளைவாக மத்திய அரசின் பொறுப்பினை ஏற்கும் எந்தவொரு அரசும் மாநிலங்களை விரோதித்துக் கொண்டு செயல்பட்டு, தங்களை எவராலும் தோற்கடிக்க முடியாது என்று வீறாப்பு பேசிவிட முடியாது.
தேசிய ஒற்றுமை, அரசியல் ரீதியான நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசுக்கு சாதகமான பல அம்சங்களை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. மாநிலங்களுக்கு ஓரளவிற்காவது வழங்கப்பட்டுள்ள சுயாட்சியைப் பறித்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு இதைப் பயன்படுத்திக் கொள்ளல் ஆகாது. அதிகாரங்களை தன் கையிலேயே அது குவித்துக் கொள்வதென்பது மத்திய அரசு- மாநிலங்கள் ஆகிய இரண்டு அமைப்புகளுக்குமே ஊறுவிளைவிப்பதாகும். இத்தகைய போக்கு “மத்திய அரசுக்கு ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதோடு ஒரு பக்கத்தில் சோகை நோயை உருவாக்கி இறுதியில் செயலற்ற நிலைக்கும் இட்டுச் செல்லக்கூடும்” என்று சர்க்காரியா கமிஷன் எச்சரிக்கை செய்திருந்ததை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.
இத்தகைய மத்திய-மாநில உறவுகளுக்கு பாலமாக இருக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆளுநர் பதவியை அரசியல் தன்மையற்றதாக மாற்ற வேண்டியதன் அவசர-அவசியத்தைப் பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமெனில் ரோம் நாட்டு கேலிக் கலைஞரின் “காவலாளிகளை காவல் காப்பது யார்?” என்பதையே உதாரணமாகக் கூறலாம். இன்றைய நிலைமைகளுக்கு ஏற்ப இதை “ஆளுநரை யார் ஆளுமை செய்யப் போகிறார்கள்?” என்பதாகவும் நாம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். “வேலியே பயிரை மேய்வது” என்ற தமிழ்ப் பழமொழி இங்கு மேலும் பொருத்தமானதாகவே இருக்கும்.
Leave a Reply