(குரல்: யாழினி, ஆடியோ எடிட்டிங் : மதன் ராஜ்)
எஸ். கண்ணன்
இந்திய அரசியலில் ஜனநாயகம், பணநாயகமாகி இருப்பதும், எதேச்சதிகாரமாகி இருப்பதும், வெறுப்பை உமிழ்வதாகவும் மாறியிருப்பதையும் பார்க்கிறோம். மக்கள் நலத்திட்டங்கள் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு இரையாகி வருவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அடிப்படை உரிமைகள் பழியெடுக்கப் பட்டு, அனைத்தையும் சட்ட நியாயம் என்ற பெயரில், முதலாளித்துவத்திற்கு சாதகமான சட்டங்களை உருவாக்க ஆட்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இப்போது 72 வது சுதந்திர தினத்தின் கொண்டாட்டத்தினூடே, அரசியலில் ஏற்பட்டுள்ள, மாற்றத்திற்கு காரணமானவற்றை விவாதிக்க வேண்டியுள்ளது.
ஜனநாயகம் என்ன விலை.?
விடுதலைக்கு முன்பு வாக்காளர்களுக்கும், இன்று குறிப்பிட்ட வயது கொண்ட ஆண், பெண் அனைவரும் வாக்காளர் என்பதும், ஒப்பீடு செய்கிற போது, விடுதலை இந்தியாவின் ஜனநாயகம் வளர்ச்சி பெற்றுள்ளது, என்பது சரியே. அதாவது வரி செலுத்தும் ஆண்கள் மட்டுமே, விடுதலைக்கு முன் வாக்காளர்களாக இருந்துள்ளனர். 21 வயதுடைய அனைவரும் வாக்களிக்கலாம் என்பது 1952ல் நடந்த முதல் தேர்தலில் அரங்கேறியது. ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி அதிகரித்த போது, ஜனநாயகம் விலை பேசப்பட்டது. அது மட்டுமல்ல. தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையில் கேள்வி கேட்பதற்கு கூட பணம் பெற்று செயல்பட்டது, ஜனநாயகத்தினை தவறாக பயன்படுத்துவதாக வெளிப்பட்டது. 2008 ஜூலையில் காங்கிரஸ் ஆட்சி மீது இடதுசாரிகள் முன்மொழிந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், விவாதிக்க பட்ட போது, பாஜக உறுப்பினர்கள் கோடிக்கணக்கிலான பணத்திற்கு விலை போனதை பார்க்க முடிந்தது.
மூலதனம் வளர்ச்சி பெறுகிற போது, முதலாளித்துவம் தான் விரும்பும் ஆட்சியை அதிகாரத்தில் அமர வைக்க, எதையும் செய்யும் என்பதை மேற்படி நிகழ்வுகள் மூலம் காண முடிந்தது. இன்று உலக அளவில் முதலாளித்துவ தாராள சுரண்டலை எதிர்த்து எழும் அதிருப்தியை பயன்படுத்தி போராட்டத்தின் மூலம், அரசியல் அதிகாரத்தை, சுரண்டலுக்கு ஆதரவான வலதுசாரி சக்திகளே கைப்பற்றுகின்றன. இது மேலும் ஆபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பா கண்டத்தின் நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், முதலாளித்துவ சுரண்டல் முறையை தீவிரப் படுத்த உதவியுள்ளது.
இந்த சுரண்டலுக்கு உதவி செய்யும் வகையில், ஆட்சி அதிகாரம் பணம் சார்ந்தும், எதேச்சதிகாரம் சார்ந்தும், வெறுப்பு சார்ந்தும் கட்டமைக்கப் படுகிறது. காலனியாதிக்க எதிர்ப்பின் போது, அனைத்து பகுதி மக்களையும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட போராட்டங்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கியது. அன்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எடுத்த பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியிருந்தது. இன்றும், அரசுகளின் போராட்டங்களின் அளவு அதிகரித்துள்ளது. ஆனால் கூட்டாக இல்லை. பல்வேறு பிளவுகளைக் கொண்டதாக இருந்தாலும் அவ்வப்போது கூட்டாக சில போராட்டங்கள் உருவாகியுள்ளன. நவகாலனியாதிக்கத்திலும் மூலதன வளர்ச்சியினாலும், பிரித்தாளும் சூழ்ச்சி மேலோங்கி இருப்பது கண்கூடாக உள்ளது. ஆட்சி அதிகாரம் தனது சுயசார்பை, இறையாண்மையை பறி கொடுத்துள்ளது. அன்று போலவே, குட்டி ராஜாவாக, மத்திய மாநில அரசுகள், மூலதனத்திற்கு ஆதரவாக, உழைக்கும் மக்களின் ஜனநாயகத்தைப் பறிக்கும் அடியாள் வேலையை தீவிரப் படுத்தி வருகிறது.
அன்று இந்திய பெருமுதலாளிகள் பிரிட்டிஷ் ஆட்சியை வளைக்கும் அதிகாரம் பெற்று இருக்க வில்லை. இன்று உலகமயமாக்கல் கொள்கை தந்த நவகாலனியாதிக்க சூழலில், புதிய சலுகைகளை அனுபவிக்கும், உலக முதலாளிகளாகவும், இந்திய முதலாளிகள் வளர்ந்துள்ளனர். உள்நாட்டிலும், பிறநாடுகளிலும் இயற்கை வளங்களும், மனித வளமும், கட்டுக்கடங்காமல் சுரண்டப்படுகிறது. இந்த பின்னணியில் இருந்தே ஜனநாயகம் பணநாயகமாக உருவெடுத்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும், ஆட்சியாளர்களும், பிரதான முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், பணத்தின் மூலமே எதையும் சாதிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து, அதைச் செயல்படுத்தவும் செய்கின்றன.
இந்தப்பணியில் பாஜக முதலிடத்தில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும் இந்த வேலையை செய்வதில் முனைப்புடன் செயல்படுகின்றன. குறிப்பாக முதலாளித்துவ கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகமும் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி, தனிநபர் செல்வாக்கிற்கு கட்டுப்பட்டதாக மாறியுள்ளது. ஒட்டு மொத்தமாக வலதுசாரி அடிப்படைவாதத்தை நோக்கி, அரசியல் நகர்ந்துள்ளது. சுரண்டலுக்கு சாதகமாக, சமூகத்தின் மேலகட்டுமானமாக விளங்குகிற அடையாளங்கள் முன்நிறுத்தப்பட்டு, அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது.
நலத்திட்ட பறிப்பு அரசியல்:
மூலதனம் மற்றும் பெருமுதலாளித்துவத்தின் கட்டுக்குள் சிக்கியுள்ள ஆட்சியாளர்கள் பின் பற்றி வந்த நலத்திட்டங்களைக் கைவிட்டு, வாழ்வாதார பறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 1952 க்கு பின் தேர்ந்தெடுத்த அரசுகள் தாங்கள் முதலாளித்துவத்தையோ, சோசலிசத்தையோ பின்பற்றப் போவதில்லை, மாறாக கலப்பு பொருளாதாரம் என்ற, மக்கள் நல அரசாக செயல்படுவோம், எனப் பிரகடனப் படுத்திய வரலாறு, இன்று அழிக்கப்பட்டு வருகிறது.
அப்பட்டமான முதலாளித்துவ நலன் சார்ந்த அரசாக மாறியிருக்கிறது. அடிப்படை வளர்ச்சிக்கு வித்திட்ட கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் அரசின் கட்டுப்பாடுகளை, பொறுப்பை தட்டிக் கழித்து, முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்து பாஜக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இத்தகைய போக்கு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் இந்த நலத்திட்ட அணுகுமுறையை கைவிட துவங்கியுள்ளன. சோசலிச சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிந்ததும், முதலாளித்துவ பொருளாதார கொள்கையை பின்பற்றத் துவங்கிய பின், முதலாளித்துவத்திற்கு, நலத்திட்ட அமலாக்கத்தின் மீது இருந்த நிர்பந்தம் குறைந்தது. இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும்.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கூட அக்கறை செலுத்தாத, அலட்சியம் தலையெடுத்திருப்பதும், பாஜக ஆட்சிக்காலத்தில் வளர்ந்துள்ள அரசியலாகும். கடந்த 25 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கை, அதன் கல்வி போதனை மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு, ஜனநாயக உரிமைகளுக்கான கேள்விகளை எழுப்பும் விதத்தில் இல்லை. மாறாக முதலாளித்துவ உற்பத்திக்கான சிறந்த நுகர்வோராக வளர்க்கப்பட்டுள்ளனர். மார்கஸ் சொன்னது போல், முதலாளித்துவம் மனிதர்களுக்கான பொருள்களை மட்டும் உற்பத்தி செய்வதில்லை. மாறாக பொருள்களுக்கான மனிதர்களையும் உற்பத்தி செய்கிறது.
இதன் உச்சமாக மத்தியில் உள்ள பாஜக ஆட்சி, பொய் அரசியலை வளர்க்கிறது. தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையில், வாக்குறுதி ஜூம்லா (சும்மா), எனக் கூறும் துணிச்சல், இதுவரை எந்த ஒரு அரசியல் இயக்கத்திற்கும் வந்ததில்லை. பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா இதை வெளிப்படையாக பேசுவது, ஃபாஷனாக மாறியுள்ளது. பாஜக மேலாதிக்க அரசியல் சூழலில் இனி நலத்திட்டத்தை எதிர்பார்க்க முடியுமா?
எதேச்சதிகார அரசியல்:
ஜனநாயகமும், நலத்திட்டமும் பறிக்கப் படுகிறபோது, எதிர்ப்பு போராட்டங்களை அடக்கும், ஒடுக்குமுறை அரசியலும் மேலோங்கிறது. வகுப்புவாத நோக்கம் கொண்ட பாஜக ஆட்சியாளர்களுக்கு, கூடுதலாக இந்துத்துவா கொள்கைகளை அமலாக்கும் நோக்கமும் இருப்பதால், எதேச்சதிகாரமும் தலையெடுக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை பல நேரங்களில் அவமதிக்கிறது. விவாதங்களுக்கு இடமளிக்காத, பணமசோதா (Money Bills) பாஜகவின் நான்காண்டுகள் ஆட்சியில் அதிகரித்துள்ளது. மாநிலத்திலும் கூட 110 விதியின் கீழான, முன்மொழிவுகள் விவாதத்தை தவிர்க்கும் தன்மை கொண்டது ஆகும்.
மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழையும் போது, படிக்கட்டுகளுக்கு முத்தம் அளித்தது, நடிப்பு என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. விவாதத்தை மட்டுமல்ல, நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கெடுப்பதே தேவையற்றது, என்ற மனநிலையில் பிரதமர் செயல்படுவதும் அம்பலமாகியுள்ளது. மொத்தத்தில் 19 நாள்கள் மட்டுமே நாடாளுமன்றம் சென்ற பிரதமர் என பாஜகவின் மோடி குறித்து அறிய முடிந்துள்ளது. இது ஜனநாயக மாண்புகளை சிதைக்கும், செயல்பாடுகளே ஆகும்.
தாராளமய பொருளாதார செல்வாக்கில் வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கூட்டு செயல்பாட்டை, கலந்தாய்வை விரும்புவதில்லை. அதற்கு தாளம் இசைப்பதாக, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிற, மத்திய அரசின் அதிகார குவிப்பை அரங்கேற்றுகிறது. மாநில முதலாளித்துவ கட்சிகளுக்கும், மத்திய ஆட்சி அதிகாரத்தை பங்கு பொட்டுக் கொள்ளும் ஆர்வம் இருப்பதை, இந்த கார்ப்பரேட் மய, எதேச்சதிகார அரசியல் பயன்படுத்தி, மாநிலங்களுக்கு இருந்த அதிகாரத்தை படிப்படியாக குறைக்கிறது. குறிப்பாக நிதி பங்கீடு, வரி வருவாய், உயர் கல்வி போன்றவை மேற்படி நடவடிக்கையால் பழியாகியுள்ளன. இது கார்ப்பரேட்டுகளுக்கும், பாஜக போன்ற வலதுசாரி ஆட்சியாளர்களுக்கும் சாதகமான ஒன்று.
அடுத்து அதிபர் ஆட்சி முறை என்பது முழக்கமாகி வருகிறது. முதலாளித்துவ வளர்ச்சி கொண்ட நாடுகள் அனைத்தும் அதிபர் ஆட்சி முறையில் செயல்படுவது அறிந்ததே. அதிகார குவிப்பு முடிவுகளை வேகப்படுத்த உதவிடுவதாக இருக்கும் என்பதைப் பார்க்க முடிகிறது. இந்திய நிலையில் அதிபர் ஆட்சி முறை மிகப் பெரிய அபாயத்தை தருவதாக அமையும். நாடாளுமன்றத்தை அப்பட்டமாக மீறுவதற்கான அதிகாரத்தை, பாஜக கேட்கிறது. மாநிலங்களுக்கு உள்ள அதிகாரமும், மக்கள் இப்போது அனுபவிக்கிற குறைந்த பட்ச ஜனநாயகமும், வேகமாக பழியெடுககப்டும். இதன் நீட்சியே மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே கட்டத்தில் தேர்தல் என்பதும் ஆகும். இந்தியாவின் பெரும் பான்மையான அரசியல் கட்சிகள் இதை ஆட்சேபித்து இருப்பது, எவ்வளவு நாள்களுக்கு என்பது, கேள்விக்குரியே.
அதிபர் ஆட்சி முறை கொண்ட அமெரிக்காவில், வலதுசாரி திருப்பம் கொண்ட டிரம்ப் பொறுப்பெடுத்த பின் சந்திக்கும் ஜனநாயக பறிப்பு தெளிவாகியுள்ளது. உலக நாடுகளுடன் செய்து கொண்ட, ஒப்பந்தந்தை வெளிபடையாக மீறும் எதேச்சதிகார போக்கு வளர்ந்துள்ளது. ஒப்பந்தம், வாக்குறுதி ஆகியவற்றின் மீதான கடப்பாடுகளுக்கு சவக்குழி தோண்டப்படுவதையும், மற்றவர்கள் இகழ்வாக பேசுவதையும் நேரடியாக பார்க்கிறோம். இந்துத்துவா அரசியல் கோட்பாடுடன், அதிகாரத்தை கைப்பற்றியுள்ள பாஜகவின், அதிபர் ஆட்சி என்ற முழக்கமும், பல மொழி, பல மதம், பல்வேறு பண்பாட்டு வேறுபாடுகளைக் கொண்ட இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், என்பதிலிருந்து, பாஜக வின் ஆட்சியதிகாரம் தோற்கடிக்கப் பட வேண்டிய தேவை, அதிகரித்துள்ளது.
வெறுப்பு அரசியல்:
இந்துத்துவா கோட்பாடான அகண்ட பாரதம், அமைந்திட பல மத, பல பண்பாட்டு அமைப்பு முறையை ஒழித்திட, ஒரே மொழி, ஒரே நாடு என்ற மேலாதிக்கத்தை நிலை நாட்ட, இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் வெளிநாட்டு கருத்தியலைப் பின்பற்றுகின்றனர், என்ற பொய் பிரச்சாரத்தை மெய்யாக்கிட, வெறுப்பு அரசியல் பாஜகவிற்கு அவசியமாகிறது. இந்தியா தற்போது பின்பற்றும் அரசியல் சாசன அமைப்பு முறையை இந்துத்துவா கோட்பாடிற்கு சாதகமாக மாற்றி அமைக்கும். இந்திய ஒரு ஜனநாயக, மதசார்பற்ற, சோசலிச குடியரசு என்ற கோட்பாடு முழுமையாக அழிக்கப்படும்.
இது முழுக்கவும், பிற அடையாளங்களின் மீதான வெறுப்பாகும். பிற அடையாளங்களுக்கு பாதுகாப்பு தருகிற சட்டங்களை வெறுப்பதாகும். எனவே தான் பாஜக வெறுப்பு அரசியலை பகிரங்கமாக அரங்கேற்றுகிறது. சங் பரிவாரங்கள் இதற்காக பல்வேறு வடிவங்களில் களப்பணி ஆற்றுகின்றனர். உணவின் மீது வெறுப்பு உமிழ்கிற அரசியல் பிரச்சாரத்தை, இப்போது இந்த பின்னணியில் தான் அரங்கேற்றுகிறது.
பசுவின் மீது கற்பிக்கப் பட்ட புனிதமும், இப்போது மாட்டிறைச்சி மீதான வெறுப்பும் அடுத்தடுத்து செய்யப்பட்ட தொடர் பிரச்சாரத்தின் விளைவாகும். தனது செயல் திட்டத்தை, நடைமுறைப்படுத்த இந்துத்துவா அமைப்பினர் கருத்தியல் ரீதியிலான பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும், பலநூறு ஆண்டுகளாக பின்பற்றும் சமூக ஒடுக்கு முறை பண்பாட்டு நிகழ்வுகளுடனும் இணக்கிறது. அதிலிருந்தே வெறுப்பு அரசியலை அரங்கேற்றும் மக்கள் படையைத் திரட்டுகின்றனர், என பேரா.கே.என் பணிக்கர் குறிப்பிடுகிறார். ஆல்வார் படுகொலைகள், அரியானா, குஜராத் ஊனா, முகமது இக்லக் படுகொலைகள் இந்த பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டியது ஆகும்.
அதேபோல் அண்மையில் தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறையும் தாக்குதலும் அதிகமாக வெளிப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் தீவிரமாகியிருக்கிறது. புதுச்சட்டை அணிவதை கூட சகித்துக் கொள்ள முடியாத வெறுப்பு, விஷமாக பிரச்சாரம் செய்யப் பட்டுள்ளது. பார்ப்பனீயம் எனச் சொல்லப்படுகிற பண்பாட்டு மேல்நிலை ஆக்கம் (சமஸ்கிருதமயமாக்கல்) என்ற கருத்தியல் ரீதியிலான ஏற்பாடே ஆகும் (Convincing arrangement). ஏற்கனவே இந்திய சமூகத்தில் இருக்கும் மனநிலையை, இந்துத்துவா அமைப்புகள் மேம்படுத்தி தனக்கான அடியாள்களையும், படையையும் தயார் செய்து கொள்ள, இந்த வெறுப்பு அரசியலை, மென்மையாக பரவ செய்கிறது.
இதன் தொடர்ச்சிதான் லவ் ஜிகாத். காதல் மணம் மேற்குறிப்பிட்ட சமூக ஒடுக்கு முறைக்கு இடையூறு விளைவிப்பதாலேயே, தாக்கி அழிக்க முயற்சிக்கிறது. தனிமனித உரிமை மீதான ஆகப்பெரிய தாக்குதலாக இவை உள்ளது. ஏற்கனவே சில மாநிலங்களில் இருந்த ரன்வீர் சேனா என்ற தனிநபர் வைத்தும் கொள்ளும் படை அமைப்புகளை ஏற்றுக் கொண்டிருந்த மக்களிடம், பசு பாதுகாப்பு, லவ்ஜிகாத் போன்ற குழு அமைக்கும் முறை, எளிதில் கவ்வி பிடிப்பதாக உள்ளது.
நிறைவாக
மேற்படி சூழ்நிலையை மாற்ற வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்கவும், அதற்கு ஆதரவான மனநிலையை மக்களிடம் உருவாக்கும் பிரச்சாரமும் அதிக அளவில் தேவையாக உள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி மனித உரிமைகளை பாதுக்காக்கும், மன உணர்வை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.
இந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் பொருளாதார சுரண்டல் முறையை பாதுகாக்கும் சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எடுக்கும் முயற்சிக்கு, சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளது. அம்பேத்கர், பெரியார் இயக்கங்கள் இதை எப்படி புரிந்து கொண்டிருந்தாலும், மார்க்சீயம், கருத்தியல் மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் மேற்கண்ட கடமையை நிறைவேற்றும் அரசியல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.
Leave a Reply