புரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்


(குரல்: யாழினி, ஆடியோ எடிட்டிங்: மதன் ராஜ்)

வே.தூயவன்

இந்தியாவில் புரட்சி நடக்குமா? என்று இடதுசாரிகள் எனச் சொல்லிக் கொள்வோரிடம் கேள்வி கேட்டால், நம் காலத்தில் இல்லாவிட்டாலும், அடுத்த தலைமுறையினர் காலத்தில் புரட்சி நடக்கும் என நம்புவதாகச் சொல்வர். மார்க்சியத்தின் மீது மெய்யான நம்பிக்கை கொண்டவர்களிலும் ஒரு தரப்பினர் கூட “சமூக மாற்றம்” கட்டாயம் ஏற்பட்டே தீரும் என்று சொல்லி புரட்சி என்ற வார்த்தையை தவிர்த்து விடுகின்றனர். இனி புரட்சி நடக்கவே நடக்காது என்று வாதிடுவோரிடம், அதை மறுப்பதற்குத் தயங்குவதுடன் உள்ளூர ஆமோதிப்போரும் உண்டு.

சோசலிசப் புரட்சியின் மீது அசைக்க முடியாத  நம்பிக்கை, உறுதியை கெட்டிப்படுத்தி, உலக முதலாளித்துவத்தை எதிர் கொண்டு வெல்வதற்கு ஒளிவிளக்காக அறிவொளி பிரகாசிக்கச் செய்கிறது “புரட்சி! 1917ல் லெனின்” எனும் ஆங்கில நூல். சோவியத் ருஷ்ய புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2017 நவம்பர் மாதம் லெஃப்ட்வேர்ட் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் இந்நூலை அறிமுகப்படுத்தி மிகச் சிறந்த உரை வழங்கி இருக்கிறார்.

புரட்சியை நிகழ்த்திய படைப்புகள்:

ருஷ்யாவில் 1917 பிப்ரவரி புரட்சிக்கும், நவம்பர் (அக்டோபர்) புரட்சிக்கும் இடையில் எட்டு மாத காலத்தில்  மாமேதை  லெனின் எழுதிய கடிதங்கள்,  ஆய்வறிக்கை, கட்டுரைகள், உரை உள்ளிட்டவற்றில் தேர்வு செய்யப்பட்ட, காலச்சிறப்பு வாய்ந்த  படைப்புகளின் தொகுப்பே இந்நூல்! லெனினின் அப்படைப்புகள் “புரட்சியை நிகழ்த்தியவை!” என்று மார்க்சிய அறிஞர் லூகாக்ஸ் கூறியிருப்பதைப் பொருத்தமான முறையில் பிரகாஷ் காரத் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அன்றைய உலகில் மார்க்சீய அறிஞர்கள் என அறியப்பட்ட கார்ல் காவுத்ஸ்கி, பிளகானோவ் போன்ற பெருந்தலைவர்கள், மார்க்சியத்தை மரபுவழிப் பாடப் புத்தக வரிசையில் புரிந்து கொண்டவர்களாகச் செயல்பட்டுத் தவறிழைத்தனர். குறிப்பாக, ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக ஏற்பட்ட முரண்பாடுகளைக் காணத் தவறினார்கள். எனவே முதல் உலக யுத்தம் குறித்து பாட்டாளி வர்க்க சர்வதேசிய கண்ணோட்டத்தைக் கைவிட்டு, தங்களது நாடுகளின் குறுகிய தேசிய வெறி முதலாளித்துவ ஆதரவு நிலைபாட்டில் போரை ஆதரித்து, பாட்டாளி வர்க்கத்திற்குத் துரோகம் செய்தனர். ஆனால் லெனின் ஒருவர்தான் உயிர்த் துடிப்பான மார்க்சிய இயக்கவியல் கண்ணோட்டத்துடன் நிலைமையைக் கணித்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தை அம்பலப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, அந்தந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கம் தங்கள் நாடுகளின் ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிராக, உள்நாட்டுப் புரட்சியாக இதை மாற்ற வேண்டும்; அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் ஆதரவு நிலை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  குறிப்பாக, ஏகாதிபத்திய சங்கிலியின் பலவீனமான கண்ணியாக இருந்த ருஷ்யாவில், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாய வர்க்கத்தை அணி சேர்த்து சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கு வியூகம் வகுத்து அதை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார்.

மனித குலத்தின் மகத்தான இந்த நிகழ்வை அரங்கேற்றியதில், மாமேதை லெனின், ஒவ்வொரு தருணத்திலும் மார்க்சிய ரீதியாக தனது மதிப்பீட்டை, கருத்துகளை  ருஷ்யாவின் போல்ஷ்விக் கட்சிக்கும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கும்  தொடர்ச்சியாக போதித்து அறிவொளி ஊட்டி, புரட்சிகர ஆயுதபாணியாக்கினார்.

1917 பிப்ரவரி புரட்சி நடைபெற்ற சமயம் லெனின் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் இருந்தார். தொலைதூரத்தில் இருந்தாலும் பல பத்திரிகை செய்திகள் வாயிலாகவும் ருஷ்யாவில் நடந்து வந்த நிகழ்வுகளைக் கணித்தார். அங்கிருந்தபடி “தொலைவில் இருந்து கடிதங்கள்!” என தொடர்ச்சியாக ஐந்து கடிதங்களை ருஷ்யத் தோழர்களுக்கு அனுப்பினார்.

அதில்தான், பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சியின் தன்மை, ஜார் மன்னன் வீழ்த்தப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது, ஏகாதிபத்தியப் போரை எதிர்க்க முடியாத, பழைய அதிகார வர்க்கத்தின் பிணைப்புடன் மென்ஷ்விக்குகள், சோசலிஸ்ட் புரட்சிக் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்ற  நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் ஊசலாட்டம்,  ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்ற முடியாத கையாலாகாத்தனம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி தொழிலாளி வர்க்கம், புரட்சிகர ஏழை விவசாய வர்க்கத்துடன் கூட்டணி சேர்ந்து புரட்சியின் அடுத்த கட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நடைமுறை வியூகத்தை லெனின் முன்மொழிந்தார்.

இந்தக் கருத்தையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஏப்ரல் ஆய்வுக் கட்டுரையிலும் வலியுறுத்தி, அப்போதைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமையை வரையறுத்து, வர்க்க உணர்வு படைத்த பாட்டாளி வர்க்க அமைப்பை வலுப்படுத்துவது, விவசாய வர்க்கத்துடன் கூட்டணியை விரிவுபடுத்துவது என இலக்கை நிர்ணயித்தார். அக்காலத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் பாட்டாளி வர்க்கமும் புரட்சிகரக் கட்சியும் எப்படி செயல்பட வேண்டும் என்று தெளிவுபட எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

பாட்டாளி வர்க்கம் பழைய அரசு இயந்திரத்தை நொறுக்கி, புதிதாக பாட்டாளி வர்க்க, விவசாய வர்க்கக் கூட்டணியின் சோவியத் அமைப்புகளை உருவாக்குவதையும், தொடர்ந்து ஆட்சியில்  தங்களை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விக்கும் மார்க்சிய ஆய்வுரீதியாக விடையளித்தார். எதிரி வர்க்கம் பலவீனமடைந்து இருப்பது, இதர குட்டி முதலாளித்துவ வர்க்கங்கள் குழப்பமடைந்து பிரிந்து கிடப்பது, பாட்டாளி வர்க்கம் வலிமையாக அமைப்புரீதியாக ஒற்றுமைப்படுவது என புரட்சி இயக்கம் முன்னேறி வெற்றிகரமாக அக்டோபர் புரட்சி நிகழ்ந்தேறியது.

விரிவான உலகக் கண்ணோட்டத்துடன், அந்த காலத்தில் ருஷ்யாவில் நிகழ்ந்த சம்பவங்களின் ஒவ்வொரு தருவாயிலும் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக உள்வாங்கி சற்றும் தாமதிக்காமல் உடனுக்குடன் அதன் மீது பாட்டாளி வர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய நிலைபாட்டை உருவாக்கி நடைமுறையில் உயிர்த் துடிப்போடு செயல்பட லெனின் வழிவகுத்தார்.

1917-இல் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனினின் செயல்பாடு என்பது அவரது ஒட்டுமொத்த கற்றுணர்தலின் தொடர்ச்சி என்பதை பிரகாஷ் காரத் முன்னுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். குறிப்பாக ருஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி, 1905 புரட்சியின் அனுபவம், ருஷ்ய சமுதாயத்தில் பல்வேறு வர்க்கங்களின் குணம், அவர்கள் மேற்கொண்ட நிலைபாடு, முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறியது, சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம், கட்சி ஸ்தாபனம் இதில் எத்தகைய நிலைபாடு எடுக்க வேண்டும் என ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியுடனும், பல்வேறு இயக்கப் போக்குகளின் உள்ளார்ந்த சிக்கலான உறவுகளுடனும் ஒரு முரணற்ற, முழுமையான தத்துவார்த்த புரிதலுடன் செயல்படுவதற்கான வழிமுறையை லெனின் உருவாக்கினார்.

குறிப்பாக இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது, ஆங்காங்கே, இந்தியாவின்

புறவயமான சூழலுடன் இயல்பாக ஒப்பிட்டுப் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. மிகப்பெரும் குட்டி முதலாளித்துவ நடுத்தர வர்க்கம் இருப்பது, அந்த வர்க்கம் தத்துவார்த்த ரீதியாக பாட்டாளி வர்க்கத்தை கறைப்படுத்துவது, எனவே தொழிலாளி வர்க்கம் குட்டி முதலாளித்துவ அரசியல் கண்ணோட்டத்துக்கு இரையாவது, இதற்கு எதிராக மார்க்சிஸ்டுகள் புறச்சூழல், வர்க்கங்கள், மக்கள் திரளின் மெய்யான எதார்த்த நிலைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் செயல்பாட்டை வகுக்க வேண்டிய தேவை, தனிநபர்களை மையப்படுத்தி பிரச்சனைகளைப் பார்க்கும் நிலை எடுப்பதை தவிர்க்க வேண்டும், குட்டி முதலாளித்துவ அரசியல் கண்ணோட்டத்திற்கு ஆட்பட்ட தொழிலாளிகளை சொந்த வர்க்க உணர்வில் அரசியல்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

புரட்சிகர தற்காப்புவாதம் என்பது எப்படி புரட்சிகர முன்னேற்றத்துக்கு மோசமான எதிரியாகத் திகழ்கிறது, முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். யுத்தம் எப்படி முதலாளித்துவத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் லெனின், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முதலாளித்துவத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்கம் அரசதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்துடன் இணைத்துப் பார்க்க வற்புறுத்துகிறார்.

அதேபோல் புதிய அமைப்புகளை உருவாக்கும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் ஆரம்ப கட்டத் தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் தவறே செய்யாமல் இருப்பதை விட அது நல்லதுதான். தவறு செய்யாமல் தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற சட்ட வல்லுநர்களுக்குக் காத்துக் கொண்டிருப்பதை விட தவறிழைக்கலாம் என்கிறார்.

ஒரேயொரு உண்மையான சர்வதேசியம்தான் உள்ளது. அது சொந்த நாட்டில் புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவது; புரட்சிகரப் போராட்டத்தில் ஈடுபடுவது. மற்ற ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் இதுபோன்ற புரட்சிகரப் போராட்டங்களை ஆதரிப்பது என்பதைத் தவிர வேறில்லை.

உண்மையிலேயே பயங்கரமான சர்வதேச யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவர் வார்த்தையில் அல்லாமல், நிஜத்தில் சர்வதேசவாதியாக இருப்பது கடினமானது. அவர்கள் வெகு சிலராக இருக்கக்கூடும். ஆனால் அந்த வெகு சிலரைத்தான் சோசலிசம் சார்ந்திருக்கிறது. அவர்கள் மட்டுமே மக்களின் தலைவர்கள்! என்று புகழ்ந்துரைக்கிறார் லெனின்.

முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என மயக்கத்தில் சிக்குவது, வர்க்க சமரச அணுகுமுறை ஆகியவற்றுக்கு எதிராகவும் தொழிலாளர்களுக்கு அரசதிகாரத்தைக் கைப்பற்றவும், புதிய அமைப்பை உருவாக்கவும் வர்க்க கல்வி புகட்டுவது பற்றியும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார் லெனின்.

முந்தைய புரட்சிகள் எல்லாம் அரசு இயந்திரத்தை இன்னும் கூர்மைப்படுத்தி அவற்றை ஒழுங்குபடுத்தின. ஆனால் அதை கட்டாயம் உடைத்து நொறுக்க வேண்டும் என்பதே அரசு பற்றிய மார்க்சியத்தின் முதன்மையான, அடிப்படையான கருத்து என்று விளக்குகிறார். அதேபோல் மார்க்ஸ் எப்போதும் நடைமுறையில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்தான் தனது கருத்தை உருவாக்கினார், ஒருபோதும் தனதுசொந்த அனுமானத்தை திணித்ததே கிடையாது என்பதையும் லெனின் எடுத்துக் காட்டுகிறார்.

யுத்த காலத்தில், ருஷ்யாவில் இருந்த நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ இடைக்கால அரசின் கையாலாகாத் தனத்தை வெறுமனே விமர்சிப்பதுடன் லெனின் நிறுத்திக் கொள்ளவில்லை, மாறாக நிகழ்ந்த சம்பவங்களில் மாற்று திட்டம், செயல்முறை என்னவாக இருக்க வேண்டும் என்ற பாட்டாளி வர்க்க தத்துவத்தின் அடிப்படையிலான மாற்றையும் முன்வைத்தார்.

புரட்சியின் இலக்கு என்ற கட்டுரையில், “ரஷ்யா ஒரு குட்டி முதலாளிகளின் நாடு, மக்கள் தொகையில் மிகப் பெரும் பகுதி இந்த வர்க்கத்தை சார்ந்ததாக இருக்கிறது. இந்த வர்க்கம் முதலாளிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது. அந்த வர்க்கம் பாட்டாளிகளுடன் சேரும்போதுதான் புரட்சியின் வெற்றி, அமைதி, விடுதலை, உழைக்கும் மக்களுக்கு நிலம் ஆகியவை எளிமையாக, அமைதியான முறையில், சுமுகமாக, விரைவாக உத்தரவாதப் படுத்த முடியும்.

நமது புரட்சியின் போக்கு, இந்த ஊசலாட்டத்தை நடைமுறையில் காட்டிக் கொண்டிருக்கிறது. எனினும் நாம் சோசலிஸ்ட் புரட்சிக் கட்சி, மென்ஷ்விக் கட்சிகளைப் பற்றி எந்த பிரமையிலும் நங்கூரமிட்டு நிற்கக் கூடாது. நாம் நமது பாட்டாளி வர்க்கத்தின் பாதையில் உறுதியாக நிற்க வேண்டும்.” (பக்கம் 239).  என லெனின் கூறுவது நமக்கு தெளிவான வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

“நெருக்கடி முற்றியிருக்கிறது” என்ற கட்டுரையில், அரசியல் நிர்ணயசபை என்ற பிரமையில் போல்ஷ்விக்குகள் துளியும் சிக்கக் கூடாது. அதன் மீது நம்பிக்கை வைத்து காத்திருப்பது பாட்டாளி வர்க்கத்தின் லட்சியத்துக்கு துரோகமிழைப்பதாகும் என்று விமர்சித்திருப்பார்.

நவம்பர் புரட்சிக்கு முந்தைய சில நாட்களில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களுக்கும், தோழர்களுக்கும் அவர் எழுதியிருக்கும் கடிதங்கள் தாமதிக்காமல் மக்களை ஆயுதபாணியாக்க வேண்டியதன் அவசியத்தையும், புரட்சி குறித்து பல்வேறு குளறுபடி, குதர்க்க வாதங்களை எழுப்பும் சீர்குலைவு சக்திகளுக்கு பதில் அளிக்கும் தன்மையில், பாட்டாளி வர்க்கத்துக்கு தெளிவுபடுத்தக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. மகத்தான புரட்சியாளர் லெனினின் மேதமை மிக்க தலைமையும், வழிகாட்டுதலும், நிறைவாக புரட்சியின் வெற்றிக்கு, மனிதகுல வரலாற்றில் சுரண்டலும், ஒடுக்குமுறையும் இல்லாத, மனிதர்களின் மேன்மையான வாழ்க்கைக்கான மகத்தான சகாப்தத்தைத் தொடக்கி வைத்த சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு வித்திட்டு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது!

இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது சோசலிசப் புரட்சி மீதான நம் நம்பிக்கை முன்னிலும் பல மடங்கு பெருகும் என்பது சர்வ நிச்சயம்!

அதேசமயம் மார்க்சை கற்பது என்பது அவரது எழுத்துக்களை, வாக்கியங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது ஆகாது. அதேபோல் லெனினின் 1917 புரட்சியை படிப்பதும் கூட இன்றைய காலத்திற்கு அதை அப்படியே பிரதி எடுப்பதாக இருக்க முடியாது.

இப்புத்தகத்துக்கு அளித்த முன்னுரையில் பிரகாஷ் காரத் மிகத் தெளிவாக இதை சுட்டிக்காட்டுகிறார். இன்றைய 21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம் என்பதும் ஏகாதிபத்திய யுகம் தோன்றிய காலம் போல் இல்லை. இன்றைய ஏகாதிபத்தியம் என்பது உலகளாவிய நிதிமூலதனத்தால் பற்ற வைக்கப்பட்டதாக இருக்கிறது. அது மிக அதிகளவு மையப்படுத்தி, பன்மடங்கு பெருகியதாக உள்ளது. சோவியத் புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்ற பல புரட்சிகள் மற்றும் சமூக முன்னேற்றங்கள் முடிந்து விட்டன. இந்த காலம் என்பது சோவியத் யூனியன் வீழ்ச்சியுடன், நவீன தாரளமயத்தின் வருகை காலமாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக வறட்டுத்தனம், சீர்குலைவுவாதம் மற்றும் பிற்போக்குத் தத்துவங்கள் தலை தூக்குகின்றன. நவீன தாராளமயம் அதனளவில் ஒரு முட்டுச்சந்தில் சிக்கியிருந்தாலும் கூட, அதற்கு மாறான முற்போக்கு மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை.

இத்தகைய காலத்தில், லெனின் மற்றும் அவரது படைப்புகள் மிகுந்த பொருத்தமுள்ளவையாக இருக்கின்றன. லெனின் 1914ஆம் ஆண்டில் இருண்ட சூழலைச் சந்தித்தார். இரண்டாம் அகிலத்தின் பெரும் எண்ணிக்கையிலான தலைவர்களும், கட்சிகளும் சர்வதேச லட்சியத்தைக் கைவிட்டு போரில் தங்கள் சொந்த முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஆதரவாக நின்றனர். இத்தகைய பின்னடைவை எதிர்கொண்டுதான் லெனின் ஒரு கருத்தியலை உருவாக்கி நெருக்கடியைப் பயன்படுத்தி  போல்ஷ்விக்குகள்  மிகப் பெரும் சக்திகளை அணிதிரட்டி புரட்சியை நடத்த முடிந்தது. இதற்காக லெனின் மார்க்சிய கருத்தியலில் வழக்கமான வார்ப்பில் இருந்து முறித்துக் கொண்டு மார்க்சியத்தைச் செழுமையாக வளர்த்தார். புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் புரட்சிகர நடைமுறை இல்லை என்று அவர் கூறினார்.

லெனின் தலைமை தாங்கி வழிகாட்டிய 1917 நவம்பர் புரட்சி அதேபோல் மீண்டும் நிகழாது என்பது உண்மையே! எனினும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, 20ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த புரட்சிகளின் அனுபவத்தில், 1917ல் லெனின் உருவாக்கிய கருத்தியலின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டே எதிர்கால புரட்சிகளை கட்ட முடியும் என்பதும் அதே அளவுக்கு உண்மையே! சமூக முரண்பாடுகளைப் பயன்படுத்தி வர்க்கப் போராட்டங்களை உருவாக்குவது, ஆளும் வர்க்கங்களை தனிமைப்படுத்தும் நீண்ட கால யுத்தி, உடனடி நடைமுறை உத்தியை வகுப்பது, ஒரு தொடர்ச்சியையும், தலைமையையும் வழங்கக் கூடிய அடித்தளமான ஸ்தாபனத்தை கட்டுவது என கருத்தியல் முன்னேற்றத்தின் மூலமே புரட்சியின் புதிய வடிவங்கள் தோற்றம் பெறும். புரட்சிகர நடைமுறை உருவாகும்.

லெனின் அவர் காலத்தில் எப்படி மார்க்சிய கருத்தியலை புத்தாக்கம் செய்து வலிமையாக பயன்படுத்தினாரோ, அது போல் நாம் செயல்பட வேண்டும். அத்தகைய கருத்தியல் ஆயுதபாணியாக்கப்படும் புரட்சிகர அமைப்பின் மூலம்தான் இயக்கங்களை உருவாக்கி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஒன்றுசேர்த்து சமூகத்தை புரட்சிகரமான முறையில் மாற்றி அமைக்க முடியும்.”

புரட்சியின் மீது புது நம்பிக்கை பாய்ச்சும் இப்புத்தகத்தை வாசிப்பது என்பதும் நம்மை கருத்தியல் ஆயுதபாணியாக்கிக் கொள்ளும் ஒரு நடைமுறையே ஆகும்!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s