மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நெய்தல் நிலையும் கார்பரேட் வலையும் …


எடிட்: மதன்ராஜ்

  • முனைவர் அ.பகத்சிங்

சுனாமி பேரலையின் பாதிப்புகள் பொதுச் சமூகத்தின் கவனத்தை மீனவர்கள் மீது திருப்பியது. மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்ற விதமே, அரசிற்கும், பொதுச் சமூகத்திற்கும் மீனவர் குறித்த புரிதல் இல்லாததை வெளிப்படுத்தியது. அதன் காரணமாக சுனாமியில் உறவுகளை, உடமைகளை இழந்த மீனவர்களை மீட்டு, இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதில் அரசு தோல்வியடைந்தது.

வளர்ச்சியின் பெயரால் வரும் நெருக்கடிகள்

சுனாமியின் பெயரால் கடற்கரையை நோக்கி நிவாரண நிதியாகக் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய்கள், மீனவ கிராமங்களில் கட்டமைப்பு ரீதியாகச் சில மாற்றங்களைக் கொண்டுவந்தன. மற்றபடி புதிய என்.ஜி.ஓக்களின் பிறப்பும், இருந்த என்.ஜி.ஓக்களின் சீரழிவும், அதன் மூலம் கொழுத்த புதிய பணக்காரர்கள் மட்டுமே சுனாமி மீட்பு பணியினால் கிடைத்த பலன்கள்.

சுனாமிக்கு பிந்தைய 13 ஆண்டுகளில் அதன் பாதிப்புகளில் இருந்து மீளாத மீனவர்கள் மீது மேலும் பல பாதிப்புகள் ஏவப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் இயற்கையானவை அல்ல. ‘வளர்ச்சி’ யின் பெயரால் ஆளும் வர்க்கம் தொடுக்கும் செயற்கையான பாதிப்புகள். இயற்கையின் சீற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட மீனவர்களுக்கு இப்போது தவிர்க்க முடியாத பிரச்சனையாக இருப்பது வளர்ச்சியின் பெயரால் வரும் நெருக்கடிகள்தான்.

தமிழகத்தின் 1076 கி.மீ. கடற்கரை பரவியுள்ள 13 மாவட்டங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் வளர்ச்சியின் பெயரால் கடற்கரை நிலம் வணிகமயமாக்கப்பட்டு, விரைவில் முற்றிலுமாக மீனவர்களிடம் இருந்து அந்நியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சுனாமிக்கு முன்பே கடற்கரைப் பகுதிகளில் பல வளர்ச்சி திட்டங்கள் அமலில் இருந்தாலும், சுனாமிக்கு பிந்தைய காலகட்டத்தில் கடற்கரை மண்டலம் அசுர தாக்குதலை சந்தித்து வருகிறது. இதற்காக மீனவர்களைக் கடற்கரையில் இருந்தும், கடல் தொழிலில் இருந்து அந்நியப் படுத்தும் முயற்சிகள் கடந்த சில 10 ஆண்டு களாகத் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தமிழகத்தின் தென்கோடி குமரி மாவட்டத் தின் நீரோடியில் துவங்கி, வடக்கே திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு வரை, மாவட்டத் திற்கு மாவட்டம் பிரச்சனைகள் வேறுபட்டாலும், மீனவர்களை கடற்கரையில் இருந்து அந்நியப்படுத்துவதே அடிப்படை நோக்கமாக உள்ளது. இனயம், கூடங்குளம், ஸ்டெர்லைட், அனல் மின் நிலையங்கள், கனிமவளச் சுரண்டல்கள், இறால் பண்ணைகள், தொழிற்சாலைகள், கடற்கரை நிலம் ஆக்கிரமிப்பு என மீனவர்களின் வாழ்வியல் காவு கொடுக்கப்பட்டு வருகிறது.

கடற்கரை என்பதை மக்களின் வாழ்வாதாரப் பகுதியாகப் பார்ப்பதற்குப் பதிலாக பொருளாதார மண்டலமாகவே அணுகும் தன்மை அரசிற்கு 1980களிலேயே தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே சென்னை மெரினாவை அழகு படுத்தும் முயற்சிகள் என்ற பெயரில் அரசின் அடாவடி தனங்களும், அதற்கு மீனவர்கள் எதிர்ப்பும், அதையொட்டி நடந்த காவல்துறையின் வன்முறை அத்துமீறலில் ஒன்பது மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதுவே தமிழகத்தில் கடற் கரை வணிகமயமாக்கலுக்கு எதிராகக் கொடுக்கப் பட்ட முதல் களப்பலி எனலாம்.

அதன் பிறகும் ஆங்காங்கே தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மீனவர்களிடம் இருந்து கடற்கரை நிலம் பறிக்கப்பட்டு வருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்காகக் கடற்கரைக்கு வந்த அரசு. சுனாமி எனும் பேரழிவையே மீனவர்களைக் கடற்கரைவிட்டு துரத்த பெரிய ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்தது.

கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் மீனவ கிராமங்கள் இருப்பது ஆபத்து என்று ஓலமிட்டது. கடற்கரையில் இருந்து விலகி செல்வது தங்களின் வாழ்வியலுக்குப் பேராபத்து என்று உணர்ந்த மீனவர்கள், விலகி செல்ல மறுத்தனர். அரசு மாற்று வீடுகளை வலுக்கட்டாயமாக கடற்கரையில் இருந்து பல கிலோமீட்டர்கள் தள்ளித்தான் கட்டித்தந்தது. புதிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மீனவர்கள் இன்றும் வாழ்வாதாரத்திற்காக அல்லல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

கடற்கரையில் குடியிருப்புகள் இருப்பது ஆபத் தாகத் தெரிந்த அரசாங்கத்திற்கு, அனல்மின் நிலையங்கள், இரசாயன தொழிற்சாலை, சொகுசு பங்களாக்கள், கேளிக்கை விடுதிகள் அமைவது பிரச்சனையாகத் தெரிவதில்லை என்பது வேடிக்கையானது!

கடற்கரையில் தொழில்மயம்

தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களில் தொழில்மய முயற்சிகளால் பெரிதும் சீரழிக்கப் பட்ட மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், கடலூர் முதன்மை இடம் வகிக்கின்றன. இம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இனி தமிழகத்தின் மீதமுள்ள பகுதியில் நடக்கப் போகிறது.

திருவள்ளூர்-வடசென்னை

சென்னையில் மெரினாவிற்கு அடுத்தபடியாக மிக நீண்ட கடற்கரையைக் கொண்டதாக வடசென்னையின் எண்ணூர், திருவள்ளூர் மாவட்டத்தின் காட்டுப்பள்ளி – பழவேற்காடு பகுதிகள் இருந்தன. இயற்கையாக இருந்த கடற்கரை தற்போது முற்றிலுமாகக் கடலரிப்பால் காணாமல் போய்விட்டது.

இதற்கு இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட தொழில்மயமாக்கல் முயற்சிகளே காரணம். எண்ணூர் துறைமுகக் கட்டுமான பணிகள் 1999ஆம் ஆண்டு தொடங்கிய உடனேயே திருவொற்றியூர் முதல் எண்ணூர், பழவேற்காடு வரை கரை எங்கும் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கடற்கரையில் இருந்து கடலுக்குள் நேரடியாக மீன்பிடிக்கச் செல்ல முடியாம லும், படகு, வலை போன்றவற்றை உலர்த்த முடியாமலும் மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.

திருவொற்றியூர்-எண்ணூர்-மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக கனரக வாகனம், பெட்ரோலியம், ரசாயன தொழில் தொடர்புடைய இருபதுக்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களும், ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. எண்ணூரில் அரசு முதலீட்டில் 1970களில் உருவாக்கப்பட்ட எண்ணூர் அனல் மின் நிலையத்தைத் தொடர்ந்து, வடசென்னை அனல் மின் நிலையமும், பிறகு வல்லூர் அனல் மின் நிலையங்களும் கடந்த பத்து ஆண்டுகளில் அசுரகதியில் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

மேற்குறிப் பிட்ட தொழிற்சாலைகளின் அனைத்து கழிவுகளும் கொட்டப்படும் இடமாக இருப்பது கொசஸ்தலை ஆறும், அது வந்து சேரும் அண்மை கடலும்தான். இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிக மோசமான நிலையைத் தாண்டிவிட்டது. இன்றும் எண்ணூரில் கடலில் கலக்கும் கொசஸ்தலை ஆறானது எண்ணெய் கழிவுகளோடு சேர்ந்து கருப்பு நிறத்தில்தான் கடலில் கலக்கின்றது.

அனல்மின் நிலையத்திற்காக உள்ளெடுக்கப்படும் நீரானது, அனல்மின் நிலைய உலை கலனை குளுமைப்படுத்திய பிறகு மீண்டும் ஆற்றில் விடப்படுகிறது. ஆற்றில் கலக்கும் கொதி நீர், அப்பகுதியின் உயிர் சூழலை முழுவதுமாக அழித்துள்ளது. மீன் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வடசென்னை அனல் மின் நிலையம் செயல்படத் துவங்கிய போது உலை கலனில் இருந்து சூடான கழிவு நீர் வெளியேறியதும், எண்ணூர் முதல் பழவேற்காடு வரை பல ஆயிரம் கிலோ மீன்கள் இறந்து மிதந்தன. இருங்கெழுத்தி, சாளை உள்ளிட்ட மீன்கள் பலவும் இறந்து மிதந்ததைக் கண்டு மீனவர்கள் அதிர்ந்தனர்.

எண்ணூருக்கு அடுத்த அத்திப்பட்டுக்காட்டுப் பள்ளி பகுதிகளில் அனல் மின் நிலையம், L&T, பிற தொழிற்சாலைகள் கட்ட துவங்கியதில் இருந்து ஆற்றின் நீர் ஓட்டத்தை அடைப்பது என்பதை இந்நிறுவனங்கள் மிக இயல்பாக செய்துவருகின்றன. பொதுவாக, முகத்துவாரப் பகுதியில் கடல் நீரானது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏறி இறங்கும். இதனை மீனவர்கள் வெள்ளம்-வத்தம் என்பார்கள். முகத்துவாரப் பகுதியில் நடைபெறும் இந்த வெள்ளம்-வத்தம்தான் ஆற்றின் வளத்தையும், மீன் இன வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. நாள் முழுவதும் அனல் மின் நிலையத்திற்கும் நீர் தேவைப்படுவ தால், வத்தம் ஏற்படும் நேரத்திலும் கடலில் இருந்து ஆற்றில் நீர் ஏறுவதற்காகத் தொடர்ந்து பள்ளம் தோண்டப்படுகிறது. அது மட்டுமல்லாது, ஆற்றின் நடுவே ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுமானங்கள் ஆற்றின் இயற்கை யான வெள்ளம் ஓட்டத்தைத் தடைசெய்கிறது.

வடசென்னை அனல் மின் நிலையத்தால் துவக்கி வைக்கப்பட்ட கொற்றலை ஆற்றின் சூழலியல் படுகொலை, அடுத்தகட்ட வளர்ச்சியாகக் குருவிமேடு, வல்லூர் என புதிய யூனிட்கள் விரிவாக்கத்தின் மூலம் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் L&T கப்பல் முனையம், எண்ணூர் துறைமுகம், பத்துக்கும் மேற்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிலையங்கள், சிமெண்ட் என கொற்றலை ஆற்றை தினம் தினம் அழித்து வருகின்றனர்.

ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியை அரசு நிறுவனமான வடசென்னை அனல்மின் நிலையமே ஆக்கிரமிப்பு செய்து சாம்பல் கழிவுகளைக் கொட்டும் இடமாக மாற்றியது. அவர்களைத் தொடர்ந்து அதைச் சுற்றியுள்ள பிற நிறுவனங்களும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றன. ஆக்கிரமிப்பு, விதி மீறல்களைக் கட்டுபடுத்த வேண்டிய அரசுத் துறைகள் வேடிக்கை பார்க்கின்றன. ஆக்கிரமிப்பிற்குச் சாதகமாக அப்பகுதியின் வரைபடத்தையே மாற்றியமைக்கிறது மாவட்ட நிர்வாகம்.

எண்ணூர் ஆற்றின் மாசு நிலை குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ஆய்வுகள் ஆற்றின் நீர், மண் மற்றும் மீன்களின் மாதிரிகளை எடுத்து அதில் படிந்துள்ள அமிலம், ரசாயனம், உலோகத்தின் அளவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம் மீனில் துத்தனாகம், காரீயம் உள்ளிட்ட உலோகங்களின் அளவு கூடுதலாக உள்ளதாகவும், ஆற்று நீர் மற்றும் மணலில் எண்ணெய், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட ரசாயனங்களின் அளவு கூடுதலாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த மாசு அளவை மறுக்கவில்லை என்றாலும், இந்த மாசு அளவு மனிதனை பாதிக்காது என்று பசப்பலாகத் தெரிவித்துள்ளது. அளவுக்கு அதிகமான மாசு காரணமாக இப்பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் உணவுக்குத் தகுதியற்றதாகச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலத்தடி நீரில் புளோரைட், காற்றில் கரி அமிலம், ஆற்று நீர் முழுக்க சாம்பல், ரசாயன கழிவுகள் என பாதிப்புகள் ஏராளம். கொசஸ்தலை ஆறும், கழிமுகமும் உயிர் உற்பத்திக்குத் தகுதியற்றதாக மாறிவிட்டன. மீன், இறால், நண்டு வகைகளின் உற்பத்தி அதிகம் இருந்தது. இக்கழிவுகள் ஆற்றின் வழியே கடலில் கலந்து, அண்மை கடல் பகுதியை மாசு மிக்கதாக மாற்றியுள்ளது. இதனால் கடல் சார்ந்த மீன் பிடித்தலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியின் பன்முக உயிர் சூழலே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

கடலூர்- நாகப்பட்டினம்

கடலூர் மாவட்டம் மிக வேகமாகத் தொழில்மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடற்கரை மண்டலத்தில் அதிக தொழிற்சாலைகள் உருவாக் கப்பட்டு வருகின்றன. சிப்காட் தொழிற்பேட்டை யைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சாலைகள் மாவட்டம் முழுக்க உருவாக்கப்பட்டுவருகின்றன. கடலூர் டவுனில் இருந்து பரங்கிப்பேட்டை வரை 30 கி.மீட்டர் தொலைவில் சுமார் 8,000 ஏக்கர் நிலம் எண்ணெய் சுத்திகரிப்பு, அனல்மின் நிலையம், சாயத்தொழிற்சாலை எனப் பல்வேறு நிறுவனங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் சிப்காட் நிறுவனங்கள், நாகர்ஜூனா சுத்திகரிப்பு நிலையம், அனல் மின் நிலையங்கள், சைமா பூங்கா போன்றவை தொடர்ச்சியாக உள்ளன. அனல்மின் நிலையத்தில் 50,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவிக்கிறது. மேலும் 13,040 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனல் மின் நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் பவர் கார்ப்பரேசன் லிமிடெட், பரங்கிபேட்டை ஒன்றியத்தில் உள்ள IL&FS, எஸ்.ஆர்.எம் எனர்ஜி லிமிடெட், சிங்டியா பவர் லிமிடெட், செட்டிநாடு பவர் கார்ப்பரேசன் (தரங்கம்பாடி), NSL Power Ltd (சீர்காழி வட்டம்) என கடலூர், நாகை ஆகிய இரண்டு மாவட்டங் களுக்கு உட்பட்ட 70 கி.மீ தொலைவில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இத்தொழிற் சாலைகளில் இருந்து உருவாகும் சாம்பல் கழிவுகளும், நச்சுப்புகையும் அப்பகுதியில்தான் கலக்கின்றன என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதைத் தவிர்த்து சிப்காட் தொழிற்சாலைகளின் உற்பத்தி கழிவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை கள் ஏராளம். குறிப்பாக, மீனவர்கள் வாழ்வாதாரமே நெருக் கடிகளுக்கு உள்ளாகிறது.

தரங்கம்பாடியில் செட்டிநாடு மின் திட்டம் தனது படகுத் துறையைக் காரணம் காட்டி மீனவ மக்களை அப்பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து விட்டது. இதன் விளைவாகக் கடலுக்குச் செல்ல மீனவ மக்கள் 5 கி.மீ. சுற்றி மாற்று வழியில் செல்ல வேண்டியுள்ளது. புதுகுப்பத்தில் ஐ.எல்.எப்.எஸ் அனல் மின் நிலையம் அவர்கள் ஊருக்கு நேராக இருந்த மீன்பிடி தளத்தையும் படகு களை நிறுத்தும் இடத்தையும் ஊர் மக்களிடம் இருந்து அபகரித்துள்ளது. தரங்கம்பாடி அருகில் உள்ள பிள்ளை பெருமாள்பேட்டை அனல் மின் நிலையத்தில் கொதிநீரை சேமித்துக் குளிரவைக் கும் கலன்கள் முறையாக வேலை செய்யாமல் கடலில் அப்படியே கலக்கிறது. இதனால் அண்மை கடலில் மீன் கிடைப்பதே இல்லை. இதனால் சிறிய முதலீட்டில் கட்டுமரத்தில் சென்று மீன் பிடிப்பவர்கள் தொழில் இழந்து. பெரிய முதலீட்டில் இயங்கும் இயந்திர படகுகளில் கூலிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

படகுத்துறையை மீனவர்கள், விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அபகரித்தது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலையும் கடுமையாகச் சீரழித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய அளவில் நடத்திய ஆய்வில் இந்தியா விலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியலில் கடலூர் மாவட்டம் 16வது இடத்தில் உள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய 22 வகையான கரி அமில வாயுக்களால் சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்கள் துயருக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் நீரி அமைப்பே கடலூரில் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகள் மாசு அடைந்துள்ளதாகவும், இங்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மீன்பிடி, விவசாயம் சார்ந்து வாழ்ந்து வந்த உள்ளூர் மக்கள் வாழ்வாதாரம் இழந்து மாற்று வழி இல்லாமல் பரிதவிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தைக் காவு வாங்கிய தொழிற் சாலையில் இவர்களுக்கு வேலை தரப்படுவது மில்லை. “திறனற்றவர்களாக” (unskilled) கருதப் பட்டு ஒதுக்கி வைக்கப்படுக்கின்றனர். இவர்களுக்கு முறையாகத் தொழிற்கல்வி பயிற்சி அளித்து வேலை அளிப்பதற்கான முயற்சிகளை அரசு எடுப்பதில்லை.
மத்திய அரசால் 2012 ஆம் ஆண்டு திட்டமிடப் பட்ட பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் (Petroleum, Chemicals and Petrochemicals Investment Region) கடலூர்-நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமலாக உள்ளது. கடலூர்-நாகை மாவட்டத்தின் 45 கிராமங்களுக்கு உட்பட்ட 22,928 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மட்டும் ரூ.16,725 கோடி நிதி ஒதுக்கி யுள்ளது மாநில அரசு. இத்திட்டம் மட்டும் அமல் படுத்தப்பட்டால், இத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இவ்வளவு தொழிற்சாலைகள் வரும்போது, அதனை ஏற்றுமதி செய்யப் பல துறைமுகங்கள் இந்தக் கடற்கரையில் வரவுள்ளன. இத்திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சாகர் மாலா திட்டத்துடன் இணைக்கப்படுவதால் பல துறை முகங்கள் இப்பகுதியில் வருவது உறுதி. இதனால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டு, மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கும். கழிவு நீர் வெளியேற்றம், ஏற்றுமதி இறக்குமதி என துறைமுகம் சார்ந்த கடற்கரை நிலப்பரப்பு முழு மையாகப் பயன்படுத்தப்படும். எனவே, இப்பகுதி களில் இருந்து மீனவர்கள் வெளியேற்றப்படுவது உறுதி. மேலும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங் கள், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அலையாத்தி காடுகள் பாதிக்கப்படும். சிப்காட் தொழில்மயத் தால் பரவனாறு மற்றும் உப்பனாற்றில் ஏற்பட்ட பாதிப்புகளைப் போலவே இந்த தொழில்மயத் தால் மாவட்டம் முழுக்க நிகழ போகிறது.

இப்பகுதிக்கு முன்பு வந்த நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தியபோது விவசாயிகளைவிட இடைத்தரகர்களே அதிக லாபமடைந்தனர். நேர்மையற்ற முறையில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சிறிய அளவில் நிலம் வைத் திருந்த ஏழை விவசாயிகள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மிரட்டி விரட்டப்பட்டனர். நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரண நிதி உள்ளது. ஆனால் கடற்கரையில் எடுக்கப்படும் நிலத்தால் மீனவர்களுக்கு எவ்வித நஷ்ட ஈடும் கொடுக்கப்படுவதில்லை. காரணம் கடற்கரை அனைத்தும் கடல்சார் புறம்போக்கு நிலமாக உள்ளது. எனவே அரசு நிலத்திற்கு நஷ்ட ஈடும் மக்களுக்கு வழங்க வேண்டியதில்லை. ஆனால் மீனவர்கள் பாரம்பரியமாகத் தங்கள் வலையைப் காயப்போடவும், மீன் உலர்த்தவும் பயன்படுத்தி வந்த பொது நிலத்தை இழப்பார்கள்.

பிற மாவட்டங்களில்..

கன்னியாகுமரியில் இனயம், திருநெல்வேலி யில் கூடங்குளம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எனக் கடற்கரை மாவட்டமெங்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் தொழில்மயத்தால் நெருக்கடியில் தான் உள்ளது. இனயம் துறைமுகத்திற்கு எதிரா கக் குமரி மாவட்ட மீனவர்கள் மட்டுமல்லாது, விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து போராடி வருகின்றனர். இத்துறைமுகம் அமைக்கப்படுவ தால் 20,000 மீனவக் குடும்பங்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும். குமரி கடலின் இயற்கை சூழல் துறைமுகத்திற்கும் உகந்ததும் இல்லை. அப்பகுதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் விழிஞ்ஞம் துறைமுகம் இருக்க, இன்னொரு துறைமுகம் எதற்கு என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இனயம் துறைமுகம் அமைக்கப்பட்டாலும், அங்கிருந்து பொருட் களைப் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல போதிய சாலை வசதியும் இல்லை. ஆனால், மத்திய அரசு இனயம் துறைமுகத்தை அமல்படுத்த மிகவும் முனைப்புக் காட்டுகிறது. பெரும் கார்ப் பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் காவு கொடுக் கப்படுகிறது. ஓகி புயலின் மீட்பு பணியில் பாரபட்சம் காட்டிய தில் கூடப் புயலை காண்பித்து மக்களைக் கடற்கரையில் இருந்து வெளியேற்றும் உள்நோக்கம் மத்திய அரசிற்கு உள்ளதாக மக்கள் கருதினர். கூடங்குளத்தில் அணுவுலைக்கு எதிராகச் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற எழுச்சிகரமான மக்கள் போராட்டமும், தற்போது தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும், அதை ஒடுக்கும் அரசின் பயங்கரவாதமும் அனை வரும் அறிந்ததே.

சாகர் மாலா
மத்திய அரசு 2015 ஆண்டு சாகர் மாலா திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் சர்வதேச தரத்தில் துறைமுகம் அமைத்து உலக மூலதனத்தை ஈர்த்து, நாட்டின் வர்த்தகத்தை உயர்த்துவது நோக்கமாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு ரூ. 70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல் மேற்குவங்கம் வரை அனைத்து கடற்கரை மாநிலங்களில் உள்ள துறைமுகங்களும் இணைக்கப்பட்டு இத்திட்டப்படி மொத்தம் 12 பெரிய துறைமுகங்களும், 200 சிறிய துறைமுகங் களும் இருக்கும். துறைமுகங்களின் மேம்பாடு தவிர துறைமுகங்களுடன் இரயில் பாதை இணைப்பு, விமானப் போக்குவரத்து, நீர்வழி இணைப்பு போன்றவை உருவாக்கப்படும். இத்திட்டத்தால் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்துவரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடற்கரையில் இருந்து முழுவது மாக மீனவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்தியாவில் உள்ள மீனவர் அமைப்புகள் அனைத்தும் சாகர் மாலா திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

தொழில் மையத்திற்காக நடைபெறும் முறைகேடுகள்
கடற்கரை மண்டலத்தில் நிலம் கையகப் படுத்துதல் என்பது கடந்த சுனாமிக்கு பிந்தைய காலகட்டத்தில் மிக வேகமான நடைபெற்று வருகிறது. இதற்காகக் கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மீறப்படுவதோடு, நீர்த்துப்போகவும், மாற்றியமைக்கப்பட்டும் வருகிறது. கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை 1991 (coastal Regulation zone –CRZ) என்பது மேலாண்மை வாரியமாக மாற்றப்பட்டது. ஒப்பீட்டளவில் CRZ-1991 கடற்கரை மீது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டியது, கடற்கரை வணிக மயமாக்கலை கட்டுப்படுத்தியது.

சூழலியல் ரீதியாக முக்கியப் பகுதிகளைப் பாதுகாக்கும் அம்சங்களைக் கொண்டிருந்தது. கடற்கரை மண்டல அறிவிப்பாணையின் விதிமுறைகளைத் தளர்த்தி அரசும், அதன் பிற அமைப்புகளும் இந்தக் கடற்கரையை ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சட்டரீதியான ஒத்துழைப்பை வழங்கிவருகிறது. கடந்த காங்கிரஸ் அரசு வெளி யிட்ட கடற்கரை மண்டல அறிவிப்பாணை-2011ல் பல அம்சங்கள் கடற்கரை வணிகமயமாதலுக்கு ஏதுவாகத் திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மீனவர்களுக்குப் பாதுகாப்பான சில அம்சங் களும் மீனவர் அமைப்புகளின் தலையீட்டால் சேர்க்கப்பட்டது. அதில் முக்கியமானது கடற் கரை மண்டல வரைபடங்கள் தயாரித்து மக்கள் பங்கேற்போடு கருத்துகளைக் கேட்டு இறுதிப் படுத்த வேண்டும். இப்படி மக்களுக்கு சாதகமாக வழங்கப்பட்ட வாய்ப்புகளை அபகரிக்கப் பார்க்கிறது அரசு.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச் சகம் கடற்கரை மண்டல அறிவிப்பாணையின் அடிப்படையில் நகல் வரைபடத்தைச் சமீபத்தில் அதன் இணையதளத்தில் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளது. இவ்வரைபடங்கள் முழுமை யற்றதாக உள்ளன. மிக முக்கியமான உயர் அலை கோடு, தாழ்வுஅலைகோடு, அபாயக்கோடு, மீனவ கிராமங்களுக்கான இடம் என எதுவும் முறையாக இடம் பெறவில்லை. சதுப்புநிலங்கள், கழிமுகம், மணல்திட்டுகள் என சூழலியல் ரீதியாக முக்கியமான பகுதிகள் யாவும் பாதுகாக்கப்பட்ட இடங்களாக முழுமையாக வரையறுக்கப்பட வில்லை.
கடற்கரை நிலப்பரப்பை வணிக மயமாக் கலுக்கான இடமாக மாற்றும் வேலையை இந்த நகல் வரைபடம் செய்கிறது. மாவட்டம் தோறும் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் போராடி வருகின்றனர். இப்படிச் சட்டரீதியாக விதிமுறை களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

மறுபுறம் உள்ளூர் நிலங்களைக் கார்ப்பரேட் களுக்கு தாரைவார்க்க உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள், தலைவர்கள் என அனைவரும் புரோக்கர்களாக மாறி இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை புரிகின்றனர். கடற்கரையில் உள்ள மீனவர்களோ, சிறு விவசாய மக்களோ தன் நிலங்களைக் கையளிக்க விரும்பாத நிலையில் இந்தத் தரகர்களே, இடை யில் நல்லெண்ண தூதர்களாக நின்று மக்களைக் கார்ப்பரேட்களின் சார்பாக இணங்க வைக் கின்றனர். இந்த நிறுவனங்களுக்குத் தேவையான சிவில் சப்ளை, தொழிலாளர்களை ஒப்பந்தத் தின் அடிப்படையில் வழங்கி ஒரு புதிய இடை வர்க்கமாக இவர்கள் உருவாகிவருகின்றனர்.

அதேபோன்று தொழிற்சாலைகளுக்கு நில கையகப்படுத்துதல் நடைபெறுவதற்கு மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ”சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA)” அறிக்கையின் அடிப்படையிலேயே நடை பெற வேண்டும். நுஐஹ அறிக்கை முறையாகச் செயல் படுத்தி இருந்தால் இவ்வளவு அசுரத்தனமான தொழிற்சாலைகளை இவ்வளவு குறுகிய இடை வெளியில் கட்டியிருக்க முடியாது. EIA அறிக்கையைப் பெயரளவில் மட்டுமே தயார் செய்கின்றனர்.

யாருக்கான வளர்ச்சி!?
சுனாமிக்கு பிந்தைய 14 ஆண்டுகள் முழுமை யும் கடற்கரை மண்டலம் எங்கும் தொடர் போராட்ட நிகழ்வாக உள்ளது. குறிப்பாகக் கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட், எண்ணூர் கொசஸ்தலை பாதுகாப்பு என போராட்டங்கள் தொடர் நிகழ்வாக உள்ளது. அசுரத்தனமாக மக்களைப் பாதிக்கும் இது போன்ற திட்டங்களை நியாயப்படுத்த “வளர்ச்சி” “தேச வளர்ச்சி” என்னும் வாதங்கள் முன்வைக் கப்படுகின்றன. “நமக்கு” மின்சாரம் வேண்டாமா என்கின்றனர். நாட்டின் ஏழை மக்களான மீனவர் களையும். விவசாயக் கூலிகளையும் நிர்க்கதியாக நிற்க வைத்துவிட்டு “தேச வளர்ச்சி” என்று பேசுவது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்?

தொழிலுக்கான முதலீடு வந்தால் நாட்டின் முதலீடு உயரும் என்கிறார்கள். இது எவ்வகையில் மக்களுக்கு பயனளிக்கிறது. இந்த வளர்ச்சியால் யாருக்கு பயன்??

முதலீட்டாளர்கள் கொள்ளை லாபமடைய நீர், நிலம், மின்சாரம் அனைத்தும் இலவச மாகவோ, குறைந்த விலையிலோ அரசு தருகிறது..

நில கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்குத் தொழிற் சாலையில் உரிய வேலைவாய்ப்பு வழங்கப்படுவ தில்லை. தொழிற்சாலையை ஒட்டிய பகுதி மக்களுக்கு வேலை தருவதில்லை என்பதை எழுதப்படாத விதியாகவே பின்பற்றுகின்றனர்
புதிய தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல சட்டங்கள் அமல் செய்யப்படுவதில்லை. எனவே உரிய கூலி, சமூக பாதுகாப்பான வேலை என்பதும் தொழிலாளர்களுக்கு உத்திரவாதம் இல்லை.

ஆலையின் கழிவுகளை அருகில் உள்ள நீர் நிலையிலோ, நிலத்திலோதான் வெளியேற்று கிறார்கள். அரசின் எந்தவொரு சுற்றுச்சூழல் சட்டங்களையும் அவர்கள் மதிப்பதில்லை. அரசும் கண்டிப்பதில்லை.

இப்படி அனைத்து வகையிலும் சுரண்டிவிட்டு லாபத்துடன் ஆலையை மூடிவிட்டு வெளியேறு கின்றனர்.
இந்த அயோக்கியர்தனத்தை ஆளும் வர்க்க சார்புடையவர்கள் கண்டும் காணாதது போல் இருப்பது இயல்பு. ஆனால் இம்மக்களின் பிரதிநிதியாய் செயல்பட வேண்டியவர்கள் வேடிக்கை பார்ப்பதும். கண்மூடித்தனமாக ”ஆமா, நாட்டின் வளர்ச்சி முக்கியம்“ எனப் பேசுவதும் யாருடைய வர்க்க நலனை பாதுகாக்க பயன்படும் என்பதே நம்முன்னுள்ள கேள்வி.

இப்படி முறை மீறி மேற்கொள்ளப்படும் திட்டங்களை வளர்ச்சி என்ற கண்கொண்டு பார்ப்பதால், முதலாளித்துவ அரசியல் கட்சி மக்களைக் கைவிடுகின்றனர்.

தமிழகத்தில் சமீப காலங்களில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கு எதிராக வலுவான மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாகக் கூடங்குளம், நெடுவாசல், கதிராமங் கலம், ஸ்டெர்லைட் ஆகியவற்றை சொல்லலாம். இப்போராட்டங்கள் யாவும் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் நேரடி தலைமை இல்லாமல், மக்களே தங்களுக்கான போராட்டத்தை திரளாக, சக்தியுடன் நடத்தியுள்ளனர். போராட்டம் உச்சத்தை எட்டிய பிறகே பிரதான அரசியல் கட்சிகள் களத்திற்குச் சென்று ஆதரவளித் துள்ளதை கண்கூடாகக் கண்டுள்ளோம். இந்த வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அதனால் அப்பகுதி மக்கள் அடையக்கூடிய பலன் என்ன என்பதைக் குறித்தும் கள அளவில் உள்ள எதார்த்த சூழ் நிலையை மக்களுக்காகச் செயல்படும் அரசியல் இயக்கங்கள் அறியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதுவரையிலான வளர்ச்சி திட்டங்கள் மீனவர் வாழ்வாதாரத்தைத் கடுமையாகப் பாதித்துள்ளன. மேலே குறிப்பிட்ட திட்டங்களை அமல்படுத்தும் பட்சத்தில் கடற்கரை முழுக்கப் போர்க்களமாகும் சூழல் உள்ளது. எனவே வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அது செயல்படுத்தும் விதம், மீனவர் கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள். சூழலியல் ரீதியாக வளர்ச்சி திட்டத்தின் நிலை என்ன என்ற அடிப்படை யிலேதான் இனி வளர்ச்சி திட்டங்கள் அணுகப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு மக்களுக்காகச் செயல்படும் அரசியல் இயக்கங்களின் செயல் திட்டம் மாற்றம் காண வேண்டும்.One response to “நெய்தல் நிலையும் கார்பரேட் வலையும் …”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: