மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பல்கலைக்கழகங்கள்: எங்கு, எப்படி செல்கின்றன? எங்கே, எப்படி செல்லவேண்டும்?


குரல்: ராம் பிரகாஷ்

எடிட்: மதன் ராஜ்

– எழுதியவர் பேராசிரியர் ச. கிருஷ்ணசாமி

தினம் பத்திரிகை, முகநூல் , வாட்ஸாப்ப் திறந்தால் பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்தி சர்ச்சைக்கு உரியதாகவேதான் இருக்கிறது. அது ஜவஹர்லால் நேரு பெயரை கொடண்டதாக இருக்கலாம்; அல்லது பாரதியார் பெயர் கொண்டதாகவோ, அல்லது  காமராஜர் பெயர் கொண்டதாகவோ இருக்கலாம்; மத்திய அல்லது மாநில பல்கலையாக இருக்கலாம்; மாணவர் மற்றும்  ஆசிரியர் மீது அராஜகங்கள், துணை வேந்தருடைய ஊழல்கள், பல்கலை வேந்தர் சார்ந்த பாலியல் புகார் உள்ளிட்ட புகார்கள் என்று பல்கலை புற்றிலிருந்து தினம் தினம்  புதிய அவலங்கள்  வெளியே வந்துகொண்டிருக்கின்றன. உயர்கல்வி எடை எவ்வளவு என்றும், அதன் தரம் என்ன என்றும் கேட்கும் நிலையில் இருக்கிறது. இந்த நிலை ஆண்டுக்கு ஆண்டு மோசமாகவும் ஆகிவருகிறது.

உயர் கல்வியின் வளர்ச்சியும் நோக்கமும்

வாழ்க்கையில் கற்கும் கல்வி அவரவர் அனுபவங்களை பொறுத்தது. எழுதப்பட்ட மானுட வரலாற்றில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட முறையான கல்வி உலகத்தில் பல்வேறு இடங்களில் மதம் சார்ந்தே தொடங்கப்பட்டது என அறிகிறோம். அத்தகைய கல்வி, மதத்தின் அடிப்படையில் உலகத்தை புரிந்து கொண்டு அந்த மதத்தை பரப்புவதற்கு உதவும் நோக்கை கொண்டிருந்தது. மேலும், ஒரு சிலருக்கே – ஆள்வோருக்கும் அவர்கள் சார்பாக செயல்பட்ட மத குருமார்களுக்கும் மட்டுமே – அக்கல்வி தரப்பட்டது.  சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் தட்சசீலம், நலந்தா போன்ற புத்த மதம் சார்ந்த உயர் கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டன. இவையும் ஒரு சிலருக்கே கல்வி கற்பிக்கும் இடங்களாக இருந்தன. ‘அல் குறைவுயின்’ என்று 1,400 ஆண்டுகளுக்கு முன் மதரசா வழி முறையில் ஒரு இஸ்லாமிய படிப்பு முறையில் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம் இப்பொழுது மொரோக்கோ என்றழைக்கப்படும் பகுதியில்  துவங்கப்பட்டது. சற்று பின்னர் ஐரோப்பாவில் கிறித்துவ மடங்கள் தொடங்கப்பட்டன. மதம் சார்பற்ற உயர் கல்வி கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள் 18-ம் மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பாவில் பல இடங்களில் உருவாகின. பிரெஞ்சு புரட்சியும் தொழில் புரட்சியும் இதற்கு முக்கிய காரணங்கள். பிரெஞ்சு புரட்சியில்தான் முதலில் அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு வைக்கப்பட்டது. தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு படித்த ஆட்கள் தேவைப்பட்டதன் காரணமாக, பொதுவாக முறைசார் கல்வியும், அதன் பகுதியாக உயர் கல்வியும்  ஓர் அளவுக்கு விரிவானது.

20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடந்த மகத்தான சோஷலிசப் புரட்சியில் கல்வியின் தன்மையும் நோக்கமும் முற்றிலும் புரட்சிகர மாறுதல்களுக்கு உள்ளாயின.  ரஷ்ய சோஷலிச நாட்டில் மனிதனை முழுமையாக  மேன்மைபடுத்தும் நோக்கம் கொண்ட, மானுட விடுதலையை இலக்காக கொண்ட, உயர் கல்வியை இலவசமாக பயிற்றுவிக்கும் அரசு  பல்கலைக்கழகங்கள் உருவாகின. இவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாக இருந்தன. இதை ஒட்டி  ஐரோப்பாவிலும்   அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் மற்றும் உலககெங்கும் கல்வியின் குறிக்கோள் விரிவடைந்தது. உயர் கல்வி என்பது எல்லா மனிதர்களும் முழுமை அடைந்து தங்கள் ஆற்றலுக்கு ஏற்றவாறு சமுதாயத்திற்கு உழைக்கும் உந்துதலுக்கான கல்வி என்ற கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வகையில் ஓரளவு கல்வி முறைகளும் அமைப்புகளும் ஆங்காங்கு மாற்றப்பட்டன. உலகெங்கிலும் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் இயக்கங்களும் கல்வி ஜனநாயகத்திற்கு குரல் கொடுத்தன. இப்போராட்டங்களின் தலைவர்கள் பொதுவாக நவீன கல்வி சித்தாந்தங்களையும் கல்வி முறைகளையும் கல்விக்கான அமைப்புகளின் அவசியத்தையும் ஏற்றனர். நவீன உயர் கல்வி  சமூகத்தை மேம்படுத்தும் வகையிலான மாற்றங்களைக்  கொண்டு வர உதவும் என்ற நம்பிக்கையும் பரவியது.

காலனி ஆதிக்க காலம்

காலனி ஆதிக்க காலத்திற்கு முன்பு இந்தியாவில் பெரும்பகுதி மக்களுக்கு பிறப்பின் அடிப்படையில் முறைசார் கல்வி மறுக்கப்பட்டது. காலனி ஆட்சி காலத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதிலும், நிலைமைகளில் அடிப்படையான மாற்றங்கள் நாடு முழுவதும் நிகழவில்லை. இந்திய நாட்டை சுரண்டி செல்வங்களை கொள்ளை கொண்டு போவதே காலனி ஆட்சியாளர்களின் நோக்கமாக பிளாசி யுத்த காலத்தில் (1757) இருந்து நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. அதன்பின் பிரிட்டிஷ் மூலதனம் மற்றும் பின்னர் இந்திய முதலாளிகள் முதலீடுகளை மேற்கொண்ட அடிப்படையில் ஏற்பட்ட நவீன தொழில்வளர்ச்சி ஓரளவிற்காவது நவீன கல்விமுறைகளையும் அமைப்புகளையும் இந்தியாவில் அமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. இதன் பகுதியாகத்தான் அன்றைய கல்கத்தா, பாம்பே (இப்போது மும்பாய்) மற்றும் மதராஸ் (இப்போது சென்னை) ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டன. இவை மானுட விடுதலை என்பதை இலக்காகக் கொண்டு அமைக்கப்படவில்லை. மாறாக, பள்ளிக்கல்வி முடிப்பவரும் உயர்கல்வி பெறுவோரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனிய ஆட்சிக்கு விசுவாசமாக பணியாற்றிடும் நபர்களாக தகவமைக்கப்படவேண்டும் என்பதே “புகழ்பெற்ற” மெக்காலே கல்வி முறையின் இலக்காக இருந்தது. இருந்தாலும், முதலாளித்துவ வளர்ச்சி, விடுதலை இயக்கம், வளர்ந்து வந்த இந்திய முதலாளி வர்க்கத்தின் நலன்கள் ஆகியவற்றின் தாக்கம் இருந்ததால், உயர்கல்வியில் காலனி ஆதிக்க காலத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும், நாட்டின் பெரும்பகுதி மக்கள் உயர்கல்வி பெற இயலவில்லை. இதுதான் பள்ளிக் கல்வியின் நிலைமையும். எழுத்தறிவு பெறுவதே சவாலாக இருந்தது. நாடு விடுதலை பெற்ற பின் நிகழ்ந்த 1951 ஆம் ஆண்டு சென்சஸ் கணக்குப்படி இந்தியர்களில் 16% தான் எழுத்தறிவே பெற்றிருந்தனர்.

சுதந்திர இந்தியாவில் கல்வி

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உயர் கல்வியில் காலனி ஆட்சியாளர்கள் உருவாக்கிய கல்விமுறை தொடர்ந்தது. அதனுடன் முழுமையான முறிப்பை ஏற்படுத்த இந்திய ஆளும் வர்க்கங்கள் தயாராக இல்லை. அதேசமயம், 1950களில் துவங்கி சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் ஓரளவிற்கு சுயேச்சைதன்மை கொண்ட முதலாளித்துவ  பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாடு பயணித்தபோது அதன் தேவைகளையொட்டி, குறிப்பாக பெரும் விரிவாக்கம், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம், இவற்றில் தற்சார்பு போன்ற இலக்குகள் காரணமாக உயர்கல்வி அமைப்பு கணிசமாக விரிவடைந்தது. பின்னர், 1980களின் பிற்பகுதியில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது கொண்டுவந்த “புதிய கல்வி கொள்கை”யும், 1991-ல் தீவிரப்படுத்தப்பட்ட நவீன தாராளமய கொள்கைகளும்  உயர்கல்வியை  முழுக்கவும் தனியார்மய, வணிகமய பாதையில் இழுத்துச்சென்றது. இவ்வாறு உயர்கல்வி பயணித்த பொது பாய்ச்சல் வேகத்தில் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. 1950-ல் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இருபது என்ற அளவில் இருந்தது. இப்பொழுது 700க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் 37,000க்கும் மேலான கல்லூரிகளும் உள்ளன. இதை தவிர மத்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் – IISc, IIT, NIIT, IISER போன்றவை –  உள்ளன. இவை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் வருகின்றன.[1] அளவுரீதியாகப்பார்த்தால் கடந்த 7௦ ஆண்டுகளில், குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில், உயர்கல்வி வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுதும் கல்வியின் தரம் பற்றி பரிசீலிக்கும் பொழுதும் நமது நாட்டில் உயர் கல்வியின் நெருக்கடி புரியும்.

இந்திய உயர் கல்வியின் நெருக்கடி

ரஷ்யா , சீனா , ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க  நாடுகளில் பெரும்பான்மை பொது பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியும் உயர் கல்வி கற்பித்தலும் இணைந்து செயல்படுகிறது. நமது நாட்டில் ஒரு சில பொது பல்கலைக்கழகங்களில்தான் இப்படி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டு காலத்தில் உயர் கல்வியில் மொத்த பதிவு விகிதம் (gross enrolment ratio), அதாவது 18 இல் இருந்து 23 வயதுக்குள் இருப்பவர்களில் எவ்வளவு சதவீதம் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர் என்று பார்த்தால், அரசு கணக்குப்படியே அது வெறும் 25% தான். இங்கு உயர்கல்வி நிறுவனம் என்று கருதப்படும் நிறுவனங்களின் தரம் பற்றி நமக்கு தகவல் இல்லை.

தாராளமய கொள்கைகள் பிற துறைகளைப்போலவே, கல்வித்துறையிலும் ஊழலை பெரிதும் வளர்த்துள்ளன. இந்திய மருத்துவ சபை (MCI), தொழில்நுட்ப கல்விக்கான அனைத்து இந்திய சபை (AICTE), கலை மற்றும் அறிவியல் உயர் கல்வி மேற்பார்வை அமைப்பாக பல்கலைக்கழக மானியகுழு (UGC) என்று உயர்கல்வியை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இன்று ஊழல் மலிந்ததாகவும், திறன் குறைந்தும் உள்ளன. இப்பொழுது அவைகளையும் செயலிழக்கச் செய்து, அவற்றிற்குப்  பதில்  மையப்படுத்தப்பட்ட மத்திய அரசின் இறுக்கமான கட்டுப்பாட்டில் செயல்படும்  புதிய அமைப்புகள் கொண்டு வரப்படுகின்றன. தாராளமய கொள்கைகள் சாதாரண மக்களுக்கு, விவசாயிகளுக்கு, உழைப்பாளி மக்களுக்கு உயர்கல்வியை எட்டாக்கனியாக ஆக்கி வருகின்றன. கொள்ளை லாபமும் கார்ப்பரேட்  ஊழலும் இணைந்து பயணிக்கின்றன.

தாராளமய காலகட்டத்திற்கு முன்பே கூட இந்தியாவின் கல்வி அமைப்பு –குறிப்பாக உயர்கல்வி அமைப்பு – முழு ஜனநாயகத்தன்மை பெற்றிருந்ததாக கூற இயலாது. அரசியல் சாசனத்தின் “அரசு கொள்கையின் இயக்க கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்ற பகுதியில் நாற்பத்தி ஐந்தாம் ஷரத்தில்  அரசியல் சாசனம் அமலுக்கு வந்ததும் பத்தே ஆண்டுகளில் அனைவருக்கும் எட்டாண்டு இலவச, கட்டாயக்கல்வி அளிக்கப்பட அரசு முனையும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவே இன்றுவரை நிறைவேறவில்லை. ‘அனைவருக்கும் உயர் கல்வி’ என்ற கோட்பாட்டை இந்திய ஆளும் வர்க்கங்களும் அரசுகளும் இதுவரை ஏற்கவில்லை. தாராளமய காலத்திற்கு முன்புகூட  மத்திய அரசின் நேரடி நிதி உதவியுடன் சிறந்த வசதிகள் கொண்ட விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய  உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒரு புறமும்,  அத்தகைய நிதி உதவி கிடைக்காத மாநில பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள் மறுபக்கமும் என்ற பாகுபாடு இருந்தது.  முதலாளித்துவ வளர்ச்சியின் சமனற்ற பாதையை இது பிரதிபலித்தது. 1990க்குப்பிறகு புதிய தாராளவாத கொள்கையின் அடிப்படையில் கல்வி ஒரு விலைபொருளானது. முக்கியமாக அரசு பொதுத்துறையைவிட்டு விலக ஆரம்பித்தது. தனியார் மயமாக்கல் தலைவிரித்து ஆடியது. சுகாதாரம், கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகள் லாப நோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இதன் விளைவாக, இடதுசாரிகளின் தலைமையிலான அரசுகள் தவிர மற்ற மாநில, மத்திய அரசாங்கங்களின் கீழ் லாப வெறியும்  ஊழலும் தழைத்தோங்கின. பொதுவாக துணை வேந்தர், ஆசிரியர்  நியமனங்களில் தரம் குறைந்தது. பணம், சாதி  அடிப்படையிலேயே பணி நியமனங்கள் நடந்தன.

ஜனநாயக மறுப்பு

பரவலாக பல்கலைகழகங்களில் கல்லூரிகளில் ஜனநாயக குரல்கள் கேட்கும் இடங்கள் குறுகின. ஆட்சி அமைப்பில் மாணவர்களுக்கு இடம் இல்லாமல் போனது. தேர்தல் நடத்தாததால் அல்லது செயல் இழந்து இருப்பதால்  ஆட்சிக்குழு மற்றும் செனட் அமைப்புகளில் எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கவில்லை.  பொது பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மாணவர் மற்றும் சமுதாய தேவைகளையும் நலன்களையும்  முதலிடத்தில் வைத்து  சிறப்பாக செயல்படாததும், தரமும் வீச்சும் குன்றிடுவதை தவிர்க்க இயலாமல் போனதற்கு காரணங்கள். இதனால் மற்ற துறைகளை போல் மக்கள் அரசு உயர்கல்வி கூடங்களில் நம்பிக்கை இழந்து தனியாரிடம் தள்ளப்படுகிறார்கள். ஆனால், தனியார் உயர் கல்விக்  கூடங்களில் சமூக நீதி அடிப்படையிலான, அரசியல் சாசனம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு நெறிமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன; தொடர்ந்து மீறப்படுகின்றன. இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. நாட்டுக்கு மோசமானவை. இங்கே அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

தாராள மயமும் சமூக நீதி மறுப்பும்      

கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கும் நாட்டின், சமூகத்தின் ஜனநாயக தன்மைக்கும் உள்ள உறவுகள் பற்றியும்  அம்பேத்கர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:

கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.... ஆகையால் கல்வி கொள்கை கீழ்நிலை வகுப்பினருக்கு உயர் கல்வியை முடிந்த அளவுக்கு மலிவாகக் கொடுக்க வேண்டும்… அனைத்து சமூகத்தினரும் சமமான நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றால், ஒரே தீர்வு சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பதோடு, கீழே உள்ளவர்களுக்கு விசேட ஆதரவு அளிப்பதே..”

“சமூகத்தின் மிகவும் தாழ்வான பிரிவிலிருந்து நான் வந்துள்ளதால் கல்வியின் மதிப்பை அறிவேன். தாழ்வான வகுப்பில் உள்ளவர்களை உயர்த்துவது என்பது பொருளாதார பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இது பெரும் தவறு. தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவது என்பது அவர்களுக்கு உணவும் உடையும் அளித்து இந்த நாட்டின் பழங்கால இலட்சியத்தின் அடிப்படையில் உயர்குலத்தோருக்கு சேவை செய்பவர்களாக அவர்களை ஆக்குவது அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை அவர்களது வளர்ச்சியை தடுத்து பிறருக்கு அடிமைகளாக அவர்களை ஆக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்குவதே ஆகும். இன்றைய சமூகத்தால் நாட்டுக்கும் அவர்களுக்கும் அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்ற உணர்வு பறிக்கப்பட்டுள்ளது. இந்த உணர்வை அவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்பதாகும். உயர்கல்வியை அவர்கள் மத்தியில் பரப்புவதை விட வேறு எந்த வகையிலும் இந்த நோக்கத்தை அடைய இயலாது. இதுதான் நாம் எதிர்கொள்ளும் அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் நோய் தீர்க்கும் மாமருந்து.”

கல்வி என்பது பெரியதோர் அளவில் கொடுக்கப்பட்டாலும், அது இந்திய சமுதாயத்தின் தக்க பகுதிக்கு  கொடுக்கப்படவில்லை. தங்கள் நலனுக்காக சாதி முறையை தக்க வைக்க நினைக்கும் பகுதிக்கு கல்வி கொடுத்தால் அது சாதி முறையை பலப்படுத்தும்.. அதற்கு மாறாக சாதி அமைப்பை தகர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ள இந்திய சமூகத்தின் கீழ்தட்டு மக்களுக்கு கல்வி கொடுத்தால் சாதி அமைப்பு தூக்கி எறியப்படும். ஏழைகளை மேலும் ஏழையாக்குவதும், செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக ஆக்குவதும் வறுமையை ஒழிக்கும் வழியாகாது. இது சாதி அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கும் பொருந்தும். சாதி அமைப்பை பாதுகாக்க விரும்புவோருக்கு கல்வி தருவது, இந்தியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவாது. மாறாக, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அது மேலும் ஊறு விளைவிக்கும்.

நமது நாட்டில் இன்று இருக்கும் ஜனநாயகத்தின் அவல நிலையை பார்த்தால் அம்பேத்கரின் வார்த்தைகளில் உள்ள உண்மை தெளிவாக தெரிகிறது.

உயர் கல்வி அமைப்பை வலுப்படுத்துவது பற்றி

இக்கட்டுரையின் வாதம் தாராளமய கொள்கைகளை கைவிட்டால்தான் உயர்கல்வி துறையை ஜனநாயகப்படுத்தவும், வலுப்படுத்தவும், அனைத்துப்பகுதி  மக்களுக்கும் கொண்டு செல்லவும், தரம் உயர்த்தவும், சமூக நீதி காக்கவும் முடியும் என்பதுதான். இதற்கு வலுவான மக்கள் இயக்கம் அவசர அவசியமாக உள்ளது. தற்போதுள்ள மத்திய அரசு மிக வேகமாக உயர்கல்வித்துறையை தனியாருக்கு மொத்தமாக தாரை வர்ப்பதோடு அறிவியல் அணுகுமுறையை அழிக்க முனைகிறது. இந்துத்வா வெறியர்களின் தவறான கோட்பாடுகளை சமூக அறிவியல் துறைகளில் மட்டுமல்ல; அனைத்து மட்டங்களிலும் நவீன அறிவியல் ஆராய்ச்சி துறைகளிலும்       திணித்து வருகிறது. ஜவஹர்லால் பல்கலைக் கழகம், பூனே திரைப்படகல்வி நிறுவனம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், ஐ ஐ டி உள்ளிட்ட பல மத்திய கல்வி நிறுவனங்களிலும் தனது இந்துத்வா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச்செல்ல தீவிரமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமூக அறிவியல் துறைகள் சார்ந்த உயர் அதிகார அமைப்புகள் இந்துத்வா கொள்கைகளை ஏற்று செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாராளமய கொள்கைகளை எதிர்ப்பதோடு இந்துத்வா உள்ளிட்ட பழமைவாத, அறிவியலுக்கு புறம்பான, அனைத்து அரசு மற்றும் செல்வாக்கு மிக்க தனியார் செய்யும் முயற்சிகளையும் மக்கள் இயக்கங்கள் மூலமாக முறியடிப்பது அவசியமாகிறது.

உயர்கல்வியை வலுப்படுத்த குறைந்தபட்ச உடனடி கோரிக்கைகளாக கீழ்காண்பவை இடம் பெறலாம்:

. 1. எல்லோருக்கும் இலவச பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி கொடுக்கப்படவேண்டும். அனைவருக்கும் 12 ஆண்டுகள் இலவசக் கல்வி முதற்கட்டமாகவும், அடுத்த கட்டத்தில் 15 ஆண்டுகள் என்றும், பின்னர் முனைவர் பட்டம் வரை என்றும் விரிவுபடுத்தலாம்.

இது போன்ற கொள்கைகள் பல மேலை நாடுகளில் நடப்பில் உள்ளது. (இவற்றில் பெரும்பாலானவை முதலாளித்துவ நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது).

  1. கல்வி பொதுபட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படவேண்டும்.
  2. மதசார்பற்ற கல்வி உள்ளடக்கமும், கல்வி நிறுவனச் சூழல்களும் உறுதிப்படுத்தப் படவேண்டும்.
  3. கல்விக்கான மத்திய வரவு செலவு திட்டங்களை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8%தான் கல்விக்காக செலவு செய்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கல்விக்காக செலவு செய்யப்படும் சதவிகிதம் பல வளரும் நாடுகளிலும் கூட இந்தியாவை விட அதிகம். சில நாடுகளின் விவரம் வருமாறு: கியூபா 12.9%, டென்மார்க் 8.7%  கியூபாவிலும், டென்மார்க்கிலும் கல்வி எல்லோருக்கும் இலவசம். பதினெட்டு வயதுக்கு மேலே படிப்பவர்களுக்கு டென்மார்க்கில் படிப்பூதியம் தருகிறார்கள். ஜெர்மனியிலும் உயர்கல்வி இலவசம். வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிச நாடுகளிலும் கல்வி கட்டணங்கள் மிகக் குறைவு. பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு அரசே கல்விச் செலவை ஏற்கும் நிலைமையும் பல நாடுகளில் உள்ளது. மத்திய மாநில அரசுகளின் கல்விக்கான செலவுகளின் கூட்டுத்தொகை தேச உற்பத்தி மதிப்பில் 6% ஆக இருக்கவேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னால் கோத்தாரி கமிஷன் பரிந்துரைத்தது. இதனை ஏற்று இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது இன்றுவரை அமலாகவில்லை. குறைந்தபட்சம் இந்த இலக்கு அடையப்படவேண்டும்.
  4. 5. கல்வியில் பயிற்று மொழி தாய் மொழியாக இருப்பது மிகவும் அவசியம். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகள் உட்பட கணிசமான நாடுகளில் உயர் கல்விவரை தாய் மொழியில் பயில கட்டமைப்பு வசதிகளும் ஊக்குவிப்பும் உண்டு. நமது நாட்டிலும் தாய் மொழியில் கல்வி என்பது முன்பின் முரணின்றி உயர்கல்வி வரை தரப்படவேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பு கருதி ஆங்கிலத்தை மொழிப்பாடமாக கற்க விரும்புவோருக்கு அதற்கான ஏற்பாடும் இருப்பது நல்லது.
  5. பொது பல்கலைக்கழகங்கள் விரிவாக்கப்படவேண்டும். துணை வேந்தரிலிருந்து ஆசிரியர் வரை தரமான நியமனங்கள் எளிதாக நடைபெறவேண்டும். பல்கலைக்கழக கல்லூரி ஆட்சி பேரவையிலும் பல்கலைக்கழக செனட் சபையிலும் கணிசமான அளவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் இடம்பெறுவது அவசியம்.

இங்கே பரிந்துரைக்கப்பட்டவை ஒரு துவக்கமே. பிரச்சனைகளை மேலும் திட்டவட்டமாக ஆய்வு செய்து பொதுவான பரிந்துரைகளையும் குறிப்பிட்ட கல்விச்சூழலுக்கான திட்டவட்டமான பரிந்துரைகளும் உருவாக்கப்படவேண்டும்.

கல்வியில் ஜனநாயகம் போராட்டங்கள் மூலமே சாத்தியம்

ஜவகர்லால் நேரு ஒரு முறை  “ஒரு பல்கலைக்கழகம் மனித நேயத்திற்காகவும், சகிப்புத் தன்மைக்காகவும், பகுத்தறிவுக்காகவும், கருத்துக்களின் சாகசத்திற்காகவும் சத்தியத்தின் தேடலுக்காகவும் உள்ளது.  மனித இனத்தின் உயர் இலக்குகளை நோக்கி அது முன்னோக்கி அணிவகுத்து நிற்கிறது. பல்கலைக் கழகங்கள் தங்கள் கடமைகளை போதுமானதாகக் கழித்தால், பின்னர் நாடும், மக்களும்  நன்றாக இருப்பார்கள்” என்று கூறினார். பல்கலைக்கழகங்கள் எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய நேரு அவர்களின் கனவாக இதனைக் கொள்ளலாம். ஆனால் நாம் வாழும் அரசியல் – பொருளாதார – பண்பாட்டு முரண்பாடுகள் நிறைந்த சூழலில் கல்விக்கான போராட்டம் ஜனநாயகத்திற்கான போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் பகுதிதான் என்ற புரிதல் நமக்கு தேவை. மேலும் இந்தியாவின் பிரத்தியேகமான சூழலில் கல்வி களத்திலும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும், வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் இணைந்தே பயணிக்க வேண்டியுள்ளது.

 

[1] நாடு அவசர நிலைகாலத்தில், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில், இருந்தபொழுது மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி  பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன்பின் மத்திய அரசின் கை உயர்கல்வியில் ஓங்கியுள்ளது. இது மாநிலங்களின் உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதல். உண்மையான கல்விக்கு எதிரான  ‘நீட்’ போன்ற மோசமான திட்டங்களை மத்திய அரசு மாநிலங்களின் மீது திணிக்க இது வழிசெய்துள்ளது.

 One response to “பல்கலைக்கழகங்கள்: எங்கு, எப்படி செல்கின்றன? எங்கே, எப்படி செல்லவேண்டும்?”

  1. […] உயர்கல்வி நிலை குறித்த கட்டுரையை பேர…. உயர்கல்வித்துறை பல வேகமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் நிலையில் இவ்விசயத்தில் நம் விவாதங்களை மேம்படுத்திக்கொள்ள இக்கட்டுரை உதவும். […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: