(குரல்: யாழினி)
என்.குணசேகரன்
தமிழக சமூக இயக்கத்தில் சீர்திருத்த முயற்சிகள் பல வடிவங்களில் நடந்துள்ளன. பல்வகை கருத்தோட்டங்களாகவும், தனிநபர் செயல்பாடுகளாகவும், மக்கள் இயக்கங்களாகவும் அவை பரிணமித்துள்ளன. பண்டைய காலத்திலிருந்தே சமூக அசமத்துவம், மனிதர்களை இழிவுபடுத்தும் சாதிய, மத நடைமுறைகள் மீதான கண்டனக் குரல்கள் ஒலித்து வந்துள்ளன.
கடந்த கால சீர்திருத்த முயற்சிகள் சமூக சமத்துவ இலக்குகளை எட்டுவதில் எத்தகு முன்னேற்றத்தை சாதித்துள்ளது? அந்த முயற்சிகள் முழுமையான சமூக சமத்துவத்தை ஏன் எட்டவில்லை? என்கிற கேள்விகள் எழுகின்றன. சீர்திருத்த மனப்பாங்கு கொண்ட மக்களிடமும் இக்கேள்விகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இடதுசாரிகள், முற்போக்கு செயல்பாட்டாளர்கள் சமூக சீர்திருத்த வரலாற்றை மார்க்சிய இயக்கவியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியம். இதில் பாட்டாளி வர்க்க இயக்கம் இடையறாது செயலாற்றுவதும் அவசியமான கடமையாகும்.
(தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றின் முக்கியத் தடங்கள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன; தமிழக சமூக சீர்திருத்தம்: மதுக்கூர் ராமலிங்கம்; ஜூலை, மார்க்சிஸ்ட் 2018)
தமிழக வரலாற்றில் சமூக சீர்திருத்தம்
சாதி, மதம், குடும்பம், திருமணம், மொழி போன்ற பல தளங்களில் மனிதர்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கும் வாழ்க்கை முறைகளையும், பரம்பரியமான பிற்போக்குக் கருத்துக்களையும் எதிர்கொண்டு சமூக சீர்திருத்தவாதிகள் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் பங்களிப்பினை நிராகரிக்க முடியாது. இன்றைய சமூகம் உருப்பெற அவை முக்கிய பங்கினை ஆற்றின.
கி.மு. நாலாம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் வேதங்கள் சார்ந்த பழைய வைதிக மரபு ஆதிக்க நிலையில் இருந்தது. இது வர்க்கப் பிளவுகளும், வர்ண பேதங்களும் வளர்ந்த காலமாகவும் இருந்தது. இனக்குழு அமைப்புக்கள் மாறி வேளாண் உற்பத்தி பரவியிருந்த நிலை ஏற்பட்டது. இது, நிலவுடைமையாளர்கள், பண்ணையடிமைகள் எனும் வர்க்கப் பிரிவுகள் கொண்ட நிலவுடைமை சமுதாயம் வளர்ந்த காலம். இதனை கி.மு 7 முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையிலான காலமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் அடுத்த நிலையில் வணிக எழுச்சிக் கட்டம் ஏற்படுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில் இதனை அறநெறிக்காலம் என்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளப்பட்ட பௌத்த, சமண, ஆசீவக மரபுகள் மேலோங்கின.
இந்நிலையில், வர்க்கப் பிளவுகள் தமிழ்ச் சமூகத்தில் தீவிரம் பெற்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்களிலும், குறுநில மன்னர்களின் ஆட்சிகளின் போதும், தமிழ் சமூகத்தில் வர்க்க வேறுபாடுகள் கூர்மையாக இருந்தன.
வர்க்கப் பாகுபாடுகளால் பிளவுபட்டு இருந்த நிலை, சமூக ஒடுக்குமுறை சூழல் ஆகியவற்றால், சமமற்ற, அநீதியான சமூக உறவுகள் இருந்தன. இந்த சமமற்ற எதார்த்தத்தை நியாயப்படுத்தும் வகையில், கருத்தியல் தளத்தில் வர்ண முறை, மதக்கோட்பாடுகள், சாத்திரங்கள் நிலைபெற்றன. வர்ண முறை ஏற்படுத்திய அநீதியான ஏற்றத்தாழ்வை சகித்திடாமல் அதன் மேலாதிக்கத்தை எதிர்க்கும் போக்கும் உருவானது. சமூகத்தில் கனன்று கொண்டிருந்த ஆளும் வர்க்க ஆதிக்க எதிர்ப்புக் குமுறல், வர்ண, மத, பிற்போக்குத்தன எதிர்ப்பாகவும் எதிரொலித்தது. புத்தம் மற்றும் சமணத்தின் எதிர்ப்புக் குரல்கள் இந்த வகையைச் சார்ந்ததே .
இந்த விரிவான வரலாற்றுக் காலப்பரப்பில் ஒரு முக்கிய போக்கினை கண்டுணர்வது அவசியம். சமூக அசமத்துவம் வர்க்க அடிப்படையிலும், மத,சாதி சார்ந்தும் வளர்ந்து வந்துள்ளன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வப்போது ஒலிப்பதும் தமிழக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது.
கோயில் எனும் நிறுவனம்
தமிழகத்தில் சமண, பௌத்த மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில் வைதீக மதம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. இறுக்கமாகி வந்த நிலவுடைமை உறவுகளின் விளைவாக சைவ-வைணவ மதங்கள் வலுவாக காலூன்றின. இந்தக் கட்டத்தில் கோயில்கள் நிறுவனமயமாக்கப்பட்டன. உண்மையில் அவை உயர் அடுக்கில் இருந்த சாதிகளின் அதிகார மையங்களாக செயல்பட்டன. குறிப்பாக, பிராமணிய ஒடுக்குமுறைக் கருத்தியலுக்கு உட்பட்டு சமூகம் இயங்குவதை கோயில் என்ற நிறுவனம் உறுதி செய்தது.
அது மட்டுமல்லாது, சமூக உழைப்பில், குறிப்பாக வேளாண் உற்பத்தியில் கிடைக்கும் உபரியை அபகரிக்கும் நிலப்பிரபுத்துவ தன்மையும் கோயில் செயல்பாட்டில் இருந்தது.
மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதைக் குறிப்பிடும் போது “மார்க்ஸ் குறிப்பிடும் ‘நில வாடகை ‘இங்கே நிறுவன ஏற்பாட்டின் முலமாக உயர்குடிகளுக்கு போய் சேர்ந்தது” என்கிறார். (“தமிழர் வரலாறு: சில கேள்விகளும், தேடல்களும்” -தேவ பேரின்பன்) இங்கு அவர் குறிப்பிடும் நிறுவன ஏற்பாடு என்பது கோயில் நிர்வாகத்தைக் குறிப்பதாகும்.
ஆக, சமூகத்தின் வளங்கள், உற்பத்தி சக்திகள் மீதான கட்டுப்பாட்டை மன்னர்கள் வைத்திருந்தனர். அவர்கள் மீது பிராமணீய கருத்தியலின் துணையோடு பிராமணர்கள் செல்வாக்கு செலுத்தினர். கோயில் என்ற நிறுவனம் மூலமாக இந்தக் கட்டுப்பாடும், உபரி அபகரிப்பும் நிகழ்ந்தன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நிலம், நீர், பொருள் என எதிலும் உரிமை இல்லாத நிலையில் உழைக்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக இந்த அடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள், பஞ்சமர்கள் வாழ்ந்து வந்தனர்.
இந்த அடிமைத்தனத்திற்கு எதிரானதாகத்தான் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் எழுந்தன. ஆனால் அடிமைத்தனமும் உழைப்பு சுரண்டலும் நீடித்த நிலையில் அவற்றில் மாற்றம் ஏற்படாத சூழலில் சமூக சீர்திருத்தக் குரல்கள் மெல்லியதான தாக்கமே செலுத்த முடிந்தது.
எல்லைக்குட்பட்ட வெற்றி
வர்க்க, சாதிய ஒடுக்குமுறை ஒருங்கிணைந்து நீடிப்பதுதான் அடிப்படைப் பிரச்னை. இது தற்போதைய காலம் வரை நீடிக்கிறது. 19,20-ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமான சீர்திருத்தக் கருத்துக்களும் பிரச்சாரங்களும் இயக்கங்களும் எழுந்தாலும் சுரண்டல் முறை நீடித்த நிலையில், சமூக வளங்கள், உற்பத்தி சக்திகள் மீது ஆங்கிலேய ஆட்சியும் விடுதலைக்குப் பிறகு வந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக ஆதிக்க உறவுகளும் உறுதியாக இருந்த நிலையில் மன மாற்றம் என்ற நிகழ்ச்சி நிரலில்தான் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நிற்க முடிந்தது.
ஆனால் இதற்கும் தமிழ்ச் சமூகத்தில் தாக்கம் இருந்தது. சமூக ஏற்றத்தாழ்வை எதிர்த்து சில சட்டரீதியான பாதுகாப்புக்களையும் சமூக தளத்தில் சமத்துவ நடைமுறைகளையும் ஏற்படுத்த முடிந்தது. ஆனால் இது ஒரு எல்லைக்குட்டபட்ட வெற்றியாகவே இருந்து வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான கெயில் ஓம்வடட் ஒரு மூத்த ஆய்வாளர். ஜோதிபா புலே மற்றும் அம்பேத்கர் குறித்த ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.
அவர் தனது “தலித்-எதிர்கால பார்வைகள்” எனும் நூலில்
“விடுதலைக்கான வழி என்பது பொருளியல், சித்தாந்த தளத்தில் போராட்டம்தான்” என்று வரையறுக்கிறார். மேலும் அவர், அம்பத்கார் பொருளியல் தளத்தில் தனது போராட்டத்தை கைவிடவில்லை என்கிறார். “ஆனால், அம்பேத்காரின் அழுத்தம், சித்தாந்த கலாச்சார போராட்டங்களில் இருந்தது. அவர் பொருளாதார மாற்றுத் திட்டத்தை அவற்றோடு இணைப்பதில் பெரிதாக வெற்றி பெற இயலவில்லை என்றாலும் அதனை அவர் கூர்மைப்படுத்தினார்” என்று கெயில் ஒம்வடட் எழுதியுள்ளார். இது தமிழக சீர்திருத்த இயக்கங்கள் பலவற்றுக்கும், பெரியார் தலைமை தாங்கிய திராவிட இயக்க கட்டத்திற்கும் பொருந்தும்.
1930-காலக்கட்டத்திய சுயமரியாதை இயக்கம் பெரியார் தலைமையுடன், சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளடங்கிய இயக்கமாக செயல்பட்டது. உண்மையில், அந்த இயக்கம் .சமூக சீர்திருத்த செயல்பாட்டுடன் சேர்ந்து, சோசலிசம், கம்யூனிசம் என்ற பொருளாதார மாற்றுத் தடத்திற்கு வந்தது. பின்னர், ஆங்கிலேய ஆட்சியின் அழுத்தத்தினால், மீண்டும் சமூக சீர்திருத்தம் என்ற எல்லைக்கோட்டுக்குள் திரும்பியது.
இந்த சறுக்கல்கள் இருந்த போதும், தமிழக சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு சில சிறப்புக்கள் உண்டு. வட மாநிலங்களில் சமூக சீர்திருத்தம் ராஜாராம் மோகன் ராய் போன்ற முற்பட்ட பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தென்னிந்தியாவில் இப்பணியை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவுகளிலிருந்து உருவான சிந்தனையாளர்களும் முன்னெடுத்துச் சென்றனர். அந்தப் பிரிவு சார்ந்த மக்கள் திரட்டலும் நிகழ்ந்தது. வடக்கில், அம்பேத்கார் 5 இலட்சம் மக்களைத் திரட்டி புத்த மதத்தில் சேருகிற நிலை ஏற்பட்டது. அந்தப் பாதையை தமிழக சீர்திருத்த இயக்கம் தேர்ந்தெடுக்காதது முக்கியமானது.
எனவே தமிழகத்தில் பொருளாதார மாற்று தடத்தில் பயணிக்கும் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புக்கள் உள்ளன.. இவ்வாய்ப்பினை இடதுசாரி சித்தாந்த நிகழ்ச்சி நிரல் தான் பயன்படுத்திக்கொள்ள இயலும். இதற்கு பாட்டாளி வர்க்க இயக்கம் வலுமிக்கதாக வளர வேண்டும்.
கொடூரமான ஏற்றத்தாழ்வான, ஒடுக்குமுறை, சுரண்டல் அடித்தளம் கொண்ட சமூக உறவுகளை மாற்றி உழைக்கும் மக்களின் கட்டுப்பாடும் அதிகாரமும் மேலாதிக்கம் பெறும் நிலையே சாதி, மதம், பாலின, சமூக ஒடுக்குமுறைகளை முற்றாக ஒழிப்பதற்கான வழி. கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களால் இதனை எட்ட இயலவில்லை. சமூக உறவுகளை அடியோடு புரட்டிப் போடுகிற மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலோடு இணைந்ததாக சமூக சீர்திருத்தம் பயணிப்பதுதான் இலக்கை எட்டுவதற்கான சரியான பாதையாக இருக்க முடியும். இதுவே தமிழக சீர்திருத்த வரலாறு நமக்கு அளிக்கும் படிப்பினை.
சாதிய ஒழிப்பு இலட்சியம்
இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் சீர்திருத்த இயக்கம் சாதிய முறைக்கு எதிராக எவ்வாறு பயணித்தது என்பதைக் காணலாம்.
தமிழகத்தில்சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் சிந்தனைகளுக்கும் சாதிய முறையை ஒழிப்பது என்பது முக்கிய இலக்காக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் எனத் துவங்கி இடைக்கால பக்தி இயக்கம், பிறகு சித்தர்கள் மற்றும் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த வள்ளலார் உள்ளிட்ட சாதி எதிர்ப்புக் குரல்கள், இயக்கங்கள் என விரிந்த வரலாற்றுப் பரப்பு இதில் உண்டு.
இதன் தற்போதைய நிலை என்ன?
இதனைப் பற்றி பேராசிரியர் கே.என். பணிக்கர் குறிப்பிட்டார். “சாதி எதிர்ப்பு இயக்கங்கள் கிட்டத்தட்ட, எல்லா இடங்களிலும், சாதி ஐக்கியம் காணும் இயக்கங்களாக மாறிப் போயுள்ளன. இது வேடிக்கையாக இருந்தாலும், தர்க்க ரீதியாகவே இது நிகழ்ந்துள்ளது”.
இதற்கு எடுத்துக்காட்டுக்களாக தமிழகத்தின் திராவிட இயக்கம் உள்ளிட்டு, பஞ்சாபின் சரின் சபா அமைப்பு, கேரளத்தின் எஸ்.என்.டி.பி. (SNDP) மற்றும் நாயர் சேவை சேவை அமைப்பு(NSS) போன்றவற்றை அவர் குறிப்பிடுகிறார்.
இவை தங்களது சாதி சமூகத்தின் தேவையை கருதி சாதிய எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பின. எனினும் இந்த இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றவை, முக்கியமாக, அந்த சமூகத்தின் நடுத்தர வர்க்கங்கள். எனவே தங்களது தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததே தவிர முற்றான சாதிய முறை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி அந்த இயக்கங்கள் செல்லாமல் சாதிய திரட்டலை முன்னெடுக்கும் இயக்கங்களாக நின்று போயின.
எனவே இதில் ஒரு வரலாற்று மறு பரிசீலனை தேவைப்படுகிறது. சாதிய முறையில் உள்ள ஒடுக்கும் மனித உறவுகளை மாற்றி சமத்துவ நிலையை அடைவதற்கான போராட்டம் தேவை. ஆனால் வர்க்க உறவுகளில் உள்ள ஆதிக்கத் தன்மை நீடித்தால் சமத்துவ நிலையை எட்ட முடியாது. அதற்கான நிகழ்ச்சி நிரல் திட்டத்துடன் சாதிய ஒழிப்பு இலட்சியம் பயணிக்க வேண்டும். தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றினை விமர்சனரீதியில் ஆராய்ந்தால், இந்த முடிவிற்குத்தான் வர இயலும்.
சாதிய ஒடுக்குமுறையில் போட்டி
பெரும்பான்மை மக்களை சுரண்டுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் சாதிய அடுக்கில் மேல் மட்ட சாதி பிரிவினரிடையே போட்டா போட்டி இருந்து வந்துள்ளது. இதுவும் கூட சாதிய முறையை அவ்வப்போது நெருக்கடிக்கு உள்ளாக்கியது. எப்போதுமே சாதிய அடுக்கு என்று சொல்லப்படும் சாதிய முறைமை வர்க்க சுரண்டல் நோக்கத்திற்காகவும், தங்களது வாய்ப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சாதிகளுக்குள் இருந்த மேல்பிரிவினரிடையே மோதல்கள் இருந்தன.
இந்த நிகழ்வினை பேராசிரியர் நா.வானமாமலை மிக நுட்பமாக விவரிக்கின்றார் .
“நில உடைமையாளர்கள் மிகுதியாயிருந்த சாதிகள், ஆரிய வேதம் வேறு என்றும், திராவிட வேதம் வேறு என்றும் கூறித் தங்களுக்குத் திராவிட வேதத்தில் உயர்ந்த பதவியிருப்பதாக நிலை நாட்ட முயன்றனர். தாங்கள் சுகவாழ்க்கை வாழ்வதற்காக உழைப்பதற்குத் தொழிலாளிகள் தேவையாதலால் வருணாசிரம முறையையும் ஒப்புக்கொண்டு, தங்களை வைசியர் எனவும், தொழில் செய்து வாழ்வோரைச் சூத்திரர் எனவும் அவர்கள் தங்களிலும் தாழ்ந்தவர்கள் என்றும் எழுதினார்கள். ஆனால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் சமம் என்று காட்ட வைசியன் ஆட்சிக்கு வரலாம் என்று கூறும் கருத்துக்களைப் பிற்கால வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்கள்.”
இதற்கு சான்றாக, சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட சாதி மேன்மை போற்றும் நூல்களைக் குறிப்பிடுகின்றார். வேளாளர், கிராமணி, நாடார், பரதவர் போன்ற சாதிகளை உயர்நிலை இடத்தில நிறுத்தும் முயற்சியாக பல நூல்கள் வெளிவந்ததை அவர் குறிப்பிடுகிறார்.
ஒடுக்கப்பட்ட தளத்தில் இருந்த தலித் உள்ளிட்ட உழைக்கும் பிரிவினர் இந்தப் போட்டியில் இயல்பாகவே இருந்ததில்லை. மிகவும் பிந்தைய கட்டத்தில், சமீபத்திய காலங்களில்தான் அவர்கள் மத்தியில் இந்த தனமைகள் வெளிப்பட துவங்கின.
ஆக சாதிய சிக்கல்களில் அழுத்தமான பிரச்னையாக வர்க்க முரண்பாடுகளே மேலோங்கி இருந்ததை வரலாறு நெடுக்கிலும் காண இயலும்.
கடந்த காலத்தின் நுண்ணிய படிப்பினை
ஆங்கிலேய ஆட்சி நடந்த சூழலில் காலனியக் கொள்கைகள் மக்களை வாட்டி வதைத்தது. 19-ம் நூற்றாண்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனைக் கண்ட வள்ளலார் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக “ என்று முழங்கினார். இது, உண்மையில் அன்றைய காலனிய பொருளாதார கொள்கைக்கான எதிர்ப்பாக அமைந்துள்ளது.
தமிழக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான வள்ளலார் மத, சாதிய சடங்குகள், மரபுகள் ஒழிய வேண்டுமென முயற்சித்தார். புராணங்கள், சாத்திரங்கள் அனைத்தும் பல மூட நம்பிக்கைகளை விதைக்கிற கருத்துக்கள் கொண்டிருப்பதால் அவற்றையும் எதிர்த்தார். “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும், கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்ற அவரது குரல் வலிமையான சமூக சீர்திருத்தக் குரலாக அமைந்துள்ளது.
அவரது “கருணையிலா ஆட்சி” என்ற எதிர்ப்புக் கருத்து ஆளும் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்திற்கு எதிரானது. அத்துடன் அவரது “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்ற சீற்றம் பொங்கும் குரல் சாதி, மதம் அடிப்படையிலான ஒடுக்குமுறை உறவுகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. இரண்டும் இணைந்தவாறு ஒலிக்கும் இந்தப் பாங்கு தற்கால சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர்கள் கற்க வேண்டிய நுண்ணிய படிப்பினையாக திகழ்கிறது.
பொருளாதார அசமத்துவத்தையும், சமூக முறையில் இருந்த சாதி, மத, பாலின அசமத்துவத்தையும் இணைத்து எழுந்த எதிர்ப்பு சிந்தனைகள் தமிழக வரலாற்றில் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. பூதவாதிகள் என்று மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் பொருள்முதல்வாதிகள் துவங்கி, சித்தர்கள், பிந்தைய காலத்தில் எழுந்த சுயமரியாதை இயக்கம், அதன் சம காலத்தில் வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்க இயக்கமான கம்யூனிச இயக்கம் என நீண்ட வரலாறு உள்ளது.
உண்மையில் வள்ளலாரின் இரட்டை அணுகுமுறையான பொருளாதார அசமத்துவ எதிர்ப்பு, சமூக அசமத்துவ எதிர்ப்பு என்ற நிலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை பிந்தைய காலங்களில் காண முடியும்.1930- களில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கருத்துக்களோடு இணைந்து, சிங்காரவேலரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதைக் குறிப்பிடலாம்.
இந்த வரலாற்றுப் போக்கு இன்றைய சமூக சீர்திருத்தக் கடமைகளை வகுத்துக்கொள்ள உதவுகிறது. நில உடைமை, பண்ணையடிமை போன்ற வர்க்க உறவுகளை கேள்விக்கு உட்படுத்தி, அதன் மீதான எதிர்ப்பியக்கம் உருவாக்கும் பணியுடன் இணைந்த கடமையாக சமூக சீர்திருத்தம் செல்ல வேண்டும். அப்பொதுதான் அதன் இலக்கை அது எட்ட முடியும்.
கடந்த கால பொருள்முதல்வாத தத்துவக் காலத்திலும், சித்தர்கள் மற்றும் வள்ளலார் காலத்திலும் வரையறுக்கப்பட்ட நிலையில் மேற்கண்ட கடமையை வகுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால்,வர்க்க அசமத்துவ உறவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வல்லமை கொண்ட வர்க்கமான தொழிலாளி வர்க்கம் அப்போது உருவாகவில்லை. ஆனால் தற்போது இந்த 21-வது நூற்றாண்டின் சம காலச் சூழலில் அது சாத்தியம். ஆனால் கடந்த காலத்தில் நடந்தது போன்று சமூகத்தளத்தில் நிலவும் அசமத்துவத்தை மட்டும் முன்னெடுத்துச் செல்வதும், வர்க்க உறவு சார்ந்த சுரண்டல் ஒடுக்குமுறையை புறக்கணிப்பதும் இலக்கை அடையும் பயணமாக இருந்திடாது.
வெகு மக்கள் உணர்வில் தாக்கம்
கடந்தகால சமூக சீர்திருத்தங்களில் இருந்த முரணான போக்குகளை புரிந்து கொள்வது இன்றைய கடமைகளை வகுத்திட உதவும். சமூக சீர்கேடுகளை களைவதற்கு சாதி மறுப்பு, மத மறுப்பு, கடவுள் மறுப்பு கருத்துக்களை பரப்புரை செய்தவர்களும் இருக்கிறார்கள். பழைய நாத்திகம், சாங்கியம், பௌத்தம், சமணம், சார்வாகம் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். 20-ம் நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பினை முன்னெடுத்தது. கம்யூனிச இயக்கம் அறிவியல் கண்ணோட்டத்துடன் மதக் கண்ணோட்டங்களை அணுகியது.
இந்தக் கருத்தோட்டங்களில் பொருளியல் தள ஒடுக்குமுறைகளை எதிர்த்த பழைய சார்வாகம், இடைப்பட்ட காலத்தில் நிலவிய சித்தர் மரபு, சமகால கம்யூனிசம் ஆகியவற்றை வரலாற்றில் தனித்த இடம் கொண்டவையாக கருத வேண்டும். ஏனெனில் இன்றைய தேவைக்கு படிப்பினைகள் பெற இவை முக்கியமானவை.
ஆனால் மதத்திற்குள் நின்று சீர்திருத்தம் காண விழைந்தவர்களும் தமிழக வரலாற்றில் நெடுக இருந்து வந்துள்ளனர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே தமிழகத்திற்கு வந்திருந்த கிறித்துவ போதகர்கள், கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர்கள் ஆற்றிய தொண்டுப் பணிகள், அவற்றின் ஊடாக அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்தப் பிரச்சாரம், இதன் எதிர் விளைவாக சமய வரம்புக்குள் நின்று எழுந்த வைகுண்ட சுவாமிகள் இயக்கம், பிரம்ம சமாஜம், சன்மார்க்க சங்கம், மனுநீதி சட்டங்களை எதிர்த்து எழுத்துத் துறையில் ஈடுபட்ட வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா, ஜி. சுப்பிரமணிய ஐயர், தியோசாபிகல் சொசைட்டி, இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் துவக்க கால காங்கிரஸ் கட்சியில் எழுந்த சீர்திருத்த போக்குகள் என இந்த வரிசை நீள்கிறது. (இதற்கு காண்க: அருணன் எழுதிய ‘இருநூறு ஆண்டுக்கால சமூக சீர்திருத்த வரலாறு)
இத்தகைய கடந்த கால சமூக சீர்திருத்த செயல்பாடுகள் நிச்சயமாக வெகு மக்கள் உணர்வில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. இவற்றை விமர்சனப் பார்வையுடன் உள்வாங்கி, அவற்றின் தொடர் கடமைகளை வரையறுக்க வேண்டும். வர்க்க சுரண்டல் தொடர்ந்த நிலையில் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கலாச்சாரப் பிடியிலிருந்து வெகுமக்கள் விடுபடுவது சோஷலிஸப் புரட்சிக்கு முக்கிய தேவை. எனவே கடந்த கால முயற்சிகளை முற்றாக நிராகரிப்பது தவறானது. அதேசமயத்தில் அவற்றை விமர்சனமின்றி ஏற்பதும் தவறானது.
மார்க்சிய அறிஞர் அந்தோணியோ கிராம்ஷி “நீண்ட காலமாக, சிக்கலான தன்மையுடன் மிக நுண்ணிய அளவில் வெகு மக்கள் உணர்வு மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றத்தின் விளைபொருளாக சோஷலிஸப் புரட்சி நிகழ்கிறது” என்கிறார். இந்த நுண்ணிய மாற்றம் சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டம், சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சோஷலிஸப் புரட்சி எனும் மகத்தான மானுட விடுதலை நிகழ்வதற்கு சமூகத்தை இது இட்டுச் செல்கிறது. சமூக சீர்திருத்த தளத்திலும் மேற்கொள்ளப்படும் சிறு சிறு முயற்சிகளும் கூட வெகுமக்கள் உணர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, சமூக சீர்திருத்தப் பாதையில் கடந்த காலம் சென்றடைந்த முன்னேற்றத்தை உள்வாங்கிக் கொண்டு மேலும் முன்னேறுவது அவசியம். கடந்த கால முயற்சிகள் இறுதி வெற்றியை எட்டாததற்கு முக்கிய காரணம் வர்க்க சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போனதுதான். அந்த நிகழ்ச்சி நிரலினை உறுதியாகப் பற்றிக் கொண்டு சமூக சீர்திருத்த இலட்சியத்தை தொடர வேண்டும்.
Leave a Reply