(குரல்: யாழினி)
வி. மீனாட்சிசுந்தரம்
தாமஸ் பிக்கெட்டி என்ற பிரெஞ்சு ஆய்வாளர் 15 வருடமாக சிரமப்பட்டு பொருளுற்பத்தி சம்மந்தமான புள்ளிவிவரங்களை சேகரித்திருக்கிறார். கடந்த 200 ஆண்டுகளில் மூலதனம் சொத்துக்களை ஒருபக்கமாக குவித்து வருகிறது. தனிநபர் வருமானத்தின் ஏற்றத்தாழ்வு இடைவெளியை அதிகப்படுத்தி வருகிறது என்பதை அந்த தரவுகள் காட்டுவதாக நிரூபிக்கிறார். முதலாளித்துவம் பேரழிவை சந்திக்கும் என்று மார்க்ஸ் கூறியதாகவும் அதனை இன்றைய முதலாளித்துவம் பொய்ப்பித்துவிட்டது என்றாலும் அவர் நம்பின வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி விரியும் என்பது உண்மையாகிவிட்டது. அதன் விளைவாக நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாடுகளில் மக்களாட்சி மாண்புகள் சிறுமைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் வருத்தப்படுகிறார்.
முதலாளித்துவ உற்பத்தி முறையையும் பேணி மக்களாட்சி மாண்புகள் சிறுமைப்படாமல் காப்பாற்றுவது எப்படி என்பதே இந்த புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.
இந்த புத்தகத்தின் தனித்துவம் என்னவென்றால் மார்க்சின் உபரிமதிப்பு மற்றும் மூலதன சுழற்சி கோட்பாடுகளையும் அமெரிக்க நாட்டு பொருளாதார நிபுணர்கள் திணித்த கட்டுத்தறியற்ற தனியார்மய சுதந்திர சந்தைமய மூலதனக் கோட்பாட்டையும் நிராகரிக்க மார்க்சின் பகுப்பாய்வு வழியை பின்பற்றுகிறது. அதற்கு புள்ளிவிரங்களை ஆதாராமாக கொள்கிறது. .
(தனியார் மூலதனத்தின் குவிப்பால் உருவாகும் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தையும் படிப்படியாக அதிகரிக்கும் உற்பத்தி திறனையும் முற்றிலும் மார்க்ஸ் புறக்கணித்ததாக குறிப்பிடும் பிக்கெட்டி மார்க்சின் மூலதன பகுப்பாய்வு முறையை பயனுள்ளது என்கிறார்.(பிக்கெட்டின் 21ஆம் நூற்றாண்டு மூலதனம் பக்கம் 23)
.இந்த புத்தகம் இன்னொன்றையும் காட்டுகிறது.
1971ல் அமெரிக்க பொருளாதார நிபுணர் சைமன் சுமித் குஸ்னே புள்ளிவிவரங்களை வைத்து வரைபடம் மூலம் தனிநபரின் வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி சுருங்கி வருவதாக காட்டியதையும் 200 ஆண்டு புள்ளி விவரங்களையும் பிக்கெட்டி ஒப்பிட்டு அந்த முடிவு தவறானது என்று நிரூபிக்கிறார். நோபிள் நினைவுப்பரிசு பெற்ற ஒரு கண்டுபிடிப்பை தவறு எனக் காட்டிய பிக்கெட்டி இதனை தடித்த புத்தகத்தில் வடித்து 2013ம் ஆண்டு மேலைநாட்டு பணபுழக்க கோட்பாட்டு உலகை கலக்கி விட்டார்.
புத்தகத்தின் முதல்பகுதி துவக்கத்திலே மூலதனத்திற்கும்- உழைப்பிற்குமிடையே இருக்கும் முரணைத் தீர்ப்பது பற்றி விவாதிக்கிறது. மூலதனம் பற்றிய மேலைநாட்டு பொருளாதார நிபுணர்களின் மரபுசார்ந்த பார்வையை பிக்கெட்டி நிராகரிக்கிறார். பொருளுற்பத்திக்கான காரணிகளாக மூலதனம் உழைப்பு என்று இரண்டையும் வகைப்படுத்தி மூலதனத்திற்கு லாபம்- உழைப்பிற்கு சம்பளம் என்று பாகுபடுத்துவதே முரண்பாட்டை உருவாக்குகிறது. என்கிறார்.
கூலிஉயர்வு கேட்காதே – குண்டடிபட்டு சாகாதே என்ற 19ம் நூற்றாண்டு பழைய நிலை முதலாளித்துவ நாடுகளில் இன்றும் நிலவுகிறது என்பதை தென்ஆப்பிரிக்காவில் 2012ல் கூலிஉயர்வு கேட்ட தொழிலாளர்களை துப்பாக்கிச்சூட்டில் கொன்றதை காட்டியே தொடங்குகிறார். அந்த பகுதியின் இறுதியில் திறந்தவெளிசந்தையும் தனியார் சொத்தையும் அடிப்படையாக கொண்ட ஒரு பொருளாதாரம் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரணை போக்குமா? நேசஉறவாக்க எப்படி சிந்திக்க வேண்டும் என்ற கேள்விகளை கேட்டு ஒரு நூதன பணப்புழக்க கோட்பாட்டை விவாதிக்கிறார்.
தனியார் சொத்து பெருக்கம் – மூலதன பெருக்கம் இரண்டையும் ஒன்றாகவே பாவித்து முன்மொழிகிற வாதங்களை படித்தால் பரம்பரை சொத்துரிமை அடிப்படை உரிமையாக இருக்கமுடியுமா என்ற கேள்வியை இந்த புத்தகம் நம்மை கேட்க வைக்கிறது
நாடுகளின் தேச மொத்த வருமானம் கணக்கிடுவதில் உள்ள குறைபாட்டை இந்த புத்தகம் விவாதிக்கிறது. தேச மொத்த வருமானத்தை கணக்கிட ஒரு வரலாற்றுப்பார்வை அவசியம் என்கிறது. அதாவது தேச மொத்த வருமானத்தை எந்திரங்கள், கட்டிடங்கள் இவைகளின் தேய்மானங்களை கழித்தே கணக்கிட வேண்டும் என்பது இவரது வாதமாகும். தேச மொத்த வருமானத்தின் வளர்ச்சி விகிதத்திற்கும் மூலதனத்தின் லாபவிகிதத்திற்கும் உள்ள உறவை ஆய்வு செய்வதே இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கமாக தெரிகிறது.
இந்த புத்தகம் தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி விரிவதை அளக்க ஒரு சூத்திரத்தை முன்மொழிகிறது. மூலதனம் சம்பாதிக்கும் லாபவிகிதம் தேச மொத்த வருவாயின் வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இருக்கிறது(r.>g) இதுவே தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வை விரித்துக்கொண்டே போகிறது.
இதனை நிரூபிக்கவே 200 ஆண்டு புள்ளிவிவரங்களை ஆதாரமாக காட்டியுள்ளார்.
இதன்மூலம் அவர் சொல்லவருவது மூலதனத்தின் லாபவிகிதமும் தேச மொத்த வருவாயின் வளர்ச்சி விகிதமும் சமமாக இருந்தால் தனிநபர் வருமான இடைவெளி அதிகமாகாது என்பதாகும். மூலதனம் உழைப்பாளிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் உபரிமதிப்பை நேரடியாகவும் சந்தைவழியாக மறைமுகமாகவும் சுரண்டுவதாலேயே வருமான ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது என்ற மார்க்சிய கோட்பாட்டை இந்த சூத்திரம் மறுக்கிறது என்பது வெளிப்படை. அதேவேளையில் வருமான இடைவெளி விரிவதால் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாடுகளில் ஜனநாயக மாண்புகள் சிறுமைப்படுகிறது என்பதை ஏற்கிறார். மூலதன இயக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்ற கேள்வியை விவாதிக்கிற இந்த புத்தகம் சீனா வெற்றிகரமாக மூலதனத்தை கட்டுப்படுத்துகிறது என்று பாராட்டிவிட்டு அது மேலைநாட்டிற்கு பொருந்தாது என வாதிடுகிறது.
இந்த புத்தகம் இன்றைய உலகமய அரசியல் பொருளாதார பிரச்சினைகளை கோடிட்டு காட்டுவதால் மார்க்சிஸ்டுகள் விவாதித்து தெளிவுபெற மிகவும் பயன்படும்.
.அதேவேளையில் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் டேவிட் ரிக்கார்டோ(1772-1823) முன்மொழிந்து கார்ல் மார்க்சால் மேன்மைப்படுத்தப்பட்ட சரக்கின் மதிப்பு சமூக உழைப்பு நேரத்தை சார்ந்தது என்ற கோட்பாட்டை இந்த புத்தகம் நிராகரித்து நூதன பணபுழக்க கோட்பாட்டை முன்மொழிகிறது.
இன்றைய மேலைநாடுகள் அரசாங்க கடன்சுமையை குறைக்க சிக்கன முறையை கையாள்வதை கடுமையாக சாடுகிறார். அதற்கு மாற்றாக சொத்துவரி மற்றும் பணவீக்கத்தை நடைமுறைப்படுத்த சொல்கிறார். இதற்கு அவர் சொல்லுகிற காரணம் நாடாளுமன்ற ஜனநாயகம் வர்க்க சார்பு தன்மையை இழந்து நடுநிலை வகிப்பதாக கூறியே இந்த தீர்வு சாத்தியமென முன்மொழிகிறார். இது தவிர வேறு சில பிரச்சினைகளையும் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது. சீனாவின் வெளிநாட்டு முதலீட்டு வேகம் ஒரு கட்டத்தில் மேலைநாடுகளின் சொத்துக்களை சீனவங்கி அபகரித்துவிடும் என்பது உண்மையல்ல என்பதற்கு சில புள்ளிவிவரங்களை காட்டுகிறார். அந்நிய முதலீடுகளால் ஒரு நாட்டின் சொத்து இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் போகாது என்பது இவரது வாதமாகும்.
மூலதன ஏற்றுமதி செய்வதை விட ஒவ்வொரு நாடும் உழைப்பாளிகளை இறக்குமதி செய்வது நல்லது என்கிறார்.
இயற்கைவளம் பூமிப்பந்தில் ஒரேமாதிரியாக இல்லை. இது உருவாக்கும் பிரச்சினைகளை சிந்திக்க இந்த புத்தகம் நம்மை தூண்டுகிறது.
மார்க்சிஸ்டுகளுக்கு இந்த புத்தகம் பழைய சவாலை புதுப்பிக்கிறது. அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையில் லாபவிகிதம் சரியும் போக்குள்ளது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை தவறு என்கிறது. இந்த சவாலால் மார்க்சின் மூலதன நூலை வரலாற்று ஆவணமாக பார்க்காமல் அதன் வரையறைகள் சரிதானா என்பதை இன்றைய புள்ளிவிவர அடிப்படையில் பரிசீலிக்க தூண்டுகிறது.
பணபுழக்கத்தை நெறிப்படுத்துவதின் மூலம் ஜனநாயக மாண்புகளை காக்கமுடியும் என்பதே இந்த புத்தகத்தின் ஜீவநாடியாகும். மார்க்சிய பொருளாதார கோட்பாடுகளுக்கு இது ஒரு சவாலாகும். கீழ்கண்ட காரணங்களால் இதனை மார்க்சிஸ்டுகள் படிப்பது அவசியம்.
- .முதலாளித்துவ உலகில் நடைபெறும் பொருளாதார கோட்பாட்டு சர்ச்சைகளை புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.
- அமெரிக்க முதலாளித்துவ மாடலுக்கும் ஐரோப்பிய மாடலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவுகிறது.
- கார்ல் மார்க்சை மேலைநாட்டு பூர்சுவா பொருளாதார நிபுணர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
- பணத்தின் வளர்சிதைமாற்றம் பற்றிய மார்க்சிய பார்வைக்கும் முதலாளித்துவ நிபுணர்களின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள இது உதவுகிறது. பாமரன் கையிலிருந்தால் பரிவர்த்தனை கருவி. இதுவே சேமிப்பானால் சொத்துக்களை மடக்கும் பங்குப்பத்திரம்- மற்றும் முன்பேரதாள். இதுவே வங்கியில் இருந்தால் நிதிமூலதனம் பணமென்றால் தங்கம்- வெள்ளி என்று இருந்த நிலைமாறி சொத்துக்களை அடிப்படையாக கொண்ட அருவமான டிஜிட்டல் பணபுழக்கம் எப்படி வந்தது என்பதை புரிய உதவுகிறது.
- எக்னாமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் இதழ்தான் தாமஸ் பிக்கெட்டியை 21ம்நூற்றாண்டு மார்க்ஸ் என்று விளம்பரப்படுத்தியது. அமெரிக்க பாணி தாராளமயப் பொருளாதாரத்தை பிக்கெட்டி தாக்குவதோடு மார்க்சையும் நிராகரித்து ஐரோப்பியபாணி முதலாளித்துவமே சிறப்பானது என்று காட்டுவதால் ஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் என்று மகிழ்கிறது.
- பணப்புழக்கத்தை சமூக உறவாக அணுகி பொருளாதாரத்தின் திசையை அரசியலே தீர்மானிக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை பிக்கெட்டி பார்க்க மறுக்கிறார் . அதேவேளையில் பணத்தின் நடமாட்டத்தை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ள வாசகனை வேண்டுகிறார். இந்த ஒரு இடத்தில்தான் அவருக்கும் மார்க்சிற்கும் வேற்றுமை மறைகிறது.. மூலதனத்தை இயக்குகிற சமூகஉறவு, அந்தஉறவை தீர்மானிக்கிற அரசியல், அந்த அரசியலை தீர்மானிக்கிற வர்க்கப்போராட்டம் இவைகளையும் பணத்தின் வடிவங்கள் மாறுவதையும் இணைத்து பார்க்க மறுக்கிறார். வர்க்கப் போராட்டத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உறவு எதுவுமில்லை என்பதே அவர்களது பார்வையாகும்.
- அமெரிக்கா உலகநாடுகளின் தலையில் திணிக்கும் கட்டுத்தறியற்ற தாராளமய, தனியார்மய பொருளாதார கோட்பாட்டை பிக்கெட்டி ஆதாரங்களுடன் நிராகரிக்கிறார். அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்பதை புள்ளிவிவரங்களை காட்டி நிரூபிக்கிறார்
- அதேவேளையில் மார்க்சிய கோட்பாடான சமூக உற்பத்திக்கு சமூக கட்டுப்பாடு ( சோசியல் கன்ட்ரோல் ஓவர் சோசியல் புரடக்ஷன்) என்பதை ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
- .ஜனநாயக உரிமைகளை பறிக்காமல் முதலாளித்துவம் நீடிக்க இவர் கூறுகிற ஆலோசனையை பிரெஞ்சு அரசே ஏற்கத் தயாரில்லை.(சொத்துவரி- பணப்புழக்கத்தை அதிகரித்தல்)
- மார்க்ஸ் எந்த இடத்திலும் முதலாளித்துவம் பேரழிவை சந்திக்கும் என்று கூறியதாகத் தெரியவில்லை. மூலதனம் சொத்துக்குவிக்கும் கருவியாக இருப்பது மாறிவிடும். சமூகம் உருவாக்கும் சொத்துக்கள் வர்க்கப்போராட்டத்தால் வர்க்கமுரண்கள் மறைந்து அந்த சமூக உறுப்பினர்களிடையே பகிரப்படும் என்கிறார். அது ஒரு புரட்சி மூலமே சாத்தியம் என்கிறார்
- இன்றைய அரசியல் பொருளாதார கோட்பாடுகள் சர்ச்சைகள் பணம் சமூகத்தின் மையப்புள்ளியாகி பணத்தை வைத்து பொருளுற்பத்தி என்பது தலைகீழாக போய் உற்பத்திசக்தியை பணமாக ஆக்கும் முறை எப்படி முதலாளித்துவ உலகில் வந்தது என்பதைப் புரிய விரும்புவோர் படிக்கவேண்டிய புத்தகம்.
மார்க்சின் மூலதனம் என்ற மகத்தான நூலின் அதிகம் வாசிக்கப்படாத வால்யூம் இரண்டு மற்றும் மூன்றில் மூலதன இயக்கத்தை மார்க்ஸ் எப்படி பகுத்து ஆய்வு செய்தாரோ அதேவழியை பிக்கெட்டி பின்பற்றினாலும் இருவரும் வேறுபடுகின்றனர் .
மூலதன சுழற்சியின் பணமூலதன வடிவையே மையமாக வைத்து பிக்கெட்டி பகுப்பாய்வு செய்கிறார். . ஆனால் மார்க்ஸ் மூலதனத்தின் உட்கூறுகள் நுகர்பொருள் உற்பத்தியில் ஈடுபடும் மூலதனம்-உற்பத்தி கருவிகளை உருவாக்கும் மூலதனம் இந்த இரண்டின் சுழற்சியை பகுப்பாய்வு செய்ய முயல்கிறார். இயற்கையையும் மனிதனையும் மதிக்காத இந்த இருவகை மூலதனங்களின் சுழற்சிகளை வைத்து மார்க்ஸ் உருவாக்கிய கோட்பாடுகளை பிக்கெட்டி ஏன் நிராகரித்தார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
இருந்தாலும் இந்த புத்தகம் வாசகனோடு உரையாடுவதால் கனத்தை மறந்து படிக்கத் தூண்டுகிறது. மார்க்சிய கோட்பாடுகளை புள்ளிவிவரங்களோடு உரசிப் பார்க்க உதவுவதால் நமக்கு படிக்க வேண்டிய புத்தகமாகி விடுகிறது.
1917 சோசலிச சமூகம் உருவானதில் இருந்து அந்த பொருளாதாரத்தில் ஏற்பட்ட வெற்றி, தோல்விகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு இருக்கிறதா?
LikeLike
சோசலிச பொருளாதாரம் பற்றிய ஆய்வு எதுவுமில்லை. இவரது ஆய்வு முழுவதும் மார்க்ஸ் குறிப்பிட்ட ஏற்றத்தாழ்வு விரியும் என்ற ஒன்றை சுட்டியே இருக்கிறது. ஏன் எனில் மார்கஸ் சோசலிச பொருளாதாரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வர்க்ப்போராட்டம் காரணமாக சமூ உற்பத்தி சமூக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்றாரே தவிர அதன் ஸ்துலமான அமைப்பை கற்பனை செய்யவில்லை.
LikeLike
இந்நூலை வாசிக்க விரும்புவோருக்கான தர்க்கமுறைமை ஒன்றை மிகச் சுருக்கமாக இக்கட்டுரை தருகிறது. நன்றி.
LikeLike