பி. சண்முகம்
பண்ணையடிமைகளாக வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் “உன்னை அடித்தால் திருப்பி அடி, அதனால் என்னவானாலும் பார்த்துக்கொள்ளலாம்” என்று ஒரு கலகக்குரல் 1943-ல் தமிழ்நாட்டில் ஒலித்தது. அந்தக் குரல் தோழர். பி. சீனிவாசராவ் அவர்களுடையது. அதை இன்று திரும்பச் சொல்கிறபோதே நமக்கு மெய்சிலிர்க்கிறது. 1980களில் அல்லது 90களில் அடிபணிய மறுக்கும் குரல் வந்ததையே தமிழகம் ஆச்சரியமாக பார்த்தது. ஆனால் 1942-ல் நிலப்பிரபுக்களுக்கெதிராக, ‘திருப்பி அடி!’ என்ற வலுவான குரல் ஒருவரிடமிருந்து வந்ததென்றால் அது தோழர். பி.எஸ்.ஆரிடம் இருந்துதான்.
எப்படி வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம்? அவரே விளக்குகிறார்: “லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் பண்ணையடிமைகளாக இருந்தனர். அவர்களின் வாழ்க்கை நிலைமையோ மிகக் கொடூரமாக இருந்தது. நிலப்பிரபுகள் வீட்டிலிருந்து அதிகாலை 3 மணிக்கு கொம்பு ஊதியதும் பண்ணையடிமைகள் விழித்துக் கொண்டு நாலரை மணிக்கு ஏர் கட்ட மாட்டை அவிழ்க்க வேண்டும். அதிகாலையில் வயலில் இறங்கும் பண்ணையடிமைகள் காலை 11 மணிக்கு கரைக்கு (மேட்டுக்கு) வந்து கஞ்சியை குடித்து விட்டு மாடுகளைச் குளிப்பாட்டி வைக்கோல் வைக்க வேண்டும். பிறகு வயல் வேலைகளை இரவு 7- 8 மணி வரை செய்ய வேண்டும். வேலைக்கு வரும் ஆண்களும் பெண்களும் இருள் சூழ்ந்த பின்னரே வீடு திரும்ப முடியும். உடல் நிலை சரியில்லை என்றாலோ, சொல்லாமல் வேலைக்கு வராமல் இருந்து விட்டாலோ, பண்ணையடிமைகள் கட்டி வைத்து சாட்டையால் அடிக்கப்படுவார்கள். ஐந்து பிரி கொண்ட சாட்டையில் பிரியை விலக்கி விட்டு கூரான கூழாங்கல்லை சொருகி இருப்பார்கள். சாட்டையால் அடிக்கும் போது ரத்தம் கொட்டும். அந்தச் சாட்டை ஒவ்வொரு முறை உடலை பதம் பார்க்கும் பொழுதும் பண்ணையடிமை துடித்துப்போவார்.”
இப்படி வாயிருந்தும் ஊமையாய் இருந்த மக்களிடையேதான் அத்தகைய கலகக்குரலை எழுப்பினார். விவசாய சங்கம் முதலில் வைத்த கோரிக்கைகளை பார்த்தால் அன்றிருந்த நிலைமையை இன்னும் துல்லியமாக அறிய முடியும்.
விடிந்த பின் தான் ஏர் கட்ட வேண்டும்.
சூரியன் உதித்த பின்புதான் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்
குழந்தைக்கு கரையேறித்தான் பால் கொடுக்க வேண்டும்.
உழைப்பிற்கேற்ப ஊதியம் வேண்டும்.
இதை சாதித்து காட்டியது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தோழர்.பி. சீனிவாசராவ் அவர்கள் தலைமையில்!
தாழ்த்தப்பட்ட மக்களிடையே பல்வேறு அமைப்புகள், தாழ்த்தப்பட்ட மக்களிடையே இருந்து தோன்றிய தலைவர்கள் பலர் இருந்தாலும், நிலப்பிரபுக்களுக்கெதிராக, பண்ணையடிமைத் தனத்துக்கெதிராக அம்மக்களை விழிப்படையச் செய்து, எதிர்த்து நிற்க வழிகாட்டிய தமிழக விவசாயிகள் இயக்கத்தின் தன்னிகரில்லா தலைவர் பி.எஸ்.ஆர்.
ஆம்! உழைப்பாளி மக்கள் “கோடிக்கால் பூதம் – கோபத்தின் ரூபம்” என்பதை எதிரிகளுக்கு மட்டுமல்லாமல் பண்ணையடிமைகளாக, விலங்கினும் கீழாக நடத்தப்பட்ட அம்மக்களையும் உணரச்செய்து வீரியமிக்க வரலாற்றில் முத்திரை பதித்த போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர்.
அவர் பிறந்தது பிராமணர் குலத்தில் என்றாலும், அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு மக்களோடு மக்களாக இரண்டற கலந்து வாழ்ந்தவர். பண்ணையடிமைகளாக இருந்த மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமென்பதற்காக, அவர்கள் உண்ட நண்டு, நத்தை, மீன்குஞ்சுகளை சாப்பிட்டார். அவர்கள் உறங்கிய கிழிந்த சாக்கில் அவரும் படுத்துறங்கினார். அவர்கள் வாழ்ந்த குடிசையிலேயே தங்கி தனது இறுதி மூச்சுவரை மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை கொண்டிருந்தார். அவர் மக்களின் மனங்களில் வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். மக்களிடையே பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும் அவரது வாழ்க்கையிலிருந்து கற்றறிய வேண்டிய மிக முக்கிய பாடம் இது.
தோழர்.பி.சீனிவாசராவ் இம்மண்ணில் 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும், தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டவர். குறிப்பாக, கீழத்தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய திருவாரூர், நாகப்பட்டினம்) பண்ணையடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களையும், குத்தகை விவசாயிகளாக இருந்த பிற்படுத்தப்பட்ட மக்களையும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக வர்க்க அடிப்படையில் ஒன்று திரட்டி வெற்றிகண்ட மாபெரும் வீரர் தோழர்.பி.எஸ்.ஆர். அதன் பொருள் சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தையும், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்தது இவரின் சாதனை ஆகும். 1907 ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பிறந்தார். 1961 செப்டம்பர் மாதம் 30-ம் தேதி மறைந்தார்.
ஆனால், பண்ணையடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மக்களை விவசாயத் தொழிலாளர் என்ற நிலைக்கு உயர்த்திய அவரின் சாதனை மற்றவர்களால் அங்கீகரிக்கப்படாதது மிகப்பெரும் வேதனை. அதற்கு இரண்டு காரணம் ஒன்று அவர் கம்யூனிஸ்டாக இருந்து அந்தப் பணியை செய்தது. மற்றொன்று, அவர் பிராமணர் சாயிதியில் பிறந்தவர் என்பது. ஆனால், அவரால் விடுதலை செய்யப்பட்ட மக்கள் அவரை மறக்கவில்லை. அதனால்தான் ஒப்பீட்டளவில் இன்னும் செங்கொடி இயக்கம் கீழத்தஞ்சை மாவட்டத்தில் வலுவாக இருப்பதற்கு காரணம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் போற்றிப் பாராட்டும் பண்பு வளர வேண்டும். மாறாக, புறக்கணிக்கும் போக்குதான் இருக்கிறது. இத்தகைய நல்ல முன்னுதாரணங்கள் வரலாறாக நம்முன் இருந்த போதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த தலைவர்களால் மட்டும்தான் பாடுபட முடியும், போராட முடியும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்டவரின் வலியை அவர்களால்தான் உணர்வு பூர்வமாக உணர முடியும் என்று கூறுகிறார்கள். இந்தக் கருத்தை எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே உடைத்து நொறுக்கி, அந்த ஒடுக்கப்பட்டவர்களின் உடல் வலியை, மன வலியை உணர்ந்தவராக மட்டுமல்லாமல், அந்த வலியிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் அம்மக்களுக்கு காட்டி மறைந்த மகத்தான தலைவர் தோழர். பி. சீனிவாசராவ். அவரது நினைவை போற்றுவோம்! அவர் வழி நடக்க சபதமேற்போம்!
Leave a Reply