வகுப்புவாத எதிர்ப்பு கூட்டு மேடை உருவாக்குவதும் அதில் கம்யூனிஸ்டுகள் தீவிரமாக செயல்படுவதும் அவசியமானது. ஆனால் மத நம்பிக்கை, இதர முதலாளித்துவ சித்தாந்தங்கள் பற்றிய சரியான பார்வை இல்லையெனில் இம்முயற்சி தனது இலக்கை எட்டுவது சிரமம்.
“மதம் குறித்த தொழிலாளி வர்க்கக் கட்சியின் பார்வை” என்ற கட்டுரையில் கம்யூனிஸ்ட் அணுகுமுறை குறித்து லெனின் விளக்குகிறார். “விஞ்ஞான சோசலிசம் அமைப்பதை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிய உலகக் கண்ணோட்டம் கொண்டது… கம்யூனிஸ்ட் கட்சி” என்று துவங்குகிறார் லெனின்.
சோஷலிச சமூகம் அமைகிறபோது மதத்தை தடைசெய்ய வேண்டும் என்று டூரிங் கருத்து தெரிவித்தபோது அதனை ஏங்கெல்ஸ் கடுமையாக எதிர்த்தார். அதைக் குறிப்பிட்ட லெனின் இதுபோன்ற கோரிக்கைகள் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எழுதுகிறார். நேரடியாக மதத்திற்கு எதிரான கோரிக்கைகள் அரசியல் ரீதியான வித்தியாசங்களை மறைத்துவிட்டு மதரீதியான வித்தியாசங்களை முக்கியமானதாக மாற்றுகின்றன: “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் கவனத்தை திசை திருப்புகிறது. இது, தொழிலாளி வர்க்கக் கடமையிலிருந்தும் புரட்சிகர போராட்டத்திலிருந்து தடம்புரள வைக்கிறது……”
அதேநேரத்தில் மதம் என்பது தனிநபரின் நம்பிக்கை அதில் தலையிடக்கூடாது என்ற கருத்தைப் பற்றியும் சரியான புரிதல் வேண்டும் என்கிறார் லெனின். கம்யூனிஸ்ட் இதனை கூறும்போது ஆளுகிற அரசு மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிடக் கூடாது; அந்த அரசு மதத்தை தனிநபரிடம் விட்டுவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகின்றனர்.
ஆனால் இதன் அர்த்தம் மதத்தின் பெயரால் எது நடந்தாலும் மூட, பிற்போக்கு நம்பிக்கை அடிப்படையில் எது நடந்தாலும் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமென்பதில்லை. கட்சிக்குள் மார்க்சிய தத்துவார்த்தக் கண்ணோட்டமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆழமாக வேரூன்ற வேண்டும். மக்களிடமும், உழைக்கும் மக்களிடமும் அறிவியல் கண்ணோட்டம் வலுப்பட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பாடுபட வேண்டும். அத்துடன் வலுவான வர்க்கப் போராட்டம் உள்ளூர் மட்டத்தில் தீவிரமாக வேண்டும்.
மத எதிர்ப்புப் பிரச்சாரம் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தினைப் பற்றி எழுதுகிறபோது லெனின் அழுத்தமாக குறிப்பிடும் கருத்துக்கள் இன்றும் பொருந்துகின்றன. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதினாலும் மக்கள் மனங்களிலிருந்து மதம் அகன்றுவிடாது என்கிறார் லெனின். ஏனென்றால், அந்த மக்கள் முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள்: அவர்கள் கண்மூடித்தனமான முதலாளித்துவ அழிவுச் சக்திகளின் பிடியில் இருக்கிறார்கள்.
மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராக அனைத்து வடிவங்களிலும், உணர்வுப்பூர்வமாக, திட்டமிட்டவாறு, அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டுப் போராடும் மக்கள்தான் மதத்தின் அடிப்படைக்கு எதிராகவும் போராடக் கற்றுக் கொள்வார்கள்.
மத விமர்சனம் செய்யலாமா?
அதேநேரத்தில் மற்றொன்றையும் லெனின் குறிப்பிடுகிறார்.
மதத்தை விமர்சிக்கும் புத்தகங்கள் தேவையற்றது அல்லது தீமையானது என்ற முடிவுக்கு வரலாமா? பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டு பலரது மத விமர்சன நூல்களை புறக்கணிக்க வேண்டுமா? இதனை வலுவாக மறுக்கிறார் லெனின்… இல்லை, நிச்சயமாக இல்லை. (கம்யூனிஸ்ட் கட்சியின்) அடிப்படையான கடமை, சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டலுக்கு ஆளான மக்களின் வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவது. ‘இந்தக் கடமைக்கு உட்பட்டுத்தான் அதன் பகுத்தறிவுப் பிரச்சாரம் அமைய வேண்டும்.’ என்று விளக்குகிறார் லெனின்.
சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இல்லையெனில் மத அடிப்படையில் எழும் பிற்போக்குத்தனத்தையும் வகுப்புவாதத்தையும் முறியடிக்க முடியாது. பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் உள்ள மத விமர்சனங்கள் மிகுந்த சக்தி வாய்ந்த வாதங்கள். கம்யூனிஸ்ட்கள் அவற்றை தங்கள் வயமாக்கிக் கொண்டு வர்க்கத் திரட்டலுக்கு பொருத்தமாக மக்களை வெறும் நம்பிக்கை என்கிற இருட்டிலிருந்து வெளிக் கொணர்ந்து வர்க்கப் போராட்டத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால் சில நேரங்களில் அவை மட்டுமே பிரதானமாக முனவைத்து வர்க்கப் போராட்ட நடைமுறையை பின்னுக்குத் தள்ளுவது தவறானது.
ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொழிலாளர்கள் திரண்டு இருக்கின்ற அந்த கூட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கோரிக்கைகளை விளக்கிப் பேசுகின்றார். கம்யூனிஸ்ட் என்பதால் சில தொழிலாளர்கள், குறிப்பாக கடவுள் நம்பிக்கையில் தீவிரமாக இருக்கும் தொழிலாளர்கள், இவரது கருத்துக்களில் ஒன்றிணைவதில் தயக்கம் காட்டலாம் என்று அவருக்குத் தோன்றுகிறது.
அந்த சமயத்தில் உங்களுக்கு உங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இருப்பது போன்று நான் சோஷலிச மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்று பேச்சைத் துவங்குகிறார். இவ்வாறு பேசிய அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமா? கூடாது என்கிறார் லெனின். மக்களை கிளர்ந்தெழச் செய்வதற்கும் அவர்களுக்கு முதலாளித்துவ சுரண்டல் பற்றிய போதனை செய்வதற்கும் இதுபோன்று மத நம்பிக்கையை மதிக்கிற வகையில் கருத்துக்கள் கூறுவது தவறாகாது என்கிறார் லெனின். அதேசமயத்தில் கட்சியின் நிலைப்பாடாக சோசலிசமும் ஒரு மதம்தான் என்கிற முடிவிற்கு செல்வது தவறானது; கண்டனத்திற்குரியது என்கிறார், லெனின்.
இந்த லெனினிய வழிகாட்டுதலை இன்றைய நிலைக்குப் பொருத்திப் பார்த்து, வகுப்புவாத எதிர்ப்பிற்கும், வர்க்கங்களைத் திரட்டுவதற்கும் சில நடைமுறைகளை உருவாக்கி அவற்றைப் பின்பற்றிடலாம்.
மத நம்பிக்கையாளர்களும், நாத்திகர்களும் ஓரணியில்…
அனைத்து மதங்களும் மனித நேயத்தை வெளிப்படுத்துகிற உணர்வுகளையும் சிந்தனைகளையும் கொண்டுள்ளது. அந்த மனிதநேய கருத்துக்களை வகுப்புவாதத்தை மத நம்பிக்கையாளர்களிடமிருந்து பிரித்து, தனிமைப்படுத்திட பயன்படுத்தலாம். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுகிற காஞ்சி சங்கராச்சாரியார் பேசுகிற கருத்துக்கள் அனைத்தும் இந்து மதத்தின் கருத்துக்கள் அல்ல. இதனை ஆதாரப்பூர்வமாக, ஆணித்தரமாக வாதிட்டு இந்து மத நம்பிக்கை கொண்டோரை அணிதிரட்டலாம். காந்தியும் இந்துதான் அவருடைய கருத்துக்களும் காஞ்சி சங்கராச்சாரியாரின் கருத்துக்களும் ஒன்றல்ல என்று நிச்சயமாக வாதிட முடியும்.
பல பிரிவுகள் கொண்ட பௌத்த மதத்தில், அதன் கருத்துக்களை எல்லாரும் ஒரே மாதிரி பேசுவதில்லை. அஹிம்சை போதிக்கும் மதம் என்று அறியப்படுகிற பௌத்தம் இலங்கையிலும், இதர தென்கிழக்கு நாடுகளிலும் பெரும் வன்முறை கட்டவிழ்க்கப் பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று, இன்று இந்தியாவில் சங் பரிவாரம் பேசும் பல இந்துத்துவக் கருத்துக்கள் இந்து மதக் கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ள இயலாது. எனவே ஆளுகிற கூட்டங்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும், உழைப்புச் சுரண்டலை தடையின்றி தொடரவும் பயன்படும் கருவியாக மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆக இரண்டு நிலைகளில் மதம் செயல்படுகிறது. ஒருபுறம் சுரண்டல் கருவியாக அது பயன்படுகிறது மற்றொரு வகையில், மார்க்ஸ் கூறியவாறு, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாகவும் இயங்குகிறது. அனைத்து மதங்களும் மனிதநேயக் கருத்துக்களையும் கொண்டிருக்கின்றன. அதே ஆளும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஏற்றவாறு மதக் கருத்துக் கள் ஏராளமான இடைச் செருகல்கள் கொண்ட கலவையாகவும் உருமாற்றம் பெற்று வருகின்றன.
முரண்பாடாகத் தெரிந்தாலும், வகுப்புவாத எதிர்ப்பு திரட்டலில் மத நம்பிக்கையாளர்களும், பகுத்தறிவாளர்கள் என்று அறியப்படுகிற நாத்திகர்களும் அங்கம் வகிக்க வேண்டும். ஏனெனில் மதவாதம் அறிவுபூர்வமான சிந்தனைக்கும் உண்மையான மனிதநேய, மத சிந்தனைக்கும் எதிரானது. இவர்களோடு, வகுப்புவாதத்தை எதிர்க்கும் தனிநபர்களின், மதச்சார்பற்ற அமைப்புகள் கொண்ட விரிவான மேடை எழுவது அவசியம். இது அனைத்திந்திய, மாநில மட்டத்தில் மட்டுமல்லாது பகுதி சார்ந்தும் அத்தகைய மக்களின் மேடைகள் எழ வேண்டும். உள்ளூர் அளவில் மிக மிக விரிவான உள்ளூர் மதச்சார்பற்ற சமூகங்கள் பணியாற்றும் சங்கம மாக இந்த மேடைகள் உருவாக வேண்டும்.
மதவாத உணர்வுகளை அகற்றுவதற்கு அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும். இது மதச்சார்பற்ற சக்திகள் செய்திட வேண்டிய முக்கிய கடமை. இயற்கையின் இயக்கத்திற்கு பின்னால் ஆட்டுவிக்கும் சக்தியாக இருப்பது சர்வ வல்லமை கொண்ட கடவுள் என்ற கருத்தியல் நீடிக்கும் வரை மத அடிப்படையில் மக்களைத் திரட்டும் வாய்ப்பும், வகுப்புவாதம் வளரும் வாய்ப்பும் நீடிக்கும். இயற்கையின் இயக்கம், பிரபஞ்ச இயக்கம் குறித்து இதுவரை அறிவியல் வந்தடைந்திருக்கிற முடிவுகளை சாதாரண மனிதர்களும் புரிந்து உள்வாங்கிடும் நிலை ஏற்பட வேண்டும்.
கம்யூனிஸ்ட்கள் எப்போதுமே இதில் அக்கறை காட்டி வந்தனர். சிங்காரவேலர் வாழ்நாள் முழுவதும் அறிவியலை பரப்புவதையே அன்றாடப் பணியாகக் கொண்டிருந்தார். பிரபஞ்சம் பற்றி அன்று வரை கண்டறியப்பட்ட அறிவியல் விவரங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். தமிழ்நாட்டில் எழுந்த பகுத்தறிவுவாதம் அறிவியலை கருவியாகக் கொண்டு மத மற்றும் மூட நம்பிக்கைகளை அகற்றும் உத்தியைக் கையாளவில்லை.
பெரியார் அவ்வப்போது அறிவியலை பேசினாலும் பகுத்தறிவு இயக்கம் பொதுவாக கடவுள் நம்பிக்கை மீதான நேரடித் தாக்குதலாகவே இருந்தது. நம்பிக்கை உணர்வுக்கு மாற்றாக அறிவியல் உணர்வை ஏற்படுத்தும் கடமையில் ஓரளவிற்கு மட்டுமே அவர்கள் பயணித்தார்கள். இது அந்த இயக்கத்தின் முக்கிய குறைபாடாக அமைந்தது. இந்த வரலாற்று படிப்பினையை உணர்ந்து செயல்பட வேண்டும். இன்றைய வகுப்புவாதம் இறுகிப்போன மதப் பிடிமானத்தின் அடித்தளத்தில் கட்டப்படுகிறது.
அதன் வேர்களை அறுத்தெறிய அறிவியல் என்ற போர்வாள் பொருத்தமானது. சமூகத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுபடச் செய்து மத நம்பிக்கை என்பது தனிநபர் உலகத்தில் மட்டும் இருக்கும் நிலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. சமூகம் என்று வருகிறபோது அது மதச்சார்பின்மை வழி இயங்கிட வேண்டும். ஒவ்வொருவர் சிந்தனையிலும் அறிவியல் ஞானம் வேரூன்ற செய்திட்டால் இத்தகு மதச்சார்பின்மை சூழல் உருவாகும். உள்ளூர் அளவில் மக்களோடு நெருங்கி அறிவியலைப் பரப்பும் பணியை மதச்சார்பற்ற இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.