(குரல்: தேவிபிரியா)
- உ.வாசுகி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 54வது அமைப்பு தினம் வரும் இத்தருணத்தில், கட்சியின் பல்வேறு பங்களிப்புகளைத் திரும்பிப் பார்ப்பது தற்கால வளர்ச்சிக்கு உதவும். மக்கள் ஜனநாயக புரட்சியைத் தன் இலக்காக வைத்து செயல்படும் கட்சி, இன்றைய முதலாளித்துவ ஜனநாயகத்தை மேலும் மேம்படுத்தி மக்கள் ஜனநாயகம் என்ற அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதைத் தன் லட்சியமாக வைத்திருக்கிறது. மக்கள் ஜனநாயக அரசு அமையும் போது, முழுமையான சிவில் உரிமைகள் உறுதி செய்யப்படும், விசாரணையின்றி எவரும் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள், மத நம்பிக்கை, வழிபாட்டுக்கு முழு சுதந்திரம், பேச, கருத்து கூற, கூட்டம் கூட, வேலை நிறுத்தம் செய்ய, அமைப்புகள்/அரசியல் கட்சிகளைத் தோற்றுவித்து நடத்த சுதந்திரம், ஊடக சுதந்திரம், இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வர, விருப்பமான வேலைகளைத் தேர்வு செய்ய, மாற்றுக் கருத்தை முன்வைக்க சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்று கட்சியின் திட்டம் கூறுகிறது.
20வது அகில இந்திய மாநாட்டின் “சில தத்துவார்த்த பிரச்னைகள்” குறித்த தீர்மானம், “மக்களின் அதிகாரமே உச்சபட்சமானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள், சிவில் உரிமைகள் ஆகியவை, சோஷலிச அரசியல், சமூக, நீதி முறைமையின் பிரிக்க முடியாத அம்சங்களாக இருக்கும். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் பெயரளவு உரிமைகள் இருக்குமே தவிர, உரிமைகளைப் பயன்படுத்தும் திறன் மக்களுக்கு மறுக்கப்படும் நிலையே நீடிக்கும். சோஷலிச முறையிலோ, சோஷலிச ஜனநாயகம் தழைக்கும். மனித வாழ்க்கையின் தரம் தொடர்ச்சியாக ஆழப்படுத்தப்பட்டு, வளர்ச்சியடையும் நிலையே சோஷலிச ஜனநாயகத்தின் அஸ்திவாரமாக அமையும். அனைத்து மக்களும் பொருளாதாரம், கல்வி, சமூக ஆளுமை பெறும் நிலையை உருவாக்குவது என்பதன் அடிப்படையிலேயே ஜனநாயகம் பொருள் கொள்ளப்படும்.
சோஷலிசத்தின் கீழ் மாற்றுக் கருத்து கூறும் உரிமை, பேச்சு சுதந்திரம், பன்முகத்தன்மை கொண்ட கருத்துக்களை முன்மொழிவது போன்றவை பாட்டாளி வர்க்க அரசின் தலைமையின் கீழ் சோஷலிசத்தை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இருக்கும். இதன் பொருள் என்ன? சாதி ஒழிப்பு, அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், சிறுபான்மை மற்றும் ஓரம் கட்டப்பட்ட சமுதாயத்தினருக்கு உண்மையான சமத்துவம், பாலின ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவது போன்றவை நடக்கும் என்பதுதான் ” என்று விளக்குகிறது. உண்மையான முழுமையான ஜனநாயகம் இப்படித்தான் இருக்க முடியும். வறுமையை நீடித்துக் கொண்டு, வறுமையே வெளியேறு என்று முழக்கமிட மட்டும் உரிமை கொடுப்பது அல்ல; எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், ஆனால் அதற்கான நிதி நிலை இல்லை என்கிற சூழல் அல்ல; தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; ஆனால் பணம் உள்ளவர் மட்டுமே வெற்றியடைய முடியும் என்ற சூழல் அல்ல, அனைவரும் சமம் ஆனால் தலித், ஆதிவாசி, பெண்கள் தவிர என்ற நிலை அல்ல. தத்துவார்த்த தீர்மானத்தின் விளக்கத்தைப் பார்க்கும் போது, முதலாளித்துவ சமூக அமைப்பில் ஜனநாயகம் பெயரளவுக்கே என்பது மிகச் சரியாகப் புரியும்.
உட்கட்சி ஜனநாயகம்:
ஜனநாயகம் என்று சொன்னாலே, முதலில் உங்கள் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா என்ற கேள்விகள் மேலெழுகின்றன. கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ள கட்சியில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று வருந்துவோர், விமர்சிப்போர் உண்டு. ஜனநாயக மத்தியத்துவம் என்ற உயர்ந்த ஸ்தாபன கோட்பாடு, அடிப்படையில் உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஏற்பாடே. சக ஊழியர்களை, தலைமையை, கட்சியின் முடிவுகளை விமர்சிக்கும் உரிமை மற்றும் சுதந்திரம் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்குப் பூரணமாக உண்டு. அவர் செயல்படும் கிளை/கமிட்டியில் அதை செய்ய வேண்டும் என்ற ஒரே கட்டுப்பாடு மட்டுமே! கட்சியின் எந்த மட்டத்துக்கும் தன் கருத்துக்களைக் கொண்டு செல்லும் உரிமையும் கட்சி உறுப்பினருக்கு உண்டு. விவாதித்து, ஆய்ந்து பின்னர் முடிவெடுத்த பிறகு, மாற்றுக் கருத்து இருப்பவர்களும் முடிவினை அமல்படுத்த வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் மற்றொரு அம்சமான மத்தியத்துவம். கட்சியின் கூட்டான முடிவே உயர்ந்தது. ஒரு வேளை அம்முடிவு தவறானது என்று காலமும் சூழலும் நிரூபித்தால், அத்தவறை ஏற்கும் பக்குவமும் கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு.
ஜனநாயகத்தை முடக்குவது முதலாளித்துவ அரசுகளே:
முதலாளித்துவ அமைப்புதான், எல்லையற்ற சுதந்திரம் என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு, தன் ஒடுக்குமுறை கருவியான அரசின் மூலம், தான் விரும்பும் போதெல்லாம் ஜனநாயக உரிமைகளை முடக்குகிறது; பறிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை அரசியல் சாசன பிரிவு 356ஐ பயன்படுத்தி மத்திய காங்கிரஸ் அரசு முதன் முதலில் கலைத்தது என்பது, தோழர் இஎம்எஸ் தலைமையிலான கேரள அரசைத்தான். விமோசன சமரம் என்ற பெயரில் வன்முறையாட்டங்கள் அரங்கேற்றப்பட்டு, பின் அதையே சட்டம் ஒழுங்கு சீர்குலைவாக முன்வைத்து ஆட்சி கலைக்கப்பட்டது. கட்சி அதனை மக்கள் ஆதரவுடன் எதிர்கொண்டது. அவசரகால நிலையின் போது ஜனநாயக உரிமை மீறல்களைப் பட்டவர்த்தனமாகப் பார்த்தோம். அக்காலத்தில் அரசியல் சாசனம் உறுதி செய்த அடிப்படை உரிமைகள் யாவும் எதிர் கட்சிகளுக்கும், மக்களுக்கும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. அடக்குமுறை நிகழ்த்த காவல்துறைக்கு முழு சுதந்திரம், வன்முறைகளைக் கட்டவிழ்க்க அரசுக்கு முழு சுதந்திரம். ஷா கமிஷன் அம்பலப்படுத்திய கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் இந்த வேஷத்தைக் கலைத்துப் போட்டன. அரசியல் கட்சி என்ற முறையில் இத்தாக்குதலின் பெரும்பகுதியை எதிர்கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் தொடர்ச்சியாக இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தது இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொண்டு, ஜனநாயகத்துக்கான விடாப்பிடியான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்ததன் விளைவே.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில்…
1967லேயே மேற்குவங்க ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தோழர் ஜோதிபாசு துணை முதல்வராக செயலாற்றிய போது, முதலாளி தொழிலாளி பிரச்னை சட்டம் ஒழுங்கு பிரச்னையல்ல, எனவே காவல்துறை தலையிடாது என்ற முடிவாகட்டும்; முன்னெச்சரிக்கை கைது என்பது நடக்காது என்ற முடிவாகட்டும்; பழி வாங்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் மீண்டும் வேலைக்கு எடுக்கப்பட்டது உள்ளிட்டவை ஜனநாயகத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே. இச்சூழல் ஜனநாயக மற்றும் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை வலுப்படுத்தின. அதன்விளைவாக நடந்த நில சீர்திருத்தமும் ஏழைகளின் வாழ்க்கைக்கான உரிமையை மீட்டுத் தந்த செயல்பாடே. ஒரு சில மாதங்களில் 2.34 லட்சம் ஏக்கர் நிலங்கள் நிலமற்ற ஏழைகளுக்கு அளிக்கப்பட்டன. ஜனநாயக விரோத காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான சக்திகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், முதல்வர் பொறுப்பை விட்டுத் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மார்க்சிஸ்ட் கட்சியால் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. 9 மாதங்களிலேயே ஆளுநர் சட்ட விரோதமாக இந்த ஆட்சியைக் கலைத்தார்.
1969ல் அமைக்கப்பட்ட இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதும், துணை முதல்வராகவே ஜோதிபாசு செயல்பட்டார். நிலங்களிலிருந்து விவசாயிகளின் வெளியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. 6 லட்சம் ஏக்கர் நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. 13 மாதங்களில் இந்த அரசும் கலைக்கப்பட்டது. ஆட்சி அமைக்க வாய்ப்பு வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப் பட்டது. ஜோதிபாசுவைக் கொல்ல முயற்சி நடந்தது. கண்மூடித்தனமான தாக்குதல், வரைமுறையற்ற கைது, ஒழித்துக் கட்டுவது, உரிமைகளை நசுக்குவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயக சக்திகள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி மீது நிகழ்த்தப்பட்டன. ராணுவமும், மத்திய ரிசர்வ் காவல்துறையும் போராட்டங்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப் பட்டன. 20,000 பேர் கைது செய்யப்பட்டனர், ஒரு லட்சம் பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டது, 1969-71 கால கட்டத்தில் 543 தோழர்கள் கொல்லப்பட்டனர். ஊடகங்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. 1971 தேர்தல் முடிந்த பின்னர் தனிப்பெரும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அமைத்த ஆட்சி 3 மாதங்களில் பெரும்பான்மை இழந்த பின்னும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு மறுக்கப்பட்டது. ஜனநாயக மாண்புகள் அனைத்தும் குப்பைக்கூடையில் வீசப்பட்ட காலம் அது. மக்களைத் திரட்டி எழுச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்ட காலமும் அதுவே.
குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டு சித்தார்த்த சங்கர் ரேயின் தலைமையில் காங்கிரசின் ஒடுக்குமுறை ஆட்சி அரை பாசிஸ அடக்குமுறையைக் கம்யூனிஸ்டுகள் மீது கட்டவிழ்த்து விட்டது. ஜனநாயக நடவடிக்கையின் முக்கிய பிரதிபலிப்பான தேர்தல், மோசடிகளின் உச்சகட்டமாக நடந்தது. ஏராளமானோரின் வாழ்வுரிமை தகர்க்கப்பட்டது. 50,000 பேர் குடியிருப்புகளில் இருந்து விரட்டப்பட்டனர். குண்டர்களின் ராஜ்யமே நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட, அக்கால கட்டத்தில் காங்கிரசின் பக்கம் நின்றது.
1977-ல் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-ஜனதா அணியே மகத்தான வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தலில் 294 தொகுதிகளில் 230 இடங்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைத்தன. ஆட்சிக்கு வந்த உடன் எடுக்கப்பட்ட முதல் முடிவு, விசாரணையின்றி சிறையில் வாடும் கைதிகள், நக்சலைட்டுகள் உட்பட உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான். மூன்றடுக்கு பஞ்சாயத்துமுறை கொண்டு வரப்பட்டு முதன் முதலாகத் தேர்தல் நடைபெற்றது. மத்திய மாநில அரசு உறவுகளை சீரமைக்கக் குரல் கொடுக்கப்பட்டது.
மாநில அரசுகளின் சட்டங்களை, குடியரசு தலைவரின் அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போட்டு வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு வங்க இடது முன்னணி அரசின் நில சீர்திருத்த சட்டம் நீண்ட காலம் முடக்கப்பட்டது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வு கூட அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையாகப் பார்க்கப்படாமல் மாநிலங்களை அடக்கி ஆளும் கருவியாகவே பயன்படுத்தப் பட்டது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள் சிலவற்றை மத்திய அரசு கபளீகரம் செய்ய முயற்சித்தது. இதன் உச்சகட்டம்தான் அவசர கால நிலையின் போது இந்திரா காந்தி கொண்டு வந்த 42வது அரசியல் சட்ட திருத்தம். இது மாநிலங்களின் உரிமைகளில் நீதி துறையின் உரிமைகளில் மத்திய அரசு வலுவாகக் கை வைக்க ஏதுவானது. அவசர கால நிலை நீக்கப்பட்ட பிறகே, ஜனதா ஆட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வற்புறுத்தலில் 42வது திருத்தம் ரத்து செய்யப்பட்டது. யார் ஆட்சியின் இருந்தாலும் மீண்டும் ஓர் அவசர கால நிலையை சுலபமாக கொண்டு வர முடியாத அளவு சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதிகார பரவல்
1977-ல் ஆட்சிக்கு வந்த உடனே இடது முன்னணி அரசு மாநில அதிகாரங்கள் குறித்து மத்திய ஜனதா அரசுக்கு ஒரு விரிவான மனுவைக் கொடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் 1983ல் ஸ்ரீநகரில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் கூடி மத்திய – மாநில உறவுகளை சீரமைக்க வேண்டும் என்பதற்கான திட்டத்தைத் தயாரித்தன. மேற்கு வங்கத்தின் மூன்றடுக்கு உள்ளாட்சி முறை, முறையான தேர்தல், காங்கிரஸ் அரசின் 73,74வது அரசியல் சட்டத் திருத்தம் (பஞ்சாயத் ராஜ்) வருவதற்கும் முன்னமே உள்ளாட்சியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவை மிக முக்கியமான நடவடிக்கைகள். ஒரு பக்கம் நில சீர்திருத்தத்தின் மூலம் ஏழை குடும்பங்களின் கையில் நிலம், மறு பக்கம் உள்ளாட்சிகளின் மூலம் அவர்களுக்கு அதிகாரம் என்ற ஏற்பாடு ஜனநாயகத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் ”மக்கள் ஈடுபாட்டுடன் திட்டமிடல்” முயற்சி பாராட்டுக்குரியது. ஜனநாயகத்தின் மிக முக்கிய குறியீடு இது. உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம், மாநில வளர்ச்சி பட்ஜெட்டில் 35% ஒதுக்கீடு, உள்ளாட்சிகள் மூலம் இந்நிதி செலவு செய்யப்படும் நிலை போன்றவை சிறப்பான முன்னுதாரணம். கிராம சபைகள் சக்தி மிக்க அமைப்புகளாக மாறின. இஎம்எஸ் ஆட்சி காலத்திலேயே பெருமளவு நில சீர்திருத்தம் நடந்தது.
தேசிய வளர்ச்சி கவுன்சில், மாநிலங்களுக்கான கவுன்சில், திட்டக் கமிஷன், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் போன்றவை மத்திய மாநில உறவுகளை சீரமைப்பதற்கான வாய்ப்பு கொண்டவை. இவற்றை மார்க்சிஸ்ட் கட்சி கூட்டாட்சி கோட்பாட்டை நடைமுறைப்படுத்த பயன்படுத்தியது. ஆனால் அவை தற்போது பலவீனப்படுத்தப்பட்டுள்ளன அல்லது கலைக்கப்பட்டுள்ளன.
ஊடக சுதந்திரம்
ஜனநாயகத்தின் முக்கிய தூணாகக் கருதப்படும் ஊடகங்களும் முதலாளித்துவ அரசுகளின் குரல் நெரிப்பிலிருந்து தப்புவதில்லை. அவசர கால நிலையின் போது தீக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகள் இதை சந்தித்தன. தற்போது மோடி ஆட்சியில் ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகின்றனர். வேலையும் எதிர்காலமும் அவர்களுக்குப் பறிக்கப்படுகின்றன. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேஷர் கதாவின் உரிமம் காரணம் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதான கட்சிகள் வாய் திறக்க மறுக்கின்றன. அதே போல் வதந்திகளைப் பரப்பி அடித்தே கொல்வது என்ற போக்கு மோடி ஆட்சியின் தான் வலுப்பெற்றுள்ளது. தலித் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இத்தாக்குதலை சந்திக்கின்றனர். உயிர் வாழும் உரிமை கூட மறுக்கப்படும் இத்தகைய போக்குகளை உறுதியாக எதிர்ப்பதில் வேறு எந்தக் கட்சியையும் விட மார்க்சிஸ்ட் கட்சியே முன் வரிசையில் நிற்கிறது.
தேர்தல் சீர்திருத்தங்கள்
தேர்தல் சீர்திருத்தத்துக்கான உறுதியான குரல் எழுப்பி, பெரும் ஜனநாயக நடவடிக்கையான தேர்தல் முறையாக நடப்பதற்கான முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி செய்து வருகிறது. தேர்தல் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும்; தனியார் நிறுவனங்கள் உச்சவரம்பின்றி அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி அளிப்பதை அனுமதிக்கும் சட்ட திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும்; பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதைக் கொல்லைப்புற வழியாக அனுமதிக்கும் சட்ட திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும்; தேர்தல் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்; விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஒரு பகுதி தொகுதிகளில் அமலுக்கு வர வேண்டும் என்பன போன்ற அழுத்தங்கள் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளாகும். பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டு கோரிக்கையை சமரசமின்றி முன்னெடுத்ததும், சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அளித்த சிறுபான்மை மக்களுக்கான பரிந்துரைகளை நிறைவேற்ற நிர்ப்பந்தங்களைக் கட்டமைத்ததும் மார்க்சிஸ்ட் கட்சி என்பது மறுக்க முடியாத ஒன்று.
கேரளாவின் புன்னப்புரா வயலார் தியாகம், மேற்கு வங்கத்தின் தேபாகா இயக்கம், ஆந்திராவின் வீர தெலுங்கானா இயக்கம், தமிழகத்தின் கீழத் தஞ்சை இயக்கம், மஹாராஷ்டிராவின் வார்லி ஆதிவாசிகளின் கிளர்ச்சி, திரிபுரா பழங்குடியின மக்களின் எழுச்சி என்று ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான போராட்டங்கள் செங்கொடியின் தலைமையின் கீழ் தான் நடந்திருக்கின்றன. இப்போதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தம் வீரர்களையும், வீராங்கனைகளையும் களப்பலி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. தோழர்களும் சமரசமற்ற போராட்ட பாதையில் துணிச்சலுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும் காலம் இன்னும் மோடி ஆட்சியில் இருண்டதாக இருக்கலாம். ஆனால் முடிவில் அடக்குமுறை தான் ஒடுக்கப்படும்.
Leave a Reply