கியூபாவிற்கான புதிய அரசியலமைப்பு சட்டம்


கியூபாவின் சோசலிச அமைப்பு மிகவும் உயர்வானது. இக்கட்டுரையில் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உயர்ந்த ஜனநாயகப் பண்புடன் மக்கள் கருத்தறிந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. மேலும்,  அந்த புதிய சட்டம் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கான, சமத்துவத்தை பாதுகாக்கும் சட்டமாகவும் இருப்பது விளக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு மாற்று தேவை. அது சோசலிசமே என்பதை இக்கட்டுரை மீண்டும் தெளிவுபடுத்துகிறது. சோவியத் ரஷ்ய புரட்சி உலகப் புரட்சிகளின் முன்னோடியாகும். நவம்பர் புரட்சி மாதத்தில், கியூப நவீன மாற்றங்களை அறிந்துகொள்வோம்.

—————————

கியூபாவிற்கான புதிய அரசியலமைப்பு சட்ட நகல் தீர்மானம், கியூப நாட்டின் தேசிய மக்கள் அதிகார பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,  தற்போது மக்களின் முன்பு விவாதத்திற்காகவும், மக்கள் கருத்துகளை பெறுவதற்காகவும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த பணிக்கென்று ஆகஸ்ட் 13 முதல் நவம்பர் 15 வரை ஒரு லட்சத்து முப்பத்து ஐயாயிரம் (1,35,000) கூட்டங்களை நடத்த கியூப அரசு முடிவு செய்தது.  மக்கள் கூடும் இடங்கள், பணியிடங்கள், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் என்று நாடு தழுவிய அளவில்   கூட்டங்களை நடத்தத் தீர்மானித்தது, நடத்தியது.  இந்த கூட்டங்களை நடத்துவதற்கென்று இரு நபர்கள் கொண்ட 7600 குழுக்கள்   பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டன.  அதாவது கிட்டத்தட்ட 15000 பேர் இந்த கூட்டங்களை நடத்துவதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு பதிவு செய்வதற்கும் பயிற்சியளிக்கப்பட்டனர்.  பத்து லட்சத்திற்கும் அதிகமான அரசியலமைப்பு நகல் தீர்மானம் அச்சடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது.

படிப்படியான தயாரிப்பு பணிகள்

இந்த தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட்டது.  இந்த கருத்தரங்கத்தில் கியூப கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாகாண பிரதிநிதிகள், இளம் கம்யூனிஸ்ட் லீகின் பிரதிநிதிகள், வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர் சங்க பிரதிநிதிகள், புரட்சிகர ஆயுதப்படை அமைச்சகப் பிரதிநிதிகள், உள்துறை பிரதிநிதிகள் கொள்கை விரிவாக்க அமலாக்க ஆணையத்தின் பிரதிநிதிகள், தேசிய தேர்தல் கமிஷனின் பிரதிநிதிகள், சமூக பொருளாதார ஆய்வு மைய பிரதிநிதிகள் அயலுறவு துறை பிரதிநிதிகள் என 280-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கான நகல் தீர்மானத்தின் ஒட்டு மொத்த முன்மொழிவும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடந்த மே 13, 2013 அன்று, இதற்கென பிரத்தியேகமாக நியமித்த குழுவினால் தயார் செய்யப்பட்டது.  இந்த குழுவிற்கு அப்போது கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக இருந்த ரௌல் காஸ்ட்ரோ ரூஸ் தலைமை தாங்கி வழிநடத்தினார்.  புதிய நகல் தீர்மானத்தின் சட்ட விதிமுறை அடிப்படை அம்சங்கள் 2014, ஜுன் 29ல் அங்கீகரிக்கப்பட்டன.

புதிய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரௌல் காஸ்ட்ரோ கூறும்போது

பின்வருமாறு விளக்குகிறார்.  ”நாம் நமது புரட்சிகர வழிமுறையில் அடிநாதமான மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தையோ, மார்ட்டியின் பாரம்பறியத் தொடர்ச்சியையோ கைவிடாமல், பழைய மனநிலைகளையும்  மனத்தடைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தாய்நாட்டின் தற்போதைய நிலையை கணக்கிலெடுத்துக்கொண்டு, எதிர்கால நிலைமை குறித்த தொலைநோக்குப் பார்வையுடன், இந்த புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டியுள்ளது” என்றார் அவர்.

புதிய அரசியலமைப்பு முன்மொழிவிற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

  • பின்வரும் குறிப்புகளை ஆழ்ந்து ஆராய்ந்து, வழிகாட்டல் நெறிமுறைகளாகக் கொண்டு புதிய முன்மொழிவினை உருவாக்கியுள்ளனர்.
  • வரலாற்றுப் புகழ்மிக்க, புரட்சி வீரர் தோழர் பிடல் காஸ்ட்ரோ ரூஸ் அரசியல் சிந்தனைகள்.
  • இராணுவ படைத்தலைவர் ரௌல் காஸ்ட்ரோ ரூஸ் உரைகள் மற்றும்  வழிகாட்டுதல்கள்.
  • கியூப நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தி மாதிரியின் கருத்துரு.
  • கியூப நாட்டின் வர்ச்சிக்கான, தேசத்தின் முக்கியமான கேந்திரமான துறைகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான 2030 தேசிய கனவு திட்டம்.
  • கட்சியின் புரட்சிகர சமூக பொருளாதார கொள்கைகள் – வழிகாட்டல்கள்.
  • முதல் கட்சி காங்கிரசின் கட்சி வேலைத்திட்டம் மற்றும் இலக்குகள்
  • இவை தவிர பல நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் – குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் – அதிலும் குறிப்பாக வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார் போன்ற நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள், அதே போல தங்களது சொந்த நாடுகளின் தன்மைக்கேற்ப சோசலிச சமூகத்தை உருவாக்க முனைந்து கொண்டிருக்கும் வியட்நாம் மற்றும் சீன நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் பிற நாடுகளின் சட்டங்கள்

என அனைத்தும் ஆழ்ந்து ஆராய்ந்து பரிசீலனை செய்யப்பட்டு இந்த புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கான முன்மொழிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு பணிகள் குறித்து :

இப்படிப்பட்ட இந்த தயாரிப்பு பணிகள் குறித்து அரசு செயலாளர் ஹொமேரோ அக்கொஸ்டா விவரிக்கும்போது, ”முதலாவதாக எங்களது அரசியலமைப்பு சட்ட வரைவு வரலாற்றினை மிக முக்கியமாக ஆய்வு செய்தோம்.  1940-ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம், 1959-ம் ஆண்டு அடிப்படை அரசியல் சட்டங்கள், தற்போதைய கியூப குடியரசின் அரசியலமைப்பு சட்டம் என அனைத்தையும் ஆராய்ந்தோம்.  இந்த ஜுன் 2-ம் தேதி ஒரு தனிச்சிறப்பு அமர்வில், கியூபக் குடியரசின் மக்கள் அதிகார பாராளுமன்றம் இப்படிப்பட்ட ஒரு புதிய அரசியலமைப்பு சட்டத்தின் நகல் தீர்மானத்தினை உருவாக்குவதற்கென ஒரு ஆணையத்தை நியமித்தது.  அந்த ஆணையம் இக்காலக்கட்டம் முழுவதும் கடுமையாக உழைத்தது.  அனைத்தையும் ஆராய்ந்து ஜுலை 2,3 தேதிகளில் கட்சியின் மத்திய கமிட்டியின் 7-வது தன்னுடைய முதல் நகல் தீர்மானத்தை முன்மொழிந்தது.” என்கிறார்.

அதன்பிறகு, இந்த நகல் தீர்மானம் கியூப நாட்டின் மக்கள் அதிகார பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளின் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, அங்கு  ஏற்றுக்கொள்ளப்பட்டு, தற்போது கியூப மக்களின் விவாதத்திற்கென விடப்பட்டுள்ளது.

நகல் தீர்மானத்தை மேம்பட்டதாகக் காட்டும் முதன்மையான அம்சங்களும், ஷரத்துகளும்

ஒரு முகவுரை, 224 சட்ட ஷரத்துகள், (தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தில உள்ளதை விட அதிகமாக 87 ஷரத்துகள்), 11 தலைப்புகள், 24 அத்தியாயங்கள், மற்றும் 16 பிரிவுகளை உள்ளடக்கியதாக புதிய முன்மொழிவு உள்ளது.  11 சட்ட ஷரத்துகள் தற்போது உள்ளது போலவே அப்படியே வைக்கப்பட்டுள்ளன.  113 சட்ட ஷரத்துகள் திருத்தப்பட்டுள்ளன.  13 சட்ட ஷரத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவின் உள்ளடக்கமானது, ஒன்றுக்கொன்று ஒத்திருக்கும் தன்மையாலும், திட்டவட்டமான ஒழுங்குமுறையுடன் அமைந்துள்ளதாலும், காரணகாரியத் தொடர்புடையதுமாக மறு ஒழுங்கமைவு செய்யப்பட்டுள்ளதாலும், மேம்படுத்தப்பட்டதாக உள்ளது.  கியூப நாட்டின் தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார உண்மை நிலையினை சரியான விதத்தில் விளக்கும் வகையிலான சொற்பதங்களுடன்,  தனிச் சிறப்பு மிக்க மொழிவளத்துடன், தேவைக்கேற்றதொரு நெகிழ்வுத்தன்மையுடன்,, வருங்காலத்திற்கு உகந்ததாய், பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்துவதாய், கியூப நாட்டின் உண்மை நிலையுடன் பொருத்தப்பாடுடையதாய் அமைந்த வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முன்மொழிவானது கியூபாவின் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பில் உள்ள சோசலிச குணமாம்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.  அதே போல, கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி பாத்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. அடிப்படை உற்பத்தி வழிமுறைகள் அனைத்தும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உடைமை என்ற சோஷலிச உரிமையை உத்தரவாதப்படுத்துவதற்கு தேவையான அத்தியாவசிய கொள்கைகளை தன்னுடைய ஷரத்துகளில் உள்ளடக்கி உள்ளது.  அதற்கேற்ற வகையில் இந்த முன்மொழிவின் பொருளாதார கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.  சந்தையின் பங்கு பாத்திரம், அரசுடைமை அல்லாத புதிய சொத்து வடிவங்கள் மற்றும் தனியார் சொத்துகள் போன்றவையும் கணக்கில் கொள்ளப்பட்டு, புதிய பொருளாதார திட்டமிடல்கள் செய்யப்பட்டுள்ளன.  தன்னுடைய பிரத்தியேக பாணியில், கியூப அரசு கையெழுத்திட்டுள்ள சர்வதேச பத்திரங்களின் ஷரத்துகளுக்கு ஏற்ற வகையில், பல்வேறு பரவலான உரிமைகளை உள்ளடக்கி, அவை சிறப்பு கவனத்தை பெறும் வகையில்  புதிய அரசியலமைப்பு சட்ட ஷரத்துகள் வடிவமைக்கப்படுள்ளன.

பாதுகாப்பிற்கான உரிமையும், அதற்கு தேவையான நடைமுறையும், சாமானியர்களும் பங்கேற்கும் வகையில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி என்பதாலோ, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவோ, பாலினம் சார்ந்தோ பாகுபாட்டுடன் கியூப குடிமக்கள் நடத்தப்படக்கூடாது என்பதற்காக, ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையிலான ஷரத்துகள் இணைக்கப்பட்டு, சமத்துவ உரிமை மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள், ஊழியர்கள், இயக்குநர்கள் போன்றவர்களோ அல்லது அரசு அமைப்புகளோ-நிறுவனங்களோ தங்களுடைய முறையில்லாத நடவடிக்கைகளாலோ அல்லது செயல்படாத தன்மையாலோ தனிநபர்களுக்கு பாதிப்புகளை, நஷ்டங்களை ஏற்படுத்தும் பட்சத்தில், அவர்கள் தாங்கள் இழந்த உரிமைகளை திரும்பப் பெறுவதற்காக அல்லது நஷ்டஈடு பெறுவதற்காக நீதிமன்றங்களை அணுகி மனு தாக்கல் செய்து திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

திருமணத்தை பொறுத்தவரையில், தற்போது ”ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒப்பந்தம்” என்றிருப்பதை மாற்றி, திருமணம் என்பது ”இரு நபர்களுக்கு இடையிலான ஒப்பந்தம்” என்று வரையறை செய்யப்பட்டு திருத்தப்பட்டுள்ளது.

அரசு அமைப்புகளுக்கிடையே ஒரு போதுமான சமநிலை இருக்கும் வகையில் புதிய அரசியலமைப்பின் சட்டவிதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  கியூபக் குடியரசு தலைவர் கியூப அரசின் (state) தலைமைப் பொறுப்பிலும், பிரதமர் கியூப அரசாங்கத்தின் (government) பொறுப்பாளராகவும் இருப்பார் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.  அதே நேரம், இருவரும் கியூப மக்கள் அதிகார பாராளுமன்ற பிரதிநிதிகளாகவும் இருக்க வேண்டும் என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

கியூப பாராளுமன்றத்தின் நிரந்தர அங்கமாக அரசவைக்குழு இருக்கும்.  இந்த அரசவைக்குழு பாராளுமன்றத்துடன் நெருக்கமான தொடர்புடையதாக இருக்கும்.  குறிப்பாக இரண்டு அமைப்புகளின் தலைவரும், துணைத்தலைவரும், செயலாளரும் ஒரே தனிநபர்களாக இருப்பர் என்பதால் அதிக தொடர்புடைய அமைப்புகளாக அவை இருக்கும்.  இதன் மூலமாக மக்கள் அதிகார பாராளுமன்றத்திற்கும், தேசத் தலைமைக்குமான இடைவெளி குறையும்.  மேலும் மக்களின் பிரநிதிகளில் ஒருவரே தேசத் தலைமைக்கும் வருவதால் மக்கள் அதிகார பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட்டவராகவும் அவர் இருப்பார்.

அரசு அமைப்புகளில் இன்னொரு முக்கியமான புதுமையான அம்சமாக, தேசிய தேர்தல் கவுன்சில் என்பது உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த கவுன்சில் இந்த பணிக்கென்றே பிரதியேகமாக இயங்கும்.  அதே போல கணக்கு தணிக்கையாளர் குறித்த ஷரத்தும் அரசியலமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரையில், மாகாண குழுக்கள் என்பது நீக்கப்பட்டு, மாகாண அளவில் ஒரு ஆளுநர் மற்றும் கவுன்சிலுடன் கூடிய மாகாண அரசு அமைக்கப்படுகிறது.

தேச நலனுக்கு உகந்த வகையில், தன்னாட்சி உரிமையுடன் பெரும் பங்காற்றக்கூடிய நிலையினை கியூப நகராட்சிகள் இந்த புதிய முன்மொழிவின் மூலம் பெறுகின்றன.

நகராட்சி நிர்வாகக்குழு என்பது நகராட்சியின் நிர்வாகத்தை கவனிக்கும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போதுள்ள தலைவர் (president or chief) என்ற சொல்லாடல் மாற்றப்பட்டு, கண்காணிப்பாளர் அல்லது மேற்பார்வையாளர் (superintendent) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.  அவர் நகராட்சி நிர்வாகக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பார் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

தேர்தலைப் பொறுத்தவரையில், 16 வயது பூர்த்தியடைந்த அனைத்து கியூப பிரஜைக்கும், (சட்டத்தில் விதிவிலக்காக சொல்லப்பட்டவர்கள் தவிர), வாக்குரிமை உண்டு என்பது மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் தேச பாதுகாப்பு என்ற தலைப்பு இணைக்கப்பட்டுள்ளது.  இதில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய நோக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.  சட்டவிதிகளுக்குட்பட்டு, அமைதிகாலங்களில் சில கடமைகளை செய்வதற்கான அங்கீகாரம், பேரழிவு காலங்களில் சில கடமைகளை செய்வதற்கான அங்கீகாரம், இயற்கைக்கு மாறான பிற நிலைகளில்  இந்த அமைப்பினால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் போன்ற நோக்கங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

புதிய நகல் தீர்மானத்தின் திருத்தத்தை செய்வதற்கென்று சில நபர்கள் அடையாளம் காணப்பட்டு  அதிகாரம் அளிக்கப்பட்டனர்.   அதே நேரம் இந்த ஷரத்துகள் விவாதத்திற்கு விடப்பட்டுள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் திருத்த முடியாதவைகளாகவும் இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.  இந்த புதிய நகல் தீர்மான திருத்தத்திற்கென்று தீர்மானிக்கப்பட்டுள்ள, மற்றும் அது நடைமுறை அமலுக்கு வர வேண்டிய தினத்தில், தேவையான மாறுதல்களுடன் நிறைவான அம்சங்கள் மற்றும் திருத்தப்பட்ட ஷரத்துகளுடன் புதிய அரசியலமைப்பு சட்ட விதிகள் நடைமுறைக்கு வரும்.

அரசியல் சார்ந்த அடிப்படை ஷரத்துகள்

இந்த தலைப்பு புதியது.  பொருளாதார அடிப்படைகளிலிருந்து அரசியல் அடிப்படைகளை வேறுபடுத்திக் காட்டுவது.  அரசியலமைப்புச் சட்டம்தான் உயர்ந்த பட்ச  அதிகாரத்தை உடையது என்பதையும், நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கான சட்ட விதிமுறைகள் என்பதையும் மீண்டும் உறுதிசெய்துள்ளது. சோஷலிச ஒழுங்கமைப்பை மேலும் வலுவூட்டும் வகையில், சட்டப்படி கியூப அரசு ஒரு சோஷலிச அரசு என்பது மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கியூப கம்யூனிஸ்ட் கட்சி நாட்டிலும், சமூகத்திலும் தொடர்ந்து தனது தலைமை பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.  அதனுடைய ஜனநாயக குணாம்சமும், மக்களுடன் அந்த கட்சிக்குள்ள நெருக்கமான நிரந்தரமான உறவும் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.  சட்ட வரையறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ள சங்கங்கள் மற்றும் அமைப்புகளை அரசு அங்கீகரிப்பதுடன், அவை செயல்படுவதற்கான பாதுகாப்பையும் அளிக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அரசிற்கும் தேவாலயத்திற்குமான உறவு குறித்த விதிமுறைகள் தற்போது நடைமுறையில் உள்ள சாராம்சத்துடனே தொடர்கின்றன.

அரசியலமைப்பின் உச்சபட்ச அதிகாரத்தைப் பொறுத்த வரையில், அரசியலமைப்பு சட்ட விதிகளை உறுதியாக பின்பற்ற வேண்டியது அரசு மற்றும் கியூப மக்களின் கடமையாகும்.  அரசு அமைப்புகள், இயக்குநர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் அனைத்தும் அரசியலமைப்பு விதிகளுக்குட்பட்டு இருக்க வேண்டும்.  குறிப்பாக சோஷலிச அரசு என்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் இவர்களது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளும், அவற்றின் ஊழியர்களும் அரசியலமைப்பு விதிகளுக்குட்பட்டு மக்களுக்கு உரிய மரியாதை அளிக்கவும், சேவைகளை செய்யவும் வேண்டும்.  மக்களுடன் நெருக்கமான பிணைப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பனவெல்லாம் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அரசு நிறைவேற்ற வேண்டிய அத்தியாவசியமான பொறுப்புகளில் கீழ்க்கண்ட அம்சங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

*தேசத்தின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்.

  • தேச பாதுகாப்பினை எப்போதும் உறுதி செய்ய வேண்டும்.

*தனி நபர் முன்னேற்றம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தினை உத்திரவாதப்படுத்தும் வகையிலான நீடித்த வளர்ச்சியை உத்தரவாதப்படுத்த வேண்டும்.  சமூக நீதி மற்றும் உயர்ந்தபட்ச சமத்துவத்தை எட்டுவதற்காக பாடுபட வேண்டும்.  புரட்சியின் மூலம் நாம் எட்டிய சாதனைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் மேலும் விரிவுபடுத்தவும் முன்னேறவும் வேண்டும்.

  • சோஷலிச சமூக அமைப்பின் உள்ளார்ந்த இயல்பில் உள்ள ஒழுக்கங்களையும், சித்தாந்தத்தையும் மேலும் பலப்படுத்த வேண்டும்.

  • தேசத்தின் பூர்வீகமான, வரலாற்றுரீதியான, இயற்கை இயல்புடன் கூடிய கலாச்சாரங்களை பாதுகாக்க வேண்டும்.

போன்றவை முக்கியமாக இணைக்கப்பட்டுள்ள புதிய அம்சங்களாகும்.

அயலுறவு கொள்கைகளை பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள அம்சங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.  இருந்தும் ஒரு சில அம்சங்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

அயலுறவு கொள்கைகளைப் பொறுத்தவரையில், அதன் சட்டவிதிமுறைகள் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளன.  சில ஷரத்துகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.  அவற்றுள் சில:-

சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும், பல துருவ நாடுகள் என்ற நிலை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.  ஏகாதிபத்தியம், பாசிசம், காலனியாதிக்கம் அல்லது நவீன காலனியாதிக்கம் மற்றும் இது போன்ற பெயர்களில் எது வந்தாலும், அதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும்.  மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.  இனவெறி மற்றும் வேற்றுமை பாகுபாடுகளை ஏற்கக் கூடாது.  ஆயுதப் பரவலையும், அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மற்றும் அணு ஆயுதப் பரவல் என்பதையும் நிராகரிக்க வேண்டும்.  சர்வதேச மனித இன நம்மைக்கான சட்டத்தை மீறி மக்களை பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்க்க வேண்டும்,  நிராகரிக்க வேண்டும்.   அனைத்துவிதமான தீவிரவாதத்தையும் எதிர்ப்பதுடன் ஏற்க மறுத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.  குறிப்பாக தீவிரவாத அரசினை – அரசு தீவிரவாதத்தினை எதிர்க்க வேண்டும்.  சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாக்க வேண்டும்.  பருவ நிலை மாற்றத்திற்கெதிரான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார அடிப்படைகள்

புதிய அம்சமாக சந்தை என்பது கணக்கில் கொள்ளப்பட்டு அதனை ஒழுங்குபடுத்துவதற்கான ஷரத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.  சமூக நலனை பாதுகாக்கும் வகையில், சந்தையால் உருவாகும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாகாமல் இருக்கும் வகையில் பொருளாதார திட்டமிடல்கள் செய்யப்பட்டுள்ளன.

சொத்துக்களின் பல்வேறு வகைகள் வரையறுக்கப்பட்டு அவை பட்டியலிடப்பட்டுள்ளன.  தனிநபர்களுக்கு அல்லது கூட்டுறவு அமைப்புகளுக்கு சொந்தமில்லாத நிலங்கள், நிலத்தடி மண், சுரங்கங்கள், கியூபக் குடியரசிற்குட்பட்ட (உயிர்வாழ் மற்றும் உயிரற்ற) இயற்கை வளங்கள், காடுகள், நீர்வளங்கள், மற்றும் தகவல் தொடர்பு வழிகள் போன்ற ஒட்டு மொத்த மக்களின் சோஷலிச சொத்துக்கள் – அதாவது மக்களின் சார்பான அரசுடைமை சொத்துகள், கூட்டுறவு அமைப்புகளின் சொத்துகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்களிலான சொத்துடமைகளின் கலவை, அரசியல், வெகுஜன மற்றும் சோஷலிச அமைப்புகளின் சொத்துகள், தனியார் சொத்துகள் மற்றும் உற்பத்திசாரா அதே நேரம் தனிநபர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தனி நபர் உடைமையிலான சொத்துகள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டு, அவை அனைத்தும் கியூப பொருளாதாரத்தில் இடம் பெறுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் இவை அனைத்துமே சோஷலிச தன்மையுடன் வளர்த்தெடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய நலன்கள், மாகாண நல்கன்கள் மற்றும் கியூப குடிமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பொருளாதார செயல்பாடுகளும், சமூக பொருளாதார அபிவிருத்திக்கான திட்டமிடல்களும் இருக்க வேண்டும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  அதற்கேற்ற வகையில் அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று மீண்டும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.  ஏழாவது கட்சி காங்கிரசில் கூறப்பட்டுள்ளது போல, அரசின் பொருளாதார திட்டமிடல்களில், வழிகாட்டல்களில், கண்காணிப்பு அமைப்புகளில், ஒழுங்குமுறை அமைப்புகளில் என அனைத்திலும் தொழிலாளர்களின் பங்கு இருக்கும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேச இறையாண்மைக்கும், தேச வளங்களுக்கும் பங்கம் விளைவிக்காத வகையில் அந்நிய முதலீடுகள் அங்கீகரிக்கப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

நியாயமான விலை கொடுத்து ஒரு நிலத்தை அரசு வாங்க முனைந்தால் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதும், அதனை தடுக்காத வகையில் சட்ட திட்டங்களுக்குட்பட்டு தனிநபர்கள் நிலத்தை வாங்கவும் விற்கவும் செய்யலாம் என்ற ஒரு சிறப்பு ஷரத்து இணைக்கப்பட்டுள்ளது.

வாடகைக்கு விடுவதோ, குத்தகைக்கு விடுவதோ, நிலத்தை பிரிப்பதோ, அடமானம் வைப்பதோ அல்லது தனியார்கள் ஆதாயம் பெறும் வகையில் உரிமை மாற்றம் செய்வதோ போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் அப்படியே தொடர்கின்றன.

குடியுரிமை

இதிலுள்ள அடிப்படை மாற்றம் என்னவென்றால், இரட்டை குடியுரிமை என்பதை நாம் அங்கீகரிக்கவில்லை என்பதை மாற்றி, ”பயனுள்ள சக்திமிக்க குடியுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையில், ”கியூப குடிமக்கள் கியூப நாட்டிற்குள், அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருப்பர் என்றும் ஒரு அந்நிய குடியுரிமையை உபயோகப்படுத்த முடியாது” என்றும் மாற்றப்பட்டுள்ளது.

உரிமைகள், பொறுப்புகள் மற்றும் உத்தரவாதங்கள்

இந்த தலைப்பின் கீர் அரசியலமைப்பு சட்டம் முழுவதும் விரவிக் கிடக்கும் கியூப குடிமக்களின் உரிமைகளும், பொறுப்புகளும், அவர்களது உரிமைகளை மேலும் வலுவூட்டும் உத்தரவாதங்களும் ஒன்றாக தொகுக்கப்பட்டு, அவற்றை பாதுகாக்க கியூப அரசு செய்ய வேண்டிய கடமைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல மனித உரிமை கருத்தரங்கங்களில், கியூபா ஒத்துக்கொண்டு கையொப்பமிட்ட உடன்படிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகள் இந்த தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.

தனிநபர் உரிமைகள் என்பது, தேசிய சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள  நல்லொழுக்க விதிகளுக்கும், கூட்டுப்பாதுகாப்பிற்கும், பிறருடைய உரிமைகளுக்கும் உட்பட்டதான எல்லைகளுடன் இருக்கும்.

பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் என்ற ஷரத்துகளின் கீழ் அனைத்து பிரஜைகளுக்கும் இலவச மருத்துவம் என்பது உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.  அதே போல அவர்கள் நோய்வாய்ப்படும்போது நோயிலிருந்து குணமாகும் வரை அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வகையிலான சில சிறப்பு சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் மீண்டும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி குறித்த ஷரத்துகளில், இளநிலை பட்டப்படிப்பு(under graduate)க்கு முந்தைய நிலை வரையிலான பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதும், அது மதச்சார்பற்ற கல்வியாக இருக்க வேண்டும் என்பதும், கல்வி என்பது அனைவரது உரிமை என்பதும், கல்வியை அளிப்பதென்பது குடும்பங்கள் , அரசு மற்றும் சமுதாயத்தின் கடமை மற்றும் பொறுப்பு என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதித்துறை  சம்பந்தப்பட்ட பல ஷரத்துகளும், நீதி வழங்கல் பெறுதல் தொடர்பான பல புதிய உரிமைகளும் இணைக்கப்பட்டுள்ளன.  இவற்றில் நாம் கவனிக்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன.  குறிப்பாக (habeas corpus – to prevent arbitrary detentions) மனிதாபிமானமற்ற முறையில் காவலில் வைத்திருப்பது, சிறையில் விசாரணையின்றி அடைக்கப்படுவதை தடுக்கும் வகையிலான ஷரத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.  அதே போல கைது செய்யப்பட்டுள்ள அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தும் ஷரத்துகளும் இணைக்கப்பட்டுள்ளன.  பொது, ஆவணங்களில் உள்ள தனிநபர் புள்ளி விவரங்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையும் இணைக்கப்பட்டுள்ளது.  அதேபோல, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், அந்த தனி நபர்கள் கியூப சமூகத்திற்குள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஷரத்தும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேசத்தின் கலாச்சார கட்டமைப்பை உருவாக்கவும், பங்கு கொள்ளவும், கலாரசனையுடன் வாழவுமான உரிமை உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

தனிநபர்கள் செய்யும் வேலையின் அளவு, வேலையில் உள்ள சிக்கலின் தன்மை, தேவைப்படும் திறன், அந்த வேலையின் தரம், மற்றும் அந்த வேலையின் பயன்கள் என்பவற்றை பொறுத்து தனிநபர்கள் தங்களுடைய ஒப்பீட்டுத் தொகையை பெறுவதற்கான உரிமை உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

தரமான பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்கான உரிமையும், அவை குறித்த தகவல்களை பெறும் உரிமையும், பொருத்தமான வகையில் பெறும் உரிமையும் இணைக்கப்பட்டுளளது.

இறுதியாக, குடிமை மற்றும் அரசியல் உரிமைகளும், அவர்களுது கடமைகளும் மேற்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.  ஒருவது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றங்களை அணுகி கோருவதற்கும் நீதியை பெறுவதற்குமான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கல்வியில், புரட்சிகர மதிப்புகள், ஒழுக்கவியல் விழுமங்கள், குடிமை மதிப்புகளின் முக்கியத்துவத்தை புதிய தலைமுறைகளுக்கு உறுதி செய்யும் வகையிலான கலாச்சார விஞ்ஞானப்பூர்வ கொள்கைகளை உருவாக்குவதில், தேசத்தின் பூர்வீக வரலாற்று வளங்கள் மற்றும் கலைகளுக்கு அரசு அளிக்கும் பாதுகாப்பு முறைகளில் இணைக்கப்பட வேண்டிய வழிமுறைகள் என்று அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதற்கான சட்ட ஷரத்துகள் தொடர்கின்றன.

அரசின் கட்டமைப்பு

அரசின் உயர்மட்ட அமைப்புகள மற்றும் பிற அமைப்புகள் குறித்து இந்த தலைப்பு பேசுகிறது.

அத்தியாயம் 1

மக்கள் அதிகார பாராளுமன்றம் போன்றன அரசு அமைப்புகளின் ஸ்தாபனம் மற்றம் செயல்பாட்டு முறைகள் குறித்து இந்த தலைப்பு விளக்குகிறது.  இந்த அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை மற்றும் அவர்களுடைய செயல்பாடுகள் குறித்த வழிகாட்டல்கள் பற்றி விளக்குகிறது.  சோஷலிச ஜனநாயகம் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அத்தியாயம் 2

கியூபாவின் மக்கள் அதிகார பாராளுமன்றம் மற்றும் அரசவைக்குழு பற்றிய அத்தியாயம் இது.  அரசின் உச்பட்ட அதிகாரம் பெற்ற அமைப்பு என்ற அந்தஸ்துடன் மக்கள் அதிகார பாராளுமன்றம் தற்போதும் தொடர்கிறது.  இதற்கு மட்டுமே அரசியலமைப்பு விதிகள் மற்றும் சட்டங்களை இயற்றும் உரிமை உள்ளது.  அதனுடைய தலைமைக்கு தலைவர், துணைத்தலைவர், மற்றும் செயலாளர் பொறுப்பாவார்கள்.  இதற்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு விதிகளில் உள்ள அதிகாரங்களுடன் புதிதாக சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  அரசியமைப்பு சட்டவிதிகளின் உட்பொருளை விளக்குவது, அவ்வப்போது எழும் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த அரசியலமைப்பு விதிகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அளிப்பது, தேவைப்பட்டால் வரிகளை போடவும், நீக்கவுமான உரிமை, இந்த அமைப்பிற்குட்பட்ட வரம்பு உள்ளீட்டெல்லையுடன் கூடிய அதிகாரம், நிர்வாக படி நிலைகளில் அந்தந்த ஆட்சி வரம்புக்குட்பட்ட பிரதேச சட்டதிட்டங்களை வரையறுத்துக் கொடுப்பதற்கான அதிகாரம், நகராட்சிகளுக்கும், மாவட்டங்களுக்கும் மற்றும் பிற எல்லை வகுக்கப்பட்ட பகுதிகளுக்குமான சிறப்பு ஒழுங்குமுறை அமைப்புகளை உருவாக்குவதற்கான அதிகாரம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் அடிப்படை அமைப்புகளுக்கும் அரசாங்கத்தின் அடிப்படை அமைப்புகளுக்கும் உரிய பொறுப்பாளர் மற்றும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது இந்த மக்கள் அதிகார பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.  இதைத் தாண்டி கியூபக் குடியரசின் தலைவர் மற்றும் துணைத்தலைவர், தேசிய தேர்தல் கவுன்சிலின் உறுப்பினர்களை தேர்வு செய்வதும், பிரதம மந்திரி மற்றும் மாகாண ஆளுநர்களை நியமிப்பதும் இந்த மக்கள் அதிகார பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.  ஏற்கனவே குறிப்பிட்டபடி அரசவைக்குழுவின் தலைமைப் பொறுப்பும், பாராளுமன்ற தலைமைப் பொறுப்பும் ஒரே தனி நபர்களின் கீழ் இருக்கும்.  இதனுடைய நோக்கம் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையே இன்னும் நெருக்கமான தொடர்பினை பயனுள்ள வகையில் ஏற்படுத்துவது என்பதாகும்.  தலைவர், துணைத்தலைவர், செயலாளர் தவிர்த்த பிற உறுப்பினர்களை அரசவை தேர்ந்தெடுக்கும்.  அதே நேரம் அரசவைக்குழு உறுப்பினர்கள் மந்திரி சபையிலோ அல்லது நீதித்துறை, தேர்தல் ஆணையம் அல்லது அரசாங்க கட்டுப்பாட்டு அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கக்கூடாது என்பதன் மூலம் ஒரு போதுமான அதிகார சமநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசவைக்குழுவின் தற்போதைய அதிகாரங்கள் அப்படியே தொடர்கின்றன.

அரசவைககுழுவினால் இயற்றப்படும் அரசாணைகளும், போடப்படும் ஒப்பந்தங்களும் மக்கள் அதிகார பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வரும்.

அத்தியாயம் 3

கியூபக் குடியரசின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.

கியூபக் குடியரசின் தலைவர் கியூப நாட்டின் தலைவராக இருப்பார்.  இவர் மக்கள் அதிகார பாராளுமன்ற பிரநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்.  இவரது ஆட்சிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்த நபர் இரண்டு அடுத்தடுத்த ஆட்சிக்காலத்திற்கு பதவியில் தொடரலாம்.  அதன்பிறகு தொடர முடியாது.

கியூபக் குடியரசு தலைவர் பிரதிநிதிகளின் அறுதி பெரும்பான்மை வாக்குகுளை பெற வேண்டும். வயது 35 பூர்த்தியாகியிருக்க வேண்டும்.  கியூபக் குடியுரிமை மற்றும் பிற அரசியல் உரிமைகளை பெற்றவராக இருக்க வேண்டும்.  பிறப்பால் கியூப குடிமகனாகவும், வேறு எந்த குடியுரிமையும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.  மேலும், அப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் தன்னுடைய முதலாவது ஆட்சிக்காலத்தில் 60 வயது தாண்டியவராக இருத்தல் கூடாது.

இதே முறையில் தான் கியூபக் குடியரசின் துணைத்தலைவரும் அதே ஆட்சிக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.  குடியரசு தலைவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது இறந்து போனாலோ அவருக்கு பதிலாக அவரிடத்தில் இவர் செயல்படுவார்.  ஒரு வேளை குடியரசுத்தலைவர் பதவி காலியாகும்பட்சத்தில் அதற்கான மக்கள் அதிகார பாராளுமன்றம் பதில் நபரை மாற்றாக தேர்ந்தெடுக்கும்.  கியூபக் குடியரசின் தலைவரும், உதவித்தலைவரும் இல்லாத நிலையில், மக்கள் அதிகார பாராளுமன்றம் மாற்று நபர்களை பதிலாக தேர்ந்தெடுக்கும்.  அதற்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் அதிகார பாராளுமன்ற தலைவர் தற்காலிகமாக கியூபக் குடியரசின் தலைவராக செயல்படுவார்.

அத்தியாயம் 4

கியூப அரசாங்கம் பற்றிய அத்தியாயம் இது.  மந்திரிகள் சபையின் அந்தஸ்து முன்பிருந்தபடியே அரசாங்கத்தின் உச்சபட்ச நிர்வாகக் குழுவாக இருக்கும்.  பிரதம மந்திரி இந்த சபையின் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்துவார்.  துணை பிரதம மந்திரிகள் மற்றும் பிற மந்திரிகள், செயலாளர் மற்றும் பிற உறப்பினர்கள் சட்டப்படி தீர்மானிக்கப்படுவர்.  முறைப்படி கூடும் கூட்டங்களுக்கு மத்தியில் இடைப்பட்ட காலத்தில் மந்திரி சபையின் செயற்குழு கூடி தங்களுடைய அதிகார வரம்புகளுக்குட்பட்ட விஷயங்களில் முடிவுகளை எடுக்கும்.

இந்த மந்திரிகள் சபையின் அதிகாரம் முன்பு குறிப்பிட்ட அமைப்புகளைப்போலவே பழைய மாதிரியே தொடர்கின்றன.

புதிய அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி, கியூபக் குடியரசு தலைவரின் முன்பெமாழிவின்படி, பாராளுமன்றம் பிரதம மந்திரியை 5 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யும்.  இவரும் பிரதிநிதிகளின் அறுதி பெரும்பான்மை வாக்குகளை பெற வேண்டும்.

அத்தியாயம் 5

சட்டங்கள் குறித்த அத்தியாயம் இது.  ஏற்கனவே நடைமுறையில் சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் உள்ளவர்களுடன், தற்போது கியூபக் குடியரசின் தலைவர், அரசு கணக்கு தணிக்கையாளர், தேசிய தேர்தல் குழு ஆகியோர் அவ்வவற்றின் அதிகாரம் படைத்த விவகாரங்களில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தலைப்பின் கீழ் தான் சட்டவிதிகள் அறிவிக்கப்படுவது மற்றும் அமலுக்கு வரும் தேதி போன்ற விவகாரங்கள் வருகின்றன.

அத்தியாயம் 6

நீதிமன்றங்கள் பற்றியது.  நீதியை வழங்குவதில் நீதிபதிகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் இருக்க வேண்டிய செயல்முறை சுதந்திரத்தின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது.  மக்கள் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னுடைய வேலை அறிக்கையினை மக்கள் அதிகார பாராளுமன்றத்திற்கு அளிக்க வேண்டும்.  இந்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அதாவது குற்றவியல் நடுவர்கள்ம், பிற நீதிபதிகளும் தேசிய பாராளுமன்றத்தாலோ அல்லது அரசவைக்குழுவினாலோ தேர்ந்தெடுக்கப்படுவர்.  பிற நீதிபதிகளின் தேர்வு என்பது விதிகளுக்குட்பட்டு தீர்மானிக்கப்படும்.

அத்தியாயம் 7

கியூபக் குடியரசின் அட்டர்னி ஜெனரல், அலுவலகம் பற்றிய அத்தியாயம் இது.  இதனுடைய அடிப்படை நோக்கங்களில் உள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள்—அரசியலமைப்பு சட்டவிதிகள், சட்டங்கள் மற்றும் பிற பொதுவான சட்ட வழிகளுக்குட்பட்டு குற்றவியல் விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரித்து அரசு சார்பாக எடுக்க வேண்டிய பொது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  அதேபோல இன்னொரு புதிய அம்சம் என்னவென்றால், அட்டர்னி ஜெனரல் குடியரசு தலைவரின் நேரடி கண்காணிப்புக்குட்பட்டவர் என்பதாகும்.

அத்தியாயம் 8

கியூபக் குடியரசின் அரசு தணிக்கையாளர், அலுவலகம் பற்றிய அத்தியாயம் இது.  உயர்தரமான நிர்வாக இயங்குமுறையை உத்தரவாதப்படுத்துவது என்பது தான் இந்த அலுவலகத்தின் முக்கிய பொறுப்பு.  அதே போல சரியான முறையில், வெளிப்படையான முறையில் பொது நிதிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாகும்.  இவரும் கியூபக் குடியரசுத் தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருப்பார்.

அரசின் பிரதேச அமைப்புகள்

நாட்டின் அரசயில் நிர்வாக பிரிவுகள் சார்ந்தவற்றில் தற்போதைய சட்டவிதிமுறைகளுடன் புதிதாக சில ஷரத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.  துணை நிர்வாக ஆட்சிமுறைகள் மற்றும் நகராட்சி அல்லது பிற பிரதேச அமைப்புகளுக்கான, மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கான சிறப்பு ஒழுங்குமுறை அமைப்புகள் போன்றவற்றை உருவாக்குவது குறித்த ஷரத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.  தேசிய ஸ்தாபத்தைப் பொறுத்த வரையில் நகராட்சி என்பது தான் அதனுடைய ஆரம்ப, அடிப்படை அரசியல் அலகு ஆகும்.  அதனுடைய சுய அதிகாரம் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  அதற்கு அதனுடைய அமைப்புகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுததுக் கொள்ளும் உரிமையும், அதனிடம் உள் வளங்களை பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் உரிமையும், அரசியலமைப்பு விதிமுறைகள் மற்றும் பிற சட்டங்களுக்குட்பட்டு அதிகார தகுதிகளை பயன்படுத்துவது போன்றவையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள முக்கியமான மாற்றம் என்னவென்றால், மாகாண குழுக்கள் என்பது நீக்கப்பட்டு, ஒரு ஆளுநர் தலைமையிலான ஒரு கவுன்சில் அமைக்கப்பட்ட அதன் தலைமையிலான ஒரு மாகாண அரசு அமைக்கப்படும் என்பதாகும்.

இந்த மாகாண அரசினை உருவாக்குவதற்கான அடிப்படை நோக்கம் என்னவென்றால், அந்த பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் சமூக பொருளாதார முன்னற்றத்திற்கு பாடுபடுவது, நகராட்சி மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பை உத்திரவாதப்படுத்துவது, வழிகாட்டுவது, கண்காணிப்பது, பயிற்சி அளிப்பது போன்ற தேவைப்படும் அனைத்தையும் செய்வது என்பதாகும்.

மேலும், இந்த மாகாண அரசு அந்த மாகாணம் மற்றும் அதற்குட்பட்ட நகராட்சிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டிய வகையில் அரசியலமைப்பு சட்டவிதிகள் மற்றும் பிற சட்டங்களுக்குட்பட்டு செய்ய வேண்டும்.

இந்த மாகாணக்குழு என்பது ஆளுநரின் தலைமையில் இயங்கும்.  இதில் மக்கள் அதிகார நகராட்சி குழுக்களின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்ப.  இவர்களோடு கூட நகராட்சி நிர்வாகக் குழுக்களின் மேற்பார்வையாளர்களும், சட்டத்தால் தீர்மானிக்கப்படும் பிறரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மாகாணத்தில் உச்சபட்ச நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் ஆளுநர் இருப்பார்.  இவர்க மக்கள் அதிகார பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுவார்.  இவரது ஆட்சிக்காலம் 5 வருடங்கள்.  மந்திரி சபை இயற்றும் கொள்கைகளுக்கேற்ப மாகாணத்தில் நிர்வாகக் கட்டமைப்பில் தேவையானவற்றை செய்து மாகாண நிர்வாகத்தை நடத்த வேண்டியது இவரது பொறுப்பாகும்.

இந்த முன்மொழிவின் படி ஒரு துணை ஆளுநரும் மந்திரி சபையால் நியமிக்கப்படுவார்.  இவருடைய ஆட்சிக்காலமும் 5 ஆண்டுகள் தான்.

5 ஆண்டுகளுக்கொரு முறை நகராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று இந்த முன்மொழிவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி மக்களின் உரிமைகளை உத்திரவாதப்படுத்துவதும், அவர்களின் பங்களிப்பை உறுதிசெய்வதும், அவர்களது உரிமைகளுக்ககான கோரிக்கைகளை அனுமதித்து அவற்றை பூர்த்தி செய்து கொடுப்பதை உறுதிப்படுத்துவதும் இந்த நாகராட்சி சபைகளின் பொறுப்பாகும்.

நகராட்சி நிர்வாகக் குழுக்களை பொறுத்தவரையில், அதனுடைய உறுப்பினர்கள் நகராட்சி சபைகளால் நியமிக்கப்படுவர்.  இந்த நிர்வாகக் குழுக்கள் நகராட்சி சபைகளின் துணை அமைப்புகளாக இயங்கும்.   இந்த மட்டத்திலான நிர்வாகம் இந்த அமைப்பினால் கவனிக்கப்படும்.  இங்கு குறிப்பிடத்தகுந்த மற்றொரு மாற்றம் என்பது இந்த நிர்வாக குழுவினை அதனுடைய மேற்பார்வையாளர் வழி நடத்துவார்.

தேர்தல் அமைப்பு

வாக்களிப்பது என்பது அனைத்து பிரஜைகளின் உரிமை மற்றும் பொறுப்பாகும்.  அவரவர் விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்கலாம், நேரடியாக வாக்களிக்கலாம், வாக்களிப்பதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு, இரகசிய வாக்களிப்பாகவும் இருக்கும் என்பன மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  வாக்களிப்பதற்கான வயது வரம்பு 16 என்பது அப்படியே தொடர்கிறது.

தேசிய தேர்தல் குழு அரசின் நிரந்தர அமைப்பாக இருக்கும்.  இந்த அமைப்பு தேர்தல் பணிக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்படுகிறது.  தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வது, அனைவரையும் ஓட்டுப் போட வைப்பது, தேர்தலை முறையாக கண்காணிப்பது மக்கள் மத்தியில் கருத்துகளை கேட்பது, பொது முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களில் மக்கள் வாக்கினை பதிவு செய்வது, பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுப்பது, தேர்தல் சம்பந்தமான விவகாரங்களில் வரும் புகார்களுக்கு தீர்வு அளிப்பது போன்றவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த அமைப்பு சுய அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்கும்.  மக்கள் அதிகார பாராளுமன்றத்திற்கு மட்டுமே பதிலளிக்கக் கூடியது.  தேர்தல் நடந்து முடிந்தவுடன் இந்த குழு தேர்தல் முடிவுகளை நாட்டிற்கு அறிவிக்கும்.

தேசிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு

தேசிய இராணுவ குழு அரசின் உச்சபட்ச அமைப்பாகும்  அமைதிக்காலங்களில் இராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு, பயிற்சி அளித்தல், வழிகாட்டல்கள் அளித்தல் போன்றவை இதனுடைய பொறுப்பாகும்.  மேலும், இராணுவம் மற்றும் தேச பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதை பொறுப்புடையது.

சில பிரத்தியேக மற்றும் பேரழிவு காலங்களில், இந்த குழு நாட்டிற்கு சில வழிகாட்டல்களை கொடுப்பதுடன், அரசாங்க மற்றும் அரசு அமைப்புகளின் மீது அதிகாரம் செலுத்தவல்லது.   தேசிய சபையின் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு இந்த விதி பொருந்தாது.

இந்த அமைப்பின் தலைவராக கியூபக் குடியரசு தலைவர் இருப்பார்.  அவர் ஒரு துணை தலைவரை நியமிப்பார்.  பிற உறுப்பினர்கள் சட்டப்படி தீர்மானிக்கப்படுவர்.

இது நாட்டின் ஆயுதப் படைகள் என்பது புரட்சிகர ஆயுதப் படைகளாக இருக்கும் என்று நிர்மாணம் செய்துள்ளது. உள்துறை அமைச்சகமானது தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்காக இராணுவம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் காவல்துறை உள்ளிட்ட பிற கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று நிர்மாணித்துள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தம்

மக்கள் அதிகார பாராளுமன்றத்தில் பெயர் பட்டியலின்படி வாய்மொழி வாக்கெடுப்பு நடத்தி, அதன் பிரதிநிதிகளின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று மட்டுமே, அரசியலமைப்பு சட்டவிதிகள் திருத்தப்படும் என்று மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்ட விதிகளை திருத்துவதற்கான முன்மொழிவினை கொடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் –

கியூபக் குடியரசு தலைவர், அரசவை, மந்திரிகள் சபை, (மூன்றில் இரண்டு பங்கு பிரதிநிதிகள் கையெழுத்திட்டு முன்மொழிவினை அளிக்கும்பட்சத்தில்) தேசிய பாராளுமன்ற பிரதிநிதிகள், தேசிய தேர்தல் கவுன்சிலின் முன்பு குறைந்தபட்சம் 50000 தகுதி பெற்ற வாக்காளர்கள் கையெழுத்திட்டு மக்கள் அதிகார பாராளுமன்றத்திற்கு விண்ணப்பிக்கும்போது.

இப்படிப்பட்ட முன்மொழிவு எங்கு முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் பெரும்பான்மை வாக்கினை, இந்த நோக்கத்திற்காகவே நடத்தப்படும் பொது வாக்கெடுப்பில் பெற்றால் மட்டுமே, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படும்.

”நாட்டின் சோஷலிசக் கொள்கை மற்றும் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்புகள் மாற்றத்தக்கவை அல்ல.  மேலும் அந்நிய சக்திகளின் மிரட்டலுக்கு உட்பட்டோ, பலவந்தப்படுத்தலுக்கு உட்பட்டோ, நிர்பந்தங்களின் மூலமாகவோ இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்துவது என்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று இந்த புதிய நகல் தீர்மானத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s