(குரல்: பிரதீப்)
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (19.11.1918 – 08.051993)
ச. லெனின்
தேவி பிரசாத் சட்டோபாத்யாய இந்திய மார்க்சிய அறிஞர். குறிப்பாக பண்டைய இந்திய தத்துவயியலை மார்க்சிய பொருள்முதல் வாதக் கண்ணோட்டத்தில் வெளிக் கொணர்ந்தவர். 1998 இல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
சட்டோபாத்யாயாவின் படைப்புகள்
- இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் (விடியல் பதிப்பகம் – 2016)
- அறிவியல் தத்துவம் சமுதாயம் (அலைகள் வெளியீட்டகம் – 2008)
- இந்திய தத்துவம் ஓர் அறிமுகம் (பாரதி புத்தகாலயம்)
- இந்திய நாத்திகம் (பாரதி புத்தகாலயம்)
- உலகாயதம்: பண்டைய இந்தியப் பொருள்முதல் வாதம் – ஓர் ஆய்வு (சவுத்விஷன் 1999)
- தத்துவவாதி லெனின்
பண்டைய இந்தியாவில் சமூகமும் அறிவியலும்.
மதச் சார்பின்மை, பகுத்தறிவு, அறிவியல் நோக்கு என்கிற அடிப்படையில் இந்திய தத்துவ இயலின் பாரம்பரியத்தை ஆராய்கின்ற மிகப் பெரிய பணியை அவர் ஆற்றினார். இந்திய பண்பாடு, கலாச்சாரம், பழமையின் மகத்துவம் என்றெல்லாம் கூறி இன்று நம் முன் நிற்கும் மதவாத சக்திகளின் பிற்போக்கு கருத்துக்களை எதிர்கொள்ள சட்டோபாத்யாயாவின் பங்களிப்பு உதவும்.
“தத்துவ அறிஞர்கள் உண்மையில் என்ன சிந்தித்தார்கள்; போதித்தார்கள் என்று விளக்கமளிப்பது மட்டும் போதுமானதல்ல; இவையனைத்திலும் நிலைத்திருப்பவை எவை, மடிந்து போனவை எவை என்பதை வேறுபடுத்திக் காட்டுவதும்அவசியமாகும்.
ஏனெனில் தத்துவச் சிந்தனைகள் நமது தற்காலமுன்னேற்றத்திற்கு உதவக்கூடும். அல்லது தடைக்கற்களாக இருக்கக் கூடும். எனவே நமது முன்னோர்களின் தத்துவக் கருத்துக்களில் நமது தற்கால முன்னேற்றத்திற்கு தேவையானவற்றிற்கு எதிரானவையாக விளங்குகிற கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு
கைவிடப்பட வேண்டும்.” என்கிறார் சட்டோபாத்யாயா.
“மக்கள் தங்களின் மிகப் பிரபலமான கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை காணும் பொழுது சஞ்சலம் அடைய வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்தை சந்திக்க மறுத்தவர்கள் சமூகக்கடமையில் இருந்து தப்பி ஓடவே பார்க்கின்றனர்.” என்று சட்டோபாத்யாயா கூறுவதை கவனத்தில் கொண்டு சமூக கடமையில் இருந்து தப்பி ஓடாமல் களத்தில் கம்யூனிஸ்டுகள் அதை எதிர்கொள்கின்றனர். அதற்கான சமீபத்திய உதாரணமாக சபரிமலை விவகாரத்தை கூறலாம்.
பண்டைய மற்றும் மத்திய கால இந்தியாவில் நடைபெற்றது போலவே பிற்போக்கு சக்திகளும், மீட்புவாத சக்திகளும் இன்றைய இந்திய முன்னேற்றத்தை தடுக்க முயற்சிக்கின்றன. தேசபக்தியை நினைவுறுத்திக் கொண்டு பழைய முறையிலான கருத்துகளையும், தன்மைகளையும் இந்திய அறிவாற்றலின் அடிப்படை என மக்களை நம்ப வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
அவர்கள் முன்னிறுத்துவது போல் இந்திய தத்துவவாதிகளில் ஒரு பகுதியினர் மாயை, உருவ வழிபாடு, ஜாதி ஒழிப்பை கொச்சைப் படுத்துதல் போன்றவற்றை ஆதரித்தார்கள் என்றாலும், இந்திய தத்துவவாதிகளில் ஒரு பகுதியினர் தமக்கிருந்த வரலாற்று பூர்வமான தவிர்க்க முடியாத மிகக் குறைவான ஆதாரங்களோடு எதிர்த்தனர். நாம் இன்று எதை எதிர்த்து போராடுகிறோமோ இந்த போராட்டத்தை அவர்கள் அன்று நடத்தி, நமக்கு விலைமதிக்க முடியாத அறிவுரைகளை விட்டுச் சென்றுள்ளனர். அவர்களை நாம் நமது தேசிய பெருமையாக ஏற்று கொள்ள தயங்க வேண்டியதில்லை என்றும், அவர்களை பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக
முன்னிறுத்த வேண்டும் என்கிறார் சட்டோபாத்தியாயா.
நாட்டு விடுதலைக்கு முன்பு கடந்த காலத்தை பற்றிய குருட்டுத் தனமான புனிதப்படுத்தல் கூட நமது தேசபக்தியின் ஆற்றல் மிக்க ஒரு பகுதியாக கருதப்பட்டது. நமது மரபார்ந்த தத்துவத்தை முரட்டுத்தனமாக ஆதரிக்கும் போக்கானது வருங்கால தத்துவ வளர்ச்சிக்கு தீங்காகவே அமைந்தது. இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது. நமது நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக எந்தவொரு போலி நம்பிக்கையும் இப்பொது நமக்கு தேவையில்லை
என்கிறார் அவர்.
புனிதமாக கருதப்படும் பழமையான கருத்துக்களை பற்றிய விமர்சனப் பார்வையை கொண்டிருப்பது கூட மிகப்பெரிய துன்பத்தை வலியச் சென்று தேடிக் கொள்வதாகவும், தேச விரோத உணர்வுடையவர் என்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் பார்க்கப்படுகிறது என்கிற அபாயத்தை 1964 லேயே தனது “இந்திய தத்துவம் ஓர் அறிமுகம்” என்கிற புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகளாக நாம் உண்மை என்று நம்பியவைகள் உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட காலத்தில் செல்வாக்கு செலுத்திய கருத்து என்பதாலேயே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை . உடன்கட்டை ஏறுதல், மோசமான தீண்டாமை கூட செல்வாக்கு செலுத்தியவைதானே. இதை எதிர்த்து தானே சமூக சீர்திருத்தவாதிகள் ஓய்வு ஒழிச்சல் இன்றி போராடினார்கள். குறிப்பிடத் தகுந்த வெற்றியும் பெற்றார்கள் என்பதையும் அவர் அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறார்.
இந்திய தத்துவத்தை முழுமையாக ஆய்ந்த சட்டோபாத்யாயா, முற்போக்கு கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கான பணியை நாம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் நமது தத்துவமரபின் ஒரு மகிழ்ச்சியான சூழலினால் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்காகவும், நமது முன்னேற்றத்திற்காகவும் எந்தெந்த சிந்தனை போக்குகளை எதிர்த்து நாம் போராடுகிறோமோ, அந்த சிந்தனைகளை நம்மைப் போன்றே கடுமையாக எதிர்த்துள்ளவர்களையும் மரபார்ந்த தத்துவ அறிஞர்களின் மத்தியில் காண முடியும் என்கிறார். மார்க்சியம், பொருள்முதல்வாதம் எல்லாம் அந்நிய கருத்துக்கள், நமது பண்பாடு, தத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்துவோம் என்று எழும் பிற்போக்கு சக்திகளை முறியடிக்க இந்த மரபார்ந்த தத்துவ அறிஞர்களை பயன்படுத்த அவர் நமக்கு வழி காட்டுகிறார். அதற்குத் தேவையான தரவுகளையும், ஆய்வு வழிமுறைகளையும் தனது ஆழமான படைப்புகள் மூலம் கொடுத்துள்ளார்.
Leave a Reply