இந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் …


(குரல்: பிரதீப்)

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

தமிழில் இரா.சிந்தன்

(தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நினைவு கருத்தரங்கில் தோழர் இ.எம்.எஸ். முன்வைத்த ஆய்வுரை)

(ஆங்கில மார்க்சிஸ்ட் ஜனவரி – மார்ச் 1995 இதழில் வெளியானது.)

மறைந்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் இணைந்து கொண்டிருப்பது, எனக்கு பெருமிதமும், பெருமகிழ்வும் தருகிறது.

தேவி பிரசாத் ஒரு முன்னோடி – இந்திய தத்துவ சிக்கல்களுக்கு (தீர்வு காண்பதில்) மார்க்சிய சித்தாந்தத்தை பொருத்துவதில் அவர் ஒரு முன்னோடி என்று குறிப்பிடுவேன். அவருக்கும்  முன்னதாக, மார்க்சிய சித்தாந்தத்தின் இன்னொரு முன்னோடி இருந்தார். அவர்தான் டி.டி.கோசாம்பி. கோசாம்பியும்,தேவி பிரசாத்தும் தத்துவச் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ரொமிலா தாப்பர், ஆர்.எஸ். சர்மா மற்றும் பலர் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

நான் மேற்கண்ட துறைகள் எவற்றிலும் நான் வல்லுநர் என்று கூறிவிட முடியாது. நானொரு அரசியல் செயல்பாட்டாளன். இந்திய பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயல்பாட்டாளனாக இருக்கிற காரணத்தால், தத்துவம், அரசியல் பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், அழகியல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. மேற்கண்ட பாடப் பொருள்களை உள்வாங்கி நிறைய கற்றுக்கொண்டேன். அந்த வகையில் சில கண்ணோட்டங்களை எடுத்துரைக்கிறேன்.

இந்தியாவில் தத்துவமும், அறிவியலும் குறித்து உரையாடுவதற்கான இந்தக் கருத்தரங்கின் தலைப்பிற்குள் மட்டும் நின்று நான் பேசப் போவதில்லை. பண்டைக் காலத்திலிருந்து ஜூலை 10, 1994 வரையிலான காலத்தில் இந்தியாவில் தத்துவமும், அறிவியலும், சமூகமும் குறித்ததாக என் பேச்சினை அமைத்திருக்கிறேன்.

எனது உரையின் நோக்கம் இதுதான். ஏன் அப்படி? ஏனென்றால், நான் ஒரு கல்வியாளன் அல்ல; அரசியல் செயல்பாட்டாளன். பன்னெடுங் காலமாய், தத்துவவாதிகள் இப்பேரண்டத்தை பல வழிகளில் விளக்கியுள்ளனர். செய்ய வேண்டியது என்னவெனில், அதனை மாற்றியமைப்பதுதான் என்ற மார்க்சிய முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ள ஒருவன்.

மிகப்பெரும் பங்களிப்புகளை நமக்குக் கொடுத்து உயர்ந்து நிற்கும் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ். ஆனால் அவர் நடைமுறையில் புரட்சிகர செயல்பாட்டாளராகவும் இருந்தார். அவர் தனது தத்துவ எழுத்துகளின் வழியே உலகைப் புரிந்துகொள்ளவும், தனது நடவடிக்கைகளின் வழியே அதனை மாற்றியமைக்கவும் முயன்று கொண்டிருந்தார்.

கார்ல் மார்க்சின் தத்துவ எழுத்துகளின் தரத்தோடு என்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. தத்துவம் குறித்த எனது புரிதல் நேரிடையானதல்ல. நானே சொந்தமாக மேற்கொண்ட தத்துவப் பாடம் ஏதுமில்லை. இந்திய தத்துவம் பற்றி பேசும்போது, நான் கோசாம்பி, தேவி பிரசாத் உள்ளிட்டவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். மார்க்சிய கல்வியாளர்களான கோசாம்பி, ரொமிலா தாப்பர், ஆர்.எஸ். சர்மா மற்றும் பலரிடமிருந்து இந்திய வரலாற்றையும். இந்தியக் கல்வியாளர்கள் பலரிடமிருந்து, அரசியல் பொருளாதாரத்தையும் கற்றுக் கொண்டேன்.

ஆனால், பெரும்பாலும் எனது கல்வி, செயல்பாடுகளின் வழியாகத்தான் நடந்தது. அந்த செயல்பாடுகள் எனக்கு ‘இந்தியாவின் நிகழ்காலமும் எதிர்காலமும் என்ன?’ என்ற கேள்வியை என் முன் எழுப்பின. அந்தக் கேள்வி உங்களுக்கும் எழ வேண்டும்.

இப்போதைய நிகழ்கால அரசியலுக்குள் நான் செல்லவில்லை, ஒருமுறை பண்டித நேரு எழுப்பிய கேள்வியை இங்கே திண்ணமாக எழுப்பலாம். “இந்தியா எங்கே இருக்கிறது, எங்கே செல்கிறது”

பழமையை மீட்டமைத்தல்:

இந்தக் கேள்விகளை அவர் 1930களின் தொடக்கத்தில் எழுப்பினார். இந்தக் கேள்வியை 1994 ஆம் ஆண்டில் நான் மீண்டும் கேட்கும்போது, எனக்கு முன்னே எழும் பலதரப்பட்ட பார்வைகள் எழுகின்றன. அவற்றில் ஒன்றாக பழமைக்குத் திரும்புவதும் இடம் பெற்றிருக்கிறது.

பழமைக்குத் திரும்புவது என்றால், உபநிடதங்களின் இந்தியா; வேதங்களின் இந்தியா; அதுதான் மெய்யான இந்தியா என்பதாகும். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் இந்தியா, கிறித்துவ (ஆங்கிலேய) இந்தியா, மார்க்சிய இந்தியா ஆகியவையும் வருகின்றன.

இவையெல்லாமே அன்னிய சித்தாந்தங்கள்; இந்து வாழ்க்கை வழிமுறை மட்டுமே இந்தியாவுடையது என்ற கருத்தாக்கமானது ஒரு சித்தாந்தம் என்ற நிலையில் மட்டும் நின்று மறைந்து விடவில்லை, அது நடைமுறையிலும் பொருத்தப்படுகிறது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த நடைமுறையில் அதனை நாம் கண்டுணர்ந்தோம், அண்மையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் கண்டோம். மதுராவிலும் வாரணாசியிலும் மேலும் 3 ஆயிரம் இடங்களிலும் அமைந்துள்ள மசூதிகளை இடித்து நொறுக்குவோம் என்ற அச்சுறுத்தல்களிலும் அதனை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தமட்டில் அது இந்திய விரோத சித்தாந்தமாகும். மேற்கண்ட கருத்தை கைக்கொண்டுள்ளவர்கள் தாங்கள் இந்திய சித்தாந்தத்தை கைக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது இந்திய விரோத தத்துவம் என்ற வாதத்தை நான் வைக்கிறேன்.

ஏன் அவ்வாறு சொல்கிறேன்? பலவகைப்பட்ட சமூகங்களின் கலப்பாகவும், கலாச்சாரங்களும் இந்தியாவில் உள்ளன. இந்த நாடு பல மதச் சமூகங்களை ஒருங்கே கொண்டுள்ளது. இந்து சமூகத்தில் பல சாதிகள் உள்ளனர். பழங்குடிகள், மொழி, பண்பாட்டுக் குழுக்கள் இங்கே உள்ளனர். இந்த மண், வேற்றுமையில் ஐக்கியம் கொண்ட மண்ணாகும். இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பீடத்தில் ஏற்றி, இதுதான் இந்தியா என்று சொல்வது இந்திய விரோதமே என்பேன். செயலூக்கம் மிக்க இடதுசாரி அரசியல்வாதியாக 60 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் கண்டடைந்த புரிதல் இதுதான். எனது மேற்கண்ட புரிதலில் இருந்துதான் இந்திய தத்துவம் எதிர்கொண்டுவரும் சிக்கலையும் பார்க்கிறேன்.

நான் அதனை மேற்கொள்ளும்போது, (எனக்குள்) தேவிபிரசாத் எழுப்பிய கேள்வியை எழுப்பிக் கொள்கிறேன். இந்தியாவில் பொருள்முதல்வாத பாரம்பரியம் இருந்துவந்ததா? தேவிபிரசாத் தனது புகழ்பெற்ற உலகாயதம் என்ற புத்தகத்தை எழுதுகிறவரை நம்மிடம் நிலவிவந்த கருத்துப்பதிவு இதுதான். ஐரோப்பியக் கண்டம் எப்போதும் ‘பொருள்முதல்வாதக்’ கண்ணோட்டத்திலேயே இருந்து வந்தது. இந்தியா எப்போதும் ‘கருத்துமுதல்வாதக்’ கண்ணோட்டம் கொண்டதாக இருந்துவந்தது என்றுதான் பன்னாட்டு, இந்நாட்டு அறிஞர்கள் என அனைவருமே கருதினார்கள்; கூறிவந்தார்கள். இந்தக் கருத்தாக்கத்தை தேவிபிரசாத்தின் ஒற்றைப் படைப்பான உலகாயதம் சுக்குநூறாக்கியது.

சுமார், 40 ஆண்டுகளுக்கு முன் அந்தப் புத்தகத்தை வாசித்தபோது எனது சிந்தனையில் வெளிச்சம் பரவியது. இந்தியாவுக்கும் பொருள்முதல்வாத வரலாறு உண்டு. கிரீஸ், ரோம் போன்ற பிற ஐரோப்பிய நாகரீகங்களைப் போலவே இந்தியாவின் பண்டைச் சமூகத்திலும் கருத்துமுதல் வாதத்திற்கும், பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான போராட்டம் காணப்பட்டது. உலகாயதம் மட்டுமல்ல; தேவிபிரசாத்தின் மற்ற பல படைப்புகளும் இந்தச் சாரத்தை உறுதிப்படுத்துகின்றன. “இந்திய தத்துவத்தில் அழிந்து போனவையும், நிலைத்திருப்பவையும்” என்ற புத்தகம் லோகாயதம் என்ற புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். அது பண்டை இந்தியாவில் பொருள்முதல்வாதம் மற்றும் அவற்றின் வர்க்க வேர்களைக் குறித்து விரிவாக விவரிக்கிறது.

மாறுபடும் உலகக் கண்ணோட்டங்கள்:

பொருள்முதல்வாதம் எங்கிருந்துஎழுகிறது? கருத்துமுதல்வாதம் எங்கிருந்துஎழுகிறது? அவைகளுக்கு இடையிலான போராட்டம் எங்கே நடக்கிறது? பண்டைக்கால மற்றும் இடைக்கால இந்தியாவில் பொருள்முதல்வாதம் எவ்வாறு வீழ்த்தப்பட்டது? இவற்றைக் கண்டறிய விரும்பும் எவரும், வர்க்கப் போராட்டங்களை நோக்கி நகர வேண்டும்.

இயற்கையோடு உழைத்துவந்த மக்கள்தான், இயற்கையின் பல்வேறுபட்ட போக்குகளையும் நெருங்கிப் புரிந்து கொண்டார்கள். அவர்கள்தான் பொருள்முதல் வாதத்தைப் படைத்தார்கள் என தேவிபிரசாத் குறிப்பிடுகிறார். அவர்களின் உலகக் கண்ணோட்டமானது பொருள்முதல்வாத நோக்கில் அமைந்தது.

மறுபக்கம், பண்டை கிரேக்கத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சிறுபான்மை எண்ணிக்கையினர் இருந்தார்கள். இந்தியாவில் அவர்கள் இருபிறப்பாளர்களாக அறியப்பட்டனர். (துவைதர்கள் என அழைக்கப்பட்ட வர்ணங்கள்  பூணூல் அணியும் சடங்கு மேற்கொண்டு, அதன் மூலம் இரண்டாவது பிறப்பெடுக்கின்றனர் என்ற நம்பிக்கையில் இருந்து இந்தப் பெயர் வருகிறது )பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்தான் அந்த இருபிறப்பாளர்கள். அவர்களே சுரண்டும் வர்க்கங்களாக அமைந்திருந்தனர். அவர்களுக்கு இயற்கையின் நிகழ்வுப் போக்குகளுடன் உயிரோட்டமான தொடர்பு எதுவும் இல்லை. எனவே அவர்களுடைய உலகக் கண்ணோட்டம் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதிலிருந்துதான் கருத்துமுதல் வாத தத்துவப் போக்கு எழுந்தது.

சாமானிய மனிதனைப் பொறுத்தமட்டில், அவர்கள் கரத்தால் உழைப்பவர்கள் மட்டுமல்ல; கருத்தாலும் உழைக்கிறார்கள், இயற்கையோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளனர். எனவே அவர்கள்தான் பொருள்முதல்வாதத்தை உருவாக்கி வளர்த்தெடுக்கிறார்கள். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் உடைமையாளர்களும், அடிமைகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதைப் போலவே, இந்தியாவில் இருபிறப்பாளர்களும், சூத்திரர்களும் மோதினார்கள். இருபிறப்பாளர்களும் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள். தொடக்க காலத்தில் சத்திரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதைத் தொடர்ந்து பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு வந்தார்கள். சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவோராக, இருபிறப்பாளர்களில் எவரேனும் ஒருவர் இருந்து வந்தார்.

இந்த இருபிறப்பாளர்களின் ஆதிக்கமே, பொருள்முதல் வாதத்தின் வீழ்ச்சிக்கும், கருத்துமுதல் வாதத்தின் முகிழ்ப்புக்கும் காரணமாக அமைந்தது. இருபிறப்பாளர்களின் ஆதிக்கத்தின் காரணமாகவே, அதனை எதிர்த்த போராட்டத்தின் வெளிப்பாடாகவே பொருள்முதல்வாதத்தின் எழுச்சியும் நிகழ்ந்தது. தேவிபிரசாத் எழுதிய இரண்டு முக்கிய புத்தகங்களான உலகாயதம் மற்றும் இந்திய தத்துவத்தில் அழிந்து போனவையும், நிலைத்திருப்பவையும் ஆகிய இரண்டிலும் இது தெளிவாக விளக்கப்பட்டது.  “பண்டைய இந்தியாவில் அறிவியலும், சமூகமும்” போன்ற படைப்புகளில் அது மேலும் விரிவாக அலசப்பட்டது.

பண்டைய கிரேக்கத்தைப் போலவே, பண்டைய இந்தியாவிலும் கருத்துமுதல் வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்கும் இடையிலான போராட்டம் இருந்து வந்தது. ஆனால் இரண்டு நாடுகளிலும் வரலாற்றின் போக்குகள் வேறுபட்டன. கிரேக்கத்தில் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமும், இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டங்களும், பழைய அடிமைச் சமூகத்தை மாற்றி நிலவுடைமைச் சமூகத்தையும், நிலவுடைமைச் சமூகத்தை அகற்றி அந்த இடத்தில் முதலாளித்துவ சமூகத்தையும் நிலைகொள்ளச் செய்தன. வேறு சொற்களில் குறிப்பிட்டால், உடைமையாளர்களை எதிர்த்த அடிமைகளின் கலகத்தை தொடர்ந்து, நிலவுடைமை அமைப்புக்கு எதிரான கலகங்கள் ஐரோப்பாவின் பண்புக்கூறுகளாக அமைந்தன.

இந்தியாவிலோ, மேற்கண்ட கலகங்களும் புரட்சிகளும் நடந்தேறவில்லை. இருபிறப்பாளர்களுக்கும், சூத்திரர்களுக்கும் இடையிலான போராட்டத்தில் உடைமை வர்க்கங்களுக்கும், உழைக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலான முதல் போராட்டத்திலேயே,  சூத்திரர்கள் வீழ்த்தப்பட்டனர்.

உழைக்கும் மக்கள், சுரண்டும் வர்க்கங்களால் வீழ்த்தப்பட்டனர். உழைக்கும் மக்களின் இந்தத் தோல்வியையும், உடைமை வர்க்கங்களின் வெற்றியையும் தொடர்ந்து, பொருள்முதல் வாதத்தின் நிலைத்திருத்தலும் வீழ்ச்சிக்கு ஆளானது. கருத்துமுதல்வாதம் ஆதிக்க இடத்தைப் பிடித்தது. இதற்கு என்ன சாட்சி?

உடைமை வர்க்கங்களுக்கும், உழைக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் ஆயுதமேந்திய போராட்டங்களுக்கும், உழைக்கும் வர்க்கத்தின் தோல்விக்கும் சாட்சிகள் ஏதுமில்லை. ஆனால் இரண்டு வர்க்கங்களுக்கும் இடையிலான தத்துவார்த்த போராட்டங்களுக்கு சாட்சியம் இருக்கிறது. இந்தியா முழுவதும் பரவி நிலவிய புத்தமும், சமணமும்தான் அந்த சாட்சிகள். புத்தமும், சமணமும் இருபிறப்பாளர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான சூத்திரர்களின் கலகங்களின் வெளிப்பாடுகளேயாகும். சில காலத்திற்கு பார்ப்பனியத்திற்கு மேலாக புத்தம் நிலவுவதாக தோன்றியது. ஆனால் அது வீழ்த்தப்பட்டது. புத்தம், சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவியுள்ளது, ஆனால் அது பிறப்பெடுத்த சொந்த நாட்டில் வீழ்த்தப்பட்டது.

ஏனெனில், தேவிபிரசாத் சுட்டிக் காட்டியதைப் போல, புனித அதிகாரத்தையும், அரச அதிகாரத்தையும், உடைமை வர்க்கங்கள், அதாவது இருபிறப்பாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். அதாவது சத்திரியர்களும், பார்ப்பனர்களும் இணைந்து தத்துவார்த்த நிலையில் புத்தத்தினையும், பொருள்முதல்வாதத்தின் இதர வடிவங்களையும் தாக்கி அழித்திட முடிந்தது. புத்தமும், சமணமும் மட்டுமல்ல, சாங்கியம், சார்வாகம் ஆகியவையும் பொருள்முதல் வாதத்தின் தத்துவ வடிவங்களாகவும், உழைக்கும் மக்களின் சித்தாந்தங்களாகவும், தத்துவங்களாகவும் இருந்தன. அவை வீழ்த்தப்பட்டன;  அகற்றப்பட்டன. பொருள்முதல்வாத படைப்புகளும் கூட இப்போது நமக்கு கிடைக்கவில்லை.

எதிரிகளின் படைப்புகளின் வழியே பொருள்முதல்வாதம்:

சார்வாகம் அல்லது பொருள்முதல் வாத தத்துவங்களின் பிற முறைகளைக் குறித்து அறிய வேண்டுமென்றால், அவற்றை எதிரிகளின் எழுத்துகளின் வழியாகவே அறிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் உண்மை. உதாரணமாக, லோகாயதத்தின் பல பகுதிகளையும், பொருள்முதல்வாத எழுத்துகள் பலவற்றையும் சங்கரர் தனது எழுத்துகளில் மேற்கோள் காட்டுகின்றார். எதற்காக? அவற்றை தாக்குவதற்காக. பூர்வ பக்சா என அழைக்கப்படுவது எது?, சங்கரர் பொருள்முதல் வாதிகளின் ஏராளமான எழுத்துகளில் இருந்து மேற்கோள்களை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அந்த (பொருள்முதல் வாதிகளின் சொந்த) படைப்புகள் நமக்கு கிடைக்கவில்லை. அவசியம் என சங்கரர் கருதிய பகுதிகள் மேற்கோள்களாக பயன்படுத்தப்பட்டன, பின்னர் அவை அழிக்கப்பட்டன. சித்தாந்த பக்சா என்பது பூர்வ பக்சாவுக்கு பிறகு வந்ததாகும். பூர்வ பக்சா முதலில் (மேற்கோளாக) தரப்பட்டு பின் (வாதங்களால்) தகர்க்கப்படுகிறது. அந்த தகர்ப்புதான் சித்தாந்த பக்சா என அழைக்கப்படுகிறது. பூர்வ பக்சா தரப்பட்டதற்கான காரணமே, சித்தாந்த பக்சாவை நிலைநாட்டுவதற்காகத்தான். இவ்வகையில்தான், லோகாயத வாதிகளின் பல எழுத்துகளும், சார்வாகர்கள் மற்றும் பலரின் படைப்புகளும் நமக்கு கிடைக்கின்றன.

புத்த செவ்வியல் படைப்புகள், பிற நாடுகளில் கிடைக்க வேண்டும். திபெத் நாட்டில் புத்த எழுத்துகளின் பெரும் தொகுப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். யாரும் அவை குறித்து ஆய்வு மேற்கொள்ளவில்லை. தத்துவ நிலை மட்டுமல்ல; சமூக வழக்கங்களின் நிலைமையும் அதுதான். புத்தம் ஒரு பெரிய இயக்கமாக இருந்தது. புத்தம் நாடு முழுவதும் பரவியிருந்தது. ஆனால் அது தத்துவப் போராட்டத்தில் அது பல கருத்துமுதல் வாத தத்துவவாதிகளால் வீழ்த்தப்பட்டது, அவர்களில் உச்சத்தில் இருந்தவர் சங்கரர்.  அவர் புத்தத்தை வீழ்த்தியதுடன், பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் இருப்பானது ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

பண்டைய இந்திய அறிவியல் குறித்த வரலாற்றறிஞர் பி.சி. ராய், இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘சங்கரர், புத்தத்தை எதிர்த்து பெற்ற வெற்றியானது இந்தியாவில் அறிவுத் தேக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. அதுவரை பொருள்முதல்வாதத்திற்கும், கருத்துமுதல் வாதத்திற்கும் தீவிரமாக நடந்து வந்த போராட்டம், புத்தத்திற்கு எதிரான கருத்து முதல்வாதத்தின் வெற்றியோடு முடிவுக்கு வந்தது. இந்த தகர்ப்பு, சொந்த சிந்தனைகள் அனைத்துக்கும் முடிவைக் கொண்டு வந்தது. கருத்துகளின் போராட்டத்தை முடித்து வைத்தது. அதனால்தான் கி.பி. 8-9 நூற்றாண்டுகளின் காலகட்டத்தில், இந்திய சமூகம், இந்திய அறிவியல், இந்திய கலைகள், இந்திய இலக்கியம் என அனைத்தும் தேக்க நிலைக்கு செல்லத் தொடங்கின.

இலக்கியத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால். காளிதாசர் மற்றும் இதர சிறப்புவாய்ந்த எழுத்தாளர்களின் செவ்வியல் சமஸ்கிருத படைப்புகளைப் போல அல்லாமல், இலக்கியம் ஒரே வகைப்பட்டதாகி (so formalized) அதன் உயிரோட்டத்தை இழந்தது. கருத்துமுதல்வாதத்தின் கைகளில் புத்தம் அடைந்த வீழ்ச்சியானது சங்கரரின் தத்துவத்தை செழுமைப்படுத்தியது என்பதன் பொருள் இந்த நாட்டின் அறிவுச் சூழல் தேக்கமடைந்தது என்பதேயாகும்.

பொருள்முதல்வாதத்தை வீழ்த்தி கருத்துமுதல்வாதம் அடைந்த வெற்றியின் காரணமாக, அறிவுச் சூழலில் ஏற்பட்ட இந்த தேக்கத்தை அடுத்து, மக்களிடையேயும் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயும் குழு மோதல்கள் எழுந்தன. அவை அதிக வலுவோடு நடைபெற்றன. இந்தியாவைக் குறித்ததான கட்டுரையில் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் எதிராக இருந்தனர், அப்படியான சூழலிலேயே ஆங்கிலேயர்கள் நுழைந்தனர். மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, சமூகத்தில் நிலவிய அறிவுத் தேக்கம், நாட்டில் சமூக-அரசியல் சிதைவுக்கு வழிவகுத்தது, அது அன்னிய ஆட்சிக்கு வழிவகுத்தது.

அன்னிய ஆட்சிக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. மார்க்ஸ் சொன்னதைப் போல அவற்றிற்கும் இரண்டு பாத்திரங்கள் இருந்தன. முதலாவது அழிவுப்பணி. பழையதை அழித்தல். சாதிச் சமூகத்தை அழித்தல். பெரிய அளவில்  அதை அவர்கள் செய்தார்கள் [That they did to a large extent]. மேலும், அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகளும் இருந்தன, அதாவது புதிய சமூகத்தைக் கட்டமைத்தல். அந்தப் பாத்திரத்தை அவர்கள் ஆற்றவில்லை. அதைத்தான் மார்க்ஸ், புதிய ஒன்றைப் பெறாமலேயே பழைய உலகத்தை இந்தியர்கள் இழந்தது பெரும் சோகம் என்று குறிப்பிட்டார்.

நாம் புதிய ஒன்றைப் பெறாதபோதும், புதிய சமூகத்திற்கான விதைகள் விதைக்கப்பட்டன. நவீன ஜனநாயக இயக்கங்கள், விடுதலை இயக்கங்கள் ஆகியவையே அந்த விதைகள் ஆகும். விடுதலை இயக்கத்தின் வழியே புதிய தத்துவ கண்ணோட்டங்களும், ஏராளமான அரசியல் செயல்பாடுகளும் பிறப்பெடுத்தன. வங்கத்திலிருந்து ராம் மோகன் ராயும், மகாராஷ்டிராவில் பூலேவும், கேரளத்தில் ஸ்ரீ நாராயண குருவும் மேலும் பலரும் புதிய சிந்தனையாளர்களாக முன்வந்தனர், அவர்கள் மக்களிடையே புதிய சிந்தனைகளைத் தூவினார்கள்.

இதிலிருந்துதான் இந்திய அரசியல் பொருளாதாரம் எழுந்தது. 1860 களின் தொடக்கத்தில், தாதாபாய் நவ்ரோஜி. ரானடே உள்ளிட்ட ஏராளமான சிந்தனாவாதிகள் எழுந்தனர். அவர்கள் இந்திய அரசியல் பொருளாதாரத்தின் முன்னோடிகளாக அமைந்தனர். அவர்கள்தான் நவீன ஜனநாயக அரசியல் இயக்கத்தின் முன்னோடிகளும் ஆவர். ஆங்கிலேய ஆட்சி நிறுவப்பட்டு விட்ட காலத்தில், இந்திய மண்ணில் புதிய சமூகத்திற்கான விதைகள் தூவப்பட்டதாக மார்க்ஸ் குறிப்பிட்டுக் கூறியதன் வெளிப்பாடுகளாக இவைகளைக் காணலாம். இதன் காரணமாகவே நவீன இயக்கங்கள் உருவாகி வளர்ந்தன.

கோபால கிருஷ்ண கோகலே, திலகர், காந்தி உள்ளிட்ட புதிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் தத்துவவாதிகள், இதிலிருந்தே உருவாகினர். புதிய தத்துவ கண்ணோட்டங்களின் தொடக்கமாக அவர்கள் அமைந்தார்கள், பண்டைய இந்தியாவின் தத்துவங்களை நவீன காலத்திற்கு முன்னெடுத்து வந்தார்கள். உதாரணமாக, அவர்களில் தனித்து தெரியும் சிந்தனையாளரான விவேகானந்தர், பார்வைக்கு ஒரு சாமியாராக இருந்தாலும், அரசியல் புரட்சியாளராவார். அவர் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களின் காலம் முடிந்தது என்றார். இப்போது சூத்திரர்களின் காலம் தொடங்கியுள்ளது. சூத்திரர்களின் காலம் என்பதை நவீன மார்க்சிய வார்த்தையில் குறிப்பிட்டால் பாட்டாளி வர்க்க ஆட்சியே. சுவாமி விவேகானந்தருக்கு இந்த எண்ணம் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஏதோ புதியதாக வரப்போகிறது என அவரால் கணிக்க முடிந்தது. அந்த புதியது, சூத்திரர்களின் எழுச்சியே. இந்தப் பார்வையில்தான் பூலே, ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் தங்களது வீரியம் மிக்க சமூக-பண்பாட்டு இயக்கங்களைக் கட்டமைத்தனர். இருந்தாலும், அரசியல் விடுதலை இயக்கத்தோடு அவர்களுக்கு உயிரோட்டமான தொடர்பு இருக்கவில்லை. திலகரும், காந்தியும் மேலும் பலரோடு இணைந்து ஒரு புதிய தத்துவ நோக்கை வளர்த்தெடுத்தனர். அது புதிய சமுதாயத்தை உருவாக்குவது பற்றிய மக்கள் விருப்பங்களுக்கு வடிவம் கொடுத்தது. அந்த விருப்பங்கள் பட்டினிப் பட்டாளத்துடைய (தரித்திர நாராயணர்கள்) விருப்பங்களேயாகும்.

நவீன அரசியல் சக்தி:

1920களின் தொடக்கத்தில் இந்திய மக்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தனர். பம்பாய் தொழிலாளி வர்க்கம் அரசியல் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே, ஒரு புதிய சமூகம் உருவாகி வளர்ந்து வந்தது. மேற்சொன்ன வேலை நிறுத்தத்தை, ஒரு புதிய இந்தியாவினுடைய, இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் காலம் பிறப்பெடுத்திருப்பதாக குறிப்பிட்டு விதந்தோதினார் லெனின். இந்திய விடுதலைக்கான முந்தைய இயக்கங்களில் மற்ற வர்க்கங்கள், மக்களின் பிற பகுதியினர் பங்கெடுத்தார்கள். லோகமான்ய திலகர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, பம்பாய் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்ட போராட்டமானது இந்திய தொழிலாளி வர்க்கத்தை விடுதலை இயக்கத்திற்குள் இழுத்து வந்தது.

அந்தக் காலத்தில், அந்தப் போராட்டமானது பம்பாய் என்ற ஒரு நகரத்திற்குள்ளேதான் நடந்தது. லோகமான்ய திலகரின் கைதும், சிறையடைப்பும் என்ற ஒரு பிரச்சனையைச் சுற்றியதாகவே அந்தப் போராட்டம் எழுந்தது. ஆனால்,அடுத்த பத்தாண்டுகளில், இந்திய உழைக்கும் வர்க்கமானது, நாடு தழுவிய தனது முதல் அமைப்பை சாத்தியமாக்கியது. அனைத்திந்திய தொழிலாளர் காங்கிரஸ் உடன் இணைந்து நாட்டின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் குழுக்களும் உருவெடுத்தன. பம்பாயில் டாங்கே, கல்கத்தாவில் முசாபர்அஹமது, மெட்ராசில் சிங்காரவேலர் ஆகியோர் கம்யூனிசத்தின் இந்திய முன்னோடிகளாக அமைந்தனர். இந்த முன்னோடிகள், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்து, கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்தனர். விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகவே இது நடந்ததென்றாலும், பாட்டாளி வர்க்கமும், நடுத்தர வர்க்கமும், இன்னமும் முதலாளித்துவ தலைமையின் கீழாகத்தான் செயல்பட்டு வந்தது என்ற போதிலும், ஒரு வர்க்கமாக தானே, தனது கோரிக்கைகளுக்காக முன்னெழுந்து வந்தன.

அந்தக் கணம் முதலே, ஒரு புதிய தத்துவம் வளரத் தொடங்கியது. அந்தத் தத்துவம்தான் எங்கள் தலைமுறையின் முன்னத்தி ஏர்கள் பெரும் பங்கெடுத்து வளர்த்ததும், நாங்கள் பின்னர் இணைந்து கொண்டதுமான தத்துவமாகும். கடந்த 60 ஆண்டுகளில் எனது தலைமுறை,  நடைமுறைப் பணிகளில் மட்டும் பங்களிப்பைச் செய்திடவில்லை. மார்க்சிய தத்துவம், அரசியல் பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல், அழகியல் என பலவற்றிலும் பங்களிப்பைச் செய்தது என்பதை இங்கே பெருமிதத்துடன் குறிப்பிடுவேன். மாறிவரும் உலகம் குறித்ததான மார்க்சிய கருதுகோளினை புரிந்து கொள்வதுடன், நடைமுறையிலும் பயன்படுத்துவது இவ்வாறுதான் சாத்தியமாகும். இப்படித்தான் நாம் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே, இந்தியாவில் சமூகமும், அறிவியலும், தத்துவமும் என்பதை ஒரு தொடர்ச்சியாகவே நான் பார்ப்பேன். இந்த தொடர்ச்சி சில சமயங்களில் தடைப்படலாம். ஆனால் தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கும். அந்த தொடர்ச்சியானது, இந்திய மக்கள் தாங்களே வளர்ந்து வருகிறார்கள் என்பதேயாகும். நாம் 1994 ஆம் ஆண்டிற்கு வரவேண்டும். 21 ஆம் நூற்றாண்டுக்கான பார்வையை வசப்படுத்தி செயல்படவேண்டும் என்கிறேன்.

இந்திய மக்கள் அனைத்து வகைகளிலும் மேம்பட்டுள்ளதாகக் காண்கிறோம். அவர்கள் தங்களின் சொந்த தத்துவத்தை வளர்த்தெடுத்துள்ளனர். அந்த தத்துவமானது இந்து தத்துவம் அல்ல. இந்து தத்துவமும் அதில் உள்ளடங்கிய பகுதி.  முஸ்லிம் தத்துவ நோக்கும், கிறித்துவ தத்துவ நோக்கும், மார்க்சிய தத்துவ நோக்கும் அதில் உள்ளடங்கியுள்ளது. இந்தியத் தத்துவம் எனக் குறிப்பிடுவதில் இவை எல்லாமே பகுதிகளாகும். இந்துத்துவ கூட்டத்தாரின் பார்வைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் பார்வை இதுவே. இந்துத்துவ வாதிகளுக்கு இந்து தத்துவமும், வேத தத்துவமுமே இந்திய தத்துவமாகும். அவர்கள் வேதகால கணிதத்தையும் தொடங்கி விட்டனர். அனைத்தையுமே வேதகாலத்திற்கு பின்நோக்கி இழுத்துச் செல்ல வேண்டுமென பார்க்கிறார்கள்.

நிச்சயமாக நாம் வேதகால பண்பாட்டை மதிக்கிறோம். வேத கலாச்சாரம் குறித்து பெருமைப்படும் அதே சமயத்தில், அந்த கலாச்சாரத்திற்கு சில கண்டிப்பான வரம்புகள் இருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ளத் தவறவில்லை. பண்டைக் காலத்தில் ஐரோப்பாவை ஒத்த நிலையிலும், அதனை முந்திக்கொண்டும் இருந்த இந்தியாவானது,  நவீன காலத்தில் பின்தங்கியதற்கு அதுதான் காரணமாகும்.

வேதகால கலாச்சாரத்தின் வரம்புகளில் ஒன்று குறித்து எனது சொந்த அனுபவத்திலிருந்தே குறிப்பிட முடியும். சிறுவனாக இருந்தபோது, 6 ஆண்டுகளை ரிக் வேதம் கற்பதற்காக செலவிட வேண்டியிருந்தது. கற்றேன் என்று சொல்வது சரியான சொல்லாக இருக்காது. அந்தப் பொருளில் எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொல்வதற்கு பழகினேன். அப்படித்தான் அந்த ஆறு ஆண்டுகளும் மனப்பாடம் செய்து ரிக் வேத மந்திரங்களை திரும்பச் சொன்னேன். அவை என் வாழ்நாளில் வீணாக்கப்பட்ட ஆண்டுகள். நிச்சயம் நொறுக்கப்பட வேண்டிய வேதகால பண்பாட்டுப் பகுதிகளில் இவையும் அடங்கும்.

நமது பண்டைய பண்பாட்டுக் களஞ்சியத்தின் ஒரு அங்கமாக ரிக் வேதம் உள்ளது உண்மைதான். ஆனால் நான் அதை கற்கவில்லை. மனப்பாடம் செய்யும்போது என்ன பொருள் புரிந்துவிடும்?, அதிலிருந்து என்ன அறிந்து கொண்டிருக்க முடியும்?, சமீபத்தில்தான் எனது நண்பர் மலையாளத்தில் குறிப்புகளுடன் 8 பாகங்களாக அச்சிடப்பட்ட ரிக் வேதத்தை கொடுத்தார்.  அந்தக் களஞ்சியத்தை நாம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கண்டு மகிழ்கிறோம். அதே சமயம், வேத எழுத்துகள், மாற்றக்கூடாத சமய மரபின் பகுதிகளாக்கப்பட்டதையும் மறுக்க முடியாது. (இவ்வகையில்) வேதகால எழுத்துகள் மனிதர்களின் சிந்தனையை மேம்படுத்த பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அவர்களை அடிமைப்படுத்த பயன்படுகின்றன. இந்த மரபு நொறுக்கப்பட வேண்டும். இந்த மரபை உடைத்தால்தான் நம்மால் மார்க்சிய தத்துவ நோக்கையும், புதிய அரசியல் பொருளாதாரத்தையும் இன்ன பிறவற்றையும் வளர்த்தெடுக்க முடியும்.

தனது படைப்புகளின் வழியே தேவி பிரசாத் நமக்கு கொடுத்துச் சென்றுள்ள செய்தி இதுதான். இதன் காரணமாகவே மார்க்சிஸ்ட்களுக்கு மட்டுமல்லாது, நம் கலாச்சாரத்தைக் குறித்து ஆழ்ந்து படிக்க விரும்பும் அனைவருக்குமே அவருடைய பணி ஒரு சொத்தாக அமைந்திருக்கிறது. எனவேதான் நான் இந்த கருத்தரங்கில் ஒருவனாக இடம் பெற்றிருப்பதை பெருமிதமாகவும், பெரு மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன். அவரது பணிகளை கற்றுத்தேர்ந்து அதில் பயனடைய நான் முயற்சித்துள்ளேன், அவர் தன் வாழ்க்கையில் அவற்றை எப்படி இந்திய சமூகத்தை மாற்றியமைக்கும் நோக்கில் பயன்படுத்தினாரோ, அதே வகையில் நானும் பயன்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறேன். மேலும் அனைத்து பிற்போக்குச் சிந்தனைகளையும், காலம் கடந்துவிட்ட ‘இந்துத்துவா’ என்று அழைக்கப்படும் கலாச்சாரத்தையும் தாக்கி வீழ்த்த பயன்படுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல விரும்பியதன் சாரம் இதுதான்.

One thought on “இந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் …

 1. இக்கட்டுரையை மொழியாக்கம் செய்யும் பணியே மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்தது. அதற்கு காரணம் இன்றும் நாம் விவாதத்திவரும் மிக முக்கிய சிக்கல்களின் வேரைத் தேடும் ஆய்வுக் கண்ணோட்டமே ஆகும்.

  இந்தியாவில் பூணூல் அணியும் சடங்கு மூலம் தங்களை இருபிறப்பாளர்களாக கருதிக்கொள்ளும் வர்ணங்கள் ஆளும் வர்க்கங்களாகவும், உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள் அடிமைவர்க்கங்களாகவும் இருக்கும் நிலையில் – எப்படி இருவேறு தத்துவ கண்ணோட்டங்கள் தோன்றின, மோதின… மோதல் மட்டுப்பட்ட காலத்தில் எப்படி அறிவு வளர்ச்சி தேக்க நிலையை அடைந்தது என்று இ.எம்.எஸ் உரை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

  இந்திய வரலாற்றின் ஓட்டத்தில், தொழிலாளி வர்க்கத்தின் பிறப்பும், அதன் அரசியலும் எப்படி மக்கள் விடுதலைக்கான திறவுகோலாக அமைய முடியும் என்பதை மிகுந்த தன்னடக்கத்துடனும், அதே சமயம் பாட்டாளி வர்க்கத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் இ.எம்.எஸ் வெளிப்படுத்துகிறார்.

  //வேதகால எழுத்துகள் மனிதர்களின் சிந்தனையை மேம்படுத்த பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அவர்களை அடிமைப்படுத்த பயன்படுகின்றன. இந்த மரபு நொறுக்கப்பட வேண்டும். இந்த மரபை உடைத்தால்தான் நம்மால் மார்க்சிய தத்துவ நோக்கையும், புதிய அரசியல் பொருளாதாரத்தையும் இன்ன பிறவற்றையும் வளர்த்தெடுக்க முடியும்.//

  நாம் பழையதை உடைப்பதை மட்டுமல்ல, புதியதைக் கட்டமைப்பதையும் இணைத்தே மேற்கொள்ள வேண்டும். அன்புத் தோழர்கள் இக்கட்டுரையை வாசிப்பதுடன் விவாதத்தை முன்னெடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s