குரல்: யாழினி
- ஆர்.சுதிர்
இதுவரை புகைப்படங்களிலும், பத்திரிக்கைகளிலும், நாம் பார்த்தும் பயன்படுத்தியும் வந்திருக்கிற, போராட்டங்களின் தத்துவ ஆசான்களாக வடித்துப் பார்த்துள்ள அந்த மாமேதைகள் மார்க்ஸ்–ஏங்கெல்ஸ் ஆகியோரை உண்மை உருவமாக நம் முன்னே நிறுத்தியிருக்கிறது ‘ராவுல் பெக்’ இயக்கிய “தி யங் கார்ல் மார்க்ஸ் ” திரைப்படம்.
கி.பி. 1800களின் மத்திய காலத்தில் படம் தொடங்குகிறது. மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வாழ்க்கையின் 6 ஆண்டுகளை (1843-1848) இத்திரைப்படம் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
“தி யங் கார்ல் மார்க்ஸ்” திரைப்படம் கார்ல் மார்க்சின் தனிப்பட்ட வாழ்வு அல்ல. அக்காலகட்டத்தின் ஒரு துளி. ஒரு மாபெரும் புரட்சிகர வாழ்வில் எவ்வாறு ஆண்களும், பெண்களும் இணைவதால் மட்டுமே அது முழுமையடைகிறது என்பதை படம் சொல்கிறது.
இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மார்க்சை அறிமுகப்படுத்துவதும், அவரது இளமை நாட்களில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதும்தான் திரைப்படத்தின் நோக்கம். “இந்த திரைப்படத்தில் மனிதர்களாக மார்க்ஸ், ஏங்கெல்ஸ், அவர்களின் துணைவியர் மற்றும் சமகாலத்தவரின் மனங்களுக்குள் நான் சென்று பார்த்தேன்” என்கிறார் ராவுல் பெக்.
“உலகின் பற்பல காட்சிகள் மார்க்சை பல்வேறு விதங்களில் முன்வைக்கின்றன. வேறுபட்ட பார்வைகளுடன் அவரது வரலாறு பலரால் எழுதப்பட்டுள்ளது. அதில் நிறைய முரண்பாடுகளும் இருக்கின்றன. இந்தப் படத்தை அவற்றின் அடிப்படையில் நான் உருவாக்கவில்லை. அன்றைய வரலாற்றில் இவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்; மனிதர்களாக எப்படி இருந்தார்கள்; எவ்வாறு விவாதித்தார்கள் என்பதையே காண்பிக்க விரும்பினேன்” என்கிறார் ராவுல் பெக். இது புரட்சியாளர்களின் வாழ்வு குறித்த ராவுல் பெக்கின் மூன்றாவது திரைப்படம். ஆப்ரிக்கா புரட்சியாளரான லுமும்பா மற்றும் ஆப்ரோ-அமெரிக்கப் புரட்சியாளரான ஜேம்ஸ் பால்ட்வின் பற்றிய திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். கார்ல் மார்க்ஸ் திரைப்படம் 2017 பிப். 9-19 பெர்லின் திரைவிழாவில் இப்படம் திரையிடப்பட்டது.
மேரி பார்ன்ஸ் நேரடி ஆய்வு உதவியும், வாழ்ந்து அனுபவம் பெற்ற தொழிலாளி வர்க்க வாழ்வும் இல்லையெனில் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ (The Condition of Working Class in England) நூலை ஏங்கல்சினால் எழுதியிருக்க முடியாது. அந்த நூலைப் பற்றி ஏங்கெல்சிடம் மார்க்ஸ் பேசும்போது அந்த நூலில் இரு தளங்கள் இருக்கிறது. ஒன்று, முதலாளித்துவச் சுரண்டல் தன்மை தொடர்பானது. ‘முதலாவதை முதலாளியின் மகனாக நீ உனது வாழ்வு அனுபவத்திலிருந்து பெற்றிருக்க முடியும். இரண்டாவது எப்படி?’ எனும்போது ‘அது ஒரு காதல் கதை’ என்கிறார் ஏங்கெல்ஸ்.
மார்க்சின் சிக்கலான, கோணல் மாணலான கையெழுத்தை வாசிக்க முடிந்தவர் மூவர். ஜென்னி, அடுத்து ஏங்கெல்ஸ், மூன்றாவதாக மார்க்சின் இளைய மகள் எலியனார். மார்க்சின் கட்டுரைகளையும் நூல்களையும் அவர் வாழ்ந்த நாள்வரை படியெடுத்து அதனை அச்சுக்கு அனுப்பியவர் ஜென்னி. ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அசல் பிரதியின் இடையிடையே ஜென்னியின் சொந்த கையெழுத்து இருப்பதை தான் பார்த்ததாகச் சொல்கிறார் இயக்குனர் ராவுல் பெக்.
புரூதோன், பகுனின் உட்பட அராஜகவாதிகளுடன் மார்க்ஸ் நடத்திய விவாதங்களில் உடனிருந்தவர் ஜென்னி. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பின் ‘கம்யூனிஸ்ட் லீக்’ ஆகப் பரிமாணம் பெற்ற ‘லீக் ஆஃப் ஜஸ்டிஸ்’ அமைப்பை மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு அறிமுகப்படுத்தியவர் மேரி பார்ன்ஸ். மார்க்ஸ் ஏங்கெல்ஸ் என இருவரது செயல்பாடுகளிலும் இரண்டறக் கலந்து செயல்பட்டவர்கள் ஜென்னியும் மேரி பர்ன்சும். உடலும் உணர்வும் சிந்தையும் கருத்தும் இணைந்து செயல்பட்ட மகத்தான மனிதர்களாக இந்த நால்வரும் ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ படத்தில் உயிரோவியமாக வலம் வருகின்றனர்.
படத்தின் முதல் காட்சி 1843 ஆம் ஆண்டின் ஒரு நாளில் ஜெர்மனியில் ‘ரெய்னிச் ஜூடுங் பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் நடக்கும் விவாதங்களையும், மரத்திலிருந்து உலர்ந்து விழுந்த சுள்ளிகளைச் சேகரிக்கும் வறிய மக்கள் பிரஷ்ய அரசின் குதிரைப் படையினரால் வேட்டையாடப்படும் காட்சிகளைக் காட்டுகிறது. மார்க்சின் வாழ்வில் அந்தச் சம்பவம், அதனை ஒட்டி ரெய்னிச் ஜூடுங் பத்திரிக்கையில் அவர் எழுதிய கட்டுரை திருப்புமுனையாக அமைந்தது. நிலம், உடைமை, பொருளாதாரம், சட்டம், உரிமை, போராட்டம் குறித்த பொருளாதாய ரீதியிலான மார்க்சின் ஆய்வு எழுத்துக்களின் முதல்படி இது எனலாம். அவர் வறிய மக்களை ஆதரித்து பிரஷ்ய மன்னனை விமர்சித்து எழுதிய கட்டுரைக்காக கைது செய்யப்படுகிறார். அதன் விளைவாக கைக்குழந்தையுடன் குடும்பத்துடன் மார்க்ஸ் பிரான்சுக்குக் குடிபெயர நேர்கிறது.
இரண்டாவது காட்சி மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ்சின் தந்தையும் ஏங்கெல்சும் பஞ்சாலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பெண்களுக்கிடையில் உரையாடல் தொடர்கிறது. பழுதுபட்ட இயந்திரத்தில் வேலைசெய்ததால் ஒரு பெண்ணின் கைவிரல்கள் துண்டுபட்டதால் இயந்திரச் சக்கரங்களை இணைக்கும் பெல்ட்டை பெண்கள் அறுத்து விடுகிறார்கள். “யார் அறுத்தது?” எனக் கேட்கிறார் ஏங்கெல்சின் தந்தை. ‘விரல்கள் வெட்டுண்ட பெண்ணுக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார் தொழிலாளியான மேரி பர்ன்ஸ். அவர் வேலையிலிருந்து அகற்றப்படுகிறார். ஏங்கெல்ஸ், மேரிபர்ன்ஸைத் தொடர்ந்து தொழிற்சாலையை விட்டு வெளியேறுகிறார். தந்தைக்கும் ஏங்கெல்சுக்குமான மனமுறிவு, ஏங்கெல்ஸ்–மேரிபர்ன்ஸ் உறவு, பிறகு ஏங்கெல்சின் இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்கத்தின் நிலை குறித்த ஆய்வு என நிகழ்வுகளை சுவாரசியமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
மார்க்ஸுக்கு வயது 26. ஏங்கெல்சுக்கு 24 வயது. ஐரோப்பாவின் இருவேறு நகரங்களில் வாழ்ந்துவந்த தீவிரமான இரு இளைஞர்கள் தங்கள் கம்யூனிசக் கனவை நோக்கி நகர்கிறார்கள். இந்த இருவரும் பாரிசில் அர்னால்டு ரூஜின் அலுவலகத்தில் சந்திக்கும் நிலையேற்படுகிறது. மார்க்ஸ் எழுதிய இரண்டு கட்டுரைகளுக்கு ரூஜ் இன்னும் பணம் தரவில்லை. மார்க்சுக்கு பணநெருக்கடி. வாடகைகூட தரமுடியாத நிலை. ஒரு பெண்குழந்தை. பணிப்பெண்ணுக்கு 2 மாத சம்பளம் பாக்கி. பணம் வேண்டும் என்று கேட்கத்தான் ரூஜிடம் வருகிறார் மார்க்ஸ். அவருக்கு முன்பே தன்வீட்டிற்கு வந்த ஏங்கெல்சை மார்க்சுக்கு அறிமுகப்படுத்துகிறார் ரூஜ்.
ஏங்கெல்சை மார்க்ஸ் ஏற்கனவே ஜெர்மனியில் ஒருமுறை சந்தித்திருக்கிறார். அவருக்கு ஏங்கெல்சின் பணக்காரத் திமிரும் அகந்தையும் பிடித்திருக்கவில்லை. ரூஜ் பணம் எடுக்க உள்ளறைக்குள் செல்கிற நேரத்தில் ஏற்கனவே நடந்த நிகழ்விற்காக ஏங்கெல்ஸ் மார்க்சிடம் வருத்தம்தெரிவிக்கிறார். அப்போது, எங்கல்சின் எழுத்துக்களை தான் படித்திருப்பதைக் குறிப்பிடும் மார்க்ஸ், நீ ஒரு மேதை என்கிறார். உனது ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ தன்னிகரில்லா நூல் என்கிறார் மார்க்ஸ். இவ்வாறு உரையாடிக்கொண்டே, ரூஜ் அறையிலிருந்து வருவதற்கு முன்பாகவே அவர்கள் இருவரும் அங்கிருந்து அகன்று விடுகின்றனர். மார்க்சை அவரது வீட்டிற்கு பத்திரமாகக் கொண்டுசேர்க்கிறார் ஏங்கெல்ஸ். மார்க்சின் அறையிலேயே ஏங்கெல்ஸ் தூங்கிப் போகிறார். இப்போது ஜென்னி ஏங்கெல்சுக்கு அறிமுகமாகிறார். மேரி பெர்ன்ஸ் ஜென்னிக்கு அறிமுகமாகிறார்.
இருவரின் சொந்த வாழ்வை அரசியல் முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. பிரான்சில் செல்வாக்கு பெற்ற புரூதோன் தலைமையில் தங்கள் கம்யூனிசக் கனவை புரட்சிகர ஸ்தாபனம் ஒன்றைக் கட்டமைத்து தத்துவார்த்தப் போரை முன்னெடுக்க முனைகின்றனர். மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் இருவரும் இரு வேறு நபர்களின் கருத்துக்களை எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது. ஒன்று, புரூதோன் மற்றும் பகுனின் போன்றவர்களின் அராஜகவாதம். மற்றொன்று, வெயிட்லிங் பேசிய கிறித்துவ சகோதரத்துவ சோசலிசம். இந்த அமைப்பினர் நடத்திய கூட்டங்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், மேரி பர்ன்ஸ் மற்றும் ஜென்னி கலந்து கொள்கின்றனர். மார்க்ஸ் கடுமையாக வாதிடும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் பிரஷ்ய மன்னரைக் கொலைசெய்யும் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து ஜெர்மனி தந்த அழுத்தத்தின் விளைவாக புரூதோன், மார்க்ஸ் உள்ளிட்ட புரட்சியாளர்கள் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். மார்க்சும் ஜென்னியும் இங்கிலாந்து செல்கிறார்கள்.
‘லீக் ஆஃப் ஜஸ்டிஸ்’ அமைப்பின் கூட்டத்தில் ஏங்கெல்ஸ், மார்க்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை முன்வைத்து உரையாற்றுகிறார். “இதுவரையிலான வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்று முன்வைக்கிறார். ‘முதலாளித்துவத்துடன் சகோதரத்துவம் பேண முடியாது’ என்று கிறித்துவ சகோதரத்துவ சோசலிசம் பேசியவர்களுக்கு பேரடியை கொடுக்கிறார். மேலும், ‘அவன்தான் நமது எதிரி’ என்றும், ‘வர்க்கப் போராட்டத்தில் இரத்தம் சிந்துதல் தவிர்க்கமுடியாதது’ என்றும் வாதிடுகிறார்.
“கம்யூனிஸ்ட் அறிக்கை” அச்சிடப்படுவதோடு இப்படம் நிறைவுறுகிறது. (1848 பிப்ரவரி மாதம் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ வெளியானது)
இப்படத்தின் முடிவில் ரஷ்ய, சீன, கியூப, ஆப்ரிக்க புரட்சிகளின் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. சில தலைவர்களின் படங்களும் சில காணொளிகளும் காட்டப்படுகின்றன. அவ்வரிசையில் தோழர். லெனின் படம் விடுபட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதை தவிர்த்து ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்தப் படம் ஒரு பொக்கிஷமே.
மேற்கோள்கள்
- தி கார்டியன் இதழில் பீட்டர் பிராட் ஷா எழுதிய விமர்சனம்
- படச்சுருள்இதழில்– யமுனா ராஜேந்திரன் எழுதிய விமர்சனம்
- விக்கிப்பீடியா – ராவுல் பெக் பற்றிய தொகுப்பு
Leave a Reply