தனித்துவம் மிக்க நவம்பர் புரட்சி


 

கே. பாலகிருஷ்ணன்

நவம்பர் புரட்சி நடந்து ஒரு நூறாண்டு கடந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள் நவம்பர் 7, 2018.

உலகத்தில் பல ஆட்சிமாற்றங்கள், ராணுவப் புரட்சிகள், மக்கள் புரட்சிகள் அளவற்று நடந்திருந்த போதிலும் இவற்றில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்ட தன்மை கொண்டது ரஷ்ய நாட்டில் 1917 நவம்பரில் நடந்த நவம்பர் புரட்சியாகும். மனித குலத்தில் நீடித்து நிலைத்து வந்த சுரண்டல் முறைக்கு முடிவு கட்டி, சுரண்டல் ஆட்சிமுறையை சுட்டெரித்து தொழிலாளி மற்றும் உழைப்பாளி மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள்தான் நவம்பர் புரட்சி தினமாகும்.

மனித குல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை ரஷ்ய நாட்டு வரலாற்றில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலக வரலாற்றில் நடந்த புதுமையான நிகழ்வு இது.

முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்த மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தி சோஷலிசத்தை நிறுவும் பாட்டாளி வர்க்கப் புரட்சி முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளில்தான் நடைபெறும் என எதிர்பார்த்தார்கள். 1882-ம் ஆண்டு காட்ஸ்கிக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தில் கூட, இந்தியா, எகிப்து, அல்ஜீரியா போன்ற நாடுகளில் புரட்சி வந்தால் நல்லதுதான். ஆனால் அது சோஷலிசப் புரட்சியாக அமைவதற்கான வாய்ப்புகள் குறைவே என எழுதினார். அதாவது சோஷலிசப் புரட்சி என்பது ஐரோப்பிய நாடுகளிலேயே வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலேயே சாத்தியம் என அவர் கருதினார்.

ஆனால் 1917 நவம்பர் 7-ம் நாள் ரஷ்ய நாட்டில் சோஷலிசப் புரட்சி நடைபெற்றது. ரஷ்யா ஒரு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடல்ல. அப்போது உலக அரங்கில் ரஷ்யா ஒரு பின்தங்கிய  நாடாகவே இருந்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அடுத்த பெரிய நாடாக ரஷ்யா இருந்தபோதிலும் அதன் தனிநபர் வருமானம் 1913-ல் 102 ரூபிள். அதே சமயம் இங்கிலாந்து 463, பிரான்ஸ் 355, ஜெர்மனி 262 ரூபிள்களாகும். ரஷ்யாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி இருந்தது. அதன் தேசிய வருமானத்தில் 51.3 சதவீதம் வேளாண் வருவாய். தொழில் வருமானம் 28.6 சதவீதம். மொத்த மக்கள் தொகையில் 80 சதவீத மக்கள் விவசாயத்தைச் சார்ந்தவர்கள். ஆலைத் தொழிலாளர்கள் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் மட்டுமே. மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்கள் 5 சதவீதத்தினர் மட்டுமே. வேளாண் துறையில் அதிகமான நிலங்கள் நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டில் குத்தகை விவசாயிகள் சாகுபடியில் இருந்தன.

மார்க்சிய கண்ணோட்டத்தில் மிகவும் பின்தங்கிய, நிலப்பிரபுத்துவ- ஜார் மன்னர்களின் கீழ் ரஷ்யா இருந்தது. இந்நாட்டில் உலகின் முதன் முதலான சோஷலிசப் புரட்சி நடந்தது என்பதுதான் சோவியத் நவம்பர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் ஆகும். இது எப்படி நடந்தது? இதற்கான வியூகங்கள் எப்படி அமைக்கப்பட்டன?

முதலாளித்துவ வளர்ச்சி பின்தங்கிய ரஷ்ய நாட்டில் சோசலிச புரட்சியை நடத்துவதற்கான சரியான போர்த்தந்திரத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடத்தியதுதான் உலக புரட்சிகர இயக்கத்திற்கு லெனின் வழங்கிய மகத்தான பங்களிப்பாகும். நவம்பர் புரட்சியைத் தொடர்ந்த அடுத்த அரை நூற்றாண்டில் மிகவும் பின் தங்கிய நாடுகளான மக்கள் சீனம், கியூபா, கொரியா, வியட்நாம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சியின் மூலம் சோஷலிசம் அரசுகள் அமைக்கப்பட்டன. 1970-ம் ஆண்டு வாக்கில் உலக சோஷலிச முகாமில் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாழும் அளவிற்கு வலுவான முகாமாக சோஷலிசம் முகாம் அமைந்திருந்தது. சோவியத் நாட்டில் நடைபெற்ற நவம்பர் புரட்சியின் முன்னுதாரணம் இல்லாமல் இருந்திருந்தால் இந்நாடுகளில் சோஷலிச புரட்சிகள் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக் குறிதான்.

கார்ல் மார்க்ஸ் தனது காலத்தில் முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சியைப் பற்றி பல்வேறு பரிமாணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் உள்ளடக்கம், வளர்ச்சி போன்ற அனைத்தையும் உலகுக்குப் படம் பிடித்துக் காட்டினார். அதனைத் தொடர்ந்து மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம் என்ற அடிப்படையில் முதலாளித்துவ வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்திய லெனின் அவரது காலத்தில் முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்துள்ளது என்பதை விளக்கினார். ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த உலக முதலாளித்துவ சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணி உடைபட வாய்ப்புள்ளது என்ற முடிவுக்கும் லெனின் வந்தார். இந்த அடிப்படையில் 19-ம் நூற்றாண்டின் பொருளாதார நெருக்கடி, முதல் உலக யுத்த முடிவில் ரஷ்யா சந்தித்திருந்த உச்சகட்ட நெருக்கடிகள் ஆகியவைகளால் பலவீனமான கண்ணியாக இருந்த ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற முடியும் என்று கருதினார்.

ஐரோப்பிய நாடுகளில் 17-ம் நூற்றாண்டில் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகள் மூலம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. எனவே, எல்லா நாடுகளிலும் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்கித்தான் புரட்சி நடத்திட வேண்டும் என்ற கருத்தோட்டமே நிலவியது.

இதற்கு மாறாக, முதலாளித்துவம் வளர்ச்சியடையாத பின் தங்கிய நாடுகளில் முதலாளித்துவம் தலைமை தாங்கி புரட்சி நடத்தும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு லெனின் வந்தார். மேலும், இத்தகைய பின் தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்த்து புரட்சியை நடத்தும் அளவிற்கு வலுப்பெறவில்லை. எனவே இந்நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்த்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி நடத்துவதன் மூலம் வெற்றிபெற முடியும் என்ற முடிவுக்கும் லெனின் வந்தார். முதலாளித்துவ ஜனநாயக புரட்சி தொடர்பாக லெனின் உருவாக்கிய இப்போர்த்தந்திரம் இதற்கு முன் எப்போதும் உருவாக்கப்படாத முற்றிலும் புதிய போர்த்தந்திரமாகும். இப்பிரச்சனை குறித்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் (சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) எதிரும் புதிருமான விவாதங்கள் நடந்து கட்சி போல்ஷ்விக், மென்ஷ்விக் என இரண்டு பிரிவாக கருத்துப் போராட்டம் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளும் தனித்தனியாக மாநாடுகளை நடத்தி தங்களது அணுகுமுறைகளை தீர்மானித்தன.

“ஜனநாயகப் புரட்சியில் சமூக -ஜனநாயக வாதிகளின் இரண்டு போர்த்தந்திரங்கள்” என்ற புகழ் மிக்க கட்டுரையில் இரண்டு போர்த் தந்திரங்களைப் பற்றி லெனின் விரிவாக எழுதியுள்ளார். ரஷ்யாவில் 1905-ம் ஆண்டு நடைபெறும் முதலாளித்துவ ஜனநாயகப் புர்ட்சி என்றாலும் அப்புரட்சியில் பாட்டாளி வர்க்கம் தீர்க்கமான பங்களிப்பை ஆற்ற வேண்டும் எனவும் அப்புரட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் எனவும் இவற்றை நிறைவேற்றுவதன் மூலம் ரஷ்யாவில் சோஷலிசப் புரட்சிக்கு வித்திட முடியும் என அழுத்தமான முடிவுகளுக்கு லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் தொழிலாளி வர்க்கம் சிரத்தை காட்டக் கூடாது எனவும் இப்புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம்தான் தலைமை தாங்க வேண்டும் எனவும் மென்ஷ்விக் பிரிவு கூறியது. இப்புரட்சியின் மீது ஒருமித்த அணுகுமுறை இல்லாதது உள்பட பல காரணங்களால் 1905-ல் நடந்த இப்புரட்சி தோல்வியில் முடிந்தது.

குறிப்பாக ஜார் ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்-விவசாயிகள் நிலையான கூட்டணி வலுவாக ஏற்படவில்லை. நிலச்சுவான்தார்களை எதிர்த்து விவசாயிகள் கலகம் செய்து வந்தனர். ஆனால் நிலச்சுவான்தார்களுடன் கைகோர்த்துக் கொண்டிருந்த ஜார் அரசனை வீழ்த்தாத வரையில் நிலச்சுவான்தார்களை வீழ்த்த முடியாது என்பதை அவர்களால் உணரமுடியவில்லை. மேலும் விவசாயிகளின் மகன்களே அதிகமாக ராணுவத்தில் இருந்தனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இவர்கள் ஜாருக்கு உதவியாக இருந்தனர். தொழிலாளி வர்க்க முன்னணிப் படையாக இருந்த சமூக ஜனநாயக கட்சி போல்ஷ்விக் – மென்ஷ்விக் என இரு கூறுகளாக பிளவுபட்டுக் கிடந்தது. மேலும் ஜார் மன்னன் புரட்சியை ஒடுக்குவதற்கு ரஷ்யாவில் மூலதனம் இட்டிருந்த ஐரோப்பிய முதலாளிகள் ஜார் மன்னனுக்கு ஆதரவாக உதவினர். மேலும் ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றால் ஐரோப்பிய நாடுகளுக்கும் அது பரவும் என்ற அச்சமும் அவர்களை புரட்சியை ஒடுக்க உதவிக்கரம் நீட்டக் காரணமாக இருந்தது. இக்காரணங்களால் ரஷ்யாவில் முதற்கட்ட புரட்சி தோல்வியில் முடிந்தது.

முதல் புரட்சி தோல்வியினைத் தொடர்ந்து போல்ஷ்விக்குகள் அடுத்த கட்டப் புரட்சிக்கு விரிவான தயாரிப்புப் பணிகலில் ஈடுபட்டு வந்தனர். தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது, விவசாயிகள் பிரச்சனைகளில் நிலச்சுவான்தார்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் முனைப்பு காட்டப்பட்டன. 1914-ம் ஆண்டு தொடங்கிய முதல் உலக யுத்தத்தில் ரஷ்யா ஈடுபட்டது. ரஷ்யா மீது ஜெர்மனி தாக்குதல் தொடுத்தது. உலக நாடுகளை கூறுபோடுவதற்காக நடந்த யுத்தத்தை போல்ஷ்விக் எதிர்த்தது. யுத்தம் மூண்ட விநாடி முதலே தேசப் பாதுகாப்புக்காக யுத்தம் ஆரம்பிக்கப்படவில்லை; மாறாக அந்நியப் பிரதேசங்கலை கைப்பற்றுவதற்காகவே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது என எதிர்த்தது. ஜார் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிலச்சுவான்தார்களை எதிர்த்து முதலாளிகளை எதிர்த்து, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உறுதியான போராட்டத்தை போல்ஷ்விக் கட்சி நடத்தியது.

யுத்தத்தை எதிர்த்து போல்ஷ்விக் கட்சி உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில் இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்தது, ரஷ்ய நாட்டிலும் வேறு பல நாடுகளிலும் உள்நாட்டில் உள்ள மக்களை யுத்தத்திற்கு ஆதரவாக திரட்ட ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வேலை செய்தார்கள். இச்சதிக்கு உள்நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் மட்டமின்றி அந்தந்த நாடுகளிலிருந்த சோசலிஸ்டுகளும் தங்கள் அரசுக்கு ஆதவளிக்கும் நிலையினை மேற்கொண்டார்கள். அந்தந்த நாட்டு ஏழை ராணுவ வீரர்களால் அடுத்த நாட்டு ராணுவ வீரர்கள் சுட்டு அழிக்கப்படுமா பற்றி கொஞ்சமும் அவ்வியக்க தலைவர்கள் கவலைப்படாத சந்தர்ப்பவாத நிலையினை மேற்கொண்டார்கள், இதனால் உலகம் முழுவதும் இருந்த சோசலிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டுவதற்காக 1889ம் ஆண்டு பிரடரிக் ஏங்கெல்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘இரண்டாவது அகிலம்’ என்ற சர்வதேச அமைப்பும் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதில் இடம் பெற்றிருந்த அந்தந்த நாட்டு சோசலிஸ்ட் தலைவர்கள் பாட்டாளி வர்க்க சர்வதேசிய முழக்கத்திற்கு மாறாக அந்தந்த நாட்டு தேசிய வெறிக் கொள்கை இறையானார்கள். பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்து அந்தந்த நாட்டு முதலாளி வர்க்கத்துக்கு காவடி தூக்கும் நிலைமைக்கு உள்ளானர், இதன் விளைவாய் “இரண்டாவது அகிலம்” கலைந்து போனது.

இத்தகைய சூழலில் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி மட்டுமே யுத்தம் குறித்த உறுதியான நிலை எடுத்து உள்நாட்டில் உண்மையான சமாதான நிலைக்கு பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றி பெற வேண்டுமெனவும், ஏகாதிபத்திய முதலாளித்துவ ஆட்சியை அடியோடு சாய்ப்போம் என போர் முழக்கப்பட்டது.

யுத்த முடிவின் ஜார் மன்னனுக்கு தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டது. உள்நாட்டில் பொருளாதார சீர்குலைவு தீவிரமடைந்தது. உணவுப் பொருட்கள் பஞ்சம், தொழிற்சாலைக்கு மூலப் பொருட்கள் பற்றாக்குறை பல ஆயிரம் ஆலைகள் மூடல், பல்லாயிரம் தொழிலாளர் வேலையிழப்பு என நிலைமை அனைத்து துறையிலும் மோசமடைந்தது. சகிக்க முடியாத இந்த நிலைமைகளிலிருந்து மீள்வதற்கு ஜார் மன்னனது ஆட்சியை அடியோடு வீழ்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்தார்கள்.

ஜார் மன்னனை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமடைந்தன. நிலைமையை சரியாக கணித்திருந்த போல்ஷ்விக்குகள் விரைந்து களமிறங்கினார்கள். 1917 பிப்ரவரி 23 (மார்ச் 8  அன்று) போல்ஷ்விக் கட்சி லட்சக்கணக்கான பெண்களை திரட்டி போராட்டத்தில் இறங்கியது. பட்டினி பசியை எதிர்த்தும் அதற்கு காரணமான ஜார் மன்னணை எதிர்த்து பெண்கள் தொழிலாளர்கள் வீடுகளை விட்டு புறப்பட்டு வீதிகள் எங்கும் பேரணியாக சென்றார்கள். இந்த அரசியல் போராட்டம் ஆயுதம் தாங்கி எழுச்சியாக புறப்பட்டது. ராவ உடைதணிருந்த விவசாயிகள் வீட்டு பிள்ளைகள் இம்மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் இரண்டற கலந்தார்கள். இவர்களது துப்பாகிகள் முதன் முறையாக ஜார் மன்னனுக்கு எதிராக வெடித்தன. 1917ல் நடந்த இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது.

புரட்சி வெற்றி பெற்ற பின்னணியில் ஏற்பட்ட இடைக்கால அரசு புரட்சிக்கு விரோதமாக திரைமறைவு தில்லு முல்லுகளில் ஈடுபட்டார்கள். இதனை அம்பலப்படுத்தியும் புதிய கொள்கை திட்டத்தை லெனின் வெளியிட்டார். அது “ஏப்ரல் கொள்கை” என பிரகடனப்படுத்தியது. இந்த முறை “ஏப்ரல் கொள்கை” முதலாளித்துவ புரட்சி கட்டத்துக்கு மாறுதலடைந்து சோசலிசப் புரட்சி கட்டத்துக்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் மிகவும் தெளிவான புரட்சிகரமான பாதையை காட்டியது.

“புரட்சியின் முதல் கட்டத்தில் பட்டாளிகளிடம் அமைப்பு பலம் போதிய அளவு இல்லை. அதனால் அரசியல் அதிகாரத்தை புரட்சியின் முதல் கட்டம் முதலாளி வர்க்கத்திடம் ஒப்படைத்தது. புரட்சியின் இரண்டாவது கட்டம் பட்டாளிகளும் விவசாய வர்க்கத்தில் மிக மிக ஏழையாக கீழ்படிகளில் உள்ளவர்களிடம் அரசியல் அதிகாரம் ஒப்படைக்க வேண்டும்”என புரட்சியின் இரண்டாவது கட்டத்தின் நோக்கத்தினை லெனின் விளக்கினார். மேலும் தற்காலிக இடைக்கால அரசுக்கு எந்த ஆதரவும் கொடுக்க கூடாது. தேசம் முழுவதும் இடைக்கால சர்க்காருக்கு மாற்றாக மேலிருந்து கீழ் வரை தொழிலாளர்களையும் விவசாய கூலிகளின் பிரதிநிதிகளையும், விவசாய பிரதிநிதிகளையும் கொண்ட சோவியத்துகளை அமைக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

புரட்சியின் இரண்டாம் கட்டத்தை நோக்கிய பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு நவம்பர் 7ம் தேதி புரட்சி வெற்றி பெற்றது.

விவசாயிகளும் சோஷலிசப் புரட்சியும்

இதற்கு முன்பு பல ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளில் விவசாயிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. 1789-ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியில் விவசாயிகள் போராட்டங்கள் நடந்தபோதிலும் அவர்களுக்கான தனித்த பங்களிப்பு ஏதும் இல்லை. இப்புரட்சியில் முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பை அடித்து நொறுக்கி விவசாயிகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளித்தது. இதர வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சியின் போது இதுவே நடந்தது.

கார்ல் மார்க்ஸ் காலத்தில் 1871-ல் நடந்த பாரீஸ் கம்யூன் எழுச்சி ஏற்பட்டு தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் முதன்முறையாக ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே இப்புரட்சி முறியடிக்கப்பட்டது. இப்புரட்சியை முறியடிக்க பிரெஞ்சு குடியரசுத் தலைவர் தலைமையிலான பிரெஞ்சு ஆட்சியாளர்கள் விவசாயிகளை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டி போராட்டம் நடத்தியதும் முக்கிய காரணமாகும். அவர்களது பிரச்சாரத்தில் தற்போது முதலாளிகள் சொத்துரிமையின் மீது தாக்குதல் தொடுக்கும் தொழிலாளி வர்க்கம் அடுத்த கட்டத்தில் விவசாயிகளின் சொத்துரிமை மீதும் தாக்குதல் நடத்துவார்கள் என்பது மையமாக இருந்தது.

இவ்வடிப்படையில் பிரஞ்சு ஆட்சியாளர்கள் விவசாயிகள் ஆதரவோடு பாரீஸ் கம்யூன் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி அதை வீழ்த்தினார்கள்.

இப்படிப்பினைகளை கணக்கில் கொண்டே ரஷ்ய நாட்டில் நடைபெறவுள்ள முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கும் பாத்திரத்தை நிறைவேற்ற உறுதியாக போராடக் கூடிய வர்க்கம் பாட்டாளி வர்க்கம் தான். அதனுடைய புரட்சி போராட்டத்தில் விவசாய மக்கள் சேர்ந்தால் தான் ஜனநாயகத்திற்கான வெற்றிகரமாக போராடும் வீரனாக அதனால் இருக்க முடியும் என திட்டவட்டமாக லெனின் கூறினார். அந்த வகையில் தொழிலாளி வர்க்கத்தின் இயற்கையான கூட்டாளியாக விவசாயிகள் வர்க்கம் திகழும் என்றார்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி வரலாற்றில் லெனின் கையாண்ட போர் தந்திரம் புதியதோர் பாதையாகும். இதுகாறும் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளில் முதலாளித்துவ வர்க்கமே கதாநாயக பாத்திரத்தை வகிக்கும் தொழிலாளி வர்க்கமும் – விவசாயிகள் வர்க்கமும் – துணை கருவிகளாகவும் பார்வையாளர்களாகவும் இருந்தனர். வரலாற்றில் முதன் முறையாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிலும் அதனை தொடர்ந்து சோசலிச புரட்சியிலும் தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயிகள் வர்க்கத்தையும் கதாநாயகர்கள் பாத்திரம் வகிக்க செய்த போர் தந்திரம் நவம்பர் புரட்சிக்கு லெனின் வகுத்தளித்த போர் தந்திரமாகும்.

அனைத்துக்கும் மேலாக வரலாறு நெடுகிலும் புறக்கணிக்கப்பட்டவர்களான விவசாய வர்க்கம் புரட்சியில் முக்கிய பங்காளியாக நிர்மானித்தது விவசாயி வர்க்கத்தின் புரட்சி கர போர்க்குணத்துக்கு வழங்கப்பட்ட வரலாற்று ரீதியான அங்கீகாரமாகும்.

லெனின் வகுத்தளித்த இந்த தனித்துவமான போர்த் தந்திரமே சோவியத் நாட்டின் சோசலிச புரட்சியின் தனித்துவமான போர்த் தந்திரம் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. 1917 நவம்பர் 8ம் நாள் புரட்சி வெற்றி பெற்ற அடுத்த நாள் சோவியத் அரசு சமாதானத்தைப் பற்றிய சட்டத்தை முதலில் நிறைவேற்றியது. இதன் மூலம் யுத்தத்தை நிறுத்தி சமான உடன்படிக்கை செய்து கொள்ள யுத்தம் புரிந்த நாடுகளை கேட்டுக் கொண்டது. அன்று இரவே நிலம் தொடர்பான சட்டத்தையும் நிறைவேற்றியது. நிலப்பிரபுக்கு சொந்தமான நில உரிமை நஷ்ட ஈடு ஏதுமின்றி இன்றோடு ஒழிக்கப்பட்டது என அச்சட்டம் பிரகடனப்படுத்தியது. மேலும் நிலச்சுவான்தாரர்கள், ஜார் அரசனின் குடும்பத்தை தேர்ந்தவர்கள் மற்றும் மாதா கோவில்கள், மடங்கள், முதலாளித்துவக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பாட்டாளிகள் விவசாயிகள் எல்லோரும் தங்கள் இஷ்டப்படி உபயோகப்படுத்தப்பட்டதுக்கு அளிக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் படி 40 கோடி ஏக்கருக்கு மேல் விவசாய வர்க்கம் பெற்றது. இச்சங்கத்தின் படி ஆண்டுக்கு 50 கோடி தங்கள் ரூபிள் இதுவரை நிலச்சுவான்தாரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த குத்தகை இனி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சுரங்க மூலப் பொருள்கள் காடுகளும் நீர் நிலைகளும் பொதுமக்கள் சொத்துக்களாகின.

சோவியத் நாட்டில் உருவாக்கப்பட்ட தொழிலாளி, விவசாயி கூட்டணிதான் சோசலிச புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது மட்டுமன்றி புரட்சி வெற்றிக்குப் பின்னர் தொழிலாளர் விவசாயிகளது தோளில் ஏற்றப்பட்டு வந்த சுரண்டல் நுகத்தடிகள் நொறுக்கப்பட்டன என்பதை சோவியத் புரட்சியின் படிப்பினையாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s