மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உழைக்கும் வர்க்கமும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகமும்


(குரல்: அஸ்வினி)

பேரா. ஹேமா

(இக்கட்டுரை கட்சியின் அன்றைய மத்தியக் குழு உறுப்பினர் தோழர் ராமதாஸ் ஆங்கில மார்க்சிஸ்ட், ஏப்ரல் – ஜூன், 1984 இதழில் எழுதிய ‘Working Class and Bourgeois Parliamentary Democracy’ என்ற கட்டுரையின் சில பகுதிகளை பயன்படுத்தியும் தழுவியும் எழுதப்பட்டது – ஆசிரியர்)

அவ்வப்பொழுது சங் பரிவாரை சேர்ந்தவர்களும் வேறு சிலரும் இந்தியாவில் தற்போது நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக முறையை மாற்றி  குடியரசுத் தலைவர்  ஆட்சி செய்யும் முறையை (Presidential form of government)) நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர். இதன் பின்னே ஒளிந்திருப்பது அரசு அதிகாரங்கள் அனைத்தையும் தம் கைக்குள் வைத்திருக்கும் வகையில் ஒரு எதேச்சாதிகார அரசை அமைக்கவேண்டும் என்ற சங் பரிவார  நோக்கம்தான்.

ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமின்றி வேறு பலரும் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் எதேச்சாதிகாரத்தை ஆதரிப்பவர்கள் அல்ல; ஆனால்,  இன்று நாடு சந்திக்கும் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்று எண்ணுகின்றனர். ஆனால் மேற்கூறிய சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணம், ஆளும் வர்க்கங்கள் பின்பற்றி வரும், திவாலாகிப் போன முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சிப் பாதைதான் என்பதை இவர்கள்  புரிந்து கொள்ளவில்லை. “நக்சல்” இயக்கத்தினரோ, இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர். இடதுசாரி அதிதீவிரவாதிகளைப் பொருத்தவரை – பிரிட்டிஷாரிடமிருந்து அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள்  தரகு” முதலாளிகள் – என்றும், இப்போது நம் முன் உள்ள ஒரு முக்கியப் பணி, ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் இந்தத் தரகு முதலாளிகளை, அதிகாரத்திலிருந்துத் தூக்கி ஏறிய வேண்டியதேயாகும் என்றும் கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் முதலாளித்துவ நாடாளுமன்றமோ மற்ற ஜனநாயக நிறுவனங்களோ பயனற்றவை. மேலும் சுதந்திரமாகச் செயல்படும், உழைக்கும் வர்க்கத்திற்கான கட்சியோ தொழிலாளிகள்-விவசாயிகள் போன்றவர்களைத் திரட்டி வெகுஜன ஸ்தாபனங்களை அமைப்பதோ தேவையற்றவை. மக்கள் மத்தியில் பணி செய்வதும் தேவையில்லை என்று எண்ணுகிறார்கள். இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் தங்கள் முதல் எதிரி என்று கருதி அந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை கொலை செய்தார்கள். அவர்களுடைய இயக்கமே, பல்வேறு வகையில் துண்டாகச் சிதறியது.

முதலாளித்துவ நாடாளுமன்றத்தை விமரிசிக்கும் வேறு சிலர், “மார்க்சிஸ்ட் கட்சி தனது புரட்சிகரப் போக்கைக் கைவிட்டுவிட்டது; மற்ற நாடாளுமன்றக் கட்சிகளைப் போலவே செயல்படுகிறது” என்று கூறுகின்றனர். மக்களைப் புரட்சிக்காக அணி திரட்டுவதை விட்டு, நாடாளுமன்ற ஜனநாயக செயல்பாடுகளிலும், மாநில நிர்வாகங்களிலும்  ஈடுபட்டு, அரசு நிர்வாகத்திலும் கவனம் செலுத்துகின்றனர். இதனால் முதலாளித்துவ ஜனநாயக அமைப்புதான் லாபமடைகிறது; மக்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது சில பிரமைகள் ஏற்படுகின்றன என்றும் கூறுகின்றனர்.

மேற்கூறிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கையில், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே ஆளும் வர்க்கம் உலைவைக்க முயன்று வருகிறது. இந்தியாவில், பல பலவீனங்கள் இருந்தாலும், நிலைமைகள் தொடர்ந்து மோசமாகி வருகின்றன என்றாலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகள்  இந்த  அமைப்புகள் இந்தியாவில் ஆழமாக வேர்விட்டு நிலை கொள்ளவில்லை என்றாலும், இன்றும் பலவீனமாகத்தான் உள்ளன என்றாலும் அவை இன்னும் இயங்கித்தான் வருகின்றன. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, உழைக்கும் வர்க்கம், இந்த அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். உழைக்கும் வர்க்கம், தன் கோரிக்கைகளை வைத்துப் போராடி உரிமைகளைப் பெறுவதற்கு இந்த அமைப்புகள் மேடையாக உள்ளன. இவற்றில் செயல்படுவது முதலாளித்துவ ஜனநாயகத்தைத் தாண்டிப் போவது என்ற தொழிலாளி வர்க்க போராட்ட நோக்கின் ஒரு பகுதியாகும். ஜனநாயக அமைப்புக்களைப் பாதுகாக்கும் முக்கியப் பணி கட்சிக்கு உண்டு. இது உழைக்கும் வர்க்கத்தின் கட்சி. இத்தகைய கடமை கட்சிக்கு இருக்கும்போது, முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகளையே முற்றுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிடுவது தவறு. இந்த அமைப்புகளின் மூலம், இன்னும் அதிக மக்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற முடியும்; அதன் மூலம் ஆளும் கட்சியின் மக்கள் விரோதக் கொள்கைகளை அடையாளம் காட்ட முடியும்; ஆளும் கட்சியின் எதேச்சாதிகாரப் போக்கை மக்களுக்கு விளக்க முடியும். இதே நேரத்தில், மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அணிதிரண்டுவர முற்படுகின்றனர். வகுப்புவாத சக்திகள் மக்களின் கோபத்தைத் திசை திருப்ப என்னென்ன இயலுமோ அவ்வளவையும் செய்து வருகின்றன. மக்களின் ஒற்றுமையைக் குலைத்து, மதம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் மக்களைக் கூறுபோடுகின்றன.

ஆளும் கட்சியே நாட்டின் சிக்கல்களுக்கெல்லாம் ஏதோ நாடாளுமன்ற ஜனநாயகமே காரணம் என்று கூறி, இந்தச் சிக்கல்களைக் களைய குடியரசுத் தலைவர் ஆட்சி முறையே சிறந்தது என்று கூறுகிறது. இவ்வாறு ஆட்சிமுறையை மாற்றி ஒரு ஏதேச்சாதிகார அரசை நிறுவ முயல்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மக்களின் அதிருப்தியைச் சரியான திசையில் திருப்பி அதன் மூலம் ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமான கொள்கைகளுக்கும், எதேச்சாதிகாரத்திற்கும் எதிரான போராட்டங்களை வலுப்படுத்தும் பணி உழைக்கும் வர்க்கக் கட்சியைச் சேர்ந்தது. இத்தகைய பணிகளை நிறைவேற்ற நாடாளுமன்றமும், ஏனைய ஜனநாயக அமைப்புகளும் உதவும்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தவரையில், தேர்தல்கள் மூலமாக மட்டுமோ, கட்சியின் பிரதிநிதிகள், நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும், மாநில அரசுகளிலும் பங்கேற்றுப் பணிபுரிவதாலோ, உழைக்கும் வர்க்கம், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியாது என்பதை நன்கு உணர்ந்தே செயல்படுகிறது. ஆனால் அரசியல் ரீதியில் சில உடனடி இலக்குகளை நாம் அடைய வேண்டியுள்ளது. இத்தகைய இலக்குகளில் சில: ஆளும் வர்க்கங்களின் முதன்மையான கட்சியைத் தனிமைப்படுத்துவது; மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செய்வது; உழைப்பாளி மக்களை முதலாளித்துவ கொள்கைப் பிடிப்பிலிருந்து விடுவிப்பது; மக்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பது; பெருமுதலாளிகளின் தலைமையிலான இந்த முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ  அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்துவது போன்றவை. இந்த இலக்குகளுக்கான போராட்டங்கள் வெளியே நடக்கும்போதே மக்கள் மத்தியில், புரட்சிகர அரசியல் தத்துவார்த்த பணிகள் நடைபெறும் அதே நேரத்தில், மக்களைச் சுரண்டும் அரசையும் வர்க்கங்களையும் மக்களிடையே தோலுரித்துக்காட்டும் பணியைச் செய்ய நாடாளுமன்றத்தையும், சட்டமன்றங்களையும் பயன்படுத்த  வேண்டியுள்ளது. மார்க்சிய-லெனினியம் கற்றுக்கொடுத்த பாடங்களின் அடிப்படையில், முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புகளைப் புரட்சிகரமான முறையில் கட்சி பயன்படுத்துகிறது. புரட்சிகள் நாம் அறைகூவல் விடுத்தவுடன் நடைபெறுவதில்லை. புரட்சி நடைமுறையில் வருவதற்கு முதலில் மக்களின் மன நிலையில் புரட்சி ஏற்படவேண்டும். அதற்கு மக்களுக்குப் புரட்சி தேவை என்பதைக் கற்பிக்க வேண்டும். இந்த இலக்கை அடைய முதலாளித்துவ நாடாளுமன்ற, சட்டமன்றங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். நாடாளுமன்ற  சட்ட மன்றப் பணிகளை இம்மன்றங்களுக்கு  அப்பாற்பட்ட பணிகளோடு இணைத்துச் செயல்பட வேண்டும்;மக்களிடையே செய்யும் புரட்சிப் பணிக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுவது சரி. ஆனால் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திப் புரட்சியை முன்னெடுத்துச்செல்ல முயலும் பணிகளைக் கேலிசெய்வது தவறானது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளைப் பயன்படுத்துவது கம்யூனிஸ்டுகளின் கட்டாயமான கடமை என்று மார்க்சிய-லெனினியம் போதிக்கிறது .

மார்க்சியம் – லெனினியம் கற்பிப்பது என்ன?

1840-களில் மார்க்ஸ், எங்கல்ஸ் இருவரும், உழைக்கும் வர்க்கத்தினர் அன்றைய காலகட்டத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று கூறினர். நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க வேண்டும்; எழுத்துரிமை வேண்டும்; நியாயமான முறையில் ஜூரி முறைப்படி வழக்குகள் நடத்தப்பட வேண்டுமென்று கோரி, மக்களைப் பிரதிநிதித்துப்படுத்தும் ஆட்சி கூட்டம் கூடிப் பேச்சு உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளுக்காக முதலாளி  வர்க்கம் போராடும்போது, உழைக்கும் வர்க்கம் அவர்களுக்கு உதவியாகப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றனர். இப்போராட்டங்களில் பங்கேற்கும்போது உழைக்கும் வர்க்கம் மறைமுகமாகத் தன்னுடைய வர்க்கத்தின் நலன்களுக்காகவும் போராடுகிறது என்றும் சுட்டிக்காட்டினர். ஜனநாயகப் போராட்டங்களுக்கும். சோசலிசத்திற்கும் இடையேயுள்ள நெருக்கமான தொடர்பை ஒரு முக்கியமான அம்சமாக மார்க்ஸ் எடுத்துக் கூறினார். இந்தக் கோட்பாடு, அன்றும் இன்றும் ஒரு புரட்சிகர உழைப்பாளர் கட்சியின் போராட்ட உத்தியாகத் திகழ்கிறது.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் வழிகாட்டுதல், ரஷ்யப் புரட்சியின் அனுபவம் இவற்றின் அடிப்படையில் லெனின் உழைக்கும் மக்களின் கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்பதையும், நாடாளுமன்றத்தைப் போன்ற முதலாளித்துவ அமைப்புகளில் பங்கேற்பதையும் ஓர் அரசியல் கடமையாகவே குறிப்பிடுகிறார். முதலாளித்துவ ஜனநாயகத்தில் கிடைக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, அதே அமைப்புகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறார். முதலாளித்துவ குடியரசு என்பது வர்க்க ஆட்சியின் கடைசி அமைப்பு. மேலும் இந்த அமைப்பு, முதலாளிவர்க்கத்தை எதிர்த்துப் போராடும் உழைக்கும் மக்களுக்கு ஒரு வசதியான மேடையை அமைத்துத் தருகிறது என்ற காரணங்களுக்காகவே சமூக ஜனநாயகவாதிகள் முதலாளித்துவ குடியரசை அனுமதிப்போம் என்று கூற அஞ்சமாட்டார்கள் என்கிறார் லெனின்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைப்பதையும் லெனின் சாடினார். தொழிலாளர் புரட்சியும் அதனை விட்டு விலகிய கவுட்ஸ்கியும், அரசும் புரட்சியும் போன்ற நூல்களில் முதலாளித்துவ அரசின் வர்க்கத் தன்மையைத் தொழிலாளி வர்க்கம் மறந்திடச் செய்வோரையும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்க போராட்டத்தை குலைத்தவர்களையும் கடுமையாகச் சாடினார். மார்க்சிய-லெனினியவாதிகள் இந்த வழிகாட்டுதலை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற, ஜனநாயக அமைப்புக்களை ஒதுக்காமல், அவற்றை உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், இந்த அரசுகளின் வர்க்கத் தன்மையைத் தோலுரித்துக்காட்ட வேண்டும். நாடாளுமன்றப் பணிகள் வர்க்கப் போராட்டத்திற்குத் துணைபோவதாக இருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத்தை முற்றாகப் புறக்கணிப்பது தவறு  என்றார் லெனின்.

‘அமெரிக்க மற்றும் ஐரோப்பியத் தொழிலாளர்களுக்கு எழுதும் கடிதம்’- என்ற கட்டுரையில் லெனின் முன்வைக்கும் கருத்து வருமாறு:  “மிகுந்த ஜனநாயக பூர்வமாக நடத்தப்படும் நாடாளுமன்றமாக இருந்தாலும், அந்த நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்கியபோதும், அங்கும் கூட தனிச்சொத்தும் முதலாளித்துவமும் பாதுகாக்கப்படும். அத்தகைய நாடுகளில் ஒரு சிறிய குழுவான சுரண்டும் வர்க்கத்தினர் கோடிக்கணக்கன உழைப்பவர்களை அடக்கி ஒடுக்கும் இயந்திரம்தான் முதலாளித்துவ நாடாளுமன்றம்.  நமது போராட்டங்கள் இந்த முதலாளித்துவ அமைப்பின் வரையறைக்குள் நடத்தப்படும்வரை நாம் இந்த அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகத்தை, குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை, மக்களுக்கு அரசியல் கல்வியைப் புகட்டவும் மக்களை அணி திரட்டவும் பயன்படுத்துவது அவசியம்.

முதல் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியில் “இடதுசாரி” கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புகள் காலாவதியாகிவிட்டதால், அவற்றில் பங்கேற்கப் போவதில்லை என முடிவு செய்தபோது, இது தவறு என்று கூறிய லெனின், முதலாளித்துவ ஜனநாயகம் வரலாற்றுபூர்வமாகக் காலாவதியாகி விட்டது என்பது பிரச்சார ரீதியில் உண்மைதான் என்றும் குறிப்பிட்டார். லெனின் மேலும் விளக்குகிறார்: நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றுப் பூர்வமாகக் காலவதியாகிவிட்டது என்பது சரியே. அதாவது அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தின் காலம் முடிந்து உழைக்கும் மக்களின் சகாப்தம் தொடங்கிவிட்டது என்கிறோம். இதைத் தவறு என்று கூற முடியாது. ஆனால் உலக வரலாற்றில் காலகட்டங்கள் என்பதைப் பலப்பல  பத்தாண்டுகளாகத்தான் கணக்கெடுப்பார்கள். இதனால், அன்றாட யதார்த்த அரசியலைப் புரிந்துகொள்ள உலக வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடும் அளவைகளைப் பயன்படுத்தக் கூடாது.

கட்சி பலவீனமாக இருக்கும் நிலையில் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்களையும் பிற்போக்கான ஸ்தாபனங்களையும் முற்றுமாக ஒழிக்க இயலாத நிலையில் உழைக்கும் மக்களின் கட்சி, முதலாளித்துவ நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். நம் நாட்டில் சிறிய பகுதி மக்கள் மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள், சுமார் 90% பேர் முதலாளித்துவ- நிலவுடைமைக் கட்சிகளுக்குத்தான் வாக்களிக்கிறார்கள். இவ்வாறு ஓட்டளிப்பவர்களில் பெரும்பாலான உழைக்கும் மக்களும் அடங்குவர். இதனால் இந்தப் பெரும்பான்மையான மக்களை, முதலாளித்துவ நிலப்ரபுத்துவ அரசியலிலிருந்து காப்பாற்ற மார்க்சிஸ்ட் கட்சி முதலாளித்துவ நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. தேர்தல் களத்தைப் பயன்படுத்தி மக்களுக்குப் பயனுள்ள மாற்று அரசியலைப்பற்றி எடுத்துரைத்து, அவர்களை அணி திரட்ட வேண்டியுள்ளது. இந்தப் பணியை அலட்சியம் செய்வது ஒரு புரட்சிக்காக மக்களைத் தயார்படுத்தும் பணியில் அலட்சியம் காட்டுவதாகும்.

தற்போதைய இந்தியச் சூழலில், நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடுவது கட்சியின் மிக முக்கியக் கடமையாகும் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பலகோடி மக்களுக்கு ஓட்டுரிமை இல்லை. அப்போது நடைபெற்ற தேர்தல்களில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களுக்கே ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலைமை வந்தது. மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஜனநாயக அமைப்புகளின் மீது ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து தொடுத்துவரும் தாக்குதல்களால் மக்களுடைய உற்சாகம் ஓரளவு குறைந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான மக்கள், தமது வாக்குரிமையை இன்னமும் மதிப்புமிக்கதாகக் கருதுகிறார்கள்.  இந்த மனோநிலையைக் கண்கொள்ளாமல் விடுவது மிகப் பெரிய தவறாகும். மக்களின் பின்தங்கிய அரசியல் உணர்வைத் தீவிரப்படுத்த கட்சி எடுக்கும் முயற்சிகள், மேற்கூறிய அலட்சியப் போக்கினால் பலவீனப்படும்.

வர்க்கப் போராட்டத்துக்கு துணையாக

மக்களின் அரசியல் கல்வி என்பது வர்க்கப் போராட்டத்தோடு இணைந்து வருவது. இவை இரண்டையும் பிரிக்க முடியாது புரட்சிக்கான போராட்டங்களை நடத்தும்போது கம்யூனிஸ்டுகள், மக்களுடைய உணர்வுகளை வளர்க்க வேண்டுமே தவிர அவர்கள் பின்னால் நாம் போகும்படியான நிலை ஏற்படக்கூடாது என்பது சரியே. ஆனால் கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு உடனடியாகத்  தேவைப்படும் உத்திகளைக் கையாளும்போதும், அதற்கான முழக்கங்களை முன்வைக்கும்போதும், அந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுடைய உணர்வு மட்டத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்பதையும், வர்க்கப்போராட்டத்தில் பங்கேற்பதையும் “இடது” விமர்சகர்கள் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது மட்டுமின்றி, நாடாளுமன்றங்களில் பங்கேற்று, அங்கே செயல்படுவது என்ற போராட்ட முறையையே ஒதுக்குகிறார்கள். நாடாளுமன்றத்திலிருந்து நடத்தும் போராட்டத்தையும், வெறும் சீர்திருத்தங்களை மட்டுமே முன்வைக்கும் செயல்பாடுகளோடு சேர்த்துக் குழப்புகிறார்கள். நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பது என்பது உழைக்கும் வர்க்கத்திற்குப் பயன்படக் கூடிய ஒரு முக்கியமான ஆயுதத்தை அவர்களுக்கும் கிடைக்கவிடாமல் தடுப்பதாகும். இதனால், மக்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பற்றிய பிரமைகளிலிருந்து விடுபட இயலாமல் போகும். அவர்களுடைய புரட்சி உணர்வுகளையும் வளர்த்தெடுக்க இயலாது. நமது விமர்சகர்களுக்கு, நாடாளுமன்றங்களைப் புரட்சிகரமாகப் பயன்படுத்துவது வர்க்கப் போராட்டத்திற்குத் துணையாக நிற்கும் என்பது புரியவில்லை.

இத்தகைய துணை மேடைகள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மார்க்ஸ் லெனின் இவர்களுடைய வழிகாட்டுதலிலிருந்தும் கட்சியின் அனுபவங்களிலிருந்தும் புரியும். எங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகிறார் “தேர்தல் களத்தில் போராடுகையில், நம்மைவிட்டு ஒதுங்கி நிற்கும் மக்களோடு தொடர்புகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. வேறுபல தொடர்பு சாதனங்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்தத் தேர்தல் களம். மற்ற கட்சிகளை நாம் கடுமையாகச் சாடும்போது மக்கள் முன்பு அவர்கள் தங்கள் நிலைபாடுகளை விளக்கித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதிகள் எதிராளிகளோடு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. நாடாளுமன்றத்திற்கு வெளியிலிருக்கும் மக்கள் கூட்டத்திடையேயும், நாடாளுமன்றத்திற்குள்ளேயும் பேசும்போது, ஒரு பொதுக்கூட்டத்திலோ அல்லது செய்தித் தொடர்பாளர்களிடையேயோ பேசுவதைக் காட்டிலும் அதிக சுதந்திரத்தோடும், அதிகார பூர்வமாகவும் பேசமுடிகிறது”

நமது கட்சியின் அனுபவம்

நமது கட்சியின் அனுபவம் என்ன? நாம் நாடாளுமன்றத் தேர்தல்களில், எங்கெல்லாம் நமக்கு ஆதரவு இருக்கிறதோ, அங்கெல்லாம் தேர்தலைச் சந்திக்கிறோம். முதலாளித்துவ நிலவுடைமைக் கட்சிகள் உட்பட மற்ற கட்சிகளோடு இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறோம். மிக முக்கியமான முதலாளித்துவ நிலவுடைமைக் கட்சியைத் தனிமைப்படுத்தவும், அந்தக் கட்சியை எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்குக் கடுமையாகத் தோற்கடிக்கவும் முயலுகிறோம். தேர்தல் நேரங்களில் மிகத் தீவிரமான அரசியல் செயல்பாடுகளைக் காண்கிறோம். இவை மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பது முதலாளித்துவ-நிலவுடைமைக் கட்சிகளுக்கு அரசியல் களத்தை முழுமையாக விட்டுக் கொடுப்பதைப் போலாகி விடும். முதலாளித்துவ கட்சிகளின் பிடியில் சிக்க வைப்பதாகவே முடியும். இத்தகைய தேர்தல்களில் பங்கேற்பதால், ஒரு உழைக்கும் மக்களின் கட்சி மிக அதிகமான மக்களைச் சென்றடைய முடிகிறது. தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் ஒதுங்கினால், இந்த அளவுக்கு மக்களைச் சந்திக்க இயலாது. இவ்வாறு தேர்தல்களில் பங்கேற்கும்போது மற்ற நேரங்களைவிட, அதிகமான மக்களிடையே கட்சி கருத்துக்களையும் மக்கள் ஜனநாயகத் திட்டங்களையும் பிரசாரம் செய்ய முடிகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசின் பிற்போக்குத்தனத்தை, வன்மையான வர்க்கத்தனத்தைத் தெளிவுபடுத்த முடிகிறது. இது ஒரு முதலாளித்துவ-நிலவுடைமை அரசு என்பதையும், இந்த அரசு உண்மையில் பெருமுதலாளிகள் தலைமை தாங்கும் அரசு என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்ட முடிகிறது. நமது கட்சித் திட்டத்தையும் மற்ற கட்சிகளின் திட்டங்களோடு ஒப்பிட்டுக் காட்ட முடிகிறது. மற்ற ஏகாதிபத்திய நாடுகளில் முதலாளித்துவ அடிப்படையில் இயங்கும் சமூகங்களில் நிலவும் வேலையின்மை வறுமை, சுரண்டல், ராணுவமயம் – போன்ற தீமைகளைச் சுட்டிக்காட்ட முடிகிறது. மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்கும்படி மக்களிடம் நேரடியகாக் கோரி, அந்தக் கட்சியை வலுவான தோற்கடிக்கச் செய்யலாம். இதன் விளைவாக வர்க்கப் போராட்டங்களில் மக்கள் ஈடுபடுவதற்கான நம்பிக்கையைப் பெறச் செய்யலாம். மாநிலச் சட்ட மன்றங்களிலும் மையத்தில் நாடாளுமன்றத்திலும் பங்கேற்கும்போது, இந்த அரசின் உண்மையான வர்க்கத் தன்மையையும் வெளிப்படுத்தலாம். இத்தகைய உத்திகள் கட்சியின் மீது மரியாதையை அதிகரித்துள்ளது. அதன் தாக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது; அதன் வலுவை அதிகரித்துள்ளது. இத்தகைய தேர்தல் வெற்றிகளால், கட்சி இன்னும் பெரிய அளவில் மக்கள் போராட்டங்களைத் தனியாகவும் மற்ற அமைப்புகளுடன் இணைந்தும் நடத்த முடிகிறது. நாடாளுமன்றத்திலும், அதைத் தாண்டியும் நடத்திய போராட்டங்களைத் தேர்தல் வெற்றிகளாக ஆக்க முடிந்திருக்கிறது. தேர்தல் வெற்றிகளின் மூலம் பிரம்மாண்ட அளவில், மக்கள் போராட்டங்களை வலுவாக நடத்த முடிகிறது. இத்தகைய செயல்பாடுகளால் மக்களுக்கு அரசியலைக் கற்பிக்க முடிகிறது. மக்களுக்கு நேரடியான அரசியல் அனுபவம் கிடைக்கிறது. இதனால் புரட்சிப் படையும் பெருகுகிறது.

தேர்தல் தேவையில்லையா?

தேர்தல்களே தேவையில்லை என்று கூறுபவர்கள் தாங்கள் என்னவோ புரட்சிகரமான உத்தியை வலியுறுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. அவர்களுடைய இந்த உத்தி, தேர்தலைப் போன்ற ஒரு பெரும் அரசியல் நிகழ்வுகளிலிருந்து உழைக்கும் மக்களை ஒதுக்கிவைக்கிறது. இதனால், இந்த அரசியல் களம் முழுமையாக சுரண்டல் வர்க்கக் கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். உழைப்பாளர்களின் கட்சி – இந்தத் முதலாளித்துவ உத்தியின் காரணமாக தங்கள் கொள்கைகளையும், திட்டங்களையும்,  ஆளும் வர்க்கக் கொள்கைகளைப் பற்றிய விமர்சனங்களையும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல முடியாமல் போகிறது.

ரஷ்யப் புரட்சியின்போது தேர்தல்களைப் புறக்கணித்த அனுபவம் போல்ஷ்விக்குகளுக்கு உண்டு. இதிலிருந்து அவர்கள் கற்ற பாடங்கள் முக்கியமானவை. இந்தப் படிப்பினைகள் கம்யூனிஸ்டுகள் அனைவருக்குமே பொருந்தும்.

லெனின் பின்வருமாறு கூறுகிறார்: “மிகவும் பிற்போக்கான ஒரு நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியாது என்று மிகப்பிடிவாதமாகக் கூறியதற்காக இடது போல்ஷ்விக்குகள் 1908-ல் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு பங்கேற்பது மிகவும் அவசியம் என்பதை அவர்கள் உணர மறுத்தனர். அவர்கள் 1905-ல் ஏற்பட்ட வெற்றிகரமான அனுபவத்தை மட்டுமே முக்கியமாகக் கருதினார்கள். 1905 போல்ஷ்விக்குகள் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த நடவடிக்கை உழைக்கும் மக்களுக்கு ஒரு மிகச் சிறந்த  அனுபவத்தை அளித்தது. சில சிறந்த விலைமதிப்பற்ற அரசியல் அனுபவத்தை அளித்தது. சில நேரங்களில் சட்டபூர்வமான, சட்டத்தை மீறிய மேலும் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தும் போராட்டங்கள், மன்றத்திற்கு வெளியே நிகழ்த்தும் போராட்டங்கள் இவற்றை ஒன்றிணைத்துப் போராடும்போது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளைப் புறக்கணிப்பது பயனுள்ளதாயிருக்கும், சில நேரங்களில் அது அவசியமும் கூட. ஆனால் இந்த அனுபவத்தைக் கண்மூடித்தனமாக, விமர்சனபூர்வமாக அணுகாமல், “காப்பியடிப்பதுபோல் வேறொரு சந்தர்ப்பத்தில். வேறொரு நிலையில் செய்வது மிகவும் தவறு. 1906-ல் போல்ஷ்விக்குகள் “டூமா” (ரஷ்ய நாடாளுமன்றம்) வைப் புறக்கணித்தது தவறு. ஆனால் இது ஒரு சிறிய தவறு, எளிதில் திருத்திக்கொள்ளக்கூடியது. ஆனால் 19௦7, 1908 – பின்னர் தொடர்ந்து பல ஆண்டுகள் புறக்கணித்தது மிகவும் பெரிய, சரி செய்யக் கடினமான தவறு…”.

நாடாளுமன்ற அமைப்புகளில் கட்சியின் பணி

நாடாளுமன்ற அமைப்புகளில் கட்சி எவ்வாறு பணியாற்றுகிறது? நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உள்ள கட்சிக் குழுக்கள், கட்சி அமைப்பின் ஒரு பகுதியாகும். கட்சியின் கட்டுப்பாட்டில் கட்சியின் ஒழுங்கு முறைகளின் வரையறைக்குள் இயங்குபவை. கட்சித் தலைமையுடன் நெருங்கிய தொடர்பு உடையவை. பார்லிமென்ட் உறுப்பினர்களான கம்யூனிஸ்டுகள் அரசு திட்டங்கள், சட்டங்கள், இவற்றின் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தி, குறிப்பாக எளிய மக்களின் பொருளாதார நிலைமையை இவை எவ்வாறு பாதிக்கும் என்பதையும், மேலும் உழைக்கும் மக்கள் விவசாயம், பட்ஜெட் இவை மீதான அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்பு போன்றவற்றை எடுத்துரைப்பது போன்ற பணிகள் முக்கியமானவை. மேற்கூறிய விஷயங்கள் பொதுவாழ்வில் மையமானவை. அரசைப் பொறுத்தவரையிலும் மிகவும் முக்கியமானவை. இந்த விஷயங்கள் அனைத்திலும் கம்யூனிஸ்டுகள் கவனம் செலுத்தி எளிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கக் குரல் கொடுப்பார்கள்; மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளைப் பரவலாக்கவும், நாடாளுமன்றங்களுக்குள்ளேயே கட்சியின் போராட்டத்தைத் தொடர்வார்கள். எதேச்சாதிகாரத்தைத் தடுப்பது, மாநிலங்களின் சுய ஆட்சி, உழைக்கும் மக்களின் போராட்டங்களை அடக்கும் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலுக்கான நடவடிக்கைகள், பெண்களுக்குச் சமஉரிமை, வேலையின்மையை எதிர்ப்பது, உழைப்பவர் மீதான தாக்குதல்கள், ஊழல் எதிர்ப்பு, நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து நிலவுடைமையாளர்களுக்குச் சாதகமாகக் கிராமப்புறங்களில் செயல்படுவதை எதிர்த்தல் – போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் இதில் அடங்கும். உழைப்பாளரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு சர்வதேசக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள், போருக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்; ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் மக்களுக்காகக் குரலெழுப்புகின்றனர். இவ்வாறே பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும் இனப்படுகொலைகளுக்கு எதிராகவும் காலனியாதிக்கத்தை எதிர்த்தும் குரல் கொடுக்கிறார்கள். மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப்பற்றிய பிரமைகளைக் களைய நாடாளுமன்றத்தையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு நாடாளுமன்றம் ஒரு துணை மேடையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியின் முதன்மையான பணியாகிய புரட்சி செய்வது என்ற பணிக்குச் சிறந்த அடித்தளம் அமைக்கிறது.

நாடாளுமன்ற அமைப்புகளில் செய்யும் பணியில் ஒரு பகுதியாகத்தான் கட்சி பல மாநிலங்களில் அரசுகளில் பங்கேற்கிறது. அப்படியும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் எல்லாவற்றிலும். கட்சி பங்கேற்பதில்லை. இடதுசாரிகள் எங்கெல்லாம் பெருவாரியாக வலுப்பெற்றிருக்கிறார்களோ, அங்குதான் அரசுகளில் பங்கேற்கிறார்கள் அத்தகைய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சிதான் பெருவாரியாக வலுவான கட்சியாய் இருக்கிறது. இதனால்தான் 1967-ல் பீஹார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநில அரசுகளில் கட்சி பங்கேற்க மறுத்தது. மார்க்சிஸ்ட் கட்சி பிற கட்சிகளின் ஒரு துணைகட்சியாக (வாலாக) செயல்படுவதை ஏற்கவில்லை.

1957-ல் மார்க்சிஸ்டுகள், தேர்ந்தெடுத்த ஒரு சில கட்சி சாராத  தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவோடு கேரளத்தில் அரசு அமைத்தது. 1967-ல் மார்க்சிஸ்டுகள் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் மட்டுமே அரசு அமைப்பில் பங்கேற்றனர். அங்கு இடதுசாரிகள் வலுவாக இருந்ததே காரணம்.

மாநில அரசுகளில் பங்கேற்பு

நம்மை விமர்சிப்போரில் ஒருசாரார் இன்னொரு கருத்தையும் முன்வைக்கின்றனர். நமது அரசுகளின் ஆட்சியில் மக்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைக்கின்றன. அதனால் ஒரு சில அடிப்படை மாற்றங்கள் செய்தால்போதும்; இத்தகைய மாற்றங்களைப் பார்லிமென்ட் முறை மூலமே செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இடதுசாரி அரசுகளின் அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. இந்த அரசுகள் காங்கிரஸ் கட்சி ஆண்ட அரசுகளின் ஆட்சியிலிருந்து வேறுபட்டவை.

இடதுசாரி அரசுகள் ஆண்ட மாநிலங்களில்தான், அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளான காவல்துறை போன்றவை நிலவுடைமையாளர்களுக்குச் சாதகமாகவோ, விவசாயிகளுக்கும், குத்தகையாளர்களுக்கும், மற்றும் போராடும் தொழிலாளர்களுக்கும் எதிராகவோ, பயன்படுத்தப் படுவதில்லை. இந்த மாநிலங்களில்தான் அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உட்பட, ஜனநாயக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் கிராமப்புற ஏழைகளுக்காகவும் பெரு நிலச்சுவன்தார்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தவும், நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குத்தகைதாரர்களுக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு இருக்கும் குறைந்த நிதியை வைத்துக்கொண்டே இயற்கைப்பேரிடர்கள் தாக்கும் நேரங்களில், மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை அளிக்கின்றன. பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மேற்கூறிய நிவாரணங்களுக்காக, நமது தலைமையில் மக்கள் போராடுகிறார்கள். கடுமையான சுமைகளிலிருந்து ஓரளவு விடுபடுவதற்காக மக்கள் நிவாரணம் கேட்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இடதுசாரி அரசுகள் மக்களின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஓரளவாவது நிவாரணம் அளிக்க வேண்டியது அவசியம். இந்தக் குறைந்தபட்ச நிவாரணம் அடிப்படைச் சிக்கல்களை தீர்க்காது. மக்கள் விரைவிலேயே, இந்தச் சூழலை அடியோடு மாற்றினால்தான் தங்களுடைய நிலையில் அடிப்படையான மாற்றங்கள் நிகழும்.  அடிப்படை மாற்றத்திற்கு இடதுசாரி அரசுகள் துணை நிற்கும் என்ற புரிதலை ஏற்படுத்தவேண்டியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி இந்த இடதுசாரிகள் ஆளும் அரசுகளிடமிருந்து மிக அதிகமாக மக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்று பல முறை கூறியுள்ளனர். உண்மையான அரசியல் அதிகாரம் முதலாளித்துவ மற்றும்  நிலப்பிரபுத்துவ வர்க்கங்களிடம்தான் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இடது முன்னணி அமைச்சரவைகள், மக்களை அணிதிரட்டவும் , போராடவும் பயனுள்ள  கருவியாகச் செயல்படலாம். ஆனால் அடிப்படைப் பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடியாது. மக்களே இதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்கிறார்கள். மேற்கு வங்க அரசு நிறைவேற்றியுள்ள கிராமப்புற ஏழை மக்களுக்கு நலன் பயக்கக்கூடிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதன் மூலம் உண்மையான அதிகாரம் எங்கே இருக்கிறது என்பதை மக்களே அறிந்துகொள்கின்றனர். இதைப்போலவே மைய அரசு நிதி ஆதாரங்களைத் தன் பிடியிலேயே வைத்திருப்பதையும், மாநில அரசுகள் மக்களுக்குத் தர விழையும் ஒருசில நிவாரணங்களுக்குக்கூடப் போதிய நிதி அளிப்பதில்லை. அதிகார வரம்புக்குள் இருக்கும் சில அதிகாரங்களில் ஒன்றான சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளிலும் கூட மத்திய அரசு தலையிடுவதையும் பார்க்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளைக் கவனிப்பதே ஒரு அரசியல் கல்வி. இவற்றின் மூலம் உண்மையான அதிகாரம் எங்கே இருக்கிறது என்று அறிகிறார்கள்.

பார்லிமெண்ட் அமைப்புகளையும், மக்களிடையே செய்யும் பணிகளையும் முறையாக இணைத்துச் செயல்பட்டால், கட்சி வளர இயலும்; மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டுவதில் முன்னேற இயலும் என்பதே மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரள அனுபவங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம்.

கட்சி பலவீனமாக இருக்கும் மாநிலங்களில், கட்சி ஆட்சியில் இருக்கும்  மாநிலங்களில் எத்தகைய நல்ல ஆட்சியை நிறுவியுள்ளனர்; கட்சியின் சாதனைகள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கவும், தற்போதைய அரசின் வர்க்கத் தன்மையை விளக்கவும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்பதன் மூலம் செய்ய முடிகிறது.

நாடாளுமன்ற ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சி இடது முன்னணி அரசுகளில் பங்கேற்பது; தேர்தலில் போட்டியிட்டு தன் பிரதிநிதிகளை அனுப்புவது; சுதந்திரமான செயல்பாடுகளை விட்டுக் கொடுக்காமலேயே மற்ற கட்சிகளோடு இணைந்து தேர்தல் கூட்டணி அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது சரியான உத்தி என்பதே அனுபவம். இதன் பொருள்  இவ்வாறு செயல்படும்பொழுது தவறுகள் நிகழாது என்பதல்ல.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆளும் வர்க்கங்களிடமிருந்துதான் ஆபத்து வரும் என்பதே வரலாற்று அனுபவம். நாடாளுமன்ற அமைப்புகளில் செயல்படுவதும், அவை ஆளும் வர்க்கங்களால் தாக்கப்படும்பொழுது அம்பலப்படுத்துவதும் நமது பணியாகும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: