வெண்மணி படுகொலையின் 50-ம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இம்மாத இதழ் வெளிவருகிறது. சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார அம்சங்களில் வெண்மணியின் தாக்கம், எதிர்வினை மற்றும் படிப்பினைகளை உள்ளடக்கியதாக இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன. தமிழகத்தில் விவசாயிகள் இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நிலவிய நில உறவுமுறையை விளக்கி தோழர் கோ. வீரய்யன் எழுதியிருந்த கட்டுரை இந்த இதழில் மறுபதிப்பு செய்யப்படுகிறது.
பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுல்லாமல் சமூக, கலாச்சார ரீதியான ஆதிக்கத்தை எதிர்த்தும் நின்றதுதான் வெண்மணியின் அனுபவம் என்பதை விளக்குகிறது தோழர் உ. வாசுகியின் “கீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி” என்ற கட்டுரை.
வெண்மணியின் வரலாறு, அது ஏற்படுத்திய தாக்கம், ஆளும் வர்க்கங்களும், அதன் கருவிகளும் செய்த வஞ்சகம் உள்ளிட்டவைகளை விளக்குகிறது தோழர். இரா.சிந்தனின் “தஞ்சை களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம்” என்ற கட்டுரை.
வாய்மொழி வரலாற்றில் துவங்கி, கவிதை, புதினம், திரைத்துறை என கலை இலக்கியத்தில் வெண்மணியின் தாக்கம் பற்றி குறிப்பிடுகிறது “கலை இலக்கியத்தில் வெண்மணியின் தாக்கம்” என்ற தோழர். வெ.ஜீவகுமாரின் கட்டுரை.
உலக புரட்சிகளின் அனுபவங்களையும், மார்க்சிய மூலவர்களின்
கருத்துகளையும், இந்தியாவின் பிரத்தியேக தன்மையின் புரிதலையும் கருத்தில் கொண்டு வர்க்க ஒற்றுமை மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் கூட்டாளிகளிடையே ஒற்றுமை என்பதை விளக்கி “தொழிலாளி-விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி” என்ற ச.லெனின் கட்டுரை பேசுகிறது.
செங்கொடி இயக்கத்தின் தஞ்சைத் தரணியின் கள நாயகன் தோழர் கோ.வீரய்யன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஐ.வி. நாகராஜனின் “ஓய்வறியாப் போராளி“ என்ற பதிவு வெளியாகிறது.
மார்க்சிஸ்ட் இணைய இதழ் ஒலி இதழாகவும் வருவதை அறிவீர்கள். ஆங்கில மொழியில் மார்க்சிய கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பும், இணைய வழி மற்றும் செயலி வழி வாசகர்களுக்கு தற்போது கிடைக்கிறது. மேலும் இத்தகைய முயற்சிகளை மேலும் முன்னெடுக்க மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே மார்க்சிஸ்ட் சந்தாவை கூடுதலாக்கி, வாசிப்பை முன்னெடுக்க ஒவ்வொரு வாசகரையும் வேண்டுகிறோம்.
– ஆசிரியர் குழு
Leave a Reply