(20-11-1932 – 1811-2018)
ஐ.வி. நாகராஜன்
ஏழை எளிய மக்கள் மீதான பெருநில உடமையாளர்களின் கடும் தாக்குதலை எதிர்கொண்டு, ஒடுக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுத்தது. அவ்வியக்கத்தை ஒடுக்க முயன்ற ஆதிக்க சக்திகள் வெண்மணி படுகொலைகளை அரங்கேற்றினர். வெண்மணி தியாகத்தின் 50வது நினைவு ஆண்டு இது. வெண்மணி அடக்குமுறைக்குப் பிறகும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் போராட்டத்தை வீறுகொண்டு வழிநடத்தியவர் தோழர் கோ.வீரய்யன். கட்சியாலும் மக்களாலும் ஜி.வீ என்று அன்போடு அழைக்கப்பட்டஅவர், சாதாரண விவசாய குடும்பதில் பிறந்தார். வாழ்க்கை அனுபவங்களின் வழியாக சிறு வயதிலேயே செங்கொடி இயக்கத்தில் இணைந்து 17-வயதிலேயே போராட்ட களத்தில் அடியெடுத்து வைத்தார்.
சித்தாடி என்ற ஊரில் பிறந்த அவர், கிராம கட்சி கிளையில் உறுப்பினராக துவங்கி அவருடைய இயக்க பயணத்தின் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார். அதற்கு பிரதான காரணம் அவரது கொள்கை பற்றும் அர்ப்பணிப்பு உணர்வும்தான். சுய கல்வி மூலம் மார்க்சிய ஞானத்தை பெற்றதோடு மட்டுமின்றி அதை மக்களுக்கான களப்போராட்டங்களில் பொருத்தும் நுண்ணறிவு மிக்க தலைவராகவும் அவர் விளங்கினார்.
1963 முதல் 1968 வரை கீழத் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர் இயக்கங்கள் பல சிக்கலான பிரச்சனைகளை சந்தித்தன. அந்த காலகட்டத்தில் துடிப்பு மிக்க இளந்தோழர்களை இணைத்துக்கொண்டு அனல் பறந்த பல்வேறு பிரச்சனைகளை துணிவுடன் எதிர்கொண்டு முன்னேறுவதற்கு சிறப்பாக பணியாற்றினார். 1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ல் வெண்மணி படுகொலை நிகழ்ந்தது. இதைக்கண்டித்து அப்போது நடந்த தீவிரமான பல்வேறு போராட்டங்களில் முக்கிய பொறுப்பேற்று வழிநடத்தியவர் தோழர்.கோ.வீரய்யன் ஆவார்.
வெண்மணி கொடூர படுகொலையினால் ஏற்பட்ட நிலைமைகளை மிக தைரியமாக சமாளித்த அப்போது தலைமையில் இருந்த தோழர்களில் இவரது பணி மிகவும் உறுதியாக இருந்தது. தமிழ்நாடு விவசாய, விவசாய தொழிலாளர் சங்க அமைப்புகளில் பல்வேறு உயர் பொறுப்புகளிலிருந்து பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். அமைத்த தமிழக விவசாயிகள் உயர்மட்ட குழுவில் உறுப்பினராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றினார்.
1964-ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டபோது தோழர். கே.ஆர். ஞானசம்மந்தம், பி.எஸ். தனுஷ்கோடி, பாரதிமோகன் ஆகியோருடன் இணைந்து தோழர் கோ.வீரய்யன் தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி வளர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். பல்வேறு சவால்கள் நிறைந்த அந்த காலகட்டத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் செனறு மிகக்கடுமையாக உழைத்தார். 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது தோழர்.கோ.வீரய்யன் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு கட்சிப்பணியாற்ற வேண்டும் என கட்சி முடிவு செய்தது.
இம்முடிவினை ஏற்று கீழத்தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் சென்று கட்சிப் பணியாற்றினார். அதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக நாகை தொகுதியிலிருந்து இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார். சட்டமன்றத்தில் உழைப்பாளி மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி இடைவிடாது போராடினார். தஞ்சை தியாகி என்.வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டபோது அதை எதிர்த்து கண்டன இயக்கத்தில் முன்னணியிலிருந்து செயல்பட்டார்.
தோழர்.என்.வெங்கடாசலத்தின் மூன்று மகன்களையும் திருவாரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் தங்கவைத்து உயர் படிப்புவரை படிக்கவைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் முனைப்பான இளந்தோழர்களை தலைவர்களாக உருவாக்கியதில் இவரின் பங்கு முதன்மையானது; முக்கியத்துவம் வாய்ந்தது. தோழர் கோ.வீரய்யன் அவர்களின் செயல்பாடுகள் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை அல்ல. ஒரு மாபெரும் இயக்கத்தின் வரலாறு. கொடிய வறுமையை சந்தித்துக்கொண்டே உழைப்பாளி மக்களுக்கான வர்க்கப் போராட்டத்தில் உறுதியாக இருந்து தீவிர பங்காற்றினார். இவர் எழுதிய வெண்மணித் தீ, சங்கம் படைத்த சரித்திரம், விவசாயிகள் இயக்க வீரவரலாறு, இவருடைய சுயசரிதையான செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் ஆகிய புத்தகங்கள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் ஆய்வுகளுக்கு இப்போதும் பயன்பட்டு வருகிறது.
இவ்வளவு சிறப்புக்குரிய தலைவரான கோ.வீரய்யன் கடந்த 2005-ம் ஆண்டு வயது முதிர்வின் காரணமாக தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்சி பணிகளில் ஈடுபடமுடியாமல் தன்னுடைய சொந்த கிராமமான சித்தாடியில் ஓய்விலிருந்து வந்தார்.
அவருடைய வாழ்வின் தீரமிக்க செயல்பாடுகளும் அவர் சந்தித்த நிகழ்வுகளும். இளைய தலைமுறையை ஈர்க்கும் என்பது நிச்சயம். தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் இதர உழைக்கும் மக்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை மனித உரிமைகளைப் பெற, சமூக ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிய, வேலைக்காக, கூலிக்காக சாகுபடி உரிமைக்காக, குடிமனை, குடிமனை பட்டாவுக்காக கிராமப்புற மக்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தி வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை அப்போதே செய்துகாட்டி காலத்திற்கேற்ற மாற்றத்தை உருவாக்கியவர்தான் தோழர். கோ. வீரய்யன்.
Leave a Reply