மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !


  • இரா. சிந்தன்

கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே.

பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும்.

பிரிட்டிஷ் ஆதிக்க காலம் :

அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது. வளமான இப்பகுதியில் விவசாயிகளும் தொழிலாளர்களும் பல்வேறு வகைகளில் சுரண்டப்பட்டார்கள். அரசனுக்கும்,கோயிலுக்கும் விளைச்சலில் பங்கு, இலவச உழைப்பு, காவல் வரி, தொழில் வரி (இறை) ஆகியவை நிலவின. வட்டி திரும்ப செலுத்த முடியாதவர்கள், உரிய வரி செலுத்த முடியாதவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. மேலும்,பிரம்மதேயம் உள்ளிட்டு கட்டாயமாக நிலம் தானம் பெறப்பட்டது. இவையெல்லாம் நிலவுடமை ஏகபோகங்களை வளர்த்தன.

1799 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆளுகையில் வந்தது தஞ்சை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு லாபவெறியே அடிப்படையாக இருந்தது. அவர்கள் பழைய நில உறவுகளின் ஒடுக்குமுறைகளை பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் துல்லியமாக்கினார்கள்.

நிலத்தில் நேரடியாக உழைப்பவர்களுக்கும், காலனி அரசுக்கும் இடையில் ஜமீன்தார்கள், பண்ணையார்கள், மடங்கள் என்ற  இடைத்தட்டினை காலனி அரசு பயன்படுத்திக்கொண்டது. காலனி அரசு இந்த இடைத்தட்டு பகுதியிடம் வரி வசூல் செய்துகொள்ளும். நேரடியாக நிலத்தில் உழைப்பவர்களிடம்,  இடைத்தட்டு பகுதியினர் வரி வசூல் செய்து கொள்வார்கள் என்ற ஏற்பாடு உருவாக்கப்பட்டது. “விவசாயிகளிடம் அவர்கள் எப்படியும் வசூலிக்கலாம், வேலை வாங்கலாம். அதற்கு அரசு நிர்வாக அமைப்பு பூரண உதவி செய்யும்.” என விவரிக்கிறார் கோ.வீரய்யன்.

(ஆதாரம்: விவசாய இயக்கத்தின் வீர வரலாறு)

‘(தனது) மூலதனத்திற்கு சராசரி லாபத்தைக் கூட (விவசாயி) அடைய முடியாத நிலையில் நிலப்பிரபு (நில)வாரத்தை (அதாவது குத்தகைத் தொகையை) நிர்ணயிக்கிறார். அதன் மூலம் கொள்ளையடிக்கிறார்” என இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தனது ‘மார்க்சியமும் நிலவாரமும் என்ற கட்டுரையில் குறிப்பிடுவதைப் போலவே, தஞ்சையிலும் சுரண்டல் நிலவியது. பிரிட்டிஷ் முதலாளிகள், பழைய நிலைமைகளை மாற்றினார்கள், அதே சமயம் தங்கள் சுரண்டலுக்கு ஏதுவாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சுரண்டல் அமைப்பையும் தக்க வைத்துக் கொண்டார்கள்.

அதிகமான வரி வசூல் மட்டுமல்ல; இலவச உழைப்பு, நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதவர்களுக்கு கொடூரமான தண்டனைகளும் தஞ்சை முழுவதும் நிலவி வந்தன. ரயத்துவாரி நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக பண்ணைகள் இருந்தன. அங்கேயே குடி வைக்கப்பட்டிருந்த பண்ணைகளில் அடிமைகள் ஒட்டச் சுரண்டப்பட்டார்கள். மிக மோசமான தீண்டாமை வடிவங்கள் நிலவின. சாணியைக் கரைத்து வாயில் ஊற்றுவது (சாணிப்பால்), சவுக்கடி வழங்குவது ஆகிய மனிதத் தன்மையற்ற தண்டனைகளும், பொதுக்கிணறுகள், ஆற்று நீர், சாலை, கோயில் வழிபாடு மற்றும் கல்வி மறுப்பு நிலவியது. இக்கொடுமைகளில் இருந்து தப்பித்து ஓட முயன்றவர்கள் பிடித்து வரப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

லாபவெறியும்,எதிர்ப்பு இயக்கமும்:

உலக நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தஞ்சை விவசாயிகளுடைய வாழ்க்கையிலும், விவசாயத் தொழிலாளர்களுடைய வாழ்க்கையிலும் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரின் காலத்தில், தஞ்சையிலும் சுரண்டலும், அடக்குமுறைகளும் கடுமையானது. போர்க்காலத்தில், தானியங்களை அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வெறியுடன் உற்பத்தியை அள்ளிச் சென்றார்கள் காலனியாதிக்கவாதிகள். மக்களின் உணவுக்குக் கூட கையிருப்பு இல்லாத விதத்தில், தஞ்சைப்பகுதி நிலப்பிரபுக்களும், மடங்களும் விளைபொருட்களை எடுத்துக் கொண்டார்கள். உணவுப் பஞ்சத்தினாலும், கொள்ளை நோய்களாலும் மக்கள் செத்து மடிந்தார்கள்.

5,000 – 6,000 ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ அய்யர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். (`தென்பரை முதல் வெண்மணி வரை’ மு.அப்பணசாமி) 1937 டிசம்பர் மாதத்தில் நீடாமங்கலத்தில் நடந்த தென்தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதில் சாப்பிட்ட தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை நிலவுடைமையாளர்கள் கட்டி வைத்து அடித்தார்கள். அவர்களே காங்கிரஸ் கட்சியில் கோலோச்சினார்கள்.

அடக்குமுறைகளை மக்கள் அமைதியாக ஏற்கவில்லை. சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகின. 1936-39ஆண்டுகளில் மணலூர் மணியம்மை என்ற கைம்பெண், வைதீக ஆச்சாரங்களையும், பண்ணையார்களையும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டினார். விவசாயிகள் சங்கம் சேர்வதை ஊக்குவித்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட அவர், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இயங்கினார். (1954 ஆம் ஆண்டில் அவர் கொல்லப்பட்டார்.).

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் திரட்ட கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. தஞ்சையில் நிலவி வந்த தீவிர ஒடுக்குமுறைகளை அறிந்த கட்சி, பி. சீனிவாச ராவை இப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. மதராஸ் மாகாணத்தின் தென் கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசராவ். தமிழ் பேசுவார்; ஆனால் எழுதவோ படிக்கவோ தெரியாது. தஞ்சைக்கு வந்த அவரது வழிகாட்டுதலில் சாதி ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டினார்கள் கம்யூனிஸ்டுகள்.

‘ஆரம்பத்தில் சாதி இந்துக்களான வார தாரர்களும் குத்தகைதாரர்களும் சிறு விவசாயிகளும் விவசாயிகள் சங்கத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தனர். விவசாயிகள் சங்கத்தை ஆதிதிராவிடர்களின் சாதி சங்கம் என்று நினைத்தார்கள். சாதி வெறுப்பு அதிகமாய் இருந்தபடியால் விவசாயிகள் சங்கத்தின் கொள்கைகளையும், திட்டத்தையும் பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்கு காலதாமதமாயிற்று’ என விவரிக்கிறார் சீனிவாசராவ். தென்பரை கிராமத்தில் 1943 ஆம் ஆண்டு விவசாயிகள் சங்கத்தின் (கிசான் சபை) முதல் கிளை உருவாக்கப்பட்டது.

சாதி இந்துக்களின் வெறுப்பு மனநிலையை பயன்படுத்தி, உழைக்கும் மக்களிடையே பிரிவினையை உருவாக்க பண்ணையார்கள் முயற்சித்தனர். விவசாயிகள் சங்கம் இந்த சூழ்ச்சியை புரிந்துகொண்டது. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான களத்தில் நின்று, உழைக்கும் மக்கள் ஒற்றுமையை முன்னெடுத்தது. தோளில் துண்டு அணியக் கூடாது, வேட்டி அணியக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, தேநீர் வழங்குவதில்  பாகுபாடு (இரட்டைக் குவளை, சந்து வழியாக வழங்குவது), தண்ணீர் வழங்குவதில் பாகுபாடு என அங்கு நிலவிய சாதிக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்தினர். அதே சமயம், பண்ணையாட்களையும், விவசாயிகளையும் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருந்த பண்ணையார்கள், மடாதிபதிகள், மிராசுதார்களுக்கு எதிரான போராட்டங்களும் வலுப்பட்டன.

தென்பரை கிராமத்தில் உத்திராபதி மடத்திற்கு சொந்தமான நிலத்தில் உழைத்து வந்த குத்தகை விவசாயிகள், குத்தகையாக 82 சதவீத விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த நிலைமையை மாற்றி 33 சதவீதம்தான் தர முடியும் என சங்கம் முடிவு செய்தது .உடனே சங்க செயலாளராக இருந்த வீராசாமியை, 3 ஏக்கர் குத்தகை நிலத்திலிருந்து விரட்டியது உத்திராபதி மடம். சங்கத்தை அனுமதிப்பதை விட பயிர்கள் வயலிலேயே கருகட்டும் என முடிவு செய்தனர் மடத்தினர். விளைந்த நெல்லை அறுவடை செய்ய தடை போட்டார்கள். ஆனால் குத்தகை விவசாயிகள் உத்தரவை மீறினார்கள். போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது.

பெரும்பகுதி தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை மறுத்த வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் வழிநடத்தினர். போராட்டத்தை ஒடுக்க அடியாட்களை ஏவினார்கள் பண்ணையார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளின் உறுதியான போராட்டம், அரசு நிர்வாகத்தை தலையிடச் செய்தது. அடுத்தடுத்த வெற்றிகள் கம்யூனிஸ்டுகள் மீது நம்பிக்கையை அதிகரித்தது. இந்தச் சூழலில் இந்தியா விடுதலையடைந்தது.

இந்திய விடுதலையும், அடக்குமுறையும்:

காலனியாதிக்கம் முடிவுக்கு வந்ததென்றாலும், அது நிலஉறவுகளில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக கம்யூனிச இயக்கத்தை அடக்கும் முயற்சிகள் தொடங்கின. 1948 முதல் 1951 வரை நான்கு ஆண்டுகளுக்கு தஞ்சையில்144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இந்த உத்தரவு கம்யூனிஸ்ட் இயக்கத்தை பலவீனப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது.

தலைவர்கள் தலைமறைவாக இயங்கினார்கள். சுதந்திர இந்தியாவில் போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட களப்பால் குப்பு, திருச்சி சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். பொய் வழக்குகள் புனையப்பட்டன. நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்துகொண்ட இந்திய அரசின் வர்க்கத்தன்மை மிகத் தெளிவாக வெளிப்பட்டது.

இக்காலகட்டத்தில், முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 6  தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மக்களிடம் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. அடக்குமுறைகள் பலிக்கவில்லை என உணர்ந்து கொண்ட ஆளும் வர்க்கம் இறங்கி வர நேர்ந்தது. ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு சட்டங்கள், விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு வாரம், பண்ணையாட்களுக்கு கூலி ஒப்பந்தங்கள் என சில மாற்றங்கள் இந்தப் பின்னணியில்தான் ஏற்பட்டன.

இக்காலத்தில், நிலச் சீர்திருத்தசட்டம் வந்தபோதும் பெரும்பகுதி நிலம் ஏகபோகத்திலேயே தொடர்ந்தது. பெற்ற சட்டங்களை அமலாக்குவதற்காகவும் போராட வேண்டியிருந்தது.

உதாரணமாக ‘தஞ்சாவூர் பண்ணையாள், சாகுபடிதாரர் பாதுகாப்புச் சட்டத்தை’ தமிழகம் முழுமைக்கும் அமலாக்க கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்தினார்கள். இதற்காக  சிதம்பரத்தில் விவசாயிகள் பெருந்திரளாக போராடினார்கள். சிதம்பரம் வட்டத்திற்கு மட்டும் அச்சட்டம் விரிவாக்கப்பட்டது. இப்படி படிப்படியாகவே மாற்றங்கள் சாத்தியமாகின. இனாம் ஒழிப்புச்சட்டத்தின்படி நிலம் எடுக்கும் பட்டியலில் 198 கிராமங்களை இணைக்க 17 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்திய விடுதலையும், மெல்ல மெல்ல ஏற்பட்ட மாற்றங்களும், நில உறவுகளை மாற்றியமைத்தன. பண்ணை அடிமைச் சுரண்டல் வீழ்த்தப்பட்டு, கூலி உழைப்பு முறை வந்தது.

1959 ஆம் ஆண்டில் விவசாயத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. கூலி உயர்வு, கூலி ஒப்பந்தங்களுக்கான கோரிக்கைகள் எழுந்தன. எனவே தங்கள் ஏகபோகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மிராசுதார்கள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அவர்கள் கூலிஉயர்வை மறுத்தது மட்டுமல்ல; கூலியை உயர்த்திக் கொடுக்கக்கூடாதென்று சிறு நிலவுடமையாளர்களுக்கும் தடை  போட்டார்கள்.

கூலி உயர்வுப் போராட்டங்களை திராவிட இயக்கம் விமர்சித்தது. வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், திராவிட இயக்கத்தின் இந்த நிலைப்பாடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடையே கேள்விகளை உருவாக்கின. இப்பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டுவந்த திராவிட விவசாயிகள் சங்கத்திற்குள் அதிர்வுகள் ஏற்பட்டன.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட திராவிட விவசாயிகள் சங்கத்தினர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்கள். 1963, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த மோதல் வலுவாக நடந்து வந்த காலம். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவானது. கீழத்தஞ்சையில் வர்க்க இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி வழிநடத்தியது.

மாநிலத்தில் ஆட்சி மாற்றம்:

சில ஆண்டுகளில், (1967)  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொகுதி உடன்பாடு கொண்டு தேர்தலை சந்தித்தது திமுக. தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, திமுக ஆட்சியமைத்தது. அரசு இயந்திரம் எப்போதும் போல் தன் வர்க்கத்திற்கு சேவையாற்றியது.

1957 ஆம் ஆண்டிலேயே கேரளத்தில் அமைந்த கம்யூனிஸ்ட் அமைச்சரவை, தொழிலாளர் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடாது என கொள்கையை மேற்கொண்டது.  பிராந்திய முதலாளித்துவ கட்சியான திமுக, நிலவுடைமையாளர்களோடு சமரசம் செய்துகொண்டது. திமுக ஆட்சியில் ‘கிசான் போலீஸ்’ என்று அழைக்கப்பட்ட காவலர்கள் உள்ளூர் அளவில் மிராசுதார்களின் அடக்குமுறைகளுக்கு சாதகமாக செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒடுக்குவதற்கான ஏற்பாடாகவே அது இருந்தது. கூலி உயர்வுக்காக முத்தரப்பு பேச்சுவார்த்தையை விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தியபோது, திமுக அரசாங்கம்  அதை ஏற்கவில்லை.

1966 அக்டோபர் 6 ஆம் தேதி பூந்தாழங்குடி கிராமத்தில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பக்கிரி என்ற விவசாயத் தொழிலாளர் கொல்லப்பட்டார். மிகப்பெரும் எழுச்சி வெடிக்கும் என்ற நிலையில்தான் முத்தரப்பு பேச்சுவார்த்தை சாத்தியமானது.

வெண்மணி என்ற கொதிகலன்:

நாகப்பட்டினம் வட்டத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒரு கிளை இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு என்ற காங்கிரஸ்காரரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கம்யூனிச இயக்கத்தின் முன்னே தங்கள் சுரண்டல் சாம்ராஜ்யம் நொறுங்குவதை மிராசுதாரர்களால் ஏற்க முடியவில்லை. எத்தகைய அடக்குமுறைக்கும் தயாரானார்கள்.

சிக்கல் பக்கிரி கொல்லப்பட்டார். நிலக்கிழாராக இருந்தும் விவசாய தொழிலாளர்கள் பக்கம் நின்ற கீழக்கரை ஏ.ஜி.ராமச்சந்திரன் போலீசார் முன், வயலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைகளை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்த நாளிலேயே சின்னப்பிள்ளை கடத்தி கொல்லப்பட்டார். மேலும், நெல் உற்பத்தியாளர் சங்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ‘வெண்மணி சேரியை தீ வைத்து கொளுத்துவோம்’ என்று எச்சரித்து பேசினார்கள். எதிர்  வரவுள்ள சூழல் கடுமையாக இருக்கும் என்பதை கம்யூனிஸ்டுகள் உணர்ந்தார்கள்; எச்சரித்தார்கள். ஆனால், அரசு இயந்திரம் திட்டமிட்ட மெத்தனத்துடன் இயங்கியது. காங்கிரஸ் தலைவர் காமராஜர், விவசாயத் தொழிலாளர்கள் மீதே குற்றஞ் சாட்டிக் கொண்டிருந்தார்.

19.09.1968 அன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச சம்பளம் கேட்டு நடத்தியபோராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அதில் கீழ்வெண்மணி தொழிலாளர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்து அப்பகுதியில் நிலவிய அரசியல் உணர்வையும், உறுதிப்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். பண்ணையார்கள் இந்த அரசியல் உறுதிப்பாட்டை ஒடுக்க நினைத்தார்கள். இப்போராட்டத்தில் பங்கெடுத்ததற்காகவும் சேர்த்து ரூ.250 அபராதம் விதித்தார்கள்.

டிசம்பர் 25 ஆம் தேதி இரவில் காவல் துறையும்,கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் சென்ற ரெளடிகளும் கீழ் வெண்மணி கிராமத்தை சூழ்ந்து கொண்டு தாக்கினர். தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ராமய்யாவின் குடிசைக்குள் 48 பேர்  மறைந்து கொண்டார்கள். குடிசையின்  கதவைப் பூட்டினார்கள் ஏவலாட்கள். குடிசைக்கு நெருப்பு வைக்கப்பட்டது. தீயின் வெப்பம் தாளாமல் தப்பி ஓடியவர்கள் 6 பேர். அவர்களில் இருவரைப் பிடித்து மீண்டும் நெருப்புக்குள் வீசினார்கள் அடியாட்கள். ஒரு தாய் தன்னுடைய ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்றுவதற்காக வெளியே வீசினாள். பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் அதை மீண்டும் நெருப்பில் தூக்கியெறிந்தார்கள். வெளியிலிருந்து இச்சம்பவங்களை பார்த்து அலறிய குழந்தைகளையும் தாக்கினார்கள்.

சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொண்டிருந்த குடிசையின் உள்ளே மனித உயிர்கள் சாம்பல்களாகி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. காவல் அதிகாரிகள் அடுத்த நாளில்தான் வந்தார்கள்.

1969 ஜனவரி 12 ஆம் தேதி, பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பி.டி.ரணதிவே பின்வருமாறு எழுதினார்: “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்ற காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு அஞ்சியும், தன் கட்சிக்குள் இருக்கும் நிலவுடைமையாளர்கள் அழுத்தத்திற்கு பணிந்தும், தாமதத்திற்கு (திமுக)  அமைச்சரவை வழிவகுத்தது, அது பின்னவர்கள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நிலையெடுக்க ஊக்கமளித்தது” .

யார் யார், எந்தப் பக்கம் என தெளிவானது:

வெண்மணியின் தியாகமும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும், வர்க்கப் போராட்டக் களத்தில் யார், எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன.

கோபாலகிருஷ்ண நாயுடு உட்பட இப்படுகொலையை முன்நின்று நடத்தியவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். காவல்துறையை கையாண்ட திமுக அரசாங்கம், மிராசுதார்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது. மேலும், பெரியார் தலைமையில் செயல்பட்ட திராவிடர் கழகமும், கூலி உயர்வுப் போராட்டங்களையே வன்முறைக்கு காரணமாக கற்பிக்க முயன்றது.

மேலும், வெண்மணி படுகொலைகள் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் “விவசாயிகள் இருபிரிவினர் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து” படுகொலைகள் நடந்ததாகக் கூறின. “விவசாய பணிகளுக்கு அமர்த்தப்பட்ட வெளியாட்களை 200 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, கொலை செய்ய முயன்றதால் மோதல் மூண்டதாகவும், அந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம்” என்றும் தெரிவித்தன.

இதுகுறித்து எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி ‘கீழவெண்மணி கொலை பாதகம் பற்றிய செய்திகளை தீக்கதிரில் தேடித் தேடிப் படித்தேன். எல்லா இதழ்களும் மௌனம் சாதிக்கிற தருணத்தில் இந்த தீக்கதிர் இதழ் மட்டும் இந்தச் செய்தி பற்றிய பேருண்மைகளை சத்தம் போட்டுச் சொன்னது’ என்கிறார்

இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இன்னமும் அப்பட்டமாய் மிராசுதார்களை ஆதரித்தது “இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்(?)” என வியாக்கியானம் கொடுத்தது நீதிமன்றம்.

போராட்டக் கனல் அணையவில்லை:

நிலவுடைமைச் சுரண்டலுக்கு எதிராகவும், அதன் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் உழைக்கும் மக்களைத் திரட்டி, தெளிவான தாக்குதலைத் தொடுத்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கம், தொடர்ந்து முன்னேறியது. படுகொலைகளும், அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. உண்மைகளை இருட்டடிக்க முயற்சி நடந்தது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பல உயிர்த் தியாகங்களைச் செய்து போராடினார்கள், நிலவுடைமை ஏகபோகத்தை தாக்கினார்கள். உடைப்பை ஏற்படுத்தினார்கள். அரசியல், சமூகத் தளங்களில் வெற்றிகள் கிடைத்தன.

கீழ்வெண்மணி படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை ஆணையம், கீழத்தஞ்சையில் நிலவிய கடுமையான உழைப்புச் சுரண்டலை வெளிக்கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டம் முதலில் தஞ்சையிலும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமலாகின.

1970களில் நில விநியோகத்திற்கான இயக்கங்கள் வேகம் பிடித்தன. நிலச்சீர்திருத்தத்திற்கான முந்தைய சட்டம் திருத்தப்பட்டது. 1970 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாகுபடிக்கு தகுதியான சுமார் 6 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கச் செய்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பழைய நில உறவுகள் இயல்பாக மாறிவிடவில்லை. சாதீய ஒடுக்குமுறைகளை வீழ்த்தவும், நிலவுடைமை ஏகபோகத்தை தகர்க்கவும் ஒன்றுபட்ட போராட்டங்களும், அளப்பரிய தியாகமும் தேவைப்பட்டன. வர்க்கப் போராட்டமே மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் என்ற பாடத்தை கீழத்தஞ்சை கம்யூனிஸ்ட் இயக்கம் நமக்கு கற்பிக்கிறது.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: