மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி


குரல்: ஆனந்த் ராஜ்
  • உ.வாசுகி

1968 டிசம்பர் 25, உரிமை கேட்ட விவசாயி, விவசாய தொழிலாளிகளின் மீது, ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்தவர்கள் மீது கீழவெண்மணியில் ஒரு பக்கம் கிசான் போலீசின் குண்டுகள் பாய்ந்தன; மறுபக்கம் ஆண்டைகளின் குண்டர்களால் 44 உயிர்கள் கொளுத்தப்பட்டன. ரவுடிகளும், காவல்துறையும், அரசும், சட்டமும் மிராசுகளின் கண் சாடையில் கோரத்தாண்டவம் ஆடி முடித்தன.

வாழ்வியலின் அனைத்து அம்சங்களும் கட்டுப்பாட்டுக்குள்:

கீழத்தஞ்சையில் அனைத்து அதிகாரங்களையும், பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்களையும், செல்வங்களையும், வளங்களையும் வைத்திருந்த பண்ணைகளின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாய் இருந்த உழைப்பாளிகளின் கதி படுமோசமாக இருந்தது. நாள் முழுவதும் வேலை செய்தால் கூலி வெறும் அரை மரக்கால் நெல். மொத்தத்தில் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.160-170 மட்டுமே.

கூலியை மட்டும் பண்ணைகள் நிர்ணயிக்கவில்லை; அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வியலையே நிர்ணயித்தனர். என்ன உண்ண வேண்டும், என்ன உடுக்க வேண்டும், எப்படி உடுக்க வேண்டும், எங்கு வசிக்க வேண்டும், பண்ணையின் எதிரில் எங்கு நிற்க வேண்டும், எப்படி நிற்க வேண்டும் என வாழ்வின் அனைத்து அம்சங்களும் கட்டுப்படுத்தப்பட்டன. மண் கலயங்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்வது பண்ணைகளின் உரிமை. கொடுமைகளிலிருந்து தப்பிக்க முடியாது. தப்பிக்க நினைத்தாலே சவுக்கடியும், சாணிப்பாலும் தான். ஆபாச வசவுகளும், அடிமை வாழ்வும் நிதம் நிதம் விதிக்கப்பட்டவையாக இருந்தன. மொத்தத்தில் குத்தகை விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பண்ணைகளின் கையில் உழைப்பு சுரண்டலுக்கு மட்டும் ஆளாகவில்லை. சமூக ஒடுக்குமுறையும், பண்பாட்டு ஒடுக்குமுறையும் சேர்ந்து நடந்தன. பொருளாதார சுரண்டலும் சமூக ஒடுக்குமுறை அல்லது கட்டுப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. பண்ணையார்களுக்கு இருந்த நிலத்தின் மீதான உரிமை, அதன் உற்பத்தி மீதான கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் கூலிகளின் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தையும் அளித்தது. இதற்கெதிரான போராட்ட அலையின் உச்சகட்டம் தான் கீழவெண்மணியின் படுகொலைகள்.

இது தான் அரசு:

வெண்மணி கொடுமை நடந்தது முடியரசில் இல்லை; குடியரசில் தான். சர்வாதிகாரத்தில் இல்லை; ஜனநாயகத்தில் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும், காவல்துறையும், சட்டமும், நீதித்துறையும் இருந்தும் இக்கொடுமைகள் நடந்து கொண்டிருந்தன. ஏனெனில் இவை அனைத்தையும் உள்ளடக்கிய அரசு, அனைவருக்கும் மேலானது; நடுநிலையானது என்பது கற்பிதமே. மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் அனைவருமே ‘அரசு’ குறித்த கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். ”மன்னராட்சியில் மட்டுமல்ல; ஜனநாயக அமைப்பிலும் கூட அரசு, ஒரு வர்க்கத்தை மற்றொரு வர்க்கம் ஒடுக்குவதற்கான கருவிதான்” என்கிறார் எங்கல்ஸ். “முதலாளித்துவ அரசு, தொழிலாளி வர்க்கத்தை நசுக்குவதற்கான கருவி” என்கிறார் மார்க்ஸ். அரசும் புரட்சியும் என்ற நூலில், லெனின், “சமரசம் காண முடியாத வர்க்க முரண்பாடுகளின் பிரதிபலிப்பும், விளைபொருளும் தான் அரசு” என்கிறார்.

வெண்மணி கொடுமைகளின் போதும், அதற்கு முன்னும் பின்னும் அரசு எந்திரம் இதைத் தான் ஒளிவு மறைவு இன்றி பட்டவர்த்தனமாக செய்தது. ஊடகங்களும் விதிவிலக்காக இல்லை. ’சுதந்திர’ ஊடகங்களும் வர்க்க பிடிப்புக்குள் தான். வெண்மணியில் அதிகார வர்க்கத்தின் கோர நர்த்தனத்தை, பிரதான பத்திரிகைகள், ‘விவசாயிகளுக்கிடையே நடந்த கலவரமாக’வே செய்தியாக்கின. இவர்கள் கூலி உயர்வு கேட்டதால், மிராசுதார்கள், தங்களின் சட்ட உரிமையின் படி, வெளியேயிருந்து ஆட்களைக் கொண்டு வந்ததாகவும், அவர்களுக்கும் உள்ளூர் கூலியாட்களுக்கும் இடையே நடந்த கலவரத்தின் விளைவு தான் இது என்பதாகவும் எழுதப்பட்டது.

அரசியல் ரீதியாகப் பண்ணையார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவும், பிறகு கதர் சட்டையணிந்த காங்கிரஸ்காரர்களாகவும், நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாகவும், திமுக ஆளும் கட்சியானதற்குப் பிறகு அதனுடன் சமரசம் செய்து கொண்டவர்களாகவும் இருந்தனர். நிலக்குவியலும், சாதிய கட்டுமானமும் ஆட்சிகள் மாறினாலும் இறுக்கமாகவே தொடர்ந்தன.

பண்பாட்டுரீதியானஒடுக்குமுறை:

1947-ல் தோழர் சீனிவாசராவ் எழுதிய ‘தஞ்சையில் நடப்பதென்ன?’ என்கிற நூல் ஒடுக்குமுறையின் முழு பரிமாணங்களையும் விளக்குகிறது. பண்ணையாட்கள் பெரும்பாலும் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது சாதிய பரிமாணத்தையும் முன்னிறுத்துகிறது. அவர்கள் கொத்தடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். அடிமையின் அனைத்து நடவடிக்கைகளும் அடிமை உரிமையாளர் போடும் கோடுகளுக்குள் தானே? இந்த இடத்தில் மனுவின் அநீதி கோட்பாடுகளை சற்று நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சூத்திரர்களுக்குக் கல்வி கூடாது; சொத்து கூடாது; ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது; அவர்ணர்கள், அதாவது வருணங்களுக்கு வெளியே இருப்பவர்கள், உடைந்த மண் கலங்களையும், பிணங்களின் வஸ்திரங்களையுமே பயன்படுத்த வேண்டும், மற்றவர்கள் உதறி விடும் சோற்று பருக்கைகளே இவர்கள் உணவாகும்…. போன்ற விதிகளின் சாராம்சத்தைக் கீழத்தஞ்சையில் உணர முடிந்தது.

அடிமை சமூகத்தில் அடிமைகள் மீதான உளவியல் மற்றும் பண்பாட்டு ரீதியான கட்டுப்பாடு சட்டபூர்வமானது. அதற்கான விதிமுறைகள் நிலவின. உதாரணமாக 1852ல் லூசியானா அடிமை கோட்பாடு (slave code) கீழ்க்கண்ட விதிகளை வகுத்தது:

  1. அடிமையின் உரிமையாளர் மற்றும் அவர் குடும்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டும். அவர்கள் சொல்லும் வேலைகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.
  2. அடிமைக்கு எதுவுமே சொந்தமாக இருக்க முடியாது.
  3. உரிமையாளரின் அனுமதியின்றி அவரது தோட்டத்திலிருந்து/பண்ணையிலிருந்து வெளியேற முடியாது.
  4. அடிமைக்கு யாராவது கல்வி கொடுத்தால், கற்றுக் கொடுப்பவருக்கு தண்டனை உண்டு.
  5. ஒரு சின்ன மீறல் இருந்தாலும் கடும் சவுக்கடி கிடைக்கும்.

கீழத்தஞ்சை கொடுமைகளை இதனுடன் பொருத்திப் பார்த்தால் மிகச் சரியாகப் பொருந்துகிறது. அமெரிக்காவின் லூசியானாவில் 160 ஆண்டுகளுக்கு முன் அமலில் இருந்த மனித உரிமை மீறல்களைப் போன்ற நிலை தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் வரை கீழத்தஞ்சையில் நிலவியது.

நவீன மனு நீதி:

பண்ணையாட்களின் குழந்தைகளுக்குக் கல்வி அறவே அனுமதிக்கப்படாத ஒன்று. ஏனெனில் அவர்கள் பண்ணையார்களுக்கு சேவை செய்ய பிறந்தவர்கள். 6 வயதான சிறுவர்கள் மாடு மேய்க்க வேண்டும்; 10 வயதானால் மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ள வேண்டும்; 15 வயதில் மாட்டு வண்டி ஓட்டும் வேலை; 18 வயதில் அப்பா அம்மாவைப் போல் கொத்தடிமை. சிறுமிகள் ஆடு மாடுகளுக்கு இழை தழை பறிக்க வேண்டும். சமைக்க சாப்பிட மண் சட்டி தான். உடையை எடுத்துக் கொண்டால் ஆண்கள் ஒரு துண்டு கட்டிக் கொள்ளலாம் என்றாலும் பொதுவாகக் கோவணம் உடுத்தும் நிலை தான். பெண்களின் புடவை முட்டியோடு தான் நிற்க வேண்டும். யாரும் செருப்பு போடக் கூடாது. பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாது. இவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிணறும் இருக்காது. பண்ணை வீட்டின் கொல்லைப்புறம் நின்று இரு கை ஏந்தி மீந்த சோற்றை வாங்கிக்கொள்ள வேண்டும். பண்ணையாருக்குத் தொலைவில் நின்று தான் பேச வேண்டும். அவர் அருகில் வந்தால் மண்டியிட்டுக் கை கூப்பி இருக்க வேண்டும். காலை 4 மணியிலிருந்து மாலை சூரியன் மறையும் வரை வேலை செய்ய வேண்டும். விடுமுறை என்பதெல்லாம் அகராதியில் இல்லாத சொல். பழைய சோறும், சுடு கஞ்சியும் தான் உணவாகக் கிடைக்கும். குடும்பம் முழுமைக்கும் சேர்த்து சொற்ப கூலியே கிடைக்கும்.

திருமணம் செய்து கொள்ளவும் மிராசுதாரின் அனுமதி வேண்டும், இறந்தவர்களைப் புதைப்பதற்கும் அனுமதி வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தகவல் கட்டாயம் சொல்லியாக வேண்டும். பண்ணையாட்களின் வீட்டைச் சார்ந்த பெண்களின் உடலின் மீதும் மிராசுதாருக்கு அதிகாரம் உண்டு. இவற்றில் எதை மறுத்தாலும் சவுக்கடியும், சாணிப்பாலும் தான். விடிய விடிய மரத்தில் கட்டி வைத்து அடிப்பதற்கு தண்டம் என்று பெயர். ஊசி முனையளவு கூட நிலம் சொந்தமாக இருக்கக் கூடாது. மிராசுதாரின் இடத்தில் சிறு குடிசை போட்டு வாழ வேண்டும்.

கொடுமை பொறுக்க முடியாமல் மலேசியா, சிங்கப்பூருக்கு வேலை தேடிப் போகலாம் என்று எண்ணுபவர்களை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பிடித்து, உதைத்து இழுத்துவர ஆட்கள் உண்டு. ஒரு பண்ணையிலிருந்து இன்னொரு பண்ணைக்கு வேலை செய்ய மாறிப் போகக் கூடாது. அதாவது கூலி உழைப்பை விருப்பம் போல் விற்பதற்குக் கூட உரிமை கிடையாது. பண்ணைகளின் அதிகாரக் கட்டமைப்பில் கூலி தொழிலாளர்கள் அடிமைகளாகவே இருந்தனர். எனவே அடிமை கலாச்சாரமே எதிர்பார்க்கப்பட்டது; போதிக்கப்பட்டது. அடிமைகளின் உயிரும் உடலும் ஆண்டைகளுக்கு சொந்தம். பணிய மறுத்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தின் வேறு பல இடங்களில் இருந்த நிலையை விட கீழத்தஞ்சையில் கடுமையாக இருந்தது. நவீன இந்தியாவில் வெறும் 50 ஆண்டுகளுக்கு முன்வரை கீழத்தஞ்சையில் இது தான் நிலை.

மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி, ஆளும் வர்க்கம், உழைப்பாளி வர்க்கங்களை ஒடுக்குமுறையால் மட்டும் கட்டுப்படுத்துவதில்லை. ஒரு ராணுவவீரர் துப்பாக்கி ஏந்தி நின்றால் அது வெளிப்படையான கட்டுப்பாடு. ஆனால் கலாச்சாரம் நமக்குள்ளேயே குடியிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்துவது கண்ணுக்குத் தெரியாது. இது தான் அதன் பலம் என்கிறார். ஆளும் வர்க்கம் சித்தாந்த ரீதியாக, மற்ற வர்க்கங்கள் அதற்குக் கீழானவர்கள் என்பதை ஏற்க வைக்கிறது என்று விளக்குகிறார். பண்ணை அடிமைகளாக இருந்த விவசாய தொழிலாளிகள், தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதையும், தம் வாழ்வின் சகல அம்சங்களை ஆண்டைகள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதையும் இயற்கையானது; தங்களுக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டனர். ஒரு புறம் கடும் அடக்குமுறை இருந்தாலும் மறு புறம் மிராசுதார்கள் பொருளாதாரத்திலும், சாதியிலும் மேலானவர்கள்; நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்ற கருத்தியல் வலுவாக நிலைகொண்டிருந்தது. இவ்வாறான சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் உழைப்பு சுரண்டல் தங்கு தடையின்றி நடந்தது. ஆளும் வர்க்க சிந்தனைகள் பொது புத்தி என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனைகளாவது சமூகக் கட்டுப்பாட்டின் ஓர் அம்சமே.

பொருளாதார கோஷங்கள் மட்டுமல்ல:

கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவின் படி தோழர் சீனிவாசராவ் கீழத்தஞ்சை வந்தார். கூலி உயர்வு மட்டுமல்ல; உழைப்பாளிகளை மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதும் செங்கொடி இயக்கத்தின் அழுத்தமான கோரிக்கையாக இருந்தது. ஏண்டி என்றால் ஏண்டா என்று கேள்; அடித்தால் திருப்பி அடி; பண்ணையார்களின் கூலிப்படை வந்தால் அவர்களை நீங்கள் மரத்தில் கட்டி வையுங்கள் என்ற பி.எஸ்.ஆரின் ஆவேசமான வார்த்தைகள் அடிமைப்பட்டுக் கிடந்தவர்களுக்கு உத்வேகத்தை அளித்தன. துண்டை தோளில் போடு, வேட்டி கட்டு என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் முழக்கங்களும் கிசான் சபையிலிருந்து வந்தன. ஆண்டை அடிமை என்பது இல்லை; அவர்களும் மனிதர்கள் தான்; நாமும் மனிதர்கள் தான் என்ற சமத்துவ சிந்தனைகள் போதிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த போராட்டங்கள், எண்ணற்ற தியாகங்களின் மூலமே பண்ணையடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது. வெண்மணி தியாகம் இதற்கு சிகரம் வைத்தாற் போல் அமைந்தது.

வேலை பார்க்க வெவ்வேறு இடங்களுக்குப் போகலாம் என்பது கூட போராட்டங்களுக்குப் பிறகே கிடைத்த உரிமையாக இருந்தது. வெண்மணிக்குப் பிறகு அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை கமிஷன் குறைந்த பட்ச கூலி, வீட்டு மனை கொடுப்பது உட்பட சில மாற்றங்களைப் பரிந்துரைத்தது. இந்த மாற்றங்களுக்குப் பின்பே, கிசான் சபா கொடுத்த துணிச்சலும் சேர்ந்து துண்டு தோளுக்குப் போனது; வேட்டியும், புடவையும் கணுக்காலைத் தொட்டன; பள்ளிக்கூடம் போக முடிந்தது; சொந்த வீட்டில் குடியிருக்க முடிந்தது; சுடு சோறு சாப்பிட முடிந்தது; செருப்பு அணிய முடிந்தது. மொத்தத்தில் திணிக்கப்பட்ட பண்பாட்டு ஒடுக்குமுறையைத் தளர்த்த முடிந்தது. அதிகார மேலாதிக்கத்தில் விரிசல் ஏற்படுத்தி பொருளாதார ரீதியான முன்னேற்றம் சற்றே கிடைத்தால், அது வாழ்வியலின் இதர அம்சங்களிலும் மாற்றம் காண்பதற்கான களச்சூழலை ஏற்படுத்தும் என்பது கீழத்தஞ்சையில் நிரூபணமாயிற்று. அதில் செங்கொடி இயக்கத்தின் பங்களிப்பு உன்னதமானது.

1930களில் கீழத்தஞ்சையில் சுரண்டலுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிக் கொண்டிருந்த மக்களைத் திரட்ட களம் இறங்கிய மணலூர் மணியம்மா, பிராமணிய ஆணாதிக்கக் கருத்தியலுக்கு சவால் விடும் வகையில் முடி வெட்டி, ஆணின் உடையை அணிந்து, சைக்கிள் ஓட்டி மக்களை அணி திரட்டினார். பெண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்; அதுவும் உயர்சாதி பெண் இப்படி இருக்க வேண்டும் என்ற பண்பாட்டு மேலாதிக்கத்தைத் தூக்கி எறிந்தார்.

ரஷ்ய புரட்சியின் அனுபவம்:

அடித்தளம் – மேல் கட்டுமானம் என்ற மார்க்சீய தத்துவத்தின் முக்கிய கோட்பாட்டை கவனித்தோமானால், உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் சமூகத்தின் அடித்தளமாகவும், பண்பாடு, சித்தாந்தம், கல்வி, மதம், ஊடகம், குடும்பம், அரசு கட்டமைப்பு, அரசு எந்திரங்கள் போன்றவை மேல் கட்டுமானமாகவும் இருக்கின்றன. மேல் கட்டுமானம் என்பது அடித்தளத்தை நியாயப்படுத்துவதாக, அன்றைய உற்பத்தி உறவும், சொத்துறவும் இயல்பானது என்பதாக அமையும். அடித்தளத்தைக் கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிப்பதாகவே மேல் கட்டுமானம் இருக்கும். அடித்தளம் மாறும் போது, அந்த மாற்றமானது மேல் கட்டுமானத்தில் அதற்கேற்றாற் போல் மாற்றம் வருவதற்கு வழி வகுக்கும். இப்படி கூறுவதை, அடித்தளத்தின் மாற்றம் மட்டுமே மேல் கட்டுமானத்தின் மாற்றத்தை முடிவு செய்யும்; இரண்டுக்கும் இடையிலான உறவு ஒரு வழிப்பாதை என்ற முறையில் புரிந்து கொள்ளக் கூடாது. இத்தகைய புரிதல் எந்திரகதியானது. அடித்தளமானது மேல் கட்டுமானத்தின் மீது செலுத்தும் செல்வாக்கு பிரதானமானது. அதே சமயம், மேல் கட்டுமானம், அதில் ஏற்படும் மாற்றம் அடித்தளத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தும். எனவே தான் பொருளாதார துறையில் மட்டுமல்லாமல் கருத்தியல்/பண்பாட்டு/சித்தாந்த தளங்களில் கம்யூனிஸ்டுகளின் பணி கூர்மையாக வேண்டும்.

உதாரணமாக, ரஷ்ய புரட்சிக்குப் பின்னர், பெண்களின் நிலையும், அவர்கள் குறித்த பிற்போக்கு பண்பாட்டு விழுமியங்களும் தானியங்கியாக மாறவில்லை. சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் பொருளாதார அடித்தளம் மாற்றப்பட்ட பின்னும், மேல் கட்டுமானமாக இருந்த ஆணாதிக்கக் கருத்தியல் உள்ளிட்ட பண்பாட்டு விழுமியங்கள் அவ்வளவு சுலபமாக மாறி விடவில்லை. தோழர் லெனின் அவர்கள் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிட்ட பிரச்சாரம், பெண்களைப் பொதுவெளிக்கு, அரசியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி, பாலின சமத்துவ சட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டம் போன்றவற்றின் மூலமாகவே மாற்றம் வந்தது. புரட்சிக்குப் பின் சமூக நலத்துறையின் மக்கள் கமிசாராக நியமிக்கப்பட்ட அலெக்சாண்ட்ரா கொலந்தாய் மாற்றங்கள் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்தார். பெண்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வர பிரச்சாரம் செய்ய ஒரு தனி பிரிவே ஏற்படுத்தப் பட்டது. கொலந்தாய், இனேசா அர்மான்ந், குரூப்ஸ்கயா ஆகியோர் இதற்குப் பொறுப்பேற்றனர். முதலாளித்துவத்துக்கு முந்தைய கட்ட சமூகத்தின் மிச்ச சொச்சங்களைத் துடைத்தெறிந்து, சோஷலிச மாண்புகளை எடுத்துச்செல்லும் புரட்சிகர மாற்றத்தின் முகவர்களாகப் பெண்கள் பார்க்கப்பட்டனர். குறிப்பாக, மத்திய ஆசிய பகுதியில் ஆணாதிக்க ஒடுக்குமுறையால் அதிகம் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்களுக்குக் கல்வி கொடுத்து, சமத்துவ பண்பாட்டை உள்ளார்ந்த உணர்வாக மாற்ற முயற்சித்த போது, மத்திய ஆசிய பகுதியில் பல எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றையெல்லாம் தாண்டித் தான் பண்பாட்டுத் துறையில் மாற்றங்கள் வந்தன. மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி, ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிப் பராமரிக்க வேண்டும் என்றால் புதிய உணர்வுநிலையையும் உருவாக்க வேண்டும் என்கிறார்.

இந்தப் புரிதலுடன் தான் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில், மக்கள் ஜனநாயக அரசின் ஒரு முக்கிய கடமையாக “ஜனநாயக, மதச்சார்பற்ற கண்ணோட்டம் கொண்ட ஒரு புதிய முற்போக்கு மக்கள் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில் மக்களின் ஆற்றலும், திறனும் வளர்த்தெடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெண்மணி படுகொலைகள் தமிழ் இலக்கிய துறையில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தின. வெண்மணி குறித்தும், அதை ஒட்டியும் ஏராளமான கவிதைகள், படைப்புகள் உருவாக்கப்பட்டன. திரைப்படங்கள் வெளி வந்தன. புதிய படைப்பாளிகள் உருவாயினர். மொத்தத்தில் தலித் மக்களின் அரசியல் சமூக பண்பாட்டு உரிமைகளும், கூலி நிலைமையும் தமிழகத்தின் இதர மாவட்டங்களை விட ஒப்பீட்டளவில் தஞ்சை, நாகை, திருவாரூரில் மேம்பட்டதாக இருப்பது தற்செயலானதல்ல. அது, கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான போராட்டங்களின் விளை பொருளே. பொருளாதார சுரண்டலை எதிர்த்து மட்டுமல்ல; பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்தும் நடந்த போராட்டங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Advertisement


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: