கீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்


  • வெ. ஜீவகுமார்

கீழத்தஞ்சையில் உக்கிரமாக நடந்துவந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவாக ஏகபோக நிலவுடமையாளர்கள் சீற்றமடைந்தார்கள். சாதி ஆதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் எதிர்த்து மக்கள் திரள்வதை, ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. கீழ்வெண்மணியின் படுகொலைகளுக்கு பிறகும் அவர்களால் வர்க்க இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை என்பது ஒருபக்கம் இருக்க. இப்படி தங்கள் அடக்குமுறைத் தாண்டவம் செய்திகளிலோ, சினிமா ஊடகத்திலோ பிற பகுதி மக்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் முயற்சிகளும் இருந்தன.

வாய்மொழி வரலாறு:

பொய்ச் செய்திகள், இருட்டடிப்புக்கான பரப்புரைகளைத் தாண்டி, வாய்மொழி வரலாறாக, நாட்டுப்புற பாடல்களாக, ஒப்பாரிப்பாடலாக உண்மைச் செய்திகள் மக்களை அடைந்தன. தென்பறை முதல் வெண்மணி வரைஎன்னும் நூலில் வாய்மொழி வரலாற்றை தொகுத்தார்.

ஆட்சியாளர்கள், மேட்டுக்குடிகள், அரசர்கள் வெட்டிய கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆட்சியாளர்களின் வரலாறுகளைக் கூறும் இலக்கியப்பாக்கள் ஆகியவையே வரலாறாகத் தொகுக்கப்படுகின்றன. இதில் மக்கள் அந்த ஆட்சியை எப்படி பார்த்தார்கள், அவர்கள் பாடு என்ன என்பது பதிவுசெய்யப்படுவதில்லை. அந்த மக்கள் பேசும்போதே அது மக்கள் வரலாற்றுக்கான தரவுகளாகிறது. எனவேதான் இம்முயற்சியில் ஈடுபட்டேன் என்கிறார் அப்பணசாமி.

நாவல் பதிவுகள்:

கோழிகள், ஆடுகள் வெந்து எரியும் மாமிச நெடிதான் இது என்பது காவல்துறையின் நினைப்பு. அவர்கள் ஒன்றும் மதராஸ் போலீஸ் அல்ல, அடக்குமுறையை தம் பரிபூரண உடல் மொழியாக கொண்ட மலபார் போலீஸ் “அம்புட்டும்  மனுசங்கய்யா” என்று நான்தான் கத்தினேன் என்கிறார் ராமையாவின் குடிசையில் சின்னச்சுவர் வழியே வெளியே குதித்த பழனிவேல்.

அந்த மனிதர்களிடம் தம் உடலை மறைக்க போதிய ஆடைகள் இல்லை; பொங்கி சாப்பிட ஆங்கமாய் ஒரு அடுப்பு இல்லை. வெயிலோ மழையோ கூரை வழியே ஒழுகும் பொத்தல் குடிசைகள் அவர்களின் வீடுகள். நிலச்சுவான்தார்கள் துப்பாக்கி வைத்திருந்தபோது ஆயுதம் என்று வைத்துக்கொள்ள கூலிகளிடம் ஒரு பிளேடு கூட கிடையாது.

ஆயினும் பூட்ஸ் கால்களோடு ஆயுத அணிவகுப்பு நடத்திய காவல் துறையின் குண்டாந்தடிகளை அவர்கள் சந்தித்தனர். முன்பே கூறியபடி இவர்கள் சாதாரண ரக போலீஸ் அல்ல. சன்னரக நாத்து என்பது போல் தமிழ் தெரியாத மலபார் போலீஸ் மற்றும் கிசான் போலீஸ் ஆகிய சிறப்புப் பிரிவினர் ஆவர்.

பின், காவல்துறையின் வன்முறையை விவசாய தொழிலாளர்கள் எந்த ஆயுதத்தால் எதிர் கொண்டார்கள்? கொள்கை உறுதியால், அமைப்பு  வலிமையால்.

செங்கொடியின் பங்கு : 

சோலைசுந்தரபெருமாள் தன் செந்நெல் நவீனத்தில் கண்ணுச்சாமி என்ற பாத்திரம் மூலம் இதனை உணர்த்துகிறார். வெண்மணியில் டீக்கடைக்காரர் வடிவேலு, கண்ணுச்சாமி ஆகிய செங்கொடி இயக்கத் தோழர்கள் பாத்திர படைப்பாக வருகின்றனர். மாமூல் வாங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரால் இவர்கள் அச்சுறுத்துவதற்காக பிடிக்கப்படுகின்றனர். எனினும் காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லாமல் ஒரு பண்ணையாரிடம் விடப்படுகின்றனர். எனினும் மக்கள் கூட்டம் பெரும் திரளாகச் சென்று அவர்களை மீட்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை கூறும் கண்ணுச்சாமி, அவரை கண்டு கதறும் அவருடைய அப்பா பெரியானிடம் பின்வருமாறு கூறுகிறார்.

“… யப்பா… நம்ம செங்கொடிக்கும் அவனுங்க மஞ்சக்கொடிக்கும் நடக்கிற போராட்டம்ப்பா இது. நம்ம கொடிக்காக எது நடந்தாலும் அதை மனசார நாம ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். அதுக்காவ என்னை ஒப்படைச்சுக்கிட்டேன். உனக்கு(அண்ணன்) ஒரே புள்ளதான்னு நினைச்சுக்கப்பா.”

கொடிகாத்த குமரனை வரலாற்றில் படிக்கிறோம். அதேபோல் செங்கொடி காக்க உயிரோடு நடமாடிய கண்ணுச்சாமிகள் மீது சரித்திரத்தின் டார்ச் ஒளி பட வேண்டும். பிள்ளைக்கு சட்டை துணி இல்லாவிட்டாலும் தம் கட்சியின் கொடித்துணிக்காக இவர்கள் போராடினார்கள்.

டிசம்பர் 25, 1968ல் வெண்மணியில் உயிரோடு 44 பேர் கொளுத்தப்பட்ட நிகழ்வு எல்லா தளங்களிலும் தாக்கத்தையும் பெரும் பாதிப்பையும் உருவாக்கியது.

காவியமான வெண்மணி:

சாட்டையடிகளால் ஒருவரை அழ வைக்கலாம்; அடி வாங்கியவர் விரும்பாவிட்டால் அவரை ஆட வைக்க முடியாது. அவருக்கு ரத்தம் வரவைக்கலாம்; பாட வைக்கவோ பணிய வைக்கவோ; முடியாது அவரின் எதிர்வினை கலகமாக, கிளர்ச்சியாக வெளிப்படும். நிலபிரபுத்துத்திற்கும் சாதியத்துக்கும் எதிரான வெண்மணி நிகழ்வு கோஷங்களை, பாடல்களை, நாடகங்களை, சிறுகதைகளை, நாட்டியங்களை, சங்கீதத்தை, ஓவியங்களை, நவீனத்தை கவிதைகளை யாத்து தந்தது.

“வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டு வருகிறோம்;

வெங்கொடுமை தீயை நெஞ்சில் ஏந்தி வருகிறோம்;

காத்திருந்த புலிகள் என காட்ட வருகிறோம்- அந்த கயவருக்கும் மரண ஓலை தீட்ட வருகிறோம்”

என்ற கவிதா கோஷத்தை வார்த்தது.

1968க்குப்பின் வெண்மணி என்ற பெயர் பிள்ளைகளுக்கு சூட்டப்பட்டது; வளர்ந்த பெரியவர்கள் கூட தங்களின் புனைப்பெயராக வெண்மணியை பொறித்தனர். வெண்மணி நினைவாக மண்டபங்கள்,  வெளியீடுகள் ஏராளம் வந்தன.

மனித இதயங்களில் நிலநடுக்கத்தை உருவாக்கிய வெண்மணி நிகழ்வு படைப்புகளை, படைப்பாளிகளை தந்தது மட்டுமல்ல இடது சாரி அமைப்புகளிடம் காந்தப்புயலாக மனித நேயர்களை ஈர்த்தது.

புதினங்களில் முதல் வரவு இந்திரா பாத்த சாரதியின் குருதிப்புனல்தான். வெண்மணி பற்றிய அவர் புரிதல் பின்வருமாறு இருந்தது.

“தலித் மக்களை உயிருடன் கொளுத்திய பண்ணையார், 56 வயதாகியும் விவாகம் ஆகாதவர். சுற்றுப்புறத்தில் இருந்த கிராமங்களில், பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகக் காட்டிக்கொண்டார் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள். கொளுத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள், குழந்தைகள். இயற்கை வஞ்சித்துவிட்ட காரணத்தால், தன் கோபத்தைப் பெண்களிடத்தும் குழந்தைகளிடத்தும் காட்டியிருக்கலாமோ என எனக்குத் தோன்றியது.” இந்த புரிதல் தவறானது என்பதை வெண்மணி நிகழ்வை ஒட்டிய தியாகிகள் பட்டியல் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் வெளிவரும் வரை குருதிப்புனல்தான் வெண்மணி குறித்த ஒரே நாவலாக இருந்தது. உழைப்பாளி வர்க்க மொழியின் குருதியில் செந்நெல் பேசியது. வெண்மணி குறித்த இதர நவீனங்கள் பாட்டாளியின் கீழைத்தீ, மீனா கந்தசாமியின் குறத்தியம்மாள் ஆகியவை ஆகும். “கீழைத்தீ” சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் அரசியலை பேசியது. குறத்தியம்மாள் அரசியல் தளமும் வேறுபட்டது. தற்குறிப்பேற்று அணியாக இவர்களின் நூல்  அவர்களின் தனிப்பட்ட வாஞ்சைகளின் வெளிப்பாடாக இருந்தது.

திரைப்பட வார்ப்பில்:

வெண்மணி குறித்த முக்கிய திரைப்படமாக அறியப்படுவது 1983ல் வெளிவந்த கண்சிவந்தால் மண் சிவக்கும் திரைப்படமாகும். ஸ்ரீதர்ராஜன் இயக்கத்தில் இப்படம் வந்தது. மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்…. என்று தொடங்கும் ஒரு பாடல் நெஞ்சில் ஆவேச பேரலைகளை உசுப்பியது.

இடது சாரி வெகுசன அமைப்புகள் இப்படத்தை சிறப்பு காட்சிகளாக திரையிட்டன. சிவப்புமல்லி, சிவந்த கண்கள், அலை ஓசை ஆகிய படங்களும் வெண்மணியை வெள்ளிதிரையில் நினைவுப்படுத்தின. ‘ராமய்யாவின் குடிசை’ என்ற ஆவணப்படத்தை பாரதி கிருஷ்ணகுமார் இயக்கினார். இதில் தொழிலாளி வர்க்க போராட்டத்தின் ஆவணப்பதிவுகள் தொகுக்கப்பட்டன.

1968-69களில் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் படங்களில் வெண்மணியில் சாயல் படியாமல் திரைக்கதை அமைக்கப்பட்டது.

கவிதை முழக்கங்கள்:

கவிஞர்கள் தணிகைச்செல்வன், இன்குலாப், இளவேனில், வெண்மணி உள்ளிட்டோர் வெண்மணியின் ஜ்வாலையை தங்கள் பேனாவின் உதிரமாக்கினர்.

“சதையும் எலும்பும் நீங்க வெச்ச தீயில் வேகுதே. ஒங்க சர்க்கரும் கோர்ட்டும் அதில் எண்ணெயை ஊத்துதே” என்ற இன்குலாப் வரிகள் நீதி தேவதையின் மயக்கத்தை சுட்டின.

வெண்மணித் தீ ஏராளமான நாட்டுப்புற பாடல்களிலும் கனன்றது.

“அரை லிட்டர் நெல் கூலி அதிகம் கேட்டதாலோ

ஆணும் பெண்ணும் சேர்ந்து செங்கொடி பிடித்ததாலோ

கோபம் கொண்ட இதயமில்லா பண்ணை மிருகங்கள்

அவர் குடிசையிலே தீயை மூட்டி உயிருடன் எரித்தார்”

என்று ஒரு பாடல் மொழிந்தது.

“வெண்மணி தோழர்கள்தாம் தம் வீடு

தீயில் வெந்ததை மறந்திடுமோ நாடு”

என்பது மற்றொரு பாடலின் ஆதங்கம்.

“நந்தனார் காலம் முதலே

இந்த நாகரிக காலம் வரையிலே

வெந்து சாவது நாங்களே -இதை

வேடிக்கை பார்ப்பது நீங்களே…”

என்று ஒரு பாடல் குற்றம் சுமத்தியது.

“ஐம்பூதங்களில் நிலமங்கை மட்டுமே

சுரண்டும் வர்க்கத்துக்குச் சோரம் போயிருந்தாள்.

அந்த இரவிலோ –

அக்கினித் தேவன் கூடத் தஞ்சைப் பிரபுக்களின்

கைக்கூலியானான்”

என இயற்கையும் கூட சுரண்டல் வர்க்கத்தின் அடிமையா என மற்றொரு பாடல் கேள்வியெழுப்பியது.

வெண்மணி படுகொலைகள், மார்க்சியத் தெளிவோடு இயங்கிய வர்க்க இயக்கத்தை நோக்கிய தாக்குதலாகும். அந்த நெருப்பினால் வர்க்க இயக்கத்தை அச்சுருத்த முடியவில்லை என்பது மட்டுமல்ல, இருட்டடிக்கச் செய்த முயற்சிகளை மீறி, அந்த வீர வரலாறு இப்போதும் நமக்கு வழிகாட்டி நிற்கின்றது.

(இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள படைப்புகள் ஒரு பகுதியே ஆகும். இன்னமும் ஏராளமான புத்தகங்கள், கதைகள் படைப்புகள் தொகுக்கப்படவேண்டியுள்ளது)

2 thoughts on “கீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்

  1. தென்பறை முதல் வெண்மணி வரை !என்ற புத்தகத்தை தொகுத்தவர் அப்பண்ணசாமி என்பதை ஏன் பதிவு செய்யவில்லை!

    Like

  2. மன்னிக்க!சரியாக படிக்காமல் பதிவு செய்து விட்டேன்!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s