மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி


குரல்: தேவி பிரியா

ச. லெனின்

“பிரபுத்துவ மீத மிச்சங்களுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான எங்கள் போராட்டத்தில்,  நாங்கள் ருஷ்யாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒன்றுபடச் செய்வதில் வெற்றி பெற்றோம். மூலதனத்தையும், பிரபுத்துவத்தையும் எதிர்த்து விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டதுதான் எங்களுடைய வெற்றி அவ்வளவு சுபலமாக காரணமாய் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் லெனின்.

ரஷ்ய புரட்சியின் இந்த அனுபவம் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான முக்கியமான படிப்பினையாக அமைகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது  ” விவசாய வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் உதவிப்படையாக செயலாற்றியது. இதன் விளைவாக, அங்கு முதலாளி வர்க்கத்தின் அரசியல் சக்தியை அதிகமாக பெருக்குவதில் கொண்டு போய் விட்டது.” என்று கூறுகிறார் ஸ்டாலின். மற்ற மேற்கத்திய நாடுகளைப்போல் அல்லாமல் ரஷ்ய முதலாளிய புரட்சியின் போது அங்கு வர்க்க போராட்டம் வளர்ந்திருந்ததோடு, தொழிலாளி வர்க்கம் சுயேச்சையான அரசியல் சக்தியாகவும் வளர்ந்திருந்தது. 1902 ஆம் ஆண்டு நடந்த விவசாயிகளின் போராட்டம் மற்றும் அதை தொடர்ந்த பல்வேறு எழுச்சிகளில் கிடைத்த படிப்பினைகளின் மூலம் தேர்ச்சியடைந்த விவசாயி வர்க்கம் “தொழிலாளி வர்க்கத்துடன் தோளோடு தோள் நின்று, அதன் தலைமையின் கீழ் போரிட்டது. நிலம் மற்றும் சமாதானம் ஆகியவற்றை தொழிலாளி வர்க்கப் புரட்சியின் மூலம் பெற்றது” என்கிறார்.

பாரிஸ் கம்யூன் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றியாக அமைந்தாலும் நேச சக்திகளான, சமூகத்தின் பெரும் பகுதியாக விளங்கிய  விவசாய வர்க்கத்தை இணைக்காதது, அதை மிக விரைவில் வீழ்த்த முதலாளித்துவத்திற்கு எளிதாக அமைந்தது. “அதிகாரத்தை கைப்பற்ற முதலில் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு போக வேண்டும். கட்சி கிராமங்களிலும் வலுவடைய வேண்டும்” என்கிறார் ஏங்கல்ஸ். அதன்படி ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மிக அதிகமாகவே கிராமங்களில் தங்களுக்கான ஆதரவை திரட்டுவதில் வெற்றி பெற்றனர் என்கிறார் ஸ்டாலின்.

புரட்சியில் விவசாயிகளின் பாத்திரத்தை  நிராகரித்த மென்ஷ்விக்குகளின் கருத்தை எதிர்த்ததோடு, முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை, தொழிலாளி வர்க்க புரட்சியை நோக்கி உடனடியாக முன்னேறுவதற்கு பயன்படுத்துவது என்பதை லெனின்
வலியுறுத்தினார். அதுவே ரஷ்யாவில் வெற்றிகரமான தொழிலாளி வர்க்க புரட்சியை சாத்தியப்படுத்தியது.

பிரெஞ்சு புரட்சியின் அனுபவங்களும், பாரீஸ் கம்யூனின் படிப்பினைகளும் விவசாயி-தொழிலாளி ஒற்றுமையே வெற்றிகரமான புரட்சிக்கான அடிப்படை என்பதை  கற்றுத் தந்துள்ளது. சீன புரட்சியின் வெற்றியும் விவசாயி-தொழிலாளியின் ஒற்றுமையின் அவசியத்தை சுட்டுகிறது. எனவேதான் “தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதுமாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் வலியுறுத்துகிறது.

ரஷ்ய, சீன புரட்சிகளின்அனுபவங்களை கருத்தில் கொண்டு, இந்திய சமூகத்தின் பிரத்யேக சூழல்களை கவனத்தில் இருத்தி “முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் மிச்ச சொச்சங்களை சாதி மற்றும் கிராமங்களின் மிக நீண்டகால பின்தங்கிய தன்மை காரணமாக கட்டிக் காக்கப்படும் நடைமுறைகள் ஆகியவற்றையும்
துடைத்தெறிய தேவையான சமூக முறை சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறது கட்சி திட்டம்.

இந்திய பிரத்யேக தன்மை

இந்திய சமூகத்தில் சாதியும், வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ளது.
“இந்தியாவின் முதலாளித்துவத்தை, தனித்த இந்திய இயல்புகளுடன் கூடிய முதலாளித்துவமாகப் பார்க்கவேண்டும். இந்திய விடுதலைக்குப் பின், இங்கே வளர்ச்சியடைந்த முதலாளிகள், நிலப்பிரபுத்துவத்துடனும், அரை  நிலப்பிரபுத்துவ உறவுகளோடும் சமரசம் செய்துகொண்டனர். இந்தியாவில் விவசாயப் புரட்சி முழுமையடைந்து, உற்பத்தி உறவுகளில் ஜனநாயக மாறுதல்கள்
நடக்கவில்லை. வளர்ந்து வரும் முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியாக சாதீய அதிகாரப் படிநிலைகளும், சாதீய சமூக வடிவங்களும் தொடர்ந்து நீடிக்கின்றன.” என்பதை நமது கட்சி ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தொழிலாளி, விவசாயி,விவசாய தொழிலாளி உள்ளிட்ட உழைக்கும் மக்களை ஒருங்கிணைத்து திரட்டுவதன் மூலமே மக்கள் ஜனநாயக புரட்சியை சாத்தியப்படுத்த முடியும். ஆனால் வர்க்கங்களாக மட்டுமில்லாமல் சாதி அடையாளங்களையும் கொண்டே, நாம் வர்க்கமாக திரட்ட வேண்டிய பகுதி மக்கள் உள்ளனர். நமது பணி இந்த புரிதலின் அடிப்படையில் அமைந்திடவேண்டியுள்ளது.

உங்களை எதிர்நோக்கும் பணி உலகின் கம்யூனிஸ்ட்டுகளை இதற்கு முன் எதிர் நோக்கியிராத ஒன்றாகும். கம்யூனிசத்தின் பொதுத் தத்துவத்தையும், நடைமுறையையும் ஆதாரமாய்க் கொண்டு நீங்கள் ஐரோப்பிய நாடுகளில் இல்லாதவையான பிரத்யேகமான நிலைமைகளுக்கு உங்களைத் தகவமைத்துக் கொண்டாக வேண்டும்” என்று  1919 ஆம் ஆண்டு கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்ட் நிறுவனங்களின் இரண்டாவது அகிலத்தில் லெனின் குறிப்பிட்டார்.

இந்திய உற்பத்தி முறையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் முதலாளித்துவம் வளர்ந்திருந்தாலும், “இந்திய முதலாளித்துவ அமைப்பில் வர்க்கங்களின் வளர்ச்சியானது, சாதீய அடுக்கமைவும்,  பிரிவுகளும் கொண்ட சமூக நிலைமைகளுக்கு உட்பட்டே
நிகழ்கிறது. இந்திய முதலாளிகளில் பெரும் பகுதியினர், சில குறிப்பிட்ட சாதிகளில் இருந்துதான் வந்திருக்கின்றனர்.

விடுதலைக்கு பிறகான இந்திய முதலாளிகளில் டாட்டா (பார்சி) தவிர மற்ற முதலாளிகள் எல்லாம் பனியா சாதியினர்தான். அதேசமயம் கொத்தடிமைகளாகவும், ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்களாக ஆதிவாசி மக்களும், தலித் மக்களுமே
உள்ளனர்”. ஏழை விவசாயிகளாகவும்,கூலித் தொழிலாளர்களாகவும்
பிற்படுத்தப்பட்ட மக்களே உள்ளனர்.

பிரிவினைகளை கடந்த ஒருங்கிணைவு

பொது எதிரியான முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட வேண்டிய தொழிலாளி மற்றும் விவசாயிகள் சாதி என்கிற பிரிவினையால் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளி, விவசாயிகளிடேயே வர்க்க உணர்வை வளர்த்தெடுப்பதற்கு சாதி தடையாக அமைகிறது. ஒருங்கிணைந்த எதிர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள,
சாதி, முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாக உள்ளது. அதே சமயம் ஒடுக்கப்படும் மக்களுக்காக பேசுவதாக கூறும் அடையாள அரசியல் பேசும் பின் நவீனத்துவ வாதிகள் ஒருங்கிணைந்த போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வகையிலேயே தங்களின் யுக்திகளை முன்வைக்கின்றனர். இது இயல்பாகவே முதலாளிகளுக்கு
சாதகமாக அமைந்திடுகிறது.

“ஜனநாயகம், ஜனநாயகப் புரட்சி என்றாலே சாதிப் பிளவுகளையும்,
ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். அவ்வாறில்லாமல் ஜனநாயகம் பிறக்காது. சோசலிசத்தை எட்டுவதற்கே இதுவொரு முன் நிபந்தனையாகும். நாம் முன்னெடுப்பது தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. சாதி அமைப்பையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டமாகும். சாதிப் படிநிலை அமைப்பில், ஒவ்வொரு சாதியும் இன்னொன்றை ஒடுக்குகிறது. அனைத்து அநீதியான சாதிய கட்டமைப்பிற்கும், நியாயங்களுக்கும் முடிவு கட்ட வேண்டும். இந்தப் போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே” என்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

ஒடுக்கப்படும் மக்களின் தனித்துவமான பிரச்சனைகளை அங்கீகரித்து போராடுவதோடு,பிரதான எதிரியை வீழ்த்துவதற்காக உழைக்கும் மக்களின் ஐக்கியத்தையும் உருவாக்குவது அவசியமானதாகும். ஆகவேதான் கட்சி தீண்டாமைக்கு எதிராகவும், அதேசமயம் சுரண்டப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்காகவும் போராடுகிறது. ஒருங்கிணைந்து போராட வேண்டிய வர்க்கங்களை
பிரித்தாளும் வேலையை முதலாளித்துவ-நிலப்பிரவுத்துவ அமைப்பு செய்கிறது. அதை எதிர்கொண்டு, பிரிவினையை தடுத்து, உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கிட வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு.

அகச்சூழலும், புறச்சூழலும்

“கிராமப்புற ஏழைகள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களிடையே ஏற்படக்கூடிய ஒற்றுமை அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரளை ஒன்றுபடுத்தும். அவர்கள் (ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவானவர்கள்) லட்சக்கணக்கில் என்றால் நாம் கோடிக்கணக்கில் அணி திரள்வோம்” என்றார் லெனின்.

இந்த ஒற்றுமையை, ஐக்கியத்தை அகச்சூழலும், புறச்சூழலுமே தீர்மானிக்கிறது. கட்சிக்குள்ளும், தொழிலாளி, விவசாயி இயக்கங்களுக்குள்ளும் தொடர்ச்சியான பிரச்சாரமும், களத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதும் அவர்களை
இந்த ஒன்றுபடுதலுக்கு தயார்ப்படுத்தும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை கடுமையாக தாக்கும் ஆட்சியாளர்களின் கொள்கை அவர்களை ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு உந்தித் தள்ளும்.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர், விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் இதன் சிறு வெளிப்பாடே ஆகும். அயோத்தியில் கோவில் வேண்டாம், விவசாய கடனை ரத்து செய்யுங்கள் என்ற முழக்கத்தோடு நவம்பர் 29, 30-ல் டெல்லியை முற்றுகையிட்ட
விவசாயிகளின் பேரணி சாதி, மத பேதங்களை கடந்த ஒருங்கிணைந்த போர்க் குரலே. வரும் ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில்தொழிற்சங்கங்கள்அறிவித்துள்ள பொது வேலை
நிறுத்தத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த ஒருங்கிணைவு காலத்தின் தேவை என்பதோடு புறச்சூழல் அதனை உறுதிப் படுத்துகிறது.

“கடந்த காலங்களில் இல்லாத நிலைமைகள் இந்த வர்க்கங்களுக்கிடையே இத்தகைய ஒற்றுமையினை உருவாக்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்றைய நவீன தாராளவாத
ஆட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் வரலாறு காணாத வகையில் இந்த அளவிற்கு இணைந்திருக்கிறது” என்கிறார் பேரா. பிரபாத் பட்நாயக்.

“நகர்ப்புற தொழிலாளர்களுடன் ஒருங்கிணைந்து போராடத் தவறினால், வாட்டி வதைக்கும் பல்வேறு கொத்தடிமை முறைகளிலிருந்தோ, இல்லாமை மற்றும் வறுமை நிலையிலிருந்தோ கிராமப்புற ஏழைகள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது” என்கிறார் லெனின். அதே போல் ” பரவலான விவசாயப்பெருங்குடி மக்களின் உதவியோடுதான் பாட்டாளி வர்க்கப் புரட்சி கூட்டு இசையாக மாறும். அது இல்லையென்றால் எல்லா விவசாய நாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் தனிப்பட்டு அதன் கடைசி பாட்டாக மாறிவிடும் அபாயம் உண்டு” என்று எச்சரிக்கிறார் மார்க்ஸ். மேற்கண்ட வரிகள் இந்திய சமூகத்தில் நிலவும் பொருளாதார
ஏற்றத்தாழ்வை உடைத்து நொறுக்க தொழிலாளி – விவசாயிகளின் ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

வரலாற்றின் பகுதிகளில் முதலாளித்துவ சக்திகளுக்கு உதவிப் படையாக வைக்கப்பட்டிருந்த விவசாய வர்க்கத்தை, ரஷ்ய, சீன அனுபவங்களிலிருந்து தொழிலாளி வர்க்கத்தின் நேச சக்தியாக இணைத்திட வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதோடு அதற்குத்
தேவையான உதவிகளை மேற்கொள்வதில் தொழிலாளி வர்க்கம் முனைப்புடன் செயலாற்றிட வேண்டும். “விவசாயி வர்க்கத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்களின் அடிமை விலங்குகளை அறுக்கவும், சுரண்டலை ஒழிக்கவும், வறுமை படுகுழியிலிருந்து கரை ஏறவும், ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவும் விவசாயி வர்க்கம் நடத்தும்
போராட்டங்களுக்கு தொழிலாளி வர்க்கம் தவறாது ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்  ஸ்டாலின்.

“விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளி வர்க்கம் உணர்வுபூர்வமாக செயல்படாமல், அக்கோரிக்கைகளுக்காக போராடாமல், புரட்சிக்கு தேசிய உள்ளடக்கம் அளிக்க முடியாது. புரட்சியும் முன்னேறி செல்ல முடியாது.” தொழிலாளி வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளி வர்க்க கூட்டாளிகளாக விளங்கக்கூடிய விவசாயி வர்க்கத்தை தன்னோடு நெருக்கமாக இணைத்துக் கொள்வதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும். இது புரட்சியை சாத்தியப்படுத்துவதற்கான முன் நிபந்தனையாகவும் அமைகிறது. தொழிலாளி வர்க்கம், உழைக்கின்ற பெரும்பகுதி விவசாயிகளின் ஒற்றுமையை சார்ந்திருப்பதன் மூலமும், தன்னை சுற்றி உழைக்கும் விவசாய பகுதியினரை அணிதிரட்டுவதன் மூலமாகவும் மட்டுமே, தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக்கொள்வதோடு, மூலதனத்தின் ஒடுக்குமுறையிலிருந்து உழைக்கும் விவசாயிகளையும், மனித இனத்தையும் விடுவிக்கின்ற தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும் என்று லெனின்
மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.” பாட்டாளி  “வர்க்கத்துடன் நகமும் சதையுமாக கட்சி இணைந்து” இப்பணிகளை வழிநடத்தி முன்னோக்கி அழைத்துச் சென்றிட வேண்டும்.

புரட்சி என்பது வாய்ச்சொல் அல்ல

“வாழ்க்கை கடினமானதாக இருக்கிறது. எனவே கலகம் செய்யுங்கள் என்று சொன்னால் மட்டும் போதாது. ஒவ்வொரு மேடைப் பேச்சாளனும் இதனைச் செய்ய முடியும். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” என்று தனது “கிராமப்புற ஏழை மக்களுக்கு”
என்கிற நூலில் லெனின் குறிப்பிடுகிறார். மேடைப் பேச்சாளர் போல் பேசிவிட்டு, செயலில் இறங்காமல் இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. மார்க்சியம் என்பதே செயலக்கான வழிகாட்டிதான். அந்த வகையில் உள்ளூர் சமூகத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கினை இப்புத்தகத்தில் பேசும் லெனின், தொழிலாளர்கள் விவசாயிகளிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு,ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை வர்க்க கண்ணோட்டத்தோடு விளக்கி புரிய வைத்திடவேண்டுமென்கிறார்.
பொருளாதார  கோரிக்கைகளுக்கான போராட்டங்களோடு நின்று விடாமல், அதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் அரசியல், தத்துவார்த்த அம்சங்களை புரிய வைப்பதும்தான் கம்யூனிஸ்டுகளின் கடமை என்கிறார்.

எப்படி நவீன தாராளமயக் கொள்கை தொழிலாளியை ஒட்டச் சுரண்டுகிறதோ, அதேபோல் கிராமப்புற விவசாயியையும், அவர்களின் எளிய வாழ்க்கையையுமே அது சீரழித்து விடுகிறது. வாழ வழியின்றி நகர்ப்புறங்களில்அத்துக்கூலிகளாக வேலை செய்ய அவர்கள் தள்ளப்படுகின்றனர். “ஒரு சுயேச்சையான விவசாயி என்ற
நிலையிலிருந்து விவசாயக் கூலியாக மாறி விடுகின்றனர். அல்லது ஒரு தொழிலாளியாக மாறிவிடுகின்றனர். அதனால்தான் இப்படிப்பட்ட விவசாயிகள் எல்லாம் அரைப் பாட்டாளிகள் என்று அழைக்கப் படுகின்றனர். அவர்களும் நகர்ப்புற தொழிலாளர்களின் சகோதரர்களே” என்கிறார் லெனின்.

பாட்டாளிகளும்,  அரை பாட்டாளிகளும்

நகரங்களில் வேலை செய்யும் முறைசாரா தொழிலாளர்களில் பெரும்பாலோர் கிராம பொருளாதார சீரழிவினால் விவசாயத்தை விடுத்து இடம் பெயர்ந்து வந்தவர்களே. படித்து முடித்து வேலை தேடி நகரங்களுக்கு வருபவர்களை விட வாழ வழியற்று
பிழைப்புக்காக இடம் பெயர்பவர்களே அதிகமாக உள்ளனர். இந்தியாவில் சுமார் 90 சதம் உழைக்கும் மக்கள் முறைசாரா தொழிலிலேதான் ஈடுபடுகின்றனர். எனவேதான் இவர்களை திரட்ட தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி வலியுறுத்துகிறது. முதலாளிகளுக்கு குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களின்
கூட்டம் கிடைப்பதற்கு இது உதவுகிறது. முதலாளித்துவம் எப்போதும் வேலையில்லா தொழிலாளர் பட்டாளம் (Lobour Reserve Army) இருப்பதை விரும்பும், அதை அப்படியே பராமரிக்கும். ஏனெனில் அப்போதுதான் அதற்கு குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை பெற முடியும். தொழிலாளர்களின் பேரம் பேசும் உரிமையை மறுக்க ஏதுவாக இருக்கும். தொழிலாளர்களின் உரிமையை பறிக்க உதவும்.

“கிராமப்புற பாட்டாளிகளும், அரைப் பாட்டாளிகளும்தான் இப்படிப்பட்ட (முறைசாரா) வேலைகளை பார்க்கின்றனர். வேலை எங்கு கிடைக்கிறது என்று ஊர் ஊராகச் சென்று தேடித் திரியும் இவர்கள் பெயரளவில் விவசாயிகள். உண்மையில் கூலி உழைப்பாளர்களே ஆவர். இவர்கள்  அனைவரும் நகர்ப்புறத் தொழிலாளர்களுடன் இணைந்து ஒரே சங்கத்தின் கீழ் அணி வகுக்க வேண்டும். கிராமப்புறங்களைச் சென்றடையும் ஒவ்வொரு வெளிச்ச ரேகையும் அறிவு வளர்ச்சியும் இந்த ஒற்றுமையை
பலப்படுத்தி ஐக்கியத்தை ஏற்படுத்தும்” என்கிறார் லெனின்

கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் நகரங்களை நோக்கி வெளியேறும் குறைந்த கூலி தொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுப்படுத்தப்படாத வரை வேலையற்ற தொழிலாளர் படைக்கு பஞ்சமிருக்காது. இது தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதில் முதலாளிகளுக்கு கூடுதலான உதவி
புரியும். “பாட்டாளிகள் கூட்டத்துடன் விவசாயிகள் தள்ளப்படுவதிலிருந்து எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் நாம் விவசாயிகளை காப்பாற்றுகிறோமோ இத்தகைய விவசாயிகளை அவர்கள் விவசாயிகளாக இருக்கும் போதே எளிதாக நம்
பக்கம் வென்றெடுக்க முடியும் அளவிற்கு, எளிதாகவும் சமூக மாற்றம் வெற்றி பெறும்” என்கிறார் ஏங்கல்ஸ்.

விவசாயிகளின் வாழ்நிலை மேம்பாட்டிற்கான போராட்டம் விவசாயிகளை காப்பாற்றுவதோடு, தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதற்கு உதவும் வேலையற்ற தொழிலாளர் படையை குறைக்கும். தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கையை கடந்த இணைந்த அரசியல் போராட்டம் என்பது விவசாயிகள் உள்ளடங்கிய ஒட்டு மொத்த சமூகத்தின் விடுதலைக்கான போராட்டமாக அமையும். அத்தகைய விடுதலைக்கான போராட்டத்தின் அச்சாணியாகவே தொழிலாளர் விவசாயி ஒற்றுமை அமைகிறது.

முதலாளித்துவ ஒழிப்பே உண்மையான சமூக விடுதலை

மூலதனத்தின் வீழ்ச்சிதான் விவசாயிகளை உயர்த்தமுடியும் ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு, பாட்டாளி அரசாங்கத்தால்தான் விவசாயியின் பொருளாதார வறுமையை, அவனது சமூக சீர்கேட்டை முறிக்க முடியும்”. “ஒரு வர்க்கத்திடமிருந்து எடுக்காமல் மற்றொரு வர்க்கத்திற்குக் கொடுக்க முடியாது” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்தை ஒழித்து, அதனிடமிருந்து எடுத்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கொடுக்கும் ஆற்றலை கொண்டிருப்பது பாட்டாளி வர்க்கமே. எனவே “விவசாயிகள் முதலாளித்துவ ஆட்சி அமைப்பை ஒழிப்பதை கடமையாகக் கொண்டுள்ள நகர்ப்புறப் பாட்டாளி வர்க்கத்தை தங்களுடைய இயற்கையான தோழனாக, தலைவனாக காண்கின்றனர்” என்று தனது “லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” புத்தகத்தில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஒட்டுமொத்த சமூக விடுதலைக்கான போராட்டம் இல்லாமல், தொழிலாளர்களுக்கான விடுதலையோ, விவசாயிகளுக்கான வாழ்வோ, ஒடுக்கப்பட்டு, நசுங்கிக் கிடக்கும் மக்களின் வாழ்வில் வெளிச்சமோ, தனித்தனியே சாத்தியமில்லை. அரசுகள் இவர்களின் கோரிக்கைகளின்பால் கனிவோடு செவி சாய்க்கப் போவதில்லை.
ஏனெனில் “அரசாங்கமே வசதி படைத்தவர்களின் கைகளில்தான் இருக்கிறது. பிறரது உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் நபர்களுக்கு எதிராக உழைப்பாளர்கள் தங்களிடையே ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதுடன் ஏழைகள் அனைவரையும் ஒரே உழைக்கும் வர்க்கமாக – பாட்டாளி வர்க்கமாக ஒன்றுபடுத்திட வேண்டும்”என்று
வலியுறுத்தும் லெனின், ஒன்றுபட்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிராக நடத்தும் போராட்டம் எளிதாக இருக்காது என்ற போதும், இறுதி வெற்றி சமூகத்தின் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கே கிட்டும் என்று கூறியதோடு, அத்தகைய வெற்றியை ரஷ்யாவில் சாத்தியப்படுத்தியும் காட்டினார்.

“தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளி விவசாயி ஒற்றுமை என்கிற கோட்பாடு மற்றும் ஜனநாயக புரட்சியை சோஷலிச புரட்சியாக வளர்ப்பது என்ற கோட்பாடுகளை சிறப்பாக செழுமைப்படுத்தி, செயல்படுத்தியதானது மகத்தான ரஷ்யபுரட்சியின் வெற்றியாகும்”  அத்தகைய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, தொழிலாளி, விவசாயி, விவசாய தொழிலாளி மற்றும் இன்ன பிற ஏழை மக்களை ஒருங்கிணைத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்.

உதவிய நூல்கள் மற்றும் தரவுகள்:

  • லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம்புரூமேர் – கார்ல் மார்க்ஸ்
  • கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்ட் நிறுவனங்களின் இரண்டாம்
  • அகில ருஷ்ய காங்கிரசில் லெனின் ஆற்றிய உரை (1919, நவம்பர் 22)
  • கிராமப்புற ஏழைகளுக்கு – லெனின்
  • லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் – ஸ்டாலின்
  • மார்க்சிய லெனினிய அடிப்படைகள் -தொகுப்பு(முன்னேற்ற பதிப்பகம்)
  • மார்க்சிஸமும் விவசாயிகள் பிரச்சனையும் (பிரசுரம்) – ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
  • இந்தியாவில் சாதி முறை: ஒரு மார்க்சிய பார்வை (கட்டுரை) – பிரகாஷ் காரத்


One response to “தொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி”

  1. முதல்ல ஒங்க இரண்டு (C Pl , CPM )கட்சியையும் ஒண்ணா , ஒரே கட்சி யா இணைங்க. மற்றது தானா நடக்கும்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: