மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்


பதில்கள் : ராஜீவ்

Voice: Anandraj

கேரளத்தில் வலதுசாரிகள், ஆதிக்க சக்திகளுடன் இணைந்து கலகத்தை உருவாக்கி வருகின்றனர். கேரள வரலாற்றில் இத்தகைய சக்திகளுக்கான எதிர்வினை எவ்வாறு அமைந்திருந்தது?

இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் கேரளாவில் சமூக சீர்திருத்தப் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்தன. தோழர் இ.எம்.எஸ்.அவதானித்ததைப் போல் கேரளா சாதி, நிலவுடமை, நிலப்பிரபுத்துவ அமைப்புகளின் கையில் இருந்தது. சமூகத் தளத்தில் சாதியும், பொருளாதாரத் தளத்தில் நிலவுடைமையும், அரசியலில் நிலப்பிரபுத்துவமும் அனைத்தையும் தீர்மானித்தன. சமூக ஒடுக்குமுறைகளும் தீண்டாமையும் வலிமையாக இருந்த காலம். முதலாளித்துவம் முதலில் தோட்டப் பகுதிகளுக்குள் வந்தது. தொடர்ந்து தொழிற்கூடங்கள் வந்தன. இருப்பினும் பிற்படுத்தப்பட்டோரில் செல்வந்தர்களாக இருந்தவர்களுக்குக் கூட கோயில்களின் முன்வாசல் வழியாக நுழைய அனுமதி இருந்ததில்லை. ‘ஆலை-மைய’ உற்பத்திக்கு தீண்டாமை போன்ற ஆசாரங்கள் தடையாக இருந்தன. இருப்பினும் இந்தியா எங்கும் அந்த நாட்களில் நடைபெற்றது போல முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்துகொண்டது.  அதன் காரணமாக ஆசாரங்கள் சமூகவெளியில் மாற்றமில்லாமல் தொடர்ந்தன. இவைகளுக்கெதிரான போராட்டங்கள் முன்னமே எழுந்தாலும் கூட, முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய சூழல் சமூக சீர்திருத்தத்திற்கு அனுகூலமானதாக அமைந்தது. ஸ்ரீ நாராயண குரு, பண்டிட் கருப்பன், ஐயங்காளி, சகோதரன் அய்யப்பன் போன்றோர் தலைமையில் நடைபெற்ற சமூக சீர்திருத்த முன்னேற்றங்கள் புதிய மாற்றத்தின் அறுவடைக்கான புதிய விதைகளை விதைத்தன.

       கேரளாவின் சமூக சீர்திருத்த போராட்டங்கள் பெரும்பாலும் ‘ஆண் மைய’ மாகவே இருந்தாலும், பெண்களின் பங்களிப்பும் கணிசமான அளவில் இருந்தது. மார்பை மறைக்கும் உரிமைக்கான போராட்டம் ‘சாணார் லகளை” பெண்களால் முன்னெடுக்கப்பட்டது. பந்தளம் பகுதியில் மூக்குத்தி அணிந்து வந்த பெண்ணின் மூக்கை சாதி இந்து சீமான்கள் அரிந்தனர். இதற்கெதிராக ஆறாட்டுப்புழா வேலாயுத பணிக்கர் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்க மூக்குத்திகள் அணிந்து ஒன்று திரண்டனர். மார்பகங்களுக்கு வரி வசூல் செய்ய வந்த ராஜ கிங்கரர்களுக்கு இரத்தம் சொட்ட தனது மார்பகங்களை அறுத்துக் கொடுத்த ஆலப்புழா மாவட்டத்தின் நங்கேலி வரலாற்றில் ஒளிவிட்டு எரியும் நினைவாய் நிற்கிறாள்.

                     கோயில்களின் முன்னால் வழி நடக்கும் உரிமைக்காக நடந்த வைக்கம் சத்தியாகிரகம், குருவாயூர் ஆலயநுழைவு சத்தியாகிரகம் ஆகியவை சமூக சீர்திருத்தப்போராட்டங்களில் பிரதானமானவை. கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின் அது தலைமையேற்று நடத்தியது பாலியம் போராட்டம். அதற்கு முன் நடந்த போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் முற்போக்கு முகாமில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்டுகள் தலைமைப் பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். போராட்டங்களில் தலைமை தாங்கிய ஏ.கே.ஜி.யும் கிருஷ்ணப்பிள்ளையும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.

              சமூக சீர்திருத்த போராட்டங்களில் சிறப்புமிக்கதொரு போராட்டம் ஐயங்காளி தலைமையில் நடந்த விவசாயிகளின் போராட்டம். கல்விக்கான உரிமைக்காக இந்த விவசாய போராட்டம் நடைபெற்றது என்பது வியக்கத்தக்க ஒன்று. இப்படி பல கட்ட போராட்டங்களின் வாயிலாக திருவிதாங்கூர், கொச்சின் சமஸ்தானங்களில் அனைத்து சமூகப் பெண்களும் கல்வி கற்க முடிந்தது. அரசியல்  நிர்ணய சபையில் கொச்சின் அசெம்பிளியின் பிரதிநிதியாக தாக்ஷாயணி வேலாயுதன் அங்கம் வகித்தார். அந்த சபையின் மிகக் குறைந்த வயது பெண்மணி இவரே.  இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம்  அங்கீகாரம் பெறும்போது, அமெரிக்காவில் கறுப்பின மாணவர்களுக்கு வெள்ளைத்தோல் மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் உரிமை இல்லாமலிருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

               இந்த போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதிலும், சமூக சீர்திருத்த விழுமியங்களை பாதுகாப்பதிலும் கம்யூனிஸ்டுகள் முதன்மையான பங்கினை ஆற்றினர். அந்த வகையில் கம்யூனிஸ்டுகள் தலைமையில் உருவான அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் அளித்த கொடைகள் முக்கியமானவை. தற்போது ஆட்சியில் இருக்கும் பினராயி விஜயன் அரசு பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகலாமென்ற முடிவு எடுத்து, அர்ச்சகர் நியமனமும் செய்தது. இதற்கு  2015 டிசம்பரின் உச்சநீதிமன்ற தீர்ப்பொன்று துணை செய்தது.பிரிவு 25-ன் முற்போக்கான அம்சங்களை மையப்படுத்தி நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு பூஜை புனஸ்காரங்களில் சாதிவேற்றுமைகளுக்கு இடமில்லை என்று தீர்ப்பளித்தது. திருவிதாங்கூர் – கொச்சின் தேவஸ்வம் போர்டுகள் தங்களது கோயில்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களை அர்ச்சகர்கள் ஆக நியமித்தன.

        நம்பிக்கை சார்ந்த அனாசாரங்களுக்கெதிராக (amorality) அந்தந்த சமுதாயங்களுக்குள்ளிருந்தெழும் போராட்டங்களில் தலைமைத்துவ பங்கு வகிப்பது என்பதே கட்சி ஏற்றுக்கொண்ட அணுகுமுறை. கூடவே கட்சி ஆட்சியிலிருக்கும்போது நீதிமன்றங்களின் முற்போக்கான தீர்ப்புக்களை நடைமுறைப் படுத்துவதிலும் கவனம் செலுத்தியிருக்கிறது.ஷரி அத் விவகாரத்தில் பலதார மணத்துக்கு எதிராக பேரா.இர்ஃபான் ஹபீப் போன்றோரின் தலைமையில் துவங்கிய விவாதங்களில் இ.எம்.எஸ். தீவிரமாக ஈடுபட்டார். அன்று கட்சிக்கும் இ.எம்.எஸ்ஸு-க்கும் எதிராக பெரிய அளவில் எதிர்ப் பிரச்சாரம் செய்தார்கள். சி.பி.ஐ.(எம்) இனி குறைந்தது 100 வருடத்திற்கு கேரளாவில் ஆட்சிக்கு வரமுடியாது என்று ஏ.கே..ஆண்டனி ஆரூடம் கூறினார்.ஆனால் 1987 சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு சாதி, மத அமைப்புகளுடைய ஆதரவுமில்லாமல் இ.ஜ.மு. மகத்தான வெற்றியை பெற்றது, இ.கே.நாயனார் முதல்வரானார்.

இப்போது ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ சக்திகள், பிற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயல்படுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி அவர்களை எவ்வாறு எதிர்கொள்கிறது?

                1991-ல்  இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் கொள்கைகளின் காரணமாக கேரளாவும் பாதிப்புக்குள்ளானது. சமத்துவமின்மை வலுவடைந்தது. வேலை பாதுகாப்பு சுருங்கியது. நகரமயமாக்கல் வேகமெடுத்தது. மக்கள்தொகையில் 48% பேர் நகரவாழ்க்கைக்கு மாறும் நிலை உருவாகியது. கூட்டுக்குடும்பங்கள் மிக விரைவாக சிதைந்தன. பகிர்தலின் சூழல் சுருங்கியது. அமைதியின்மை அதிகரித்தது. இவை பக்தியும் மூடநம்பிக்கைகளும் வலுப்பெறும் சூழலை உருவாக்கியது. முன்பு கோயில்களின் திருவிழாக்காலம் என்பது முற்போக்கு கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளால் செழுமையாக அமைந்திருந்தன. ஆனால் மெல்ல மெல்ல ஆன்மீக நிகழ்ச்சிகள் அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றன. ஒரு சில கோயில்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கட்டுப்பாட்டுக்குள் சென்றன. கோயில்களுக்குச் செல்வோருக்கு உணவு கிடைக்கும் ஏற்பாடுகள் உருவாகியது. காலைவேளைகளிலும் கோயிலுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இவையெல்லாம் வகுப்புவாத சக்திகளுக்கு அனுகூலமாக மாறி, பெண்களின் ஒரு சிறு பகுதியை அரசியல் ஆதாயங்களுக்காக தன்வசப்படுத்த முடிந்தது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கெதிராக நடந்த போராட்டங்களின் ஆரம்பகட்டத்தில் பக்தர்களில் ஒரு பகுதியினரை அணிதிரட்ட பயன்பட்டது.

                              ஆனால் கொள்கைகளில், நிலைப்பாடுகளில் உறுதியாக நின்றுகொண்டு சி.பி.ஐ.(எம்) மேற்கொண்ட பரப்புரை நிகழ்ச்சிகள் சூழலில் பெரிய மாற்றங்களை உருவாக்கின. சமீபத்திய உள்ளாட்சித்தேர்தலில் இது நன்றாகவே பிரதிபலித்தது. இடதுசாரி அணிக்கு வாக்குகளும் இடங்களும் அதிகரித்தன. இழிவான நிலைப்பாடு எடுத்த காங்கிரஸிற்கு பின்னடைவு ஏற்பட்டது. போராட்டங்கள் அதிக அளவில் நடைபெற்ற பந்தளம் பகுதியில் பாஜக- வால்  இரண்டு இலக்க வாக்குகளைக் கூட பெற முடியவில்லை.  கோயில் நகரம் என்றறியப்படும் எர்ணாகுளம் மாவட்டம் த்ரிப்பூணித்துறையில் ‘நாமஜெபம்’ உள்ளிட்ட போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றது. அங்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தனது சிட்டிங் சீட்டை இழந்து மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது, இ.ஜ.மு. வெற்றி பெற்றது. 2015-ல் இ.ஜ.மு-க்கு கிடைத்த 600 வாக்குகள் 843 ஆக அதிகரித்தது. காங்கிரஸின் 637 வாக்குகள் 287 ஆக குறைந்தது. பா.ஜ.க-வின் 325 வாக்குகள் 393 ஆக சிறிது அதிகரித்தது. காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க.கூட்டணிக்கும்  கிடைத்த மொத்த வாக்குகளைவிட 163 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றது இ.ஜ.மு.  பா.ஜ.க-விற்கு ஒத்த நிலைப்பாடு எடுத்த காங்கிரசிற்கு 350 வாக்குகள் இழப்பு.

              இது ஒரு குறியீடு.

                                                   உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதற்கெதிராக நடைபெற்ற போராட்டங்களும் அளித்த அனுபவங்களின் அடிப்படையில் நமது அரசியல் மற்றும் கருத்துக் பரப்புரை நிகழ்ச்சிகளை மேலும் வலிமையுடன் முன்னெடுக்க வேண்டும். பா.ஜ.க-விற்கெதிரான போராட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களையும் அணி திரட்டவேண்டுமென்ற கட்சியின் 22-வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்தை செயலில் கொண்டு வர இந்த சூழலை பயன்படுத்த நாம் முயற்சிக்கிறோம். சமூக சீர்திருத்த மரபின் விழுமியங்களை திரும்பப் பெறுவதும் புதிய காலத்தின் ஸ்தூலமான பகுப்பாய்வுகளின் அடைப்படையில் அவற்றை புத்தாக்கம் செய்யவேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இன்று இந்த இயக்கங்களில் சமுதாய அமைப்புகளும் பங்குபெறுகின்றன. சமூக மாற்றங்களுக்கு தலைமை தாங்கிய பல அமைப்புகளும் பல்வேறு காரணங்களால் அந்த பொறுப்புகளை மறந்த நிலையிலுள்ளன. ஆனால் இன்று சூழலின் கவுரவத்தை உள்வாங்கிக்கொண்டு நம்மோடு மையநீரோட்டத்தில் வர தயாராகியுள்ளனர், சமூக சீர்திருத்த விழுமியங்களை மீட்டெடுக்கும் நோக்கில் இவர்களோடு சேர்ந்து சில நிகழ்ச்சிகளை நாம் ஏற்படு செய்து வருகிறோம். சமூக அரசியல் முன்னேற்றமே இதன் வாயிலாக செயலில் வருவது.

                                           மகளிர் இயக்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் அரசியல் அமைப்பு விழுமியங்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளும் கலை இலக்கிய பண்பாட்டு செயற்பாட்டாளர்களும் அணி சேரும் ஒரு விசாலமான முன்னணி உருவாகி வலுப்பெற்று வருகிறது. நிஜத்தில் இன்னொரு முனைவாக்கம் கேரளாவில் உருவாகியிருக்கிறது. பக்தியின் பேரில் அரசியலமைப்பு சட்டங்களை எதிர்க்கின்ற, வகுப்புவாத, அராஜக நிலைப்பாடு எடுக்கின்றவர்களுக்கும் அரசியலமைப்பையும், மகளிர் சமத்துவத்தையும், சமூக சீர்திருத்த விழுமியங்களையும் மதித்து, தூக்கிப் பிடிப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நேர்ப்பிரிவு சூழல் முற்போக்கு அரசியலுக்கு அனுகூலமான சூழ்நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

                                    நவீன தாராளமய கொள்கைகளுக்கெதிரான போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றே இந்தத் தலையீடுகள். மேற்கட்டுமானத்தில் அது உருவாக்கும் தாக்கங்களுக்கெதிராக கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங்கள் வலிமையடையவேண்டும். பண்பாட்டு அரசியலின் தேவையை உணர்ந்து கொண்டு தலையீடு செய்வதற்கும் முழுமூச்சுடன் இறங்கவேண்டும்.

                                   இது பக்தர்களின் நம்பிக்கையையும் சேர்த்து பாதுகாக்கும் போராட்டம். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதின் வாயிலாக மட்டுமே இந்தியா போன்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களின் வெவ்வேறு வகையிலான நம்பிக்கைகளை பாதுகாக்கமுடியும். மதச்சார்பின்மையை வளப்படுத்தியே ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும். இவற்றை உணர்ந்து கொண்ட, விசாலமான உள்ளடக்கமுள்ள பரப்புரை போராட்டங்களுக்கு இன்று கேரளாவில் சி.பி.ஐ.(எம்) தலைமை தாங்குகிறது.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: