ஜி.செல்வா
“அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள்.
அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை ‘கிரிமினல்’ ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். அது கிறுக்குத்தனமானது அல்ல. கிறுக்குத்தனங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவது அது.
அது குழப்பமல்ல; ஒழுங்கு. எளிமையான விஷயம்தான். எனினும் செய்யக் கடினமானது”
“கம்யூனிசத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை. இதிலுள்ள “அது குழப்பமல்ல; ஒழுங்கு’ என்ற வார்த்தைக்கான பொருள் என்ன? அந்த ‘ஒழுங்கு’ கம்யூனிச இயக்கத்திற்குள் உருப்பெற்றது எப்படி? அப்படியான ‘ஒழுங்குக்குள்’ கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உட்பட்டு இருக்க வேண்டியதன் தேவை என்ன?
கம்யூனிசத்தை, மார்க்சியத்தை, பெயரளவில் அல்லது கொள்கைரீதியாக ஏற்றுக் கொள்பவர்கள் கூட, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராததற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குகளை விமர்சனமாக சுட்டி காட்டுகின்றனர். தொடர்ந்து விவாதத்தின் மையப்புள்ளியாய் முன்வைத்து வருகின்றனர்.
இந்தியாவில் எத்தனையோ இடர்ப்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டாலும் அதையெல்லாம் முறியடித்து சமாளித்து இன்று இந்தியாவில் உயிர்த்துடிப்புள்ள இயக்கமாக செயலாற்றுவதற்கு கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்கு மிக முக்கியமானது என உறுதியாக கருதுகிறது. இதன் காரணமாகவே எப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குமுறைகள் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் கட்சி அவ்விவாதங்களுக்கு பதிலளித்தே செயலாற்றி வருகிறது.
கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளை ஏற்று செயலாற்றும் உறுப்பினர்களை மட்டுமே கட்சியில் வைத்திருக்கமுடியும் என உறுதியாக தீர்மானித்து அதை செயல்படுத்த முயன்று வருகிறது கட்சி.
இதை கருத்தியல் நோக்கில் புரிந்து கொள்ள மார்க்சிய ஆசான் லெனினிடமே செல்ல வேண்டும். கம்யூனிச இயக்கத்திற்குள் ஸ்தாபன ஒழுங்கை கொண்டுவந்தவரிடம் கற்றுத் தெளிய, வாசிக்க வேண்டிய புத்தகம் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்”.
சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு 1903ல் எழுதப்பட்ட புத்தகம். அதை இன்றைக்கு கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஏன் வாசிக்க வேண்டும்? அதுவும் ரஷ்யாவில் அன்றிருந்த சூழலுக்கு லெனினால் எழுதப்பட்டதை இந்தியாவில் புரட்சிகர இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ள ஊழியர் இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கேள்விக்கு விடைதேட இக்கட்டுரை முயல்கிறது.
1906 ஆண்டு லெனின் “பத்து ஆண்டுகள்” என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறார். அதில் 1895 முதல்1905 வரை எழுதிய முக்கிய நூல்களை மட்டும் தொகுத்து, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார். அதில் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ நூலினைப் பற்றி குறிப்பிடும் போது அதை எழுதியதற்கான காரணங்களை சுட்டிக் காண்பித்து 18 அத்தியாயம் கொண்ட நூலின் உள்ளடக்கத்திலிருந்து ஏழு அத்தியாயங்களை நீக்கி அதன் சாராம்சத்தை மற்ற அத்தியாயங்களோடு இணைத்து மேம்படுத்தியதை குறிப்பிட்டுள்ளார்.
நூலினை எழுதுவதற்கு தூண்டிய நிகழ்வு போக்குகள்:
ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் உருவாகி வளர்ந்த கருத்து மோதல்கள் முட்டி மோதி இரு குழுவாக பிரிந்து செயலாற்ற வேண்டிய நிலை 1903ல் இரண்டாவது கட்சி காங்கிரஸில் நடந்தேறியது. இம்மாநாட்டில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனின் முன்மொழிந்த வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் போல்ஷ்விக் என அழைக்கப்பட்டனர். போல்ஷ்விக் என்றால் ரஷ்ய மொழியில் பெரும்பான்மை என்று அர்த்தம் . லெனினது நிலைபாடுகளுக்கு மாறான கருத்துக்களை பிளக்கனோவ், மார்த்தவ் போன்றோர்முன்மொழிந்தனர். அவர்களை பின்பற்றியவர்கள் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்.
கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய முடிவுகளின் அடிப்படையில் செயல்படாமல், அதற்கு நேர்மாறாக மென்ஷ்விக்குகள் செயல்பட ஆரம்பித்தனர்.குறிப்பாக, கட்சியின் பத்திரிக்கையான இஸ்க்ரா (தீப்பொறி) வுக்கு கட்சி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் குழுவுடன், தேர்ந்தெடுக்கப்படாத பழைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென பிளக்கனோவ் வற்புறுத்தினார். இதை லெனின் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மத்திய குழுவில் வலுவாக காலூன்றி நின்று கொண்டே சந்தர்ப்பவாதிகளின் மண்டையில் ஓங்கி அடிக்க வேண்டும் என கருதினார். எனவே இஸ்க்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்து லெனின் ராஜினாமா செய்தார். பிளக்கனோவ் கட்சி காங்கிரஸின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்து தன்னிச்சையாக ஆசிரியர் குழுவை உருவாக்கினார். அன்று முதல் மென்ஷ்விக்குகளின் சொந்த பத்திரிக்கையாக இஸ்க்ரா மாற்றப்பட்டது. கட்சி காங்கிரஸின் முடிவுகளுக்கு மாறாக தங்களுக்கு விருப்பமான சந்தர்ப்பவாத கருத்துகளை அப்பத்திரிக்கையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். “செய்யக்கூடாது என்ன?”என்ற தலைப்பில் பிளக்கனோவ் கட்டுரை எழுதினார். இக்கட்டுரையானது லெனின் எழுதிய இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் கையேடாக விளங்கும் “என்ன செய்ய வேண்டும்?” நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது. தொடர்ந்து கட்சி காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக மென்ஷ்விக்குகள் எழுத ஆரம்பித்தனர். ‘கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கற்ற முறையிலான ஒரு பொருளாக’ மார்த்தவ் கருதினர்.
இத்தகைய போக்குகளுக்கு எதிராக கட்சி காங்கிரஸ் முடிவுகளை கட்சி அணிகளுக்கு
தெளிவுபடுத்த விரும்பினார் லெனின். ஆனால் கட்சிப் பத்திரிகையோ மென்ஷ்விக்குகள் வசம் இருந்தது. எனவே தனது கருத்துக்களை ஒரு நூலாக எழுத தொடங்கினார். அதுதான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ . இந்நூலில் கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற நிகழ்வுகளை துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தினார் . இத்தகு பணிக்கு லெனின் ஆதாரமாக எடுத்துக் கொண்டது மாநாட்டு தீர்மானங்கள், பிரதிநிதிகள் பேச்சு, விவாதத்தின் போக்கில் பல்வேறு குழுக்கள் தெரிவித்த கருத்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநாட்டு மினிட்ஸ் புத்தகங்கள்.
மினிட்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம்
மாநாடுகளில் மினிட்ஸ் குழுவை தேர்ந்தெடுப்பதன் தேவையை, அதில் செயல்படுபவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை, லெனினது வார்த்தைகளை வாசிக்கையில் உணரமுடியும்.
” கட்சிக் காங்கிரசின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் நமது கட்சியின் உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக விளங்குகின்றன. இந்த வகையில் அவசியமானதாயும், துல்லியம், பூரணத்துவம், சர்வாம்சத்தன்மை, அதிகாரபூர்வ தன்மை ஆகியவற்றில் ஈடு இணையற்றது.
இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தாங்களாகவே தீட்டிய கருத்துகள், உணர்வுகள், திட்டங்கள் ஆகியவற்றின் படம் இது.அரசியல் சாயங்களின் ஒரு சித்திரம். அவற்றின் பரஸ்பர உறவுகள், போராட்டங்கள் ஆகியவற்றை காட்டும் ஒரு கருவி” என்கிறார் லெனின்.
“உட்கட்சி விவாதங்களில் விவேகமான பங்களிப்பை செலுத்த விரும்பும் ஒவ்வொரு தோழரும், கட்சி உறுப்பினரும், நமது கட்சி காங்கிரஸ் பற்றி கவனமாக படிக்க வேண்டியது அவசியம்” எனச் சொல்லும் லெனின், “கவனத்துடனும் சுயமுயற்சியால் படித்து அறிவதன் மூலம் மட்டுமே, சொற்பொழிவுகளின் சுருக்கங்கள், விவாதங்களின் சுவையற்ற பகுதிகள் சிறு ( சிறியவையாக தோன்றும்) பிரச்சினைகள் மீது சில்லறை மோதல்கள் ஆகியவற்றை கொண்டு முழுமையானதொரு வடிவத்தை இணைத்து காணமுடியும்.”
இப்படியாய் எழுதப்பட்ட இந்நூலை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் செல்லாமல் தடுப்பதற்கு சிறு குழுவினர் முயற்சி செய்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று இப்புத்தகத்தை மத்திய குழு தடை செய்ய வேண்டும் என்று பிளக்கனோவ் வாதிட்டார். இத்தகைய தடைகளை தகர்த்து தான் லெனினது நூல் கட்சி உறுப்பினர்களிடம் சென்றடைந்தது.
கட்சி காங்கிரஸை எப்படி புரிந்து கொள்வது?:
கட்சி அமைப்பு குறித்து தத்துவார்த்த ரீதியில் விரிவாக மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் இது. குறிப்பாக கட்சி அமைப்பு முறை, கட்சி உறுப்பினர் என்பவர் யார்? அவரது செயல்பாடுகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ? என்பது போன்ற வரையறைகளை இந்நூல் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கியுள்ளது.
விவாதத்திற்கு உள்ளான இரண்டாவது கட்சிக் காங்கிரசின் பிரதான பணிகளை சுட்டிக் காண்பிக்கும் லெனின் கட்சி காங்கிரஸ்-ஐ எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுகிறார்.
நூலின் ஓட்டத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ள கருத்துக்கள் இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையவை.
“கட்சிக் காங்கிரசின் எல்லா முடிவுகளும், அது நடத்தி முடிக்கும் எல்லாத் தேர்தல்களும், கட்சியின் முடிவுகளாகும். அவை கட்சி அமைப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாகும். எக்காரணம் கொண்டும் அவற்றை ஏற்றுக் கொள்ள எவரும் மறுக்க கூடாது. கட்சி காங்கிரசால் மட்டுமே அவை நீக்கப்படவோ அல்லது திருத்தப்படவோ முடியும்.
மேலும் கட்சி காங்கிரஸ் முடிவுகளையும், தேர்தல்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதை கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகக் கருத வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். அம் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுக்களின் நிலைப்பாடுகளை லெனின் ஒவ்வொன்றாய் நம்முன் வைக்கிறார். அவ்வாறு சொல்லும் பொழுது “ஓரிடத்தில் முக்கியமல்லாத சிறு பிரச்சினைகள் மீது நடந்த எண்ணற்ற வாக்களிப்புகளை நாம் விட்டுவிடுவோம். நம்முடைய காங்கிரஸின் பெரும்பகுதி நேரத்தை இதுதான் எடுத்துக் கொண்டது” என்கிறார். இது அன்று மட்டுமல்ல; இன்றும் தொடர்கிறது என்பதை நமது அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. அது மட்டுமல்ல; மாநாட்டு நிகழ்வுகளை பிரதிநிதிகளின் செயல்பாடுகளை லெனின் கூர்மையான விவாதங்களுக்கு மட்டும் உட்படுத்தவில்லை. நையாண்டிக்கும் நமட்டு சிரிப்புக்கும் வாசகரை உள்ளாக்கும் வகையில் தனது எழுத்தை கையாண்டுள்ளார்.
அகநிலை பார்வையற்ற ஆய்வு
லெனின் தனது நூலில் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மைய தளமாக கொண்டு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். ஒன்று அரசியல் முக்கியத்துவம் பற்றியது. அதாவது கட்சிக் காங்கிரசில் உருவெடுத்த பெரும்பான்மை – சிறுபான்மை பிளவுக்கான அம்சங்கள். இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற கருத்தியல் போராட்டத்தை தளமாக கொள்கிறார்.
இரண்டாவது, கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு இஸ்க்ரா பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து அவர் விடுபட்ட பிறகு வந்திருந்த கட்டுரைகளை, எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.
கட்சிக் காங்கிரசில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுவினரை எதிர் கொள்வதன் வழியாக “அகநிலை பார்வையற்று” செயலாற்ற நமக்கு கற்றுக் கொடுக்கிறார் லெனின். அதுமட்டுமல்ல; மாற்றுக் கருத்துக்களை எப்படி ஜனநாயகரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பக்குவமாக சுட்டி காண்பிக்கிறார். அதேவேளையில் வார்த்தை ஜாலங்களில் வித்தை காண்பிப்பவர்களை, உதட்டளவில் புரட்சிகரமாக பேசி செயலளவில் ஜம்பமாக செயல்பட்டோரை, கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகிறார்.
உதாரணத்திற்கு இந்நூலில் பிளக்கனோவ், மார்த்தவ் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். பிளக்கனோவ் லெனினுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். மார்த்தவ் சமகாலத்தவர்.ஆனால் அவர்களது பங்களிப்புகளை மிக உயர்வாக மதிப்பிடுவது மட்டுமல்ல; அதை கட்சி அணிகளுக்கும் கடத்துகிறார். இவர்களை வர்க்க பகைவர்கள் போல் புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்தியல் குறைபாடுகளைத் தான் முதன்மையாக கொள்ளவேண்டும் என்பதற்காகவே எத்தனை அடிக்குறிப்புகள். இதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதாரணம் என்பதை பெருமை பொங்க வாசிப்பின் வழி உணரமுடிகிறது.
குழுவாத போக்குக்கு “தான் எதிரி என தம்மை தாமே அழைத்துக் கொள்கிறார்” மார்த்தவ். இருப்பினும் கட்சி காங்கிரசுக்கு பிறகு அவற்றின் ஆதரவாளர் ஆனார் என கிண்டல் அடிக்கும் லெனின் அதை ஆதாரத்துடன் எடுத்து சொல்கிறார்.
கட்சி காங்கிரசுக்கு பிறகு ஸ்தாபன கோட்பாடுகளை எதிர்த்து, லெனினை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை இஸ்க்ரா பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகிறது. இக்கட்டுரையின் சில அம்சங்களில் மாறுபடுவதாக சொல்லி மொத்தத்தில் அக்கட்டுரையை ஏற்றுக்கொண்டு, அதன் ஆய்வுரைகளை ஒப்புக்கொள்கிறது ஆசிரியர் குழு. இதை விரிவாக எடுத்துச் சொல்லும் லெனின், “கட்சிக் காங்கிரசின் போது தாங்கள் சொன்னதற்கு நேர் விரோதமாக காங்கிரஸுக்கு பிறகு பேசும் ஆசிரியர் குழுவை கொண்ட ஒரு கட்சிப் பத்திரிகையை எவராவது என்றாவது கண்டதுண்டா?” என கேள்வி எழுப்புகிறார்.
நூலின் உள்ளடக்கம்
1, மார்க்சிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி
2, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட படைப் பகுதி
3, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளுக்கெல்லாம் தலைசிறந்த உயர்ந்த அமைப்புகளாகும்.
4, பல லட்சக்கணக்கான தொழிலாளிவர்க்க மக்களுடன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இணைப்பின் உருவமே கட்சி.
5, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்சி இருக்க வேண்டும்.
6, தத்துவ ரீதியான ஒற்றுமை மட்டுமல்ல; எதார்த்தத்தில் தெரியும்படியான ஸ்தாபன ஒற்றுமையோடு கட்சி இருக்க வேண்டும்.
இந்த கருதுகோள்களை விளக்கி, ஏன் இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும் என்பதை, தனது காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் வழி லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஸ்தாபனம் குறித்த அடிப்படைகளை எடுத்துரைத்துள்ளார்.
வர்க்கத்தின் ஒரு பகுதி என்றால் என்ன?
வேலைநிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பவர்களை கட்சி உறுப்பினராக கருத வேண்டும் என்ற வாதம் கட்சிக் காங்கிரசில் முன்வைக்கப்பட்டது. அதற்கு லெனின் “கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாக போட்டு யார் குழப்புகிறார்களோ அவர்கள் கட்சியின் உணர்வை ‘ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரனுடைய’ உணர்வின் அளவுக்கு குறைத்து தாழ்த்துகிறார்கள்” என கடுமையாக விமர்சிக்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சி ஆனது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி ஒரு பிரிவு. ஆனால் தொழிலாளி வர்க்கம் பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இத்தகைய பகுதிகளை கட்சியாக கருதக்கூடாது. காரணம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான வர்க்க உணர்வு கொண்ட பகுதிதான் மார்க்சிஸ்ட் படைப்பகுதி. ஏனெனில் சமூக வாழ்க்கை, சமூகத்தின் வளர்ச்சி விதிமுறைகள் குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகள் பற்றிய அறிவையும் ஆயுதமாக கொண்டுள்ளது இப்படை. மேலும் இந்த காரணத்தினால்தான் அதனால் தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்கி நடத்தி செல்ல முடிகிறது. வழிகாட்டி செயல்பட முடிகிறது.ஆகவே பகுதியை முழுமையாக போட்டு குழப்பக்கூடாது என சுட்டிக் காட்டுகிறார் லெனின்.
முதலாளித்துவ சமூகத்தின் கீழ் இருக்கும் போது
வர்க்கத்தின் முன்னணிப் படையாக உள்ள கட்சியினரின் உணர்வின் அளவிற்கு, செயல்களின் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் முழுவதும் எழும்பி உயரும் என்று எந்த சமயத்திலாவது நினைத்தால் அது கண்மூடித்தனமான வெறும் திருப்தியாகவே இருக்கும். வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட பகுதியினருக்கும் வெகுமக்களுக்கும் உள்ள உணர்வு மட்ட வித்தியாசத்தை பார்க்க தவறுவதை, குறைத்து மதிப்பிடுவதை “நம் முன் நிற்கும் வேலைகளின் பிரம்மாண்ட அளவை பார்க்காமல், கண்களை மூடிக் கொள்வதற்கு ஒப்பாகும். மேலும், இந்த வேலைகளை மிகவும் சுருக்கிக் குறுக்குவதே என்றே அர்த்தம்” என எடுத்துரைக்கிறார்.
அமைப்புரீதியாக ஒன்று திரட்டுவதின் தேவை
“கட்சி உறுப்பினர் என்ற பட்டம் எந்த அளவுக்குப் பரந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது” என மார்த்தவ் தனது கருத்தை வலுவாக முன்வைக்கிறார். அதற்கு லெனின் ” வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் எவ்வளவு தூரம் அமைப்புரீதியாக ஒன்று திரட்டி உருவாக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கட்சியை உருவாக்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச அமைப்புக் கோட்பாடுகளுக்கு எத்தகைய நபர்கள் தங்களை உட்படுத்தி கொள்வார்களோ, அத்தகைய நபர்களை கட்சிக்குள் உறுப்பினர்களாக அனுமதிக்க வேண்டும்” என்கிறார். மேலும் “கட்சியின் கட்டுப்பாட்டை பார்த்து முகம் சுளித்து பின்வாங்குபவர்கள், கட்சியின் அமைப்பில் சேர்வதற்கு பயப்படுபவர்கள் கட்சிக்கு உறுப்பினர்களாக தேவைப்படவில்லை. கட்டுப்பாட்டையோ, அமைப்பையோ பார்த்துத் தொழிலாளர்கள் பின்வாங்குவதில்லை. கட்சியில் உறுப்பினராக சேருவது என்று தீர்மானித்து விட்டால் அவர்கள் மனப்பூர்வமாக அமைப்பில் சேருகிறார்கள். தன்னந்தனியான போக்குடைய படைப்பாளிகள்தான் கட்டுப்பாட்டையும் அமைப்பையும் கண்டு பயப்படுகிறார்கள்” என்கிறார்.
கட்சி, அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட சாதாரண பகுதி மட்டுமல்ல. தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வடிவங்களிலெல்லாம் தலை சிறந்த, உயர்ந்த அமைப்பு வடிவம் ஆகும். “அதிகாரத்திற்காக பாட்டாளிவர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் இல்லை” என்பதே லெனினியத்தின் அடிப்படை.
கட்டுப்பாடுகளை ஸ்தாபன ஒழுங்கை கட்சி முன்னிறுத்துவதன் அடிப்படைகள்
“தன்னுடைய கூட்டுக்குள்ளேயே எந்த கட்சி அடைபட்டு கிடைக்கிறதோ, பொதுமக்களிடமிருந்து எந்த கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, தன்னுடைய வர்க்கத்துடன் எந்த கட்சி தொடர்பு அற்று இருக்கிறது அல்லது அந்த தொடர்பை தளர்த்திக் கொள்கிறதோ, அந்த கட்சி மக்களுடைய நம்பிக்கையை ஆதரவை இழப்பது திண்ணம். இதன் பயனாக அது அழிந்தும் போகும். பூரணமாக வாழ்வதற்காகவும், வளர்ச்சி அடைவதற்காகவும் மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்” இவ்வாறு லெனின் சொல்வதை கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் கூட அதை அடைய கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து சொல்லும்போது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். அந்த ஒழுங்கை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு லெனின் நடத்திய கருத்தியல் போராட்டத்தை கூர்ந்து வாசிப்பது இன்றைய தேவைக்கு மிக முக்கியமானது.
கட்சி ஸ்தாபனத்தை ‘கொடூரமானதாக கருதுவதை, முழுமைக்கு பகுதி கட்டுப்படுவதை, பெரும்பான்மைக்கு சிறுபான்மை உட்படுத்தப்படுவதை, ‘பண்ணை அடிமைத்தனமாக’ கூக்குரலிட்டு கத்தி பேசுவதை லெனின் தனது வாதங்களின் வழி நையப் புடைக்கிறார்.
“கட்சியை கட்டுவதில் தொடர்ந்து ஈடுபடும்போது தொழிலாளி வர்க்க ஊழியரின் மனோபாவத்திற்கும் தன்னுடைய அராஜகப் பேச்சுகளை ஜம்பமாகப் பேசுகிற முதலாளித்துவப் படிப்பாளியின் சிந்தனை போக்கிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரண உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ‘தலைமையில் உட்கார்ந்து இருப்பவர்களும்’ தங்களது கடமையை நிறைவேற்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்று வற்புறுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு வழிகாட்டி புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட லெனின் தன்னை ஓரிடத்தில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி பேசும் வார்த்தைகள் நெகிழ்ச்சி அளிக்கிறது.
“நான் அடிக்கடி திகில் தரும் எரிச்சலான நிலையில் சீற்றம் கொண்டவனாக நடந்திருக்கிறேன்; செயல்பட்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். என்னுடைய அந்தப் பிழையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்ள விருப்பமுள்ளவனாகவே இருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று கருதப்படுமேயானால், அது சூழல், எதிர்செயல்கள், போராட்டம் ஆகியவற்றின் இயற்கையான விளைவே.
அவ்விளைவுகளை ஆராய்ந்து பார்த்தோமேயானால், கட்சிக்கு ஊறு விளைவிப்பதாக எதுவுமில்லை. சிறுபான்மையை புண்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் என்று சொல்லக்கூடியது எதுவுமில்லை.” என்கிறார்.
அறிவுஜீவிகள் யார்? முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களது உணர்வோட்டம் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதை விரிவாக ஆய்வுக்கு இந்நூலில் உட்படுத்தி உள்ளார். ஓர் அறிவுஜீவி எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்தையும் எடுத்துரைத்துள்ளார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த தலைவர் லீஃப்னெக்ட்-ஐத் தான் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.
“அவர் சிறப்பான எழுத்தாளராக இருந்தும், ஓர் அறிவுஜீவியின் தனிப்பட்ட மனப்பான்மையை முற்றிலும் இழந்து விட்டு, தொழிலாளர்களுடைய அணியில் மகிழ்ச்சியுடன் நடைபோட்டார். அவருக்கு என ஒதுக்கித் தரப்பட்ட எந்த பதவியிலும் பணிபுரிந்தார். மாபெரும் லட்சியத்திற்காக தன்னை முழு மனதோடு ஆட்படுத்திக்கொண்டார்” என புகழாரம் சூட்டுகிறார் லெனின்.
நிறைவாக,
தமிழகத்தில் உறுதியான, புரட்சிகர குணாம்சமிக்க கட்சியை கட்டுவதில் உள்ள பலவீனமான அம்சங்களை மத்திய குழு சுட்டிக்காட்டி உள்ளது. அப் பலவீனங்களை களைய கட்சி முழுவதும் எப்படி செயல்படுவது என பல்வேறு வழிகாட்டுதல்களை கட்சியின் மாநிலக்குழு விவாதித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளவும், இன்னும் முழு ஈடுபாட்டுடன் செயல் தளத்தில் நடைமுறைப்படுத்தவும், லெனினது ” ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” நூல் நமக்கு வழிகாட்டும்; உற்சாகமூட்டும். இது நான்கு சுவர்களுக்குள் உருவான கருத்தியல் பெட்டகம் அல்ல. மாறாக, கள அனுபவங்களை மார்க்சிய தத்துவ ஒளியின் கண் கொண்டு பார்த்து சித்தாந்தரீதியான உரையாடல்களை ஜனநாயகரீதியாக மேற்கொண்டு உருவாக்கப்பட்ட ஆய்வு நூல். அதைவிடவும் முக்கியமானது, இப்படியாகக் கட்டப்பட்ட கட்சியின் மூலம் தான் ரஷ்ய புரட்சி சாத்தியம் ஆனது.
Leave a Reply