என். குணசேகரன்
லெனின் சிந்தனைகள் ஏன் லெனினியம் என அழைக்கப்படுகிறது?
ஒரு நாட்டில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம், லெனினது வாழ்க்கையும் அவரது சிந்தனைகளும். எனவேதான் லெனின் லெனினியமாக இன்றும் வாழ்ந்து, அவரது எழுத்துக்கள் வழியாக வழிகாட்டி வருகின்றார்.
கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் பிரச்னை, தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான்.
சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தேவைகளில் ஆதாயம் காண தத்துவத்தை பலி கொடுக்கும் தவறு நிகழ்வதுண்டு. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்திடாமல் வெறும் தத்துவ சொல்லாடல்களை முழக்கி தவறுகள் செய்கிற நிலையும் ஏற்படுவதுண்டு.
இந்த இரண்டு வித தவறுகளையும் களைந்து புரட்சியை நோக்கி முன்னேறிட லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது.
புரட்சியின் பொதுக் கோட்பாடுகள்
மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் லுகாக்ஸ் “லெனினது ஒருங்கிணைந்த சிந்தனையைப் பற்றிய ஆய்வு” (Lenin: A study in the Unity of His thought) என்ற நூல், நிலைத்த புகழ்பெற்ற நூல். இது அடுத்தடுத்த மார்க்சிய தலைமுறைகளை லெனினியத்தில் நெறிப்படுத்தியது.
கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் என அறியப்படுகிற பலர், மார்க்சியம் பற்றி ஒரு கருத்தை தொடர்ந்து எழுதி வருகின்றனர். ‘மார்க்ஸ் ஐரோப்பிய நிலைமைகளில் எழுதிய கருத்துக்கள் எல்லாம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது; அது மேலைநாட்டுத் தத்துவம்; கீழை நாடுகளுக்குப் பொருந்தாது’ என்ற கருத்துக்களை பல கோணங்களில் வாதிட்டு வருகின்றனர்.
மார்க்ஸ் ஆங்கிலேய தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆராய்ந்துதான் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கினார் என்பது உண்மையே. ஆனால் பிரிட்டிஷ் நாட்டு தொழில் நிலைமைகளில் துவங்கி உலக முதலாளித்துவத்த்தின் வரலாற்று வளர்ச்சியையும், அது இயங்குகிற அடிப்படை விதிகளையும் உருவாக்கினார். குறிப்பான ஒரு நிகழ்விலிருந்து பொது விதிகளுக்கு வந்தடைந்த மார்க்சின் மேதைமையை மேலோட்டமான சிந்தனைக்கு ஆட்பட்ட அறிவுஜீவிகளால் உணர முடியாது.
அதே போன்று, லெனின், ரஷ்ய நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல முடிவுகளுக்கு வந்தது உண்மைதான். ஆனால் உலகளாவிய சோஷலிச மாற்றத்தை நோக்கிய, புரட்சிக்கு வழிகாட்டுகிற புரட்சியின் பொதுக் கோட்பாடுகளை கண்டறிந்தவர் லெனின். லெனினியத்தின் மகத்துவம் இது. இதனையும், ஆழ்ந்த வாசிப்பு இல்லாத சாதாரண ‘அறிவுஜீவிகள்’ உணர வாய்ப்பில்லை.
கனவிலிருந்து சாத்தியப்பாடு நோக்கி…
“லெனின் எப்போதுமே பிரச்சனைகளை இந்த சகாப்தத்தின் பிரச்னைகள் என்ற முழுமைத் தன்மையுடன் பார்த்தார்” என்று ஜார்ஜ் லுகாக்ஸ் எழுதுகிறார்.
இதில் முக்கிய சில அம்சங்கள் அடங்கியிருக்கின்றன.
1) முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டமாக தற்போதைய காலம் விளங்குகிறது.
2) இது பாட்டாளி வர்க்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
3) அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்குமான இறுதிப் போராட்டத்தை நடத்திட எண்ணற்ற வாய்ப்புக்களை தவிர்க்க இயலாதவாறு இன்றைய நிலை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.
4) இந்த இறுதிப் போராட்டமே, மனித குல விடுதலைக்கு இட்டுச் செல்லும்.
இதுவே லெனினிய சிந்தனைகளின் அடிப்படை.
வரலாறு உருவாக்கியுள்ள இன்றைய காலம், முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம் என்ற அழுத்தமான இடத்திலிருந்துதான் லெனின் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக்கொண்டார். புரட்சியை கனவு என்கிற நிலையிலிருந்து, புரட்சியை சாத்தியமான ஒன்றாக அணுகுகிற தனிச்சிறப்பு கொண்டது லெனினியம்.
புரட்சி என்ற விரிந்த பார்வையிலிருந்து அன்றாடப் பிரச்னைகளை அணுகும் கலையை லெனினியம் கற்றுத் தருகிறது. லெனியத்தின் பிரிக்க முடியாத கூறு, மார்க்ஸ், ஏங்கல்ஸ் வகுத்தளித்த இயக்கவியல் பொருள்முதல்வாதம்.
இயக்கவியலும் புரட்சியும்
லெனின் ஹெகலின் இயக்கவியல் பற்றிய வாசிப்பினை இலண்டன் அருங்காட்சியக நூலகத்தில் மேற்கொண்டார். இந்தக் காலம் அவரது வாழ்க்கையில் மிகவும் சோதனையான காலம்.போல்ஷ்விக் கட்சி மிகவும் சிதைந்து இருந்த நிலை. பிரச்சாரம், கிளர்ச்சி எதையும் செய்ய இயலாத ஒரு சூழல். முதல் உலகப் போர் மூண்ட சர்வதேச சூழ்நிலை.
இந்த பாதகமான சூழலை வாசிப்பு மற்றும் ஆய்வுக்கான வாய்ப்பாக லெனின் பயன்படுத்திக் கொண்டார். ஒரு புறம் ஹெகலிய இயக்கவியலையும், மறுபுறம், அதுவரை உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியம் பற்றிய தத்துவங்களையும் ஆராய்ந்தார் லெனின்.
மார்க்ஸ் தனது மூலதனம் பற்றிய ஆய்வுகளுக்கு ஹெகலின் இயக்கவியல் ஆய்வு முறையை பின்பற்றினார். ஹெகலின் பார்வையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து மார்க்ஸ் தனக்கே உரித்தான இயக்கவியல் பொருள்முதல்வாதம் எனும் ஆய்வுமுறையை உருவாக்கினார்.
இயக்கவியல் குறித்த ஆழமான வாசிப்பினை மேற்கொண்டு, அந்த அறிவியல் முறையை முழுமையாக சுவீகரித்த நிலையில்தான் லெனின் புரட்சி பற்றிய நிலைபாடுகளை எடுத்தார். இரண்டு தளத்தில் இந்த நிலைபாடுகளை அவர் மேற்கொண்டார். ஒன்று உலகச்சூழல்; மற்றொன்று ரஷ்ய சூழல்.
உலக முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் எனும் நிலைக்கு மாறுகிற நிகழ்வினையும், அதன் பல தன்மைகளையும் லெனின் கண்டறிந்து அதன் எதிர்கால வரலாற்றுக் கட்டத்தை அவர் காண்கின்றார். இது முதலாளித்துவ முறையின் இறுதிக்கட்டம் எனவும், அடுத்து, சோஷலிச புரட்சி யுகம் துவங்குகிறது எனவும் லெனின் முடிவுக்கு வருகின்றார். இதுவே அவரது ”ஏகாதிபத்தியம்:முதலாளித்துவத்தின் உச்சகட்டம்”என்ற நூலின் சாராம்சம்.
அனைத்துப் பொருட்களும், சமூக நிலைமைகளும் மாறிக் கொண்டும், இடையறாது இயங்கிகொண்டும் இருக்கின்றன; அனைத்திலும் இயங்கும் உள்முரண்பாடுகள் மாற்றங்களாக வெடிக்கின்றன என்பது போன்ற பல இயக்கவியல் விதிகள் முதலாளித்துவம் பற்றிய லெனின் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
இதே போன்று ரஷ்ய நிலைமைக்கும் இயக்கவியலைப் பொருத்தி பல முடிவுகளுக்கு லெனின் வருகின்றார். கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ ஆட்சி மாற்றம் 1917-பிப்ரவரியில் நடந்த அந்த நிகழ்வு நிரந்தரம் அல்ல. அது அடுத்த கட்டமான சோசலிசப் புரட்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என லெனின் அழுத்தமான ஒரு கருத்துக்கு வந்தடைகிறார்.
தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற கருத்துகளைக் கொண்ட “ஏப்ரல் கருத்தாய்வுரைகள்” எனும் குறிப்பை அவர் வெளியிட்டார். தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு ஏற்பட்ட போதும் விடாப்பிடியாக போராடி புரட்சியை வெற்றி பெறச் செய்தார். இது உயரிய இயக்கவியல் அறிவின் வெளிப்பாடு. இது வரலாற்று இயக்கத்தில் சோசலிசப் புரட்சிதான் என்ற அடுத்த கட்டம் என்பதை ஆழமாக உணர்ந்த நிலையில் ஏற்பட்ட அசாதாரணமான துணிவு.
அடுத்த கேள்விகள்
முதலாளித்துவத்தின் அழிவும்,புரட்சியின் பிறப்பும் தவிர்க்க இயலாதது என்ற முடிவினை மார்க்சிய வழியில் வந்தடைந்த லெனின் அடுத்து சில கேள்விகளை எழுப்பினார்.
புரட்சி எனும் சமூகச் சித்திரத்தை தீட்டிடும் பணியினை யார் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்? எந்த வர்க்கம் புரட்சிக்குத் தலைமையேற்று வெற்றி வகை சூடிடும்?
லெனினுக்கு முந்தைய தலைமுறையினரும் இதனை சிந்தித்துள்ளனர். பொதுப்படையாக, புரட்சிக்கு,“மக்கள் தலைமை”ஏற்பார்கள் என்று தெளிவற்ற கருத்துக்களை அவர்கள் கொண்டிருந்தனர். ரஷ்யாவில் தோன்றிய நரோத்னியம் இப்பிரச்னையை வெகுவாக குழப்பிக்கொண்டிருந்தது.
முதலாளித்துவத்தை அழிக்கும் வல்லமையும் ஆற்றலும் கொண்டது பாட்டாடளி வர்க்கமே என்ற முடிவுக்கு ஏற்கனவே மார்க்ஸ் வந்தடைந்தார். அதனை முதலாளித்துவம், போர்வெறி கொண்டு, நாடுகளை பங்கு போட்டுக் கொள்ளும் மூர்க்கத்தனத்தோடு, ஏகாதிபத்தியமாக வடிவெடுத்த சூழலில், பாட்டாளி வர்க்கப் புரட்சி கருத்தாக்கத்தை லெனின் வளமை கொண்டதாக மாற்றினார்.
அதிலும் ரஷ்ய நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய நேச சக்தியாக விவசாயப் பிரிவினர் விளங்குவார்கள் என்பதையும், புரட்சியை அரங்கேற்றுவது “தொழிலாளி-விவசாயி” கூட்டணி என்பதையும் நிறுவினார் லெனின். இந்தக் கூட்டணி ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கங்களின் புரட்சிக் கூட்டணி என்று கூறினார் அவர். இதனை வார்த்தைகளால் விளக்கியது மட்டுமல்ல; நடைமுறையில் அந்தக் கூட்டணியை உருவாக்கி ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தினை கைப்பற்றும் புதிய வரலாற்றையும் லெனினியம் படைத்தது.
இது தானாக நிகழ்ந்திடாது. தலைமையேற்கும் தகுதியை பாட்டாளி வர்க்கம் உணர்வு ரீதியில் பெற்று உயர்ந்திட வேண்டும். இது புரட்சிகர கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி ஆற்ற வேண்டிய கடமை. அத்தகைய கட்சியை எவ்வாறு கட்ட வேண்டும் என்பதனையும் லெனினியம் விளக்குகிறது. புரட்சி, இந்த சகாப்தத்தில் பிறப்பெடுக்க உள்ளது என்ற பின்னணியில்தான் கட்சிக் கோட்பாடுகளை லெனின் வரையறுத்தார்.
புரட்சிகர
கட்சி
உழைக்கும் வர்க்கங்கள் புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோஷலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும். அந்தக் கட்சி வெறும் சொல்லளவில் புரட்சி முழக்கத்தைக் கொண்டதாக இருக்கக் கூடாது. அது .மார்க்சிய வரலாற்றுக் கோட்பாட்டினை நன்கு சுவீகரித்து இருக்க வேண்டும். வர்க்கங்களின் போராட்டம் வரலாற்றினை எவ்வாறு மாற்றி வந்துள்ளது என்பதனை துல்லியமாக அது புரிந்து கொண்டு சோஷலிச வியூகம் அமைக்கும் கட்சியாக அது இருக்க வேண்டும்.
முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி, அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வந்த பாட்டாளி வர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.
இதனை தொழிலாளி, விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் அமைப்புக்களும் முக்கிய பங்காற்றின. இந்த மகத்தான கடமைகளை சாதித்திட லெனினியம் பாதை அமைத்தது.
அதாவது, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தனது சுரண்டல் நலனுக்கான கருத்துக்களையே சமூகத்தின் கருத்தாக மாற்றிவிடுகிறது. முதலாளித்துவ அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஒருபுறம் முதலாளிகளின் மூலதனத்தைப் பெருக்கிடும். மறுபுறம் உழைக்கும் மக்களின் நலனை பாதிக்கும். ஆனால், அந்தக் கொள்கைகள் , தனக்கும் பயன் தரும் என்று தொழிலாளியை நம்ப வைத்து, தொழிலாளர்களையும் தனது செல்வாக்கு வளையத்திற்குள் முதலாளித்துவ வர்க்கம் தக்க வைத்துக் கொள்கிறது.
அதிலிருந்து உழைக்கும் வர்க்கத்தை மீட்டெடுக்க மார்க்ஸ் புரட்சிகர அமைப்பின் தேவையை உணர்த்தினார்.லெனின் புரட்சிகர கட்சி ஸ்தாபனம் எனும் கருவியை வடிவமைத்து அதனை திறம்பட முன்னெடுக்க வேண்டுமென வழிகாட்டினார்..
ரஷ்யாவில் உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் முடங்கி, பின்தங்கிய உணர்வு நிலையில், இருந்தது. அதனை உணர்வு ரீதியில் புரட்சிக்கு தயார் செய்தது, உள்ளூர் கிளையிலிருந்து, மேல்மட்டம் வரை கட்டப்பட்ட, கம்யூனிஸ்ட் அமைப்புக்கள்.
தத்துவம், நடைமுறை
1902-ல் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு வழிகாட்டி நூல். முதலாளித்துவ அரசினை எதிர்த்த போராட்டங்கள் எழுவது இயல்பானது. ஆனால் கம்யூனிஸ்டுகள் பின்தங்கிவிடக்கூடாது. போராட்டங்களுக்கான தத்துவப் பின்னணியை தொழிலாளர்களுக்கு விளக்கிட வேண்டும்.
அதாவது, முதலாளித்துவ முறைதான் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம்; அதனை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் தத்துவ போதனை; முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களை அகற்ற உரிய நடைமுறைகளை வகுத்திட வேண்டும். தத்துவம், நடைமுறை என்ற இரண்டு உலகிலும் இடையறாமல் சஞ்சரித்து, இடையறாமல் பயணம் செய்யும் கட்சிதான் புரட்சியை சாதிக்கும். அப்படிப்பட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துவது லெனினியம்.
“இடதுசாரி கம்யூனிஸம்; ஓர் இளம் பருவக் கோளாறு” என்ற நூலில் லெனின் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று முக்கிய அம்சங்கள் கட்டாயமாகத் தேவை என்று லெனின் வரையறுக்கின்றார்.
1. தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி முதற்படையான கட்சிக்கு புரட்சிகர வர்க்க உணர்வு அவசியம்.
2. அமைப்புரீதியாகத் திரண்ட புரட்சிக்காரர்கள் கொண்ட கட்சிக்கு ஒரு சரியான புரட்சி நடத்துவதற்கான தொலைநோக்கு உத்தியும், அன்றைய சூழலுக்கான நடைமுறை உத்தியும் அவசியம்.
3. கட்சி, மிக விரிவான அளவில் உழைக்கும் மக்களோடு நெருங்கிய தொடர்பும் , பிணைப்பும் கொண்டதாக இருக்க வேண்டும்.
இந்த மூன்று வரையறைகளை நன்கு ஆராய்ந்தால், தத்துவப் பணியும் நடைமுறையும்,பின்னிப் பிணைந்திருப்பதைக் காண முடியும். முதல் இரண்டு அம்சங்களும், முக்கியமாக, தத்துவத் தளத்தில் கட்சி நடத்தும் போராட்டம். மூன்றாவது அம்சம் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிற களப் போராட்டம்.
இந்த மூன்றும் இல்லாத கட்சி எப்படி இருக்கும்? இதற்கு லெனின் வார்த்தைகள் கடுமையானவை. இந்த மூன்றும் இல்லாத நிலையில் கட்சியில் மிஞ்சுவது “வார்த்தை சித்து விளையாட்டுக்களும், கோமாளித்தனமும்தான்” என்கிறார் லெனின்.
முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்த சூழலில், மார்க்சியத்தை வளர்த்து, புதியப் பங்களிப்புக்களை உருவாக்கியவர் லெனின். புரட்சி மாற்றத்தை நிகழ்த்திட, அரசியல் வியூகங்களையும் கட்சிக் கோட்பாடுகளையும் உருவாக்கிய மகத்துவம் லெனினையே சாரும்.
இன்றைய சவால்களை சந்திக்கவும் லெனினியம் தேவை. லெனினது வாழ்க்கையும், சிந்தனைகளும் புதிய தத்துவ வெளிச்சத்தை அளித்து வருகின்றன.