திரைப்பட முன்னோடி மிருணாள் சென்


எம். சிவகுமார்

2018-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுவதற்கு சற்று முன்பாக வங்க சினிமாவின் மூவேந்தர்கள் என போற்றப்பட்டவர்களில் கடைசி வேந்தரான மிருணாள் சென்னும் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

அவர் மறைவு குறித்த செய்திகளை தேசிய ஊடகங்களில் பார்த்தபோது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. கொல்கத்தாவிற்கு வெளியே இளம் இயக்குநர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கு அவர் பற்றிய பல விவரங்கள் அவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் இருந்துதான் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் மேற்கு வங்கத்துக்கு வெளியே அவரின் படங்கள் பெரிதாக கொண்டு போகாததுதான். இந்த விதத்தில் மூவேந்தர்களில் மற்ற இருவரிடமிருந்து இவர் வேறுபட்டவர். முதலாமவர் சத்யஜித் ராய். அவரின் பெரும்பாலான படங்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர் பெயரும் அவரின் துவக்க காலப் படங்களான அபு ட்ரையாலஜி (Apu Trilogy) என்று அழைக்கப்படும் அபு என்ற கதாநாயகனை மையமாகக் கொண்ட மூன்று படங்களும் பலருக்கும் தெரிந்திருக்கிறது.

மூன்றாவது வேந்தரான ரித்விக் கட்டக்கின் பெயர் கூட வங்கத்துக்கு வெளியே உள்ள இளம் தலைமுறையினருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்திய சினிமா, உலக சினிமா மீது மோகம் கொண்ட பலருக்கு ரித்விக் கட்டக்கின் பெயரும், படங்களும் தெரிந்துள்ளது.

சத்யஜித் ராய் தன் குடும்ப, பண்பாட்டு பின்னணி காரணமாக உலகறியப்பட்ட திரைப்பட மேதையாய் திகழ்ந்தார். திரை மொழியில் அவருக்கிருந்த ஆளுமை, இந்திய கதைகளை உலக ரசிகர்களுக்கு சொல்ல வைத்தது.

ரித்விக் கட்டக் கிழக்கு வங்கத்தில் பிறந்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் 8 முழுநீளப் படங்களை எடுத்தவர். வங்கப் பிரிவினையின் பாதிப்பு அவரின் எல்லாப் படங்களிலும் இருந்தது.

மிருணாள் சென் பிறந்தது கிழக்கு வங்கமாக இருந்தாலும் வளர்ந்தது முழுக்க முழுக்க மேற்கு வங்கத்திலும், குறிப்பாக கொல்கத்தா நகரத்திலும்தான்.

அவரின் குடும்பம் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியோடு இணைந்திருந்தது. பின்னர் இப்டா (IPTA) என அழைக்கப்படும் நாடகக் குழுவோடும் தொடர்பில் இருந்தார். இதன் காரணமாக அடிப்படையில் தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவராக அவர் இருந்தார். இப்டாவில்தான் தன் வருங்கால மனைவி கீதாவை அவர் சந்தித்தார். ஏழு ஆண்டுகள் காதலித்த பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். சென்னின் பல படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவரின் திரைப்பயணம் முழுவதும் அவர் கூடவே நடிகையாக, உதவியாளராக, விமர்சகராக, மேலாளராக இருந்தார்.

27 படங்களை இயக்கிய மிருணாள் சென் வங்க சினிமாவில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவிலும் மிக முக்கிய நபராக கருதப்படுவதற்குக் காரணம் என்ன?

திரை மொழியை முறையாகப் பயின்று பயிற்சி பெற்று படம் எடுத்தவர் அல்ல மிருணாள் சென். மாறாக தனக்கென ஒரு திரை மொழியை உருவாக்கிக் கொண்டவர். அதற்கு அடிப்படை அவரின் தீவிரமான கருத்துக்களும் அரசியல் நிலைப்பாடுமே ஆகும். ருடால்ஃப் ஆர்ன்ஹைம் (Rudolf Arnheim) எழுதிய “சினிமா ஒரு கலை” என்ற திரைப்பட அழகியல் பற்றிய புத்தகத்தைப் படித்து, சினிமா மீது மோகம் கொண்டார். ஆனாலும் அவரின் அழகியல் அவரது சமூக அரசியல் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது.

அவரின் மூன்றாவது படமான பைஷே ஷ்ராவண் வெளிவந்தபோதுதான் உலக அளவில் அவர் கவனிக்கப்பட்டார். பின்னர் அவரின் எட்டாவது படமான புவன் ஷோம் வெளிவந்ததும்  ஒரு சர்வதேச இயக்குநராக அவர் நிலைபெற்றார். இப்படம் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக நிதியுதவியுடன் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டது. அதுவரை பார்த்திராத வகையில் ஒரு புதுவிதமான படமாக அது அமைந்திருந்தது. இப்படத்தை இந்திய சினிமாவின் ‘புதிய அலை’யின் தொடக்கம் என்றே சொல்லலாம். தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ரீதியாக இப்படத்தை இன்று பார்க்கும்போது பக்குவப்படாத படம் போன்று தோன்றலாம். ஆனால் 60களின் இறுதியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அதே நேரத்தில் பல தென் அமெரிக்க படங்களோடு ஒத்திருந்தது. புரட்சியின்மீதும், பெரிய சமூக மாற்றத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த இடதுசாரி மாணவர்களும் இளைஞர்களும் இத்தகைய படங்களை விரும்பிப் பார்த்தனர். அப்போது கல்லூரி மாணவனாக இருந்த நான், எழுபதுகளில் வெளியான லத்தின் அமெரிக்க திரைப்படம் என்றாலே அது மார்க்சிய, இடதுசாரி படமாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பினேன். அது உண்மையாகவும் இருந்தது. இவர்களது படங்கள் ‘மூன்றாவது சினிமா’ என்று அழைக்கப்பட்டன. மிருணாள் சென்னின் அப்போதைய படங்கள் ‘மூன்றாவது சினிமா’ பிரிவின் படமாக கருதப்பட்டு உலகமெங்கும் முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டன.

புவன் ஷோமின் தொடர்ச்சியாக மிருணாள் சென் கல்கத்தாவை அடித்தளமாகக் கொண்டு மூன்று படங்களை எடுத்தார்.  “இண்டர்வ்யூ”, “கல்கத்தா 71”, “பதாதிக்” ஆகிய மூன்று படங்களும் சேர்ந்து கல்கத்தா ட்ரையாலஜி என அழைக்கப்பட்டன.

70களின் தொடக்கத்தில் உலகெங்கும் அரசியல் கொந்தளிப்பு நிலவியது. இளைஞர்களும் மாணவர்களும் தீவிர இடதுசாரி அரசியலால் கவரப்பட்டனர். இந்தியாவின் கல்கத்தா நகரம் அதை பிரதிநிதித்துவப்படுத்துவதாக விளங்கியது. கல்கத்தா நகரின் அப்போதைய சூழலைத்தான் சென் இந்த மூன்று படங்களில் காண்பித்தார்.

70களின் இறுதியில் இந்த தீவிர இடதுசாரி இயக்கம் படிப்படியாக தன் தீவிரத் தன்மையை இழந்தது. அதன் தொடர்ச்சியாக 80களின் தொடக்கத்தில் இந்திய நடுத்தர வர்க்கம் உளவியல் ரீதியாக பல மாறுதல்களைக் கண்டது. குழப்பம், குற்ற உணர்வு, மரபுகளை உடைப்பதில் தயக்கம் என பல அம்சங்களை கொண்டதாக இந்திய நடுத்தர வர்க்கம் மாறியது. 80களின் படைப்பாளிகளுக்கு அது ஒரு பொற்காலமாக இருந்தது என்றே சொல்லலாம். நடுத்தர வர்க்க கதாபாத்திரங்களைக் கொண்டு பல அற்புதமான கதைகளும், நாவல்களும், திரைப்படங்களும் அப்போது படைக்கப்பட்டன.

மிருணாள் சென்னின் திரைப்படங்களிலும் அது வரவேற்கத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தது. அவரும் நடுத்தர வர்க்கத்தின் மனச் சிக்கல்களை, குற்ற உணர்வை, எதிர்காலம் குறித்த பயத்தை அற்புதமாக தன் திரைப்படங்களில் கொண்டு வந்தார்.

என்னைப் பொறுத்தவரையில் 80களிலும், 90களின் தொடக்கத்திலும் அவர் எடுத்த படங்களைத்தான் சலிப்படையாமல் பார்க்க முடிகிறது. முக்கியமாக அவரின் இரண்டு படங்களைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.

முதலில் “ஏக் தின் ப்ரதி தின்” (ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்). அவரது படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் அது.

இப்படத்தில் மம்தா சங்கர் பிரதான கதாபாத்திரமாக நடித்திருப்பார். அந்த நடுத்தரக் குடும்பத்தில் 30 வயதைத் தாண்டிய அவர் மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருப்பாள். திருமணம் என்பதை அவளோ, அவள் குடும்பமோ சிந்திக்க முடியாத சூழல். அவளது வருமானத்தை மட்டுமே நம்பி அந்தக் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பா உடல்நிலை சரியில்லாமல் படுக்கையிலேயே இருப்பார். ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவள் சகோதரன். சிறுவயது தங்கை. எப்போதும் வீட்டு வேலை என்றிருக்கும் அம்மா. வேலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அவள் வீட்டுக்கு வந்து விடுவாள்.

படம் தொடங்கும் அந்த நாளில் வழக்கமான நேரம் தாண்டியும் அவள் வீடு வந்து சேரவில்லை. முதலில் ஏன் தாமதம் என எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர். இரவு ஏழு மணி, எட்டு மணி ஆகும்போது அவளுக்கு என்ன ஆகிவிட்டதோ என்ற கவலை எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது. அவள் அலுவலகம், வழக்கமாக அவள் செல்லும் இடங்கள் என விசாரிக்கின்றனர். இரவு 10 மணியைத் தாண்டிய  உடன் அவள் விபத்தில் சிக்கியிருப்பாளோ என மருத்துவ மனை, சவக்கிடங்கு என தேடுகின்றனர். நடு இரவைத் தாண்டிய உடன் அவர்களின் கவலை பயமாக மாறுகிறது. திருமணமாகாத அவள் யாருடனாவது ஓடிப்போயிருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றி, இனி இந்தக் குடும்பத்திற்கு எப்படி வருமானம் எனும் பயமாய் மாறி அவர்களிடையே பெருத்த நிசப்தம் நிலவுகிறது. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் அவள் வீடு திரும்புகிறாள். இரவெல்லாம் அவள் எங்கே இருந்தாள் என்று கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆழ்ந்த நிசப்தம் தொடர்கிறது. அத்தோடு படம் முடிகிறது. நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பத்தின் எதிர்காலம் குறித்த பயத்தை இத்தனை ஆழமாய் அதற்கு முன்பு வேறு எந்தப் படமும் சொல்லியதில்லை.

ஒரு திரைப்பட விழாவில் திரையிடலுக்குப் பின் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு ஆண் நிருபர் பின்வரும் கேள்வியைக் கேட்டார்: “அன்றிரவு அவள் எங்கு, யாருடன் இருந்தாள்? அதை ஏன் நீங்கள் காண்பிக்கவில்லை?”

மிருணாள் சென்னுக்கோ கோபம் கொந்தளித்தது. “அவள் எங்கிருந்தால் உனக்கென்ன? நான் சொல்ல மாட்டேன் போ!” என்று கத்தினார்.

இன்னொரு படம் ‘காரிஜ்’. “முடிந்து போன வழக்கு” என இப்படம் ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது. “ஏக் தின் ப்ரதி தின்” படத்தை  விட இப்படம் ஒரு படி மேலே இருந்தது. காரணம் இப்படத்தின்  திரைக்கதையும் கட்டமைப்பும் ஆகும். அதனால்தான் கான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு, நடுவர்களின் சிறப்புப் பரிசை வென்றது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்றது. முதன் முறையாக சென் இப்படத்திற்காக நான்கடுக்கு மாடியை கலை இயக்குநர் மூலம் கட்டியிருந்தார். இப்படத்தில்தான் நிதிஷ் ராய் முதன்முதலாக கலை இயக்குநராக பணியாற்றினார். இப்படத்திற்காக சிறந்த கலை இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார். பின்னாளில் இந்தியாவின் தலைசிறந்த கலை இயக்குநராகவும் மாறினார்.

“காரிஜ்” நடுத்தர வர்க்கத்தின் குற்ற உணர்வை நுணுக்கமாக ஆராய்ந்தது. இளம் தம்பதி ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு குழந்தை. அவர்களுக்கு உதவியாக ஒரு சிறு பையன் வீட்டிலேயே இருந்து வேலை செய்கிறான். பீகாரில் இருந்து வந்த அந்தச் சிறுவன் இரவில் மாடிப்படியின் கீழேதான் உறங்குவான். குளிர்காலத்தின்போது வீட்டின் சமையல் அறையில் உறங்குகிறான். எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட அந்தச் சமையலறையில் வெப்பத்திற்காக வைக்கப்பட்டுள்ள கரியிலிருந்து வெளிப்படும் வாயுவால் தூக்கத்திலேயே மூச்சடைத்து இறந்து போகிறான். அந்த இளம் தம்பதி அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்று திகைத்துப் போகின்றனர். பீகார் கிராமத்திலிருந்து சிறுவனின் தந்தை வருகிறார். தங்களை என்ன செய்து விடுவாரோ என அத்தம்பதி பயத்தில் உறைகின்றனர். அவர் சிறுவனின் உடலை இறுதிச் சடங்குக்காக எடுத்துக் கொண்டு செல்கிறார். கூடவே அச்சிறுவனோடு விளையாடிய அத்தெருவின் பல அனாதைச் சிறுவர்களும் செல்கின்றனர். சடங்குகளை முடித்த தந்தை அச்சிறுவர்களோடு மீண்டும் தம்பதியினரின் வீட்டுக்கு வருகிறார். தம்பதியைக் கடந்து நேராகப் படியேறி தம்பதியின் குழந்தை இருக்கும் அறைக்கு செல்கிறார். தங்களிடம் எதிர்ப்பைக் காட்ட முடியாமல் குழந்தையை ஏதாவது செய்து விடுவாரோ என்று திகிலுடன் தம்பதியினர் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குழந்தையை சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தந்தை பின்னர் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு வெளியேறுகிறார். எல்லாச் சிறுவர்களும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரே ஒரு சிறுவன் மட்டும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான். அடுத்து அந்த வீட்டில் வேலை செய்யப்போகும் சிறுவனாக அவன் இருப்பானோ என்ற தொனியில் படம் நிறைவடைகிறது.

கட்டுக்கடங்காத கலகக்காரனாய் தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மிருணாள் சென் பின்னாளில் முதிர்ந்த கலைஞனாய், தன் அரசியல், சமூகப் பார்வையை மாற்றிக் கொள்ளாமல் அதன் எல்லைகளை மட்டும் விரிவுபடுத்திக் கொண்டு ஆழமான, அமைதியான படங்களை எடுத்தார். தன் கடைசிப் படமான ‘அமர் புவன்’-ஐ 2003-ம் ஆண்டு எடுத்தார். இப்படத்தில்  நந்திதா தாஸ் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

2004-ல் “இன்று புதிதாய் பிறந்தேன்” என்ற தலைப்பில் தன் சுயசரிதையை வெளியிட்டார். இதன் தமிழ்ப் பதிப்பை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. 2005-ல் சினிமா கலைஞர்களுக்குத் தரப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

கடைசி வரை தன் கோபத்தையும் முற்போக்கு சிந்தனையையும் துளியும் மாற்றிக் கொள்ளாமல் இளம் தலைமுறையினரை எப்போதும் அரவணைக்கும் எளிய மனிதராக அவர் வாழ்ந்தார்.

உலக சினிமாவின் அத்தனை ஜாம்பவான்களோடும் நேரடி உறவில் இருந்தார். இளம் திரைப்பட இயக்குநர்கள், மாணவர்களோடு பாசப்பிணைப்பில் இருந்தார். அவர் மனம் சோர்வுறும்போதெல்லாம் பூனா திரைப்படக் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களோடு நேரத்தைச் செலவிடுவார்.

இந்த மாபெரும் மனிதரோடு என்னுடைய 20வது வயதில் எனக்கும் ஒரு நேரிடல் நிகழ்ந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு, சினிமா, இடதுசாரி அரசியல் மீது ஒரு விடலைத்தனமான ஆர்வத்தோடு சுற்றித் திரிந்த நாட்களில் பதிப்பகத் துறையில் இருந்த என் தோழர்கள் சிலர் இந்தியாவின் ஒரே இடதுசாரி திரைப்பட இயக்குநரான மிருணாள் சென்னின் புத்தகம் ஒன்று ஆங்கிலத்தில் Views on Cinema  என வந்திருப்பதாகவும், அதை தமிழில் மொழிபெயர்க்குமாறும் கேட்டுக் கொண்டனர். நானும் துணிச்சலோடு மேலும் இரு தோழர்களின் உதவியோடு அந்த நூலை மொழிபெயர்த்து முடித்தேன். சினிமா ஒரு பார்வை என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் 1980-ல் வெளியிடப்பட்டது.  மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசின் ஐந்தாண்டு நிறைவை ஒட்டி அப்போது கலைவாணர் அரங்கில் ஒரு திரைப்பட விழா நடந்தது. அதில் மிருணாள் சென்னின் ‘ம்ருகயா” திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்து கலைவாணர் அரங்கத்தின் படிக்கட்டுகளில் மிருணாள் சென்னை கண்டபோது ஓடோடிச் சென்று உங்கள் புத்தகத்தை தமிழாக்கம் செய்தது  நான் தான் என என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஒருவித ஆச்சரியத்தோடு என்னை ஆரத் தழுவிக் கொண்டார். அந்தத் தழுவலினூடே அவர் பிடிக்கும் சிகரெட் வாசனையை உணர்ந்தேன்.

அந்தப் புத்தகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாகவே அடுத்த சில மாதங்களில் தேசிய திரைப்பட ஆவணப் பாதுகாப்பகம் (NFAI) நடத்திய திரைப்பட ரசனை வகுப்பில் சேர்ந்தேன். அதன் தொடர்ச்சியாய் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். இன்று என் வாழ்வில் எல்லாம் சினிமா என்றாகி விட்டது.

கடந்த டிசம்பர் 30-ம் தேதி இரவு மிருணாள் சென் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்ட உடன் பல ஆண்டுகளுக்கு முன் கலைவாணர் அரங்கின் படிக்கட்டுகளில் நிகழ்ந்த அவரின் அணைப்பும், அவரின் சிகரெட் வாசனையும்தான் நினைவலைகளாய் ஓடியது.

* Head of Department, Direction
L V Prasad Film and TV Academy
Chennai.

sivafilms@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s