மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை


என்.குணசேகரன்

மானுட விடுதலைக்கு வழிகாட்டுகிற தத்துவம் மார்க்சியம். காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆன இன்றைய பின்னணியில் சிங்கரவேலரின் மார்க்சிய சிந்தனை தமிழக சிந்தனைப் பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது,  அது இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டதாகவும் உள்ளது.

இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர், தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி,தொழிலாளர்     இயக்கங்களையும், தொழிலாளர் போராட்டங்களையும் தலைமையேற்று நடத்திய தலைவர் ,மிகச்சிறந்த அறிவியல் பரப்புரையாளர், சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியல் செயல்பாட்டாளர் என பன்முகத் தளங்களில் பணியாற்றியவர் சிங்காரவேலர். இதன் காரணமாக அவர் தமிழக அறிவுத் தளத்தில் அழிக்க முடியாத முத்திரை பதித்தவராக உயர்ந்து நிற்கிறார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தமிழகத்திற்கு மார்க்சிய தத்துவத்தின் முழுப்பரிமாணங்களை அறிமுகம் செய்து வைத்தவர், அத்துடன் மார்க்சியத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் இலட்சியப் பணியையும் துவக்கி வைத்தவர்.

தமிழகத்தில் மார்க்சிய எழுச்சி:

இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் தமிழகத்தில்  அரசியல், சமூக இயக்கங்கள் பல வளர்ச்சி  பெற்றன.ஆங்கிலேய  ஆட்சிக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த கருத்தியல் உருவாக்கங்கள் பல்வேறு வகைப்பட்டனவாக இருந்தன.  சமுக,மத  சீர்திருத்தங்கள்,ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதார ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்றவற்றின் தாக்கங்களோடு  காலனிய எதிர்ப்பு பலமடைந்து வந்தது.

பாரதியின் படைப்புகள், பெரியார் தலைமையில் இயங்கிய  திராவிட இயக்கம், அயோத்திதாஸர் போன்றவர்களின் சாதி மறுப்பு இயக்கம் ஆகியவற்றோடு  கம்யூனிஸ்ட் இயக்கச் செயல்பாடும் வளர்ச்சி கண்டது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று வலு சேர்த்தன.இந்த சூழலில் மார்க்சிய சிந்தனை வலுப்பெற்றது. சிங்காரவேலர் செயல்பாடு  தமிழகத்தில் மார்க்சியம் உறுதியாக வேரூன்ற  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக  அமைந்தது.தமிழ்ச் சமூகத்தின் இன்றைய கருத்தாக்க நிகழ்வுகளிலும் முக்கிய  செல்வாக்கு செலுத்தி வருவதற்கு அன்றைய தலைமுறையின் அயராத கருத்தியல் செயல்பாடு முக்கிய காரணமாக இருந்ததை மறுக்க இயலாது. இதற்கு சிங்கரவேலரே முன்னோடியாகத் திகழ்கின்றார்.

தமிழகத்தில் இன்றளவும் அரசியல்,பொருளாதாரம்,கலை,பண்பாடு என பல துறைகளில் மார்க்சியத்தின் தாக்கம் இருந்துவருவதோடு மார்க்சியத்திற்கு தனி ஈர்ப்பு நீடித்து வருகிறது. இதற்காக அன்று வலுவான அடித்தளம் அமைத்தவர் சிங்காரவேலர். இறுதி மூச்சு வரை அவர் மேற்கொண்ட மார்க்சிய பரப்புரையும், மார்க்சிய நோக்கிலான  படைப்புக்களும் தமிழ் மண்,  மார்க்சியத்தை சுவாசித்திட வழிவகுத்தது.

மார்க்சியத்தை பரப்புவதற்கு பல தளங்களையும் வாய்ப்புக்களையும் அவர் பயன்படுத்தினார்.மாற்றுக் கொள்கை கொண்டவர்களிடமும் சில பொது நோக்கங்களை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றும் போது தனது கொள்கைகள் மேலாண்மை பெற ஒரு மார்க்சியர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர். பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுய மரியாதை இயக்கத்தை துவங்கியதும் அவரோடு சிங்காரவேலர் இணைந்து செயல்பட்டதும் வரலாறு. இந்த இணைந்த செயல்பாட்டையும், சுயமரியாதை இயக்க மேடைகளை,  பொருள் முதல்வாதக் கோட்பாடுகளையும் கம்யூனிசக் கொள்கைகளையும் பரப்புவதற்கு சிங்காரவேலர் பயன்படுத்தினார். “குடிஅரசு”, “புரட்சி” ஆகிய  வார இதழ்களில், சமுதாயச் சீர்திருத்தம் மற்றும் , பகுத்தறிவுக் கருத்துகள், சோசலிச கொள்கைகள், அறிவியல் விளக்கங்கள் என பல்வேறு வகைகளில் மார்க்சிய கருத்துக்களை எழுதி வந்தார். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கங்களின் தளங்களை மார்க்சிய பரப்புரைக்கு அவன் பயன்படுத்தியதில், அவரது தனிச்சிறப்பு வாய்ந்த மார்க்சிய நடைமுறையின் மகத்துவம் வெளிப்பட்டது.

அன்று உலக அளவில் மார்க்சியம் பல சவால்களை எதிர்கொண்டது. அது,  தத்துவத்துறையில் கடுமையான போராட்டம் நிகழ்ந்து வந்த காலம்.மார்க்சியத்தை திரித்து அதன் புரட்சிகர கூர்மையை மழுங்கச் செய்திடும் போக்கு தீவிரமாக இருந்த காலம்.ஜெர்மனியில் பெர்ன்ஸ்டைன் எனப்படும் சமுக ஜனநாயக கட்சியின் தலைவர் தலைமையில் ‘சோசலிசம் வென்றடையும் இலக்கு அல்ல. மாறாக அது ஒரு நிகழ்வுப் போக்கு’ எனக் கூறி, ‘சோசலிசத்திற்கான இயக்கம் மட்டுமே முக்கியம்; இலக்கு அல்ல’ என்று மார்க்சியத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நீடித்து வந்தன. அத்தகைய போக்குகளுக்கு எதிராக லெனின் தலைமையில் உண்மையான மார்க்சியவாதிகள் பெரும் கருத்துப்போரை நிகழ்த்தி வந்தனர்.1917 நவம்பரில் வெற்றி கண்ட ரஷியப் புரட்சி, மார்க்சியத்தின் புரட்சிகர உயிர்ப்பினை மீண்டும் உயர்த்திப் பிடித்தது.

ரஷியப் புரட்சியின் வெற்றி நிகழ்ந்த காலத்தில் சிங்காரவேலர் தொழிலாளர் இயக்கங்களை நடத்துவதில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை, சுரண்டலிலிருந்து விடுதலை, மார்க்சிய இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் உள்ளிட்ட பல தத்துவார்த்த, மார்க்சிய நடைமுறைகள் பற்றிய பிரச்சாரத்தை அவர் செய்து வந்தார். குறிப்பாக 1920.-ம் ஆண்டுகளிலிருந்து, 1930-ம் ஆண்டு சிறை சென்று விடுதலையான காலங்களில் அவர் தீவிரமாக இப்பணிகளை மேற்கொண்டார். 1946ம் ஆண்டு இறக்கும் வரை அவர் மார்க்சிய லெனினியத்தை எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

தத்துவ செயல்பாடு

மார்க்சியத்தில், தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் எனும்  மூன்று முக்கிய அடிப்படைக் கூறுகள் உண்டு என்று லெனின் வரையறுக்கிறார், (லெனின் மார்க்சியத்தின்) இதேபோன்று, சிங்காரவேலரின் செயல்பாட்டுத் தளங்களையும் வகைப்படுத்தி அறிந்திட முடியும்.

மார்க்சிய தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்,வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும்  இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.    மார்க்சிய தத்துவப் பார்வையில் ஆழமான தெளிவான பார்வை கொண்டவராக சிங்காரவேலர் வாழ்ந்திருக்கிறார்.

எங்கெல்ஸ் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை பற்றி எழுதுகிற போது குறிப்பிடுகிறார். “எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படைக் கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையேயான உறவு பற்றியதுதான்’’

தத்துவக் களத்தில் போரிடும் இரு முகாம்களை எங்கெல்ஸ் விளக்குகிறார். ஆன்மா, புற உலகு உறவு பற்றி “…பதிலளித்த தத்துவவாதிகள் இருகூறாகப் பிரிந்தனர். ஆன்மாவை இயற்கைக்கு முதன்மையாக கருதியவர்கள் கருத்துமுதல்வாத முகாமாகப் பிரிந்தனர். இயற்கையை பிரதானமாக முதன்மைப்படுத்தியவர்கள் பொருள்முதல்வாத முகாமாக இயங்கினர்.”

மார்க்சியத்தின் இந்த வரையறை அடிப்படையில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். தத்துவ சிந்தனைப் பரப்பில் நடக்கும் போராட்டங்களை வகைப்படுத்த ஏங்கெல்ஸ் காட்டிய வழிகாட்டுதல் உதவுகிறது, இரண்டு பிரிவுகளுக்கும், ஆளும் வர்க்கம் சார்பு, ஒடுக்கப்படும் வர்க்க சார்பு என்ற பின்னணி உண்டு என்பதையும் மார்க்சியம் வழியாக சிங்காரவேலர் உணர்த்தியுள்ளார்.

“சமூகமும் பொருளாதாரமும்” என்ற கட்டுரையில் சிங்காரவேலர் பொருள்முதல்வாத விளக்கத்தை எழுதுகிறார்:

“உயிர்கள் யாவும், பொருளைப்(things) பற்றியுள்ளன. எல்லா உயிரும் பொருளை ஆதாரமாகக் கொண்டுள்ளன. உயிர்கள் பொருளால் ஆக்கப்பட்டும்,பொருளால் தத்தம் ஜீவனத்தை நடத்தியும்,வாழ்ந்து வருகின்றன.பொருள் இல்லையெனில்,எந்த ஜீவனும் வாழா…”பொருளுக்குப் படைப்புக் கடவுள் என்று எதுவும் இல்லை என்பதும் பொருளே முதன்மையானது அதன் பிரதிபலிப்பே சிந்தனை என்றும் மார்க்சிய நிலைப்பாட்டில் நின்று உலக இயக்கத்தை சிங்காரவேலர் விளக்கியுள்ளார். இக்கருத்தினை அன்றைய அறிவியல் வளர்ச்சியின் துணை கொண்டு அவர் விளக்கியுள்ளது தான் சிறப்பானது. இந்தப் பாங்கு இதர பகுத்தறிவாளர்களிடமிருந்து வேறுபட்டு தனிச்சிறப்பு கொண்டவராக சிங்காரவேலரை முன்னிறுத்துகிறது.

அறிவியலோடு இணைந்த தத்துவம்

அவரது எழுத்துக்களில் முக்கிய இடம் பெறுவதாக, 1932-ல் எழுதிய  ‘கடவுளும் பிரபஞ்சமும்’, ‘கடவுளும், மனிதனும்’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். கடவுள் எனும் கருத்தாக்கம் மனிதனால் படைக்கப்பட்ட ஒரு கற்பிதம் என்று அறிவியலைக் கொண்டு ஆதாரப்பூர்வமாக பேசுகிற கட்டுரைகள் இவை. தன் காலத்தின் முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு சிங்காரவேலர்  விரிவாக பொருள்முதல்வாதப் பார்வையை முன்வைக்கிறார். டார்வினின் பரிணாம வளர்ச்சி, -ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்புத் தத்துவம் போன்றவற்றை வலுவாகப் பற்றிக் கொண்டு அறிவியல் விளக்கங்களை அளித்துள்ளார். இதன் வழியாக, மார்க்சின் வரலாற்று பொருள் முதல் வாதப் பார்வையை விளக்குகிறார். இது அல்லாமல் புரூனோ, கோபர்னிகஸ் உள்ளிட்ட அறிவியலாளர்களையும் தத்துவாசிரியர்களில். ஸ்பைனோஸா, காண்ட், ஸ்பென்சர், ஹெகல் உள்ளிட்டோரது கருத்துக்களையும் விவாதிக்கின்றார். அவர் எழுதிய  ‘விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும்’ என்ற தொடரிலும் அறிவியல் கருத்துக்களை பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடன் எழுதினர்.    அவரது காலம் வரை பிரபஞ்சம், விண்மீன்கள், அணு, மின்னணு பற்றிய கண்டுபிடிப்புகளை அவர் ஆழமாக பயின்றிருந்தார்.

அறிவியலோடு இணைந்து மார்க்சியம் தோன்றிய வரலாற்றுச் சூழலை அவர் விளக்கியுள்ளார்:

அறிவியல் வானம், பூமி, பிரபஞ்சம், அணு என ஆராய்ந்து இயற்கை இரகசியங்களை  அறிய முனைப்புடன் அன்று இயங்கி வந்தது. ஆனால் ‘மனித சமுகத்தில் வறுமை வந்த காரணத்தையும், இல்லாமையின் காரணத்தையும் அவைகளை போக்கும் மார்க்கத்தினையும் தெரியாமல் தவித்து வந்ததையும்” விவரிக்கும் சிங்காரவேலர், இந்த கட்டத்தில் மார்க்சியம் பிறப்பெடுத்து அரிய சமுக கண்டுபிடிப்புக்களை கண்டறிந்ததை விளக்குகிறார்.

விஞ்ஞானத்திற்கு இரண்டு கருவிகள் உண்டு என்கின்றார் சிங்காரவேலர். ‘அவையாவை எனில் முதலாவது பார்த்தல், (observation) இரண்டாவது பரீட்சித்தல் (experiment). இவ்விரண்டு கருவிகளைக் கொண்டே இதுவரை தெரிந்திருக்கும் சம்பவ காரணங்களை விளக்கமுற்றன.’

இந்த அறிவியல் கருவிகளை பயன்படுத்தாத காரணத்தினால் மந்திரங்கள், பொய் பித்தலாட்ட மூட நம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்றன என்கிறார் சிங்காரவேலர்.இது முழுக்க பொருள்முதல்வாத அறிவியல் அணுகுமுறை.

அதே போன்று மேற்கண்ட அறிவியல் கருவிகள் மூலமாகவே மனித அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார். மார்க்சிய அறிவுத் தத்துவத்தையும் அவர் குறிப்பிடுகிறார்: ”இனித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் மகத்தானதென சொல்லலாம். இதுவரை தெரிந்திருக்கும் விஷயங்கள் தினை அளவு என்று சொல்ல வேண்டும்.” எல்லையற்ற அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக மார்க்சிய அறிவுக் கோட்பாடு விளங்குகிறது என்பதை சிங்காரவேலரின் எழுத்துக்களில் உணர முடியும்.

 ஒரு தத்துவ மாநாட்டில் பகுத்தறிவைப் பயன்படுத்துவதால் உலகம் சீர்கெட்டு கிடக்கிறது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசினார்.அந்தக் கருத்தை எதிர்த்து எழுதுகிறபோது “ஆதி மனிதன் நெருப்பை கண்டுபிடித்தது முதல் நேற்று நாம் தீக்குச்சி செய்து வருவது வரை மனிதன் பகுத்தறிவை உபயோகித்து வந்திருக்க அதிகமாக பகுத்தறிவை உபயோகித்தபடியால் நமக்கு வந்தது கேடு என்றால், இதனினும் உன்மத்தப் பேச்சை நாம் கேட்டறியோம்? பகுத்தறிவின் உதவியின்றி எந்த மனித விவகாரம் நடக்கும்” என்று கடும் ஆவேசத்துடன் எழுதியுள்ளார்.

இயக்கவியல் பார்வைக்கு அறிவியல் இன்றியமையாதது என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் போதித்தனர். சோசலிசத்திற்கான போராட்டத்தில் அறிவியல் புரட்சிகர பங்கினை வகிக்கிறது என்பதனை அவர்களது எழுத்துக்கள் உணர்த்துகின்றன. இதே பார்வையினை உறுதுணையாகக் தனது மார்க்சிய பரப்புரை செயல்பாடுளை சிங்காரவேலர் மேற்கொண்டார். 

மக்களிடையே நிலவுகிற மூட நம்பிக்கைகளை அறிவியல் துணை கொண்டு விளக்கும்போதும் மார்க்சிய நோக்கிலான பொருள்முதல்வாதம் பளிச்சிடுகிறது. அவர் புது உலகம் இதழில் சூரிய, சந்திர கிரகணங்களில் அறிவியல் உண்மையை எழுதி மக்களின் அறியாமையை போக்கிட முயற்சித்துள்ளார். சுரண்டல் அடிமைத்தனத்திலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேண்டுமெனில் அறிவியல் அடிப்படையிலான மார்க்சியப் பொருள்முதல்வாதம்தான் ஒரே வழி என்பதில் அவர் உறுதிப்பாடு கொண்டவராக இறுதி நாள் வரை செயல்பட்டார்.

சாதி மதம் – பொருள்முதல்வாத பார்வை:

சமூகப் பிரச்னைகளை ஆராய்கிற போது வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையை கெட்டியாகப் பற்றி நின்றார், சிங்காரவேலர். சாதி, மதம் தொடர்பான  பிரச்னைகளை  நிறைய விவாதித்துள்ள சிங்காரவேலர், அதன் பொருள்முதல்வாத அடிப்படையை மிக எளிமையாக விளக்கியுள்ளார்.

“மதங்கள் யாவும், எந்த மதமானாலும், சரி, புத்த மதமானாலும், இந்து மதமானாலும், கிறிஸ்து மதமானாலும், மகமதிய மதமானாலும், எல்லா மதங்களும் பொருளாதாரத்தில் நெருங்கிய சம்பந்தம் பெற்றுள்ளவை; பொருளின் செல்வாக்கை நோக்கியே எந்த மதங்களும் கட்டப்பட்டுள்ளன; இன்றைக்கு மதங்கள் உலகில் செழிப்படைந்து வருவது பொருள் ஆதாயம் மதஸ்தர்களுக்கு இருப்பதால்தான்…’

அப்பட்டமாக அவர் அன்று எழுதிய கருத்து இன்றும் பொருத்தமுடையதாகத் திகழ்கிறது.இன்று மதத்தை அதிகாரத்திற்கு வருவதற்கு பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை கார்ப்பரேட் முதலாளித்துவ குழுமங்கள் செழிக்க இந்துத்துவ சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.

அதே போன்று சாதி இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் பொருளியல் நலன்களையும் அவர் விளக்கியுள்ளார்.

“ஜாதியும், பொருளாதார நட்பிலேயே கலந்துள்ளது. நான்கு வருணத்தார்களாகிய பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்குள் ஏற்பட்ட வேற்றுமை பொருளாதாரத்தையொட்டியே ஜனித்திருக்க வேண்டும். எப்படியெனில், கடை வருணத்தாராகிய சூத்திரன் ஏழையாகவே இருந்து வந்திருக்கின்றான். இன்றைக்கும் பிராமணர்கள் பெரும்பான்மை சூத்திரர்களை விட பொருள் பெருத்திருப்பதைக் காணலாம்….பணத்திற்கு முன் ஜாதி என்ன செய்யும்..பணம் படைத்த அரிச்சந்திரன் அரசனான். பணம் இழந்த அரிச்சந்திரன் வெட்டியானான்…”என்று எழுதுகிறார்.

“ஆதலின் ஜாதி ஒழிய வேண்டுமாயின் பொருளாதார சமத்துவம் ஏற்பட வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும்”என்று அவர் வந்தடையும் முடிவும் வரலாற்று பொருள்முதல்வாத நோக்கில் வந்தடையும் முடிவாகவே அமைந்துள்ளது.

பொதுவுடைமை விளக்கம்

உலகெங்கும் அன்று செயல்பட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களை அவர் அறிந்திருந்தார். அவர்களது நிலைபாடுகளை ஆராய்கிற போது மார்க்சிய இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறார்.தம் காலத்தின் உலக அரசியல், உலக அறிவியல் முன்னேற்றம், தத்துவ  வளர்ச்சி  உளிட்ட அனைத்திலும் மார்க்சியப் பார்வையுடன் விவாதித்துள்ளார்.

‘பொதுவுடைமை விளக்கம்’ என்ற விரிவான கட்டுரையில் பொதுவுடைமைக் கோட்பாட்டினையும், தத்துவத்தையும்  பல பரிமாணங்களில் விளக்குகிறார் சிங்காரவேலர். பொதுவுடமையும் செல்வமும், பொதுவுடமையும் தனியுடைமையும், பொதுவுடமையும் வேலை இல்லாமையும்’ என பல தலைப்புக்களில் விளக்கிகிறார்.இந்த விளக்கங்களின்  ஊடாக முதலாளித்துவத்தின் தீமைகளை விளக்கி,பொதுவுடைமைக் கொள்கையின் மேன்மையை விளக்குகிறார்.

மத வேறுபாடுகள்,சாதி வேறுபாடுகள் குறித்தும் பொதுவுடைமை இலட்சியத்தை அடைய இவை எவ்வாறு தடையாக உள்ளன என்பதையும் விளக்குகிறார்.

‘பொதுவுடையும் பெண்களும்’ என்ற தலைப்பில் விவாதிக்கும் போது,” குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதார நிலைமையிலும்,கல்வி கேள்வியிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயர்வு தாழ்வு இருத்தல் கூடாது” என்று மார்க்சியத்தின் முக்கிய நெறியான பெண் சமத்துவத்தை வலியுறுத்துகிறார்.

சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வைதான்  உழைப்பாளி வர்க்கத்தின் அரசியலை, விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக மாற்றியது.காங்கிரஸ் அன்று வெறும் அரசியல் விடுதலலைக்கான போராட்டத்தை  நடத்தி வந்த நிலையில் பொருளாதார சுரண்டைலையும்  முடிவிற்கு கொண்டு வரும் செயல்திட்டத்தோடு களம் இறங்கியவர் சிங்காரவேலர்.

ரஷியப் புரட்சிக்கு, தொழிலாளி – விவசாயி ஒற்றுமை, புரட்சி முன்னேறிட உதவியது.  1920-ம் ஆண்டுகளின் போதே தொழிலாளர் விவசாயி வர்க்கக் கூட்டணி பற்றிய கருத்துக்களை பதிவு செய்துள்ளார் சிங்காரவேலர். இந்த வர்க்கங்கள் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்று தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள, ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முனைந்தார். அக்கட்சிக்கு ஹிந்துஸ்தான் தொழிலாளர் விவசாயி கட்சி எனப் பெயரிட்டார். இவ்வாறு பொதுவுடைமைக்கு விளக்கம் கொடுத்து அந்த லட்சியத்தை அடைவதற்கான இயக்கங்களையும் கண்டவர் சிங்காரவேலர்.

சோசலிசப்பார்வை

“உலகப் பொருள்கள் யாவும் உழைப்பவனால் உண்டாக்கப்பட்டபடியால், உழைப்பவனுக்கே உலகம் உரியதென்ற மாபெரும் உண்மையை தனது சிறப்பு வாய்ந்த மூலதனம் என்ற நூலில் (மார்க்ஸ்) எடுத்துரைத்தார். ”இவ்வாறு தொடங்கி தொழிலாளியின் உழைப்பினால் உலகப் பொருள்கள் உருவானது என்றும் உழைப்பு செலவிட்ட பிறகே இயற்கைப் பொருள்களுக்கு விலை மதிப்பு உண்டாவது பற்றியும் அவர் விளக்கி  மார்க்சின் ‘உபரி மதிப்பு’  ‘விஞ்ஞான சோசலிசம் பற்றிய விளக்கவுரைகளை எழுதுகிறார்.

முதலாளித்துவம்  தனக்கு சவக்குழி தோண்டும் தொழிலாளர் வர்க்கத்தை தன்னிலிருந்தே உருவாக்கி வரும் என்ற மார்க்சிய நிர்ணயிப்பையும்,

நிலபிரபுத்துவ வர்க்கங்களை ஒழிக்க  தொழிலாளர்களை வர்க்கப் போராட்டத்திற்கு கொண்டு வந்த முதலாளிகள், பின்னர் அதே தொழிலாளர் வர்க்கம் முதலாளியத்திற்கு எதிராகத் திரளுகிற நிலையும் சிங்காரவேலர்  எடுத்துரைக்கிறார். இதர  அனைத்து  வர்க்கங்களும் முதலாளி/தொழிலாளி என்ற இரண்டில் ஒன்றாய் மாறுவார்கள் என்ற நிகழ்வு போக்கை பதிவு செய்கிறார்.இவை அனைத்தும்  மார்க்சியத்தின் அரசியல் பொருளாதார விளக்கங்களாக அமைந்துள்ளன.

மேல்தட்டு முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்காகவே அரசுகளின் செயல்பாடு இருப்பதையும் சிங்காரவேலர் மார்க்சின் அரசு பற்றிய பார்வையை விளக்குகிறார்.சரக்குகளின் மீதான வரி உள்ளிட்ட பல வகைகளில் மக்களிடம் வருமானத்தை பெற்று,அவர்களின் வீடு உள்ளிட்ட தேவைகளை அரசு புறக்கணிக்கின்றன என்று அரசுகளை அம்பலப்படுத்துகிறார்.

மக்களும் அரசுகளின் நடவடிக்கைகள் பற்றி அறியாமல் இருப்பதையும் வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார். ”சர்க்கார்கள் செய்யும் படாடோபங்களை கண்டு மக்கள் மயங்கி வருகின்றார்களே ஒழிய,தங்களுடைய குழந்தைகளுக்கு பால் இருக்கின்றதா என்று சிந்திப்பரில்லை” என்று எழுதிய அவரது எழுத்தைப் படிக்கும்போது, இன்றும் இந்த நிலை நீடிக்கிறதே என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை .

சோசலிசத்தின் கூறுகளை பட்டியலிட்டு விளக்குகிறார். நிலமும் நீரும் பொதுவுடைமையாக்கி, அவற்றில் விளையும் தானியங்களும், செல்வங்களும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்:சிலர் அவற்றை அபகரிப்பதை நிறுத்தி,ஒரு சிலர் அளவுக்கு மீறிய வசதி வாய்ப்புக்களை பெற்றிருப்பதால் மற்ற பெரும்பான்மை மக்களுக்கு அவை இல்லாமல் போகிறது;போட்டியினால் விலைகள் உயர்த்தப் படுவதும் பொருளுற்பத்தி மக்கள் தேவையை புறந்தள்ளிவிட்டு இலாப நோக்கில் மேற்கொள்ளப்படுவதையும் சிங்காரவேலர் எளிமையாக விளக்குகிறார். இதனால்தான் நெருக்கடிகள் தொடர்கின்றன என்ற மர்ர்க்சிய பார்வையும் அளிக்கிறார்.

“உலகம் நெருக்கடியிலிருந்து மீண்டும் சுகப்பட வேண்டுமானால், மனித வாழ்விற்கு வேண்டிய பொருள்கள் யாவும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் “அவர் விளக்குகிறார்.

சோஷலிச உருவாக்கம் குறித்து, அன்றைய காலக்கட்டத்தில் மேற்கத்திய  சோசலிச இயக்கங்களுக்குள் இருந்த சமரசப் போக்கையும் அவர் விமர்சிக்கிறார். அவர்கள் அடிப்படையை மாற்றாமல் அமைக்க விரும்பும் “கூட்டுறவு ஆட்சி” எனப்படுவது “சிறுபான்மை முதலாளிகளை நிலைக்க வைத்து பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு யாதொரு சமத்துவமும் சுதந்திரமும் இல்லாமல் போகும்.” என்ற அவரது எச்சரிக்கை இன்றைய கம்யுனிச இயக்கங்களும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. சோசலிசம் என்ற முகமூடி அணிந்து அன்று நாஜிக்களும் பாசிஸ்ட்டுகளும் செயல்பட்டு வந்ததையும் அவர் அடையாளம் காட்டுகிறார்.

பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று மார்க்ஸ்  வந்தடைந்த இலட்சிய முடிவினை தனது கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தார்,சிங்காரவேலர்.அவரது பல உரைகளில் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பல முறை குறிப்பிட்டுள்ளார்.

1933 மே 7ஆம் தேதி அன்று அவர் ஆற்றிய உரையில்,

“உழைப்பாளர்களின் அரசு உலக சமாதானத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தவே தொழிலாளர் விவசாயி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. நாம் அரசில் பங்கு பெற்றால் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நியாயமான நெறியிலேயே உருவாக்குவோம். நிலம் மற்றும் நீர் அத்தியாவசிய தேவைகள், கப்பல்கள், இரயில்கள், சுரங்கங்கள் அனைத்தும் பொது சொத்தே. அவை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்படும். ….உழைப்பாளர்களின் ஆட்சியின் கீழ் உருவாகும் சமத்துவம் மூலமே உலகம் அமைதியாக வாழும். சமத்துவம் வளமைக்கு இட்டுச் செல்லும்.” என்று குறிப்பிடுகிறார்.

மார்க்சியம் சர்வதேசியத்தை வலியுறுத்தும் தத்துவம். இதற்கு அடிப்படைக் காரணம் உண்டு.உலகளாவிய பிணைப்பு கொண்டது மூலதனம்.மூலதனம் தனது இலாப வேட்டையையும், சுரண்டலையும் உலகளாவிய தன்மையில் நடத்துகிறது. எனவே அது தனி உடைமையிலிலிருந்து சமுகத்திற்கு உடைமையாக வேண்டும். அதனை உலகளாவிய பாட்டாளி வர்க்கப் போராட்டம்தான் சாதிக்கும். எனவே மார்க்சியம் ஒவ்வொரு நாட்டு நிலைகளை உள்வாங்கி தனது சோசலிச மாற்றத்திற்கான வியுகத்தை உருவாக்குகிறது.அதே நேரத்தில் சர்வதேச தொழிலாளர் ஒற்றுமை கட்டும் பணியிலும் ஈடுபட அது வழிகாட்டுகிறது. இந்த அறிவியல் அணுகுமுறை சிங்கரவேலரின் அரசியல், சமூக தொழிற்சங்க செயல்பாடு ஒவ்வொன்றிலும் இருந்தது.

1925-கான்பூர் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையிலும் இதனைக் காண முடியும். முன்னதாக காங்கிரசின் கயா மாநாட்டில் தன்னை உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதி என்று பிரகடனப் படுத்திக் கொள்ளும்போதும் அவரது சர்வதேசிய உணர்வு வெளிப்பட்டது.

பாசிச அபாயம் – எச்சரிக்கை

“பொதுமக்கள் பெற வேண்டிய  ஞானம் “ என்று அவர் குறிப்பிடும் கருத்து இன்று  இந்துத்துவ பாசிச சக்திகளின் ஆபத்தில் இந்தியா சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

‘பொதுமக்கள் தங்களுக்கு வேண்டுவதைக் கோரி,அதற்கு வேண்டிய உழைப்பை எடுத்துக் கொள்ளாவிட்டால், இத்தாலியிலும்,ஜெர்மனியிலும் சமதர்ம சங்கங்கள் அழிந்ததுபோல், நமது நாட்டிலும் அழிந்துவிடும். எல்லாவிதப் புரட்சியையும் பொதுமக்கள் விரும்பினால்தான் கை கூடி வரும்.”

இதற்கு பொதுமக்களின் மனதை மாற்ற சோசலிச அமைப்புக்கள் பொதுமக்களிடம் நெருங்க வேண்டும் என்றும்,” அதற்கு பிரச்சாரம் தான் தகுதியான கருவி” என்றும் சிங்காரவேலர் அறிவுறுத்துகிறார்.

இந்திய நிலைமைகளில் சோசலிசத்தை கொண்டு வருவதில் உள்ள சவால்களையும் அவர் காண தவறவில்லை.’ சமதர்ம அறிக்கை என்ற கட்டுரையில்,

“உலக சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகிறது. அதாவது முதலாளி (பணக்காரன்), வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலேயே மேல் ஜாதியார்-கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்குச் சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு இங்குச் சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை”.

இன்றும் அடையாள அரசியல் நடத்தும் பல இயக்கங்கள்  இந்திய சமுகத்தில் சாதியைக் காண கம்யூனிஸ்ட்கள் தவறி விட்டனர் என அவதூறு செய்து வருகின்றனர்.ஆனால் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றழைக்கப்படும் சிங்காரவேலர் சாதிய சவால் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்திருக்கிறார் என்பதனை மேற்கண்ட கூற்று எடுத்துக் காட்டுகிறது.

எனவே பாசிசம், சாதியம் ஆகிய சோசலிச எதிர்ப்பு சக்திகளை எதிர்கொண்டு வெற்றிபெற சிங்காரவேலரின் சிந்தனைகள் வழிகாட்டுகின்றன.

சமதர்ம வேலைத் திட்டமே மாற்று!

அன்றைய அரசியலில் செயல்பட்டு வந்த சக்திகளை சோசலிச நோக்குடன் அவர் விமர்சிக்கின்றார்.

“காங்கிரஸ் சுயராஜ்யம் சமூக மாற்றம் எதுவுமற்ற சுயராஜ்யமாக “ இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.அன்று செயல்பட்டு வந்த நீதிக்கட்சியும் அவரது கூரிய விமர்சனப் பார்வைக்கு தப்பிடவில்லை.”பிராமணர்கள் போல் பிராமணரல்லாதார் ஒரு சிலர் பட்டம், பதவி பெற மட்டுமே இவ்வியக்கம் உதவியுள்ளதே தவிர, இக்கட்சியால் பொதுமக்களுக்கு என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பும் சிங்காரவேலர் நீதிக்கட்சியினால் பயன்பெற்றவர்கள் “பிராமணரல்லாத சில மேட்டிமைச் சாதிகளே” என்பதைஅம்பலப்படுத்துகிறார். ‘பஞ்சமர் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியோருக்கு நீதிக்கட்சியால் எந்த பயனும் விளையவில்லை’ என்ற புறக்கணிக்க முடியாத விமர்சனைத்தையும் முன்வைக்கிறார்.

சமதர்மம் பற்றிய விளக்க கட்டுரைகளில் அவரது மார்க்சியப் பார்வை வெளிப்படுகிறது.. “சமதர்மமென்றால் சொத்துரிமை, மத உரிமை, ஜாதிவுரிமை நீங்கிய வாழ்க்கையாகும்” என்று வரையறுத்துக் காட்டுகிறார். அன்றைய  ஏற்பவர்கள் சுயமரியாதை இயக்கத்தினர் இதனை ஏற்க வேண்டுமென்று சோசலிச ஆதரவு சக்திகளை திரட்டுகிறார்.

ஆனால் அவர்கள் ஆங்கிலேய ஆட்சியோடு நட்பு பாராட்டும் நிலை இதற்கு தடையாக இருக்கும் என்று சுட்டிக் கட்டுகிறார். சமதர்மத்தை “ஆங்கில அரசின் ஒத்துழைப்போடு இதனைச் சுயமரியாதை இயக்கத்தாரால் செய்யமுடியுமா?” என்று அவர்களை விமர்சிக்கிறார். சமதர்மத்திற்கான பாதைக்கு சுயமரியாதை இயக்கத்தை திரட்ட் முனையும் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றார். இதில் சுயமரியாதைச் சமதர்ம வேலைத்திட்டம்  முக்கியமான கருத்தாக்கமாக அமைந்துள்ளது. வரலாற்று நோக்கில் இந்த திட்டம் எதிர்கால சோசலிச மாற்றுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.

• • • • • • • • • • • •

மார்க்ஸ் தனது வாழ்க்கையில் தத்துவப் படைப்பாக்கப் பணியை மக்கள் இயக்கம், தொழிலாளர் இயக்கங்களை கட்டுகிற பணியோடு இணைத்துச் செய்தார். அதேபோன்ற வாழ்க்கை நெறியுடன் சிங்காரவேலர் செயலாற்றி வந்துள்ளார். அவரது வாழ்வு இன்றைய சமூக மாற்ற இயக்கங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றது: அதுமட்டுல்லாது கற்றுப் பயில வேண்டிய ஒரு வாழ்க்கையாகவும் சிங்காரவேலரின் வாழ்க்கை அமைந்துள்ளது.

குறிப்பு :

சிங்காரவேலர் மேற்கோள்கள் அனைத்தும் பா.வீரமணி, முத்து. குணசேகரன் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளியிடப்பட்டட ம.சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம் தொகுதி நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: