உதயகுமார்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூலவரான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக உலக அளவில் அன்றே போற்றப்பட்டவர்.
கான்பூரில் 1925 இல் நடைபெற்ற இந்திய பொதுவுடமைக் கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தியவர் என்ற பெருமையும் உண்டு.
சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் தொடர்புடைய சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்த சிங்காரவேலர் எந்த ஒரு பொறுப்பையும் தீவிர கொள்கை பிடிப்புடனும் சமரசமற்ற முறையிலும் நிறைவேற்றி வந்தார் என்பது தனிச்சிறப்பாகும்.
ஈ.வே.ரா பெரியார் போன்ற தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தபோதிலும் தனது கம்யூனிஸ்ட் கொள்கைக்கு சிறிதேனும் பங்கம் வருவதாய் இருந்தால் காந்தி உள்ளிட்ட எவ்வளவு பெரிய தலைவர்களையும், நண்பர்களையும் உதறித் தள்ளிவிடுவார் என்பது அவரது வரலாற்றை படிப்போர் அறிய முடியும்.
1925 ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி தேர்தலில் யானைகவுனி வட்டத்தொகுதியில் நீதிக்கட்சியில் அன்று மிகவும் பிரபலமாக விளங்கிய மதனகோபால் நாயுடு என்பவரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த தொகுதி அவர் சார்ந்த மீனவ சமுதாய மக்கள் எவரும் இல்லாத தொகுதி குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சிங்காரவேலர், அந்நாளில் ஆங்கிலப் புலமை மிகுந்த பேச்சாளர்களில் ஒருவராக இருந்தபோதிலும் தனது துவக்க பேச்சை தமிழிலேயே ஆற்றினார் என்பது அவரின் தமிழ் பற்றை பறைசாற்றுகிறது.
இன்றும் சட்ட சபைகளிலும், நகர்மன்றங்களிலும் முதல்வர்களையும், மேயர்களையும் பாராட்டுவதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்வதை பார்க்கிறோம். அன்றும் இந்த நிலை இருந்தது என்றே தோன்றுகிறது. எனவே தான் தனது பேச்சில் “நகரசபை உறுப்பினர்கள் நகரசபை நடவடிக்கையின் போது ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டு நேரத்தைப் பாழாக்குவதற்கு பதிலாக நகர சுகாதார மேம்பாட்டிற்கு உழைக்கலாம். நகரசபையின் இப்போதைய முதற் கடமை நகரத்தின் சாக்கடை மற்றும் பொது சுகாதாரத்தை பற்றி கவலைப்படுவதுதான். இன்றுள்ள வசதிகள் நகரத்திற்கு போதும் என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். நகரசபை நிர்வாகம் மோசமாக இருக்கிறது நகரத்தின் இறப்பு விகிதம் மோசமாக இருக்கிறது. நகரத்தின் இறப்பு விகிதம் ஐரோப்பா அல்லது அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் மிக அதிகமாகும். இனி பிறக்கும் ஒரு சிசுவும் இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அன்று மாநகராட்சி கட்டடத்தின் முன்பாக பிரிட்டிஷ் அரசு அழகுணர்ச்சியின் பேரால் பீரங்கிகளை நிறுத்தியிருந்தது அவை போர் உணர்ச்சியைத் தூண்டுகின்றன என்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று சிங்காரவேலர் தீர்மானம் கொண்டு வந்தார். அன்றைக்கு கர்னல் நீல் என்ற பிரிட்டன் படைப்பிரிவின் தளபதியாக இருந்த கொடுங்கோலன் சிலையை அகற்ற வேண்டுமென போராடினார்.
சிங்காரவேலர் தாம் வகித்த வசித்த நகரசபை உறுப்பினர் பொறுப்பை பயன்படுத்தி மக்கள் நலப் பணிகளை உவப்புடன் ஆற்றினார். அவராற்றிய பணிகள் கட்சிகளை இணைத்தல், நகரச் சுத்தம், கல்வி வளர்ச்சிப்பணிகள், கடல் குளிப்போர் பாதுகாப்பு, சூதாட்ட தடுப்பு என பன்முகத் தன்மை கொண்டதாக இருந்தது.
சிங்காரவேலர் ஏழைகளின் வீடுகளுக்கும் மருத்துவர்கள் சென்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றார். தொற்று நோய் தடுப்புக்காக சானிடரி ஆய்வாளர்களை நியமிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வற்புறுத்தினார்.
சிங்காரவேலர் சமுதாயப் பணியுணர்வையும் விழிப்புணர்வையும் தருவதில் கல்வியே அடிப்படையாக அமைகிறது என்று கருதினார்.
மாநகராட்சி பள்ளிகளை அதிக அளவில் திறக்க வாதாடினார். இவர் கல்விக் குழுவில் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் ஏழைக் குழந்தைகளுக்கு நகராட்சியின் பொறுப்பில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்தார். காமராஜர் பள்ளிகளில் ஏழைகளுக்கு மதிய உணவு திட்ட்டம் வழங்குவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன் முன்பாகவே சிங்காரவேலர் சென்னை மாநகராட்சி இலவச உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலில் குளிப்போர் பாதுகாப்பிற்காக சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஓர் இயங்கு மருந்தக ஊர்தியும், உயர் நீதிமன்றக் கடற்கரையில் ஓர் இயங்கு மருந்தக ஊர்தியும் சிங்காரவேலரின் முன் முயற்சியால் நிறுவப்பட்டது.
சுயராஜ்ஜிய கட்சியின் சார்பில் சிங்காரவேலர் நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் நகர் மன்றக் கூட்டத்தில் இவர் தம்மை ஒரு பொதுவுடமைச் சார்பாளராகவே அறிமுகப்படுத்திக் கொண்டார். நகரசபையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொதுவுடமை இயக்கத்தைச் சார்ந்த சக்லத் வாலாவை வரவேற்க ஏற்பாடு செய்தார், கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்த ‘மாஸ்கோ ராஸ்கல்’ என்றழைத்த போது அதனை ஏற்றுக்கொண்டு தாம் பொதுவுடமை சார்பாளர்தான் என்று அச்சமின்றி வெளிப்படையாகவே பறை சாற்றிக்கொண்டார்.
மக்கள் பணியையும், பொதுவுடமை கொள்கைகளையும் முன் வைத்தே சிங்காரவேலர் இயங்கி வந்ததை அவரின் வாழ்வின் நடவடிக்கைகள் நமக்கு புலப்படுத்துகின்றன.