வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
பிப்ரவரி மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் மத்திய மோடி அரசின் மோசடி பட்ஜெட் பற்றி விரிவாக பரிசீலித்தோம். அடுத்து இக்கட்டுரையில் தமிழக அரசின் 2019-2020 நிதியாண்டிற்கான பட்ஜெட் பற்றி பார்ப்போம்.
2௦11 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அதிமுக தலைமையிலான மாநில அரசு தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருகிறது. கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசும், எட்டு ஆண்டுகளாக மாநில அதிமுக அரசும் பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகளால் தமிழக மக்கள் தொடர்ந்து பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மத்திய – மாநில அரசுகளின் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரமும், தமிழகப் பொருளாதாரமும் நிலைகுலைந்து உள்ளன. இரு அரசுகளும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், இதனை நியாயப்படுத்தும் முயற்சியில் நம்பகத்தன்மையற்ற புள்ளிவிவரங்களை அள்ளி வீசினாலும், மக்களின் வாழ்க்கை அனுபவம் அரசு கூறும் வளர்ச்சியை பிரதிபலிக்கவில்லை. மாறாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் குளறுபடிமிக்க ஜி எஸ் டி வரி அமலாக்கமும் முறைசாராத் துறைகளில் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்க்கத் திராணியற்றதாக மாநில அரசு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழக விவசாயிகளும் கிராமப்புற தொழிலாளிகளும் நகர்ப்புற உழைக்கும் மக்களும் காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகளின் விளைபொருளுக்கு சாமிநாதன் கமிஷனின் பரிந்துரைப்படி கட்டுபடியாகும் விலை உறுதிப்படுத்தப்படவேண்டும்; தொடர்ந்து மக்களை வாட்டிவதைக்கும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இரு அரசுகளுக்கும் எதிராக வலுவான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். இத்தகைய சூழலில்தான், மக்களவைக்கும் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் திடீரென்று மக்கள் மீது கரிசனம் காட்டுவதுபோல் இரு அரசுகளும் தங்கள் பட்ஜெட்டுகளில் நடித்துள்ளனர்.
மத்திய அரசின் அடிவருடியாக மாநில அரசு
ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு (2019) மார்ச் மாத துவக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் பற்றிய புள்ளிவிவரக் கையேடு (Handbook of Statistics of Indian States) தமிழகத்தின் மாநில தனிநபர் நிகர உற்பத்தி (per capita net state domestic product) குறித்த விவரங்களை தந்துள்ளது. இதன்படி 2௦11 – 12 இல் இது ரூ 92,984 ஆக இருந்தது. இத்தொகை 2017-18 இல் ரூ 1,26,179 ஆக இருந்தது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் தமிழ் நாட்டின் சராசரி தலா வருமானம் 2011-12 இல் ரூ 1,03,600 ஆக இருந்ததாகவும் 2017-18 இல் ரூ 1,42,267 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறுகிறார். பன்னீர்செல்வம் கணக்கு ரிசர்வ் வங்கி கணக்கிற்கு சற்று வேறுபட்டு உள்ளது. ஆனால் அதுவல்ல முக்கிய பிரச்சினை. இந்த சராசரி கணக்கு என்பதே ஒரு ஏமாற்று வேலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சராசரி மாநில தலா வருமானம் ஆறு ஆண்டுகளில் சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதன் பொருள் சராசரி தமிழரின் வருமானம் அவ்வாறு உயர்ந்தது என்பது அல்ல. உண்மையில், மாநில வருமானத்தின் பெரும்பகுதி ஒரு சிறிய பகுதி செல்வந்தர்களை – குறிப்பாக பெருமுதலாளிகளையும், கிராமப்புற செல்வந்தர்களையும் – சென்றடைகிறது. உழைப்பாளி மக்கள் தங்கள் உழைப்பால் உருவாக்கும் செல்வத்தில் ஒரு பகுதி மட்டுமே அவர்களுக்கு கூலியாக, சம்பளமாக, இதர உழைப்புசார் வருமானமாக வந்து சேருகிறது. உபரிகள் செல்வந்தர்களுக்கு செல்கிறது. இதுதான் இந்தியாவிலும் நடக்கிறது, தமிழ்நாட்டிலும் நடக்கிறது. இப்படி தங்கள் கொள்கைகளால் செல்வந்தர்களுக்கு சேவை செய்துவிட்டு, தேர்தல் வருவதையொட்டி மத்திய பட்ஜெட்டை போலவே மக்களுக்கு சில ரொட்டித் துண்டுகளை வீசுகிறது மாநில அரசு. பட்ஜெட் முன்வைக்கும் மொத்த ஒதுக்கீட்டிலோ, துறைவாரி ஒதுக்கீட்டிலோ, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. இதற்கு ஒரு காரணம், மத்திய மாநில நிதி உறவுகளின் தன்மை. ஜி எஸ் டி அமலாக்கம் மாநிலங்களின் சுயேச்சையான வரிக்கொள்கை என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை. முன்பு மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பல வரி இனங்கள் ஜி எஸ் டி கவுன்சிலின் அதிகாரத்திற்கு விடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல், புகையிலை மற்றும் சாராயத்தின் மீதான மாநில எக்சைஸ் வரிகள் மட்டுமே மாநில அரசின் கையில் உள்ளன. மாநில அரசுகளின் வரிவிதிப்பு கொள்கை என்ற ஒன்று கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது.
வழிகாட்டும் கேரளா
நிதி அதிகாரங்களை மைய அரசிடம் குவிக்கும் கொள்கையை தீவிரமாக அமலாக்கி வரும் பாஜக ஆட்சியில் மத்திய அரசிடம் மண்டியிட்டு நிற்கும் நிலையை நோக்கி மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள அரசு மத்திய அரசின் இந்த கொள்கைகளை எதிர்ப்பதோடு, பிற மாநிலங்களையும் கூட்டு போராட்டத்திற்கு அழைத்து, இணைத்து வருகிறது. ஆனால் தமிழக அரசு, பதினைந்தாம் நிதிக்குழுவின் மோசமான பணி வரையறைகளை (terms of reference) எதிர்த்துக் கூட வாய் திறக்க தயாராக இல்லை; கேரள அரசின் அழைப்பையும் கண்டுகொள்ளவில்லை.
குறைந்தபட்ச அதிகார வரம்புகளால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது மாநில பட்ஜட் மூலம் கேரள அரசு மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்களை சீரமைத்து லாபம் ஈட்ட வைத்துள்ளது. இடது ஜனநாயக முன்னணி அரசு 2௦16 இல் பொறுப்பேற்ற பொழுது கேரளாவின் 4௦ மாநில பொதுத்துறை நிறுவனங்களில் எட்டு மட்டுமே லாபம் ஈட்டின. நடப்பு நிதியாண்டிற்குள் இந்த எண்ணிக்கை 2௦ ஆகிவிடும்.
மாநில அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பல நூதனமான அணுகுமுறைகளை கேரளா அரசு பரிசோதித்து வருகிறது, அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. கேரளாவிற்கு வெளியே வாழும் மலையாளிகளை புதிய கேரளம் அமைப்பதற்கான பணிகளில் ஈர்த்து இணைத்து வருகிறது. கேரளத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நிலைத்தகு முறையில் பயன்படுத்தவும் பட்ஜட் மூலம் முன்முயற்சிகள் அமலாக்கப்படவுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை உறுதிப்படுத்தி, நிதி, அதிகாரம், ஊழியர்கள் என அனைத்து வழிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை புதிய கேரளம் அமைக்கும் பணியில் முழுமையாக இணைத்து வருகிறது கேரள அரசு. இதில் பட்ஜெட் முக்கிய பங்கு ஆற்றுகிறது. அரசு பள்ளிகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பொதுக்கல்வி பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பதிந்துள்ளனர். கல்வியில் தனியார் கொள்ளையையும் ஊழலையும் தடுத்து நிறுத்திட உறுதியான நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்துவருகிறது.
மத்திய அரசு திட்டக்குழுவையே கலைத்துவிட்டது. பெரும்பாலான மாநிலங்களும் இதனை பின்பற்றியுள்ளன. ஆனால் கேரளாவில் திட்டமிடுதல் தொடர்கிறது. அதுமட்டுமல்ல. திட்ட மொத்த நிதியில் தலித் மக்களுக்கான உப திட்டத்திற்கு 9.81%, பழங்குடி மக்களுக்கான உப திட்டத்திற்கு 2.83% என்று அவ்விரு பிரிவினருக்கும் அவர்களது மக்கள் தொகை விகிதத்தை விட கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளா மக்கள் தொகையில் முதியோர் பங்கு 13% ஆகும். ஒவ்வொரு அருகமைப் பகுதிக்கும் ரூ.5,௦௦௦ ஒதுக்கப்பட்டு குடும்பஸ்ரீ திட்டம் மூலமாக உதவி தேவைப்படும் முதியோருக்கு உதவிட பட்ஜெட் ஏற்பாடு செய்துள்ளது.
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் அரசின் பெரும் முயற்சியாலும் மக்கள் ஒற்றுமையாலும் மீண்டுவரும் நிலையில் கேரள பட்ஜெட் இந்த மீட்சியை முன்னெடுத்துச் செல்ல பல முன்மொழிவுகளை கொண்டுள்ளது.
கேரள மாநில வளர்ச்சியை மேம்படுத்த மூலதனச்செலவு கடந்த ஆண்டு அளவை விட 53% அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்
இத்தகைய முனைவுகள் எதுவும் இல்லாத தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டுகளின் கணக்குகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி ஒரு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் வேளாண் நெருக்கடி தொடர்பாகவோ, வேலையின்மை தொடர்பாகவோ எந்த முனைவும் இல்லை. அரசு மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளுக்கான வளங்களை திரட்டுவதில் முனைவுகள் இல்லை. தமிழகத்தின் இயற்கை வளங்களை திரட்டிடவோ, உரிய தொகைக்கு அரசுக்கு சொந்தமான வளங்களை தனியாருக்கு தற்காலிக பயன்பாட்டிற்கு ஏலம் விடுவதிலோ, மக்கள் நல நோக்கில் இருந்து எந்த முனைவுகளும் இல்லை.
ஆளுநர் உரைபோலவே, பட்ஜெட் உரையும் மத்திய அரசு, ஜிஎஸ்டி உட்பட பல்வேறு இனங்களின் கீழ் மாநில அரசுக்கு தரவேண்டிய கணிசமான தொகைகளை குறிப்பிடுகிறது. ஜி எஸ் டி யாக ரூபாய் 5,454 கோடி, ஜிஎஸ்டி நட்ட ஈடாக ரூ 455 கோடி 2017-2018க்கு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு இன்னும் வரவேண்டியுள்ளது. இந்த தாமதம் மாநில அரசின் நிதி நிலைமையை பாதிக்கிறது என்று பட்ஜெட் உரை குறிப்பிடுகிறது. பதினான்காம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் அமலாக்கப்படுவதால் விகிதாச்சார அளவில் தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய வரிபகிர்வு வருமானம் குறைந்துள்ளதை பட்ஜெட் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க மறுக்கிறது.
பட்ஜெட்டின் ஒதுக்கீடுகள் எந்தவகையிலும் வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஊரக வளர்ச்சிக்கான ஒதுக்கீடு. கடந்த 2018-19 நிதியாண்டில் இத்துறைக்கு ரூ 17,869 கோடி , இந்த ஆண்டு ரூ 18,274 கோடி தான். மாநில உற்பத்தி மதிப்பு கிட்டத்தட்ட 9 % அதிகரிக்கும் என்று பட்ஜெட் குறிப்பிடுகிறது. ஆனால் கடும் நெருக்கடியில் தமிழக ஊரகப்பகுதிகள் உள்ள நிலையிலும்கூட ஊரக வளர்ச்சிக்கு ஒதுக்கீடு மிக சொற்பமாகவே உயர்த்தப்பட்டுள்ளது. இதேதான் வேறு பல துறைகளுக்கும் பொருந்தும். உயர்கல்விக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ 4,620 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட குறைவாக ரூ 4,584 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்விக்கு கடந்த ஆண்டு ரூ 27,206 கோடி. இந்த ஆண்டு ரூ 28,758 கோடி, அதாவது சுமார் 5% உயர்வு தான்.
வரி வருமானத்தை உயர்த்தும் வாய்ப்பு மாநிலங்களுக்கு பெரிதும் குறைந்துள்ள நிலையில் பிற வருமான வாய்ப்புகளை தேட வேண்டியுள்ளது. ஆனால் தமிழக அரசு அத்தகைய முயற்சிகளை செய்வதற்குப் பதில் அயல்நாட்டு முதலீட்டளர்கள் உள்நாட்டுப் பெருமுதலாளிகள் ஆகியோரை மையப்படுத்தியே தனது கொள்கைகளை அமைத்துக் கொண்டுள்ளது. மத்திய அரசை எதிர்த்து, ஜனநாயக அடிப்படையில் மத்திய மாநில நிதி உறவுகளை மாற்றி அமைக்க பிற மாநிலங்களுடனும் ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து போராட வேண்டியுள்ளது. இதற்கும் மாநில அரசு தயாராக இல்லை. எனவே தமிழக மக்களின் இன்னல்கள், இந்த அரசின்கீழ் தொடரவே செய்யும்.
பட்ஜட்டிற்குப் பின்
பட்ஜட்டில் விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் சாதகமான முனைவுகள் இல்லாத நிலையில், பட்ஜட்டிற்குப்பின் தமிழக அரசு வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது. எந்தவிதமான திட்டமிடுதலும் ஆலோசனையும் இல்லாமல், வெறுமனே காசை விட்டெறிந்து மக்களை அவமானப்படுத்துகிற பாணியில் இந்த நடவடிக்கை உள்ளது. மேலும், மத்தியில் உள்ள ஆளும் கட்சியைப்போலவே, வாக்காளரின் வாக்குக்கு அரசு செலவில் காசு கொடுக்கின்றது போல்தான் இது அமைந்துள்ளது. தற்சமயம் இத்திட்டம் அமலாக்கப்படுவதில் வெடித்துள்ள பெரும் பிரச்சினைகளும் குழப்பங்களும் ஊழலும் அன்றாட பத்திரிகை செய்திகளாக மாறியுள்ளன.
மொத்தத்தில், விவசாயிகளின், கிராமப்புற உழைப்போரின் நலன்களையும் கோரிக்கைகளையும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புறந்தள்ளி விட்டுவிட்டு, திடீரென்று தேர்தல் நேரத்தில் காசு கொடுத்து சரிக்கட்டும் முயற்சியாகவே தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது. மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் தேர்தல் களத்தில் இணைந்து நிற்பது போலவே மக்களுக்கு உதவாத பட்ஜட்டுகளைப் போடுவதிலும் ஒற்றுமையாக உள்ளனர்!
மத்திய அரசின் தலைமையில் உள்ள கட்சியும் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் கட்சியும் – பாஜகவும் அதிமுகவும் – இன்று தேர்தல் களத்தில் இணைந்துள்ளன. மிகுந்த சந்தர்ப்ப வாதத்துடன் பாமக போன்ற கட்சிகள் இவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் தந்திரத்தின் பகுதியாக வாக்குகளை அரசுப்பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சியை மக்கள் கட்டாயம் முறியடிப்பார்கள். அவர்கள் அனுபவம் மத்திய மாநில அரசின் கொள்கைகள் வேளாண் நெருக்கடியையும் வேலையின்மையையும் தீவிரப்படுத்தியுள்ளன என்பதுதான். அவர்கள் அனுபவம் இந்த அரசுகளின் கொள்கைகளால் கல்வியும் ஆரோக்கியமும் மக்களுக்கு எட்டாக்கனியாக ஆகியுள்ளன என்பதுதான். அவர்கள் அனுபவம் மத்திய அரசு தமிழக மக்களுக்கு பேரிடர் ஏற்பட்டபொழுது – ஒக்கி புயலில், காஜா புயலில், வார்தா சூறாவளியில் – மத்திய அரசு சொற்ப அளவிலேதான் உதவியது என்பதுதான். அவர்கள் அனுபவம் மாநில அரசு பேரிடர் காலத்தில் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றவில்லை என்பதுதான். ஆகவே காசுக்கு வாக்குகளை வாங்குவதற்கான பெரும் முயற்சி வெற்றி அடையாது என்பதே நமது கணிப்பு.