தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நூற்றாண்டு நிகழ்வு
- வீ.பா.கணேசன்
அறிவியல் மனப்பான்மையையும் மதச் சார்பின்மையையும் தமது இரு கண்களாகக் கருதுவோர் அனைவரும் ஒருபுறமும், இந்துத்துவவாதிகள், அவர்களது புரவலர்கள், பரிவாரங்கள் மறுபுறமும் நிகழ்த்திவரும் ‘வாழ்வா, சாவா?’ என்ற போராட்டம் நடைபெற்று வரும் இத்தருணத்தில்தான் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டும் வந்து சேர்ந்துள்ளது.
இந்தியாவின் தத்துவ மரபு என்பது ஆன்மிகம் தவிர வேறல்ல; மேற்கத்திய தத்துவங்களுக்கெல்லாம் மாறாக, மனிதனின் ஆன்ம மீட்சியை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்ட மேன்மை படைத்தது என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்தியாவின் நவீன தத்துவ ஆசிரியர்கள் ஆழமாக நிறுவத் தலைப்பட்ட நேரத்தில்தான் இந்திய வரலாற்றில் வேத மரபை மறுத்தொதுக்கும் தத்துவங்களே பெருமளவில் நிலவியதையும், அவை வேத மரபினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட போதிலும் வேத மரபினை உயர்த்திப் பிடிக்கும் எழுத்துக்களில் வாதப் பிரதிவாதங்களாக ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அதன் எச்சங்களைக் கொண்டே இந்திய தத்துவ உலகில் உலகாயத மரபின் பெருமையை நிலைநாட்டிய பெருமை பெற்றவர் பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.
மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல் வாத, இயங்கியல் அடிப்படையிலான அவரது போர்க்குணமிக்க பொருள்முதல்வாதக் கருத்துக்களைப் பயின்றும், அவற்றை மக்களிடம் எடுத்துச் சென்று சிந்தனைக் களத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே அவரது இந்தப் பிறந்தநாள் நூற்றாண்டை நாம் கொண்டாட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் மாத இதழின் நோக்கமாக அமைந்திருந்தது.
இந்த முயற்சியின் தொடக்க நிகழ்வாக சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தத்துவத் துறை, பாரதி புத்தகாலயம் ஆகியவற்றோடு இணைந்து மார்க்சிஸ்ட் மாத இதழ் கடந்த பிப்ரவரி 16 ஞாயிறன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தேவி பிரசாத் சட்டோபாத்யாய குறித்த முழுநாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.
சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்கி தமிழகத்தின் புகழ்பெற்ற கல்லூரிகளின் தத்துவத் துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று இந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்காகத் திகழ்ந்து வரும் தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் உயரிய பங்களிப்புகளை முன்வைத்தனர். அவர்களது முன்வைப்புகளின் ஒரு சிறு தொகுப்பே இக்கட்டுரை. (சென்னை கல்லூரிகளைச் சேர்ந்த தத்துவத் துறை மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற இக்கருத்தரங்கில் எழுத்துபூர்வமாக முன்வைக்கப்பட்ட கட்டுரைகளில் முதலாவதாக தோழர். ப.கு. ராஜனின் “அறிவியல்-தத்துவம்-ஊடாடல் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் பதிவுகள்” என்ற கட்டுரை இந்த இதழில் வெளியாகிறது. மற்ற கட்டுரைகள் அடுத்து வரும் இதழ்களில் வெளிவரும்)
காலை அமர்விற்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் என். சேட்டு அவர்கள் தலைமை வகித்தார். பச்சையப்பன் கல்லூரி, தத்துவத் துறை தலைவர் வி. சீனிவாசன் அவர்களின் வரவேற்புரை ஆற்றினார்.
பேரா. கருணானந்தம் (துறைத் தலைவர் (ஓய்வு), வரலாற்றுத் துறை, விவேகானந்தா கல்லூரி, சென்னை) :
“வரலாறு இல்லாத தத்துவமும் தத்துவம் இல்லாத வரலாறும் பயனளிப்பதில்லை. தத்துவம் மக்களது உளப்பாங்குகளை வடிவமைக்கிறது. அது அவர்கள் மீது சில தளைகளையும் பூட்டியிருக்கிறது. அவற்றை உடைத்தெறிந்து முன்னேற முடியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையதொரு நிலைமையில்தான் அந்த தத்துவத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகிறோம். இந்தப் பின்னணியில்தான் தேவி பிரசாத் அவர்களின் பெருமையை நாம் உணர வேண்டியுள்ளது. இந்திய தத்துவங்கள் நம் முன்னால் தவறாக முன்வைக்கப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தியவரும் அவரே. வேதங்களை, வேத யக்ஞங்களை, வேத சமூகத்தின் கட்டமைப்பை எதிப்பவர்கள் நாத்திக வாதிகள். அவர்கள் முன்வைத்த இருப்பை மாற்ற வேண்டிய தத்துவம் பற்றி அவர் பேசினார். தத்துவத்தை மனிதப்படுத்துவது என்பதைச் செய்தவர் அவர். அவரது முயற்சிகளை பரவலாக எடுத்துச் செல்லும் முயற்சியே இந்த விழா என்றே நான் கருதுகிறேன்.”
முனைவர் எம். வெங்கடாசலபதி, துறைத்தலைவர், தத்துவத் துறை, சென்னை பல்கலைக்கழகம்:
“நவீன இந்திய தத்துவ உலகில் இன்றியமையாத, வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புச் செய்தவர் பேரா. தேவி பிரசாத் அவர்கள். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய சமூகத்தை அழுத்தி வந்த மடமை, சுரண்டல் ஆகியவற்றை மக்களிடையே எடுத்துக் கூறியவர்கள் என டாக்டர் அம்பேத்கர், பேரா. தேவி பிரசாத் ஆகியோரை கூறலாம். ஒரு மாணவராகவும், ஆசிரியராகவும் இந்திய தத்துவ மரபில் வேத மரபையே பிரதான தத்துவங்கள் என முன்வைத்திருந்த நிலையில் இந்தியாவின் முக்கிய தத்துவ மரபுகள் அனைத்துமே வேத மறுப்பு தத்துவங்கள்தான் என்பதை உணர்த்தி, உலகாயதம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் அவர். அவருடையது ஒரு சித்தாந்தப் புரட்சி ஆகும். இந்திய சித்தாந்தங்களில் பெரும்பாலானவை பொருளை மையமாகக் கொண்டவையே. எனினும் அவை இரண்டாம் தரமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்திய தத்துவ மரபில் அதன் முக்கிய இருப்பை, தாக்கத்தை அழுத்தமாக எடுத்துக் கூறி புதுப்பாதை சமைத்தவர் பேரா. தேவி பிரசாத்.
முனைவர் கிருஷ்ணன், துறைத் தலைவர், தத்துவத் துறை, விவேகானந்தா கல்லூரி, சென்னை:
“இந்திய தத்துவ மரபில் கருத்துமுதல் வாதம் எப்படி உருவானது என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே அதற்கெதிராக உயர்ந்து நிற்கும் பொருள்முதல் வாதத்தை உங்களால் துய்க்க முடியும் என்பதை தனது நூல்கள் மூலமாக எடுத்துக் காட்டியவர் பேரா. தேவி பிரசாத். மதச் சார்பின்மை, அறிவியல் பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவுப் போக்கு ஆகியவற்றின் மொத்த உருவம் தான் பொருள்முதல் வாதம் என்பதை ஆய்வு பூர்வமாக இந்திய தத்துவ உலகில் நிறுவியவர் அவர்.”
உணவு இடைவேளைக்குப் பின்பு தொடங்கிய மதிய அமர்விற்கு மார்க்சிஸ்ட் மாத இதழின் ஆசிரியர் தோழர் என். குணசேகரன் தலைமை வகித்தார்.
முனைவர் எஸ். பன்னீர் செல்வம், துறைத்தலைவர்(ஓய்வு), தத்துவத் துறை, சென்னை பல்கலைக்கழகம்:
“இந்திய தத்துவ உலகின் பேராசிரியராகத் திகழ்ந்த டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் பிரம்மத்தை முன்னிறுத்தியே பவுத்தம், சமணம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களை அறிமுகம் செய்கிறார். இந்தப் பின்னணியில் வேத மறுப்புக் கொள்கையை வேத மரபு நூல்களில் இருந்தே பெயர்த்தெடுத்து வெளிக்கொண்டு வந்த பேரா. தேவி பிரசாத் பாலி, சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை அறிந்தவராக இருந்தபோதிலும் மற்ற மொழிகளை அறிந்திராதது பற்றி வருந்தினார். இந்திய தத்துவ மரபில் புதிய அணுகுமுறைக்குத் தடம் பதித்த தேவி பிரசாத்தின் அடியொற்றி ஆன்மீக மரபை மீறிய வகையில் இந்திய தத்துவ மரபை வரும் தலைமுறையினரிடையே எடுத்துச் செல்ல அவரது எழுத்துக்கள் பெரிதும் உதவும்.”
பேரா. ஆ. தே. ரேவதி, தத்துவத் துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை: “இந்திய தத்துவத் துறையானது கடந்த பல ஆண்டுகளாகவே எந்தவொரு அறிவியல்பூர்வமான உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாத வகையிலேயே அதன் பாடக் கட்டமைப்பு இருந்து வந்துள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு பேராசிரியராக இருந்த தேவி பிரசாத் அவர்கள் இதை உடைத்து நொறுக்கும் வகையில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். வேத மரபிற்கு எதிரான தனது ஆய்விற்கு அகழ்வாராய்ச்சி உண்மைகளையும் பயன்படுத்திய முதல்வரும் அவரே. அறிவியல் முறைப்படியான ஆய்வு என்பதே அவரை இயங்கியல் வகைப்பட்ட சிந்தனைக்கு இட்டுச் சென்றது. இந்தப் போக்கை அவரது நூல்கள் நெடுகிலும் நம்மால் காண முடியும்.”
இறுதியாக சிறப்புரை ஆற்றிய பேரா. அருணன்: ” எனது தத்துவத் தேடல் கடவுள் உண்டா, இல்லையா? என்பதில் இருந்துதான் தொடங்கியது. அந்த வகையில் எனது சிந்தனைக்குப் பாதை சமைத்துத் தந்த பேராசிரியர் தேவி பிரசாத் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இந்தியா என்ற பெயர் புதிதாக இருந்தாலும், இந்தத் துணைக்கண்டம் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளது. இந்திய தத்துவ மரபிலே கடவுள் மறுப்பு என்ற மரபு உண்டா? என்ற கேள்வி எழுந்தபோது, அது நாத்திக மரபாக, இன்னும் சொல்லப்போனால் வேத மறுப்பு மரபாக இருந்தது என்பதை வேத மரபு நூல்களிலிருந்தே உதாரணங்களைக் கொண்டு முதலில் எடுத்துக் கூறியவர் தேவி பிரசாத். இத்தகைய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டுதான் நான் மார்க்சிய வாதியாக ஆனேன்.
ஆன்மீக மரபுதான், வேத மரபுதான் இந்திய தத்துவ மரபு என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்த காலத்திலே, அதை மறுத்து, வேத மறுப்பு மரபும் இந்திய தத்துவ மரபின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் என்பதை வலுவான ஆதாரங்களைக் கொண்டு நிலைநாட்டியவர் அவர். இந்த உலகமே பிரதானம். அதன் இயங்கு நிலையில் ஒரு கட்டத்தில்தான் உணர்வு என்பது வந்தது என்பதை நிறுவியதுதான் உலகாயதம். அதைப் பற்றி அதன் எதிரிகள், குறிப்பாக ஆதி சங்கரர் எடுத்துக் காட்டிய உதாரணங்களைக் கொண்டே உலகாயதம் பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
நமது தத்துவ மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதை நிரூபித்தவர் தேவி பிரசாத் அவர்கள். ஆதி சங்கரரின் மாயா வாதத்தை உடைத்து நொறுக்கி அதன் சமூக நோக்கத்தை அம்பலப்படுத்தியவர் அவர். ஒவ்வொரு தத்துவத்திற்கும் பின்னால் உள்ள சமூக நோக்கை அவர் செய்தது போன்று அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவதுதான் நாம் தேவி பிரசாத் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு தருணத்தில் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று கருதுகிறேன்.”
Leave a Reply