மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்


  • உ.வாசுகி

(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு, சமூக நீதி குறித்த மார்க்சிய அணுகுமுறையை உள்ளடக்கிக் கட்சியின் தெலுங்கானா மாநிலக்குழுவுக்கு அனுப்பிய குறிப்பை விளக்கும் வகையில் எழுதியது)

ஒரு மெடலின் இரு பக்கங்கள்:

”ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் கடமைகள்”  என்ற தலைப்பில் 1897ல் தோழர் லெனின் எழுதிய  ஒரு சிறு பிரசுரம் வர்க்கப் புரட்சியின் உள்ளடக்கத்தில் உள்ள ஜனநாயகம், சோஷலிசம் என்ற இரண்டு கூறுகளை விவரிக்கிறது. ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி, நரோத்னய வோல்யா, நரோத்னய ப்ராவோஆகிய 3 கட்சி திட்டங்களின் நடைமுறை சார்ந்த வேறுபாடுகளை விளக்குவதே இதன் நோக்கம். குறிப்பாக நரோத்னய வோல்யா, ப்ராவோ ஆகிய இரண்டு கட்சிகளும் தம் திட்டம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளை ‘ஜனநாயகக் கடமைகள்’ என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து முன்னெடுக்கின்றன, ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறை இதிலிருந்து வேறுபட்டது, மூன்றிலும் இது தான் சரியானது என்பதைத் தோழர் லெனின் நிறுவுகிறார். இந்த வாதங்களை இந்திய சூழலில்  பொருத்திப் பார்ப்பது அவசியம். ஏனெனில், இந்திய சமூகம் சாதி-வர்க்கம் என்பது பின்னிப் பிணைந்த சூழலாக இருக்கிறது. சாதியம், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும், வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் வர்க்க போராட்டத்தின் இரண்டு ஒருங்கிணைந்த அம்சங்கள் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. எனவே, ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் வர்க்க போராட்டத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தையும், சோஷலிச உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும், இரண்டும் ஒரு மெடலின் (அல்லது நாணயத்தின்) இரு பக்கங்கள் என்று லெனின் வாதிடுவது, இந்திய சூழலுக்குப் பொருந்தக் கூடியதே.

ஜனநாயக உள்ளடக்கம் என்பது பாகுபாடுகளை, கொடுமைகளை, எதேச்சாதிகாரத்தை எதிர்த்த போராட்டம். பாகுபாடுகள் என்பது ரஷ்ய சூழலில் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை, மத ரீதியான துன்புறுத்தல், இதர சமூகப் பிரிவுகள் மீதான ஒடுக்குமுறை போன்றவற்றை உள்ளடக்கியவை. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது, காவல்துறையின் ஒடுக்குமுறை போன்றவை எதேச்சாதிகார அம்சங்கள். சோஷலிச உள்ளடக்கம் என்பது, வர்க்கங்களைத் திரட்டி உற்பத்தி கருவிகளின் தனியுடமையை ஒழித்து, முதலாளித்துவத்தைத் தகர்த்து, பாட்டாளி வர்க்கத்தின் கையில் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு வருவதற்கான போராட்டம். இரண்டும் தவிர்க்க இயலாத விதத்தில் ஒன்றுக்கொன்று இணைந்தவை.

பல்வேறு சமூகப்பிரிவுகள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளைக் கையில் எடுத்தால் வர்க்க ஒற்றுமை சீர்குலையும் என்ற பார்வை தவறு,  அதே சமயம் வர்க்கப்பார்வையைப் புறம் தள்ளி  பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் தனித்துப் பார்ப்பதும் தவறு என்று லெனின் வாதிடுகிறார். சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் பல பிரிவுகள் இணையும். ஒடுக்கப்படும் தேசிய இனங்கள், மதப் பிரிவுகள், குட்டி முதலாளிகள்,  அறிவுஜீவிகள் எனப் பலரும் அவரவர் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக அணி திரள்வர். இத்தகைய போராட்டங்களின் வலுவான தோழராக தொழிலாளி வர்க்கம் நிற்க வேண்டும், இத்தகைய பிரச்னைகளைக் கையில் எடுப்பவராகவும் தொழிலாளி வர்க்கம் திகழ வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் இது முக்கியமானது.

அதே சமயம் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தை அனைத்துப் பரிமாணங்களிலும் தொழிலாளி வர்க்கத் தலைமையே நடத்த முடியும். குறிப்பான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அமைப்புகள், குழுக்கள், சமூகப் பிரிவுகள் அவ்வொடுக்குமுறையைத் தவிர  இதர விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் ஒரு தேசிய இனமோ, சமூகப் பிரிவோ, இவர்கள் மீதான ஒடுக்குமுறை இவர்களை ஒன்றிணைப்பதைக் காட்டிலும், இவர்களுக்கிடையே உள்ள வர்க்க முரண்பாடுகளே பல முடிவுகளைத் தீர்மானிக்கும். அரசியல் மற்றும் சமூக முறைமையை முழுமையாக ஜனநாயகப்படுத்தும் கடமையைத் தொழிலாளி வர்க்கமே செய்ய முடியும். இந்நிலைபாட்டில் ஒரு நீடித்த தன்மையும் தொழிலாளி வர்க்கத்துக்கே இருக்க முடியும். தொழிலாளி வர்க்கக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோழர் லெனின் விரிவாக விளக்குகிறார்.

இந்தப் பின்புலத்தில், சமூக ஒடுக்குமுறையையும், வர்க்க சுரண்டலையும் இந்திய சூழலில் ஒருங்கிணைத்துப் பார்ப்பது கூடுதல் தெளிவை அளிக்கும். சமூக நீதி குறித்த பிரச்னைகளில் தலையிடுவதன் முக்கியத்துவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளில், கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முன்னேற்றம் உண்டு. வேறு சில மாநிலங்கள் இன்னும் துவக்க நிலையில் நீடிக்கின்றன. இதில் முறிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன.   சமூக பிரச்னைகள் குறித்த நமது பணிகளை மேற்கொள்ளும் போது, அடையாள அரசியலைப் பின்பற்றும்  சமூக அமைப்புகள், தனிநபர்களோடு கூட்டாக செயல்பட நேரிடுகிறது. இந்த அனுபவத்தின் வாயிலாகப் பல கேள்விகளும் எழுகின்றன. இவை பிரதானமாக சமூக நீதியின் தன்மை, இதில் ஒரு புரட்சிகர இயக்கத்தின் பாத்திரம் தொடர்பானவை.

ஒரு புறத்தில் சமூகப் பிரச்னைகளில் தலையீடு செய்வது வர்க்க போராட்டத்திலிருந்து திசை திருப்பும், வர்க்க இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.  மறு புறம், தற்கால இந்தியாவில் தொடர்ந்து நீடித்து வரும் சாதிய அமைப்பு, அதனுடன் தொடர்புடைய ஒடுக்குமுறை ஆகியவற்றின் பின்னணியில் கட்சியின் பிரதான அரசியல் செயல்பாடு சமூக நீதி குறித்ததாக இருக்க வேண்டும் என்ற கருத்து வருகிறது.

சமூக நீதி, வர்க்க போராட்டத்தை திசை திருப்புமா?

சாதிய பிரச்னைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது. இது முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்புகளிலேயே வேர் பிடித்து நின்றதாகும். மற்ற பல நாடுகளில் நடந்ததைப் போல், இந்தியாவில் முந்தைய சமூக அமைப்பை முற்றிலும் தகர்த்து முதலாளித்துவம் நிறுவப்படவில்லை எனக் கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகிறது. நிலப்பிரபுத்துவத்தோடும், அதனுடன் இணைந்து நின்ற சாதிய அமைப்போடும் சமரசம் செய்து கொண்ட முதலாளித்துவம்,  சாதிய வேறுபாடுகளை வளர்த்து விட்டு, அதைத் தன் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. சமூக ஒடுக்குமுறையின் கூர்முனையை சந்திக்கும் தலித் மக்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கமாக இருக்கின்றனர். அதாவது வர்க்க சுரண்டலைக் கூடுதலாக சந்திக்கும் பகுதியினராகவும் இருக்கின்றனர். இந்நிலையில், சாதிய அமைப்பு முறைமை மற்றும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஒற்றுமையைக் கட்டுவது, வர்க்க ஒற்றுமைக்கான முன்நிபந்தனையாகும்.  சாதிய அமைப்பை ஒழிப்பதும், அனைத்து வித சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவதும், மக்கள் ஜனநாயகப் புரட்சியின் முக்கியமானதொரு பகுதி ஆகும். இவ்வாறாக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப் பிணைந்தது  எனக் கட்சி திட்டத்தின் பாரா 5.12 அழுத்தமாகக் கூறுகிறது.  சமூக நீதிக்குக் குரல் கொடுப்பது, திட்டம் சார்ந்த நிலைபாடாகும். அது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளில் தலையீடு செய்வது வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பது கட்சியின் திட்டத்தைப் புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடே.

மூன்று வகைகளில் இந்த விஷயம் குறித்து, கட்சித் திட்டம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஒன்று, சாதிய அமைப்புக்கு எதிராகவும், தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுவதென்பது உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுப்பதற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். இரண்டாவது, சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப்போராடுவது என்பது புரட்சிகர நடவடிக்கையின் மிக முக்கியமானதொரு பகுதியாகும். மூன்றாவதாக, வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டமும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகும். எனவே, சமூகப் பிரச்னைகளின் முக்கியத்துவத்தை புறக்கணித்தோ, ஒதுக்கித் தள்ளியோ, நிராகரித்தோ, குறைத்து மதிப்பிட்டோ வர்க்க ஒற்றுமையைக் கட்டவும் முடியாது, வர்க்க போராட்டத்தை வளர்த்தெடுக்கவும் முடியாது.

இந்தப் புரிதல், கட்சி வகுப்புகளில் பேசுவதற்கும், கேட்பதற்குமானது மட்டுமல்ல, நடைமுறை சார்ந்தது. இதற்கென தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைக்கப்பட்டு, அது, சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளைக் கையிலெடுத்தால் கடமை முடிந்து விடும் என்று எண்ணி விடக்கூடாது. 3 விதமான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்.

  1. உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களிடம் சாதி, பாலினம், வகுப்புவாதம் மற்றும் இதர பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியான தத்துவார்த்த போராட்டம் நடத்தப்பட வேண்டும். தலைமையின் கண்ணோட்டம், அவ்வமைப்பை சார்ந்த உறுப்பினர்கள் அத்தனை பேரின் கண்ணோட்டமாகவும் இருப்பதில்லை. இது உருவாக்கப்பட வேண்டும்.
  2. வர்க்க ஒற்றுமைக்கு எதிரான சமூக பாகுபாடுகளைக் கடைப்பிடிப்பதை விட்டு அவர்கள் விலகும் வகையில் சமூக சீர்திருத்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  3. அனைத்து வர்க்க வெகுஜன அமைப்புகளும் ஆளும் வர்க்கங்களால் கட்டவிழ்த்து விடப்படும் சமூக ஒடுக்குமுறை சார்ந்த பிரச்னைகளில் (நேரடியாகவும் இருக்கலாம் அல்லது ஒடுக்குமுறைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் கொள்கை அல்லது நடவடிக்கையாக இருக்கலாம்) கவனம் செலுத்த வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் ஜனநாயக உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்கள் மற்றும் கூட்டு மேடைகளில் இணைய வேண்டும்.

அரசியல் நடைமுறையின் குவிமையமாக சமூக நீதி இருக்க வேண்டுமா?

சுரண்டப்படும் வர்க்கங்களின், ஒடுக்கப்படும் சமூகப்பிரிவினரின்  முழுமையான விடுதலை தான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்.  ஆனால் இன்றைய சூழலில், சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. அதாவது,  ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு, பிரதிநிதித்துவம், அங்கீகாரம், சமமாக நடத்துதல் போன்றவற்றைக் குறிப்பதாக அமைந்துள்ளது.  இக்கோரிக்கைகளுக்காகப் போராடுவது வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கிய பகுதி. ஆனால் பிரதான நிகழ்ச்சி நிரலாக சமூக நீதி இருக்க வேண்டும் என்ற கருத்து, அது வர்க்கப் போராட்டத்தின் முக்கிய பகுதி என்பதைக் காட்டிலும்  முழுமையே அது தான் என்ற பொருள்படுகிறது.  மேற்கூறிய அம்சங்களுடனான சமூக நீதி, சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக எப்படி ஆகமுடியும்? வர்க்க சுரண்டல் குறித்த பிரச்னைகளுக்கு இடம் எங்கே? ஒடுக்கப்படும் சாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் விடுதலை கிடைத்து விடுமா? வர்க்கத்திரட்டல் தேவையில்லையா? சாதிகளுக்குள் இருக்கும் வர்க்க முரண்பாட்டை எதில் சேர்ப்பது? இது வர்க்கத்துக்கும் சமூகப் பிரிவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கணக்கில் எடுப்பதாக இல்லை. ஒடுக்குமுறையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை அளிப்பதில் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தைப் புறம் தள்ளுவதாக இருக்கிறது.

சமூக நீதிக்கான போராட்டம், வர்க்க போராட்டத்தின் ஜனநாயக அம்சத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று தான் கூறமுடியும். வர்க்க போராட்டத்தின் சோஷலிச பகுதியை இது பிரதிநிதித்துவம் செய்ய இயலாது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை மங்கச் செய்து,  தெளிவற்றதாக்கி அனைத்தையும் சமூக நீதிக்குள் உள்ளிழுத்துக் கொள்வது வர்க்க பிரச்னைகளையும், வர்க்க அமைப்புகளையும் புறக்கணிப்பதாகும். இது, வர்க்க அரசியலைக் கைவிட்டு, அடையாள அரசியல் முழக்கங்களை எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்றுக் கொள்வதற்கே வழி வகுக்கும்.

தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையே உண்மையான, முழுமையான சமூக நீதியை சாத்தியமாக்கும். மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் மக்கள் ஜனநாயகமானது சமூக நீதியையும் உள்ளடக்கியது. ஆனால் மேற்கூறிய புரிதல், மக்கள் ஜனநாயகம் என்ற கோஷத்துக்கு மாறாக சமூக நீதி என்ற கோஷத்தைப் பிரதானப்படுத்துகிற தவறுக்கு இட்டுச் செல்லும். சமூக நீதிக்கு மட்டும் அழுத்தம் தருபவர்கள் சமூக அமைப்புகளையும், வர்க்க அமைப்புகளையும் ஒரே தட்டில் வைக்க முயல்கின்றனர். இவற்றுக்கு இடையில் உள்ள பண்பு ரீதியான வேறுபாடுகளை அங்கீகரிக்கத் தவறுகின்றனர். வர்க்க அமைப்புகள் வர்க்கத் திரட்டலுக்காக அமைக்கப்பட்டவை. புரட்சிகர இயக்கத்தில் இவற்றுக்கு சிறப்பானதொரு இடமும், பங்கும் உண்டு. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டல் எதிர்ப்பு இவற்றின் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. சாதி மதம் கடந்த வர்க்க ஒற்றுமை இதன் அடிப்படை.

ஆனால் சமூக அமைப்புகள் குறிப்பாக சாதி, மத அடிப்படையில் செயல்படும் அமைப்புகள் வளர்த்தெடுக்கும் ஒற்றுமை என்பது ஒரு சமூகக்குழு என்ற அடிப்படையைக் கொண்டதாகும். அவற்றால் தன்னெழுச்சியாக உருவாக்கப்படும் உணர்வும் கூட அந்த அடையாளத்தின் அடிப்படையிலேயே இருக்கும். ஒரு சமூகக் குழுவின் பிரச்னை என்னும் போது அக்குழுவிற்குள் நிலவும் வர்க்க வேறுபாடுகளும், சுரண்டல்களும் இதன் வரையறைக்குள் வராது. சமூக ரீதியாகப் பின்தங்கிய பிற்பட்ட வகுப்பினரில் கணிசமானோர் பெரும் வசதி படைத்தவர்கள், தம் சமூகத்தில் உள்ள ஏழைகளை சுரண்டக் கூடியவர்கள். சிறுபான்மையினரும் அப்படித் தான். சமூகப்பிரிவு என்பதை மட்டும் வைத்துப் பார்த்தால், வர்க்க வித்தியாசங்களைப் புறம் தள்ளும் நிலை தான் ஏற்படும். இத்தகைய அமைப்புகள், மார்க்சிஸ்ட் கட்சி வழி காட்டும் அமைப்பாக இருந்தாலும், அமைப்பின் உள்ளார்ந்த தன்மையில் பெரிய வேறுபாடு எதுவும் வந்து விடாது. பாதிக்கப்படும் சமூகக் குழு என்ற அடிப்படையிலேயே அதன் செயல்பாடு அமையும். இதில் மாற்றம் காண விரும்பினால், சமூகப் பிரச்னைகளை சுயேச்சையாக எடுப்பதும், இப்பகுதியினரின் உண்மையான, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகள் மீதான கூட்டு மேடைகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதும் இதன் மூலம், வர்க்க ஒற்றுமைக்கு எதிரான நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்கும் போது அவற்றை விழிப்போடு அம்பலப்படுத்துவதும் தேவை. சாதி என்கிற அடையாளத்துக்குள்ளேயே நிறுத்தாமல், பொது ஜனநாயக நீரோட்டத்தில் இவர்களை இணைக்க வேண்டும். அனைத்து சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணமான முதலாளித்துவ சமூக அமைப்பை நொறுக்கும் அரசியலில் இறக்க வேண்டும். இதற்குள் செயல்படும் கம்யூனிஸ்டுகள் அடையாள அரசியலின் செல்வாக்கில் சிக்கி விடக் கூடாது. வர்க்க பார்வையை விட்டு விடக் கூடாது. வர்க்க போராட்டத்தின் சோஷலிச அம்சத்தை மேற்கொள்வதில் வர்க்க அமைப்புகளின் இடத்தை சமூக அமைப்புகள் பெற்று விட முடியாது. எனவே சமூக நீதி புரட்சிகர இயக்கத்தின் அரசியல் நடைமுறையின் பிரதான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது.

ஒட்டு மொத்த சுரண்டலுக்கு எதிராக:

சாதி ஒழிப்பு நடக்க வேண்டும் என்றால் மனமாற்றம் மட்டுமே போதாது.  சாதி முறைமை நீடிப்பதற்கு உகந்ததாக இருக்கக் கூடிய பவுதீக சூழல் மாற வேண்டும். மனமாற்றத்துக்கும் அது தான் களம் அமைக்கும். பவுதீக சூழல் மாறுவது என்பது பொருளாதார சுரண்டலை ஒழிப்பதுடன் தொடர்புடையது. கிராமப்புறங்களில் தீவிர நில சீர்திருத்தத்துடன் இணைந்தது. முழுமையான நில சீர்திருத்தமே சாதி ஒழிப்புக்கான பவுதீக சூழலை ஏற்படுத்தும். பெருவாரியானோர் விவசாய தொழிலாளர்கள் என்னும் போது, அவர்களது உணவு பாதுகாப்பு போன்ற பிரச்னைகள், விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டால் இழப்பீடு ஆகியவற்றுக்கும் குரல் கொடுக்க வேண்டும். முறையான வேளாண் கொள்கைக்குப் போராட வேண்டும். நிலம், கூலி, உணவு என்ற மூன்று அடிப்படையான பிரச்னைகளும் பவுதீக சூழலின் முக்கிய பகுதிகள். இவையெல்லாமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியில் சாத்தியமில்லை.  

பொதுவாக சமூக நீதிக்குக் குரல் கொடுப்பவர் அனைவரும்,  மேற்கூறிய அதன் சகல பரிமாணங்களிலும் முன்னுக்கு வரும் பிரச்னைகளில் தலையீடு செய்ய வந்து விட மாட்டார்கள். குறிப்பாக முதலாளித்துவ கட்சிகள் இத்தகைய ஒட்டு மொத்தக் கண்ணோட்டத்தோடு செயல்பட முடியாது. அவர்கள் எந்த வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியோ, அவர்களின் நலன் சார்ந்தே நிலைபாடு எடுப்பார்கள். அடையாள அரசியல் சார்ந்து செயல்படும் அமைப்புகள், குழுக்கள், தனிநபர்களும் சில குறிப்பான பாகுபாடுகளை எடுப்பார்களே தவிர, பாகுபாடுகளின் மூலாதாரம், அதற்குக் காரணமாக இருக்கக் கூடிய நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், அதன் ஊற்றாக இருக்கக் கூடிய சர்வதேச நிதி மூலதனம், ஏகாதிபத்திய எதிர்ப்பில் பொதுவாக உறுதி பட நின்று விடமாட்டார்கள்.

பகுதி பகுதியாகப் பார்த்து ஒட்டு மொத்தத்தைத் தவற விடக் கூடாது. ஒட்டுமொத்தம் என்ற பெயரில் பகுதிகளின் பிரத்தியேக பிரச்னைகளை ஒதுக்கி விடவும் கூடாது. பகுதிகளின் பிரத்தியேக பிரச்னைகளை, ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதைக் கையில் எடுப்பதற்கான ஒற்றுமையைக் கட்டுவதன் மூலம், ஒட்டுமொத்த சுரண்டும் காரணிகளுக்கு எதிரான போராட்டமாக அதை மாற்ற வேண்டும். சமூக பிரச்னைகளில் தலையீடு செய்வதில் சில மாநிலங்களில் இன்று கட்சிக்கு இருக்கும் பலவீனத்தைக் களைவது என்ற பெயரில், அடையாள அரசியலைத் தழுவுவது என்ற அடுத்த எல்லைக்குப் போய் விடக் கூடாது.

சமூக நீதி பிரச்னையை ஒரு  ஜனநாயக பிரச்னையாகப் பார்ப்பதால் தான், தீண்டாமை போன்ற ஒடுக்குமுறையை எதிர்ப்பதில், தலித்துகள் மட்டும் திரட்டப்பட்டால் போதாது, அனைத்து சாதிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் என்ற கருத்தியல் மார்க்சிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்படுகிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அத்தகைய பார்வையுடன் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் வர்க்க ஒற்றுமையும் அடங்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியில் உள்ள ஆதிக்க சக்திகளைத் தனிமைப்படுத்தி எதிர்க்க வேண்டும், ஒட்டு மொத்த சாதியை ஆதிக்க சாதி என்று வரையறுப்பது அதில் உள்ள உழைப்பாளி வர்க்கங்களையும் தள்ளி விடுவதாக அமையும். பிற்பட்ட பிரிவினரில் நிலவும் வர்க்க முரண்பாடுகளைக் கணக்கிலெடுத்து இட ஒதுக்கீட்டை அணுக வேண்டும் என்பது கூட வர்க்க நலன் முன்னுக்கு நிறுத்தப்படும் அணுகுமுறையாகும்.

சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சமூக நீதி பங்களிப்பு குறித்த அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும்?

இப்பகுதி  விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பகுதி. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு இந்திய சமூகத்தில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த உதவியிருக்கிறது. அவை போற்றப்பட வேண்டும். அவர்களின் பாரம்பரியத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் பெரியார் அவர்கள் முன்வைத்த சமூக நீதி கோட்பாடுகள்  மற்றும் அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியவை என்பதில் சந்தேகமே இல்லை. ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலனுக்காக இடைவிடாது போராடிய போர்வீரர்கள் அவர்கள். சமூக நீதிக்கான போராட்டத்தில் கூட்டாளிகளாக இருக்கக் கூடிய தீவிர ஜனநாயகவாதிகளாகவே முற்போக்கு அம்பேத்கரியவாதிகளை, பெரியாரிஸ்டுகளையும் நாம் கருத வேண்டும். ஆனால் அம்பேத்கரியத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு இல்லை, இருப்பதும் சிறு சிறு மேலெழுந்தவாரியான வித்தியாசங்களே என்ற கருத்தும், இந்தியாவிற்கு மார்க்சியம் மட்டுமே போதாது என்ற கருத்தும், அம்பேத்கரியமும் மார்க்சியமும் இணக்கம் காண முடியும் என்ற கருத்தும் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன. பெரியாரியத்துடனும் இவ்வாறே மார்க்சியம் ஒப்பு நோக்கப்படுகிறது. இவற்றை ஏற்பதற்கில்லை. மார்க்சியம் என்பது முதலாளித்துவ அமைப்பை உடைத்து நொறுக்க விரும்பும் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர தத்துவமாகும். அம்பேகரியம் சாதிய அமைப்பின் மீது தீவிர தாக்குதலைத் தொடுக்கிறது, சில அரசியல் பொருளாதார பிரச்னைகளில் முற்போக்கு நிலைபாட்டைக் கொண்டதாக இருக்கிறது, ஆனால் முதலாளித்துவத்தை எதிர்க்கும், தகர்க்கும் ஆயுதமாக அது இல்லை. இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் சாதி ஒழிப்பை நிறைவேற்ற முடியாது. ஒரு வேளை வாதத்துக்காக முடியும், சாதி ஒழிந்து விடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். சாதி ஒழிந்தால் போதும் என்றால், பிறகு முதலாளித்துவத்தை எதற்கு எதிர்க்க வேண்டும்? எனவே அம்பேத்கரியம் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே நின்று தான் சாதி ஒழிப்புக்கான சீர்திருத்தங்களை முன்வைக்கிறது. ஒட்டு மொத்த வர்க்க சுரண்டலுக்கு இதில் தீர்வு இல்லை. எனவே தத்துவம் என்ற முறையில்  மார்க்சியமும் அம்பேதக்ரியமும் வேறுவேறானவை.

இந்தப் பின்னணியில் சிவப்பு – நீலம் ஒற்றுமை, ஜெய் பீம்-லால் சலாம் போன்ற கோஷங்களை எப்படிப் பார்ப்பது?

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான இடதுசாரிகள் மற்றும் தலித்திய அமைப்புகளின் கூட்டு இயக்கங்களுக்கான கோஷங்கள் என்ற முறையில் இவற்றை முன்வைக்கலாம்.  ஆனால் இடதுசாரி-தலித் ஒற்றுமை என்பதை அரசியல் உத்தி அல்லது அரசியல் முன்னணிக்கான அடிப்படையாக மாற்றி விட முடியாது. ஏனெனில் இந்த ஒற்றுமை மட்டும் புரட்சிக்கான அணி சேர்க்கைக்குப் போதாது. அனைத்து சாதி, மத சமூகப்பிரிவுகளில் இருக்கும் உழைப்பாளி மக்களின் ஒற்றுமையும் தேவை.  இடது ஜனநாயக அணி என்பதற்குள் வர வேண்டிய ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் என்ற முறையில் இத்தகைய சக்திகளை நாம் அரவணைக்க வேண்டும். இதில் வர வேண்டிய பிரிவுகள் மேலும் பல உண்டு.  வர்க்க சேர்க்கையில் புரட்சிகர சக்திகளுக்கு சாதகமான மாற்றம் ஏற்படுவதே புரட்சிக்கு இட்டுச்செல்லும் முக்கிய காரணியாகும். வர்க்கத் திரட்டல் என்ற அடிப்படையான கடமைக்கு பதிலியாக வேறு எதையும் நிறுத்த முடியாது.

இந்தியாவில் முதலாளித்துவம் – தொழிலாளி வர்க்கம் என்ற இரண்டு நவீன வர்க்கங்கள் சாதிய படிநிலைகளால் ஏற்கனவே பிளவுபட்டுள்ள சமூக அமைப்பின் மீதே உருவாகியிருக்கின்றன. எனவே சமூக ஒடுக்குமுறையா அல்லது வர்க்க சுரண்டலா என்று இரண்டையும் எதிரும் புதிருமாக நிறுத்தக் கூடாது. இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளன, ஒன்றின் மீது ஒன்றாகப் படிந்துள்ளன. பல்வேறு சாதிகள், சமூகப்பிரிவுகளிலிருந்து வருபவர்களே உழைக்கும் வர்க்கத்தின் பகுதியினராக இருக்கிறார்கள். ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளும், புதிதாகத் தொழிலாளி வர்க்கத்துக்குள்ளே வந்து சேருபவர்கள் கொண்டு வரும் பாகுபாடான பிற்போக்கு பழக்க வழக்கங்களும் வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுப்பதை சிக்கலாக்கி விடுகிறது. மறுபுறம் முதலாளித்துவ சக்திகளும், அடையாள அரசியல்வாதிகளும் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த அடையாளங்களைத் திட்டமிட்டு பயன்படுத்துகிறார்கள். சாதியின் வரம்புக்குள்ளேயே அவர்களை அடக்கி வைத்து, பொதுவான ஜனநாயக இயக்கத்தின் பகுதியாக அவர்கள் மாறிவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதை விட, அரசியல் சுய லாபத்துக்கு இப்பிரச்னைகளைப் பயன்படுத்துவது என்பது அதிகரித்து வருகிறது.

கருத்துக்களுக்கும், வாதங்களுக்கும் பதில் வாதங்களை வைப்பதற்கு பதிலாக, சொல்லுபவர் சாதி மட்டுமே ஏற்புக்கும் நிராகரிப்புக்குமான பதில்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது அடையாள அரசியலின் ஒரு பகுதி தான்.   இதன் படி பார்த்தால் பிரதமர் பிற்பட்ட சாதியாகவும், குடியரசு தலைவர் தலித்தாகவும், கட்சியின் முக்கிய பொறுப்பில் சிறுபான்மை வகுப்பாரும், பாதுகாப்பு துறை அமைச்சராகப் பெண்ணும் உள்ள பாஜக ஆட்சி சிறந்தது என்ற முடிவுக்குத் தான் போக வேண்டியிருக்கும்.

இச்சூழலில் வர்க்க போராட்டத்தின் ஜனநாயக உள்ளடக்கம், சோஷலிச உள்ளடக்கம் இரண்டின் முக்கியத்துவத்தையும், முதலாளித்துவ கட்சிகள், சமூகக் குழுக்கள், பிரிவுகள் எப்படி இப்புரிதலில் இருந்து வேறுபட்டு, அடையாள அரசியலின் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டு, சமூக ஒடுக்குமுறை மற்றும் வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை வர்க்கப் பார்வையுடன் ஒருங்கிணைத்து நடத்த வேண்டியது அவசியம்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: