இயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்


சு.ஜெகஜீவன்

இயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும்

இயற்கையை, அதாவது மனிதர்களிடமிருந்து தனித்து இயங்கும் பொருளாயத உலகை ஆராய்ந்து அறிகின்ற துறைகள் இயற்கை விஞ்ஞானத் தொகுப்பில் இடம் பெறுகின்றன. இயற்கையை எவ்வித மனித உணர்வுகளின் கலப்புக்கும் இடம் கொடுக்காமல் அதன் இருப்பை கணக்கிலெடுத்துக்கொண்டு ஆராய்வதாகும். இந்த ஆய்வுக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் எனப்படுகிறது.

பொருள்முதல்வாதத் தத்துவம் இயற்கை விஞ்ஞானத்துடன் நெருங்கியத் தொடர்பை பெற்றுள்ளது. மேலும் பொருள்முதல்வாதத்திற்கென ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இது பண்டைய காலத்திலேயே தோன்றியது. உலகைப் பற்றிய பொதுக்கண்ணோட்டத்தை பண்டைக்காலப் பொருள்முதல்வாதிகள் கொண்டிருந்தாலும் விஞ்ஞான வளர்ச்சியின்மையின் காரணமாக திட்டவட்டமான விஞ்ஞானங்களை ஆதாரமாக இவர்கள் கொண்டிருக்கவில்லை.

சகலவித ஞானத்தையும் ஒன்றிணைத்து இயற்கையை ஆராயும் முறை, அதாவது பொருள்முதல்வாதத்தின் ஏறக்குறைய பூர்த்தியடைந்த வடிவம் 17-18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது. ஆனாலும் இது முக்கிய குறைபாட்டைக் கொண்டிருந்தது. உலகின் வளர்ச்சி, அதன் சகல தோற்றங்களிடையே உள்ள பரஸ்பரத் தொடர்ச்சி ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் போனதால் இது இயக்க மறுப்பியல் பொருள்முதல்வாதம் என்ற குறைக்கு ஆளானது.

இதன் பிறகு உலகை இடையறாத இயக்கம் மற்றும் வளர்ச்சி நிலைகளில் அணுகவும், உலகின் சகலவித தோற்றங்களும் பரஸ்பரத் தொடர்பிலும் செயல்பாட்டிலும் உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற விஞ்ஞானம் கார்ல் மார்க்சால்    வெளியிடப்பட்டது. இந்த விஞ்ஞானத் தத்துவத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், இயற்கையில் உள்ள இயக்கவியலை சமூகத்திற்கும் பொருத்தி வெற்றிக்கண்டதேயாகும். இயக்கவியல் கண்ணோட்டம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும்போது அது வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற உயர்தர வடிவத்தை அடைகின்றது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

பொருளை முதலாகக் கொண்டே உலகம், உயிரினங்கள் அனைத்தும் தோன்றி வளர்ந்தன என்பது பொருள்முதல்வாதம் எனப்படும். இக்கோட்பாட்டின் மூலவர் ஜெர்மன் தத்துவஞானி ஃபாயர்பாக் (1804-1872) ஆவார். இவரது ஆசிரியரான மற்றொரு ஜெர்மன் தத்துவஞானியான ஹெகல் (1770-1831) இயங்கியல் கோட்பாட்டை முன்வைத்தவராவார். உலகின் பொருளாயதத் தன்மையையும் அப்பொருள்களிலுள்ள இயங்கியலையும் (அதாவது பொருட்கள் அனைத்தும் இடையறாத இயக்கத்திற்குட்பட்டவை என்பதையும்) இணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை வழங்கியவர் உலகறிந்த ஜெர்மன் தத்துவஞானியான கார்ல் மார்க்ஸ் ஆவார். பொருளானது இயக்கமற்ற வெறும் சடமல்ல; மாறிக்கொண்டே இருக்கிறது. பிற பொருட்களுடன் பரஸ்பர தொடர்புடையது. தொடர்பற்ற தனித்த பொருள் எதுவுமில்லை என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் வாதிட்டது.

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை ஏற்படுத்தியதில்தான் கார்ல் மார்க்சின் அறிய கண்டுபிடிப்பு அடங்கியிருந்தது. அதுதான் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமுதாயத்தையும் சமுதாய வளர்ச்சியையும் அறிவதற்கான ஆய்வில் பொருத்திப் பார்த்ததாகும். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சமுதாயத்தின் மீது பிரயோகித்ததிலிருந்து உருவான சமூக விஞ்ஞானக் கோட்பாடே இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத கோட்பாடாகும். சமூகப் பிரச்சினைகளுக்கு பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் முதல் நெறிமுறை சமூகத்தில் ஏற்படும் மாறுதலும், வளர்ச்சியும், இயற்கையில் உள்ளது போன்று, புறவயமான விதிகளுக்கு உட்பட்டு இடம் பெறுகிறது என்பதாகும். இயற்கையில் உள்ளது போன்று சமூகச் செயல்முறையானது புறவயமான விதிகளில் கட்டுப்படுத்தப்படுகிறது.

உதாரணமாக புவி ஈர்ப்பு விதியில் இடம்பெறும் பொருள்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்பது நமது பிரக்ஞை, விருப்பம் ஆகியவற்றைச் சார்ந்தவையல்ல. நாம் அவற்றை கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் நமக்கு விருப்பம் இருக்கிறது அல்லது இல்லை என்றாலும், இந்த விதி ஒரே மாதிரி வேலை செய்கிறது. இந்த விதிக்கு ஏற்றபடி நமது செயலை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதனை நம்மால் மாற்ற இயலாது.

சமூகச் செயல்கள் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றால், அவை சமூகத்திற்கு பயன்பட வேண்டும். சமூகச் செயல்முறைகளில் சில ஒழுங்குகள் உள்ளன. சமூக நிகழ்வுகளுக்கு இடையே தொடர்புகள் உள்ளன. இவை நமது பிரக்ஞையையும், விருப்பத்தையும் சாராதவை. இவற்றை நாம் கவனிக்கிறோமோ இல்லையோ, இவற்றை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இவை செயல்புரிந்து கொண்டே இருக்கின்றன.

அடையாள அரசியல்

அடையாள அரசியலின் மிக முக்கியமான அம்சங்களை எடுத்துக்கொண்டு அவற்றை அறிவியல் நோக்கில், அதாவது வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாத நோக்கில் பரிசீலிப்போம்.

அடையாள அரசியலில் முன்வைக்கப்படும் பல்வேறு கோட்பாட்டு நிலைகளை கவனமாகப் பரிசீலித்துப் பார்த்தால், அதிலிருந்து கீழ்வரும் சில முக்கிய அம்சங்கள் கிடைக்கின்றன.

             அடையாள அரசியல் என்பது பண்பாட்டு அரசியலாக முன்வைக்கப்படுகிறது.

             அடையாள அரசியல் என்பது வித்தியாசங்களின் அரசியலாக முன்வைக்கப்படுகிறது.

             அடையாள அரசியல் பொதுமைப்படுத்துதலை எதிர்க்கிறது.

             அடையாள அரசியல் மையப்படுத்தலை எதிர்க்கிறது.

பண்பாட்டு அரசியல்

இயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தில், பொதுவாக அரசியல் எனப்படுவது சமுதாயத்தின் மேற்கட்டுமானமாக அமைகிறது. குறிப்பாக பண்பாட்டை எடுத்துக்கொண்டாலும் அது மேற்கட்டுமானத்தில் உள்ள ஒரு அம்சமேயாகும். ஆனால் சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலும் தீர்மானகரமான பங்காற்றுவது அடிக்கட்டுமானமேயாகும். ஒவ்வொரு சமூகமும் அதன் பிரத்தியேகமான  அடித்தளத்தையும் அதற்கு பொருத்தமான மேற்கட்டுமானத்தையும் கொண்டே இயங்குகிறது.

அடித்தளம் எனப்படுவது அக்காலத்திய உற்பத்தி உறவுகளின் தொகுப்பிலான பொருளாதார அமைப்பாகும். இந்தப் பொருளாதார அமைப்பு எனும் அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்களே மேற்கட்டுமான அம்சங்களை தீர்மானிப்பதிலும் மாற்றுவதிலும் பங்காற்றுகின்றன. இதன்படி நாம் தற்போது முதலாளித்துவ, உற்பத்தி உறவுகளில் இருக்கின்றோம் என்பதும், நமது சமூக பொருளாதார அமைப்பு முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு என்பதும் தெளிவாகின்றது. எனவே இந்த சமூக பொருளாதார அமைப்பை மாற்றுவதன் மூலமே இதன் மேற்கட்டுமானத்தில் பங்காற்றும் அரசியல், பண்பாடு, மதம் உள்ளிட்டவற்றை மாற்றியமைக்க முடியும் என்பது திண்ணம்.

நாம் இங்கு பரிசீலித்து வரும் பண்பாட்டு அரசியல் என்பது மேற்கட்டுமானத்தில் மட்டுமே மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கோருவதால் இது மாற்றத்தை ஏற்படுத்துவதில் விஞ்ஞான ரீதியில் தோல்வியடைகின்றது. மேற்கட்டுமானங்கள் அடிக்கட்டுமானத்தின் மீது தாக்கம் செலுத்தவே செய்கின்றன. என்றாலும் மேற்கட்டுமானத்துடன் ஒப்பிடுகின்ற பொழுது அடித்தளம்தான் முதன்மையானது என்ற உண்மையை அங்கீகரிப்பது சமுதாயத்தின் பிரச்சனைகளை பொருள்முதல்வாத வழியில், அதாவது அறிவியல் நோக்கில், தீர்ப்பதற்கு உதவுகிறது. ஆகவே பண்பாட்டு அரசியலாக முன்வைக்கப்படும் அடையாள அரசியலானது உண்மையில் தலைகீழ் அணுகுமுறையாக இருப்பதால் பெரும் குறைபாட்டிற்குள்ளாகிறது.

வித்தியாசங்களின் அரசியல்

மக்களிடையே பொதுத்தன்மை என்று எதுவும் இல்லை; வித்தியாசங்கள் அல்லது வேறுபாடுகளே மக்களிடம் மேலோங்கி நிற்கின்றன. இத்தகைய வேறுபாடுகளே அவரவரின் அடையாளங்களாகும். அவரவர் அடையாளங்கள் வேறுபடுவதுபோலவே அவர்களின் நலன்களும் அவற்றை அடைவதற்கான பாதைகளும் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோருக்குமான பொது நலன், பொது வழிமுறை என்று எதுவும் இல்லை. பொதுவான நலன் என்று எதுவும் இல்லாதபோது பொது நலனுக்கு எதிரான பொது எதிரி என்பதும் இருக்க முடியாது.

பொதுவான எதிரி இல்லாதபோது, போராடுவதற்குரிய பொதுவான ஸ்தாபனம் (கட்சி) பொதுத்தலைமை (மையம்) பொதுவான தத்துவம் என்பதெல்லாம் இருக்க முடியாது. இவையெல்லாம் வேறுபாடுகளை பிரதானப்படுத்தி அடையாள அரசியல் முன்வைக்கும் வாதங்களாகும்.

இப்போது விவாதத்திற்கு வருவோம்.

இயங்கியல் அல்லது அறிவியல் ரீதியிலான கண்ணோட்டம் வேறுபாடுகளை எவ்விதம் கருதுகின்றது? உண்மையில் இயங்கியல் கண்ணோட்டம் வேறுபாடுகளை அல்லது வித்தியாசங்களை அவற்றின் முற்போக்கான அர்த்தத்தில் அங்கீகரிக்கவே செய்கின்றது. சமூக ஒடுக்குமுறைகளில் இருக்கும் படிநிலைகளையும் வேறுபாடுகளையும் தெளிவான பகுப்பாய்விற்கு உட்படுத்துவதிலேயே இயக்கவியலின் சிறப்பும் அடங்கியிருக்கிறது. எனினும் வேறுபாடுகளுக்கிடையேயான பொதுத்தன்மையை கண்டறிவதே இயக்கவியலின் முக்கிய குறிக்கோளாகும்.

வேறுபாடுகளே இல்லை எனும் பட்சத்தில் அவற்றிற்கிடையேயான பொதுத்தன்மையும் இருக்க முடியாதல்லவா? ஒரு மாம்பழமும் ஒரு ஆப்பிள் பழமும் வேறுபட்டவை என்ற உண்மைக்கிடையே இரண்டுமே பழங்கள் என்ற பொதுத்தன்மையையும் வேறுபாடுகளைக் காட்டி மறைக்க முடியாது. எனவே இந்த வித்தியாசங்கள் பொதுத்தன்மையை அடைவதற்குத் ‘தடை’ என்று கருதுவதற்குப் பதிலாக பொதுத்தன்மையை ஏற்கும்போதே வேறுபட்டவைகளின் ஐக்கியம் என்பது சாத்தியமாவதுடன் தனித்துவங்களும் பாதுகாக்கப்படுகின்றன; அல்லது பேணப்படுகின்றன.

அடையாள அரசியல், வித்தியாசங்களை முன்வைக்கும் போது பல்வேறு சமூக அடையாளங்கள் அல்லது சமூக குழுக்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகள் யாவும் ஒரு பொது அமைப்பிற்குள் இருந்தே நிகழ்த்தப்படுகின்றன என்ற உண்மையைப் புறந்தள்ளி விடுகிறது. உலகமயப்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அமைப்பில் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை, அதாவது ஒரு பொது அமைப்பிற்குள் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை எவரும் மறுப்பதுமில்லை; மறுப்பதற்குமில்லை. அப்படி இருக்க ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள் சர்வதேச ஐக்கியத்திற்குள் வருவதுதான் நியதியாகும்.

ஆனால் அடையாள அரசியலானது ஒடுக்கப்படுவோர் இடையிலான சர்வதேசிய ஐக்கியத்திற்கு எதிராக தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி அதை உடைக்கின்றது. ஒரு தேச அளவில் சுரண்டப்படுவோர் அல்லது ஒடுக்கப்படுவோரின் ஐக்கியத்திற்கு எதிராக, மொழி மற்றும் தேசிய இன அடையாளங்களைக் காட்டி உடைக்கின்றது. மொழி வழியிலான அல்லது தேசிய இன அடிப்படையிலான ஐக்கியத்தை சாதி அடையாளங்களைக் கூறி உடைக்கின்றது. பாலின சமத்துவம், ஐக்கியம் என்பவைக்கு மாறாக பாலின வேறுபாடுகளை இணக்கம் காண முடியாதவாறு வேறுபிரிக்கிறது.

இந்த பிரித்தல், உடைத்தல் அல்லது கலைப்பு வேலை இன்னும் இன்னும் குறுகிக் கொண்டே சென்று, முடிவில் வறட்டு தனிமனித வாதத்திற்கு கொண்டுபோய் விடுகிறது. ஒப்பீட்டளவில் பேரமைப்பு ஒன்றை, அடையாள வேறுபாட்டைக் காட்டி சிறுசிறு முரண்பட்ட அமைப்புகளாக எளிதில் கலைத்து விடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் தான் முன்மொழியும் அமைப்பை தானே கலைத்துக் கூறுபோட்டுக் கொண்டே சென்று, முடிவில் ஒரு தனிமனிதனின் நலன் மற்றவனது நலனிலிருந்து வேறுபட்டது என கூறி அந்த தனி மனிதன் தனக்குத்தானே ஒரு அமைப்பு எனக் கருதவைக்கிறது. அந்த தனிமனிதன் இல்லாது போகும் நிலையில் அமைப்பற்ற வெறுமையே நிலவுவதாக காட்டும் அடையாளவாதம் ‘சமூகம்’ இல்லாத சூன்யத்தை ஸ்தாபிக்க முனைகிறது. வரலாறு நெடுகிலும் வளர்ந்து வந்துள்ள இன்றைய மனித சமூக பேரமைப்பு இத்தகைய சூன்ய வாதத்தை கணக்கிலெடுத்து கொண்டதே இல்லை.

எனவே, பன்முகச் சுயங்களுடையத் தன்னிலை என்பதை வலியுறுத்தும் ‘வித்தியாச அரசியல்’ என்பது வித்தியாசங்களைப் பெருக்கிக் கொண்டே செல்வதன் மூலம் அடையாளங்களைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. அடையாளங்களிடையே காணப்படும் வித்தியாசங்களை மட்டுமே வலியுறுத்துவதால் அடையாள அரசியல் கோட்பாடு சமூக ஒருமைப்பாட்டுக்கு எதிர்திசையில் பயணிக்கிறது. 

பொதுமைப்படுத்தலை எதிர்த்தல்

ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்வுகளைப் பொதுமைப்படுத்தி அறிவதும் புரிந்து கொள்வதும் சிக்கலான ஒன்றேயாகும். எனினும், நிகழ்வுகளை ஒட்டுமொத்தப்படுத்திப் பார்ப்பது என்பது எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருந்த போதிலும் அது மிகவும் அவசியமான ஒன்றாகும். மொத்தத்திலிருந்து தனியானவற்றை பிரித்தறிய முற்பட்டதாலும் தனித்தனியானவற்றை ஒட்டுமொத்தப்படுத்திப் பார்க்க முயன்றதாலுமே மனிதனின் சிந்தனாமுறை இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது.

நமது அனுபவம் மற்றும் அறிவின் வளர்ச்சி குறைவான நிலையிலிருக்கும்போது நாம் அவற்றைத் தனித்தனியானவைகளாக காண்கிறோம். அனுபவம் மற்றும் அறிவு வளர்ச்சியடையும் போக்கில் நாம் தனியானவற்றின் ஒட்டுமொத்தத்தை கண்டறிவதில் வெற்றி பெறுகிறோம். இதே போலத்தான் எடுத்த எடுப்பிலேயே பொதுவான தோற்றத்தை, அதாவது ஒட்டுமொத்தத்தை காண்பதும் சாத்தியமே. இதுவும் அறிவின் ஒருவித குறைநிலையே. தொடர்ந்து மொத்தத்திலிருந்து தனியான கூறுகளை பிரித்தரிவதில்தான் மீண்டும் அறிவு பூர்த்தியடைகிறது. சுற்றியுள்ள உலகின் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு புலப்பாட்டிற்கும் அவற்றிற்கு மட்டுமே உரித்தான விசேஷ சிறப்பியல்புகள் உண்டு. முற்றிலும் ஒரே மாதிரியான இரு பொருட்களைக் கண்டுபிடிக்க இயலாது. ஒரே மரத்தில் உள்ள இலைகள் கூட ஏதோ சில குணங்களால் ஒன்றுக்கொன்று மாறுபடும்.

அதே நேரத்தில் உலகில் மற்ற பொருட்களுடனும் புலப்பாடுகளுடனும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்காத பொருட்களும் புலப்பாடுகளும் கிடையாது. பொருட்கள் எத்தகைய தனிச்சிறப்பான, தன்னிகரற்ற சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தாலும், இவையனைத்தும் பொருளாயத ரீதியானவை.  இதில்தான் இவையனைத்திற்குமான பொது அம்சம் இருக்கின்றது.

நிச்சயமாக பொதுவானதும் குறிப்பானதும் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவை. பொதுவானது குறிப்பானதில் மட்டுமே, குறிப்பானதின் மூலமாக மட்டுமே நிலவுகிறது. எந்த ஒரு குறிப்பானதும் அதே நேரத்தில் பொதுவானதுமாகும். உண்மையில், ‘மனிதன்’ எனும் கருதுகோள், அனைத்து மக்களுக்கும் பொதுவானதேயாகும். ஒவ்வொரு தனிநபரும் குறிப்பானது (ஒவ்வொருவரின் விசேஷ அம்சங்கள்) மற்றும் பொதுவானது (மனிதன்) ஆகியவற்றின் ஒருமைப்பாட்டை தன்னுள் கொண்டிருக்கிறான்.

பொதுவானது மற்றும் குறிப்பானது ஆகிய கருத்தினங்கள் உலகின் பன்முகத் தன்மையில் அதன் ஒற்றுமையை உணர உதவுகின்றன. புலப்பாடுகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளவும் இந்தக் கருத்தினங்கள் முக்கியமானவை. இயற்கையிலும் சமுதாயத்திலும் எந்த ஒரு வளர்ச்சியும் ஏதோ ஒரு புதிய குறிப்பானதன் தோற்றத்தோடு தொடர்புடையது. அதோடுகூட அது பொது விதிகளுக்கும் கட்டுப்பட்டது. எனவே ஒவ்வொரு பொருளும் மொத்தமாகவும், அதே சமயத்தில் தனியாகவும் இருக்கிறது. “ஒரு தனிமொத்தத்தைப் பிரித்து அதன் முரண்பாடான பகுதிகளை அறிவதே இயங்கியலின் சாரம்சமாகும்” என்ற அறிவியல் கோட்பாடு சமூக அறிவியலுக்குப் பொருத்தப்படும்போது ஒவ்வொரு சமூகமும் மொத்தமாகவும் முரண்பாடான பகுதிகளாகவும் இருக்கின்றது என்பதும், இது தவிர்க்க முடியாதது என்பதுமான முடிவு பெறப்படுகிறது. ஆகவே வேறுபாடுகளிடையே பொதுத்தன்மை என்பது முக்கியமாகும்.

எனவே “சமூகக் குழுக்களின் அடையாளங்களை, நலன்களை இல்லாமலாக்குவதற்கு பொதுமையியம் இட்டுச்செல்கிறது” என்ற கருத்து அறிவியல் நோக்கில் அரைப்பார்வையுடையதாகும்.

மையப்படுத்துதலை எதிர்த்தல்

அடையாள அரசியல் முன்வைக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனை மையம்-விளிம்பு பற்றியதாகும். மையப்படுத்தப்பட்ட அதிகாரம் அல்லது தலைமை என்பது விளிம்பு நிலையில் இருக்கும் சமூகக் குழுக்களை மேலாதிக்கம் செய்கிறது என்பது அடையாள அரசியல் முன்வைக்கும் நேரடியான வாதமாகும். இந்த மேலாதிக்கத்தைத் தகர்க்க வேண்டுமானால் மையமற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அதிகாரமற்று இருக்கும் விளிம்புநிலை சமூகக் குழுக்கள் சுய அதிகாரம் பெற முடியும் என்றும் அடையாள அரசியல் கருதுகிறது. இக்கருத்து மையமும் விளிம்பும் சார்பானவை என்ற அறிவியல் கோட்பாட்டிற்குப் நேரெதிரானதாகும்.

மனித உடலில் நரம்பு மண்டலத்தின் எல்லா செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் மையமாக மூளை இருக்கின்றது என்பதையும், நாம் வாழும் பூமிப்பந்தின் சுழற்சி ஒரு மையமின்றி நடைபெறவில்லை என்பதையும் எவ்வாறு மறுக்க முடியாதோ, அவ்வாறே சமுதாயத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு மையத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதையும் மறுக்க இயலாது.

சமுதாயத்தில் செயல்படும் பல்வேறு வேறுபாடுகளைப் பற்றியும், அவற்றின் தனித்தன்மைப் பற்றியும் பேசும் அடையாளவாதம் மையமான வேறுபாடுகளைப் பேச மறுக்கிறது. குறிப்பாக சமுதாயத்தில் நிலவும் பிரதானமான அல்லது மையமான வர்க்க வேறுபாட்டைக் குறித்து பேசாமல், உதிரி வேலை செய்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துகிறது. இவ்வாறு செய்வதன் மூலமே அடையாள அரசியல் விளிம்புநிலை வாதத்திற்குள் வருகிறது.

எந்தவொரு சிக்கலையும் புரிந்துகொள்ளவும் அதற்கு தீர்வு காணவும் அந்த சிக்கலின் தனித்தன்மையை புரிந்து கொள்ளும்  அதே நேரத்தில், அது பல்வேறு காரணிகளுடன் எவ்விதம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்பதே மிக முக்கியம் ஆகும். இதையே அனைத்து இயற்கை விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களும் வலியுறுத்துகின்றன. இதை நிறுவும் பொருட்டு ஓரிரு உதாரணங்களைக் காண்போம்.

தாவரவியலில், ஒரு விதையானது வளருவதற்கு அந்த விதை தன்னளவில் வீரியம் மிக்கதாக இருக்க வேண்டும் என்பது உண்மையே. இதைக்கடந்து அந்த விதை முளைப்பதற்கு முதலில் அது மண்ணின் சாதக நிலையைப் பெற வேண்டும். நீர் ஆதாரத்தைப் பெற வேண்டும். சூரிய ஒளியைப் பயன்படுத்த வேண்டும். ஏனைய புற அபாயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு தாவரத்தின் வளர்ச்சியோ அல்லது அழிவோ அனேக காரணிகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

மனித உடற்கூறியல் மேற்கண்ட விளக்கத்திற்கு மேலுமொரு சிறந்த உதாரணமாக இருக்கின்றது. மனித உடலில் பல்வேறு தனித்தன்மை வாய்ந்த உறுப்புகள் இருக்கின்றன; செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் தனித்தன்மை நிறைந்தவைகளே. உடலில் உள்ள கைகள், கால்கள், கண்கள் காதுகள், மூக்கு போன்ற உறுப்புகள் ‘முழு உடல்’ என்ற ஒருங்கிணைப்பில் பொருந்தியிருக்கும் போதே இவற்றின் தனித்த செயல்பாடுகள் சாத்தியமாகின்றன. முழு உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட கைகளோ, கால்களோ இதர உறுப்புகளோ செயலற்று போகின்றன. உடலில் ஒருங்கிணைப்பு, முழுமை, உறுப்புகளின் சார்பு இவை எவ்வளவு தூரம் முக்கியத்துவமுடையன என்பது எளிதில் விளங்கக்கூடியதே.

இதுபோன்ற உதாரணங்களை ஒவ்வொரு துறை சார்ந்தும் எடுத்துக்காட்ட முடியும். சமுதாயம் என்பது மனித உடலின் முழுமையையும் ஒருங்கிணைப்பதை ஒத்ததே என்றால் அது மிகையன்று. சமுதாயம் என்ற முழுமையும் அதில் அங்கம் வகித்து செயல்புரியும் பல்வேறு சமூகப் பிரிவுகளையும் அதன் ஒட்டுமொத்தத்தில் வைத்தே காணவேண்டியுள்ளது. அதில் செயல்படும் பிரதான முரண்பாடு தீர்க்கப்படும் பட்சத்தில் சிறுசிறு முரண்பாடுகள் அதிக அளவில் ஒழிக்கப்படுகின்றன.

எனவே வேர்மட்ட அரசியல், நுண் அரசியல், வேறுபாடுகளின் அரசியல் என்றெல்லாம் விதவிதமாக முன்வைக்கப்படும் அடையாள அரசியலானது சிறுசிறு முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் பூதாகரப்படுத்தி, சமூகத்தின் ஒருங்கிணைந்த மாற்றத்திற்கும் ஒடுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கும் எதிராகவே நிற்கிறது என்பது நிரூபணமாகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s