மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இட ஒதுக்கீடு : சி.பி.ஐ (எம்) அணுகுமுறை


  • கே.பாலகிருஷ்ணன்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற் கான அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப் பட்ட பிறகு பிற்படுத்தப்பட்ட மக்களை அடை யாளம் காணுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. இவர்களை அடையாளம் காணுவதற்கு மத்திய அரசால் 1953-ம் ஆண்டு காகா காலேல்கர் தலைமையில் ஒரு குழுவும், 1979-ம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப் பட்டது. இதேபோன்று மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளங்காணு வதற்கான பல கமிசன்கள் அமைக்கப்பட்டன.

1. ஆந்திர பிரதேசத்தில், மனோகர் பிரசாத் கமிட்டி (1968-69), அனந்த ராமன் கமிசன் (1970), முரளிதர் ராவ் கமிசன் (1982)

2. பீகாரில், முஞ்சிரிலால் கமிசன் (1971-72)

3. குஜராத்தில், ஏ.ஆர். பக்ஷி கமிசன் (1972-76), ஜஸ்டிஸ் ஆர்.சி. மான்காட் கமிசன் (1987)

4. ஹரியானாவில், குர்னாம்சிங் கமிசன் (1990), ஜஸ்டிஸ் கஜேந்திர யாத்கர் கமிசன் (1967-68), ஜஸ்டிஸ் ஜே.என். வாஷிர் கமிசன் , ஜஸ்டிஸ் அடைன் ஆனந்த் கமிசன்  (1974-77)

5. கர்நாடகாவில், ஜஸ்டிஸ் எல்.சி. மில்லர் கமிட்டி (1918-20 மைசூர்), நாகன்ன கௌடே கமிசன் (1960-61), ஹெச்.ஜி. ஹாவனூர் கமிசன் (1972-75), டி. வெங்கடசுவாமி கமிசன் (1983-86), ஜஸ்டிஸ் சின்னப்ப ரெட்டி கமிசன் (1989-90)

6. கேரளாவில், ஜஸ்டிஸ் சி.டி. நோக்ஸ் கமிட்டி (1935 – திருவாங்கூர்), வி.கே. விஸ்வநாதன் கமிசன் (1961-63), ஜி. குமார் பிள்ளை கமிசன் (1964-66), எம்.பி. தாமோதரன் கமிசன் (1967-70),

7. மஹாராஷ்டிராவில், ஓ.ஹெச்.பி. மாநில கமிட்டி – பி.டி. தேஷ்முக் கமிட்டி  (1928-30 மும்பை பிரசிடென்சி)

8. பஞ்சாபில், பிரிஷ்பான் கமிட்டி (1965-66)

9. தமிழ்நாட்டில், ஏ.என். சட்டநாதன் கமிசன் (1969-70), ஜே.என். அம்பாசங்கர் கமிசன் (1982-86)

10. உத்தரப்பிரதேசத்தில், செட்டி லால் சேத்தி கமிசன் (1975-77)

11. அகில இந்திய அளவில் காகா காலேல்கர் கமிசன் (1953-55), பி.பி. மண்டல் கமிசன் (1979-80)

மேற்கண்டவாறு மாநில கமிசன்கள் அமைக் கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் சாதிகளை அடை யாளங் காணுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. அமைக்கப்பட்ட பல கமிசன்களும் அந்தந்த மாநில நிலைமைகளுக்கேற்ப அளவுகோல்களை கடைப்பிடித்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டது.

மண்டல் கமிசன் சிபாரிசு

மண்டல் குழு பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளங் காணுவதற்கு சமூக அடிப் படையை மட்டும் அளவுகோலாக கொள்ள வில்லை. சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று அளவுகோல்களையும் அடிப்படை யாகக் கொண்டே இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளை அடையாளங் கண்டு சிபாரிசு செய்தது. மக்கள் தொகையில் 52 சதவீத மக்களைக் கொண்ட 3,743 சாதிகளை பிற்படுத்தப்பட்ட சாதிகளாக பட்டியலிட்டு இவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென சிபாரிசு செய்தது.

மண்டல் குழுவினுடைய இந்தச் சிபாரிசினை ஏற்று அமலாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக வற்புறுத்தியது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களில் இட ஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு வருமான வரம்பு தீர்மானிக்க வேண்டுமெனவும் சிபிஐ (எம்)  கோரியது. மொத்த மக்கள் தொகையில் 52 சதவீத அளவு உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப் பட்டுள்ள நிலையில், இச்சலுகை யாருக்கு சென்று அடைய வேண்டுமென்பதை முக்கியமான பிரச்சனையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது.

சுதந்திர இந்தியாவில் பல பத்தாண்டுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியில் பல சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட சாதியில் உள்ள பெரும் பகுதியான மக்கள் சமூக ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய வர்களாக உள்ளார்கள். பெரும்பான்மையான இம்மக்கள் விவசாயத் தொழிலாளர்களாகவும், அன்றாடக் கூலி உழைப்பாளர்களாகவும் இருக் கின்றனர். மேலும், குறைந்தபட்ச வாழ்வாதாரங் களின்றி, வீடு மற்றும் வீட்டு மனையற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அதேசமயம், இதே பிற்படுத்தப்பட்ட சாதிகளில் குறிப்பிட்ட சிலர், நிலவுடமையாளர் களாக, பணக்கார விவசாயிகளாக, சிறு தொழில் அதிபர்களாக,  வட்டிக்கு விடுதல் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக உயர்ந்துள்ளார்கள் என்பதும் நிதர்சனமானது. சுதந்திரத்திற்கு பின்னர், அரசு அதிகாரத்தில் இவர்கள் செல்வாக்கு செலுத்து பவர்களாகவும் உள்ளார்கள். இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக் கீட்டில் வருமான வரம்பு தீர்மானிக்கப்பட்டா லன்றி இச்சலுகையினை வசதிபடைத்த பகுதியினர் தட்டிச் செல்வதற்கே வாய்ப்பு ஏற்படும். மேலும், பெரும்பகுதியான பிற்படுத்தப்பட்ட ஏழை உழைப்பாளர்களுக்கு இடஒதுக்கீடு என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

கடந்த காலங்களில், சில மாநிலங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தியதில் கிடைத்துள்ள படிப்பினையும் இதுவே. உதாரணமாக, தமிழ் நாட்டில் 1969-ம் ஆண்டு திரு ஏ.என். சட்டநாதன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்படுத் தப்பட்டோரை கண்டறிவதற்கான ஆய்வுக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள கீழ்கண்ட விபரம் கவனிக்கத்தக்கதாகும்.

சட்டநாதன் குழு பரிந்துரைகள்

பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள பல சாதிகளில் 9 சாதியினர் மட்டும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு களில் அதிக பலன்களை அனுபவித்துள்ள விபரங் களை அவர் பட்டியலிட்டு காட்டியுள்ளார். அதாவது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ள மொத்த அரசிதழ் பதிவுப் பெறாத  அலுவலர் பணிகளில் 37 சதவீதத்தையும், அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர் பணிகளில் 48 சதவீதத்தையும், பொறியியல் கல்லூரிகளில் 44 சதவீத இடங் களையும், மருத்துவக் கல்லூரி இடங்களில் 47 சதவீதத்தையும், உதவித்தொகை 34 சதவீதத் தையும் பெற்றுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள் ளார். இவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகையை பெறுவதை தடுப்பதற்கும், இதே சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு அச்சலுகை அளிப்பதற்கும், ஆண்டு வருமான வரம்பு தீர்மானிக்க வேண்டுமென இவரது குழு சிபாரிசு செய்துள்ளது.

இது மட்டுமின்றி மேலும் ஒருபடி சென்று பிற்படுத்தப்பட்டோர் சாதி பட்டியலில் பல முன்னேறிய சாதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் இவ்வகுப்பில் உள்ள உண்மையான பின்தங்கிய வர்களுக்கு சலுகை கிடைக்கவில்லை என்பதால் சில குறிப்பிட்ட சாதிகளை அப்பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமெனவும் சிபாரிசு செய்தார். ஆனால், தமிழக அரசு இக்குழுவின் சிபாரிசு அடிப்படையில் வருமான வரம்பு தீர்மானிக்க மறுத்து விட்டது.

இதனுடைய உண்மையான நோக்கம் பிற்படுத் தப்பட்ட சாதிகளிலே உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்க வேண்டுமென்பதே. ஒருவேளை பிற்படுத்தப்பட்டோரில் குறிப்பிட்ட வருமான வரம்பிற்குள் உள்ள பயனாளிகள் கிடைக்கவில்லையெனில் அதே பிற்படுத்தப்பட் டோரில் வருமான வரம்பிற்கு மேல் உள்ளவர் களிலிருந்து பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டுமெனவும் வற்புறுத்தி வருகிறோம். எந்த சூழ்நிலையிலும்  சிபிஐ(எம்) பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடு பொதுப்பிரிவினருக்கு மாற்றி விடக் கூடாது என்பதையும் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.

இவ்வாறு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு கோருகிற அதே நேரத்தில் பட்டியலின மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் வருமான வரம்பு தீர்மானிக்கக் கூடாது என்பதையும் சிபிஐ(எம்) அழுத்தமாக வற்புறுத்தி வருகிறது.

மண்டல் குழு சிபாரிசினை எதிர்த்து, இந்திரா சஹானி மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினை விசாரித்த 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு, பிற்படுத்தப்பட்டோர் சலுகையினை பெற வருமான வரம்பு (கிரிமி லேயர்) தீர்மானிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது. சிபிஐ (எம்) கட்சியைத் தவிர இதர கட்சிகள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சலுகையை பெறுவ தற்கு வருமான வரம்பு தீர்மானிப்பதை ஏற்கவில்லை.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த கோட்பாட்டை ஏற்கவில்லை என்பதோடு, தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், 1989-ம் ஆண்டு சட்டநாதன் குழு சிபாரிசு அடிப்படையில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 9,000/- எனத் தீர்மானித்து அரசாணை வெளியிட்ட போது, அதை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில், இதனை வரவேற்றதோடு ஆண்டு வருமானத்தை ரூ. 12,000/-மாக உயர்த்திட வேண்டுமென வற்புறுத்திய ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.

ஆனால் 1980-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள வைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். தோல்வியடைந்த தால் மேற்கண்ட அரசாணையை வாபஸ் பெற்ற தோடு, மேலும் பல சாதிகளை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்ததோடு, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி அறிவித் தார். இதன் மூலம் தமிழகத்தில் பிற்படுத்தப் பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான மொத்த இடஒதுக்கீடு 68 சதவீத மாக (பின்னர் 69 சதவீதமாக) உயர்ந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு களை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு மாத காலத்தில் ஒரு குழு அமைத்து  பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த முறையான ஆய்வு  மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது. இவ்வுத்தரவின் அடிப்படையில் 1982-ம் ஆண்டு ஜே.ஏ. அம்பாசங் கர் அவர்கள் தலைமையில் இரண்டாவது குழு அமைக்கப்பட்டது. இக்குழு பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை கணக்கெடுப்பதற்கு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.

அம்பா சங்கர் குழு

அம்பா சங்கர் தனது அறிக்கையினை 1985-ம் ஆண்டு  சமர்ப்பித்தார். இவ்வறிக்கையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ளவர்கள் அனுபவித்து வரும் விபரங்களை தொகுத்து அளித்துள்ளார். மொத்தமுள்ள 222 பிற்படுத்தப்பட்ட  சாதிகளில் 34 சாதிகள் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டு சலுகையின் பெரும்பகுதியை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, இப்பட்டியலில் உள்ள 34 சாதிகளைச் சேர்ந்தவர்கள் பிற்பட்டோர் மக்கள் தொகையில் 41.5 சதவீதமாக உள்ளார்கள். ஆனால், இவர்கள் மொத்தமுள்ள தொழில்முறைக் கல்விக்கான இடங்களில் 76.9 சதவீத இடங்களையும், உதவித் தொகை பெறுவோர் எண்ணிக்கையில் 67.2 சதவீதத்தையும் மொத்த உதவித் தொகையில் 69.5 சதவீதத்தையும், அரசுப் பணிகளில் 69 சதவீதமும் அனுபவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப்பட்டியலில் உள்ள முன்னேறிய 11 சாதிகளைச் சார்ந்தவர்கள் மட்டும் அனைத்து வகையிலும் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும் அதேச மயம் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள மீதம் 188 சாதிகளையைச் சார்ந்தவர்கள் மொத்த பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையில் 58.5 சதவீதமாக உள்ளனர். இவர்கள் தொழில்முறைக் கல்வி இடங்களில் 23.8 சதவீதம், உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கையில் 32.8 சதவீதம், உதவி பெறும் தொகையில் 30.3 சதவீதம், அரசுப் பணிகளில் 30 சதவீதம் அளவே சலுகை பெற்று வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேல் உள்ள இவர்கள் வெறும் மூன்றில் ஒரு பங்கு சலுகைகளை மட்டுமே அனுபவிக்கின்றனர்.

எனவே, ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 34 சாதிகளை பட்டியலி லிருந்து நீக்க வேண்டுமெனவும், முற்பட்டோர் பட்டியலில் உள்ள 17 சாதிகளை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனவும் சிபாரிசு செய்தார். இவ்வாறு செய்வதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை 67 சதவீதம் இருக்கும் எனவும், இவர்களுக்கு 32 சதவீதம் (உச்சநீதிமன்றம் மொத்த இடங்களில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளதால்) இடஒதுக்கீடு தீர்மானிக்க வேண்டுமெனவும் சிபாரிசு செய்தார். அதாவது, பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகையை அதிகரித்துவிட்டு இடஒதுக் கீடு அளவினை குறைக்க வேண்டுமென்பது இவரது சிபாரிசாகும். ஆனால், இவரது கமிஷனில் இடம்பெற்றிருந்த பெரும்பகுதி உறுப் பினர்கள் இவரது சிபாரிசுகளை ஏற்கவில்லை. மொத்த கமிசன் உறுப்பினர்களில் 21 பேர் தங்களது மாற்று அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்தனர்.

இக்குழப்பமான நிலையில் முதல்வர் எம்.ஜி. ஆர்., அம்பா சங்கர் குழு அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார். ஆனால், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சில அம்சங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு அரசாணையாக வெளியிட்டார். அதாவது, ஏற்கனவே உள்ள 50 சதவீத இடஒதுக் கீடு தொடரும் எனவும், மேலும் 29 முன்னேறிய சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து, இப்பிரிவு மக்கள் தொகையினை 67 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வன்னியர் களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலித்து, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை இரண்டாகப் பிரித்து அதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்ட துடன், அம்பா சங்கர் அறிக்கையையும் வெளியிட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர் களுக்கு இடஒதுக்கீடு சலுகை முழுமையாக சென்று அடையவில்லை என்பதாலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவும், அதற்கு 20 சதவீத தனியான ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டது என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப் பட்டோர் கமிசன்கள் தங்களது சிபாரிசுகளில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முன்னேறிய சாதிகளை சேர்க்கக் கூடாது எனவும், அவ்வாறு சேர்க்கும்பட்சத்தில் இடஒதுக்கீடு சலுகைகளை பெற பொருளாதார வரம்பு தீர்மானிக்க வேண்டுமெனவும் சிபாரிசுகள் செய்திருந்தன. ஆனால், தமிழக ஆளுங்கட்சிகள் இதனை ஏற்க மறுத்து விட்டன என்பது ஒரு வரலாற்று துயரமாகும்.

உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற போர்வையில் வசதி படைத்தவர்களும், முன்னேறிய சாதியில் உள்ளவர்களும் இடஒதுக்கீடு சலுகை யினை அனுபவிக்கவும், அதேசமயம் பிற்படுத்தப் பட்டோர் சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு இந்த சலுகை எட்டி விடக் கூடாது என்பதே இவர் களது குறிக்கோளாக இருந்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்

இதேபோன்றுதான் இடஒதுக்கீட்டு வரம்புக் குள் வராத இதர சாதிகளில் உள்ள பொருளா தார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற பிரச்சனையிலும் இக்கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றன. அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு வழங்க சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற அளவு கோல் மட்டுமே இருக்கும் போது, பொருளாதார அடிப்படையை புகுத்துவது இடஒதுக்கீடு கோட்பாட்டிற்கே எதிரானது என இவர்கள் வாதிடுகின்றனர்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டிற் கான சரத்துக்கள் அரசியல் சட்டத்தில் இடம் பெறாத போது வலுவான போராட்டத்தின் விளைவாகவே அரசியல் சட்டம் திருத்தப்பட்டு இந்த சரத்துக்கள் சேர்க்கப்பட்டன. அதேபோன்று,  தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தை திருத்து வதால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் அல்லது கோட்பாடே சிதைந்து விடும் என்ற வாதம் ஆதாரமற்றதாகும்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை ஏற்கனவே உச்சநீதிமன்றத் தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை புகுத்துவது நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது அல்லவா என கேள்வியெழுப்பப்படு கிறது. அரசியல் சட்டத்தில் பொருளாதார அடிப் படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இடமில்லை என காரணம் காட்டி பொருளாதார அடிப்படை யில் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையினை இந்திரா சஹானி வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

எனவேதான் இதற்கான அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமென அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியது. தற்போது அதற்கான திருத்தம் நிறைவேற்றப்பட் டுள்ளது. காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல் சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ள நிலையில் இடஒதுக்கீடு பிரச்சனையிலும் இத்தகைய திருத்தங் களை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

மண்டல் குழு சிபாரிசு அமலாக்கப்பட்ட போது மக்கள் இரண்டு கூறாக பிரிந்து மக்கள் மோதிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கோடு இதர பிரிவின ருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இப்போதும் அந்த கோரிக்கை முன்வைக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பப் படுகிறது.

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில்  தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தனியார்மயம், தாராளமயக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்துவது, பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங் களில் வேலைவாய்ப்புகள் வெட்டிச் சுருக்குவது, காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யாதது, அதிகரித்து வரும் நவீன மயம் போன்றவைகளால் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இளைஞர் கள் தங்களது எதிர்காலமே இருண்டு வரும் சூழ்நிலையில் இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக எழுப்பப்படுகிறது.

மஹாராஷ்டிராவில் மராட்டா என்ற பிரிவின ரும், குஜராத் மாநிலத்தில் பட்டிதார் பிரிவினரும், – ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் பிரிவினர் போன்று பல மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இம்மாநிலங் களில் ஆளுகிற கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் இக்கோரிக்கைகளை புறந்தள்ள முடியவில்லை. இச்சாதியைச் சார்ந்தவர்கள் சொத்துடைமை மற்றும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்த போதிலும் இவர்களது கோரிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதும், சில சமயங்களில் நீதிமன்றங்கள் அதை நிராகரிப்ப தும், மீண்டும் போராட்டத்தின் விளைவாக இடஒதுக்கீடு வழங்குவதும் வழக்கமாக உள்ளது.

முஸ்லீம்களை பொறுத்தவரையில் நாட்டின் பல பகுதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். உ.பி. போன்ற மாநிலங்களில் ஏழ்மையில் குடிசைகளில் வாழும் அதிகமானவர் கள் முஸ்லீம்களாகவே உள்ளார்கள். இதர மாநிலங்களிலும் இந்த நிலைமை உள்ளது. எனவே தான், சச்சார் குழு அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்து கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டு மென பரிந்துரைத்தது.

முதலாளித்துவ நெருக்கடியின் விளைவுகளால் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டு மென முன்னேறிய சாதியினர் கோரி வருகின்றனர். அதை ஏற்பது இயலாது. ஆனால் அதில் உள்ள ஏழைகள் வறுமையின் காரணமாக அரசு வேலை வேண்டும் எனக் கோருகிறபோது அதை நிரா கரிக்க முடியாது. முதலாளித்துவ, நிலப்பிரபுத் துவ சமூக அமைப்பில் பொருளாதார சுரண்ட லையும், சமூக ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ள நிவாரணம் – ஒற்றுமை என ஆலோசிப்பது அவசியமானதாக உள்ளது.

இதர பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக் கீடு அவசியமாகும் இச்சூழலில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இடஒதுக் கீடு என்ற கோட்பாட்டை நாம் நீர்த்துப்போக வைக்கிறோம் என்று இதற்குப் பொருள் அல்ல. இச்சமூக நீதிக்கோட்பாட்டை உறுதியாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாப்பதற்கு போரா டும். அதனால்தான் மேற்சொன்ன முன்னேறிய சாதிகள், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவதை நாம் ஏற்கவில்லை. மாறாக, அதில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வற்புறுத்தி வருகிறோம்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: