மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வேதாந்தம் குறித்து சட்டோபாத்யாயா


பேரா. இரா. முரளி

இந்தியத் தத்துவ அறிஞர்கள் தாங்கள் ஆதரிக் கும் தத்துவ நிலைப்பாடுகளையும் தங்களுடைய புரிதல்களையும் அடுத்து வரும் மாணவ தலை முறைகளிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறார் கள். இது ஒரு தொடர் ஓட்டமாக இந்தியாவில் காலம் காலமாக நிகழ்ந்து வருகின்றது.  இத்தகைய அறிஞர்கள் மரபு சார்ந்த கருத்துகளின் பாது காவலராக இருக்கின்றனர் என்கிறார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா. இதில் ஆபத்தாக தேவிபிரசாத் கருதுவது எதுவெனில்   குறிப்பிட்ட சில மரபார்ந்த மதிப்பீடுகளைப் புனிதப்படுத்தும் போக்கு என்பதாகும். கடந்த காலத்தைப் பற்றிய கண்மூடித்தனமான புனிதப்படுத்துதல் எனும் போக்கு ஆபத்தானது என்பது சட்டோபாத்யா யாவின் கருத்து. அறிவார்ந்த சிந்தனையை மெய்யி யலின் அடித்தளமாக அமைக்காமல், நம்பிக்கை களை மட்டும் போற்றக்கூடிய போக்கு நிச்சயமாக ஒருவகையான பண்பாட்டு மேலாதிக்க போக்கைத் தான் ஊக்குவிக்கும்.

இப்படிப்பட்டப் போக்கு சுதந்திர போராட்டத் தின் போது பயனுள்ளதாக இருந்தது. உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் இந்தியர்கள் கீழானவர்கள்;    அவர்களுக்கு ஆட்சி செய்யும் திறன் கிடையாது என்று ஆங்கிலேயரால் கருதப்பட்ட போது இந்தியர்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பிட விவேகானந்தர், திலகர் போன்றோரின் எழுத்துக்கள் உதவின என்றாலும், அவை தத்துவ உலகிற்கு தீமையே செய்தன என்கிறார் சட்டோ பாத்யாயா. அதனால்தான் பகவத் கீதை போன்ற நூல்கள் இந்தியர்களின் தியாகத்தையும், வீரத்தை யும் போற்றும் நூல்களாக சுதந்திரப் போராட்ட காலத்தில் சித்தரிக்கப்பட்டன; நம்பப்பட்டன. சார்த்தரின் மொழியில் சொல்வதானால் அது ஒருவகை போலி நம்பிக்கையே ஆகும். எனவே அரசியல் நெருக்கடி காலத்தில் உயர்த்தி பிடிக்கப்பட்ட சில கருத்தியல்கள் இன்றும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமற்றவை என்பதே சட்டோபாத்யாயாவின் கருத்து.

உண்மையின் தேடல்

வீடுபேறு அடைவதே தத்துவங்களின் இறுதி இலக்கு என்ற மனோபாவம் இன்று தேவை யில்லை. நாகார்ஜூனரும், சங்கரரும் தத்துவ ஞானிகள் அனைவரிலும் மிகச் சிறந்தவர்கள் என்ற கருத்தைக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் அவசியம் இன்று இல்லை. ஏனென்றால் இந்த உலகத்தை உண்மையானது என்று கருதக்கூடாது என்றும், உண்மையான அறிவைப் பெறுவதற்கு பகுத்தறிவையும் அனு பவத்தையும் நம்பத் தேவையில்லை என்றும் நமக்கு போதித்தவர்கள் அவர்கள்.

மோட்சம், அவித்யை மற்றும் கர்மம் ஆகிய கருத்துக்கள் வேதாந்த சிந்தனைகளின் தூண் களாகும். இக்கருத்துக்கள் தர்க்கத்தின் மூலமும், அனுபவங்கள் மூலமும் நிரூபிக்கப்பட்ட புனித தன்மை கொண்டவை என்ற கருத்தாக்கத்தினால் வளர்க்கப்பட்டவர்கள்தான் பெரும்பாலான இந்திய தத்துவ மாணவர்கள். மேலும் இவை பற்றிய விமர்சனப் பார்வையை கொண்டிருப்பது மிகப் பெரும் துன்பத்தை வலியச் சென்று தேடிக்கொள்வதாகவும், தேசவிரோதியாவதற் கும் இடம் கொடுக்கும் என்கிறார் சட்டோ பாத்யாயா. குறிப்பிட்ட காலத்தில் வேதாந்தம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதற்காக அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தேவிபிரசாத் இந்தியப் பொருள்முதல்வாதத் தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து, அதனடிப்படையில் அறிவியல் போக்கை வளர்க்க முயல்வதையே தன்னுடைய முக்கிய பணியாகக் கொண்டார். இவருடைய லோகாயதம் பிரம்மத் திற்கான இருப்பை மறுத்தது. அதேபோன்று பிரத்தியட்சம் எனப்படும் பார்வை சார்ந்த அறிவு மட்டுமே சரியான அறிவை பெறும் வழி என்பதை யும் வலியுறுத்தியது.

டேவிட் ஹூ`யூமின் ஆய்வு தன்மையையும், லெனினின் எதார்த்த வாதத்தையும் தன்னுடைய ஆய்விற்கான அடிநாதமாகக் கொண்ட தேவி பிரசாத், இன்று நாட்டில் தத்துவவாதிகள் முன்னால் உள்ள, நாட்டின் தேவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்வது முக்கியமான பணியாகும் என்கிறார்.

கருத்தும் பொருளும்

கருத்துமுதல்வாதத்தின், குறிப்பாக வேதாந்தத் தின் நோக்கம் கருத்தியலை செயல்களிலிருந்து பிரிப்பது என்பதே. பொருள் முதல்வாதக் கோட் பாடு செயல் மற்றும் உடலுழைப்பைச் சார்ந்தது.  கருத்துமுதல்வாதம் மூளை உழைப்பை, கற்பனைகளை முன்னிலைப்படுத்துகிறது. அது அருவமான உணர்வு ரீதியான விஷயங்களைப் பற்றியே சிந்திக்கின்றது. இந்தப் பிரிவினையானது, மூளை உழைப்பை விட உடல் உழைப்பைத் தாழ் வாக எண்ண வைக்கும் நிலையை படிப்படியாக வரலாற்றில் உருவாக்கியது.

அத்வைதம் உச்சத்திற்கு சென்று மூளை உழைப்பி லும் கூட உண்மையான அறிவைப் பெறும் சிந்தனையே சிறப்பானது என்கிறது.  உண்மை யான அறிவு அல்லது  உண்மையைப் பற்றிய அறிவு என்றால் பிரம்மத்தைப் பற்றி அறிவது ஆகும்.  ஏனெனில் மூலாதார உண்மை எனப்படு வது பிரம்மமே ஆகும். ஆதலால் ஒரு பொருளால் ஆன இவ்வுலகம் உண்மையானது அல்ல. அது அறியாமை, அவித்யை அல்லது மாயையின் விளைவே ஆகும். இந்தத் தத்துவத்தின் ஸ்தாபகர் சங்கரர் என்று கூறப்பட்டப் போதிலும், அது உண்மை யில் சங்கரருக்கு முற்பட்டதாகும். சங்கரரின் முன்னோடியான கௌடபாதர் என்பவரே  இக்கருத்துக்களை உருவாக்கியவர். இவர் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதவில்லை. மாண்டூக்ய காரிகை என்ற செய்யுள் நூலை எழுதினார். இதை மாண்டூக்ய உபநிடதத்திற்கான உரை எனலாம்.. இதில் சிறப்பாக தன்னுடைய கருத்து களைப் பதித்தார் கௌடபாதர். மட்டுமின்றி சங்கரர், பிரம்ம சூத்திரங்களுக்கும்,  முக்கியமான உபநிடதங்களுக்கும், பகவத் கீதைக்கும் உரை எழுதினார். சங்கரருடைய பிரம்ம சூத்திரத்திற் கான பாஷ்யம் அல்லது உரை அதிகமாக போற்றப் பட்டது. அது சைவர்களுக்கும், வைணவர்களுக் கும் சவாலாக அமைந்தது. ஏனெனில், விசிஷ்டாத் வைதம் மற்றும் துவைதத்தைப் பொறுத்தமட்டில் இவ்வுலகம் உண்மையானது. ஆன்மா பிரம்மமாக மாற முடியாது என்ற கருத்து நிலைப்பாடே ஆகும். எனவே ராமானுஜர், மத்வர் போன்றவர் கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதினார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னரே பிரம்ம சூத்திரங்களுக்கு ஆத்திக விளக்கத்தை அளித்தவர் பாஸ்கரர் என்பவர் ஆவார். இவருடைய விளக்கம் ‘பேத அபேத வாதம்’ எனப்படுகின்றது. இதன்படி ஜீவாத்மா என்ற தனி மனித ஆன்மா பிரம்மத்தில் இருந்து வேறுபட்டது என்பதே உண்மை ஆகும்.   

அத்வைதம் உபநிடதங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட போக்கின் அடிப்படையில் உருவாக் கப்பட்டுள்ளதால், உபநிடதங்கள் குறித்த புரிதல் அத்வைத வேதாந்தம் குறித்த உரையாடலுக்கு அவசியமானதாகும் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.

உபநிடதங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை கண்டன. இறுதியாக அவை முன் வைத்தது ஆன்மா அழிவற்றது; அதன் தன்மை குறித்த அறிவே சுத்தமான, சரியான அறிவு என்பதாகும். எனவே உபநிடதங்களின்படி நாம் சாதாரண வாழ்க்கையில் ‘அறிவு’ என்று எதைக் கருதுகிறோமோ, அதிலிருந்து பிரம்மம் பற்றிய அறிவு வேறானது என்பதாகும். அத்வைத வேதாந்தம் மற்றும் உபநிடதங்களின்படி மனி தனின் விழிப்பு நிலை என்பது பொய்மையானது. சங்கரர் ‘ சுஸூப்தி காலம்’  என்ற ‘ஆழ்ந்த கனவற்ற  தூக்கம்’ எனும் நிலையை பற்றி பேசுகிறார்.  இந்த நிலையில்தான் மனிதன் பிரகாசமாக இருப்பதாக யாக்ஞவால்கியர் கூறுகிறார். கனவு நிலையில், ஆன்மா விழிப்பு நிலையின் பொருள்வயமான கட்டுப்பாடுகளிலிருந்து ஒருவாறு விடுபட்டு இருக்கின்றது. தெளிவாகத் தன்னை உணர்கிறது. ஏனெனில் அது சுயப்பிரகாசம் பெறுகிறது. இரண்டாவது, கனவில் காணும் பொருட்களுக்கு சுயத்தன்மை ஏதுமில்லை. ஏனெனில் அது ஆன் மாவால் உருவாக்கப்பட்டது. வெளிப்படுத்தப்படு கிறது.

மாயையும் – உண்மையும்

இரண்டாவதாகக் கூறப்பட்ட கருத்து கருத்து முதல்வாத, அறிவுத் தோற்றவியலுக்கு முந்திய கட்டமாக, அதற்கு ஒரு அஸ்திவாரமாக விளங்கு கின்றது. ஏனெனில் ஆன்மாவினால் கனவில் பொருட்களை உருவாக்கவும் வெளிப்படுத்தவும் முடியுமானால், அனுபவத்தால் காணப்படும் பொருட்களையும் உருவாக்க அதனால் இயலும் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தக் காரியத்தை விழிப்பு நிலையிலும் ஆன்மா செய்கின்றது என்று கூற இயலும். இப்படிப்பட்ட வாதம்தான் கருத்து முதல்வாதத்தின் அடிப் படையாக அமைகின்றது என்கிறார் சட்டோ பாத்யாயா. அதாவது, கருத்தே பொருளை உருவாக்குகிறது என்பதே ஆகும். சுஸூப்த்தி எனப்படும் ஆழ்துயில் நிலையில் பிரம்மத்தை ஆன்மா உணர்கிறது என்றும் அத்வைதம் முன்வைக்கிறது. ஆனால் இதில் ஒரு பிரச்சனை வருகிறது. சுஸூப்தி நிலை தற்காலிகமானது. மனிதர்கள் விழிப்பு நிலைக்கு வரும்போது பிரம் மத்தை அறியும் இன்பநிலையை இழக்கின்றனர். நிரந்தரமான இன்ப நிலையை அடைவது என்பது விருப்பங்கள் ஏதுமற்ற சாவு நிலை என்கிறார் யாக்ஞவால்கியர். அந்நிலையில் அவன் ஞானத் துடன் ஒன்றாகி விடுகிறான் சுஸூப்தி நிலை என்பது யோகத்தில் துரிய நிலையாக காணப் படுகிறது இம்மாதிரியான வேதாந்தக் கருத்து முதல்வாத நிலைப்பாடுகள் எல்லாவிதமான அறிவியல்களையும் நிராகரிப்பதாக ஆனது. உணர்வுகளுக்கு அடிப்படையான மனித உடலையே நிராகரிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

உணர்வுநிலையில் இப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை கொண்ட அத்வைத வேதாந்தம் ‘விவர்த்த வாதம்’ என்ற வாதத்தின் மூலம் மாற்றம், காரண காரிய தொடர்பு கொள்கை போன்ற வற்றை மறுக்கின்றது. ஏனெனில் பிரம்மம் என்பதே உண்மையாகும். காரண காரிய தொடர்பு கொள்கை என்பது முரண்பாடு கொண்டது என்கிறார் சங்கரர். காரணம் மட்டுமே உண்மை. விளைவு வெறும் கற்பனையே என்கிறார் சங்கரர். இதுவே மாயாவாதம் ஆகும். கயிற்றைப் பாம் பாகப் பார்ப்பது அறியாமையின் விளைவாகும். இந்த அறியாமையே அவித்யை ஆகும். மாயை எனப்படுவதும் இதுதான். கயிற்றை பாம்பாகக் காணும்போது, அங்கு பாம்பு ஒரு பிரமைதான். பொருட்களின் உண்மையான இயல்பை அது மறைத்துவிடுகிறது. அதாவது, கயிற்றின் இயல்பை மறைத்து விடுகிறது. இதுதான் அத்வைதத்தின் ‘புலன் உணர்வு பிரமை கொள்கை’ அல்லது ‘அநிர்வசன்ய கியாதி’ எனப்படுவதாகும். பிரம் மத்தின் இயல்பும் மாயையால் காண இயலாமல் போகிறது. அத்வைத கொள்கைப்படி கயிறும் கூட உண்மை அல்ல. பாம்பின் உருவம், கயிற்றை கயிறு என்று அறியும்போது விலகிவிடுகிறது. ஆனால் கயிற்றின் உருவம் பொய்மையானது. அது மெய்ஞ்ஞானம் அடையும்போதுதான் விலகும்.

ஆஸ்திகப் பள்ளிகளாக அங்கீகரிக்கப்பட்ட நியாயம் மற்றும் வைசேடிகம் மற்றும் சாங்கியம் போன்றவை வேதாந்தத்தின் நிலைபாடுகளுக்கு எதிராக முன்வைத்த பல விவாதங்களை சட்டோபாத்யாயா கருத்துமுதல்வாத மறுப்புக்கு சாதகமானவையாகக் கையாளுகிறார். பாம்பை கயிற்றில் காண்பது அவித்தையினால் அது ஒரு மாயத்தோற்றம் என்ற வேதாந்தக் கருத்தை நியாயம் மறுக்கின்றது. அத்வைதத்தைப் பொறுத்தமட்டில் பாம்பு, கயிறு இரண்டையும் காணும்போது இருக்கின்றது; ஆனால் உண்மை யில் இல்லை. இந்த இரண்டும் கெட்டான் நிலை தான் அநிர்வசன்ய கியாதியாகும். நியாயவாதி களில் பிரபாகரர் இது மாயை அல்ல; அவை உண்மையில் இரண்டு வெவ்வேறு விதமான அறிவுகள் என்கிறார். ஒன்று பார்ப்பதினால் கிடைப்பது. மற்றொன்று நினைவுபடுத்துவதால் ஏற்படுவது. உலகிலேயே இல்லாத பொருளை அங்கு காணவில்லை. இருக்கும் பொருளைத்தான் காண்கின்றோம். ஆனால் அது ஒரு தோற்றப் பிழையோடு அவதானிக்கப்படுகிறது. பிழை என்று கூறுவதைக் கூட பிரபாகரர் அனுமதிக்க வில்லை. அவர் அதை அறிவின் பற்றாக்குறை என்கிறார். மேலும் சில ஒத்த தன்மைகள் கொண்ட இரு பொருட்களைத்தான் அவ்வாறு காணமுடியும் என்றும், சம்பந்தமில்லாத இரண்டு பொருட்களை அப்படிக் காண இயலாது என்றும் கூறுகின்றார். கயிற்றில் பாம்பைக் காணுவது என்பது ஏற்கனவே அனுபவப்பட்ட பொருட் களை நினைவுக்குக் கொண்டுவரும் நிகழ்வே என்கிறார். வேறுபடுத்திப் பார்க்கும் அறிவு அங்கு இல்லாமல் போனதுதான் பிரச்சனையே தவிர, அத்வைதம் கூறுவது போல அது ஒட்டு மொத்த மும் மாயை அல்ல என்பதை சட்டோபாத்யாயா தமக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்.

மாயத் தோற்றம்

அவித்யை அல்லது மயக்க தோற்றம் அல்லது போலியான அறிவு என்றெல்லாம் கூறுவதற்கு அத்வைதம் சரியான நிரூபணங்களை முன்வைக்க வில்லை என்பது சட்டோபாத்யாயாவின் குற்றச் சாட்டாகும். பாம்பையே முன்பின் கண்டிராதவர் கயிற்றில் பாம்பைக் காண இயலாது. எனவே, அந்த தோற்ற மயக்கத்திற்கும் முன் அனுபவம் அவசியமாகின்றது. ‘ஞான லட்சண சன்னிகர்சா’ என்னும் பெயரில் இந்த அறிவை மனோதத்துவ முறையில் நியாயம் விளக்க முற்படுவதை அறிவிய லுக்கான அஸ்திவாரமாக சட்டோபாத்யாயா காண்கிறார். இதன் அடிப்படையில் அறிவிற்கான வழிகள் என்பதை விவரிக்கும்போது, அந்த வழிகள் பொருட்களோடு தொடர்புடையன வாகத்தான் இருக்க இயலும். அதாவது  பொருள் தொடர்பு இல்லாத கருத்தியல் விளக்கங்களும் வழிமுறைகளும் ஏற்கத்தக்கது அல்ல என்பது தேவிபிரசாத்தின் நிலைப்பாடு.

இந்திய தத்துவ இயலில் கருத்துமுதல்வாதி களாக இருப்பினும், அறிவு தளத்தில் பல அறிஞர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்ப தால், அந்த முன்னோர்களின் நிலைப்பாடுகளை நம் காலத்தின் விமர்சன ஆயுதங்களை கொண்டு தாக்கி தூக்கியெறிவது நாகரீகம் அல்ல. ஆகை யால் அவர்களுக்கு இணையாகவே பங்களித்த அவர்களுடைய தத்துவ பங்காளிகளின் மறுப்புக் கருத்துகளை முன்வைத்து அவர்களின் கருத்து முதல்வாத நிலைப்பாடுகளை விமர்சிக்கலாம் என்ற நிலைப்பாட்டை முன்வைக்கிறார் சட்டோ பாத்யாயா.

இப்படியாக, கருத்தே எல்லாம் என்ற கொள்கை யினை நிமிர்த்தி வைத்து பொருளே எல்லாம் என்றது அக்காலத்திய பொருள்முதல்வாதம். எனினும் ஆங்காங்கே மறைந்து கிடந்த பொருள் முதல்வாத கருத்தாக்கங்களை கண்டறிந்து தனது படைப்புகளில் நிறுத்தினார் சட்டோபாத்தியாயா. மார்க்சிய புரிதலின்படி கருத்துமுதல்வாத கண்ணோட்டம் என்பது சமூகப் பரிணாம வளர்ச்சியில் முடிவாகும். அது மனித உழைப்பின் பங்கினை முழுவதுமாக நிராகரிப்பதோடு நில்லாமல் அதனை சமூக எதார்த்தத்திற்குப் பின்னால் தள்ளுகிறது என்கிறார் பேராசிரியர்.

செயலிலிருந்து சிந்தனையைப் பிரித்ததின் விளைவுதான் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம். இம்மாதிரி மார்க்சிய அணுகுமுறையை இந்தியத் தத்துவங்களுக்கு பயன்படுத்தினார் சட்டோபாத் யாயா. வேத மரபுகளிலிருந்து தத்துவத் தேடலை தொடங்காமல், சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து இவர் தொடங்கியது தத்துவ ஆய்வு முறைக்கு ஒரு புதிய போக்கைக் கொடுத்தது. ஒவ்வொரு கருத்தியலையும், கருத்தாக்கத்தையும் அவர் சார்ந்த சமூக வரலாற்று பின்னணியுடன் விளக்கி நிரூபித்தால்தான் ஏற்கவேண்டும் என்கிறார் சட்டோபாத்யாயா. இந்திய தத்துவ வரலாறு என்பதை வெறுமனே கருத்துமுதல் வாதத்திற்கும், பொருள்முதல் வாதத்திற்கும் இடை யிலான முரண்பாடு என்று சுருக்கி விடக்கூடாது. இதை இந்திய சமூகத்தின் பல்வேறு வகையான இனக்குழுக்களின் அறிவும், கருத்துக்களும் கொண்ட தொகுப்பாக காண வேண்டும் என்கிறார் சட்டோபாத்யாயா. இந்த வகையில் பார்த்தால் அத்வைத வேதாந்தம் மண்ணோடு எப்போதும் சம்பந்தப்பட்டதாகவே இல்லை என்பது அவருடைய கருத்து.

இந்நிலையில், பொருள்முதல்வாதிகள் கருத்து முதல்வாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுவ வேண்டுமானால் அறிவிற்கான சாதனங் கள் அல்லது வழிமுறைகள் பற்றி விளக்கவும் விவாதிக்கவும் தேவையாகிறது. எது சரியான அறிவு, அந்த அறிவைப் பெறும் முறைகள் யாவை போன்றவை பற்றி பொருள்முதல்வாதிகள் இந்தியாவில் விவாதித்து இருந்தாலும் அவை ஒரு முறையான தொடர்ச்சியுடன் காணப்பட வில்லை என்கிறார் சட்டோபாத்யாயா. உலகம் பொருளால் ஆனது. புலனறி அறிவே அறிவு. பொருளே முதன்மையானது என்று பிரகடனப் படுத்துவதால் மட்டும் பொருள்முதல்வாதிகள் வேதாந்திகளை வென்றுவிட முடியாது. அதற்கு ஏற்ற அறிவார்ந்த விவாதங்களை முன் வைப்பது அவசியம். அம்மாதிரி தர்க்க ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் இந்தியாவில் பண்டைய காலத்தில் நிலவிய கருத்துமுதல்வாத போக்கை மறுத்தும் பொருள்முதல்வாத நிலைப்பாட்டை வலியுறுத்தியும் எழுதப்பட்ட நூல்கள் வரலாற்றிலே அழிக்கப்பட்டுவிட்டன.

ஆன்மா – உணர்வுநிலை

உணர்வுகள் (உடிளேஉiடிரளநேளள) பற்றிய சங்கரரின் விளக்கம் கருத்து முதல்வாதத்தின் மற்றுமொரு தூண் ஆகும். சங்கரரின் நிலைப்பாட்டின்படி உணர்வுகள் என்பது விழிப்பு நிலை (யறயசநநேளள) ஆகும். ஒவ்வொரு பொருளுக்கும் அடிப்படை யாக இருக்கும் அந்தப் பொருளின் ஒரு சாரம் ஆகும். இருட்டினிலே பொருட்கள் தெரிவ தில்லை. அங்கு வெளிச்சம் பாய்ச்சப்பட்ட போதுதான் பொருட்கள் தெரியும். அதே போன்று உணர்வு உள்ளபோது தான் இவ்வுலகம் தெரியும். அது சுய விழிப்புத் தன்மை கொண்டது. நான் என்பதே (ஐ யஅ) உணர்வு நிலை. உணர்வு என்பது உடலின் அல்லது பொருட்களின் பகுதி அல்ல. அது சுயம்பு. அது உடல் அழிந்த பின்னும் அழியாமல் இருக்கக் கூடியது. இந்த உணர்வை நாம் அறிய இயலாமல் தடுப்பதே உடல்தான். முக்காலத்திலும் தவழ்கிறது இந்த உணர்வு நிலை. அது ஒளியை பாய்ச்சுகின்றது. உண்மையை அறிய வைக்கிறது. அதுவே உண்மையாகவும் உள்ளது என்பதுதான் சங்கரரின் நிலைப்பாடாகும்.

நியாயம் மற்றும் சாங்கியர்களைப் பொருத்த மட்டில் அத்வைதத்தின் நிலைப்பாடு ஒரு கற்பனாவாதமாகும். உணர்வுகள் பொருட்களின் சங்கமத்தால்தான் நிகழ்கின்றன என்பது அவர் களின் கருத்து. நியாய வைசேடிகம் புராதன/ தொன்மை நிலையில் ஆன்மாவே உணர்வுநிலை என்று மொழிந்த போதிலும், ஆன்மா என்பது பொருட்களோடு சம்பந்தப்பட்டது என்கின்றன. ஆனாலும் ஆன்மா என்பது மிக நுணுக்கமானவை; புலன்களால் உணர இயலாதவை எனவும் நியாயம் கூறுகிறது. அத்வைதக் கொள்கையின்படி ஆன் மாதான் உணர்வு. நியாய வைசேடிகக் கொள்கை யின்படி ஆன்மாவின் குணங்களில் ஒன்றுதான் உணர்வு நிலை. இருமையற்ற ஆன்மாவை நியா யம் மறுக்கின்ற அதே தருணத்தில், ஆன்மாவின் அம்சங்களான ஏழு திரவியங்களை (பொருட்களை) முன்னிறுத்துகிறது வைசேடிகம். நீர்,நிலம், காற்று,ஆகாயம்,காலம்,வெளி மற்றும் மனம் என்பனவே அவை. வைசேடிகம்  அனைத்து திரவியங்களையும் ஒரே நிலையிலேயே பாவிக் கின்றது. எனவே ஆன்மா என்பது திரவியங் களோடு இனணந்தது என்பதே அவர்களின் நிலைப்பாடு.

ஆனால் உயிரற்ற ஜடப் பொருட்கள் எவ்வாறு உணர்வு நிலையினை உருவாக்க இயலும் என்ற விமர்சனத்திற்கு சரியானதொரு பதிலை அவர் கள் தரவில்லை. எனினும் அவர்களுடைய அணுக் கோட்பாடு அதற்கான பதிலை தர முயல்கிறது. மாற்றம் அல்லது இயக்கம் என்பதை பொருள் முதல்வாத கோட்பாடுகளின் மூலம் எவ்வாறு விளக்குவது என்பது ஒருவகை சவாலாகவே அக்காலத்தில் இருந்தது. ஆனாலும் அணுக் களின் இணைப்பின் வெளிப்பாடாகவே இயக்கம் நடைபெறுகிறது என்ற அறிவியல் கருத்தை அவர்கள் முன் வைத்தனர். இதன் அடிப்படை யில்தான் உணர்வுகளின் தோற்றமும் பொருட் களின் இணைப்பினால் உண்டாகிறது என்ற பதிலும் உருவானது. பொருள் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் உருவாக்குகின்றது என்ற கருத்தை நியாயவாதிகள் முன்வைத்தனர். சாங்கிய கொள்கைப்படி பொருள் ஓய்வெடுப்பதில்லை. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதாகும். மொத்தத்தில் உடல் இல்லையெனில் உணர்வு களும் இருக்காது என்பதே ஆகும். இந்த நிலைப் பாடுகளை பொருள்முதல்வாத ஆதரவுக்காக சரியான முறையில் பயன்படுத்தி உள்ளார் சட்டோ பாத்யாயா.

பொருள்முதல்வாத கோட்பாட்டிற்கு எதிராக பண்டைய காலம் தொட்டே எதிர்ப்புகள் பல வகையில் காணப்பட்டன. பொருள்முதல்வாதத் தத்துவமே ஒரு பிசாசு தான் என்று மக்கள் அச்சப் படும் வகையில் தொன்மங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறும் தேவிபிரசாத் குருசேத்திரப் போர் முடித்து விட்டு வந்த பாண்டவர்களை ஆயிரக் கணக்கான பிராமணர்கள் வரவேற்றபோது ஒரு பொருள்முதல்வாதி மட்டும் தருமரைப் பார்த்து, “உனது ரத்த சொந்தங்களை, முன்னோர்களை அழித்து ஒழித்தது எவ்வளவு பெரிய பிழை”- என கோபமாக கேட்டதாகவும், அப்படி கேட்டவன் ஒரு சார்வாகன்; அவன் மாறுவேடம் பூண்டு வந்த பிசாசு என கூறி அவனை நெருப்பிலிட்டுக் கொன்றனர் என்ற கதையை தேவிபிரசாத் விளக்குகிறார். மேலும் பொருள்முதல்வாதிகள் வெறும் இன்ப நாட்டம் கொண்டவர்கள் மட்டுமே; உண்மையான அறிவு பற்றியும், அறம் பற்றியும் அவர்களுக்கு  அக்கறை கிடையாது என்ற தவறான கருத்தும் உருவாக்கப்பட்டது. இவற்றை தன்னுடைய நுணுக்கமான ஆய்வின் மூலம் ஆதாரங்களுடன்  கட்டவிழ்க்கிறார் தேவி பிரசாத்.

ஆக, தன்னுடைய ஆராய்ச்சித் திறன் மூலம் கருத்துமுதல்வாதத்திற்கு எதிரான பலமுள்ள கருத்துக்களை அக்கால சிந்தனை பள்ளிகளின் விவாதங்கள் மூலமாகவே முன்வைத்து, கருத்து முதல் வாதத்தை முறியடித்து, அதை இந்திய மார்க்சிய மெய்ப் பொருளியலுக்கான அடிப் படையாக்கினார் சட்டோபாத்யாயா என்றால் மிகையாகாது.One response to “வேதாந்தம் குறித்து சட்டோபாத்யாயா”

  1. […]  “வேதாந்தம் குறித்து சட்டோபாத்யாயா” என்ற  பேரா. இரா. முரளியின்  கட்டுரை இந்திய தத்துவத்தில் வேதங்கள் முன்வைத்த கருத்துமுதல்வாதத்தை எதிர்த்த பொருள்முதல்வாதப் போக்கையும், கடந்த காலத்தை கண்மூடித் தனமாகப் புனிதப்படுத்தும் போக்கையும் சட்டோபாத்யாயா சுட்டிக்காட்டி விளக்கும் விதத்தை விதந்து பேசுகிறது. […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: