வெங்கடேஷ் ஆத்ரேயா
இயக்கம் என்பதே பொருளின் இருப்பின் வடிவம் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்தோம். இயக்கம் தற்செயலான நிகழ்வும் அல்ல. இயக்கத் திற்கு அடித்தளமாக மூன்று நெறிமுறைகள் அல்லது விதிகள் உண்டு. கடந்த இதழில் இவ்விதி களை அறிமுகப்படுத்தினோம். இந்த இதழில் முதல் விதியை விளக்கலாம். இந்த விதி கூறுவது வருமாறு: படிப்படியாக நிகழும் மாற்றங்கள் குறிப்பிட்ட கட்டம் வரை அளவு மாற்றமாகவே உள்ளன. பின்னர் ஒரு கட்டத்தில் நிகழ்ந்துள்ள அளவு மாற்றங்கள் ஒரு தன்மை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த இயக்கவியல் விதியை நம்முடைய அன்றாட அனுபவங்களிலேயே நாம் பார்க்க இயலும். சில எடுத்துக்காட்டுகள் இவ்விதியை விளக்க உதவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்துக் கொண்டே இருந்தால், ஒருகட்டம் வரை அதன் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை. பிறகு அது கொதிக்க துவங்குகிறது. இது தன்மை மாற்றத் திற்கான கட்டம் என்று கொள்ளலாம். கொதி நிலை தொடரும்பொழுது நீர் வடிவம் மாறி ஆவியாகிவிடுகிறது. இவ்வாறு தொடர்ந்து நிகழ்ந்து வந்த அளவு மாற்றம் தன்மை மாற்றத் திற்கு, – தண்ணீர் ஆவியாக மாறுவதற்கு, – இட்டுச் சென்றுவிட்டது என்பதை நாம் காண்கிறோம். இயற்கையில் இதுபோன்று, தொடர்ந்து நிகழும் அளவு மாற்றம் ஒருகட்டத்தில் தன்மை மாற்றத் திற்கு இட்டுச்சென்றுவிடுகிறது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.
சமூக வாழ்விலிருந்தும் இவ்விதியின் செயல் பாட்டை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஆலை யில் வேலைபெற்று பணியில் இணையும் தொழி லாளி துவக்கத்தில் ஒரு தனி நபராக இருக்கிறார். பின்னர் அங்குள்ள தொழிற்சங்கத்தின் அறிமுகம் கிடைக்கிறது. துவக்கத்தில் இந்த தொழிற்சங்கம் என்ற “வம்பு” எல்லாம் வேண்டாம் என்ற அறிவுரை களை அவரது குடும்பமும் சுற்றமும் அவருக்கு வழங்கக்கூடும். ஆனால் ஆலையில் எழும் பிரச் சினைகள், தனது பணி தொடர்பான கள அனுப வங்கள் அவரை சங்கத்திற்கு இழுத்துவருகிறது. அவர் சங்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத் துக்கொள்கிறார். இந்த நிகழ்வு, அந்த தொழி லாளியைப் பொருத்த வரையில் ஒரு தன்மை மாற்றம். படிப்படியாக அவரது சிந்தனையில், புரிதலில் ஏற்பட்டுவந்த அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் ஏற்கெனவே இருந்த நிலையில் இருந்து தாவி ஒரு புதிய நிலைக்கு அவரை செல்ல வைத்துவிட்டன.
நாம் முன்வைத்த இரு எடுத்துக்காட்டுகளும் சொல்லும் செய்தி இதுதான். படிப்படியான அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் தன்மை மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய மாற்றம் ஒரு தாவுதல், ஒரு உடைப்பை ஏற்படுத்தி புது நிலையை கொண்டுவரும் நிகழ்வு என்று நம்மால் பார்க்க முடிகிறது. இயற்கையிலும் சமூகத்திலும் அனைத்து செயலியக்கத்திற்கும் இந்த விதி பொருந்தும். அளவு மாற்றம், தன்மை மாற்றம் இரண்டும் வெவ்வேறு. ஆனால் அளவு மாற்றம் இன்றி தன்மை மாற்றம் நிகழாது. அதே போல், தொடர்ந்து நிகழ்கின்ற அளவு மாற்றத் தின் ஒரு கட்டத்தில் ஏற்படும் தன்மை மாற்றம் வளர்ச்சியின் புதிய கட்டத்தை குறிக்கிறது. உடைப்பு, தாவுதல் என்றோ வேறு சொற் களாலோ அழைத் தாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றுதான். உடைப்பு இல்லாமல், தாவுதல் இல்லாமல், வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குப் போவது சாத்தியம் இல்லை. நிகழ்கால சமூகத்தில் அப்படி உடைப்புகளை, தாவுதல்களை நிகழ்த்த வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.
Leave a Reply