மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஏகாதிபத்திய தலையீட்டின் புதிய வடிவம் வெனிசுவேலாவின் அமெரிக்கத் தலையீடு


குரல்: ஆனந்தராஜ்

பிரபாத் பட்நாயக் ( English)

தமிழில்: கிரிஜா

வெனிசுவேலாவில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள், நவீன தாராளவாத கால கட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதி பத்திய தலையீட்டின் தன்மை குறித்ததொரு விளக்கமான படிப்பினையை அளிக்கிறது.  இதர லத்தீன் அமெரிக்க நாடுகளில்  குறிப்பாக பிரேசில் நாட்டில் –  சமீபகாலமாக ஏகாதிபத்தியம் இதே போன்ற தலையீடுகளை செய்துள்ளது.  ஆனால், இம்மியும் பிசகாமல் தனது வலுவான எதிர்ப்பை வெனிசுவேலா வெளிப்படுத்தியதால், அந்நாட்டில் செய்யப்படும் தலையீடுகளில் ஏகாதிபத்தியத்தின் நுட்பங்கள் கூர்மையாக வெளிப்படுகிறது. 

அண்மைக்காலமாக லத்தீன் அமெரிக்காவில் கியூபா, பொலிவியா மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளில் மட்டுமின்றி, பிரேசில், அர்ஜெண்டினா, ஈக்குவாடர் மற்றும் இதர பல நாடுகளில் இடதுசாரி பாதையை நோக்கிச் சென்ற நடுநிலை வாதிகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்து, ஏழை உழைப்பாளி மக்களுக்குச் சாதகமான மறுவிநி யோகக் கொள்கைகளை அமலாக்கினர்.  இது உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்கு சக்தி களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இந்த அரசுகளில் பல இன்றைக்கு கவிழ்க்கப்பட்டுள்ளன. இந்த அரசுகளின் கொள்கைகளுக்கும், திட்டங் களுக்கும் மக்களின் ஆதரவு இல்லாததால் இவை கவிழ்ந்திடவில்லை. மாறாக, அமெரிக்காவின் பிரதானமான பங்களிப்புடன் நிகழ்த்தப்பட்ட கீழ்த்தரமான சூழ்ச்சிகளாலேயே இவை கவிழ்க் கப்பட்டன. 1950களில், 60 மற்றும் 70களில் அமெரிக்கா அரங்கேற்றிய சூழ்ச்சிகளிலிருந்து இவை மாறுபட்டிருந்தன. திடீரென, வலுக்கட்டா யமாக, சட்டவிரோதமாக அரசிடமிருந்து அதிகாரத்தை பறிப்பது என்ற புதிய வடிவத்தில் இச்சூழ்ச்சிகள் அமைந்திருந்தன. குறிப்பாக நவீன தாராளவாத காலகட்டத்திற்கு உரியனவாக அவை அமைந்திருந்தன.

இத்தகைய ஆட்சி கவிழ்ப்பிற்கு இரண்டு முக்கிய காரணிகள் பங்களிப்பு செய்தன. உலக முதலாளித்துவ நெருக்கடியைத் தொடர்ந்து முதன்மைப் பொருட்கள் சார்ந்த வர்த்தகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி ஒரு காரணியாகும். பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் பெருமளவில் கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தன.  வர்த்தகப் பரிவர்த்தனையில் ஏற்பட்ட எதிர்மறையான நிலைமைகள் காரண மாக இந்நாடுகள் ஈட்டும் அந்நிய செலாவணியின் அளவு குறைந்து போனதால், தங்களது அத்தியா வசியத் தேவைக்கான இறக்குமதியை செய்ய இயலாத நிலைக்கு அவை தள்ளப்பட்டன.  வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, எண்ணை விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக அந்நாடு தனது அத்தியாவசிய தேவைக்கான இறக்கு மதியை செய்ய இயலாத நிலைக்கு தள்ளப் பட்டது. அத்துடன், எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அரசின் வரு மானமும் குறைந்து போனது.  அரசு ஈட்டும் அந்நிய செலாவணியின் அளவில் சரிவு ஏற்பட்டபோதும், ஏகாதிபத்திய முகமைகளின் பரிந்துரையின்படி, “சிக்கன” நடவடிக்கைகளை செயல்படுத்திடாது, அதற்குப் பதிலாக ஏழை மக்கள் அனுபவித்து வந்த மறுவிநியோகப் பயன்களை பாதுகாத்திட அரசு முயன்றது. இதன் காரணமாக அங்கு பணவீக்கம் பெருமளவில் ஏற்பட்டது.

இந்நிலை ஏழை மக்களுக்கு கடுந்துன்பத்தை அளித்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த கடுந்துன்பங்கள் ஆட்சியாளர்களின் கொள்கை களால் ஏற்பட்டவை அல்ல; மாறாக வர்த்தகத் தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டவை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உண்மையில், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிரமங்களை எதிர்கொள்ள ஆட்சி யாளர்கள் “சிக்கனநடவடிக்கை”க்கான கொள் கையை மேற்கொள்ளவில்லை.  ஆட்சியாளர்கள் அவ்வாறு செயல்படுத்தியிருந்தால், அது சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தாததால் மக்கள் இப்போது எதிர்கொள்ளும் துன்பங்களை விட கூடுதலான துன்பதுயரங்களையே ஏழை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கூட தங்கு தடையின்றி இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில் அமெரிக்கா தடைகளை விதித்தது. இதன் காரணமாக, வெனிசுவேலா நாட்டு பொருளா தாரம் அளவு கடந்த நிலையில் மோசமானது. மேலும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் வெனிசுவேலா நாட்டு அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.  மேலும், அமெரிக் காவிற்கு எண்ணெயை ஏற்றுமதி செய்வதன் மூலம் வெனிசுவேலா நாட்டிற்கு கிடைக்கும் வரு மானங்கள் அனைத்தும் அந்நாட்டில் ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசியலமைப்புச் சட்டத்தின்படியான அதிபர் நிகோலஸ் மதுரோ வின் அரசிடம் அளிப்பதற்குப் பதிலாக, அமெரிக் காவின் ஆதரவுடன் வெனிசுவேலா நாட்டின் அதி பராகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட ஜூவான் கியோடோவின் அரசிடம்தான் அளிக்கப்படும் என அறிவித்தது.  இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக வெனிசுவேலா மீதான தனது பொருளாதார ரீதியான தாக்குதலை அமெரிக்கா சமீப காலமாக மேலும் தீவிரப் படுத்தியுள்ளது. வெனிசுவேலாவின் பணத்தை களவாடி அந்நாட்டிலேயே ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவதாகவே இந்நடவடிக்கை உள்ளது. காலனியாதிக்க காலத்தில் ஆதிக்கம் செலுத்து பவர்களின் வெற்றிக்காக அடிமைப்பட்டுள்ள நாட்டு மக்கள் சூறையாடப்பட்டதை இது நினைவுபடுத்துகிறது.

இத்தகைய சூறையாடல்களும், கட்டுப்பாடு களும் வெனிசுவேலா நாட்டு மக்களின் துயரத்தை கூடுதலாக்கியது என்பதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. மதுரோ அரசிற்கு எதிராக மக்களை திருப்பிட, அதிகரித்த துயரத்திற்கான பழி மதுரோ அரசின் மீதே போடப்பட்டது.

சமீபத்திய ஆட்சிக் கவிழ்ப்பிற்கான இரண்டா வது காரணி, மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஏகாதிபத்திய முயற்சிகளை எவ்விதத்திலும் விட்டு விடாமல், அங்கு நேரடியாக செயல்படுவதி லிருந்து படிப்படியாக அமெரிக்கா விலகி வரு கிறது என்பதாகும்.  இதன் காரணமாக, லத்தீன் அமெரிக்கா மீது தற்போது அமெரிக்காவால் கவனம் செலுத்த முடிகிறது.

சமீபத்தில் ஆட்சி கவிழ்ப்புகளுக்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளில், வெனிசுவேலா ஓர் மிகச் சிறந்த உதாரணமாகும்.  இது அமெரிக்க ஆதரவுடன் 1950களில், 60 மற்றும் 70களில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்புகளிலிருந்து குறைந்தபட்சம் 6 விதங்களில் மாறுபட்டுள்ள தோடு, முற்றிலும் புதிய வழிமுறையிலும் அமைந் துள்ளது.

முந்தைய ஆட்சிக் கவிழ்ப்புகளில், அது ஈரான் அல்லது குவாண்டமாலா அல்லது சிலி ஆகிய நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்ட போது, ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளுக்கு எதிரானவையாக இருந்த தோடு, அந்த இடத்தில் அமெரிக்காவின் ஆதர வைப் பெற்ற யதேச்சதிகார அரசுகள் துளிக்கூட வெட்கமின்றி நிறுவப்பட்டன.  தற்போது நடை பெறும் ஆட்சி கவிழ்ப்புகளும் ஜனநாயகபூர்வ மாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக, ஜனநாயகத்தின் பெயரிலேயே நிகழ்த்தப்படுகின் றன. பிரேசில் நாட்டில், ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக போல்சனரோ தோற்றமளிக்கிறார்.  ஆனால், தில்மா ரூசுப்பிற்கு எதிராக “நாடாளுமன்ற சதி” மட்டும் அரங் கேற்றப்படவில்லை; ஆனால் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட, தேசத்தின் மிகப் பிரபலமான அரசியல் தலைவரான, முன்னாள் அதிபரும், தொழிலாளர் கட்சியைச் சார்ந்தவருமான லூலா தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கப்பட வில்லை.  இது முதலாவது வேறுபாடாகும்.

அதேபோன்று வெனிசுவேலாவில், அமெரிக்கா வின் ஆதரவு பெற்ற ஜூவான் கியோடோ, வலுவான ராணுவ மனிதர் மட்டுமல்ல, மாறாக, தேசிய சட்டமன்றத்தின் அதிபராக உள்ளார். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பழைய சுரண்டல் வெள்ளை மேலாதிக்க ஒழுங்கு முறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள், லத்தீன் அமெரிக்காவில் முற்போக்கான ஆட்சிகளுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக நேரடியாக அமெரிக்காவால் அணிதிரட்டப் பட்டு வருகின்றன.

சட்டபூர்வமாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தடுக் கப்பட்ட அரசுகளுக்கு எதிராக அணி திரட்டப் பட்டபோதும், ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பெயரில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற சக்திகளால் பெரியதொரு அளவில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பியக் கங்களும் மேற்கூறப்பட்ட போக்குடன் இணைந்த வையாகும்.  சுருங்கச் சொன்னால், எதிர்ப்புரட்சி சக்திகள், முந்தைய காலகட்டங்களில் இருந்ததைப் போன்று வெறும் ராணுவ ரீதியான ஆட்சிக் கவிழ்ப்புகளாக இல்லாமல் ஒரு வெகுஜனத் தன்மையை அடைந்துள்ளன.

இரண்டாவதாக, மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு முற்போக்கான அரசுகள் காரணமில்லை என்பதோடு மட்டுமின்றி, இந்நெருக்கடிகளில் பெரும்பாலானவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வேண்டுமென்றே உருவாக் கப்பட்டவை ஆகும்.  இருந்தபோதும், இந்த பொருளாதார சிரமங்களிலிருந்தே எதிர்ப்புரட்சி கர வெகுஜன இயக்கங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. முந்தைய ஆட்சி கவிழ்ப்பு களில் வெகுஜனத் தன்மை இருக்கவில்லை. எந்த பொருளாதார நெருக்கடியின் வெடிப்பைத் தொடர்ந்ததாகவும் அவை இருக்கவில்லை. அல்லது இத்தகைய சிரமங்களை முன்னிறுத்தி தங்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் அவர்கள் அக்கறை காட்டவில்லை. ஆம். கயானாவில் டாக்டர் சேட்டி ஜகனின் அரசு ஏகாதிபத்தியத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தாலேயே கவிழ்க்கப்பட்டது. முந்தைய காலகட்டத்தில் ஆட்சியை கவிழ்த்திட எப்போதேனும் பயன் படுத்தப்பட்ட இத்தகைய வழிமுறை, தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

மூன்றாவதாக, மக்கள் எதிர்கொள்ளும் பொருளா தார நெருக்கடிகளில் பெரும்பாலானவை உல களாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் செயல்பாட்டாலும், ஏகாதிபத்தியத்தாலேயும் உருவாக்கப்பட்டவை ஆகும்.  இருந்தபோதும், இதற்கான பழி முற்போக்கு அரசுகள் மீது மட்டுமின்றி, அவற்றின் இடதுசாரி கொள் கைகள் மீதும் மிக வெளிப்படையாக சுமத்தப்படு கின்றன.  நாட்டின் கனிம வளங்கள் தேசியமய மாக்கப்பட்டது, பொருளாதாரத்தில் அரசின் தலையீடு, முதலாளித்துவ ஆதரவு கொள்கை களுக்கு எதிரான நிலைபாடு போன்றவையே பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணியாக முன்னிறுத்தப்படுகின்றன. நவீன தாராளவாத ஒழுங்குமுறை செயல்பாட்டின் மீது செய்யப் படும் எந்தவொரு தலையீட்டிற்கும் எதிரான தத்துவார்த்த தாக்குதலை ஆட்சிக் கவிழ்ப் பிற்கான பிரச்சாரம் இணைக்கிறது.  இத்தகைய தத்துவார்த்த தாக்குதல் தெளிவற்றதாக இருப்பது அவசியமாகிறது. “ஊழல்”, “தகுதியின்மை” போன்ற கருத்துக்கள் முன்னுக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனால், நவீன தாராளவாத ஒழுங்குமுறையில் அரசின் தலையீட்டுடன் இணைந்ததாகவே இவை கருதப்படுகின்றன.

நான்காவதாக, கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளவாத ஒழுங்குமுறையை மீண்டும் நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரல் வெளிப்படையாக முன் வைக்கப்படுகிறது. உதாரணமாக, “ஜனநாயக மாற்றம்” என்பதற்கான திட்டம் வெனிசுவேலாவில் முன்வைக்கப்பட்டது. ஆட்சி கவிழ்ப்பிற்குப் பிறகு என்னவெல்லாம் செய்யப்படும் (கீழே கொடுக்கப் பட்டுள்ளவை உள்ளிட்டு) என்பது இத்திட்டத் தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1) சர்வதேச நிதி நிறுவனத்தின் நிதியைப் பெறு வதன் மூலம் உற்பத்திக் கருவிகளை மீண்டும் செயல்படுத்துதல்.

2) அனைத்து கட்டுப்பாடுகளையும், விதி முறைகளையும், அதிகார தலையீடுகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் நீக்குதல்.

3) நம்பகத்தன்மையையும், தனியார் சொத்துக் களுக்கு வலுவான பாதுகாப்பையும் அளிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சர்வதேச முதலீட்டை அனுமதிப்பது.

4) பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீட்டிற்கு வழி வகுப்பது.

5) எண்ணெய் திட்டங்களில் பெரும்பான் மையான பங்குகளை தனியார் நிறுவனங்கள் வைத்துக் கொள்ள அனுமதியளிக்கும் புதிய ஹைட்ரோகார்பன் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது.

6) பயன்பாட்டு சொத்துக்களின் செயல் பாட்டிற்கு தனியார்துறை பொறுப்பாக்கப்படும்.

7)            குறைந்தபட்ச அரசின் மூலம் திறனை அதிகரித்தல்

இது நவீனதாராளவாதத்தின் வெட்கங் கெட்ட நிகழ்ச்சி நிரலாகும். இருப்பினும், இதுவே ஆட்சி கவிழ்ப்பிற்கான நிகழ்ச்சி நிரலாக உள்ளது.  கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்திட ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்ற இத்தகைய தெளிவான செய்தி இவ்வளவு வெளிப்படையாக இதற்கு முன்னெப்போதும் முன்வைக்கப்பட்ட தில்லை.

ஐந்தாவதாக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஆட்சிக் கவிழ்ப்புகள் எல்லாம் அமெரிக்கா வின் ஆதரவுடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்றாலும், இவையெல்லாம் ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தின் ஆதரவுடனேயே நிகழ்த் தப்பட்டு வருகின்றன.  எனவேதான், வெனிசுவேலா வின் அதிகாரபூர்வமான அரசாக ஜூவான் கியோடோ அரசை ஐரோப்பிய யூனியன் அங்கீரிக்க வேண்டுமென டிரம்ப் கேட்டுக் கொண்டபோது அது உடனேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இது இன்றைய காலகட்டத் தில் காணப்படும் யதார்த்தத்தின் குறியீடாகும்.  இதற்கு முன்னர் இருந்த பலத்துடன் இன்றைக்கு அமெரிக்கா இல்லை. ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டுள் ளன; ஏகாதிபத்திய நடவடிக்கை எதையேனும் அமெரிக்கா மேற்கொண்டாலும் கூட அதற்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது ஆகியனவையே அந்த யதார்த்தங்களாகும்.

இறுதியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் அரசிற்கு எதிரான ஏகாதிபத்திய நடவடிக்கை ஜனநாயகத்தை பாதுகாத்திடும் நடவடிக்கையாகும்  என அந்நாட்டு மக்களை ஏற்றுக் கொள்ளச் செய் வதில் ஊடகம் மிக முக்கியமான பங்கினை ஆற்று கிறது என்பதை வெனிசுவேலா நிகழ்வு காட்டுகிறது.  நியூயார்க் டைம்ஸ் போன்ற செய்தித்தாள்கள் இத்தகைய பணியை தொடர்ந்து ஆற்றி வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இன்றைக்கு நாம் ஓர் புதிய உலக ஒழுங்குமுறை யில் உள்ளோம். இப்புதிய ஒழுங்கு முறையில், ஜனநாயகத்துடன் கார்ப்பரேட் நலன்கள் சமமாக முன்னிறுத்தப்படுவது ஏற்புடையதொரு கொள் கையாக மாறி வருகிறது. அமெரிக்க ஆதரவு ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு எதிராக வெனி சுவேலா நாட்டு மக்கள் இதுவரை மிகவும் உறுதி யுடன் செயல்பட்டுள்ளனர். ஆனால், இம்மக் களின் எதிர்ப்பு காரணமாக தற்போது அமெரிக்கா அவர்களை ஆயுதத் தலையீட்டின் வாயிலாக அச்சுறுத்தி வருகிறது. ஆயுதத் தலையீடு செயல்படுத்தப்பட்டது எனில், ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை சமீப காலத்தில் மேற்கொள்ளப் படுவது இதுவே முதலாவதாக இருக்கும். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கிறது அல்லது அமெரிக்காவின் நலன் களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஊறு விளைவிக்கிறது என்ற அற்பமான காரணங்களை இதற்காக முன்வைத்தாலும், இத்தகைய தாக்கு தலுக்கான உண்மையான காரணம் நவீன தாராளவாதத்திற்கு எதிராக செயல்பட மதூரோ அரசு துணிந்தது என்பதேயாகும்.



One response to “ஏகாதிபத்திய தலையீட்டின் புதிய வடிவம் வெனிசுவேலாவின் அமெரிக்கத் தலையீடு”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: