தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டை முன்னிட்டு (19.11.1918 – 8.5.1993) சமீபத்தில் சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது குறித்தும், அதில் முன்வைக்கப்பட்ட கருத்துரைகள் வரவிருக்கும் மார்க்சிஸ்ட் இதழில் பிரசுரிக்கப்படும் என்றும் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். கட்டுரைகளின் அளவு அதிகமாக இருந்தாலும், கட்டுரையின் உள்ளடக்கம் கருதி முழுமையாக கொண்டு வரும் நோக்கோடு இந்த இதழ் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டு சிறப்பிதழாக கொண்டுவரப்படுகிறது.
இவ்விதழில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட இரண்டு கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
“அறிவியல், தத்துவம் – ஊடாடல்: தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் பதிவுகள்” என்ற முதல் கட்டுரையை தோழர் பி கே.ராஜன் எழுதியுள்ளார். சற்று நீளமான கட்டுரையானாலும், நிதானமாக படித்து உள்வாங்க வேண்டிய கட்டுரையாகும் இது. பண்டைய இந்திய தத்துவத்தில் அறிவியல், கணிதம், மருத்துவம் உள்ளிட்டவற்றின் பங்கு பாத்திரம் பற்றிய சட்டோபாத்யாயாவின் பதிவுகளை இக்கட்டுரை சிறப்பாக எடுத்தியம்புகிறது.
“வேதாந்தம் குறித்து சட்டோபாத்யாயா” என்ற பேரா. இரா. முரளியின் கட்டுரை இந்திய தத்துவத்தில் வேதங்கள் முன்வைத்த கருத்துமுதல்வாதத்தை எதிர்த்த பொருள்முதல்வாதப் போக்கையும், கடந்த காலத்தை கண்மூடித் தனமாகப் புனிதப்படுத்தும் போக்கையும் சட்டோபாத்யாயா சுட்டிக்காட்டி விளக்கும் விதத்தை விதந்து பேசுகிறது.
1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத “சோஷியல் சயின்டிஸ்ட்” இதழில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் “தத்துவவாதி லெனின்” என்ற நூல் குறித்து தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். நூல் விமர்சனம் என்றாலும் தோழர் இ.எம்.எஸ். பல தத்துவார்த்த விவாதங்களை இதில் கொண்டுவந்துள்ளதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இங்கு தோழர் ச.லெனின் மொழியாக்கத்தில் பிரசுரிக்கப்படுகிறது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட தோழர் என்.குணசேகரன் அவர்களின் “மறுவாசிப்பில் திராவிட இயக்கம்” என்ற நூல் குறித்த விமர்சனத்தை ஆய்வாளர் சூரியன் அவர்கள் வழங்கி யுள்ளார். மேலும் விவாதிக்க வேண்டிய பல அம்சங்களும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளன.
“ஏகாதிபத்திய தலையீட்டின் புதிய வடிவம்: வெனிசுவேலாவில் அமெரிக்கத் தலையீடு” என்ற தோழர் பிரபாத் பட்நாயக்கின் கட்டுரை காலத்தின் தேவை கருதி “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” இதழில் இருந்து தோழர் கிரிஜா அவர்களின் மொழி பெயர்ப்பில் வெளியாகிறது.
மார்க்சிய சொல்லகராதியின் மூன்றாம் பகுதியாக, இயக்கவியலின் முதல் விதியான “அளவு மாற்றம் தன்மை மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்” என்ற விதி இந்த இதழில் விளக்கப்பட்டுள்ளது.
“மார்க்சிஸ்ட்” இதழின் சந்தா சேர்ப்பில் வாசகர்கள் கவனம் செலுத்திடுமாறும், வாசகர் வட்டங்களில் வரும் கருத்துக்களை ஆசிரியர் குழுவிற்கு தெரியப்படுத்து மாறும் கேட்டுக்கொள்கிறோம்.
-ஆசிரியர்குழு
(ஏப்ரல் 2019)
Leave a Reply