மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இட ஒதுக்கீடு: சிபிஐ(எம்) அணுகுமுறை


கே. பாலகிருஷ்ணன்

குரல்: யாழினி

தமிழகத்தில் மாநில கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு நீண்ட காலமாக அமலில் உள்ளது. கிட்டத்தட்ட 95 சதவீத மக்கள் இடஒதுக்கீடு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆனால் இதர மாநிலங்களில் இத்தகைய நிலைமை இல்லை. சரிபாதிக்கும் மேற்பட்ட மக்கள் சில மாநிலங்களில் இட ஒதுக்கீடு சலுகை பெறும் வரம்புக்கு வெளியில் உள்ளனர். எனவே, இம்மாநிலங்களில் தங்களுக் கும் இட ஒதுக்கீடு சலுகை வேண்டுமென அவர் கள் கோருவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

தமிழகத்தில் மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 252 சாதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தீர்மானிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான பிற்படுத்தப் பட்டோர் சாதியில் 181 சாதிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதில் விடுபட்டுள்ள 71 சாதி களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெறும் வாய்ப்பு தற்போது இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய இதர பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் பட்டதன் மூலம் இவர்களுக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகை பெற இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் மயம்

அதுமட்டுமின்றி, அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் நாளுக்குநாள் மூடப் பட்டோ, தனியார் மயமாக்கப்பட்டோ வரு கின்றன. இருக்கும் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டு டிசம்பர் கணக்கெடுப்பின்படி மோடி ஆட்சியில் ஒரே ஆண்டில் சுமார் 1 கோடியே 10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (ஊஆஐநு) தெரிவித்தது. மத்திய-மாநில அரசுகளால் அமலாக் கப்படும் தனியார் மயம், தாராளமயக் கொள்கை களால் இடஒதுக்கீடு நீர்த்துப் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள வேலைவாய்ப்பு களில் தோராயமான கணக்குப்படி 85 சதவீதம் தனியார் நிறுவனங்களிலும், 15 சதவீதம் மட்டுமே அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளன. நிரந்தரப் பணிகளை வெளிநிறுவனங் களைக் கொண்டு செய்விப்பதன் விளைவாக (அவுட்சோர்சிங்) அவையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.

இந்நிலையில் தனியார் துறைக்கும் இட ஒதுக் கீட்டு கோட்பாட்டை விரிவுபடுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாகவே வற்புறுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் இம்ம சோதா விவாதத்திற்கு வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் (மக்களவையிலும், மாநிலங்களவையிலும்) அனைத்துப் பிரிவினருக்கும் தனியார் துறையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக் கீட்டினை விரிவாக்க வேண்டுமென சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தனர். ஆனால் மோடி அரசு அதை நிராகரித்து விட்டது.

இட ஒதுக்கீட்டிற்கு உண்மையான ஆபத்து தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் தான் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து இடஒதுக் கீட்டு கோட்பாட்டை பாதுகாக்க வேண்டுமெனில், தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்று வது அவசர, அவசியமானதாகும். இதற்கு அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் இணைந்து குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும்.

நிலக்குவியல்

இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து விவாதிக்கும் போது சாதிகள் குறித்தும் அதற்கு அடிப்படை யாக உள்ள நிலவுடைமை குறித்தும் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் நிலைப்பாடாகும். நீடித்து வரும் வேலையின்மை, வறுமை, பசி, பட்டினி போன்ற அனைத்து சமூகச் சீர்கேடுகளுக் கும் அடிப்படையான காரணம் விடுதலைக்குப் பிறகும் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் நிலக்குவியலே ஆகும். இந்த நிலக் குவியலை உடைத்து நிலமற்றோர் அனைவருக்கும் நிலவிநி யோகம் செய்வதன் மூலம் மட்டுமே வேலையின் மைக்கு முடிவு கட்ட முடியும். அதாவது நிலமற்ற அனைவருக்கும் நிலவிநியோகம் செய்து அவர் களது வருவாய்க்கு வழி செய்வதன் மூலம் இம்மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த முடி யும். மக்களின் வாங்கும் சக்தி உயரும்போது பொருட்கள் உற்பத்தி, விற்பனை, அதனால் ஏற்படும் தொழில்வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்படும்.

இதையே மண்டல் கமிஷன் ”தீவிரமான நிலச் சீர்திருத்தம், கிராமப்புற பொருளாதார மறுசீர மைப்பு, பூதான இயக்கம், கால்நடை மற்றும் பால் பண்ணை வளர்ச்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும்”என்று சொன்னதோடு“நிலச்சீர்திருத் தத்தின் மூலம் இன்றைய நிலவுடைமைகளை மாற்றாமல் உண்மையான சமூகநீதி கிடைக்காது” எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மையமான பிரச்சனையை கையில் எடுக்க அன்றும் இன்றும் உள்ள ஆட்சியாளர் கள் முன்வரவில்லை என்பதே உண்மை.

இடதுசாரி அரசுகள்

இந்த நிலச்சீர்திருத்தத்தை அடிநாதமாகக் கொண்டே 1957-ம் ஆண்டில் தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான இடதுசாரி அரசில் தொடங்கி இன்று வரை கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அரசுகள் நிலச்சீர்திருத்த நடவடிக் கைகளை மேற்கொண்டன. இதன் மூலம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட உபரி நிலங்களில் கேரளாவில் 70,834 ஏக்கர் 1,68,912 பயனாளிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 10,52,269 ஏக்கர் 31,37,662 பயனாளிகளுக்கும், திரிபுராவில் 1,599 ஏக்கர் 1,424 பயனாளிகளுக்கும் விநியோகிக் கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் உபரியாக அறிவிக்கப்பட்ட நிலங்களில் 21 சதவீத நிலம் மேற்குவங்கத்தில்தான் அறிவிக்கப்பட்டது.  இந்தியா முழுவதும் இவ்வாறு நிலம் பெற்ற பயனாளி களில் 54.2 சதவீதம் பேர் மேற்கு வங்கத்தில்தான் உள்ளனர் என்பதும் மேற்கு வங்க இடது முன்னணி அரசின் முனைப்பையும் செயல்பாட்டையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.  (இது 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்)

தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் நிறை வேற்றப்பட்டபோது 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் விநியோகம் செய்யப்பட்ட மொத்த உபரி நிலம் 1.90 லட்சம் ஏக்கர் மட்டுமே. மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டிய உண்மையான சமூக நீதிக்கான நில விநியோகம் செய்யப்பட்ட லட்சணம் இதுவே.

உண்மையான சமூகநீதி

இடஒதுக்கீடு பிரச்சனையில் தீவிரம் காட்டும் கட்சிகளும் இம்மக்களுக்கு நிலவிநியோகம் செய்ய வேண்டும் என்பதை மறந்தும்கூட வற்புறுத்து வதில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புற நிலவுடைமையில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலம் உண்மையான சமூகநீதி கிடைக்கும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நிலப்பிரபுக்கள் மற்றும் பெரும் தொழிலதிபர் களிடம் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து நிலமற்றோருக்கு விநியோகம் செய்வது விவசாயப் புரட்சியின் அடிப்படைக் கடமைகளோடு தொடர்புடையதாகும். இதை சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் மூலம் மட்டுமே நடத்துவது சாத்தியமில்லை. இத்தகைய விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் மட்டுமே நிலப்பிரபுக்கள், பெரும் தொழிலதிபர்கள், கந்து வட்டிக் கும்பல்கள் ஆகியோரின் கோரப்பிடியி லிருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப் பட்ட உழைப்பாளி மக்களை விடுவிக்க முடியும். இவர்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் முடிவு கட்ட முடியும். இதைத் தவிர இதற்கு மாற்று வழி கிடையாது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திட்டவட்டமான முடிவாகும்.

மக்கள் ஒற்றுமை

விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டுமெனில் தாழ்த்தப்பட்ட, பழங் குடி, பிற்படுத்தப்பட்ட மக்களது ஒற்றுமை மட்டுமல்லாது இதர சாதிகளைச் சேர்ந்த உழைப் பாளி மக்களின் ஒற்றுமையும் அவசியமானதாகும். சமூகத்தில் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களின் போர்க்குணமிக்க வர்க்க ஒற்றுமையை உருவாக்குவது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள நீண்ட பயணத்தின் குறிக்கோளாகும்.

ஆனால் உழைப்பாளி மக்களை முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்துவது இம்மக்களின் நலன்களுக்கு விரோதமானதாகும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்டி வந்துள்ளது. ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீட்டு கொள்கை யினை கண்டிப்பாக அமலாக்க வேண்டும் என வற்புறுத்தும் அதே நேரத்தில், இதர சாதிகளில் உள்ள உழைப்பாளிகள் மற்றும் ஏழை மக்களுக் கும் ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென நீண்டகாலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருவது மேற்கண்ட விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமெனில் அனைத்து உழைப்பாளி மக்களின் வர்க்க ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் அணுகு முறையே ஆகும்.One response to “இட ஒதுக்கீடு: சிபிஐ(எம்) அணுகுமுறை”

  1. […] தோழர் கே. பாலகிருஷ்ணன் எழுதி வந்த “இட ஒதுக்கீடு சிபிஐ (எம்) அணுகுமுறை” என்கிற கட்டுரையின் இறுதிப் பகுதி […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: