இரா.சிந்தன்
மனிதகுலம், தனது முதல் கருந்துளை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிவி யல் ஆராய்ச்சியில் இது ஒரு புதிய உயரம். கருந் துளை என்றால், அண்டத்தில் காணப்படுவதி லேயே புரிந்துகொள்ள சிக்கலான பொருளாகும். ஏற்கனவே நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டிருக்கிறோம், இப்போது நாம் அதனைப் படம்பிடிக்கும்முயற்சியில் முன்னேறியுள்ளோம். அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அனுமானித்த ஒன்றை, கண்ணுற்றுக் காண்பது மிக முக்கியமானது. இப்போது நமக்கு கிடைத்திருப்பது, எம் 87 என அழைக்கப்படுகின்ற கேலக்சி எனப்படும் ஒரு அண்டத்தின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கருந்துளையின் படமா கும். பூமியில் இருந்து 5,349 கோடி ஒளியாண் டுகள் தொலைவில் அது அமைந்திருக்கிறது. அதாவது அங்கிருந்து ஒளி நம்மை வந்து அடைய சுமார் 5,349 கோடி ஆண்டுகள் ஆகும். நம் சூரியனுடைய நிறையை விட 65 லட்சம் மடங்கு பெரியதாக அந்தக் கருந்துளை உள்ளது.
கருந்துளையை படம்பிடித்தல் எப்படி சாத்தியமானது என்பது குறித்து ஏராளமான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. இந்த முயற்சி, இனி வரும் நாட்களில் பூமியை விட பெரிய தொலைநோக்கியை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு நடந்தால் கருந்துளை பற்றிய வேறு பல சந்தேகங் களுக்கும் விடை கிடைக்கும். ஐன்ஸ்டீனின் தத்து வம் எவ்வளவு தூரம் சரி; குவண்டாம் தத்துவத் துடன் ஐன்ஸ்டீன் தத்துவத்தை இணைத்து புதிய இயற்பியல் தத்துவத்தை ஏற்படுத்துவது போன்ற, மேலும், வானில் அறிய முடியாத பல உண்மை களை கூர்நோக்கி ஆராய முடியும்.
கருந்துளை என்பது என்ன?
சூரியன் போன்ற விண்மீன்களை எடுத்துக் கொண்டால் அவற்றுள் எப்போதும் எதிரும் புதிருமான முரண்பட்ட இரண்டு விசைகள் செயல்பட்டுக் கொண்டிருகின்றன. முதலாவதாக அவற்றின் சொந்த நிறை ஏற்படுத்தும் ஈர்ப்பு விசை காரணமாக அவை சுருங்கும். அவ்வாறு சுருங்கும்போது மையத்தில் அழுத்தம் கூடி கருப் பிணைவு ஆற்றல் எனும் ஒருவகை அணுவிசை ஏற்படும். இதன் காரணமாகவே சூரியன் ஒளிர் கிறது. வெப்ப ஆற்றல் எல்லாவற்றையும் விரிவு படுத்தும். ஆகவே இந்த விரிவுபடுத்தும் வெப்ப விசை சுருங்க செய்யும் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட்டு எப்போதும் சூரியனுள் எதிர் எதிர் முரண்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். சூரியன் நிலையாக இருப்பதும் ஒளிர்வதும் இந்த எதிர் எதிர்முரண்களின் செயலால்தான். எதிர்மறை களின் ஒற்றுமையும், முரண்களும் என்ற இயக்க வியல் பொருள்முதல்வாத விதி இங்கே நமக்கு தெளிவாக புலப்படுகிறது.
பருப்பொருள் அளவில் ஏற்படுகின்ற மாற்றம் அதன் பண்பிலும் மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்ற பொருள்முதல்வாத இயக்கவியல் விதிக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவை விட விண்மீனின் நிறை கூடினால் அதன் தன்மை மாறிவிடும். சூரியனை போல சுமார் மூன்று மடங்குக்கு மேலே நிறை கொண்ட விண்மீன்கள் தமது வரலாற்றில் ஒரு கட்டத்தில் சொந்த ஈர்ப்பு விசையின் காரணமாக சுருங்கி வெள்ளைக்குள்ள விண்மீன் என்ற ஒரு வகை விண்மீனாக மாறும் என முதன்முதலில் கூறியவர் விஞ்ஞானி சந்திரசேகர் . இவர்தான் குறிப்பிட்ட விண்மீனின் நிறை கூடக் கூட அந்த விண்மீனின் தன்மை மாறுபடும் என முதலில் நிறுவியவர்.
அதே போல சூரியனை விட சுமார் இருபது மடங்கு கூடுதல் நிறை கொண்ட ராட்சச குண்டு விண்மீன்கள், தமது இயல்பு வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அந்த விண்மீன் வெளியிடும் வெப்ப ஆற்றல், அதன் ஈர்ப்பு விசையை தாக்கு பிடிக்க முடியாமல் போகும். ஈர்ப்பு விசையின் கை ஓங்குவதுடன் அந்த விண்மீன் தனக்குள்ளேயே சுருங்கத் தொடங்கும். இப்படி சுருங்கத் தொடங் கும் விண்மீன்கள் “ஸ்வார்ஸ் சைல்ட்” விட்டம் என்ற அளவுக்கு சுருங்குகின்றன.
அவ்வாறு “ஸ்வார்ஸ் சைல்ட்” விட்டம் எனும் அளவுக்கு குறைவாக சுருங்கி போனால் அதன் ஈர்ப்பு விசை வெகுவாக அதிகரிக்கும். இவ்வாறு உருவாவதுதான் கருந்துளை.
கருந்துளைகளுக்கு ஈர்ப்பு விசை எந்த அளவுக்கு உச்சமாக இருக்குமெனில், அது தான் வெளியிடும் வெளிச்சத்தைக் கூட தானே விழுங் கிக்கொள்ளும். அதன் மீது ஒளியை பாய்ச்சினால் அதனை திரும்ப பிரதிபலிக்கவும் செய்யாது. இதன் காரணமாக கருந்துளைகளைப் பார்க்க முடியாது. எனவே, அவைகளை ஆராய்வதும் எளிதல்ல.
சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கருந்துளையின் இருப்பு குறித்த முதல் அனு மானம் எழுந்தது. ஆய்வுகள் தொடங்கின. இது நாள் வரையில் கருந்துளைகள் அண்டங்களில் நிலவுவதற்கான தற்செயல் ஆதாரங்கள்தான் கிடைத்து வந்தன. இப்போது கருந்துளையின் படம் கொடுக்கும் சில விபரங்கள் சார்பியல் கோட்பாட்டின் அனுமானங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
சார்பியல் கோட்பாடும் கருந்துளைகளும்:
19 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஒளியின் திசை வேகத்தை கணக்கிடும் அளவுக்கு இயற்பியல் முன்னேற்றமடைந்தது. ஒளியின் திசைவேகமானது, ஆராய்ச்சியாளரின் திசை வேகத்திற்கு ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகும் என்றுதான் அதுவரை நிலவிவந்த விசையியல் (மெக்கானிக்ஸ்) அறிஞர்கள் நம்பினார்கள். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒளியின் திசைவேகம் நிலையானது என்ற முடிவு வந்தது. இக்கண்டுபிடிப்பு விசையியல் மற்றும் மின் காந்தவியல் (எலெக்ட்ரோ மேக்னெட்டிக்ஸ்) ஆகிய துறைகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது.
இச்சிக்கலைத் தீர்க்கும் ஆராய்ச்சியில் ஈடு பட்ட ஐன்ஸ்டைன், அதன் முடிவில், 1905ஆம் ஆண்டு, சிறப்பு சார்பியல் கோட்பாட்டை வகுத் தளித்தார். அந்தச் சமயத்தில் அவர் ஸ்விட்சர் லாந்து நாட்டின் காப்புரிமை அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்தார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். மேற் சொன்ன கோட்பாடுதான் ஐன்ஸ்டைனின் மேதமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
1905ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைன் மொத்தம் நான்கு கருத்துகளை வெளியிட்டு அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதில் இரண்டு கருத்துகள் சார்பியல் தொடர்பான வையாகும். மேலும் ஒன்று நிறையைஆற்றலாக மாற்ற முடியும் என நிரூபித்த சமன்பாடான நு=ஆஊ2 என்பதும், மற்றொன்று அணுக்களின் இருப்பை நிரூபித்தலும் ஆகும். சார்பியல் குறித்தான ஐன்ஸ்டைனின் கருத்துக்கள், காலம் – வெளி ஆகியவை இரண்டும் அறுதியானவை அல்ல. எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல. காலத்தையும், வெளியையும் உணர்கிற நபர் அல்லது பொருட்களின் இயக்கத்தை சார்ந்து, காலம், வெளி ஆகிய இரண்டுமே வேறுபடும். மேலும் காலம், வெளி இரண்டும் ஒன்றில்லாமல் மற்றொன்று தனித்திருக்காது. எனவே, காலம், வெளி ஆகியவைகளை காலம்-வெளி என இணைத்துக் குறிப்பிடவேண்டும் எனவும் நிறுவுகிறார்.
அதன் பிறகு, மேற்சொன்ன சிறப்பு சார்பியல் கோட்பாட்டினை அடித்தளமாக கொண்டு, ஈர்ப்பு விசையை விளக்குவதற்கானமுயற்சியில் ஐன்ஸ்டைன் ஈடுபடுகிறார். 10 ஆண்டுகள் கழித்து, இவ்வாராய்ச்சியின் முடிவில் பொது சார்பியல் கோட்பாட்டை வெளியிடுகிறார். காலம்-வெளி இரண்டினுடைய வளைவின் காரணமாக ஏற் படுகிற விளைவே ஈர்ப்பு விசை என்றும், பெரும் நிறை கொண்ட ஒரு பொருளை ஒளி கடந்து செல்லும்போது அது வளைகிறது எனவும் குறிப்பிடுகிறார்.
மேற்சொன்ன கோட்பாட்டு விளக்கங்களின் அடிப்படையிலேயே கருந்துளையின் இருப்பு முதலில் அனுமானிக்கப்பட்டது. இந்த அனு மானங்கள் விஞ்ஞான ஆய்வுகளின் வழியே பரிசோதிக்கப்படுகின்றன. கருந்துளை பற்றிய ஐன்ஸ்டைனின் கருத்தை நவீன காலம் வரையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து வளர்த்தெடுக்கின்றனர்.
1974ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் வகுத்துக் கொடுத்த கோட்பாடு கருந்துளைகளின் இருப்பை புரிந்துகொள்ள உதவுவதாக அமைந்தது. கருந் துளைகள் வெளியிடும் கதிரியக்கம் (ரேடியேசன்) பற்றிய கருத்துக்களையும் அவரே வெளியிட்டார். ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு பின் அவரது குழுவினர் கருந்துளைகளின் இயக்கம் குறித்த மேலும் சில கருத்துகளை வெளியிட்டனர். அதாவது கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் எந்த ஒரு பொருளும் அதன் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதும் மேலும் கருந்துளைகளில் இருந்து ஹாக்கிங் கதிரியக்கம் மட்டுமல்லாது போட்டான் இழைகள் வெளியேறலாம் எனவும் குறிப்பிட்ட னர். (போட்டான் இழைகள் குறித்த கருத்து நிரூபிக்கப்படாத அனுமானமே) இப்படியான ஆராய்ச்சிகள் பிரபஞ்ச வெளியைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன.
கருந்துளைகளும் கருத்துமுதல்வாதிகளும்
அறிவியலில், அனுமானங்களுக்கு இடம் உண்டு; கற்பனைகளுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால் அந்த கற்பனைகளும், அனுமானங்களும் மந்திரத்தில் விழும் மாங்காய்கள் அல்ல. ஐன்ஸ் டைன் முன்வைத்த சிறப்பு சார்பியல் கோட்பாடு, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த இருவேறு அறிவியல் உண்மைகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் இருந்து உதித்தது என்பதை குறிப்பிட்டோம். அதனை மேலும் கூர்ந்து நோக்கினால் அனுமானங்களுக்கு உள்ள இயக்கவியல் அடிப்படையும் புரிபடும்.
காலம் குறித்த மனிதர்களுடைய அறிவு மிக இயல்பானது என்றே தோன்றுகிறது. ஏனென் றால் மனிதர்கள் பிறந்தது முதலே காலத்தோடு உறவாடுகிறார்கள். காலத்தைக் கணக்கிட்டு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த அறிவு போதுமானது போல் தோன்றுகிறது. ஆனால், மனித ஆராய்ச்சி, விண்ணைத் தாண்டி வெளியை எட்டுகிறபோது, முற்றிலும் புதிய சூழலில், காலம் குறித்த அறிவு வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது புரிகிறது.
ஒளியின் வேகத்தில் பயணிப்பது சாத்தியமே இல்லாத ஒருவருக்கு, வேகத்திற்கேற்ப நிறை அதிகரிக்கும் என்ற உண்மை அனுபவத்தில் புரியாது. பல்வேறு கதிர்களையும், அணுப்பிளவு களையும்ஆராய்கிற நவீன காலத்திற்கு ஐன்ஸ் டைன் தத்துவ வெளியில் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றம், எத்தனை முக்கியமானது என்பது புரிகிறது.
ஒரு குவளையில் தண்ணீர் இருக்கிறது. குடித்து முடித்தவுடன் காலியாகி விட்டதாகச் சொல்கிறோம். இல்லை; குவளைக்குள் காற்று நிறைந்து விட்டது. மேற்சொன்ன தகவல் அன்றாட உரையாடலுக்கு தேவைப்படும் தகவ லாக இல்லை. ஆனால் அறிவியல் இவ்வுண் மையை சாதாரணமாக கடந்து செல்லாது. அண்டத்தில் பல்வேறு துகள்கள், வாயுக்கள், கோள்கள், ஆற்றல் என நிறைந்திருக்கின்றன. இவை நிறைந்துள்ள வெளியை காலியிடம் என்பதா? வேறு எப்படிக் குறிப்பிடுவது என நுணுகி ஆராயும்.
ஒரு ஆப்பிள் பழம், மரத்திலிருந்து கீழே விழுவதைக் கொண்டு புவி ஈர்ப்பினை வரையறுக் கத் தொடங்கலாம். அதுவே, பூமியும், சூரியனும் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டிருப்பதும், நிலவும் பூமியும் ஒன்றை ஒன்று ஈர்த்தபடி சுழன்று கொண்டிருப்பதும் தெரியவரும்போது, ஈர்ப்பு விசையின் வரையறைகள் மாறுகின்றன.
காலம் ஒரு நேர்கோட்டில் பயணிப்பதாக நியூட்டன் கருதினார். அவருடைய கோட்பாடு இயற்பியலில், விசையியலில் தாக்கம் செலுத் தியது. காலம் என்ற குவளைக்குள்ளே அனைத் தும் இருப்பதாகவும், மாறிவருவதாகவும் நியூட்டன் அனுமானித்தார். ஈதர் என்ற ஒரு கற்பனை பொருளையும் அவர் வசதிக்காக அனுமானித்துக் கொண்டார். ஐன்ஸ்டைன் மேற்சொன்ன அனு மானங்களை காலாவதியாக்கினார்.
உண்மையில் ஒளியின் இயல்பு குறித்த திட்ட வட்டமான கண்டுபிடிப்புதான், அதுவரையிலான போக்குகளை புரட்டிப் போட்டது. நியூட்டனின் கருத்துக்களுடைய எல்லையை புரிய வைத்தது. ஐன்ஸ்டனின் கோட்பாடானது, காலனம், வெளி குறித்த புரிதலில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தது. மேற்சொன்னவைகளில் இருந்து பார்த்தால், ஐன்ஸ்டைனின் கோட்பாடு உருவான இயக்கவியல் அடிப்படையும் புரியும். இயற்பியலில் ஒட்டுமொத்த மனித சமூகம் முன்னேற்றமடைந்த இரு வேறு கட்டங்களோடு இணைத்து புரிந்து கொள்ள முடியும்.
வெளி என்பது அனைத்து பொருட்களும் இடம்பெற்றுள்ள, நகர்கின்ற கலனாகும் (ஒரு பாத்திரம் போல). காலம் என்பது எண்ணற்ற நகர்வுகளின் அண்டம் தழுவிய ஓட்டம். மேற் சொன்ன பார்வையை ஈர்ப்புவிசையோடு இணைத்து பொது சார்பியல்கோட்பாட்டை ஐன்ஸ்டைன் உருவாக்கினார். அது நியூட்டனின் ஈர்ப்புவிசைத் தத்துவத்தின் மெய்த்தன்மையை நிரூபித்து அதனை வளர்த்தெடுத்தது.
சூரியனை நெருங்கிச் செல்லும் வெளிச்சக் கதிர்கள் சிறிதளவு வளையும் என்பதும், சூரியனை சுற்றி கோள்கள் நகரும் பாதை ஒரே நீள்வட்ட மல்ல என்பதும், அது சற்றே மாறி மாறி ரோசாப் பூவின் இதழோரங்களை ஒத்த வடிவத்தில் அமைந்திருப்பதும், ஈர்ப்புவிசை காரணமாகத் தான். சூரியனில் இருந்து வெளிவருகிற ஒளியா னது பூமியைஅடையும்போது செம்மை நிறம் பெறுகிறது என்பதையும் அவர் நிரூபித்தார்.
சிறப்பு, சார்பியல் கோட்பாட்டின் அடிப் படையில் வெளியும் காலமும் ‘காலவெளி’ (Space-Time) என்ற பிரிக்க முடியாத ஒரு கட்ட மைப்பு என்ற வரையறைக்கு அவர் வந்தார். அதன் பொருள், இனிமேல் காலம் என ஒன்றோ, வெளியென ஒன்றோ கிடையாது என்பதல்ல. காலம் அதனுடைய தனித்தன்மையைக் கொண் டுள்ளது, வெளி அதற்கேற்ற தன்மையைக் கொண்டிருக்கிறது ஆனால் இவை இரண்டும் ஒன்றில்லாமல் தனித்து நின்று பொருள் தருகிறவை அல்ல என்பதே ஆகும்.
சார்பியல் கோட்பாட்டையும், கருந்துளைகள் பற்றிய அனுமானங்களையும் கருத்துமுதல்வாதத் திற்கான எடுத்துக்காட்டாக கைப்பற்றும் முயற்சிகள் ஆரம்ப காலத்திலேயே தொடங்கி விட்டன. அதாவது, அறிவியலால் அறியவே முடியாத ஒன்று உண்டு என்றும், அண்டம் படைக்கப்பட்ட ஒன்றே என்றும் மேற்சொன்ன கோட்பாடுகள் நிறுவி விட்டதாக அவர்கள் முன்வைக்கின்றனர். உண்மைக்கு மாறாக, மேற் சொன்ன வகையில் கருத்துக்களை முன்வைக்கிற வர்கள் முதலாளித்துவத்தின் தேவையில் இருந்தே செயல்படுகின்றனர். காரண காரியத்தை தாக்கி அழிப்பதே அவர்களுடைய கெட்ட நோக்கம். அறிவியலுக்கு விரோதமான கருத்துமுதல்வாதத்தை திணிக்க, அறிவியலையே கையகப்படுத்திக் கொள்கிற முயற்சிகளை, பொருள்முதல்வாதிகள் தொடர்ந்து எதிர்க்க வேண்டியுள்ளது. மேலும் அதனை காரண காரியத்தை பாதுகாத்து முன்னெடுக்கவும் வேண்டியுள்ளது.
சார்பியல் கோட்பாட்டை முன்வைத்து அறிவியலைத் திரிப்பவர்கள் பற்றி லெனின் குறிப்பிடும்போது, “ஐன்ஸ்டைன், பொருள் முதல் வாதத்தின் அடிப்படையின் மீது எந்த தாக்கு தலையும் நடத்தவில்லை” ஆனால் அவருடைய கோட்பாடு, மிகப்பெரிய எண்ணிக்கையிலான முதலாளித்துவ அறிஞர்களால் கைப்பற்றப்பட்டிருக் கிறது. இந்த நிலைமை ஐன்ஸ்டைனுக்கு மட்டும் ஏற்படவில்லை, இயற்கை அறிவியலை சீர்திருத்தி அமைத்த பெரும்பாலான அறிஞர்களுக்கு நேர்ந் துள்ளது” என்றார்.
அறிவியலும் மார்க்சியமும்
மனித குல வரலாற்றில் அறிவியலின் பங்களிப்பு பற்றி எங்கல்ஸ் விதந்தோதுகிறார். அவரது காலத்தில் நிக்கோலஸ் கோபர்நிகஸ், பூமிதான் சூரியனை சுற்றிவருகிறது என்ற உண்மையை உலகுக்குச் சொன்னபோது இதுவொரு ‘புரட்சிகர நடவடிக்கை’ என்றார் எங்கல்ஸ். அதே போல மார்க்சும் எங்கல்சும் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை வரவேற்றுக் கொண்டாடியதை நாம் அறிவோம்.
மனித அறிவை தத்துவப் பார்வையில் நோக்கும் போது, புலனறிதல், பகுத்தறிதல் என இருவேறு கட்டங்களாக சொல்லலாம். புலனறிதலை மட்டும் சார்ந்து சிந்திக்கும்போது அது அனுபவ வாதத்திற்கு வழிகோலுகிறது. பகுத்தறிவை மட்டும் சார்ந்து நின்றால் அது பகுத்துப் பார்த்து, ஆய்வு செய்கிற திறனை புலனுணர்தலுக்கு மேலான ஒரு உயர்நிலையாக நிலைநிறுத்தி விடுகிறது. மார்க்சியம் இவை இரண்டையும் கணக்கிலெடுக்க வேண்டும் என்கிறது. அறிவுச் செயல்பாடு என்பது உண்மை நிலையைப் பற்றி புலன்களின் உணர்வு மற்றும் பகுத்து நோக்கி ஆராயும் நடவடிக்கை ஆகிய இரண்டுமே பிரதிபலிப்பதன் ஒருங்கிணைவே என்கிறது மார்க்சியம்.
மேலும் அது அறிவியல் ஆராய்ச்சிகளைப் பற்றி குறிப்பிடும்போது, விஞ்ஞானிகளின் ‘அனுமானங்களுக்கு’ ஒரு முக்கிய இடம் இருப்பதை அங்கீகரிக்கிறது. புனைவாற்றலுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் கணக்கில் கொள் கிறது. இத்தகைய புனைவாற்றல் இயல்புணர்வு ஒரு மாயாஜாலம் போல நேர்வது அல்ல; மனித குலத்தின் கடந்த கால சமுதாய அறிவாற்றலை உள்வாங்கிய ஒரு தனிநபருடைய அறிவாற்றல் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றில் இருந்து தான் வெளிப்படுகிறது.
உத்தேசக் கருத்துக்களில் இருந்து உருவாகும் அனுமானங்கள், புனைவுகள் என்பதோடு முடிந்து விட்டால் அது அறிவியல் ஆகாது. அந்த அனு மானத்தை சாரப்படுத்தி, அதனை பகுத்தாய்ந்து பின்னர் நிரூபணம் செய்வது அவசியம். இதிலிருந்து தான் கோட்பாடுகள் பிறக்கின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட அறிவுக் கட்டத்தில் சரி என அறியப் பட்ட கருத்துக்கள், மற்றொரு கட்டத்தில் மேலும் மேம்படுத்தப்படவேண்டிய நிலைமைக்கு வருகின்றன. நியூட்டனின் மேதமையோ, பாரடே வின் ஆய்வுக் கருத்துக்களோ போலியானவை அல்ல. அவர்களின் அனுமானங்கள் அறிவி யலுக்கு விரோதமானவையோ அல்ல. ஆனால் அறிவின் வளர்ச்சிக் கட்டத்தில் அவை மேலும் திட்டவட்டமாக வேண்டும். அறிவு வளர்ச்சியும் இயக்கவியலுக்கு உட்பட்டது என்பதையே கருந்துளை பற்றிய வரலாற்றுப் பருந்துப் பார்வை நமக்கு விளக்குகிறது.
பொதுவானதில் இருந்து, குறிப்பான ஒன்றை நோக்கி நகர்வதும். குறிப்பான நிகழ்வுகளை, பொதுவானவைகளுடன் இணைப்பதுமே மார்க் சிய நோக்கு. இந்த இயக்கம் தொடர்ந்து நடக் கிறபோதுதான் அறிவு வளர்கிறது.
கருத்துளை ஒளியை உமிழாது; அதன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது – அப்படி என்றால் எப்போதும் காட்சியே தராத பொருளாக இருக்குமா? ஐன்ஸ்டீனுக்கே பெரும் கலக்கம் ஏற்பட்டது. காட்சியே தராத ஒன்றை சந்தர்ப்ப சூழல் தரவுகள் கொண்டு அனுமானம் செய்யலாம். ஆனால் எப்போதும் காட்சியே தராது என்றால் அது மெய்யாக இருக்கிறது என அறிவியல் பார்வையில் ஏற்றுக் கொள்வது கடினம். எனவேதான் நேரடிச் சான்று தேடி அலைந்தனர் விஞ்ஞானிகள். ஐன்ஸ்டீன்னின் தத்துவத்தை வைத்து மேலும் கருந்துளையை கூர்ந்து ஆராய்ந்தபோது அதன் அருகே குறிப் பிட்ட தொலைவில் செல்லும் ஒளி கற்றை கருந் துளையை வலம் வந்து வந்த திசையிலேயே வெளிப் படும் என கண்டனர். அதாவது கருந்துகளை இருந்தால் அங்கே ஒளிவட்டம் போல காட்சி தரவேண்டும்.
ஏற்கனவே எம் 87 கேலக்சி மையத்தில் கருந் துளை உள்ளது என அனுமானம் செய்து வைத் திருந்தோம். அங்கே கண்ணுக்கு தெரியாத கருந் துளையை சுற்றி ஒளிவட்டம் இருக்கிறதா என தேடி எடுத்த புகைப்படமே தற்போது வெளியாகி யுள்ள புகைப்படம். இரண்டு ஆண்டுகள் போராடி, உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் இணைந்து செயல்பட்டு ஒரு படத்தை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக, இதுவரை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என சந்தேகத் துடன் வெறும் அனுமானமாக இருந்த கருந் துளை எனும் வான்பொருள் மெய்யாக இருக்கிறது எனபது உறுதியாகியுள்ளது. இப்படி ஒவ்வொரு நாளும் மனித அறிவுப் பரப்பு புதிய திசையில் விரிவடைந்து வருகிறது.
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை குறித்து லெனின் “எழுதும்போது எலெக்ட்ரோன் குறித்து எப்போதும் எல்லாம் அறிந்துவிட்டோம் என்ற நிலை ஏற்படாது” என்றார். அதாவது எப்போதும் அறிவுத் தேடல் இருந்து கொண்டே தான் இருக் கும் என்றார் லெனின். அந்தந்த காலகட்டத்தில் உள்ள உற்பத்தி சக்திகள், அதாவது கருவிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நமது அறிவின் ஆழம் அமை யும். நிலை மறுப்பின் நிலை மறுப்பு மற்றும் பருப்பொருளில் ஏற்படும் அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற இயக்கவியல் விதிக்கு இணங்க, புதிய அறிவியல் துறைகளின் பிறப்புக்கும், நவீன கோட்பாடுகள் வளர்த் தெடுக்கப்படுவதற்கேற்ற, புதிய அனுமானங்கள், புதிய ஆய்வுகளுக்குமான சூழல் பிறந்து கொண்டிருக்கிறது.
Leave a Reply