வீ. பா. கணேசன்
இன்று இந்திய சமூகத்தில் அதிகரித்து வரும் அனைத்து வகையான அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார சிக்கல்களை இன்றைய அரசியலை அவதானிக்கும் ஒவ்வொருவருமே எதிர்நோக்கி வருகின்றனர். ஓர் எதிர்க்கட்சியின் வேலை என்பது ஆளும் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் குறைகூறுவது மட்டுமே என்பதற்கு மாறாக கம்யூனிஸ்ட் இயக்கம் சுயமாக பரிசீலித்து, நாட்டை எதிர்நோக்கி வரும் பிரச் சனைகளை எதிர்கொள்வதற்கான தனது செயல் பாட்டிற்கான அணுகுமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தொழிற் புரட்சி தலையெடுத்த காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த எண்ணற்ற பிரச்சனைகளை மார்க்சிய ஆசான்கள் அன்று எதிர்கொண்டார் களெனில், இன்றைக்குத் தலையெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற, இன்றைய காலப்பகுதியில் நாம் சந்திக்கின்ற, சந்திக்கவிருக் கும் பிரச்சனைகளும் கணக்கில் அடங்காதவையே.
அவ்வகையில் இந்த ஆண்டு மே மாதம் நடை பெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் உருவாகியுள்ள கடினமானதொரு சூழ்நிலை மார்க்சிய ஆதரவாளர்கள் மத்தியில் பல பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. உலகின் பல நாடுகளைப் போன்றே இந்தியாவும் வலதுசாரிப் பாதையை நோக்கித் திரும்பியுள்ளதா என்ற கேள்வியும் நம்மிடையே எழுந்துள்ளது. இத்தகைய பின்னணியில் அரசு, நாடாளுமன்றம், தேர்தல் ஆகியவை குறித்தும் ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியின் இலக்குகள் பற்றியும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் சீரிய கருத்துக்கள் இந்த விஷயத்தில் தற்கால நடப்புகளை ஆய்வு செய்வதற்கு வழிகாட்டுகின்றன.
ஒரு வர்க்கம் என்ற வகையில் அதன் அளவு எவ்வளவு சிறியதாக இருப்பினும் சரி, அதன் வளர்ச்சி எவ்வளவு குறைவாக இருந்தபோதிலும் சரி, பாட்டாளி வர்க்கம் தன்னை முதலில் ஓர் அமைப்பாகவும், பின்னர் ஓர் அரசியல் கட்சியாக வும் அணிதிரட்டிக் கொள்ள வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரம் குறித்து உறுதிப்பட எடுத்துக் கூறியது மார்க்ஸ்-எங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை.
1848-ம் ஆண்டில் ஜெர்மனியில் உருவான கிளர்ச்சிக்குப் பிந்தைய சூழலில், ஒரு நாடாளு மன்றம் உருவாகும் வாய்ப்பு இருக்குமானால் தொழிலாளர்களின் கட்சி தன் வேட்பாளர்களை முன்நிறுத்த வேண்டும் என்றும், அக்கட்சியின் தனிப்பட்ட நடவடிக்கையின் மூலம் வெற்றி பெறும் ஒரு சில வேட்பாளர்களின் இருப்பு அத்தகைய அவையில் மிக முக்கியமானதாகும் என்றும் ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவிற்கு மார்க்ஸ் அறிவுரை வழங்கி யிருந்தார்.
ஜெர்மனியில் புரட்சிகர சூழ்நிலை தணிந்த நிலையில் மார்க்சின் இந்த 1848 மார்ச் மாத கடிதம் கட்சியின் பொதுக் கவனத்திற்கு வைக்கப் படவில்லை என்றபோதிலும், ஜெர்மனியில் முதலாவது வெகுஜன சோஷலிச தொழிலாளர் கட்சி உருவாக்கப்படுவதையும், தனது வர்க்க நலன்களை முன்னெடுத்துச் செல்ல ஜெர்மன் நாடாளுமன்றத்தை அது பயன்படுத்திக் கொள் வதையும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் ஆகியோரால் தங்கள் வாழ்நாளிலேயே காண முடிந்தது.
அதைப் போன்றே அன்றைய ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சியின் தலைவரும், புரட்சிகர கோட்பாடுகளை திருத்தி செயல்பட்டு வந்தவரும் நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கிப் போனவரு மான பெர்ன்ஸ்டைன் போன்றவர்களின் சந்தர்ப்ப வாதப் போக்கை எதிர்த்து மார்க்சும் எங்கெல்சும் தங்கள் கருத்துக்களை சுட்டிக் காட்டுகையில், நவீன சமூகப் புரட்சியின் மிகப்பெரும் உந்து சக்தியாக விளங்கும் முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தை இயக்கத்திலிருந்து ஒருபோதும் அகற்றலாகாது. தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே தனது வர்க்கத்தின் விடுதலையை வென்றடைய முடியும் என்பதையும் அவர்கள் ஆழமாக வலியுறுத்தினர்.
ஜெர்மனியில் 1871-ல் வலிவு பெற்ற பிஸ்மார்க் கின் ஆட்சிக் காலத்தில் 1878 முதல் 1891 வரை நடைமுறையில் இருந்த சோஷலிசத்தைத் தடை செய்யும் சட்டங்களுக்கு மத்தியிலும் 1884-ல் 5 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு 1890-ல் இரண்டு மடங்கானது. அது மீண்டும் 1898-ல் மேலும் இரண்டு மடங்காக உயர்ந்தது. (1912-ல் அக்கட்சி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு களைப் பெற்றது.) இந்தப் பின்னணியில் கட்சி யின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய எங்கெல்ஸ் ப்ரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்ற மார்க்சின் நூலுக்கு 1895-ல் எழுதிய முன்னுரை யில் ஜெர்மன் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்து வதன் முக்கியத்துவம் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:
“அனைவருக்குமான வாக்குரிமை என்பது வேறெந்த பயனையும் அளிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் நமது ஆதரவாளர் களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. தொடர்ச்சியாகவும் துரிதமாக வும் நமக்கு அதிகரித்து வரும் ஆதரவு என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் அதே நேரத் தில் நம் எதிரிகளுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்து கிறது. அவ்வகையில் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகவும் அது மாறுகிறது. நமது சொந்த வலிமையையும், நம்மை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளின் வலிமையையும் அது நமக்கு உணர்த்துவதோடு நம்மை விட்டு விலகி நிற்கும் விரிவான பகுதி மக்களிடையே தேர்தல் நேரத்தில் சென்று நமது கருத்துக்களை பரப்புவதற்கான வாய்ப்பையும் இவை நமக்கு வழங்குகின்றன. நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளைப் பேசுவது போலவே, நமக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும் மக்களிடையே உரக்கப் பேச முடிகிறது. நமது பொதுக் கூட்டங் கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக மக்களிடம் நாம் பேசுவதை விட மேலும் அதிக மான சுதந்திரத்துடன் நம்மால் பேச முடிகிறது. இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் சோஷலிச கருத்தோட்டங்களுக்கு எதிரான சட்டங்கள் பயனற்றவை என்பதை நம்மால் தொடர்ந்து நிரூபிக்கவும் முடிந்துள்ளது.” (மார்க்ஸ்-எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள் தொகுதி 27, பக். 516)
எனினும் இத்தகைய தேர்தல் வெற்றிகளின் விளைவாக கட்சியின் நீண்ட கால இலக்குகளை கட்சித் தலைவர்கள் ஒதுக்கித் தள்ளும் போக்கை மேற்கொள்வதை உணர்ந்து கொண்ட எங்கெல்ஸ் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் தலையெடுத்துள்ள இந்தப் போக்கிற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். 1891-ம் ஆண்டின் கட்சித் திட்டத்திற்கான நகல் குறித்த தனது விமர்சனத்தில் இதைச் சுட்டிக் காட்டிய எங்கெல்ஸ் இத்தகைய சந்தர்ப்ப வாதம் மிகவும் அபாயகரமானது என்றும் குறிப்பிட்டார்.
1871-ம் ஆண்டில் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் மிகக் குறுகிய காலத்திற்கு பாரீஸ் நகரைக் கைப்பற்றியிருந்த போதிலும் இறுதியில் பெரும் அழிவுக்கு வழிவகுத்த பாரீஸ் கம்யூன் நிகழ்வில் கிடைத்த அனுபவத்தைக் கணக்கில் கொண்ட மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரே ஒரு முக்கிய திருத்தத்தை மேற்கொண்டனர். “ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அரசு இயந்திரத்தை தனக்கு ஆதரவாகவும், தனது நோக்கங்களுக்காகவும் பாட்டாளி வர்க்கத்தால் பயன்படுத்த இயலாது. பொருளாதார ரீதியாக வலிமைமிக்க ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அரசை புதியதொரு சோஷலிச சமூகத்தைப் படைக்க விழையும் தொழிலாளர்கள் கையி லெடுத்து அப்படியே பயன்படுத்திக் கொண்டு விட முடியாது” என்றும் அவர்கள் குறிப்பிட்ட னர்.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நவீன அரசு என்பது கூலி உழைப்பை மூலதனம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவியே என குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற தனது நூலில் குறிப்பிடும் எங்கெல்ஸ் “அனைவருக்குமான வாக்குரிமை என்பது தொழிலாளி வர்க்கம் எந்த அளவிற்கு முதிர்ச்சி அடைந்துள்ளது என்பதைக் காட்டும் ஓர் அளவுமானியே ஆகும். நவீன உலகில் அதுவே போதுமானது. பொதுமக்களின் கருத்தை வெளிப் படுத்தும் இந்த அளவுமானி தொழிலாளர் களிடையே கொதிநிலை அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டும்போது, அவர்களும் சரி, முதலாளி களும் சரி, தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்” என்றும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
மார்க்சிய ஆசான்களின் தெளிவான இந்தக் கருத்துக்களை உள்வாங்கி தொழிலாளி வர்க்கத் தின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான வர்க்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் கடமையை மேற்கொள்வதே இன்றைய தேவை யாகும். அதே நேரத்தில் சோஷலிச சமூகம் குறித்த சிந்தனையை பெரும்பகுதி உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான அனைத்து வகையான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசான்களின் அறிவுரை யையும் நாம் முழுமையாக கையகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 170 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, உலகெங்கிலும் பல்வேறு பரிசோதனைகளுக்கும், சோதனை களுக்கும் பிறகும் கூட, சமூகத்தின் அவலங்களுக் கான மாமருந்தாக சோஷலிச கருத்தாக்கம் செயலூக்கம் மிக்கதொரு தத்துவமாக இன்றள வும் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமகாலப் பிரச்சனைகளை இணையற்ற உத்வேகத்துடன் எதிர்கொண்ட மார்க்சும் எங்கெல்சும் வழங்கி யுள்ள அறிவுரைகள் நமக்கு உரிய வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவதே இக்காலப் பகுதியின் தேவையாகும்.
Leave a Reply