உலகமயமாக்கல் காலத்தில் அதற்கு முந்தைய காலத்தைவிட நிலம் என்பது முதலாளித்துவத்தின் மூலதனத் திரட்சிக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. ஏழை எளிய மக்களிடமிருந்து அரசே கார்ப்பரேட்டுகளுக்கு பிடுங்கிக் கொடுக்கிறது. காலனிய ஆட்சியின்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் தன்மை, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட சட்டம், தற்போதைய பிஜேபி அரசு அதில் செய்துள்ள மோசடித்தனமான மாற்றங்கள் பற்றியும், நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக மக்களின் நாடுதழுவிய வலுவான போராட்டங்கள், அதன் வெற்றிகள் மற்றும் அதன் தேவைகள் பற்றி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் விஜூ கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையின் முதல்பகுதி விரிவாக பேசுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு, சமீபத்திய தேர்தலில் கிடைத்த படிப்பினைகள், வலதுசாரிகளின் வெற்றியால் நாடு சந்திக்கவிருக்கும் சவால்கள், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கட்சியின் மத்திய குழுவின் தேர்தல் பரிசீலனையை உள்ளடக்கியதாக தோழர் உ.வாசுகி அவர்களின் “17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: பின்னுக்குத் தள்ளப்பட்ட வாழ்வுரிமை பிரச்சனைகள் – உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரித் திருப்பம்” கட்டுரை அமைந்துள்ளது.
சாதி மற்றும் இதர சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், அரசியல் போராட்டங்களையும், வர்க்க போராட்டங்களையும் ஒன்றிணைத்தும் கொண்டு சென்ற தனது அனுபவங்களை தோழர் இ.எம்.எஸ் அவர்களின் “மீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…” என்ற கட்டுரை பேசுகிறது.
தேர்தல் தோல்வியை ஒட்டுமொத்த தோல்வியாக பார்க்கும் போக்கை கடந்து, தேர்தலை எவ்வாறு பார்க்க வேண்டும்; முழுமையான சமூக விடுதலையை தேர்தல் மூலமாக மட்டுமே அடைந்து விட முடியாது என்கிற அதே நேரத்தில், தேர்தலை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்கிடும் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் கருத்துக்களை உள்ளடக்கியதாக தோழர் வீ.பா. கணேசன் அவர்களின் “தேர்தல் பற்றி மார்க்சும் எங்கல்சும்” என்கிற கட்டுரை அமைகிறது.
மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாதத்தின் உண்மை தன்மையை நவீன அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றுமே உலகம் குறித்த மனிதனின் புரிதலை மேலும் விரிவுபடுத்துகிறது. இது முடிவில்லாமல் வளர்ந்து கொண்டும் வருகிறது. அத்தகைய ஒரு சிறந்த கண்டுபிடிப் பான கருந்துளை பற்றிய விளக்கங்களைத் தருவதாக “கருந்துளை: அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள்முதல்வாதம்” என்கிற தோழர் இரா. சிந்தன் எழுதிய கட்டுரை அமைகிறது.
வாசகர்கள் மார்க்சிஸ்ட் இதழின் சந்தாவை உயர்த்திட முனையுமாறும், இதழ் குறித்து வாசகர் வட்டங்களில் வெளிவரும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஆசிரியர் குழுவிற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
-ஆசிரியர் குழு
Leave a Reply